Home

Wednesday, 10 June 2020

கிருஷ்ண ஜெயந்தி - சிறுகதை




டேய், போடறத ஒழுங்கா புடிக்கணும் தெரிதா?” என்றேன். ”கொஞ்சம் ஏமாந்தாலும் உருண்டுபோய் சாக்கடையில உழுந்துரும்
அடங்கிய குரலில் எச்சரித்துவிட்டு குனிந்தவாக்கில் அடிமேல் அடிவைத்து மெதுவாக மதிலோரமாகவே சென்றேன். கற்கள் இடிந்துவிழுந்த நிலையில் உயரம் குறைவாக இருந்த புள்ளியில் தாவியேறி, அந்தப் பக்கமாக வளைந்து தாழ்ந்திருந்த மாமரத்தின் கிளையில் தொற்றி இரண்டு பக்கமும் கால்களைத் தொங்கவிட்டு உட்கார்ந்தேன். பிறகு அங்கிருந்தே மாங்காய்கள் தொங்கும் இடத்தை அடையும் வழியைத் திட்டமிட்டு ஒவ்வொரு அடியாக நகர்ந்தேன். சில நிமிடங்களில் மாங்காய் கைக்கு எட்டும் தொலைவுக்கு வந்துவிட்டேன்.

சிவலிங்கம், ஜெயபாலன், ராமசாமி மூன்று பேருமே நான் சொன்ன இடத்தில் நின்றிருந்தார்கள். நான் பார்வையைத் திருப்பி தயாரா என்று கேட்பதுபோல தலையை அசைத்தேன். அவர்கள் பதிலுக்கு தலையசைத்தும், போடுஎன்பது போல கைகளைத் தேய்த்துக்கொண்டு நின்றார்கள்.
நான் மெல்ல மெல்ல கையை நீட்டி முதல் மாங்காயைப் பறித்தேன். பச்சைமாங்காய் கைக்கு வந்ததுமே நாக்கு கூசியது. காம்பிலிருந்து பால் சொட்டி மணிக்கட்டில் விழுந்தது. கிளைப்பட்டையின் மீது கையைக் கவிழ்த்துவைத்துத் தேய்த்துவிட்டு சிவலிங்கத்தை நோக்கி வீசினேன். மாங்காய் சரியாக அவன் கைக்குள் அடைக்கலமானது. அடுத்த காயைப் பறித்து ஜெயபாலனை நோக்கி வீசினேன். அவனும் சரியாகப் பிடித்துவிட்டான். மூன்றாவது காயை முதலில் பிடித்து, பிறகு நழுவவிட்டு  கடைசியாக ஒருவழியாக கைப்பிடிக்குள் தக்கவைத்துக்கொண்டான் ராமசாமி.
நான்காவதாக ஒரு காயை இலக்காக்கி, அதை நெருங்குவதற்காக மேலும் இரண்டடி நகர்ந்து முன்னால் சென்ற நேரத்தில் எங்கிருந்தோ ஒரு நாய் என்னைப் பார்த்துவிட்டது. உடனே என்னைப் பார்த்து குரைத்தபடி மரத்தை நோக்கி வந்தது. நான் மேலே உட்கார்ந்தபடியே கையை வீசி அந்த நாயை விரட்ட முயற்சி செய்தேன். அது ஒரு இம்மியளவு கூட நகராமல் அங்கேயே நின்று குரைத்துக்கொண்டே இருந்தது. நண்பர்கள்போதும் வாடா, பரவாயில்ல, வந்துடுஎன்று அவசரப்படுத்தினார்கள். அவர்கள் முகங்களில் அச்சம் தெரிந்தது. ”வாடா வாடா, சீக்கிரமா வாடாஎன்று பற்களைக் கடித்தபடி முகத்தைச் சுளித்தான் சிவலிங்கம்.
அந்த ஒரு மாங்காயை மட்டும் பறித்துக்கொண்டு இறங்கிவிடலாம் என நினைத்து ஒருகணம் அந்தக் கிளையிலேயே உட்கார்ந்தேன். அதற்குள் அந்த நாயின் சத்தத்தைத் தொடர்ந்துயாருடா அங்க தோட்டத்துலஎன்று கேட்கும் ருக்மிணி மாமியின் குரல் வந்துவிட்டது.
மாமியின் குரல் கேட்டதுமே சிவலிங்கமும் ஜெயபாலனும் சிட்டாகப் பறந்துவிட்டனர். ராமசாமி அச்சத்தில் திரும்பி காலெடுத்து வைக்கிற அவசரத்தில் ஒரு காலை சாக்கடைக்குள் விட்டு தடுமாறி, பிறகு அந்தச் சேற்றுக்காலை விடுவித்துக்கொண்டு வழியெல்லாம் உதறியபடியே ஓடிவிட்டான்.
அதற்குள் கதவைத் திறந்துகொண்டு மதிலோரமாக வந்து நின்று என்னைப் பார்த்துவிட்டாள் மாமி. எனக்கு வெட்கமாக இருந்தது. அங்கிருந்தே தாவி தரையில் குதித்துவிடலாமா என்று தோன்றியது. மாமி பைகளில் நிறைத்து கொடுத்துவிடும் உளுந்தையும் அரிசியையும் அம்மாவிடம் கொண்டுபோய் கொடுப்பதும் கல் எந்திரத்தில் அம்மா அரைத்துக்கொடுக்கும் மாவை பைகளில் நிரப்பி மீண்டும் எடுத்துவந்து மாமியிடம் கொடுப்பதும் என்னுடைய வேலைகளாக இருந்த காலம் அது. இப்படி கையும் களவுமாக அகப்பட்டுக்கொண்டு விழிக்கிற அளவுக்கு வந்துவிட்டதே என்று கூச்சமாக இருந்தது.
நீதான் அந்த ஜெகதலப்பிரதாபனா? உனக்கு இந்த வயசிலயே திருட்டு மாங்கா கேக்குதா? வா. மொதல்ல நீ. கீழ எறங்கு. உங்க அம்மாகிட்டயே சொல்றேன். வா.”
அச்சமும் வெட்கமும் கவிய, நான் நடுங்கிக்கொண்டே இறங்கி மதில்மீது கால் வைத்தேன்.
எங்கடா ஓடித்து உன் வானரப் பட்டாளம்? ஒன்ன தனியா உட்டுட்டு ஓடிட்டானுங்களா?”
மாமி மதிலுக்கருகில் வந்து நின்றாள். நான் தரையில் கால் வைத்ததும் எட்டி என் சட்டைக் காலரைப் பிடித்தாள். நான் ஓட முயற்சி செய்யவில்லை என்பது உறுதியானதும் பிடியை விட்டாள். “ஒழுங்கா வா பின்னாலஎன்றபடி முன்னால் நடந்தாள். கதவுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த வாளியிலிருந்து தண்ணீரை எடுத்து கால்களையும் கைகளையும் சுத்தப்படுத்திக்கொள்ளச் சொன்னாள்.
எத்தன நாளா கண்ணா நடக்குது இந்த வேல?”
இன்னைக்குதான் மாமி பறிக்கவந்தேன்.”
அப்ப போன வாரம் மதிலோரமா இருந்த கெளயில மாங்கா பறிச்சது யாரு?”
நான் இல்ல மாமி
வேற யாரு?”
சிவபாலன்
அதுக்கு முந்தின வாரம் யாரு பறிச்சா?”
அந்த வாரம் இல்ல மாமி, அதுக்கும் போன வாரம். இந்தி ஒழிக இந்தி ஒழிகன்னு ஊர்வலம் போனாங்களே, அன்னைக்கு. ராமசாமிதான் பறிச்சான்.”
பறிச்சித் திங்கறதுக்கு நாள் கெழமைலாம் குறிச்சி வச்சிண்டிருக்கியா?”
அவள் சிரித்துக்கொண்டே வந்து என் தோளில் தட்டினாள்.
