1966-1977, 1980-1984 ஆகிய இரு காலகட்டங்களில் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்று ஆட்சி புரிந்த இந்திரா காந்தியின் பெயரை நாம் எப்படி நினைவில் வைத்திருக்கிறோம் என்னும் கேள்வியிலிருந்து தொடங்கலாம். வங்கிகளை நாட்டுடைமையாக்கியவர், மன்னர் மானியங்களையும் சலுகைகளையும் ஒழித்தவர், பங்களாதேஷ்
உதயத்துக்காக பாகிஸ்தானுடன் போரில் ஈடுபட்டு வெற்றி கண்டவர், தேசம் தழுவிய நெருக்கடி நிலையை அறிவித்து கட்சி பேதமின்றி தம்மை எதிர்த்தவர்கள் அனைவரையும் விசாரணையின்றி சிறையில் அடைத்தவர், பொற்கோவில் வளாகத்துக்குள் ராணுவ நடவடிக்கையை அனுமதித்தவர் என்னும் விடைகளையே பெரும்பாலானோர் சொல்லக்கூடும். அது ஒருவகையில் உண்மையும்கூட. ஆனால் அவற்றையெல்லாம் கடந்த இன்னொரு உண்மை உண்டு. அது அவர் ஒரு மிகச்சிறந்த இயற்கையார்வலர் என்பதும் இந்தியாவின் இயற்கைவளத்தைக் காப்பாற்ற அவர் முனைப்போடு பாடுபட்டார் என்பதுமான உண்மை.
இயல்பாகவே
இந்திரா காந்தியின் மனத்தில் ஊறிப் பெருகி வளர்ந்திருந்த இயற்கை நாட்டமும் விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிர்கள் மீது கொண்ட விருப்பமும் காடுகள் சார்ந்த ஆர்வமும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசமெங்கும் விரிந்திருக்கும் காடுகளையும் காட்டுயிர்களையும் பாதுகாக்கும் மனம் கொண்டவராக மாற்றின. அவர் வளர்ச்சித்திட்டங்கள் என்னும் பெயரில் பல தருணங்களில் மாநில அரசுகளாலும் தனியார் அமைப்புகளாலும் காட்டுப்பகுதிகளுக்கு இடையூறு ஏற்பட்டபோதெல்லாம் குறுக்கிட்டு தடுத்தார். நீண்ட கால கடிதப்போக்குவரத்து வழியாகவும் பேச்சுவார்த்தைகள் வழியாகவும் அவர்களுடன் ஓர் உரையாடலை நிகழ்த்தி வெற்றி கண்டு வனப்பகுதிகளைப் பாதுகாத்தார். தம்முடைய பதவிக்காலம் முழுவதும் அவர் மிகச்சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலராக இயங்கினார். பிரதமராகப் பணியாற்றிய காலங்களில் இந்திரா காந்தி எழுதிய கடிதங்களையும் அலுவலகக்கோப்புகளில் காணப்படும் குறிப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு குடிநீர், சுகாதாரம், சுற்றுச்சூழல், எரிசக்தி வர்த்தகம் போன்ற பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பணியாற்றிய ஜெய்ராம் ரமேஷ் அந்த உண்மையை நிறுவியிருக்கிறார்.
கானுயிர்
பாதுகாப்புச் சட்டத்தையும் வனப்பராமரிப்புச் சட்டத்தையும் நிறைவேற்றியதில் இந்திரா காந்திக்கு பெரும்பங்குண்டு. இயற்கைவளம் சார்ந்த ஒரு சட்டமென்றாலும் கூட, அதை நிறைவேற்றும் வேலை எளிதாக நடந்துமுடியவில்லை. ஆண்டுக்கணக்கில் ஒரு கனவாக மட்டுமே அம்முயற்சி நீண்டுகொண்டே சென்றது
என்பதையும் அதை நிறைவேற்றுவதில் இந்திரா காந்தி காட்டிய உறுதியையும் மாநில அரசுகளுக்கும் மத்திய அரசும் பரிமாறிக்கொண்ட கடிதங்களை ஆதாரமாகக் கொண்டு தன் நூலில் பதிவு செய்கிறார் ஜெய்ராம் ரமேஷ். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் முன்பு மாநிலங்களின் முழு ஆதரவையும் பெறுவதற்காக காடுகளைப் பாதுகாக்கவும் காட்டு நிலங்களை மற்ற அலுவல்களுக்கு ஒதுக்கிவிடாமல் இருக்கவும் ஒரு சட்டத்தைத் தீட்டி, அச்சட்டவரைவின் நகலை எல்லா மாநில அரசுகளுக்கும் தொடக்கத்தில் அனுப்பிவைத்தது மத்திய அரசு. அத்துடன் ஒவ்வொரு மாநில முதல்வருக்கும் பிரதமர் என்கிற வகையில் இந்திரா காந்தி தனிப்பட்ட வகையில் கடிதம் எழுதினார். ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களும் சரி, எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களும் சரி, அச்சட்டத்தை ஏற்று
ஆதரவு வழங்குவதில் தாமதம் காட்டின.
