Home

Tuesday 30 June 2020

மணம் - சிறுகதை



தெருமுனை திரும்பும்போதே ஆட்டோக்காரரிடம்அதோ, அந்த  ஷாமியானா போட்ட ஊட்டுங்கிட்ட நிறுத்திக்குங்கஎன்று சொன்னார் சக்திவேல் அண்ணன். ஆட்டோ வேகத்தைக் கொஞ்சம்கொஞ்சமாக குறைத்து வீட்டுக்கருகில் வந்து நின்றது. முதலில் சிதம்பரமும் நானும் இறங்கினோம். சக்திவேல் அண்ணன் மெதுவாக இடதுகாலை முதலில் ஆட்டோவுக்கு வெளியில் தரையில் வைத்து ஊன்றிக்கொண்டு வெளியே வந்து வலது காலை எடுத்துவைத்தார். வழவழப்பான உலோகக்காலின் கருமை ஒருகணம் வெளிப்பட்டு மறைந்தது. என் தோளில் கைவைத்து அழுத்தியபடி அடியெடுத்து வைத்து சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுத்துக்கொடுத்தார்.

லெஃப்ட்ல இன்னும் ஒரு ரெண்டு அங்குலம் கீழ்ப்பக்கமா தாழ்த்துங்கஷாமியானாவை ஒட்டி ஃப்ளக்ஸ் கட்டுவதற்கு ஏற்ற இறக்கம் சொல்லிக்கொண்டிருந்தார் வேதாசலம் சார். போன வாரம் அவரைச் சந்திக்க வரும்போது என்னையும் அழைத்து வந்திருந்தார் அண்ணன்.  வேதாசலம் சார் எங்களைப் பார்த்ததும்  சிரித்துக்கொண்டேவாங்க சக்திவேல், வாங்கஎன்றார். “ஒரு நிமிஷம்என்று அண்ணன் பக்கமாக கண்களைச் சுருக்கிப் பார்த்தபடி ஒரு விரலைக் காட்டிவிட்டு மீண்டும் ஃப்ளக்ஸ் பக்கம் திரும்பி வெவ்வேறு கோணங்களில் நின்று பார்த்தார். பிறகு  இப்ப சரியா இருக்குது. ரெண்டு பக்கமும் நாலஞ்சி குண்டூசிய குத்திவச்சிட்டு அப்பறமா நாடாவ இழுத்து புடிச்சி கட்டுங்கஎன்று சொல்லிவிட்டுத் திரும்பி வந்தார்.
சந்தன நிற ஃப்ளக்ஸில் நீல வண்ணத்தால் எழுதப்பட்ட ஆங்கில எழுத்துகளை ஒவ்வொன்றாகக் கூட்டி மெதுவாக ஹேப்பி பர்த்டே சிற்பிகாஎன்று மனசுக்குள் படித்து முடித்தேன்.  சிற்பிகாவா, அப்படி ஒரு பேராஎன்று ஆச்சரியமாக இருந்தது. நான் படிப்பது சரிதானா என்று குழப்பமாகவும் இருந்தது.
ஒங்களுக்கு அந்த ஷெட் பக்கமா ஷாமியானா போட்டு வச்சிருக்கு சக்திவேல். அங்க நீங்க வேலய ஆரம்பிக்கலாம். வாட்டர் கனெக்ஷன் அங்கதான் இருக்குதுஎன்று வீட்டையொட்டி இடது பக்கத்தில் தோட்டத்தை ஒட்டியிருந்த ஷாமியானாவைச் சுட்டிக் காட்டியபடியே எங்களை அங்கே அழைத்துச் சென்றார். கொய்யா மரத்தடியில் ஒருக்களித்தபடி உட்கார்ந்திருந்த ஒரு நாய் எங்களைப் பார்த்ததும் எழுந்து நின்று உடலை உதறிக்கொண்டது.
சிலிண்டர், அடுப்பு, பாத்திரங்கள், மேசைகள், கத்திகள், தண்ணீர் கேன்கள், பெரிய வாணல், சின்ன வாணல், ஜல்லிக்கரண்டிகள், தட்டுகள், அண்டா, குண்டான்கள், சாக்குகள் எல்லாமே அங்கே இருந்தன. நான் வேகமாக அவற்றை கூர்ந்து பார்த்தேன். “சார், அம்மி இல்ல, இஞ்சி அரைக்கறதுக்கு வேணுமேஎன்று அவசரமாகச் சொன்னேன் நான். “இங்க இல்ல தம்பி, அந்த பக்கமா செவுத்தோரமா இருக்குது பாருஎன்றார் அவர். “ஒங்கண்ணன் லிஸ்ட் அனுப்பும்போதே போன்ல சொல்லிட்டாரு. க்ரைண்டர் வேணாம், அம்மிதான் வேணும்ன்னு”. நான் வெட்கத்தோடு உதட்டைக் கடித்தபடி அம்மி இருக்குமிடத்தைப் பார்த்துவிட்டு பிறகு சிதம்பரத்தைப் பார்ப்பதுபோல திரும்பிக்கொண்டேன்.
அது கருத்தம்மா, நம்ம ஊட்லதான் வேல செய்யுது. இங்க உங்களுக்கு உதவியா இருக்கும். வீட்லேர்ந்து ஏதாச்சிம் வேணும்ன்னா கருத்தம்மாகிட்ட சொல்லுங்க, வாங்கியாந்து குடுக்கும்
நான் அப்போதுதான் தண்ணீர்க்குடத்துக்குப் பின்னால் நின்றிருந்த பெண்ணைப் பார்த்தேன். என்னைவிட உயரமானவளாக இருந்தாள். அடர்த்தியான கூந்தலைப் பின்னலிட்டு, அந்தப் பின்னலைச் சுருட்டி கொண்டை போட்டிருந்தாள்.
இந்த இடமே எங்களுக்கு தாராளம் சார். நாங்க வேலய ஆரம்பிக்கறம். ஐட்டங்கள் எங்க இருக்குதுன்னு சொன்னா, தம்பிங்க எடுத்தாந்திடுவாங்க. சட்டுபுட்டுனு வேலய ஆரம்பிச்சிடலாம். எம கண்டத்துக்கு முன்னால அடுப்ப பத்த வச்சிடலாம்என்றார் அண்ணன். வேதாசலம் உடனே கருத்தம்மாவின் பக்கமாகத் திரும்பி கருத்தம்மா, எல்லாத்தயும் சின்ன அம்மா ஹால்ல ஓரமா எடுத்து வச்சிருக்காங்க. வேலய ஆரம்பிக்கணும்ன்னு சொல்லி வாங்கிக் குடுஎன்று சொன்னார். பிறகு அண்ணன் பக்கமாகப் பார்த்துநான் கேக் கடை வரைக்கும் போகவேண்டியிருக்குது. வரட்டுமா. உங்களுக்கு எது வேணும்ன்னாலும் நீங்க கருத்தம்மாகிட்ட கேளுங்க, சரியாஎன்றபடி திரும்பினார் வேதாசலம்.