எத்தன பேருடா உன்கூட கூட்டு?”
மூனு பேரு மாமி. சிவலிங்கம், ஜெயபாலன், ராமசாமி.”
சரி உள்ள வாஎன்றபடி வீட்டுக்குள் சென்றாள் மாமி.
வீட்டுக் கூடத்தில் நடக்கிற வழியைத் தவிர மற்ற இடங்களில் பாயும் பழைய வேட்டியும் விரித்து அப்பளங்கள் உலர்த்தப்பட்டிருந்தன. பனைமரம் மாதிரி பருத்த தூண்கள் யானை நிறத்தில் நின்றிருந்தன. வாசக்காலிலிருந்து நடக்கிற வழி நெடுக ஒரு குழந்தை கால் வைத்துவிட்டு நடந்ததுபோல பாதங்களின் சுவடுகள் வெண்மை நிறத்தில் காணப்பட்டன.
மிதிக்காம பாத்து வாடா
வெவ்வேறு அளவிலான மொட்டுகள்போல காணப்பட்ட கால்விரல் சுவடுகள் அழகாக இருந்தன. எண்ணி வைத்ததுபோல சீரான இடைவெளியில் அவை வீட்டுக்குள் நீண்டு ஒரு அறைக்குள் செல்வதைப் பார்த்தேன்.
என்ன மாமி இது? யாரோ நடந்தமாதிரி இருக்குது.”
குழந்தை கிருஷ்ணர் பாதம்டா அசடு. நாளைக்கு கிருஷ்ண ஜயந்தி இல்லயா? ஆத்துக்குள்ள கிருஷ்ணரே வரமாதிரி ஒரு நம்பிக்கை
யாரு கிருஷ்ணர்?”
மாமி அதைக் கேட்டு திடீரென சிரித்தார். மீண்டும் மீண்டும் நினைத்து சிரித்துக்கொண்டே இருந்தார். சிரிப்பில் அவர் கண்களில் நீர் தளும்பி நின்றது. முந்தானையை உயர்த்தி கண்களில் ஒற்றி எடுத்துக்கொண்டார்.
அவர்தான் நம்ம படைச்ச பகவான். நம்ம கோவில்ல கர்ப்பகிருஹத்துல பாம்புமேல படுத்திண்டிருக்காரே, அந்த பெருமாளோட அவதாரம்.”
வெண்ணெய் திருடற கண்ணன் கதய கேட்டிருக்கியா?”
வெண்ணெயா? எங்க ஊட்டுல நான்தான் வெண்ணெய யாருக்கும் தெரியாம எடுத்து சாப்டுவன். வேற யாரும் தொடமாட்டாங்க.”
ஒனக்கு எப்பவுமே சாப்டற நெனப்புதானா? ஒங்கம்மா ஒனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கொடுத்து கெடுத்து வச்சிருக்கா. பனமரத்துல பாதி உசரத்துக்கு நெடுநெடுனு வளந்து நிக்கற. இன்னும் கண்ணன், கிருஷ்ணன் தெரியலைனு சொல்றையே, ஒன்ன என்னன்னு சொல்றதுடா மடயா.”
தெரியும் மாமி
என்ன தெரியுமோ, போ. வருஷாவருஷம் தீபாவளி கொண்டாடறமே, எதுக்காக அத கொண்டாடறோம், அதுவாவது தெரியுமா?”
. அன்னைக்குத்தான் நரகாசுரன் பொறந்தாரு
அடி விழும்டா சாம்பராணி. அது அந்த அசுரன் பொறந்தநாள் இல்ல. அவன கிருஷ்ணர் வதம் செஞ்ச நாள்.”
அப்பிடியா?”
அந்த கிருஷ்ணர் பொறந்த நட்சத்திரம் நாளைக்கு. அதான் கிருஷ்ண ஜெயந்தி.” 
ஆனா பாதம் இன்னைக்கே போட்டு வச்சிட்டிங்களே
நாளைக்கு நேக்கு நெறய வேல இருக்குடா. எல்லாரும் இருபது கட்டு, முப்பது கட்டு அப்பளம் வேணும்னு கேக்கறா. என்னால உக்காந்து உருட்ட முடியலை. இடுப்பெல்லாம் ஒரே வலி. பாவம், அதான் கொழந்தைங்கள உருட்ட சொல்லிட்டு நான் இந்த வேலய பாக்கறேன்.”
நான் அப்போதுதான் சுவரோரமாகப் பார்த்தேன். மூன்று பிள்ளைகளும் ஒரு வட்டமான பலகையைச் சுற்றி உட்கார்ந்திருந்தனர். கோலிகுண்டு அளவு உருட்டிய மாவை ஒருவன் பலகையில் வைத்தான். அடுத்தவன் ஒரு உருட்டுக்கட்டையால் அதை அழுத்தி அழகாக சின்ன மாவிலை அளவுக்குத் தேய்த்து உருமாற்றினான். மூன்றாவது ஆள் அதை அடுத்த கணமே பலகையிலிருந்து அகற்றி பாய்மீது உலர்த்தினான். மூன்று பேருமே நான் படிக்கும் பள்ளிக்கூடத்தில் படிப்பவர்கள். ஐந்தாவது, நாலாவது, மூன்றாவது வகுப்புகள். நான் ஏழாம் கிளாஸ் என்பதால் அவர்களோடு பேசுவதில்லை.
ஒங்க ஸ்கூல்லதான்டா படிக்கறாங்க. பெரியவன் நந்தகுமார். அடுத்தவன் கிருஷ்ணகுமார். சின்னவன் பாலகுமார்.”
பாத்திருக்கேன் மாமி. ஆனா பேசனதில்ல.”
மாமி அறையிலிருந்து இரண்டு மாங்காய்கள் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தாள். அப்போதே நான் அதைக் கடித்துத் தின்ன வாய்க்கருகில் கொண்டு சென்றேன். “அத அப்படியே வைடா அசடு. ஆத்துக்கு எடுத்தும்போய் நன்னா அலம்பிட்டு சாப்பிடு. இந்தா இத இப்ப எடுத்துக்கோஎன்றபடி ஒரு தட்டை என்னிடம் கொடுத்தாள். பெரிய பெரிய கடலைகளும் முறுக்குகளும் இருந்தன. ஒரு கடலையை எடுத்து வாயில் வைத்துக் கடித்தேன். வெல்லம்போல இனிப்பு கரைந்தது.
இது என்ன மாமி? கடலை மாதிரி இருக்குதுஎன்று கேட்டபடி அடுத்த கடலையை எடுத்து வாய்க்குள் போட்டுக்கொண்டேன்.
இது இனிப்பு சீடைடா. புடிக்கலையா?”
ரொம்ப அருமையா இருக்குது மாமி
ஒங்காத்துல அம்மா இத செய்யமாட்டாளா?”
ம்ஹூம். பண்டிகைன்னு சொன்னா எங்க ஊட்டுல எப்பவும் உண்டை, கொழுக்கட்ட, வட, பாயசம். அம்மா அதான் செய்வாங்க.”
கிருஷ்ண ஜெயந்தி படைக்கமாட்டாளா?”
ம்ஹூம். எங்க வீட்டுல படையல்னா தீபாவளி, பொங்கல், கார்த்தி. அவ்ளோதான்.”
சரி, சாப்டுண்டே இரு. இந்த நாலு கோலத்தயும் முடிச்சிட்டு வரேன்என்றபடி மாமி இன்னொரு மூலைக்குச் சென்றாள். சாக்பீஸால் போட்ட கோலங்கள் அங்கு காணப்பட்டன. அதன் கோடுகள் மீது அரிசிமாவுக்கரைசல் வைத்திருந்த பாத்திரத்தில் விரல்விட்டு எடுத்து எழுதினாள். ஒன்பது நட்சத்திரங்களை இதழ்களாகக் கொண்ட ஒரு பெரிய பூவின் கோலம். 