பிரதமர்
அலுவலகத்திலிருந்து
மீண்டும் மீண்டும் நினைவூட்டும் கடிதங்களை அனுப்பியும் கூட, பல மாநிலங்கள் பதிலளிக்காமல் அமைதி காத்தன. ஒவ்வொரு முறையும் புதியபுதிய ஐயங்களை எழுப்பி அல்லது புதியபுதிய சாக்குபோக்குகளைச் சொல்லி ஆதரவளிக்காமல் இழுத்தடித்தன. இதற்கிடையில் உலகநாடுகளின் கனவுத்திட்டமான சுற்றுச்சூழல் மாநாடு ஸ்டாக்ஹோமில்
வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. வளரும் நாடுகளின் சார்பில் இந்திரா காந்தியின் பங்கேற்பு மிகமுக்கியமானதாகக் கருதப்பட்டது. அவர் இந்தியாவுக்குத் திரும்பியதுமே பீகார் மாநிலத்திலிருந்து ஆதரவுக்கடிதம் வந்து சேரவில்லை என்னும் தகவல் பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது.
கைமூர் பீடபூமியைச் சேர்ந்த காட்டு நிலங்கள் வேறு காரணங்களுக்காக ஒதுக்குவதற்காக மாநில அரசு திட்டமிட்டிருக்கும் செய்தியும் பிரதமரின் காதை எட்டியது. உடனே அவர் வெகுண்டெழுந்தார். உடனுக்குடன் அத்தகு முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்று கண்டிக்கும் தொனியில் மாநில அரசுக்கு இந்திரா காந்தி ஒரு கடிதம் எழுதினார். இறுதிக்கட்டமாக வேறு வழியில்லாமல் பீகார் முதல்வர் தன் ஆதரவைத் தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதற்குப் பிறகே, கானுயிர் பாதுகாப்புச்சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.
இப்படி
ஒரு கடுமையான சட்டம் இயற்றிய பிறகும் கூட இயற்கை வளங்களையும் விலங்குகளையும் பறவைகளையும் பாதுகாப்பதில் புதுப்புது விதமான பிரச்சினைகள் முளைத்துக்கொண்டே இருந்தன. நாடெங்கும் இப்படி ஏராளமான பிரச்சினைகள். ஒவ்வொரு கட்டத்திலும் இந்திரா காந்தி நேரிடையாகவே தலையிட்டு தீர்த்துவைக்க முயற்சி செய்தார். அறுநூறு பக்க நூலில் இந்திரா காந்தி எடுத்த முயற்சிகளை ஆண்டுவாரியாகத் தொகுத்திருக்கிறார் ரமேஷ்.
