Home

Wednesday, 24 June 2020

உத்தமன் கோவில் - சிறுகதை



நான் என்னுடைய பி.எஸ்.. சைக்கிளை தென்னந்தோப்புக்குப் பக்கத்தில் இருந்த ஒரு கட்டுமரத்தில் சாய்த்து நிறுத்தி பூட்டிவிட்டு திரும்பியபோது இன்னும் மறையாத நிலவின் வெளிச்சத்தில் கடற்கரை மணற்பரப்பு சர்க்கரைபோல பளபளப்பாக மின்னிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் அலைகள் பொங்கியெழுந்து வந்து கரையைத் தொட்டுத் திரும்பும்போதெல்லாம் ஒரு நீளமான பூச்சரத்தை இழுத்துவந்து ஒதுக்குவதுபோலத் தோன்றியது.  தோப்பிலிருந்து ஒரு நாய் வேகமாக ஓடி வந்து எனக்குப் பக்கத்தில் வந்து நின்று நிமிர்ந்து பார்த்தது. ”என்னடி செல்லம், ரெண்டு நாளா ஆளக் காணமேனு பாக்கறியா? இதோ வந்துட்டேனே, அப்பறம் என்ன?” என்றபடி குனிந்து அதன் கழுத்தைத் தொட்டு தடவிக்கொடுத்தேன். என் கையிலேயே சில கணங்கள் தலைசாய்த்துவிட்டு முனகலுடன் விலகி ஓடியது நாய்.

அலையோசையைக் கேட்டபடி நான் அங்கிருந்தே என் ஓட்டப்பயிற்சியைத் தொடங்கினேன். எனக்கு சில உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. அதைத் தீர்க்க மருந்து சாப்பிட்டால் மட்டும் போதாது, கடற்கரையில் வீசும் அதிகாலைக் காற்றில் ஓட்டப்பயிற்சி செய்வது மிகமிக முக்கியம் என்று நெல்லித்தோப்பு வைத்தியர் தீர்மானமாகச் சொல்லிவிட்டார். உடனடியாக அது அப்பாவின் கட்டளையாக மாறிவிட்டது. அதிகாலை வேளையில் எங்கள் வீட்டிலிருந்து கடற்கரைக்குச் செல்ல நெடுந்தொலைவு நடக்கவேண்டியதாக இருந்ததால் செலவைப்பற்றிக் கவலைப்படாமல் அப்பா எனக்காக பி.எஸ்.. சைக்கிளை கப்பலில் வரவழைத்துக் கொடுத்தார். அதற்குப் பிறகு ஓட்டப்பயிற்சியில் இறங்குவதைத் தவிர வேறு வழியெதுவும் தென்படவில்லை.
என் பயிற்சி தொடங்கி ஒரு மாதமாகிவிட்டது. வைத்தியரின் சொற்கள் எவ்வளவு உண்மை என்பதை என் உடல் எனக்கு ஒவ்வொரு கணமும் உணர்த்தத் தொடங்கியது. இப்போது என்னால் அரை மூட்டை நெல்லை யாருடைய துணையும் இல்லாமல் நானே மூச்சுக் கட்டி தூக்கி தலைமீது வைத்துக்கொள்ள முடியும். இரு தினங்களுக்கு முன்பாக பண்ருட்டியிலிருந்து என் அத்தை எடுத்துவந்த பலாப்பழச்சுளைகளை இனிப்பின் காரணமாக கொஞ்சம் கூடுதலாகவே சாப்பிட்டுவிட்டேன். அது வயிற்றைக் கலக்கிவிட்டது. ஓட்டப்பயிற்சி தடைபடுவதற்கு அதுதான் காரணம்.
அந்த இடைநிறுத்தம் அப்பாவுக்கு எரிச்சலைத் தூண்டிவிட்டது.  இதான் சாக்குனு ஒன் பையன் கும்பகர்ணனாட்டம் வெடியறது தெரியாம தூங்கறான் பாரு. இதெல்லாம் எங்க வளந்து எங்க உருப்பட போவுதோ. சோறுமட்டும்தான் போடுவியா நீ? கொஞ்சம் நல்லதுகெட்டது எடுத்து சொல்லமாட்டியா?” என்று அம்மாவிடம் எரிந்துவிழத் தொடங்கினார்.
காலையில் முதல் கோழி கூவியதுமே கடற்கரைக்கு வந்துவிட்டேன். வழக்கமாக தென்னந்தோப்புக்கும் கலங்கரைவிளக்கத்துக்கும்  இடைப்பட்ட தொலைவுதான் என் ஓட்டப்பயிற்சிக்கான இடம். ஒவ்வொரு நாளும் ஆறு சுற்று ஓடுவேன். கிட்டத்தட்ட அது ஐந்துமைல் கணக்கு.
சீரான வாத்திய இசையைப்போல ஒலிக்கும் அலையோசையைக் கேட்டபடி இரண்டு சுற்றுகளை முடித்தேன். பின்கழுத்தில் வேர்வை ஊறி முதுகில் இறங்கிச் செல்வதை உணரமுடிந்தது. நெற்றியில் அரும்பி வழிந்த வேர்வையை கைக்குட்டையால் துடைத்துக்கொண்டேன். மூன்றாவது சுற்றில் புலரியின் அடையாளம் எழத் தொடங்கியது. டியுப்ளே சிலைக்கு மேல் வானத்தில் காக்கைக்கூட்டம் வட்டமாக எழுந்து நகர்நோக்கிப் பறப்பதைப் பார்த்தேன். அடுத்த சுற்று முடியும் தருணத்தில் சிலைக்கு அருகிலிருந்த தெருவிளக்குக் கம்பத்தை ஒட்டியபடி ஏணியை நிறுத்தி ஏறிய ஒருவன் ஆமணக்கு எண்ணெயில் எரியும் திரியை ஊதி அணைத்துவிட்டுச் செல்வதைப் பார்த்தேன். வெள்ளிப்பாளங்களைப் போன்ற மேக அடுக்குகள் ஓலைச்சுவடிகளின் குவியலென காட்சியளித்தன. அடுத்த சுற்றின்போது கடலுக்குள் யாரோ ஒருவர் நீச்சலடித்து வருவதைப் பார்த்தேன். அலைகளுக்கு நடுவில் ஒரு சிறிய எழுச்சி. அது உண்மையா கண்மயக்கா என்பதை ஓட்டவேகத்தில் பொருட்படுத்தி உணர முடியவில்லை. அதற்கடுத்த சுற்றில் அது உண்மையிலேயே ஒரு மனித உருவம் என்பது தெரிந்துவிட்டது. எங்கிருந்து அந்த மனிதர் நீந்தி வருகிறார் என்னும் கேள்வி எழுந்ததுமே, அந்த ஆச்சரியத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் கரையேறுவதைப் பார்ப்பதற்காக ஓடுவதை நிறுத்தி வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.  ஒருவேளை கடலுக்குச் சென்ற கட்டுமரம் உடைந்துவிட்டதால் உயிர் தப்புவதற்காக நீந்தி வரும் மனிதரா? நினைக்க நினைக்க மூச்சு வாங்கியது. உடம்பே வேர்வையில் நனைந்திருந்தது.