மாமி தன்னிச்சையாகஆடாது அசங்காது வாஎன்று பாடத் தொடங்கினாள். அவள் குரல் மிகவும் இனிமையாக இருந்தது. கண்ணுக்கு முன்னால் நிற்கிற முகம்தெரியாத குழந்தையிடம் பேசுவதுபோல இருந்தது அவள் குரல்.  தீராத விளையாட்டுப் பிள்ளை’ ‘என்ன தவம் செய்தனை’ ’தாயே யசோதாஎன்று அடுத்தடுத்து பாடிக்கொண்டே இருந்தாள் மாமி.
ஒரு கோலத்தை முடித்து மற்றொரு கோலத்துக்காக அருகிலிருந்த தூணின் பக்கமாகச் சென்றாள் மாமி. அதைத் தொடங்கும்போதுநானாடி பதுக்கு நாடகமு கனக கண்ணடி கைவல்யமுஎன்று பாடத் தொடங்கினாள். இதுவரை அவள் பாடியதெல்லாம் ஓரளவாவது புரிந்ததாக இருக்க, இந்தப் பாட்டின் வரிகளில் ஒன்றுகூட புரியவில்லை. ஆனால் மாமியின் குரலினிமையால் அதிலிருந்து விடுபடவும் மனம் வரவில்லை.
நான் மாமியின் முகத்தைப் பார்த்தேன். கெஞ்சும் பாவனை. மன்றாடும் பாவனை. இதோ வந்துவிடுவேன் போகாதே என்று சொல்வதுபோன்ற பாவனை. உன்னைத்தான் நம்பியிருக்கிறேன் கைவிட்டுவிடாதே என்று கைகுவிப்பதுபோன்ற பாவனை. எனக்கு கொடுத்த வேலையை நான் செய்யவில்லை, ஆனால் வேறு எதைஎதையோ செய்கிறேன். ஆனால் இதில் என் பிழையென எதுவும் இல்லை என்று அறிவிப்பதுபோன்ற பாவனை. எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு. ஒவ்வொன்றையும் நான் தொடக்கத்திலிருந்து ஆரம்பித்து சரியாய்ச் செய்தபின்னர் வருகிறேன் என்பதுபோன்ற பாவனை. என்னால் இவ்வளவுதான் முடியும், கடைசியில் இப்படித்தான் நிறைவடையும் என எனக்கு முன்பேயே தெரியும் என்பதுபோன்ற பாவனை. சிரிப்பதுபோலவும் பரவசத்தில் திளைப்பதுபோலவும் கெஞ்சுவதுபோலவும் அவர் குரலின் தொனி மாறிக்கொண்டே இருந்தது.
ஒரு சுவரில் கைக்கு எட்டும் உயரம் வரைக்கும் ஆணியடித்து மாட்டப்பட்ட ஏராளமான சாமி படங்கள் தொங்கின. மாடங்களில் குத்துவிளக்குகள் நின்றிருந்தன. அவற்றின் கீழே தரையில் ஒரு பெரிய கோலம் எழுதினாள். அதன் மீது மாவுக்கோடுகளை இழுத்தபடிகண்ணனை பணி மனமே’ ’நானன்றி யார் வருவார்என்று அடுத்தடுத்து பாடினாள்.
எல்லாம் திருப்தியாக இருக்கிறதா என ஒருமுறை எல்லாக் கோலங்களையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு, மாவுக்கிண்ணத்தை ஓரமாக வைத்துவிட்டு கைகளைக் கழுவிக்கொண்டு திரும்பினாள். அவள் கழுத்தெல்லாம் வியர்வை ஓடி நனைந்திருந்தது. இரு தூண்களுக்கிடையில் தொங்கிய கொடியிலிருந்து துண்டையெடுத்து முகத்தையும் கழுத்தையும் துடைத்துக்கொண்டாள் அவள். அப்போதுதான் என் தட்டைக் கவனித்ததுபோலஎன்னடா, இன்னும் தட்டுல அப்டியே வச்சிண்டிருக்கே? சாப்டலயா?” என்று கேட்டாள்.
ஒங்க பாட்ட கேட்டுகினே இருந்ததுல மறந்துட்டன் மாமி. இதோ சாப்டு முடிச்சிருவன்ஒரே பிடியாய் அள்ளி வாய்க்குள் போட்டுக்கொண்டேன்.
பரவாயில்ல. பொறுமையா சாப்டு. நான் சும்மா வெளயாட்டுக்குத்தான் கேட்டேன்என்றாள். “ஒனக்கு பாட்டுன்னா புடிக்குமா?”
புடிக்கும் மாமி. ரேடியோவுல நிறைய கேப்பேன். எங்க வீட்டுல மர்பி ரேடியோ இருக்குது. ஒங்க பாட்டு ரேடியோவுல போடற பாட்டு மாதிரி இல்ல. வேற மாதிரி கேக்கறதுக்கு புதுசா இருக்குது
ஒங்கம்மா பாடுவாளா?”
ம்ஹூம். அதெல்லாம் தெரியாது. பக்கத்து வீட்டுல களயெடுக்க போவும்போது அவுங்க பாப்பாவ கொண்டாந்து எங்க வீட்டுல ஏண கட்டி போட்டுட்டு போவாங்க. அப்ப அம்மா அந்த பாப்பாவ தாலாட்டு பாடி தூங்கவைப்பாங்க. அவ்ளோதான்.”
ஒனக்கு ஏதாவது பாட்டு தெரியுமா?”
எனக்கு தெரிஞ்ச ஒரே பாட்டு கடவுள் வாழ்த்து பாட்டுமட்டும்தான். வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
அது சரி, பெரிய பாட்டுதான்என்றபடி புன்னகைத்துக்கொண்டே மாமி அறைக்குள் சென்று இரண்டு பைகளை எடுத்துவந்து என் முன்னால் வைத்தாள்.
கொண்டுபோய் அம்மாட்ட கொடு. அரிசி மூனு படி, உளுந்து மூனு படி இருக்குது. நாலஞ்சி மணிக்கே வேணும்ன்னு சொல்றியா? அப்பதான் ராத்திரி உருட்ட வசதியா இருக்கும்.”
நான் தலையசைத்தபடி முறுக்குத்தட்டை கீழே வைத்துவிட்டு எழுந்தேன். “இரு இரு ஒரு நிமிஷம்என்றபடி மாமி மறுபடியும் அறைக்குள் சென்றாள். ஒரு பொட்டலத்தை நூல்போட்டு கட்டிக்கொண்டே வெளியே வந்தாள். ”இந்தாடா, ஒன் பட்டாளத்து ஆளுங்களுக்கும் கொடு. யாரும் இனிமே மதிலேறி திருடி திங்கக்கூடாது. வேணும்ன்னா என்கிட்ட வந்து கேக்கணும். புரியறதா?” என்று சொன்னபடி பொட்டலத்தை என்னிடம் கொடுத்தாள். நான் வெட்கத்தோடு வாங்கிக்கொண்டேன்.
நான் அசையாமல் தயக்கத்தோடு நிற்பதைப் பார்த்து குழப்பத்துடன்என்ன யோசிக்கற சொல்லு?” என்றாள். அவள் அம்மாவிடம் சொல்லிவிடுவதாகச் சொன்னது என் மனத்தை அறுத்துக்கொண்டே இருந்தது. ”அம்மாகிட்ட.....  நீங்க.....” என்று சொற்கள் கூடி வராமல் தடுமாறினேன். அதற்குள் நான் நினைப்பதை மாமி புரிந்துகொண்டாள். “அந்த பயம் இருக்கட்டும். நான் சொல்லமாட்டேன்டா, நீ நல்ல புள்ள. எனக்குத் தெரியும். போஎன்றாள். மகிழ்ச்சியில்  வேகவேகமாக அடிவைத்து வீட்டை நோக்கி நடந்தேன்.