திடீரென நினைத்துக்கொண்டவர் போல சார் சார், ஒரு நிமிஷம்என்று அவரை நிறுத்திய அண்ணன் கைப்பையில் வைத்திருந்த வெவ்வேறு அளவுகளை கொண்ட மைசூர்பாக்கு போன்ற மரத்துண்டுகளை மேசைமீது கொட்டினார்.  மட்டன் பீஸ் எந்த சைஸ்ல இருக்கணும்னு பாத்து சொல்லிட்டா நல்லதுஎன்றார். அவர் ஒவ்வொன்றாக எடுத்து கொஞ்ச நேரம் உருட்டி உருட்டிப் பார்த்தார். பிறகு சிரித்துக்கொண்டேஎல்லாமே எனக்கு ஒரே மாதிரிதான் இருக்குது. நீங்க ஒரு வேல செய்யுங்க சக்திவேல். இது எல்லாத்தயும் கருத்தம்மாகிட்ட கொடுத்துவிடுங்க. வீட்ல எந்த பீஸ் ஓகேன்னு சொல்றாங்களோ, அந்த அளவுக்கு நீங்க பீஸ் போட்டா போதும்என்று சொல்லிவிட்டுப் பறந்தார். நான் அந்தத் துண்டுகளையெல்லாம் எடுத்து மறுபடியும் பைக்குள் போட்டு கருத்தம்மாவிடம் கொடுத்தேன். கருத்தம்மாவின் பின்னால் நானும் சிதம்பரமும் சென்றோம்.
இங்கயே இருங்க, தோ வந்துர்ரேன்என்றபடி வாசலில் எங்களை நிறுத்திவிட்டு கருத்தம்மா வீட்டுக்குள் சென்றாள்.
கதவில் செதுக்கப்பட்டிருந்த வெண்ணெய் தின்னும் கிருஷ்ணனின் சிற்பம் புதுமையாக இருந்தது. கதவைச் சுற்றியிருக்கும் வாசக்காலில் ஒரு கொடி வளைந்துவளைந்து நீண்டிருந்தது. ஒவ்வொரு வளைவுக்கு அருகிலும் சின்ன அளவில் வெண்ணெய் தின்னும் கிருஷ்ணனின் உருவம். நேரம் போவது தெரியாமல் அந்தச் சிற்பத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.
சமையல் ஆளாடா நீ?” உள்ளேயிருந்து வெளியே வந்த ஒரு பாட்டி அதட்டுகிற குரலில் கேட்டாள். நான் மிரட்சியோடுஆமாம்என்றேன். ”பிரியாணிக்கு அஞ்சி லிட்டர் எண்ணெ எழுதியிருக்கான் ஒன் ஆளு. எதுக்குடா அஞ்சி லிட்டர்? ஏமாத்தலாம்னு நெனச்சியாஎன்று என்னை முறைப்பதுபோல பார்த்தாள். நான் பதில் சொல்லவில்லை. அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து வாசக்காலில் இருந்த கிருஷ்ணன் சிற்பத்தைப் பார்க்கத் தொடங்கினேன்.
பிரியாணி செய்ய இந்த ஊருல ஆளே இல்லாதமாதிரி அசலூருலேர்ந்து வரவச்சிட்டு நம்ம உயிர எதுக்கு வாங்கணும்? நல்லா இல்லைன்னு வை, வரவன் போறவன்லாம் நம்ம மேலதான் காறித் துப்ப போறானுங்க 
உள்ளேயிருந்து வந்த முணுமுணுப்பை முழுசாகக் கேட்டுப் புரிந்துகொள்வதற்குள் கருத்தம்மா அரிசி மூட்டையை எடுத்துக்கொண்டு வந்தாள். சிதம்பரம் அதை வேகமாக வாங்கி தலைச்சுமையாக வைத்துக்கொண்டு நடந்தான். கருத்தம்மா மீண்டும் உள்ளே சென்று வெங்காயம், தக்காளி, கொத்துமல்லி, புதினா, வைக்கப்பட்ட பைகளையும் கூடைகளையும் ஒவ்வொன்றாக எடுத்துவந்து வாசலில் வைத்தாள். இரண்டு மூன்று நடையாக நான் அனைத்தையும் எடுத்துச் சென்று வைத்துவிட்டுத் திரும்பினேன்.
உப்பு பாக்கெட்டையும் நெய் பாட்டிலையும் கருத்தம்மாவிடம் வாங்கும்போது பாட்டி மறுபடியும் குறுக்கிட்டாள். “இவ்ளோ நெய் எதுக்கு? பிரியாணிக்கு ஊத்தப் போறியா, ஒன் வாய்ல ஊத்திக்கப் போறியாஅதைக் கேட்டதும் எனக்கு சுருக்கென்றது. எதையாவது சொல்லவேண்டும் போல மனம் துடித்தது. அந்த நேரத்துக்குச் சரியாக கருத்தம்மா கதவுப் பக்கமாக திரும்பும்போது நெற்றி ஓரமாக ஆட்காட்டி விரலை வைத்துச் சுழித்துக் காட்டிவிட்டுச் சென்றாள். பெருமூச்சோடு பாட்டியை முறைத்துவிட்டு நான் திரும்பி நடந்தேன். கடைசியாக நாலு பைகளில் கறி வந்தது. பிரிஜ்ஜில் வைத்திருந்ததால் தொடும்போதே சில்லென்றிருந்தது. “முப்பத்தஞ்சி கிலோவாம். கிலோ ஐநூறு ரூபா மேனிக்கு மூலகொளத்து யாசின்பாய் எறக்கிட்டு போனான். நீங்களே துன்னுடாதிங்கடாஎன்றாள் பாட்டி.
கடைசியாகஇந்த சைஸ்ல துண்டு போட்டா போதும்னாங்க அம்மாஎன்று காட்டிக்கொண்டே படியிறங்கி வந்தாள் கருத்தம்மா. நான் அதை வாங்கி சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டேன். மிச்சத் துண்டுகள் இருந்த பையைச் சுருட்டி வைத்துக்கொண்டாள் கருத்தம்மா.