அவர் முழு உருவத்துடன் கரைக்கு வந்து நீர் சொட்டச்சொட்ட கடலைப் பார்த்தபடி நின்றதை நம்பமுடியாதவனாக பார்த்துக்கொண்டிருந்தேன்.  கோவணம் மட்டுமே அவருடைய ஆடையாக இருந்தது. பார்ப்பதற்கு அவர் ஒரு கருத்த சிலையைப்போலத் தோன்றினார். பாளம்பாளமாக விரிந்த முதுகு. உயர்ந்த உறுதியான தோள்கள். இறுக்கமான இடை. உருண்ட தசைகள்.
அவர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கடலிலிருந்து சூரியன் மெல்ல மேலெழுந்தது. செவ்வண்ணத்தால் கீழ்வானம் பொன்மயமாக காட்சியளித்தது. அவர் கைகளை உயர்த்தி சூரியனை வணங்கினார். ஒரே நொடியில் அவர் உடல் வில்லாக வளைந்து அவருடைய இரு கைகளும் அவர் பாதங்களைத் தொட்டன. மறுகணம் இரு கைகளையும் முன்னால் ஊன்றி வலது காலை பின்னால் இழுத்து நீட்டி விரல்கள் மட்டுமே மண்ணில் பதிந்திருக்க, இடது காலை முன்னால் மடக்கி முகத்தை உயர்த்தினார். பார்த்துக்கொண்டிருக்கும்போதே வலது கால் இருந்த இடத்துக்கு இடதுகாலும் இடதுகால் இருந்த இடத்துக்கு வலதுகாலும் சென்றமைந்தன. அந்த வேகம் பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்து முன்புறமாக ஊன்றிய இரு கைகளும் பின்புறமாக ஊன்றிய இரு கால்விரல்களும் மட்டுமே உடலின் எடையைத் தாங்கிக்கொள்ள நடுவில் ஒரு பலகைபோல நீண்டிருந்தது அவர் உடல். பிறகு இடைவரை தரையில் படிய இடைக்கு மேலான உடலை வளைத்து வானத்தை அண்ணாந்து பார்த்தது அவர் முகம். அதுவும் ஓரிரு கணமே. மீண்டும் வளைந்து பாதங்களை கைகள் பற்றியிருக்க உடல்மட்டுமே நிமிர்ந்தது. தொடர்ந்து கூப்பிய கைகளுடன் சூரியனை நோக்கிய நிலைக்குத் திரும்பினார். அது என்ன பயிற்சி என்றே புரியவில்லை. உடலை ஒரு கயிறுபோல அவர் வளைத்துச் சுருட்டியதைப் பார்த்ததிலிருந்து இதெல்லாம் மனிதர்களுக்குச் சாத்தியமான ஒன்றுதானா என்று நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
ஒரே ஒரு கண இடைவெளியில் அவர் மீண்டும் அப்பயிற்சியைத் தொடங்கிவிட்டார். அவர் எத்தனை முறை செய்கிறார் என்பதை எண்ணவேண்டும் என்னும் கவனத்தோடு ஒன்று, இரண்டு என தொடங்கி மனத்துக்குள் சொல்லிக்கொண்டே வந்தேன். ஆனால் ஆச்சரியத்தின் காரணமாக அந்தக் கணக்கை என் மனம் சரியாக உள்வாங்கிக்கொள்ளவில்லை.
அவர் பயிற்சியை முடித்த கணத்தில் முழு சூரியனும் செம்பழமாக கீழ்வானத்திலிருந்து எழுந்துவிட்டான். கருநீலப் பாயென விரிந்திருந்த கடற்பரப்பு ஆரஞ்சு நிறத்துக்கு மாறி பிறகு வெள்ளித்தகடென மின்னியது.
அதற்குமேல் என்னால் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு நிற்கமுடியவில்லை. வேர்வையைத் துடைத்தபடி அவருக்கு அருகில் சென்று அவரைப் பார்த்து புன்னகைத்தேன்.   
நான் இருபத்திரண்டு வரைக்கும் எண்ணினேன். அப்பறம் நீங்க செய்யற வேகத்த பாத்து எண்ணறது மறந்துபோச்சி.”
, நான் செஞ்சத பாத்தியா?” என்று சிரித்தார். ”நல்லது. நல்லதுஅவருடைய வெண்மையான பல்வரிசை பார்க்க அழகாக இருந்தது. “அது சூரிய நமஸ்காரம். யோகாசனத்துல முக்கியமான ஒன்னு. நான் அம்பது அறுபது கூட செய்வேன். இன்னைக்கு நாப்பத்திரண்டோட நிறுத்திட்டேன்.”
நாப்பத்திரண்டா?”
ஆமாம். செய்யச்செய்ய உடம்பு அப்படியே காகிதம் மாதிரி எடையில்லாம ஆயிடும். றெக்க இருந்தா அப்படியே கூடுவிட்டு கூடு பாய்ந்து போறமாதிரி பறந்துபோயிடலாம்.”
அவர் சத்தம் போட்டு குழந்தைமாதிரி சிரித்தார். அலையின் சத்தத்தை மீறி அந்தக் கடற்கரையில் அவர் சிரிப்பு நிறைந்தது.
நீங்க ஊருக்கு புதுசா?”
புதுக்கோட்டை பக்கம். ஆனா இங்க வந்து  ரெண்டு நாளாவுது. கடல பாக்க நேத்துகூட நான் வந்திருந்தேன். அரைமணி நேரக் குளியல். அதுக்கப்புறமா அம்பது சூரிய நமஸ்காரம்.”
நான் காலையில இங்க வந்து ஓடுவன். அதோ அந்த தோப்புலேருந்து இந்த கடைசி வரைக்கும் ஓடிப் போய் ஓடி வருவேன்.”
பத்து இருபது தரம் ஓடுவியா?”
ஐயோ, அந்த அளவுக்கு நம்மால முடியாது. நான் இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன். ஆறு சுத்து ஓடுவன்.”