மேற்கு
இந்தியாவில் உள்ள பரத்பூர் பறவைகள் சரணாலயம் இந்தியப் பறவையினங்களும் அயல்நாட்டுப் பறவையினங்களும் சேர்ந்து தங்கியிருக்கும் இடமாகும். அஜான் அணைக்கட்டிலிருந்து வெளியேறும் நீர் நிரம்பிய பரத்பூரில் பறவைகள் பறந்து களிக்கும்
காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இங்கு வலசை வரும் முக்கியமான பறவை சைபீரியப் பெரும்கொக்குகள். வலசைப்பறவைகள் உண்பதற்கு ஏற்ற கோரைப்புற்களும் கிழங்குகளும் இப்பகுதிகளில் செழித்து வளர்ந்திருக்கும். பரத்பூர் மகாராஜாவால் அப்பறவை இனங்களுக்கு ஓர் ஆபத்து ஏற்பட்டது. சரணாலயத்துக்கு வருகை தரும் பறவைகளையும் விலங்குகளையும் சுட்டு வேட்டையாடுவதை பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார் அவர். 1969 ஆம் ஆண்டில் மகாராஜாவின் மகளுடைய திருமணம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக மகாராஜாவின் விருந்தினர்கள் சரணாலய வளாகத்தில் தங்கியிருந்தனர். திருமணம் முடிந்ததும் பொழுதுபோக்குக்காக மகாராஜா தன் விருந்தினர்களுடன் சரணாலயத்துக்குள் புகுந்து அங்கிருந்த பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடிக் கொன்றனர். தற்செயலாக அதே சரணாலயத்தில் பறவைகள் பராமரிப்பு பன்னாட்டு மன்ற மாநாடு நடைபெற்றது. பல்வேறு நாடுகளிலிருந்து ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேற்பட்டோர் அம்மாநாட்டில் கலந்துகொள்ள வருகை புரிந்திருந்தனர். அவர்கள் அனைவரும் மகாராஜா வேட்டையாடும் காட்சியை நேருக்கு நேர் பார்த்தனர். இந்தியாவின் சார்பில் அம்மாநாட்டை ஒருங்கிணைத்தவர் பறவை இயலாளரான சலீம் அலி. . அவர் அங்கு கண்ட காட்சியை வேதனையுடன் இந்திரா காந்திக்கு ஒரு கடிதம் எழுதித் தெரிவித்தார்.
1948இல் தம் சமஸ்தானங்களை இந்திய யூனியனுடன் இணைத்துக்கொள்ள சம்மதித்தபோது, அன்று அரசு அம்மன்னர்களோடு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி அம்மன்னர்களுக்கு சில சலுகைகளை அளித்தன. துப்பாக்கி பயன்படுத்தும் சலுகையும் அவற்றில் ஒன்றாகும். தகுந்த நடவடிக்கை எடுப்பதாக சலீம் அலிக்கு பதில் எழுதி அனுப்பினார் இந்திரா காந்தி. இப்படி ஒவ்வொரு சமஸ்தானத்திலிருந்தும் ஒவ்வொரு விதமான பிரச்சினை முளைத்தபடியே இருந்தது. அதன் விளைவாக 1971இல் கூடிய பாராளுமன்றம் சமஸ்தானத்து அரசர்களுக்கு வழங்கிவரும் மானியங்கள் உட்பட
அனைத்துவகையான
சலுகைகளையும் ரத்து செய்தது.
பரத்பூர் சரணாலயம் மட்டுமன்றி, இந்தியா முழுதும் நிறைந்துள்ள அனைத்து சரணாலயங்களும்
இந்தச் சட்டத்தின் வழியாக காப்பாற்றப்பட்டன. இதற்கெல்லாம் மூல விசையாக விளங்கியவர் இந்திரா காந்தி.
பரத்பூர்
சரணாலயம் போலவே சில்கா ஏரியை ஒட்டிய பறவைகள் சரணாலயத்துக்கும் ஓர் ஆபத்து காத்திருந்தது. இந்த ஆபத்துக்குக் காரணம் எந்த மகாராஜாவோ அல்லது வேறு தனிப்பட்ட மனிதரோ அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரிசா மாநில முதல்வரே அதற்குத் தடையாக இருந்தார். சில்கா ஏரியில் கடற்படை இளையோர் பயிற்சி நிலையத்தை உருவாக்க அவர் விரும்பினார். அதற்கான அனுமதியைக் கேட்டு பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். அங்கு வசிக்கும் பறவைகளைப்பற்றி பெரிதும் கவலையுற்ற இந்திரா காந்தி, பயிற்சி நிலையத்தை வேறொரு இடத்துக்கு மாற்றும் திட்டத்தை யோசிக்கும்படி பதில் எழுதினார். ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதீப் துறைமுகம் சார்ந்த பகுதி பயிற்சி நிலையத்துக்குப் பொருத்தமான இடமென சுட்டிக் காட்டி எழுதியிருந்தார். ஆனால் ஏதேதோ புதுப்புது காரணங்களை சுட்டிக்காட்டி சில்காவிலேயே அந்தப் பயிற்சி நிலையம் அமையவேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருந்தார். தொடர்ந்து ஆய்வுகள், மாற்று இட தேர்வுகள், ஆலோசனைகள் என கடிதப்போக்குவரத்து முடிவின்றி நீடித்துக்கொண்டே இருந்தது.