அரசமரத்தடி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் கல்பெஞ்சில் உட்கார்ந்திருந்த சிவலிங்கமும் ஜெயபாலனும் ராமசாமியும் என்னைப் பார்த்துவிட்டு ஓடோடி வந்தார்கள். “என்னடா, அடிச்சாங்களா” “திட்டனாங்களா?” ”வீட்டுல சொல்லிடுவாங்களா?” என்று என்னைச் சூழ்ந்துகொண்டு மாறிமாறிக் கேட்டார்கள்.
மாமி ரொம்ப நல்லவங்கடா. திருடித் தின்னாதிங்கடானு மட்டும்தான் சொன்னாங்க. அவுங்க சொல்லச்சொல்ல மனசு ரொம்ப கஷ்டமாய்ட்டுதுடா. இனிமே நாம எந்த வீட்டு மரத்துலயும் எதயும் திருடக்கூடாதுடா.”
சொல்லிக்கொண்டே பையில் வைத்திருந்த பொட்டலத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தேன். “உங்களுக்கு குடுக்கச்சொல்லி மாமி கொடுத்து விட்டாங்கடா
நெஜமாவாடா சொல்ற?”
சத்தியமா, அவுங்கதான் கொடுத்துவிட்டாங்க. அவுங்க ரொம்ப நல்லவங்கடா.”
அவர்கள் அந்தப் பொட்டலத்தை ஆவலோடு பிரித்து முறுக்கு சீடைகளை எடுத்துச் சாப்பிட்டார்கள். நான் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன்.
என்னைப் பார்த்ததுமேஇதோ வருதுமா ஒன் சிகாரம். எங்க போய் சுத்திட்டு வருதுன்னு நீயே கேளுஎன்று திண்ணையில் வற்றலுக்கு காவலாக உட்கார்ந்திருந்த அக்கா வீட்டுக்குள் இருந்த அம்மாவிடம் சொன்னாள். “இன்னைக்கு அவன் கால ஒடிச்சிட்டுதான்டி மறுவேலஎன்றபடி பிரம்பை எடுத்துக்கொண்டு வேகமாக வாசலுக்கு வந்தாள் அம்மா. என் கைகளில் பைகளைப் பார்த்ததுமே  தயங்கிஏன்டா, லீவ் நாள்னா வீட்லயே தங்க மாட்டியா? ஊர்ல உலகத்துல அடிக்கற வெயிலுலாம் ஒன் தலயிலதான் எறங்கணுமா? தொரைக்கி அவ்ளோ ஆட்டம் கேக்குதா?” என்று பிரம்பைத் தாழ்த்திவிட்டு குரலை உயர்த்தினாள்.
நான் ஆடப் போவலைம்மா. மாமி ஊட்டுக்கு போயிருந்தன். உளுந்து அரிசிலாம் குடுத்துவிட்டாங்கமா. இன்னிக்கு சாய்ங்காலமே வேணுமாம்என்றபடி பைகளை அம்மாவின் முன் வைத்தேன். அம்மா ஒவ்வொரு பையையும் திறந்து பார்த்தாள். “மூனுமூனு படி இருக்கும் போலருக்கேஎன்று தனக்குள் முணுமுணுத்தபடியே அக்காவின் பக்கம் திரும்பி செல்வராணி, காதுல உழுது இல்ல, சட்டுபுட்டுனு ஏந்து வா இங்கஎன்றாள். ”ஏந்திரத்த தூக்கி அப்பிடியே பக்கத்துல போட்டுகினு  அரிசிய போட்டு சுத்திகினே இரு. சாப்பாட்டு வேல முடிஞ்சதும் நானும் வரேன்
அக்காவின் முகம் கோபத்தில் சிவந்தது. ”அவன் காலையில போன ஆளு. நாடோடியாட்டமா ஊரு பூரா சுத்திட்டு வரான். அவன என்ன ஏதுனு ஒரு வார்த்த கேக்கறியா? எனக்கு வேல சொல்லமட்டும் தயாரா இருஎன்று முகத்தை நொடித்தாள். அம்மா உடனே குரலை உயர்த்திடேய், லீவ் விட்டா ஊடு தங்கமாட்டியா? வரட்டும் ஒங்கப்பா. அவர்கிட்ட சொல்லி ஒன் கால ஒடிச்சி இன்னைக்கு அடுப்புல வய்க்கச் சொல்றன்என அதட்டிவிட்டுச் சென்றாள். அக்கா உடனே என் பக்கமாகத் திரும்பிபோடா, அந்த ஏந்திரத்த உருட்டியாந்து இங்க வைஎன்று அதட்டினாள். பக்கத்தில் இருந்த துடைப்பத்தால் அந்த இடத்தை நன்றாக சுத்தப்படுத்திவிட்டு தினத்தந்தி தாளை எடுத்து விரித்தாள். எந்திரத்தை உருட்டிவந்து அதன் மீது வைத்தேன் நான். இறவாணத்தில் செருகியிருந்த துணியை எடுத்து எந்திரத்தை முழுமையாகத் துடைத்தாள் அக்கா. அரிசிப்பையை எடுத்து அக்காவின் முன்னால் வைத்தேன்.
நீ சுத்துக்கா, நான் கொஞ்சம் கொஞ்சமா எடுத்து குழியில போடறன்என்று அக்காவின் முன்னால் நான் உட்கார்ந்துகொண்டேன். அக்காவின் முகம் உடனே கனிந்துவிட்டது. ”சரி போடுஎன்றாள். நான் ஒரு பிடியளவு எடுத்து நடுக்குழியில் போட்டதும் அவள் அச்சைப் பிடித்து சுழற்றத் தொடங்கினாள். சில கணங்களுக்குப் பிறகு எந்திரத்தின் விளிம்பிலிருந்து மாவு உதிரத் தொடங்கியது.
அக்கா, அந்த மாமி அழகா பாடறாங்கக்கா
சினிமா பாட்டா?”
ம்ஹூம். பக்திப்பாட்டு
விநாயகர் பாட்டா?
ம்ஹூம். இது வேற. கேக்க கேக்க இன்னைக்கு பூரா கேட்டுகினே இருக்கலாம் போல இருக்குதுக்கா. ஆனா எதுவும் புரியலை.”
ஏன்?”
தெரியல. தமிழ், தெலுங்கு, மலயாளம்னு எல்லாத்தயும் கலந்து பாடறமாதிரி இருக்குது. புரியல. ஆனா கேக்கறதுக்கு நல்லா இருக்குது.”
எப்ப பாடனாங்க?”
அவுங்க கோலம் போட்டுகினே எல்லா பாட்டயும் பாடனாங்க
இன்னைக்கு என்ன கோலம்?”
நாளைக்கி கிருஷ்ணர் பொறந்தநாள் வருதாம். அதுக்காக. கிருஷ்ணர பத்தி அந்த மாமி நெறயா சொன்னாங்க. தீவாளி பத்தி கூட சொன்னாங்க
நான் நரகாசுரன் கேள்விக்குச் சொன்ன பதிலை அக்காவிடம் காதும் கண்ணும் வைத்து சொன்னேன். அக்கா என்னைப் பார்த்துச் சிரித்தாள். “மடயா மடயாஎன்றாள். “அதேதான் அவுங்களும் சொன்னாங்கஎன்றேன். அக்கா எந்திரம் சுற்றுவதையே நிறுத்திவிட்டு ஒருகணம் சிரித்தாள். அவள் சத்தத்தைக் கேட்டு அம்மா உள்ளேயிருந்துகெக்கெக்கேனு என்னடி சிரிப்பு அங்க?” என்று சத்தம் போட்டாள். “அங்க வந்தன்னா, ரெண்டு பேர் முதுவும் வீங்கிடும், பாத்துக்குங்க
அக்கா எந்திரத்தைச் சுழற்றியபடி பொறுமையாக ஆக்கல், காத்தல், அழித்தல்னு பூமியில மூனு கடவுள் இருக்காங்க. அவுங்கதான் மும்மூர்த்திகள். காத்தல் தொழில் செய்யறவர் பேர்தான் விஷ்ணு. அவருடைய அவதாரம்தான் கண்ணன், கிருஷ்ணன் எல்லாம். புரியுதா?” என்றாள்.