அந்தக் கெழவி சரியான லொடலொட்ட. வாய்க்கு வந்தத பேசிகினே இருக்கும். உலகத்துல அது சந்தேகப்படாத ஆளே இல்ல. கடவுளே வந்து எதிர்ல நின்னாகூட என்னத்த சுருட்டிகிட்டு போவறதுக்காக வந்து நிக்கறடா திருடான்னு கேக்கும்.”
அந்தப் பாட்டியின் பேச்சைக் கேட்ட படபடப்பு இன்னும் எனக்குள் அடங்கவில்லை. “இதப் போயி எங்க அண்ணன்கிட்ட சொன்னன்னு வைங்க, இப்பவே எடத்த காலிபண்ணிட்டு போலாம் வாடான்னு சொல்லிடும் தெரிமா? அப்பறம் பார்ட்டி கீர்ட்டிலாம் கோவிந்தாதான்என்று முணுமுணுத்தேன்.
அதும் பேச்சுலாம் ஒரு பேச்சா? உட்டுத் தள்ளு. அதுக்கு இருக்கற அறிவு அவ்ளோதான்.”
ஷாமியானுக்குள் வரும்போது அண்ணன் அடுப்புகளுக்கு சிலிண்டர் இணைப்புகளைப் பொருத்திக்கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த லைட்டரை எடுத்து பற்றவைத்து சோதித்துப் பார்த்தார். சிலிண்டர் அருகில் குனிந்து கசிவுமணம் எழுகிறதா என்றும் சோதித்தார்.
பையில எலுமிச்சம்பழத்த காணாம். லிஸ்ட்ல சொல்லிருந்தனேஎன்று கருத்தம்மாவிடம் கேட்டார் அண்ணன். உடனே அவள் நாக்கைக் கடித்துக்கொண்டாள். “அத வேற ஒரு பையில போட்டு ப்ரிஜ்ஜில வச்சிருந்தன். எடுக்க மறந்துட்டுது. தோ போய் எடுத்தாந்துர்ரேன்என்றபடி திரும்பினாள் கருத்தம்மா. “இருமா இரு ஒரு நிமிஷம்என்று அவளைத் தடுத்தார் அண்ணன். “பாத்திரக்காரன் குடுத்த ரெண்டு கத்தியுமே மொட்டை. இத வச்சிகிட்டு வெங்காயம் தக்காளிகூட அரிய முடியாது. கறிய எப்படி வெட்டறது. ரெண்டு கத்தி எடுத்தா. இல்லைன்னா அரியாமன இருந்தாலும் போதும்
கருத்தம்மா வீட்டுக்கு ஓடினாள். நான் அண்ணனுக்குப் பக்கத்தில் சென்றுஇந்த சைஸ்ல பீஸ் இருக்கணும்னு சொன்னாங்ணேஎன்றபடி அளவுத்துண்டைக் காட்டினேன். அவர் அதை வாங்கி உள்ளங்கையில் வைத்து எடையைக் கணிப்பதுபோல பார்த்துவிட்டுஇந்த சைஸ்ல போட்டா, ஒரு கப்புக்கு அஞ்சி பீஸ் கூட வைக்கலாம்என்று சொல்லிவிட்டு திருப்பிக்கொடுத்தார்.
சிதம்பரம், அந்த அரிசி மூட்டயை பிரிச்சி அண்டாவுல கொட்டி தண்ணி ஊத்தி ஊறவை
அவன் முதல் மூட்டையைப் பிரித்து அண்டாவுக்குள் கொட்டியதும் அண்ணன் அண்டாவுக்குப் பக்கத்தில் வந்து ஒரு பிடி அரிசி அள்ளி கைக்குள் வைத்துப் பார்த்தார். ஒரே அளவில் நறுக்கப்பட்ட வெள்ளிக்கம்பித் துணுக்குகள்போல இருந்தது பாஸ்மதி அரிசி. ஒரே ஒரு சிட்டிகை அரிசியை எடுத்து வாய்க்குள் போட்டு மெதுவாக மென்று சுவைத்தார். நன்றாகக் குழைந்த அரிசிச்சாறை விழுங்கிவிட்டுசரி, ஊற வைஎன்றபடி கடிகாரத்தில் மணி பார்த்துக்கொண்டார்.
டேய் தண்டபானி,  கறிய எடுத்து குண்டான்ல கொட்டு. பாதிபாதி குண்டான் போதும். அப்பதான் கழுவி எடுக்கமுடியும்.”
பத்து குண்டான்களும் நிறைந்துவிட்டன. “எல்லாத்தயும் மொதல்ல மூடி வை. பூனையோ நாயோ வந்து வாய்வச்சிட்டா அசிங்கமாய்டும். புரிதா? ஒவ்வொன்னா எடுத்தும் போயி கழுவுஎன்றார் அண்ணன்.
கருத்தம்மா கத்திகளையும் எலுமிச்சம்பழப் பையையும் கொண்டுவந்து மேசை மீது வைத்தாள். இரண்டு கத்திகளில் ஒன்றை மட்டும் தனியே எடுத்து வைத்துக்கொண்டுஅத நீ வச்சிக்கம்மா, வெங்காயம் வெட்ட ஒதவும்என்றார்.
கருத்தம்மா இன்னொரு கறிகுண்டானை எடுத்துக்கொண்டு என்னை நோக்கி வந்தாள். “கொஞ்சம் நவுறுஎன்று சொல்லிவிட்டு குழாயைத் திருப்பிவிட்டு குண்டானில் தண்ணீரை நிரப்பினாள். நான் செய்வதைப் பார்த்தபடியே அவளும் முழு கையையும் உள்ளே விட்டு கறியைக் கழுவினாள். நான் கறி கழுவிய தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு குண்டானில் மீண்டும்  தண்ணீர் நிரப்பி கழுவத் தொடங்கினேன்.
எத்தன தடவ கழுவணும்?”
எங்கண்ணன் போதும்னு சொல்றவரைக்கும் கழுவிகினே இருக்கவேண்டிதுதான்.”
பத்து தரம் கழுவச் சொன்னாலும் கழுவணுமா?”
ஆமாம்.”
நூறு தரம் கழுவச் சொன்னாலும் கழுவணுமா?”
ஆமாம்.”
சோப்பு போட்டு கழுவறமாதிரி ஏன் அப்படி கழுவணும்? இதுல என்ன அவ்ளோ அழுக்கா இருக்குது?”
ஒனக்கு தெரியாதா? ஒங்க ஊட்டுல கறிக்கொழம்பு வைச்சதில்லயா?”