அது நல்லது. ஆனா கடல்லயும் நீச்சல் பழகணும்.”
ஐயோ
என்ன ஐயோ, என் கூட வா நாளைக்கு. நான் உனக்கு பத்தே நிமிஷத்துல நீச்சல் கத்துக் குடுக்கறன்.”
பத்து நிமிஷத்துல முடியுமா?”
நீ என் கூட ஒருதரம் வா தம்பி மொதல்ல. அப்பறமா ஒரு அலைமேல கால வச்சி அடுத்த மேல ஏறி  நின்னு மூனாவது அலையில தாவற வித்தய நீயா செய்வே.”
உண்மையாவா?”
நாளைக்கு நீ வா. உனக்கு கத்துக் குடுக்கறன். நான் இன்னைக்கு காலையில இங்க வரும்போது கடற்கரையில ஒரு ஈ காக்கா கூட இல்ல. நீ எப்ப வந்த?”
நான் வந்து அரமணி நேரம் இருக்கும். இருட்டுல நீங்க குளிக்கறத நான் கவனிக்கலை. அப்பறம் வெளிச்சம் வந்த சமயத்துலதான் பாத்தேன்.”
கடல்ல குளிக்கறது ஒரு சுகம். அப்படியே படிக்கட்டு மேல கால வச்சி படிபடியா போகறமாதிரி இருக்கும். நம்ம உடம்புக்குள்ளயே ஒரு மீன் அமைப்பு இருக்குது தெரியுமா?”
மீனா?”
மீன் மட்டுமில்ல, எல்லா விலங்குகளுடைய அமைப்பும் இருக்குது. தண்ணிக்குள்ள இருக்கும்போது நம்ம உடம்ப மீனா மாத்திக்கணும்.”
பயமா இருக்காதா?”
பயந்தா எந்த காரியத்த செய்யமுடியும்? இந்த புதுச்சேரில இவ்ளோ பெரிய கடல் இருக்குது. ஆனா ஒரு ஆள் கூட வெடியற நேரத்துல வந்து ஏன் கடல்ல கால நனைக்கமாட்டறான்? அவ்ளோ பயமா?. இல்ல வெறுப்பா? நான் வெளியூருகாரன். இங்க வந்ததலேர்ந்து ரெண்டு நாளா கடல்லயும் ஆத்துலயும்தான் கெடக்கறன்.”
ரெண்டு நாளுமா?”
ஒரு பத்து வருஷத்துக்கு முன்னால இங்க ஒரு தரம் வந்தன். வந்ததும் காலையில கடல்குளியல்தான். அன்னைக்கு தைரியமா ஒரு ஆள் வேட்டிய உருவி கரையில வச்சிட்டு கோவணத்தோட கடலுக்குள்ள எறங்கி நீச்சலடிக்கறத பாத்தன். நான் பாத்த ஒரே ஆள். நீச்சலடிச்சிட்டே அவருகிட்ட போயி யாருங்க நீங்கனு கேட்டன். அந்த ஆளு திரும்பி நீங்க யாருனு கேட்டாரு. அட, அந்த சமயத்துல அவரு பார்த்த பார்வைய நெனச்சா என் உடம்பு இப்பவும் சிலுத்து போவுது. நான் என்ன பத்தி சொன்னேன். அந்த ஆளும் தன்னப்பத்தி சொன்னாரு.”
யாரு அவரு?”
பேரு பாரதினு சொன்னாரு. நாங்க ரெண்டு பேரும் கையோடு கை கோர்த்துகிட்டு ஒரு அலையைத் தொட்டு இன்னொரு அலைனு  தாவித்தாவி ரொம்ப தூரம் போனம். கரைக்கு வந்த பிறகு எனக்கு அவரு பாட்டுலாம் பாடி காட்டனாரு.”
பாட்டா?”
ஆமா. நீ சின்ன பையன். ஒனக்கு தெரியாது. அவர பத்தி ஒங்க ஊட்டுல கேட்டு பாரு. சொல்வாங்க. பாவம், ஒரு கோயில் யானை அடிச்சி சென்னப்பட்டணத்துல அந்த ஆள் செத்துட்டாருனு சுதேசமித்திரன்ல படிச்சி தெரிஞ்சிகிட்டேன். அந்த ஆள் இருந்தா இன்னைக்கு எனக்கு சரிஜோடியா கடல்ல நீந்தறதுக்கு வந்திருப்பாரு.”
எனக்கு சைக்கிள் ஓட்டறதுதான் ரொம்ப புடிக்கும். நான் இந்த ஊருலேர்ந்து ஒரு நாள் செஞ்சி வரைக்கும் போய் வந்திருக்கேன். தெரியுமா? என்னைக்காவது ஒரு நாள் சைக்கிள்ளயே சென்னப்பட்டணம் வரைக்கும் போயிட்டு வரணும்ன்னு ரொம்ப நாளா ஒரு கனவு.”
அது சரி. அந்த ஆளுக்கு பாட்டு மேல ஒரு பித்து. எனக்கு நீந்தறது மேல ஒரு பித்து. ஒனக்கு சைக்கிள் பித்து. மனுஷனுக்கு இப்படி ஏதாவது ஒரு பித்து இருக்கறது ரொம்ப நல்லது.”
காவிரி, கோதாவரி, கங்கை, யமுனை, பிரம்மபுத்திரானு நாட்டுல இருக்கற ஆறுங்களுக்குலாம் சைக்கிள்ளயே போய் பார்க்கணும்னு கூட எனக்கு ஒரு ஆச உண்டு. நான் படிச்சி வேலைக்கு போயி, சம்பாதிச்சி தனியா இருக்கற சமயத்துல  இப்படி கெளம்பி போயிடுவேன்.”
சரியான பித்து. அப்பிடித்தான் இருக்கணும் தம்பி. நம்ம பித்து நம்ம தலய புடிச்சி ஆட்டணும். ஆனா ஒன்னு சொல்றன், கேட்டுக்கோ. ஒலகத்துல எந்த பித்து வேணும்னாலும் இருக்கலாம். ஆனா சூது, குடி, பொண்ணுங்க மூனு விஷயங்கள் மேலமட்டும் பித்து கூடவே கூடாது.”
அதற்குள் மண்ணில் நல்ல வெளிச்சம் இறங்கிவிட்டது. பிரெஞ்சு சிப்பாய்கள் குதிரையில் ஏறி சாலையில் செல்வதைப் பார்க்க முடிந்தது.  அவர் உடலில் இருந்த ஈரம் முற்றிலும் உலர்ந்துவிட்டது. கரையோரமாக சுருட்டி வைத்திருந்த வேட்டியை எடுத்து கட்டிக்கொண்டு துண்டை தோள்மீது போட்டுக்கொண்டார்.