அறுபதுகளிலேயே இந்தியாவில்
புலிகளைச் சுடுவதற்குத் தடைவிதித்து ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் ஏராளமான சங்கடங்கள் இருந்தன. இந்தச் சங்கடங்களை உருவாக்கியவர்கள் மகாராஜாக்கள் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங்களில் ஆட்சி புரிந்த முதல்வர்கள். குறிப்பாக மத்தியப்பிரதேசம் அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தயக்கம் காட்டியபடியே இருந்தது. சிறுசிறு விளக்கங்கள் கேட்டு கடிதங்கள் எழுதி தாமதப்படுத்தியபடியே இருந்தது. அதற்கிடயில், வெளிநாட்டு வணிகத்துக்காக 29 புலிகளைச் சுடுவதற்கான அனுமதியையும் மத்தியப்பிரதேச மாநிலம் வழங்கிவிட்டது. இந்தத் தகவல் உடனடியாக இந்திரா காந்தியின் கவனத்துக்குச் சென்றது. அதைக் கேட்டு கொதித்தெழுந்தார் அவர். தடையை மீறி செயல்பட்டதற்கான உரிய காரணத்தை அவர் கூறவேண்டும் என்று முதல்வருக்கு கடிதமெழுதினார் அவர். மேலும் இதுவரை சுடப்பட்ட புலிகள் பற்றிய புள்ளிவிவரங்களையும் தரவேண்டும் என்று ஆணையிட்டார்.
ஒரு
மாதம் வரைக்கும் அதற்குப் பதில் எழுதாமல் காலதாமதம் செய்த முதல்வர் பிறகு விற்பனை நிறுவனங்களோடும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களோடும் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்குக் கட்டுப்பட்டு சட்டங்களின் விதிகளைத் தளர்த்தி அனுமதி வழங்கிய தகவலை சுற்றி வளைத்துக் குறிப்பிட்டு பதில் கடிதம் எழுதினார். போன ஆண்டு சுடப்பட்ட புலிகளின் எண்ணிக்கை 184
என்றும் இந்த ஆண்டு சுடுவதற்கான இலக்கு 29 புலிகள் என்றும் குறிப்பிட்டார். ஆனால் அவர் தன் கடிதத்தில் எந்த இடத்திலும் புலிகளின் பாதுகாப்பு குறித்து உறுதி அளிக்காமலேயே நழுவும் விதத்தில் அவர் அக்கடிதத்தை எழுதியிருந்தார். அவர் பதிலைப் படித்து அதிருப்தியுற்ற இந்திரா காந்தி மீண்டும் ஒரு கடுமையான கடிதத்தை எழுதினார். அக்கடிதத்தில் இனி ஒருபோதும் சட்டத்தைத் தளர்த்தி அனுமதி வழங்கும் நடைமுறைகளை மேற்கொள்ளலாகாது என்று கண்டனத்துடன் குறிப்பிட்டிருந்தார். புலிகள் பாதுகாப்புச்சட்டம் மேலும் கடுமையாக்கப்பட்டது. புலிகளைக் கொல்வதற்கான தடை என்பதை புலிகள் வாழிடங்களைப் பாதுகாக்கும் முக்கியமான பணியாகக் கருதவேண்டும் என்றும் வலியுறுத்தினார். விலங்குப் பூங்காவைச் சுற்றியுள்ள பதினைந்து மைல் பரப்பளவில் உள்ள பகுதிகளில் மக்கள் பயிரிடாதவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.
புலிகள்
பாதுகாக்கப்பட்டதுபோலவே
மான்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தார் இந்திரா காந்தி. செய்தித்தாட்களில் ஏதேனும் ஒரு வனப்பகுதியில் மான்கள் சுடப்பட்ட செய்தியைக் கேட்கும்போதெல்லாம் அவர் மனம் வருந்துவார். உடனே அந்த மாநில முதல்வருக்கு கடிதம் எழுதி தீவிரமான முயற்சி எடுத்து மான்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்கவேண்டும் என்றும் விதியை மீறி சுடுகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தார். இப்படிப்பட்ட தீவிரமான தொடர் நடவடிக்கைகளுக்குப் பிறகே ராஜஸ்தானில் உள்ள தாஸ் சாப்பர் மான்கள் சரணாலயமும் கர்நாடகத்தில் ரானெபென்னூர் மான்கள் சரணாலயமும் குஜராத்தில் உள்ள வேலவதார் சரணாயலயமும் உருவாகின.