எங்களுக்கு கஞ்சி சோறு கெடச்சாவே பெரிய விஷயம். இதுல கறி சோறுக்கு எங்க போவறது? எப்பனா ஐயா ஊட்டுல குடுத்தா எடுத்தும் போயி புள்ளைங்ககிட்ட குடுப்பன். நான் என்ன கறிய கண்டனா, நரியக் கண்டனா?.”
கறியில ரத்தக்கவிச்சி போவணும்ன்னா இப்படித்தான் கழுவணும்.”
அதெல்லாம் எனக்கெப்படி தெரியும்?”
இதுக்கே இப்பிடி சொல்றியே, அண்ணன் பீஸ் போட்டு முடிச்சதும் பத்து தரம் கழுவ சொல்வாரு. தெரிமா? கழுவிக் கழுவி அத காய்கறியாவே மாத்திருவாரு. கடைசியில அடுப்புல போடும் போது அத தொட்டா காலிப்ளவரு மாதிரி இருக்கும்.”
கருத்தம்மா தன் குண்டானிலிருந்த அழுக்குத்தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு மீண்டும் தண்ணீரை நிரப்பினாள்.
சிதம்பரம், அந்த கொய்யா மரத்துப் பக்கமா ஒரு பூனை எட்டிப் பார்க்குது பாரு. வெரட்டி விடு.”
அரிசி அண்டாவை ஒரு தட்டு போட்டு மூடிவிட்டு, மரத்தடியில் நின்றிருந்த பூனையை விரட்டிவிட்டுத் திரும்பினான். “எப்பவுமே கண்ணு வாசல்பக்கமா இருக்கட்டும்டா, வாசனை புடிச்சிட்டுதுன்னா பூனையும் நாயும் சும்மா உடாதுஎன்று எச்சரித்தார் அண்ணன். “பூண்ட எடுத்து வேகவேகமா உரி. வெங்காயத்த வெட்டு. மசமசன்னு நிக்காம வேலைய பாரு. பிரியாணிய எறக்கி கீழ வச்சிட்டம்னா, அதுக்கப்பறம் எல்லா நேரமும் நம்ம நேரம்தான்…..”
இங்க பாரு, கறிவாசன வருதா, காய்வாசன வருதா, பாத்து சொல்லுஎன்றபடி குண்டானை என் முன்னால் சிரித்துக்கொண்டே நீட்டினாள் கருத்தம்மா.
அத நான் எப்பிடி சொல்றது? அண்ணன்தான சொல்லணும்? போய் அவருகிட்டயே கேளு.”
நான் விளையாட்டுக்காகத்தான் சொன்னேன் என்பதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் அவள் நேராக குண்டானைத் தூக்கிக்கொண்டு அண்ணன் முன்னால் நின்றுவிட்டாள். அவர் என்ன சொல்லப் போகிறாரே என்று ஒருகணம் நான் நடுங்கிவிட்டேன். அண்ணன் அமைதியாக குண்டானைக் குலுக்கி கீழ்மேலாக கலைத்து தொட்டு முகர்ந்து பார்த்தார். பிறகுபோதும். துண்டு போட்டப்பறம் மிச்சத்த பாத்துக்கலாம். இங்க வச்சிட்டு இன்னொரு குண்டான எடுத்துக்கோஎன்றார். அவள் குண்டானைத் தூக்கிக்கொண்டு என்னருகில் மறுபடியும் வந்தாள். அதற்குப் பிறகுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது. மெதுவாக நானும் என்னிடம் இருந்த குண்டானை எடுத்துச் சென்று வைத்துவிட்டு வேறொரு குண்டானை எடுத்துக்கொண்டு வந்தேன்.
மேசைக்கு அருகில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அண்ணன் உட்கார்ந்துகொண்டார். பிறகு முதல் குண்டானிலிருந்த கறியை எடுத்து மேசைமீது அப்படியே கொட்டிவிட்டு கத்தியெடுத்து துண்டுதுண்டாக நறுக்கத் தொடங்கினார். முதல் துண்டு விழுந்ததுமே அவர் அந்த வேலையில் லயித்துவிட்டார். மெல்ல மெல்ல அவர் இன்னொரு உலகத்துக்குள் இறங்கிச் செல்வதுபோல இருந்தது அவர் முகம். நான் கருத்தம்மாவிடம் கண்ஜாடை செய்து அதைப் பார்க்கும்படி சொன்னேன். அண்ணனின் கைவேகத்தையும் நேர்த்தியையும் கண்டு அவள் விழிகள் விரிந்தன. உண்மையிலேயே மைசூர்பாக் வெட்டுகிற லாவகத்துடன் அண்ணன் துண்டு போடுவதை அவள் ஆச்சரியத்துடன் வாய்பிளந்தபடி பார்த்தாள்.
ஒங்க அண்ணனுக்கு சின்ன வயசிலேருந்தே கால் இப்படித்தானா?” கருத்தம்மாவின் பேச்சு இப்படி திடீரென திரும்பும் என நான் எதிர்பார்க்கவில்லை.
த்ச். அது ஒரு பெரிய கத.”
பெரிசா இருந்தா என்ன, சொல்லக்கூடாதா? இப்ப கறிதான கழுவிகிட்டிருக்கம். பேசிட்டிருந்தா அலுப்பு தெரியாம இருக்கும்.”
நான் சற்றே அடங்கிய குரலில்பத்து வருஷத்துக்கு முன்னாலதான் அண்ணனுக்கு கால் போய்டுச்சி. ஒருநாள் மாயவரத்துக்குப் பக்கத்துல ஒரு கல்யாணத்துல சமைக்கறதுக்காக அண்ணன் போயிருந்தாரு. எல்லாத்தயும் முடிச்சிட்டு ரயில்ல திரும்பி வந்தாரு. ரயில்ல ஒரே கூட்டம். பொட்டிக்குள்ள போவவே முடியலை. அதனால வாசல்ல கம்பிய புடிச்சிகினே உக்காந்து வந்தாரு. தூக்கக்கலக்கமோ இல்ல பின்னால இருந்த ஆளு எவனாவது இடிச்சானோ தெரியலை, கண்ணமூடி கண்ண தெறக்கறதுக்குள்ள  ரயில்லேர்ந்து கவுந்து கீழ உழுந்துட்டாரு. தலை, கை, கால்ல எல்லாம் சரியான அடி. டாக்டருங்க கால எடுத்தாவணும்னு சொல்லிட்டாங்க. எப்படியோ உயிர் பொழச்சிட்டாரு.”