தென்னந்தோப்பை நோக்கி இருவரும் நடக்கத் தொடங்கினோம். கட்டுமரங்கள் ஒவ்வொன்றாக கரைக்குத் திரும்பின. அவர்களுக்காக கரையில் பலர் வந்து நின்று காத்திருந்தனர்.
எந்த கச்சேரில வேல செய்றீங்க நீங்க?”
கச்சேரி வேல இல்ல தம்பி. நமக்கு ஒக்காந்து நாற்காலிய தேய்க்கற வேலைலாம் புடிக்காது. நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஜிம்னாஸ்டிக்ஸ். அது ஒன்னுதான். இந்த உடம்புதான் நமக்கு மூலதனம். விதவிதமா செய்வேன். எல்லாத்தயும் கற்பனையில நெனச்சி பாத்து நானே கத்துகிட்டேன். இந்த ஊரு வெல்லம் செட்டியார்தான் சென்னப்பட்டணத்துலேந்து என்ன வரச் சொன்னார்.”
எதுக்கு?”
அட, அது ஒனக்கு தெரியாதா? ஊரெல்லாம் நேத்து தண்டோரா போட்டு சொன்னாங்களே. நீ கேக்கலையா?”
எனக்கு வெட்கமாக இருந்தது. நான் படுக்கையில் இருந்த இரண்டு நாட்களில் ஊரில் என்னென்னமோ நடந்துவிட்டதே என்று  தோன்றியது. நான் அவரிடம் உண்மையைச் சொன்னேன்.
அவரு ஒரு ஊமப்படம் வாங்கியாந்துருக்காரு. நெப்போலியன். இன்னையலேந்து கொட்டாய்ல காட்ட போறாங்க. ஒரு ரீல் காட்டி முடிஞ்சா மிஷினுக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுக்கணும். இல்லைன்னா சூடாய்டும். சினிமா ஓடாத நேரத்துல ஜனங்க கட்டுப்பாடா இருக்கறதுக்காக அவுங்களுக்கு  நான் ஜிம்னாஸ்டிக்ஸ் செஞ்சி காட்டுவேன். சினிமா மாதிரி இதுவும் ஜனங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு.  அவ்ளோதான்.”
ஊமப்படமா?”
நீ பாத்ததில்லயா?”
ம்ஹூம். எங்கப்பா சொல்லியிருக்காரு. ஆனா பாத்ததில்ல.”
இன்னைக்கு பாக்க வா. படத்துக்காக இல்லைன்னாலும் என் ஜிம்னாஸ்டிக்ஸ் பாக்கறதுக்கு வா. ரொம்ப நல்லா இருக்கும்.”
எங்க தங்கியிருக்கீங்க?”
செட்டித்தெருவுல, வெல்லம் செட்டியார் வீட்டுலதான்.”
அந்த பக்கம்தான் நானும் போவேன். உங்கள விட்டுட்டு போறன். வாங்க.”
இருவருமாக நடந்தோம். நான் தள்ளிக்கொண்டு வந்த சைக்கிளை அவர் தொட்டுப் பார்த்தார். “எலி, மயில், அன்னம், பருந்துனு புராணங்கள்ல கடவுளுக்கு வாகனங்கள் இருக்கறத கேட்டிருக்கேன். இப்ப மனுஷனுக்கே வாகனம் வந்துட்டுதுஎன்று சிரித்தார். “ஆனா, நமக்கு எப்பவும் நடைவண்டிதான். எவ்ளோ தூரமா இருந்தாலும் நடந்துடுவன்.”
வாகனத்துல போனா, நேரம் கொஞ்சம் கொறயும்.”
அது என்ன காசா, பணமா, மிச்சம் புடிச்சி என்ன செய்யப் போறோம்?”
அவர் அப்பாவியாகச் சிரிக்கும்போது இன்னும் கொஞ்சம் சிரிக்கமாட்டாரா என்று தோன்றியது.
இன்னும் கொஞ்ச நேரத்துல செட்டியார்கிட்ட சொல்லிட்டு கெளம்பிடுவன். மொதல்ல, சங்கராபரணி ஆத்துக்கு போய் ஒரு குளியல். அப்பறமா கரயோரமா இருக்கற காமீஸ்வரர பாத்து ஒரு வணக்கம்.”
நடந்தே போவ போறீங்களா?”
ஆமா, எனக்கு என்ன சைக்கிளா இருக்குது?”
செட்டியார் வீட்டை நெருங்கியதும் மறந்துடாத. ராத்திரி ஆட்டத்துக்கு வந்துடு. அப்பா, அம்மா எல்லாரயும் அழச்சிட்டு வா. சரியா?” என்றாள். “சரிஎன்றபடி விடைபெற்றுக்கொண்டு சைக்கிளில் ஏறினேன்.
ஜிம்னாஸ்டிக்ஸ்னு சொல்லு. சினிமான்னு சொன்னா, ஒருவேள வேணாம்னு சொன்னாலும் சொல்வாங்க.”
நான் தலையசைத்தபடி சைக்கிளை மிதிக்கத் தொடங்கினேன்.
செட்டித்தெருவில் அவரை வெல்லம் செட்டியார் வீட்டில் விட்ட பிறகு தம்புநாயக்கர் தெருவுக்கு சென்று சின்ன கால்வாய் தெருவைப் பிடித்து, அங்கிருந்து லப்போர்த் தெருவுக்கு வந்து விரிந்திருந்த மைதானத்தைப் பார்த்தேன். அங்குதான் சினிமா படத்தைத் திரையிடுவதற்கான கொட்டகையை கட்டியிருந்தார்கள். உயரமான பெரிய கூரை வீடுபோல இருந்தது. செல்வதற்கும் வருவதற்கும் தனித்தனியாக மூங்கில் தடுப்புகளை ஏற்படுத்தி பாதைகளை உருவாக்கியிருந்தார்கள். நுழைவாயிலுக்கு அருகில் ஒரு பெரிய தட்டி எழுதி வைக்கப்பட்டிருந்தது.  அன்று திரையிடப்பட இருக்கிற நெப்போலியன் படத்தைப்பற்றிய குறிப்பும் சுருக்கமாக  அதில் கொடுக்கப்பட்டிருந்தது. பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட மாவீரன், முடியாது என்னும் சொல்லே என் அகராதியில் இல்லை என்று அறிவித்த பெருவீரன், சட்டத்துக்கு முன் எல்லோரும் சமமென்னும் கருத்தை உலக வரலாற்றில் முதன்முதலாக விதைத்த மாமனிதன் என்றெல்லாம் அடுக்கடுக்கான அடைமொழிகளுடன் நெப்போலியன் விவரிக்கப்பட்டிருந்தான். இறுதியில் எல்லாவற்றையும் விட பெரிய எழுத்தில் சாண்டோ ராஜாவின் கண்ணுக்கினிய ஜிம்னாஸ்டிக்ஸ் காணத் தவறாதீர்கள்என்னும் வாசகம் எழுதப்பட்டிருந்தது. சாண்டோ ராஜா என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டேன்.