மாமி பெருமாள் அவதாரம்னு சொன்னாங்க.”
பெருமாளும் விஷ்ணுவோட அவதாரம்தான்.”
ஒரு ஆளுக்கு எத்தன அவதாரம்க்கா. ஒரே கொழப்பமா இருக்குது.”
விஷ்ணுவுக்கு பத்து அவதாரம். ஒங்க வாத்தியார் இதயெல்லாம் சொல்லமாட்டாரா?”
பேச்சுக்கிடையில் எங்கள் ஆசிரியரை இழுத்ததும் எனக்கு கோபம் வந்தது. ”நீ ஒன்னும் சொல்லவேணாம் போ. ஒன்ன மாதிரி ஒம்பதாம் க்ளாஸ்க்கு போனா நானே எல்லாத்தயும் தெரிஞ்சிக்குவன்என்று சீற்றத்துடன் சொன்னேன்.
அரிசிமாவை வாரி பையில் நிரப்பி ஓரமாக வைத்துவிட்டு, எந்திரத்தை சுத்தம் செய்த பிறகு நானும் அக்காவும் சாப்பிட அமர்ந்தோம். வாழைக்காய் போட்ட கருவாட்டுக்குழம்பு. முதல்முறை தட்டில் போட்ட சோற்றை சீக்கிரமாகவே சாப்பிட்டுமுடித்தேன். அந்த ருசிக்கு இன்னும் சாப்பிடவேண்டும்போல இருந்தது. ஆனால் அம்மாவிடம் கேட்க அச்சமாக இருந்தது. அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்த அக்காவை ஓரக்கண்ணால் பார்த்தேன். “அம்மா, ஒன் புள்ள தட்டுல தாளம் போடுது பாரு. இன்னும் ஒரு கரண்டி எடுத்துவையி. வரவர தம்பிக்கு வயிறு வெள்ளாவிப்பானயாட்டம் ஆவுதுஎன்றாள். அம்மா ஆச்சரியத்தோடுஏன்டா, உண்மையாவே வேணுமா?” என்றாள். நாம் தலையசைத்ததைப் பார்த்துவவுறு பெருக்கபெருக்க மூள சிறுத்துப் போவும்என்று சொல்லிக்கொண்டே ஒரு கை சோற்றை அள்ளிவைத்துவிட்டு குழம்பை ஊற்றினாள். இன்னும் இன்னும் என்று நான் கேட்டு வாங்கி ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டதைப் பார்த்து அவள் சிரித்துவிட்டாள்.
சாப்பிட்டதும் எழுந்துபோய் திண்ணையில் சாய்ந்தபடி கையில் குச்சி வைத்துக்கொண்டு வற்றலுக்கு காவலாக இருந்தேன். அம்மாவும் அக்காவும் பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு வந்தார்கள். உளுந்துப் பையைத் தூக்கி பக்கத்தில் வைத்துக்கொண்டு இருவரும் அரைக்கத் தொடங்கினார்கள். மாமி வீட்டில் பாடியதாக நான் சொன்ன பாடல்களைப்பற்றி அக்கா அம்மாவிடம் கதைகட்டிச் சொல்லத் தொடங்கினாள். அதைக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே எனக்கு கண்ணைச் சுழற்றியது. நான் கண்களை விரித்து எதிரில் பூவரச மரத்தடியிலிருந்து தொடங்கி வீட்டு வாசலை நோக்கி வரும் நிழலைப் பார்த்தபடி இருந்தேன். ஒரு மெல்லிய கரிய போர்வை தன் சுருள்விரிந்து ஒவ்வொரு அங்குலமாகப் பறந்துவருவதுபோல இருந்தது. கல் எந்திரங்களுக்கு இடையில் நறநறவென்று உளுந்து நொறுங்கித் தூளாகும் ஓசையை மனம் பின்தொடர்ந்தபடி இருக்கும்போதே எப்படியோ தூக்கத்தில் விழுந்துவிட்டேன்.
ஒரு பெரிய மேடை. நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அங்கே நிறைந்திருக்கிறார்கள். ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாதபடி ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வேலையைச் செய்தபடி இருக்கிறார்கள். ஒருவர் நாற்று நடுகிறார். ஒருவர் ஏற்றம் இறைக்கிறார். ஒருவர் கதிர் அறுக்கிறார். ஒருவர் வண்டி இழுக்கிறார். ஒருவர் மூட்டை சுமக்கிறார். ஒருவர் புல் அறுக்கிறார். ஒருவர் ஆடுமாடுகள் பின்னால் செல்கிறார். ஒருவர் நடனமிடுகிறார். ஒருவர் பாடுகிறார். ஒருவர் அழுகிறார். ஒருவர் சிரிக்கிறார். நானாடி பதுக்கு நாடகமு என்று கிண்டல் செய்கிறார். எதுவுமே எனக்குப் புரியவில்லை. குழப்பத்தில் ஆழ்ந்தபடி அந்தச் சொற்களை மறுபடியும் அசைபோட்டுப் பார்த்தேன். நாடகமு நாடகமு என்றபடி ஒருவர் கூவிக்கொண்டே செல்வதைப் பார்த்தேன்.
பதறியடித்துக்கொண்டு எழுந்திருந்தபோது திண்ணையில் யாருமில்லை. எந்திரம் சுவரோரமாக உருட்டி வைக்கப்பட்டிருந்தது. வற்றல் பாய் அகற்றப்பட்டிருந்தது.  அக்கா கன்றுக்குட்டியைப் பிடித்துக்கொண்டிருக்க அம்மா பூவரச மரத்தடியில் பால் கறந்துகொண்டிருந்தாள். அக்கா ஏதோ ஒரு கணத்தில் என்னைத் திரும்பிப் பார்த்தாள். “கும்பகர்ணன் எழுந்துட்டாம்மாஎன்று சிரித்துக்கொண்டே அம்மாவிடம் சொன்னாள். நான் எழுந்துபோய் தோட்டத்தின் பக்கம் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்தேன். நாடகம் நாடகம் என்ற குரல் எனக்குப் பக்கத்தில் ஒலிப்பதுபோல கேட்டது.  பானையில் இருந்த தண்ணீரில் முகம் கழுவினேன். அந்தக் குளுமையில் மனம் புத்துணர்ச்சி கொண்டது.
மாவுப் பையை எடுத்தும் போயி மாமி ஊட்ல குடுத்துட்டு வா ராசாஎன்றாள் அம்மா.
நான் வேகமாக நடந்துபோய் மாமியின் வீட்டை அடைந்தேன். கதவு திறந்தே இருந்தது. வாசலிலிருந்தே தொடங்கும் கிருஷ்ணர் பாதச்சுவடுகள் யாரோ நீண்ட வரிசையில் கோணல்மாணலாக பூ வைத்துவிட்டுச் சென்றதுபோல காட்சியளித்தன. கூடத்தில் யாரும் இல்லை. மாமி மாமி என்று அழைத்தேன். பதில் இல்லை. தோட்டத்தின் பக்கம் சென்றிருக்கக்கூடும் என நினைத்து சில கணங்கள் அமைதியாக நின்றிருந்தேன். வீடே ஆளரவம் இல்லாமல் இருந்தது. அவசரமாக மாவு வேண்டும் என்று சொன்னவர் எங்கே சென்றார் என்று குழப்பத்தோடு சுற்றுமுற்றும் பார்த்தேன். வீட்டின் ஒரு மூலையிலிருந்து ஒரு அசைவைக் கண்டேன். சில கணங்களுக்குப் பிறகு நந்தகுமார் மெதுவாக நடந்துவந்து என் முன் நின்றான்.
மாமி எங்க? நான் மாவு எடுத்தாந்திருக்கேனு சொல்றியா?”