த்ச் என்று நாக்கு சப்புக்கொட்டியபடி கருத்தம்மா ஒருகணம் அண்ணனின் பக்கம் திரும்பிப் பார்த்தாள். சுத்தம் செய்துமுடித்த குண்டானை எடுத்துச் சென்று அவர் அருகில் வைத்துவிட்டு இன்னொரு குண்டானை தூக்கிக்கொண்டு வந்தாள். நானும் குண்டானை மாற்றிக்கொண்டு வந்தேன்.
எத்தினி புள்ளைங்க அவருக்கு?”
எட்டு.”
என்ன சொல்ற நீ? ஆள பாத்தா எட்டு புள்ள பெத்தவராட்டமா இருக்குது? ஒரு நாப்பது நாப்பத்தஞ்சி இருக்குமா?”
எட்டும் பெத்த புள்ளைங்க இல்ல. அவரு வளக்கற புள்ளைங்க.”
கருத்தம்மா கண்களைச் சுருக்கியபடி ஒருகணம் குழப்பத்துடன் என்னைப் பார்த்தாள்அவரு கல்யாணம் ஆனவரா, ஆவாதவரா?”
அவரு கல்யாணமே செஞ்சிக்கலை.”
கையிலதான் நல்ல தொழிலிருக்குது. வருமானமும் இருக்குது. அப்பறம் என்ன?”
அதெல்லாம் இருந்தா போதுமா, அவருக்கு மனசில்ல.”
ஏன்?”
அவுருக்கு அப்பா மட்டும்தான். அம்மா இல்ல. அவரு கொழந்தயா இருந்த சமயத்துலயே பாம்பு கடிச்சி செத்துட்டாங்க. அவுங்கப்பாதான் கஷ்டப்பட்டு ஆளாக்கனாரு. அவரு எங்க கடலூரு வட்டாரத்துலயே பெரிய சமையல்காரர். கல்யாணம் காட்சின்னு பெரிய பெரிய எடத்துலேர்ந்து வந்து கூப்டுகினு போவாங்க. பாதுகாப்புக்காக போற எடத்துக்கெல்லாம் புள்ளயயும் கூப்டுகினு போவாரு. அண்ணனுக்கும் படிப்பு வரலை. ஆனா சமையல நல்லா கத்துக்கினாரு. ஒரு தரம் அண்ணனுக்கு பொண்ணுலாம் பாத்து கல்யாணத்துக்கு தேதி குறிச்சி வச்சிருந்தாங்க. அந்த நேரத்துல திடீர்னு அப்பாவுக்கு பக்கவாதம் வந்து ஒரு கையும் காலும் தொவுண்டு போச்சி.  அவர பாத்துக்கறதுக்காக கல்யாணமே வேணாமின்னு சொல்லிட்டாரு அண்ணன். தாத்தானு கூப்புட எனக்கொரு பேரக்கொழந்தய குடுக்கலையே பாரு அந்த மாரியாத்தானு அடிக்கடி அழுது சங்கடப்படுவாரு அவரு. அந்த மாசத்துலதான் அண்ணன் மொதமொதல்ல போய் ஒரு அஞ்சி வயசு கொழந்தய சட்டப்படி தத்தெடுத்துட்டு வந்தாரு.”
தத்தா?”
எங்க அண்ணனுக்கு இருக்கிற அளவுக்கு பெரிய மனசு உலகத்துல யாருக்கும் கெடயாது தெரிமா?”
பொம்பள கொழந்தயா?”
ஆமாம். அது வளந்து தாத்தா தாத்தானு ஊட்ட சுத்தி ஓடியாறத பாத்து கெழவருக்கு ஒரெ கொண்டாட்டம்.”
அதுக்கப்பறம் வருஷத்துக்கொன்னா இன்னும் ஏழு கொழந்தைங்கள தத்தெடுத்துகிட்டாரு. எல்லாமே புத்திசாலி புள்ளைங்க. கற்பூர புத்தி.”
கடவுள் எங்கயோ ஒரு எடத்துல கோட்ட அழிச்சிட்டு, வேற எங்கயோ கொண்டாந்து அந்த கோட்ட போடறான். நெனச்சாவே ஒடம்பு சிலுக்குது.”
எட்டு புள்ளைங்களும் நல்லா வளர்றத பாத்துட்டு நிம்மதியா போய் சேந்தாரு கெழவரு. அதுக்குள்ள அண்ணனுக்கு நாப்பத தொட்டுடுச்சி வயசு. அவருக்கு கல்யாண ஆசையும் போயிடுச்சி…”
புள்ளைங்கள படிக்க வச்சாரா?”
மூனு பொண்ணுங்க இஞ்சினீருக்கு படிக்குது. ரெண்டு பொண்ணு கம்ப்யூட்டர். ரெண்டு பொண்ணு வக்கீலு. ஒரு பொண்ணு மட்டும் எப்ப பாரு கேமிராவ வச்சிகினே அலயுது. அதுவும் படிக்குது. ஆனா என்ன படிப்புனு தெரியாது.”
கருத்தம்மா ஒருகணம் அண்ணனை நிமிர்ந்து பார்த்துவிட்டு அமைதியானாள். புருவத்தை உயர்த்தி தலையசைத்துக்கொண்டாள். நான் கழுவிமுடித்த குண்டான்கள் அனைத்தையும் எடுத்துச் சென்று அண்ணன் முன்னால் வைத்துவிட்டுத் திரும்பினேன்.
தண்டபானி, இந்த துண்டுங்களயெல்லாம் வாரிப் போட்டுகினு போய் கழுவி எடுத்தாஎன்று அம்பாரமாக குவிந்திருந்த துண்டுக்குவியலைக் காட்டிச் சொன்னார்.  பூண்ட உரிச்சதும் சீக்கிரமா இஞ்சிய உரிச்சி வைடா சிதம்பரம்என்று திரும்பாமலேயே சத்தம் கொடுத்துவிட்டு கருத்தம்மாவிடம்அம்மா, அந்த புதினா கொத்தமல்லிய நல்லா கழுவிட்டு துண்டுதுண்டா நறுக்கு. அப்பறம் எலுமிச்சம்பழத்த புழிஞ்சி தனியா ஒரு சொம்புல சாற எடுத்து வைம்மாஎன்று சொன்னார்.
அஞ்சி லிட்டர் எண்ண எதுக்கு சமையல்கார. ஊட்டுக்கு ஊத்தி எடுத்துகினு போலாம்னு பாக்கறியா?”