நான் வீட்டுக்குச் சென்று குளித்து சாப்பிட்ட பிறகு அம்மாவிடம் ஊமைப்படம் பற்றிய செய்தியைச் சொன்னேன். ஊமைப்படம் என்றதுமே அம்மா எதிர்ப்பைக் காட்டத் தொடங்கிவிட்டாள்.
அந்த சனியன யாருடா பாப்பா? ஏதோ கூத்து நாடகம்னாலும் என்ன பேசறாங்க, என்ன பாடறாங்கன்னாவது புரியும். இந்த எழவுல ஒன்னுமே புரியாது. அதெல்லாம் வேணாம். காசிதான் தெண்டம்என்று தடுத்தாள்.  நான் சட்டென்று நினைவுபடுத்திக்கொண்டு வெறும் சினிமா மட்டுமில்லம்மா, நடுநடுவுல உடற்பயிற்சி செய்றது எப்படினு சொல்லி குடுக்கறாங்களாம்மா. நான் அத பாத்தா வைத்தியர் சொல்றமாதிரி உடற்பயிற்சி செஞ்சி உடம்ப தேத்திக்க முடியும்மாஎன்று சொன்னதும் அம்மா யோசிக்கத் தொடங்கினாள். பிறகு அவளே அப்பாவிடம் அதைப்பற்றி எடுத்துச் சொன்னார்.
அப்பா பொழுது சாய்கிறவரைக்கும் எதற்கும் பிடி கொடுக்காமலேயே காலம் தாழ்த்தினார். கசப்பும் வெறுப்பும் எனக்குள் பொங்கிக்கொண்டு வந்தன. இந்த வீட்டிலே ஒரு ஊமைப்படத்துக்குக்கூட ஆசைப்படக் கூடாதா என்று நினைத்து மனத்துக்குள் அழுதேன். ஆனாலும் வாய்விட்டு கேட்க தைரியமில்லாமல் அவருக்கு நினைவூட்டுகிற விதமாக அவர் கண்ணில் படுகிறமாதிரி அடிக்கடி நடமாடிக்கொண்டே இருந்தேன். அவர் எதற்குமே வாய் திறக்கவில்லை.
ஒருவழியாக சாப்பாட்டு வேளையில் நான் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு முனகியதைப் பார்த்துவிட்டு இங்க பாரு, சினிமா பாத்துட்டு வந்து காலையில எழுந்திருக்காம இழுத்து போத்திட்டு தூங்கறத பாத்தன்னு வை, ஒங்க ரெண்டு பேரயும் மிதிமிதினு மிதிச்சி கூழாக்கிடுவன்என்று மிரட்டிவிட்டு சம்மதம் கொடுத்தார் அப்பா. அந்த மகிழ்ச்சியில் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்து அவசரத்தில் அரையும் குறையுமாக சாப்பிட்டு முடித்தேன். 
கை கழுவியதும் முந்தானையில் முடிந்து வைத்திருந்த இரண்டணாவை எடுத்துக் கொடுத்துவிட்டு பத்தரம்டா பத்தரம்டாஎன்று பத்துமுறை சொன்னாள் அம்மா. லப்போர்த் தெருவை நோக்கி நான் வேகமாக நடந்தேன். சீட்டு வாங்கிக்கொண்டு கொட்டகைக்குள் சென்றபோது மணற்பரப்பில் ஏராளமான பேர் உட்கார்ந்திருந்தார்கள். எதிரில் பெரிய வெள்ளைத்திரை இருந்தது.
திடீரென எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு இருள் சூழ்ந்தது. வெள்ளைத்திரையில் பெருக்கல் கூட்டல் குறிகள்போல பல கோடுகள் மாறிமாறி விழுந்து இறுதியில் திடீரென மனிதர்கள் தோன்றினார்கள்.  நடந்தார்கள். கைவிரித்து எதையோ பேசினார்கள். அழுதார்கள். கத்தியை உருவி சண்டை போட்டார்கள். ஆனால் கொஞ்சம் கூட சத்தமே இல்லை. ஆழ்ந்த அமைதி.
அரைவட்ட வடிவில் ஒரு தொப்பியோடும் இடையில் வாளோடும் குதிரையில் ஏறி வந்தான் ஒருவன். அவன்தான் நெப்போலியனாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. போர் வெடித்தது. பீரங்கிகள் முழங்கின. கட்டடங்கள் இடிந்து சிதறின. மனித உடல்கள் நான்கு திசைகளிலும் பறந்து விழுந்தன. 
சட்டென படம் நின்று அரங்கத்துக்குள் விளக்குகள் எரியத் தொடங்கின. வெளிச்சத்தைப் பார்த்ததும் இதுவரையில் ஏதோ ஒரு கனவுலகத்துக்குள் இருந்ததைப்போல ஒரு விசித்திரமான உணர்ச்சி எழுந்தது. திரைக்கு முன்னால் இருந்த மேடையில் ஒருவர் தோன்றி உடற்பயிற்சி நடக்கப் போவதாக அறிவித்துவிட்டுச் சென்றார். அவரைத் தொடர்ந்து ராஜா மேடைக்கு வந்தார். எல்லோரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
ராஜா இடையில் தார்ப்பாய்ச்சி ஒரு வேட்டியைக் கட்டியிருந்தார். வெளிச்சத்தில் சிலையைப்போல இருந்த அவர் உடல் மின்னியது. முதலில் எல்லோரையும் பார்த்து அவர் வணங்கினார். வணங்கிய கைகளோடு காலை அகட்டி நின்று உடலை பின்னோக்கிக் குனிந்தார். இரு கைகளாலும் பாதங்களைப் பிடித்தபடி தலையை வளைத்துச் சிரித்தார்.  பின்னர் இரு கைகளையும் ஒரு காலை நோக்கி வளைத்துப் பிடித்தபடி தலையை அந்தத் திசையில் திருப்பினார். பிறகு அந்தக் காலை விடுத்து மற்றொரு காலை நோக்கித் திரும்பினார். அதைப் பார்த்ததும் அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அந்தக் கைத்தட்டல் அவர் செய்து காட்டிய ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தொடர்ந்தது.