இந்திரா
காந்தியின் தொடர் நடவடிக்கைகளால் பாதுகாக்கப்பட்ட இன்னொரு முக்கியமான இடம் தூதுவா சரணாலயம். இரண்டாண்டு காலமாக இந்தப் பகுதியைப் பாதுகாக்கவேண்டிய முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்து வந்தபோதும் உத்தரப்பிரதேச அரசு அதைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை. மரங்களை வெட்டுவது அதிகரித்தபடியே இருந்தது. மேலும் வன உற்பத்திப் பொருட்களை ஏலம் விட்டு விற்பன செய்யும் வணிகச்செயல்பாடு தொடர்ந்தது. பிரதமரை அமைதிப்படுத்தும் விதமாக தூதுவா சரணாலயம் பாதுகாக்கப்படும் என்று உறுதிமொழி கூறி கடிதமெழுதி அனுப்பினார் முதல்வர். ஆனால் அதைப்பற்றிய உண்மைத்தகவல்களை அங்கு வசித்துவந்த இயற்கை ஆர்வலர்கள் பிரதமருக்கு உடனுக்குடன் தெரிவித்தபடி இருந்தார்கள். கடிதங்களால் இனி பயனில்லை என்னும் சூழலில் இந்திரா காந்தி மனம் வருந்தினார். தக்க தருணமொன்று வாய்ப்பாக அமைந்தபோது, அந்த முதல்வரை உடனடியாக பதவியிலிருந்து விலக்கினார்.
இந்திரா
காந்தியின் மிகமுக்கியமான சாதனை அமைதிப்பள்ளத்தாக்கு தேசியப்பூங்கா உருவாக்கமாகும். கேரளத்தில் இது நீலகிரி மலைத்தொடரில் ஏறத்தாழ நூறு சதுரமைல் பரப்பளவில் உள்ள காட்டுப்பகுதியாகும். சிங்கவால் குரங்கு போன்ற அரியவகை விலங்கினங்கள் இங்கு வாழ்கின்றன. எழுபதுகளில் கேரள மாநில அரசு இந்த வனப்பகுதியில் குனித்துப்புழா ஆற்றின் குறுக்கில் ஓர் அணையைக் கட்டி, அதன் வழியாக நீர்மின்சாரம் தயாரிக்கும் ஒரு பெருந்திட்டத்தை அறிவித்தது. இதனால் கிட்டத்தட்ட ஒன்பது கிலோமீட்டர் நீளமுள்ள மழைக்காட்டுப்பகுதி தண்ணீரில் மூழ்கும் அபாயமும் விலங்கினங்கள் அழியும் அபாயமும் இருந்தது. மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் பாம்புப்பண்ணையை நிறுவிய ரோமுலஸ் விட்டேக்கர் காடு அழியவிருப்பதைப்பற்றிய விழிப்புணர்வை மக்களிடையில் ஏற்படுத்தினார். செய்தியை அறிந்த இந்திரா காந்தி திட்டங்கள் பற்றிய தகவல்களை அனுப்பும்படி மாநில முதல்வரைக் கேட்டு நீண்டதொரு
கடிதம் எழுதினார். அவர் அனுப்பிய திட்ட வரைவுகளைப் படித்த இந்திரா காந்தி எக்காரணத்தை முன்னிட்டும் காட்டுப்பகுதியை மூழ்க அனுமதிக்க முடியாதென்றும் அமைதிப்பள்ளத்தாக்கு தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட இருக்கிறதென்றும் தெரியப்படுத்தினார்.
மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் மீண்டும் மீண்டும் கடிதப் போக்குவரத்து நிகழ்ந்தபடியே இருந்தது. அமைதிப்பள்ளத்தாக்கு அறிவிப்பை ஏற்றுக்கொண்ட மாநில அரசு நீர்மின் திட்டத்துக்கான இடத்தை தனிமைப்படுத்திவிட்டு எஞ்சிய இடத்தை தேசியப்பூங்காவாக அறிவிக்கலாம் என்று கருத்துரைத்தது. சூழலியல் அறிஞரான பேராசிரியர் சி.வி.சுப்புரமணியன் அந்த இடத்தை ஆய்வு செய்து ஒரு அரசுக்கு அறிக்கை அளித்தார். இறுதியில், அந்த அறிக்கையின் அடிப்படையில் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
சுற்றுசூழல் சார்ந்த ‘அமைதிப்பள்ளத்தாக்கை பாதுகாப்போம்’ என்னும் போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்த போராட்டமாகும். இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு தேசியப்பூங்கா அறிவிப்பு வெளிவந்தது. இந்திரா காந்தியின் நினைவைப் போற்றும் வகையில்
சைரந்திரி என்னும் இடத்தில் ஒரு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது.