எதிர்பாராத விதமாக ஒலித்த பாட்டியின் குரலைக் கேட்டு எல்லோரும் திகைப்போடு திரும்பிப் பார்த்தோம். ”ஐயோ, இந்த பைத்தியக்கார கெழவி உயிர வாங்க இங்கயும் வந்துட்டுதா?” என்று எனக்குள் எரிச்சல் பொங்கியது. ஷாமியானாக்காக முட்டுக் கொடுத்திருந்த மூங்கில் கழியைப் பிடித்தபடி பாட்டி கையை நீட்டி நீட்டிப் பேசுவதை எல்லோரும் பார்த்தார்கள். அண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பத்துடன் என்னைப் பார்த்தார். “ஐயோ, பாட்டிஎன்று எழுந்து ஓடினாள் கருத்தம்மா. “எப்பிடி வாசல்லேருந்து கீழ எறங்கினீங்க, ஐயா பாத்தா என்ன உண்டு இல்லன்னு ஆக்கிடுவாரு. வாங்க இப்பிடிஎன்று தலையிலடித்தபடியே அருகில் சென்று அவளை கைத்தாங்கலாகப் பிடித்து தோட்டத்தை தாண்டி அழைத்துச் சென்றாள்.
யாருடா அது?” என்று அண்ணன் கேட்டார். “அது கெடக்குதுண்ணே, சரியான மென்டல். நம்ம வேதாசலம் சார் அம்மாண்ணே.” என்றேன். “டேய், யாரா இருந்தாலும் வயசுல பெரியவங்கள அப்டிலாம் பேசக்கூடாது, தெரிதா?” என்று அதட்டினார் அண்ணன்.
கருத்தம்மா மீண்டும் ஷாமியானாவுக்குள் வந்து இஞ்சியை உரிக்கத் தொடங்கினாள்.
அண்ணனின் கைப்பேசி ஒலித்தது. அதில் சுடர்விட்ட எண்ணைப் பார்த்ததும் அண்ணனின் முகத்தில் புன்னகை அரும்பியது. எடுத்துசொல்லும்மா கண்ணு. காலேஜ்லேருந்து வந்திட்டியா?” என்றார். தொடர்ந்துவிமலா, பவித்ரா, ஊர்மிளா எல்லாரும் வந்துட்டாங்களாம்மா?” என்று கேட்டார். சிறிது நேரம் மறுபக்கம் சொல்வதற்கெல்லாம் தலையசைத்தபடி ம் கொட்டினார். இறுதியில்அப்பா ஒங்களுக்காக எள்ளுண்டை  செஞ்சி வச்சிட்டு வந்திருக்கேன். அந்த வெள்ள டப்பாவுல இருக்குது பாரு. ஆளுக்கு ரெண்டு எடுத்துக்குங்க. இப்ப வேலையா இருக்கேன். அப்பறம் பேசட்டுமா?” என்று சொல்லிவிட்டு கைப்பேசியை சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டார்.
கொய்யா மரத்தைக் கடந்து கரைவேட்டி கட்டியிருந்த இரண்டு பேர் ஷாமியானாவுக்குள் வந்து நின்றார்கள்.

நீங்கதான் கடலூர்லேருந்து வந்திருக்கிற சமையல்காரங்களா? மச்சான் உங்கள பத்தி ஆஹா ஓஹோன்னு வாய் ஓயாம பேசிகினே கெடந்தாரு. நீங்க பிரியாணி ஸ்பெஷலிஸ்டாமே, அப்படியா?”
சிதம்பரம் அவசரத்தில் பதில் சொல்ல முனைவதைப் பார்த்துவிட்ட அண்ணன் கையசைவாலேயே அவனைத் தடுத்துவிட்டுஎங்க பிரியாணிய சாப்ட்டு பாத்துட்டுதான் அவரு எங்கள வாங்கன்னாருஎன்றார் அண்ணன். “அவருக்கு புடிச்சிருக்கலாம். எங்களுக்கு புடிக்கணுமேஎன்றார் கரைவேட்டிக்காரர். “சாப்ட்டு பாத்துட்டு சொல்லுங்கஎன்றார் அண்ணன். “ஒரு விருந்துல சாப்பாடுதான் ரொம்ப முக்கியம். அது சரியில்லைன்னு வச்சிக்கிங்க, ஒவ்வொருத்தனும் காலம் பூரா அதயே சொல்லிக் காட்டுவான். அப்பறம் எங்களுக்குத்தான் அவமானம்என்று மீசையை உருட்டிக்கொண்டே சொன்னார் வேட்டிக்காரர்.
எங்க ஊட்டு விசேஷங்கள் எல்லாத்துக்குமே தவளகுப்பம் மாணிக்கம்தான் சமையல். வாசனை அப்படியே கும்னு ஊரயே தூக்கிடும். நாங்க எவ்ளோ எடுத்துச் சொல்லியும் மச்சான் கேக்கலை. நீங்கதான் வேணும்னு ஒத்த கால்ல நின்னாரு.”
அவர்கள் சலிப்போடு தமக்குள் பேசிக்கொண்டே வெளியே சென்றார்கள்.
இந்தா, இத வந்து எடுத்துகினு போடா தண்டபானிதுண்டு போட்ட கறியை வாரிவைத்துவிட்டு குண்டானை நகர்த்தினார் அண்ணன். அதை எடுத்துக்கொண்டு குழாயடிக்குத் திரும்பினேன் நான்.
சிதம்பரத்தைப் பார்த்து வேல முடிஞ்சிதா? இங்க வா, அரிசி ஊறனது போதும். எடுத்தும் போயி கழுவுஎன்றார் அண்ணன். அவன் அண்டாவை ஒரு பக்கமாக சாய்த்து உருட்டியபடியே தண்ணீர்க்குழாய்க்கு அருகில் தள்ளிக்கொண்டு வந்தான். இருவருமே வேலையில் மூழ்கினோம்.
எதிர்பாராத நேரத்தில் ஷாமியானா பக்கத்திலிருந்து தூளியிலே ஆடிவந்த வானத்து மின்விளக்கே என்று பாட்டுச்சத்தம் கேட்டது. ”இனிமே பாட்டு சத்தம்தான். கும்மாளம்தான். நாம பேசறது கூட நமக்கே கேக்காதுஎன்றாள் கருத்தம்மா.
 எலுமிச்சை சக்கைகளை ஒரு பிளாஸ்டிக் உறையில் போட்டு சுவரோரமாக வைத்துவிட்டுத் திரும்பியபோது அண்ணன் அவளை அழைத்தார். “அந்த பெரிய சருவத்தையும் பிரியாணி அண்டாவையும் மூடித்தட்டுகளையும் நல்லா கழுவி எடுத்தா தாயி  என்றார். கருத்தம்மா உடனே அவற்றைக் கழுவி எடுத்துச் சென்று சிலிண்டருக்கு அருகில் வைத்தாள். சிதம்பரம் அரிசியையும் நான் கறித்துண்டுகளையும் கொண்டு சென்று வைத்தோம்.