அவர் இடுப்பு அவர் நினைத்த கோணங்களில் எல்லாம் வளைந்தது. நான் அதைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன். உடல் முன்பக்கமாக பார்த்தபடி இருக்கும்போது இடுப்பு பின்பக்கமாக வளைந்தது. உடல் பின்பக்கமாக இருக்கும்போது இடுப்பு முன்பக்கமாக வளைந்தது. சைக்கிள் ஹேண்ட்பாரைத் திருப்புவதுபோல அவர் உடலையும் கழுத்தையும் எல்லாத் திசைகளிலும் திருப்பினார். முகம் ஒருபக்கம், உடல் ஒரு பக்கம், கால் ஒரு பக்கமென அவர் முறுக்கிக்கொண்டு நின்ற தோற்றம்தான் அந்தப் பயிற்சிகளின் உச்சம். எல்லாக் கட்டங்களிலும் அவர் சிரித்துக்கொண்டே இருந்தார். நான் ஒவ்வொரு கணத்திலும் மக்களோடு சேர்ந்து கைதட்டிக்கொண்டே இருந்தேன்.
மீண்டும் சினிமா தொடங்கியது. கால்மணி நேரம் முடிந்ததும் சினிமா நின்று ராஜாவின் உடற்பயிற்சி நிகழ்ச்சி மறுபடியும் தொடர்ந்தது. அன்று அவர் நான்கு முறை மேடையில் தோன்றினார். ஒவ்வொரு தருணத்திலும் கைதட்டல் வானைத் தொட்டது.
சினிமா முடிந்து அரங்கில் எல்லா விளக்குகளும் எரிந்தன. அந்த வெளிச்சம் கண்களைக் கூச வைத்தது. ராஜா மேடைக்கு வரவழைக்கப்பட்டு வெல்லம் செட்டியார் அவருக்கு பட்டு வேட்டியும் துண்டும் பரிசாக அளித்தார். அவரைத் தொடர்ந்து காட்சிக்கு வந்திருந்த பல பெரிய மனிதர்கள் மேடையில் தோன்றி சன்மானம் அளித்தார்கள். பொதுமக்கள் கைதட்டிக்கொண்டே இருந்தார்கள். நான் ராஜாவைப் பார்த்தேன். அவர் முகத்தில் படர்ந்திருந்த புன்னகையில் எந்த மாற்றமும் இல்லை. காலையில் கடற்கரையில் பார்த்தபோது தெரிந்த அதே புன்னகை. அதே  பேரானாந்தம். எல்லோரும் பலத்த ஓசையெழ கைதட்டிக் கொண்டே இருந்தார்கள்.
நான் அரங்கத்தைவிட்டு வெளியே வந்து பாதையோரமாக சிறுநீர் கழித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றேன். வழியெங்கும் ஆமணக்கு எண்ணெய் ஊற்றப்பட்ட தெருவிளக்குகள் எரிந்ததால் நடப்பதற்குப் போதிய வெளிச்சம் இருந்தது.
வீடு சாத்தியிருந்தது. தட்டுவதற்கு மனமில்லை. திண்ணையில் ஒருபக்கம் தாத்தாவும் ஆயாவும் அக்காவும் படுத்திருந்தார்கள். மறுபக்கம் மரக்கட்டில் இருந்தது. நான் அதை எடுத்துவந்து வாசலில் போட்டுக்கொண்டு காற்றாடப் படுத்துவிட்டேன். அரங்கில் ஒலித்த கைத்தட்டல் ஓசை எனக்குள் ஒலித்தபடியே இருந்தது. ஒரு கயிற்றைப்போல உடலை நினைத்த போக்கில் வளைக்கும் அவருடைய சிரித்த முகம் எனக்குள் பெருகிப்பெருகி வந்தது.
காலையில் கோழி கூவியதும் எழுந்து உட்கார்ந்துவிட்டேன். ஓரமாக சிறுநீர் கழித்துவிட்டு வந்து பானையில் இருந்த தண்ணீரை எடுத்து முகம் கழுவினேன். வெந்நீர் அடுப்பில் நிறைந்திருந்த சாம்பலை எடுத்து பல் துலக்கி வாய் கொப்பளித்தேன். சுவரோரமாக சாய்த்து வைத்திருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு கடற்கரைக்கு வந்தேன்.
தென்னந்தோப்பில் சைக்கிளை நிறுத்தும் சமயத்தில் நாய் ஓடி வந்து வாலைக் குழைத்தது. ”என்னடா, வாசன புடிச்சிகினு வந்திட்டியா?” என்று குனிந்து சில கணங்கள் அதைத் தொட்டு கொஞ்சினேன். பிறகு எழுந்திருந்து டியூப்ளே சிலையை நோக்கி ஓடத் தொடங்கினேன். வானத்தில் நட்சத்திரங்கள் தெரிந்தன. நிலவின் வெளிச்சமும் காற்றும் இணைந்து அப்பொழுதை இனிமைமயமாக்கின. ஓர் இசைக்கச்சேரியின் தாளத்தைப்போல கடலோசை சீரான இடைவெளியில் ஒலித்தபடி இருந்தது.
டியூப்ளே சிலையிலிருந்து திரும்பி ஓடி வரும் தருணத்தில் நான் அவர் மணற்பரப்பில் நடந்துவருவதைப் பார்த்துவிட்டேன். ஓட்டமாக ஓடிச் சென்று அவருக்கு வணக்கம் சொன்னேன். “, தம்பி, வந்துட்டியா?” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “என்ன, நேத்து நிகழ்ச்சிக்கு வந்து பாத்தியா?” என்று ஆவலோடு கேட்டார். நான் நகர்ந்து சென்று அவர் கைகளைப் பற்றிக்கொண்டேன். சரியான சொற்களைச் சொல்லத் தெரியாமல் தடுமாறினேன். ”அருமை அருமைஎன்று சொன்னதையே மீண்டும் மீண்டும் சொன்னேன். அவர் என் முதுகைத் தட்டிக் கொடுத்தார்.