அவன் அமைதியாக என்னைப் பார்த்தான். அப்போதுதான்  கண்ணீர்க்கோடுகளால் அவன் கன்னத்தில் கண்ணீர்க்கோடுகளின் கரையையும் கண்கள் சிவந்து வீங்கியிருப்பதையும் பார்த்தேன்.
என்னாச்சிடா? மாமி எங்க?”
என்னால் பதறாமல் இருக்கமுடியவில்லை. அவன் என் கண்களைப் பார்த்துவிட்டு வா என்று சைகை செய்தபடி திரும்பி நடக்கத் தொடங்கினான். அவசரமாக மாவுப்பைகளை தூணோரமாக வைத்துவிட்டு அவனுக்குப் பின்னால் சென்றேன். கூடத்தின் மற்றொரு மூலையில் இருட்டில் ஒரு தூணில் சாய்ந்தபடி கால்நீட்டி உட்கார்ந்திருக்கும் மாமியைப் பார்த்தபோது எனக்குள் அச்சமே எழுந்தது.  கசக்கியெறிந்த ஒரு துணிச்சுருள்போல அவர் சுருண்டிருந்தார். சில மணி நேரங்களுக்கு முன்னால் நானாடி பதுக்கு நாடகமு என்று பாடியவரா இவர் என்று தோன்றியது.
மாமி என்னாச்சி மாமி?” பதற்றத்துடன் நான் அவருக்கு அருகில் அமர்ந்தேன். அவருடைய இடது கண்ணுக்கு மேலே தலையிலிருந்து ரத்தம் கசிந்து புருவத்தை நனைத்து காதோரத்தையும் ஈரப்படுத்தி உறைந்திருந்தது. ரத்தத்தைப் பார்த்ததும் அச்சத்தில் உறைந்துவிட்டேன் நான். உடல் நடுங்கியது. மாமியோடு ஒட்டியபடி கிருஷ்ணகுமாரும் பாலகுமாரும் உட்கார்ந்திருப்பதை அப்போதுதான் நான் பார்த்தேன். அவர்கள் முகங்களும் அழுது வீங்கியிருந்தன.
என்ன நடந்தது மாமி, சொல்லுங்க?” அச்சத்தில் சொற்களை என்னால் சரியாக எடுக்கமுடியவில்லை.
பரண சுத்தம் செய்யறதுக்காக கீழ நின்னுண்டு ஒன்னொன்னா இழுத்தேன். ஏதோ ஒன்னு வேகமா உருண்டு வந்து தலயில வெட்டிடுத்து. மயக்கத்துல கீழ உழுந்துட்டேன். பாவம், கொழந்தைகள் ரொம்ப பயந்துட்டா.”
மாமியின் விழிகளிலிருந்து கண்ணீர் தாரையாகப் பெருகி வழிந்தது. 
மாமி, எழுந்திருங்க மாமி. நாம மொதல்ல டாக்டர்கிட்ட போவலாம்ஒரு வேகத்தில் அவர் கைகளைப் பற்றி எழுப்பி நிற்கவைத்தேன்.
வேணாம்டா. வெந்நீர் வச்சி நானே தொடச்சி விட்டா சரியா போய்டும்என்று மாமி தயங்கினார்.
எவ்ளோ ரத்தம் போயிருக்கு. எங்க அப்பாவுக்கு தெரிஞ்ச டாக்டரு செக்குகாரத் தெருவுல இருக்காரு மாமி. வாங்க போவலாம்
அப்போதும் மாமி தயங்கினார். திடீரென்று என்ன பேசுகிறேன் என்கிற விவரமே புரியாமல்நாளைக்கி கிருஷ்ணர் முன்னால இப்படித்தான் ரத்தக்கோலத்துல உக்காந்து பாட்டு பாடுவிங்களா?” என்றேன். அதைக் கேட்டு ஒருகணம் என்னை திகைத்து நிமிர்ந்து பார்த்தார் மாமி. அந்த வேதனையிலும் அவர் முகத்திலும் ஒரு புன்னகை படர்ந்தது. எழுந்து நின்று புடவையை சீரமைத்துக்கொண்டார்.
நான் என்னுடைய வேகத்தைக் குறைக்காமலேபூட்டு எங்க நந்தகுமார்?” என்று கேட்டேன். அவன் எழுந்து சென்று அறைக்குள் மாடத்திலிருந்து பூட்டுசாவியை எடுத்து வந்தான். நான் அதை கைநீட்டி வாங்கிக்கொண்டேன். அவன் தோள்மீது கைவைத்துபயப்படாத. டாக்டர் பாத்தா எல்லாம் சரியாய்டும்என்றேன். அவன் தலையசைத்துக்கொண்டான்.
வாங்க போவலாம்
மாமியும் பிள்ளைகளும் வெளியே வந்ததும் கதவை இழுத்து பூட்டினேன். சாவியை நானே வைத்துக்கொண்டேன். படியிறங்கி நடந்து சாலைக்கு வந்தேன்.
மாமி தன் புடவைத்தலைப்பை தலைமீது இழுத்துப் போர்த்தியபடி காயத்தை மறைத்துக்கொண்டு வந்தாள். மூன்று பிள்ளைகளும் அவளை ஒட்டி நடந்து வந்தார்கள்.
அரசமரத்தடியைக் கடக்கும்போது ஜெயபாலன் என்னைப் பார்த்துவிட்டு ஓடிவந்தான். அவனுக்குப் பின்னால் சிவலிங்கமும் ராமசாமியும் வந்தார்கள். நான் சுருக்கமாக விவரத்தைச் சொல்லி செக்குக்காரத் தெருவை நோக்கி நடந்தோம். மாமியைச் சூழ்ந்துகொண்டு ஒரு பட்டாளம்போல நாங்கள் நடந்துபோவதை எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள்.
டாக்டர் எங்களைக் கூட்டமாகப் பார்த்ததும் படித்துக்கொண்டிருந்த செய்தித்தாளை கீழே தாழ்த்தியபடி என்னடா, நீங்களும் இந்தி ஒழிக, தமிழ் வாழ்கனு ஊர்வலம் கெளம்பிட்டிங்களா? எல்லாத்துக்கும் காரணம் இந்த பக்தவச்சலம் செஞ்ச வேலஎன்றார். சற்றே தாமதமாகத்தான் எங்களிடமிருந்து அவர் பார்வை விலகி மாமியின் மீது படிந்தது. அவர் தோற்றத்தைப் பார்த்ததுமேதம்பிங்களா, கொஞ்சம் வெளியே நில்லுங்கஎன்று எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டார்.
அரைமணி நேரத்துக்குப் பிறகுதான் கதவு திறந்தது. டாக்டர் எங்களை உள்ளே அழைத்தார். நாங்கள் போய் நின்றதும் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுநீதான் இதுக்கு லீடரா?” என்று என்னிடம் கேட்டார். நான் மெதுவாகப் பின்வாங்கி மறைந்துகொள்ள முயற்சி செய்தபோது அவர் என் கையைப் பற்றி முன்னால் இழுத்தார். “டாக்டர்னு சொன்னாவே பேய்பிசாச பாத்தமாதிரி பயப்படற ஊருல, இந்த காயத்துக்கு டாக்டர்கிட்ட போவணும்ன்னு ஒனக்கு தோணிச்சே, அது ரொம்ப முக்கியம். கெட்டிக்கார பையன்.” என்று தட்டிக்கொடுத்தார். “மாடு தரவு பாக்கறாரே அவரு பையன்தான நீ?” என்று சந்தேகத்தோடு கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார்.
எவ்ள தரட்டும் சார்?”
மாமி தயக்கத்தோடு கேட்டபடி இடுப்பில் செருகியிருந்த துணி பர்சை எடுக்க முனைந்தபோதுஇருக்கட்டும்மா இருக்கட்டும், அதெல்லாம் ஒன்னும் வேணாம்என்று தடுத்துவிட்டார்.