இயற்கைவளம்
பாதுகாக்கப்படவேண்டும்
என்னும் ஆர்வத்துக்கும் வேகத்துக்கும் தொடக்கத்தில் உடன்படுவதுபோல போக்கு காட்டி இறுதியில் அவற்றையெல்லாம் புறந்தள்ளி தம் எண்ணங்களுக்கு இயைந்த வகையில் செயல்பட்ட மாநில அரசுகளும் அச்சமயத்தில் இருந்தன. மாநில அரசுகளும் மத்திய அரசும் மாறி மாறி எழுதிக்கொண்ட கடிதங்களை நமக்குக் காட்டுகிறார் ஜெய்ராம் ரமேஷ். இயற்கைவளம் சார்ந்த அக்கறை பின்னகர்ந்து போய்விட்டதை நாம் அக்கடிதங்கள் வழியாகப் புரிந்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாக லால்பூர் அணைக்கட்டுப் பிரச்சினையைச் சொல்லலாம். ஏற்கனவே இருக்கும் அணையின் உயரத்தை மேலும் சில அடிகள் உயர்த்திக்கொள்ள விரும்பியது குஜராத் மாநில அரசு. அதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் காட்டுப்பகுதி தண்ணீருக்குள் மூழ்கிவிடும் அபாயம் இருப்பதாகச் சுட்டிக் காட்டியது மத்திய அரசு. அது மட்டுமல்ல,. அங்கு அதுவரையில் வசித்துவந்த பழங்குடி மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்க நேரும் என்பதையும் சுட்டிக் காட்டியது. பழங்குடியினர் முன்னேற்றத்துக்காகவே அங்கிருந்து செயல்படும் காந்தியவாதியான ஹரிவல்லப பாரிக் அத்திட்டத்தை கைவிடும்படி மாநில அரசிடம் மன்றாடினார். பழங்குடியினர் நலனுக்காக அவர் கட்டியெழுப்பிய ஆனந்த நிகேதன் ஆசிரமம் மூழ்கிவிடும் ஆபத்தையும் சொன்னார்.
மத்திய நதிநீர் ஆணையம், நீர்ப்பாசனத்துறை, மத்திய அமைச்சகம் என பல நிபுணர்கள்
பலமுறை கூடிக்கூடிப் பேசியும் பலனில்லை. இறுதியில் மூழ்கும் நிலப்பகுதியில் வசிப்பவர்களுக்கு உரிய இழப்பீடும் மீள்குடியேற்றத்துக்கான வசதிகளும் செய்து தரப்படும் என்னும் வாக்குறுதியின் அடிப்படையில் அத்திட்டத்தை பிடிவாதமாக நிறைவேற்றியது மாநில அரசு. பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் பத்துக்கு நாலு மட்டுமே நிறைவேற்றப்பட்டு கைவிடப்பட்டார்கள். இந்திராகாந்தியின் ஆர்வமும் உழைப்பும் இயற்கையார்வலர்களின் தியாகமும் இத்தகு தருணங்களில் பயனற்றுப் போயின.