எப்பிடி உங்களால முடியுது? உடம்புல எலும்பே இல்லாதமாதிரி எல்லாப் பக்கமும்  வளைக்கறீங்க. கண்ணால பாத்தா கூட நம்பிக்கையே வரலை. என்னமோ மாயாஜாலம் மாதிரி இருக்குது
அவர் கைதட்டி சிரித்தார். “அதான் ஜிம்னாஸ்டிக்ஸ்ங்கறது. நமக்குள்ள ஒரு மந்திரவாதி இருக்கான். அவன தட்டி எழுப்பணும். அப்பறம் அவன நம்பி உடம்ப ஒப்படைச்சிட்டு நாம ஒதுங்கிடணும். மேடையில எதயும் நாம செய்யறதில்ல. எல்லாத்தயும் அவன்தான் செய்யறான்
நாங்கள் கடலுக்கு அருகில் செல்லத் தொடங்கினோம்.
இந்த பூமியல நாலுல மூனு பங்கு அளவுக்கு கடல் விரிஞ்சிருக்குது. ஆனா ஒரு நொடி நேரம் கூட அது சும்மா இருக்கறதில்லை. கையை காலை நீட்டி நீட்டி மடக்கிகிட்டே இருக்குது பாரு. இதோ அலைகள் தெரியுதே, அதான் கடலுடைய கை. அதான் அது செய்ற ஜிம்னாஸ்டிக்ஸ். கடல் ஒவ்வொரு நிமிஷமும் நம்ம பாத்து ஜிம்னாஸ்டிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ்னு சொல்லிட்டே இருக்குது.”
அவர் பேசுவதே விசித்திரமாக இருந்தது. ஏதோ ஒரு பெரிய விஷயத்தை ஒரு விளையாட்டு போலச் சொல்வதாகத் தோன்றியது.
ஜிம்னாஸ்டிக்ஸ் ஏன் செய்யணும் தெரியுமா? இந்த உடம்புல ஏகப்பட்ட நரம்புமண்டலம் இருக்குது. அந்த நரம்பு மண்டலத்துல கோணல் வந்துடக்கூடாது. அரும்பு கோணலா இருக்கலாம். அத எப்படியாச்சும் சேத்து மாலையா கட்டிடலாம். வெளிய தெரியாது.  கரும்பு கோணலா இருக்கலாம். கடிச்சி தின்னா சுவையில ஒரு மாற்றமும் தெரியாது. இரும்பு கூட கோணலா இருக்கலாம். அடிச்சி நிமுத்திடலாம். ஆனா இந்த உடம்புல நரம்பு கோணலாச்சின்னா, அதுக்கு வைத்தியமே கிடையாது.”
நான் தலையாட்டினேன்.
நாலு பேர் மேடையில பாத்து கைத்தட்டல் வாங்கறதுக்காக செய்யறதில்லை ஜிம்னாஸ்டிக்ஸ். நம்ம நரம்ப பாதுகாக்கறதுக்காக செய்யறது. நம்ம உடம்புல நரம்புதான் வீடு. நரம்புதான் கோயில். உத்தமன் கோயில். கோயில்னு தெரிஞ்ச பிறகு அதுக்கு நாலு கால பூசையும் அபிஷேகமும் செய்யணுமா வேணாமா? அந்த பூசைதான் ஜிம்னாஸ்டிக்ஸ்.”
நாங்கள் அலை வந்து மோதுகிற இடம் வரைக்கும் சென்று நின்றுகொண்டோம். அவர் தன்னிச்சையாக குனிந்து இரு கைகளாலும்  கடல்நீரை அள்ளி சொட்டுசொட்டாக கீழே விழவைத்தார். பாதரசம் விழுவதுபோல அவர் கையிலிருந்து துளிகள் நழுவி விழுந்தன.
வா. கடல்ல குளிக்கலாமா?”
ஐயோ, எனக்கு நீச்சல் தெரியாதேநான் என்னை அறியாமலேயே பின்வாங்கினேன்.
பயப்படாத. நான் இருக்கேன். வா
அவர் என்னை நெருங்கி என் கைகளைப் பற்றிக்கொண்டார். அதை உதறி பின்வாங்கிவிட வேண்டும் என்று நான் நினைத்தாலும் என்னால் முடியவில்லை. அவர் இழுத்த இழுப்புக்குச் சென்றேன். மெதுவாக அவரைப் பின்பற்றி கடலுக்குள் இறங்கினேன். கடலுக்குள் இருக்கிற ஏதோ ஒரு சக்தி என் காலைப் பற்றி இழுப்பதுபோல இருந்தது. அதற்குள் நாங்கள் இடுப்பளவு ஆழத்துக்கு வந்துவிட்டோம்.
அப்போது எங்களை நோக்கி ஒரு அலை எழுந்துவந்தது. அவர் அந்த அலையோடு சேர்ந்து கரையின் பக்கமாக பின்னோக்கி வந்தார். அலைநுரைகள் உயர்ந்து முகத்தில் படிந்து வழிந்தது. திடீரென எனக்குள் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. அவரைப் பார்த்து சிரித்தேன்.
அப்போது ஒரு அலை வந்தது. அதைப் பார்த்ததும் அத புடிச்சி அப்படியே குதிரை மேல ஏர்ற மாதிரி ஏறிக்கோஎன்றார். அவர் என் கையைப் பற்றிக்கொண்டே இருந்தார்.  நானும் தயாராக இருந்தேன்.  அலை நெருங்கி உயர்ந்து வந்தது. நாங்கள் இருவரும் ஒரே கணத்தில் எம்பி அலைமீது ஏறிக்கொண்டோம்.
அது ஒரு மாயக்கணம். அலை என்னை ஒரு துணிச்சுருளைப்போல சுருட்டிக்கொண்டே சென்றது. ஒவ்வொரு கணமும் விசித்திரமான அனுபவமாக இருந்தது. கடலின் ஆழம் தெரிந்தது. அலை சுருட்டி கீழ்நோக்கி அழுத்தியபோது ஆழம் சுருட்டி மேல்நோக்கி எறிந்தது. நாங்கள் இருவரும் மேலே வந்தோம். அப்போது இன்னொரு அலை உயர்ந்தெழுந்து வந்தது. ”ம். அதன் மேல ஏறிக்கோஎன சுட்டிக்காட்டினார். நாங்கள் இருவரும் அதன்மீது பாய்ந்து ஏறினோம். அது அப்படியே சுருட்டிசுருட்டி எங்களைக் கரைநோக்கி கொண்டுவந்து வீசியது. நுரையோடு நுரையாக நாங்கள் மணலில் ஒதுங்கினோம்.