என்னடா, ஆரம்பிச்சிடலாமா?” என்று கேட்டபடி என்னை நோக்கி கை நீட்டினார் அண்ணன். “ஆரம்பிக்கலாம்ண்ணேஎன்றபடி ஈரம் படிந்த விரல்களை சட்டையில் தேய்த்துத் துடைத்துவிட்டு, கால்சட்டைப் பையிலிருந்து கற்பூரத்தையும் தீப்பெட்டியையும் எடுத்துக் கொடுத்தேன். அண்ணன் ஒரு சின்ன கிண்ணத்தை அடுப்புக்கு முன்னால் வைத்து அதில் கற்பூரத்தை வைத்து ஏற்றினார். சுடர்விட்ட கற்பூரத்தை ஒருகணம் பார்த்துவிட்டு அண்ணன் கண்களை மூடி மனசுக்குள்ளேயே பிரார்த்தனை செய்தார். நாங்களும் எரியும் சுடரைப் பார்த்தபடி நின்றோம். கண் திறந்த அண்ணன் மெதுவாகக் குனிந்து சுடரைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டார். நாங்களும் தொட்டு வணங்கினோம். சுடர் அடங்கியதும் பெரிய சருவத்தில் கேன் தண்ணீரை பாதியளவு ஊற்றி அடுப்பில் வைத்தார். நீல விளிம்புடன் ஒரு மலரென விரிந்த வெண்தழல் சருவத்தின் அடிப்பகுதியில் மோதியது. சற்றே கொதிக்கத் தொடங்கியதும் அதில் இரண்டு கைகளாலும் கறித்துண்டுகளை அள்ளி அள்ளிப் போட்டார். பக்கத்திலிருந்து உப்பு பாக்கெட்டை உடைத்து கையால் அளவு பார்த்து துண்டுகள் மீது தூவினார். பெரிய ஜல்லிக்கரண்டியால் ஒருமுறை துண்டுகளைப் புரட்டிவிட்டு தட்டு போட்டு மூடினார்.
அண்ணனின் கைப்பேசி ஒலித்தது. ”சாய்ங்காலம் ஆயிடுச்சில்ல. இனிமே மாத்தி மாத்தி பேச ஆரம்பிச்சிடும்ங்கஎன்றபடி காதோரமாக வைத்து அலோ என்று பேசத் தொடங்கினார். மறுமுனையில் பேசும் குரல் அளவு மீறிய சத்தத்தின் காரணமாக எங்களுக்கும் கேட்டது.
நான் சித்ரா பேசறேன்பா. இப்பதான் காலேஜ் விட்டு வந்தன். இன்னைக்கு செமஸ்டர் மார்க் குடுத்தாங்க. நான்தான் காலேஜ்லயே ஃபர்ஸ்ட். எண்பத்தெட்டு பர்சண்ட்
அண்ணன் முகம் அதைக் கேட்டு பூரித்துவிட்டது.  சரி கண்ணு. ரொம்ப சந்தோஷம். அப்பா ஒனக்காக எள்ளுண்டை செஞ்சி வச்சிருக்கேன் பாரு. எடுத்து சாப்ட்டுட்டு பால் குடி. நான் அப்பறமா பேசட்டுமா, வேலயா இருக்கன். சரியா?” என்றபடி அவர் உரையாடலைத் துண்டித்தார்.
கைபேசியை பைக்குள் வைத்தபடி என்னடா இங்கயே நின்னு வேடிக்கை பாக்கற? போய் இஞ்சி பூண்டு வச்சி அரச்சி எடுத்தா? சீக்கிரம் ஓடுஎன்று என்னை விரட்டினார். தனித்தனி முறங்களில் நறுக்கிவைத்த வெங்காயம், தக்காளி, மிளகாய், புதினா, கொத்துமல்லி எல்லாவற்றையும் கருத்தம்மாவும் சிதம்பரமும் எடுத்துவந்து கைக்கெட்டும் தொலைவில் வைத்துவிட்டு நின்றார்கள்.
எவ்ளோ காலமா இங்க வேல செய்ற தாயி?” கருத்தம்மாவிடம் அண்ணன் பேச்சு கொடுப்பதைப் பார்த்தேன்.
பத்து வருஷமா இங்கதாங்க இருக்கன்.”
எத்தன புள்ளைங்க?”
மூனு பசங்க. ஸ்கூல்ல படிக்குதுங்க.”
ஊட்டுக்காரன்?”
அவன் நல்லா இருந்தா நான் ஏன் இங்க வந்து லோல்பட்டு லொங்கழியணும்? அவன் ஒரு சரியான குடிகாரக் கமினேட்டி. நாம கஷ்டப்பட்டு சம்பாதிச்சி அஞ்சயோ பத்தயோ எடுத்தும் போயி ஊட்டுல வச்சா, அத துப்பு கண்டுபுடிச்சி குடிச்சிட்டு வந்து நிப்பான் பேமானி
இந்த ஐயா எப்பிடி?
அவரு தங்கமான மனுஷங்க. கூட இருக்கறவங்கதான் பித்தளைங்க. கடவுள் போடற முடிச்சி அப்பிடிங்க, நாம என்ன செய்யமுடியும்?”
சிறிது நேரத்துக்குப் பிறகு மூடியைத் திறந்து ஜல்லிக்கரண்டியாலேயே ஒரு கறித்துண்டை அழுத்திப் பார்த்தார் அண்ணன். ஒருமுறை ஜல்லிக்கரண்டியை ஆழமாக விட்டு துண்டுகளைக் கிளறிவிட்டார்.
வெளியே ஷாமியானாவுக்கு அருகில் பிள்ளைகள் போடுகிற சத்தமும் பாட்டுச்சத்தமும் சமையல்கட்டு வரைக்கும் கேட்டது.
அண்ணன் எங்களைத் திரும்பிப் பார்த்தார். எங்களுக்கு அவர் பார்வை புரிந்தது. இருவரும் ஆளுக்கொரு துணியை எடுத்துச் சென்று கறித்துண்டு அண்டாவைத் தூக்கி மேசைமீது வைத்துவிட்டு, மெதுவாகச் சாய்த்து தண்ணீரை வேறொரு சின்ன அண்டாவில் வடிகட்டினோம்.