ஆர்வமும்
தியாகமும் மதிப்பிழந்துபோன மற்றொரு இடம் இதே குஜராத்தைச் சேர்ந்த ததார்டி ஆற்றின் குறுக்கே கட்டுவதற்குத் திட்டமிட்டிருந்த ததார்டி அணைக்கட்டு. இதன் கட்டுமானத்துக்குப் பிறகு குஜராத்தின் முக்கிய தேசியப்பூங்காவான கிர் சரணாலயமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் நீரில் மூழ்கின. இந்திரா காந்தியின் கடிதங்களால் குஜராத்தில் காப்பாற்ற முடிந்த இடம் ஜாம் நகருக்கு அருகில் உள்ள பிரோட்டான் தீவுப் பகுதியாகும். அத்தீவு பவளப்பாறைகளுக்குப் பெயர்போன இடம். அங்கு மணல் அள்ளும் உரிமையை ஒரு தனியார் சிமெண்ட் நிறுவனத்துக்கு மாநில அரசு கொடுத்திருந்தது.. அந்நிறுவனம் கடற்பகுதியை ஒட்டிய மணலை எந்திரங்களில் வண்டிவண்டியாக எடுத்துச் சென்றது. கட்ச் வளைகுடாப்பகுதியை பாதுகாக்கப்பட்ட கடல்சார் சரணாலயமாக உடனடியாக அறிவித்த இந்திரா காந்தி எல்லா விதமான சுரங்கச் செயல்பாடுகளையும் நிறுத்த வழிசெய்தார். அடுத்த இரண்டாண்டுகளிலேயே இப்பகுதி கட்ச் வளைகுடா தேசிய கடற்பூங்காவாக அறிவிக்கப்பட்டு உயர்நிலை பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டது. கிட்டத்தட்ட இதே போன்ற சூழலே மகாராட்டிரத்தைச் சேர்ந்த மாதேரான் பஞ்ச்கனி மகாபலேஸ்வர் பீடபூமி பகுதியிலும் நீடித்தது. வீட்டுமனை வியாபாரிகளும் தரகர்களும் சேர்ந்து மலைவாழிடங்களின் அபூர்வ அழகைச் சீர்குலைத்தனர். இயற்கையார்வலர்கள் வழியாக செய்தியறிந்த பிரதமர் மாநில அரசுக்கு உடனடியாகக் கடிதமெழுதி தனியார் செயல்பாடுகளை உடனே நிறுத்தச் செய்தார். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு உருவான சீர்கேடுகள் கட்டுப்படுத்தப்பட்டன. மலைவாழிடம் காப்பாற்றப்பட்டது.
சுற்றுச்சூழல் என்னும்
துறையை ஆட்சியமைப்பில் முதன்முதலில் உருவாக்கிய இந்திரா காந்தி, அதன் வழியாக நாடு முழுதும் தொடர்ச்சியாக கண்காணிக்கச் செய்தார். காடு, மலை, குன்றுகள், ஆறுகள்,. கடல்கள், விலங்குகள், பறவைகள் ஆகிய அனைத்துமே நம் இயற்கை வளங்கள். மனிதகுலம் எண்ணற்ற தலைமுறைக்காலம் எடுத்துண்ணும் அளவுக்குத் தேவையான அனைத்தையும் இயற்கை தன்னகத்தே வைத்திருக்கிறது. ஆனால் தன் பேராசையின் காரணமாக இயற்கையைச் சுரண்டத் தொடங்கும்போது அதன் அழிவிற்கு மனிதர்களே வித்திட்டு விடுகிறார்கள்.
சுற்றுச்சூழலுக்கும் வளர்ச்சிப்பணிகளுக்கும் இடையில் ஒரு சமன்புள்ளி இருக்கிறது. ஒன்றுக்காக மற்றொன்றை எந்த அளவு வரைக்கும் இழக்கலாம் என்னும் கணக்குதான் அந்தச் சமன்புள்ளி. ஓர் அரசு முற்றிலும் வளர்ச்சிப்பணி சார்ந்தும் இயங்கமுடியாது. முற்றிலும் சுற்றுச்சூழல் சார்ந்தும் இயங்கமுடியாது. ஒரு நாட்டின் பிரதமர் என்கிற முறையில் தொடர்ந்து சமன்புள்ளியில் நின்று செயல்படுவதற்கு முயற்சி செய்தவராக இந்திரா காந்தியைச் சொல்லலாம். பால்ய காலத்தில் அவருக்குத் தன் தந்தையால் ஊட்டி வளர்க்கப்பட்ட இயற்கை நேசமும் ஏராளமான பயண அனுபவங்களும் வாசிப்பு அனுபவங்களும் அவருக்கு நற்றுணையாக அமைந்திருந்தன. ஏராளமான கடிதங்கள் வழியாக இந்திரா காந்தி பற்றிய இச்சித்திரத்தை கட்டியெழுப்புகிறார் ஜெய்ராம் ரமேஷ். மொழிபெயர்ப்பு என எந்த இடத்திலும் தோன்றாத அளவுக்கு, மூலநூலைப் படிப்பதுபோலவே படிக்கவைக்கிற முடவன்குட்டி முகம்மது அலியின் எளிய மொழியழகு இந்த நூலுக்கு வலிமை சேர்க்கிறது.
(காலச்சுவடு – ஜூன் 2020)