நீங்க ஏதாச்சிம் வாங்கின்டா நேக்கு திருப்தியா இருக்கும்
அப்படியா? அப்ப ஒன்னு பண்ணுங்க. நாலு நாள் கழிச்சி தையல் பிரிக்க வரும்போது மூனு கட்டு உளுந்து அப்பளம் மூனு கட்டு அரிசி அப்பளம் கொண்டாந்து குடுங்க. அது போதும்என்று சிரித்தார்.
வெளியே வந்து அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தார் மாமி. மாமியின் முகம் சற்றே தெளிந்திருந்தது. ராஜகுமாரை இழுத்து தனக்கு அருகில் நிற்கவைத்துக்கொண்டார். மாமி சிவலிங்கத்தையும் ஜெயபாலனையும் பார்த்துசீடை தின்னிங்களாடா?” என்று கேட்டார். “ரொம்ப நல்லா இருந்திச்சி மாமிஎன்று அவர்கள் சொன்னார்கள். தொடர்ந்துநாங்க இனிமே மாங்கா பறிக்கமாட்டோம் மாமிஎன்றனர். மாமி அதைக் கேட்டு புன்னகைத்தார். அந்தப் புன்னகையைப் பார்த்தபிறகுதான் என் மனசுக்கு ஆறுதலாக இருந்தது.
கிளினிக் எதிரே இருந்த டீக்கடையை வைத்திருந்தவர் என் அப்பாவின் நண்பர். அவர் என்னை அங்கே பார்த்ததும் அருகில் அழைத்துஎன்னடா சேதி, இங்க வந்திருக்கே?” என்று கேட்டார். நான் சுருக்கமாக விவரங்களைச் சொன்னேன். அக்கணத்தில் மாமி அருந்துவதற்கு சூடாக ஏதேனும்  வாங்கித் தரவேண்டும் என்கிற எண்ணம் எழுந்தது.
சூடா ஒரு டீ தரீங்களா சித்தப்பா?”
யாரு, அவுங்களுக்கா? இங்க வாங்கி குடிப்பாங்களானு தெரியலயே  என்று முதலில் தயங்கினார். பிறகுசரி, குடுத்துப் பாரு. குடிச்சா அவுங்க குடிக்கட்டும். இல்லைனா நீ குடிஎன்றபடி தம்ளரை எடுத்து வெந்நீர் ஊற்றிக் கழுவினார். பிறகு மெதுவாக என் பக்கமாகத் திரும்பிஅவுங்கள்ளாம் டீ குடிக்கமாட்டாங்கடா. காப்பிதான் குடிப்பாங்க. காப்பியே போடறன்என்றபடி ஒரு காப்பி போட்டுக் கொடுத்தார். நான் அதை வாங்கிச் சென்று மாமியிடம் கொடுத்தேன். நம்ப முடியாததுபோல கண்கள் படபடக்க மாமி என்னையே ஒருகணம் பார்த்துவிட்டு தம்ளரை வாங்கி ஒரு பாதியை அருந்தினார்.  பிறகு பாலகுமாரிடம் அருந்தும்படி கொடுத்தார்.
நாங்கள் அங்கிருந்து நடந்து மாமியின் வீட்டுக்குச் சென்றோம். கதவைத் திறந்து அவர்கள் உள்ளே சென்றதும்நாங்க கெளம்பறோம் மாமிஎன்று விடைபெற்றுக்கொண்டு திரும்பினோம். முறுக்குசீடைகளின் சுவையை வழியெல்லாம் பேசிக்கொண்டே வந்தோம்.
என்ன தம்பி, பையைக் கொடுத்துட்டு வர இத்தன நேரமா?” என்று வழியிலேயே மறித்தாள் அக்கா. “என்ன, மறுபடியும் முறுக்கு சீடை விருந்தா? நீ அதுக்கு ஆசைப்பட்டுதான அங்க போன? எனக்குத் தெரியாதா ஒன்ன பத்தி
அம்மா, இங்க பாருமா அக்காவ, சும்மா சும்மா வம்புக்கு இழுக்குதுஎன்றபடி திண்ணையில் உட்கார்ந்தேன்.
பின்ன என்னடா? போனா போன எடம் வந்தா வந்த எடம்னு ஒக்காந்தா மத்த வேலய யாரு செய்றது?” என்று சலித்துக்கொண்டாள் அம்மா.
மாமி தல ஒடஞ்சி மூஞ்சிலாம் ஒரே ரத்தமா இருந்திச்சிம்மா. அதான் டாக்டர்கிட்ட கூப்டும்போய்ட்டு வந்தன்
என்னடா ஒளர்ர? ஒழுங்கா சொல்லுஅம்மா பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். அக்காவும் வந்து எதிர்த்திண்ணையில் தூணைப் பிடித்துக்கொண்டு நின்றாள்.
நான் நடந்ததையெல்லாம் சொல்லிமுடித்தேன். பார்வை எங்கோ நிலைகுத்தி நிற்க அம்மா அமைதியாக இருந்தாள். அவள் முகத்தில் படிந்த ஆழ்ந்த வேதனையின் கோடுகளைப் பார்க்கமுடிந்தது.
அம்மா, நாம ஒரு எட்டு நடந்துபோய் மாமிய பாத்துட்டு வந்துடலாம். கேக்கறதுக்கே பாவமா இருக்குதும்மாஎன்றாள் அக்கா.
ஆமாம்டி. எனக்கும் மனசு துடிக்குது. சரி வா, போய் வருவம்என்றாள் அம்மா. “நானும் வரேன். நான்தான் உங்கள அழச்சிட்டு போவேன்என்றபடி அவர்களோடு சேர்ந்துகொண்டேன்.
நான் மறுபடியும் அம்மாவோடும் அக்காவோடும் மாமி வீட்டுக்கு நடந்தேன். அரசமரத்தடியில் உப்புவண்டியை நிறுத்திவிட்டு தாத்தா பீடி இழுத்துக்கொண்டிருந்தார். அவருக்கு அருகிலிருந்த முளைக்குச்சியில் ஆடுகள் கட்டப்பட்டிருந்தன. புதிய ஒதியந்தழைகள் ஆடுகள் முன்னால் குவிந்திருந்தன. கிழங்கு விற்றுக்கொண்டிருந்த ஆயாஎங்க குடும்பமா கெளம்பிட்டிங்க? என்று கேட்டாள். “சும்மாதான் ஆயா, இவன் படிப்பு விஷயமா ஒருத்தர பாத்துட்டு வரலாமின்னுஎன்றபடி நிற்காமல் நடந்தாள் அம்மா.
அந்தக் கிருஷ்ணர் பாதங்களைப் பார்க்கும்படி அக்காவுக்குக் காட்டினேன். அக்கா ஒரு அதிசயத்தைப் பார்ப்பதுபோல அவற்றைப் பார்த்து பரவசமடைந்தாள்.
நந்தகுமார்..  நந்தகுமார்
தொலைவில் அவன் அசைவு தெரிந்ததும்  அழைப்பை நிறுத்தினேன். அவன் அருகில் வந்து நின்று புன்னகைத்தான்.
மாமி இருக்காங்களா நந்தகுமார், பாக்கணும்னு அம்மாவும் அக்காவும் வந்திருக்காங்க
அவன் பின்னால் திரும்பி ஓடினான். மறுகணம் அறையிலிருந்து மாமியை கைபிடித்து அழைத்துக்கொண்டு வந்தான். மாமி புடவை மாற்றியிருந்தாள். “வாங்கோஎன்றபடி அம்மாவின் கைகளைப் பற்றிக்கொண்டாள் மாமி. “வாம்மா, வந்து ஒக்காருஎன்று அக்காவையும் அழைத்தாள்.