இருப்பதிலேயே வாயகன்ற பெரிய பாத்திரத்தை அடுப்பிலேற்றினார் அண்ணன். அதில் எண்ணெயை ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கல்பாசி இலைகளை அளவாகப் போட்டு ஜல்லிக்கரண்டியால் புரட்டிப்புரட்டி வதக்கினார். சில நிமிடங்களுக்குப் பிறகு நறுக்கிவைத்த வெங்காயம், தக்காளி, மிளகாய் என ஒவ்வொன்றாகச் சேர்த்துக்கொண்டே போனார். இறுதியாக பூண்டையும் இஞ்சியையும் சேர்த்து அரைத்த கரைசலில் பாதியை ஊற்றினார். ஒருகணம் கூட ஓய்வின்றி அவர் கையிலிருந்த ஜல்லிக்கரண்டி சுழன்று சுழன்று வந்தது. நல்ல நிறம் கூடி வந்த நேரத்தில் கறியிலிருந்து வடிகட்டிய தண்ணீரை ஊற்றிக் கலக்கினார். ஒன்றிரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அரிசிக்குப் போதுமான தண்ணீரை கேனிலிருந்து சாய்த்து ஊற்றிவிட்டுதண்டபானிஎன குரலெழுப்பினார். நானும் சிதம்பரமும் அரிசி அண்டாவை அடுப்புக்கு அருகில் தள்ளிச் சென்று இரு கைகளாலும் அரிசியை அள்ளி அள்ளி பிரியாணி அண்டாவுக்குள் போட்டுவிட்டு விலகினோம். அண்ணன் இரண்டு கை உப்பை அள்ளிச் சேர்த்துவிட்டு ஜல்லிக்கரண்டியால் கலக்கிவிட்டு தட்டு போட்டு மூடினார்.
பெரிய சருவத்தைத் தூக்கி நான் இன்னொரு பக்கத்தில் இருந்த அடுப்பில் வைத்துவிட்டு சிலிண்டரை ஆன் செய்தேன். பாத்திரத்தில் மிதமான சூடேறியதும் நெய்யை எடுத்து ஊற்றினார் அண்ணன். மஞ்சள் தூளையும் மிளகாய் தூளையும் போட்டு சொம்பில் எஞ்சியிருந்த இஞ்சிக்கரைசலையும் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருந்தார். அவர் விலகி நின்ற சமயத்தில் கறித்துண்டுகளை சருவத்தில் கொட்டி நிறைத்தோம். அதன் மீது தயிரை ஊற்றி உப்பைக் கலந்து ஜல்லிக்கரண்டியால் புரட்டினார் அண்ணன். கறி வேகத் தொடங்கிய சமயத்தில் ஒருவித வாசனை எழத் தொடங்கியது. .
சோற்றுப் பாத்திரத்தை மூடியிருந்த தட்டை நான் மெதுவாக விலக்கினேன். குப்பென்று ஒரு புகை எழுந்து கலைந்தது. அண்ணன் பொன்துகள்களென வெந்துகொண்டிருக்கும் சோற்றையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். ப்ளக் ப்ளக்கென்று குமிழிகள் எழுந்து வெடித்தன. கரண்டியை பாத்திரத்தின் விளிம்பு ஓரமாக இறக்கி  ஒரு கலக்கு கலக்கிவிட்டு அள்ளி இரண்டு விரல்களுக்கிடையில் ஒரு சோற்றை எடுத்து நசுக்கி உருட்டி நாக்கில் வைத்துச் சுவைத்தார்.
அண்ணனின் கைப்பேசி ஒலித்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் அண்ணன் பிரியாணி அண்டாவையே பார்த்தபடி நின்றிருந்தார். நேரம் நகர்ந்துகொண்டே இருந்தது. அவர் முகத்திலும் கழுத்திலும் அனல்பட்டு வியர்வை வழிந்தது. சட்டென அவர் நகர்ந்து அழுத்தமாக  ம் என்று குரல்கொடுத்தார். உடனே நாங்கள் கறித்துண்டு சருவத்தை எடுத்துத் தூக்கி எல்லாத் துண்டுகளும் பிரியாணி அண்டாவில் விழும்படி செய்தோம். கொதிக்கும் அரிசியுடன் கறித்துண்டுகள் கலந்து மூழ்கின.
முறத்தில் நறுக்கிவைத்திருந்த கொத்துமல்லியையும் புதினாவையும் எடுத்து அண்டாவுக்குள் தூவினார் அண்ணன். சோறும் கறியும் சேரத் தொடங்கியதும் லேசான மணமெழுந்து பரவியது. கடைசியாக எஞ்சியிருந்த நெய்யையும் எலுமிச்சை சாறையும் ஊற்றிவிட்டு ஜல்லிக்கரண்டியை அண்டாவின் விளிம்பு வழியாகக் கொண்டு சென்று மெல்ல மெல்ல நடுப்பகுதிக்கு இழுத்துவந்து நாலைந்துமுறை புரட்டிவிட்டு நிறுத்தினார். அப்போது எழுந்த மணம் ஒருவித கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. அண்ணன் சற்றே அரையடி உயரத்துக்கு கரண்டியைத் தூக்கி மீண்டும் உள்விளிம்புக்கு வந்து ஓரமாகவே சுழற்றிச் சென்று நடுப்பகுதியை அடைந்து இரண்டுமூன்று தரம் புரட்டினார். மணத்தின் கிளர்ச்சி இன்னும் பெருகியது. கருத்தம்மா நம்பமுடியாதவளாக பிரியாணி அண்டாவையே பார்த்துக்கொண்டிருந்தாள். தெய்வத்தின் வாசலில் நிற்பதுபோல அவள் கண்கள் கலங்கத் தொடங்கின. மூக்கில் முந்தானை நுனியை வைத்து உறிஞ்சி துடைத்துக்கொண்டாள். அண்ணன் மீண்டும் கரண்டியை ஒரு சுற்று சுழற்றி புரட்டிவிட்டு கரண்டியை வெளியே எடுத்து மேசையின் மேல் வைத்துவிட்டு நாற்காலியில் சென்று உட்கார்ந்து முகத்தைத் துடைத்துக்கொண்டார். கைப்பேசியை எடுத்து பதில் அளிக்காத அழைப்பைத் தேடிப் பார்த்துவிட்டு எண்களை அழுத்தத் தொடங்கினார்.  நான் வேகமாகச் சென்று தட்டை எடுத்து அண்டாவை மூடினேன். சமையல் ஷாமியானாவில் எழுந்து பெரிய ஷாமியானா வரைக்கும்   பரவியது பிரியாணி மணம்.

(23.06.2020 புக் டே இணைய இதழில் வெளிவந்த சிறுகதை)