பையன் வந்து சொன்னான். கேட்டதுமே மனசு பகீர்னு ஆயிடுச்சி. ஒரு எட்டு பாத்துட்டு போவலாம்னுதான் வந்தம்
மாமி அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்று உட்காரும்படி கேட்டுக்கொண்டாள். மாமியின் நெற்றிப்பொட்டுக்கு மேல் போட்டிருக்கும் கட்டுகளைப் பார்த்து அம்மா உண்மையிலேயே கலங்கிவிட்டாள்.
இவ்ளோ பெரிய அடியா? பார்க்கவே பயமா இருக்குது. பட்ட அடி கொஞ்சம் மேல நடுமண்டையில பட்டிருந்தாலும் சரி, கொஞ்சம் கீழ கண்ணுகிட்ட பட்டிருந்தாலும் சரி, ரொம்ப ஆபத்தா போயிருக்கும். என்னமோ நம்ம கஷ்டகாலத்துலயும் கடவுள் நமக்கு தொணயிருக்காருன்னு ஆறுதலா நெனச்சிக்கணும்
பக்கத்தில் துணிமீது உலரவைக்கப்பட்டிருந்த எண்ணற்ற அப்பளங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள் அக்கா. இம்மிகூட மாறாத அதன் அளவு அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது. தொட்டுத்தொட்டுப் பார்த்தாள்.
உலர்ந்த அப்பளங்களை எடுத்து அடுக்கத் தொடங்கினான் நந்தகுமார்.  நான் அவனுக்கு உதவியாக எண்ணி எண்ணிக் கொடுத்தேன். அவன் அழகாக அதை ஒரு காகித உறைக்குள் வைத்து  நூலால் சுற்றிக் கட்டினான். ஏறத்தாழ நாற்பது ஐம்பது கட்டுகள் கட்டி முடித்தோம். அவர்களோடு வேலை செய்வது உற்சாகமாக இருந்தது. எதையாவது சொல்லி அவர்களைச் சிரிக்கவைத்தேன்.
ஒரு தருணத்தில் மிக அருகில் விசும்பல் ஒலியைக் கேட்டபோதுதான் திடுக்கிட்டு திரும்பினேன்.  மாமியின் கண்கள் கலங்கியிருந்தன. முந்தானை நுனையால் துடைக்கத்துடைக்க அவள் கண்களிலிருந்து கண்ணீர் பொங்கியபடி இருந்தன. நான் அவர்கள் பேசுவதையே பார்த்தபடி இருந்தேன்.
நாளைக்கு திருந்திடுவார், நாளான்னைக்கு திருந்திடுவார்னு நானும் பகவானுக்கு பயந்துண்டு ஒவ்வொரு நாளா தள்ளிண்டிருக்கேன். இந்த கொழந்தைகள நெனச்சிதான் உயிர வச்சிண்டிருக்கேன். இல்லைன்னா என்னைக்கோ ஒரு முழம் கயித்துல தொங்கிட்டிருப்பேன்.”
பொம்பளைங்க நாம அப்பிடி பொசுக்குனு மனசு ஒடஞ்சிடக் கூடாது மாமி.”
சொந்த ஆத்துலயே யாராச்சும் திருடி திம்பாளா, சொல்லுங்கோ. பணம் சும்மாவா வருது? இந்த நண்டுசிண்டுலாம் உருட்டி பொரட்டித்தான் ஒவ்வொரு ரூபாயா சேத்து வைக்கறேன். இப்படி மொத்தமா தீவட்டி திருடனாட்டம் வந்து கொள்ளயடிச்சிட்டு போனா எப்படி பொழைக்கமுடியும்.”
எந்த ஆம்பளயா இருந்தாலும் அப்பிடி செய்யறது மகாதப்பு. சுயபுத்தி இருக்கற யாருமே அப்பிடி செய்யமாட்டான்.”
பேசாம ஒரு பாட்டில் பாஷாணத்த வாங்கி பால்ல கரச்சி குடிச்சிட்டு நாங்க போய் சேந்துடுவோம். அப்பதான் இந்த மனுஷனுக்கு புத்தி வரும்.”
ஏன் மாமி இப்பிடி பேசறீங்க? ஒலகத்துல இப்படி ஆயிரம் கோணல் இருக்கும்மா. ஒவ்வொரு கோணலுக்கும் ஒவ்வொரு ஆளும் உயிர உட்டுட்டே இருந்தா உலகம் தாங்குமா, சொல்லுங்க
பட்டாளத்துல வேல செஞ்சிட்டு இங்க வந்திருக்கான் ஒரு கடன்காரன். நல்லா சகுனி மாதிரி. இந்த அக்ரஹாரத்துக்கே அவன் ஒரு கேடுகாலம். தூங்கி எழுந்ததலேந்து தூங்க போறவரைக்கும் சீட்டாட்டம். அவன் சம்பாதிச்சி வச்சிருக்கான். போதாக்கொறைக்கு பென்ஷன் வருது. ஆடறான். இந்த அன்னாடங்காச்சிகளுக்கு அங்க என்ன வேலை, சொல்லுங்கோ. பொம்மனாட்டி மண்டய ஒடச்சி பணத்த புடுங்கிண்டு போய் வச்சி ஆடணுமா?”
ஆறுதல் சொல்ல சொற்களின்றி அம்மா திகைத்து நின்ற சமயத்தில் மாமியே தன்னை ஒருவாறாகத் திரட்டிக்கொண்டு கசப்பான ஒரு புன்னகையைச் சிந்தினாள். கண்களையும் மூக்கையும் துடைத்துக்கொண்டாள். அருகிலிருந்த தம்ளரிலிருந்து ஒருவாய் தண்ணீரை அருந்தி நிதானத்துக்கு வந்தாள்.
அத விடுங்கோ, நாம என்ன பேசனாலும் திரும்பத் திரும்ப அதுதான் நடக்க போறது. கோணல் வால நிமுத்தமுடியுமா என்ன? இந்த லோகத்துல எந்த மனுஷாளயும் திருத்தமுடியாதுஎன்று தூணைப் பார்த்தபடி சொன்னாள்.  பிறகு அம்மாவின் பக்கம் திரும்பி நம்ம சின்னத்தம்பி சாயந்தரமா இங்க வந்ததும் என்னை பாத்து அப்பிடியே நெலகொலஞ்சி போயிட்டான். வாங்க டாக்டர்கிட்டனு எப்பிடி அழச்சான் தெரியுமா? சொன்னா நீங்க அசந்து போய்டுவேள். என்ன விட பத்து வயசு பெரிய ஆளாட்டாமா ஒசந்து நின்னு இந்த தெருவுல என்ன அழச்சிண்டு போனான். என்ன மனசு என்ன மனசு அவனுக்குஎன்றபடி பக்கத்தில் நின்ற என்னை அழைத்து அருகில் உட்காரவைத்துக் கொண்டாள்.
தையல் போட்ட மயக்கத்துல உக்காந்திருக்கச்சே ஓடி போயி ஒரு காப்பி வாங்கியாந்து கொடுத்தான் பாருங்கோ. அந்த நேரத்துல அது அமுதம். எப்பிடிடா கண்ணா நோக்கு அது தோணித்து?
கூச்சத்தில் நான் தலையைக் குனிந்துகொண்டேன். மாமி என் முகத்தை நிமிர்த்திசொல்லுடா, எப்பிடி தோணித்து?” என்று மீண்டும் கேட்டாள். “போங்க மாமிஎன்றபடி நான் அம்மாவின் பக்கம் திரும்பி அம்மாவோடு ஒட்டிக்கொண்டேன்.
கண்ணனும் தெரியலைங்கறான், கிருஷ்ணனும் தெரியலைங்கறான். இதுமட்டும் எப்படி தோணித்தோ.?”
புன்னகைத்தபடியே பேசிக்கொண்டிருந்த மாமி சட்டென ஒரு கணத்தில் உடைந்து அழத் தொடங்கினாள்.

(சொல்வனம் – 24.05.2020 இணைய இதழில் வெளியான சிறுகதை)