நான் எழுந்து நின்று கடலைப் பார்த்தேன். ஒரு பொம்மையை தூக்கி வீசிவிட்டுச் செல்லும் சிறுமியைப்போல அது பின்வாங்கிச் செல்லும் ஒயிலையும் அழகையும் பார்க்கும்போது அளவில்லாத ஆசை பொங்குவதை உணரமுடிந்தது. அப்போதுதான் அவர் என் கையைப் பற்றியிருந்த பிடியை விட்டார்.
எப்படி இருக்குது? நீச்சல் வந்துட்டுது பாத்தியா?”
அவர் சிரிப்பு மறையவே இல்லை. “சரி, நீ போய் ஓடி முடி. அதுவரைக்கும் நான் அதோ அந்த இடம்வரைக்கும் போய் வரேன்என்றபடி நெருங்கி வந்த ஒரு அலையில் தொற்றிக்கொண்டு கடலுக்குள் சென்றார்.  கண்ணை மூடி கண்ணத் திறப்பதற்குள் அலை அவரை வெகுதொலைவு அழைத்துச் சென்றுவிட்டது.
நான் திரும்பி ஓட்டப் பயிற்சியைத் தொடங்கினேன். இருளின் அடர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துகொண்டிருந்தது. கடலை நோக்கி ஒரு காக்கைக்கூட்டம் பறந்துபோய் வட்டமடித்துவிட்டுத் திரும்பியது. தெரு விளக்குகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்படுவதை நான் ஓடியபடியே பார்த்தேன்.
விடியல் நேரம். கீழ்வானம் சிவந்து வந்தது. கடல்மீது ஒரு சிவப்புத்துணி மிதப்பதுபோலத் தோன்றியது. நான் என்னுடைய ஆறு சுற்றுகளையும் சுற்றி முடித்துவிட்டு கரைக்குச் சென்றேன். அவரும் அப்போதுதான் கரையை நோக்கி வந்துகொண்டிருந்தார். இடுப்பளவு ஆழத்துக்கு வந்தபிறகு கால்களை தரையில் ஊன்றி நடந்து வந்தார். நல்ல உறுதியான உடல். புடைத்த மார்பு. தலையிலிருந்து தண்ணீர் வழிந்தபடி இருந்தது.
நேத்து போனதைவிட இன்னைக்கு அதிக தூரம் நீச்சலடிச்சிட்டு வந்தேன்.”
அவர் கரையில் வந்து நின்றார். ”
சென்னப்பட்டணத்துல ஒருநாள் போட்டி வச்சி நீச்சலடிச்சிட்டு போனேன்.”
போட்டியா, யார்கூட?”
ரெண்டு வெள்ளைக்காரனுங்க. போட்டியில ரொம்ப தூரம் போயிட்டோம். நான் நீந்தறத பாத்துட்டு வீம்புல என் பின்னாலயே அவனுங்களும் வந்துட்டானுங்க. ஆனா ஒரு கட்டத்துல கால் ஓய்ஞ்சப்பறம் அவனுங்களுக்கு பயம் வந்துட்டுது. நாங்க தோத்துட்டோம்னு ஒத்துக்கறோம். நீங்கதான் ஜெயிச்சீங்கன்னு சொல்லிட்டானுங்க. அவனுங்க வாயாலயே சொல்லிட்டபிறகு பந்தயம் முடிஞ்சதுன்னுதான அர்த்தம்? சரினு திரும்பி கரைக்கு வரதுக்காக நீஞ்சிட்டிருந்தேன். அப்பதான் அவனுங்களால நீந்த முடியலைனு தெரிஞ்சது. அப்படியே தொவண்டு முழுகி முழுகி போறானுங்க. பாத்தா பாவமா இருந்திச்சி. என்னதான் போட்டிக்கு வந்த ஆளா இருந்தாலும் கூடவே வந்தவனுங்கள அப்பிடியே விடமுடியுமா? ரெண்டு பேர் கையையும் ரெண்டு பக்கத்துல புடிச்சி இழுத்துட்டே நீந்தி வந்துட்டன். அதிக தூரம் போன சமயத்துல அவனுங்க ஞாபகம் வந்திட்டுது
சூரியன் திரைமறைவிலிருந்து வெளிப்படுவதுபோல கடலிலிருந்து எழுந்து வந்தது. அவர் அதை கைகுவித்து வணங்கினார்.
வா, சூரிய நமஸ்காரம் கத்துக் கொடுக்கறேன்.”
ஐயோ, எனக்கா? நான் இதுவரைக்கும் செஞ்சதே இல்லயே
அதுக்காகத்தான் கத்துக் கொடுக்கறேன். வா
அவர் என்னை தனக்குப் பின்னால் நிறுத்திவிட்டு நான் செய்யறது ஒவ்வொன்னயும் பாத்து அப்பிடியே செய்யணும்என்றபடி சூரியனைப் பார்த்தபடி உடலை நேராக்கி கைகளைக் குவித்து உயர்த்தினார். ஒவ்வொரு அடியாக நான் அவருடைய அசைவுகளைப் பின்பற்றினேன். உடலுக்குள் தசைகளும் நரம்புகளும் இழுபடுவதை என்னால் உணரமுடிந்தது.
ஐந்தாவது முறை செய்யத் தொடங்கும்போதே உடல் துவண்டுவிட்டது. மூச்சு வாங்கியது. ஆனால் வியர்வை வழிவதைப் பார்த்தபோது ஒருவித மகிழ்ச்சி படர்வதையும் உணரமுடிந்தது. நான் திணறுவதைக் கண்டதும் அவர் ஓரக்கண்ணால் என்னைப் பார்த்து போதும் நிறுத்து. நிக்காத. கீழ தரையில கைய விரிச்சி மல்லாந்து படுத்துட்டு அண்ணாந்து பாத்தபடி கண்ண மூடிக்கோஎன்றார். என்னால் நிற்கவே முடியவில்லை. காலுக்கடியில் நிலம் நழுவுவதுபோல இருந்தது.  அவர் சொன்னதுபோலவே படுத்துவிட்டேன். கிட்டத்தட்ட பிணம்போலக் கிடந்தேன். வெளியிலிருந்து மூச்சுக்காற்று உள்ளே செல்வதையும் அது உள்ளே ஒரு சுற்று சுற்றிவிட்டு வெளியே செல்வதையும் யாரையோ வேடிக்கை பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டிருந்தேன். எதுவுமே என் கட்டுப்பாட்டில் இல்லாததுபோலத் தோன்றிய்து.
மூச்சு நிதானமான பிறகு கண்களைத் திறந்து வானத்தைப் பார்த்தேன். எங்கெங்கும் வெண்ணெய் நிறத்தில் மேகங்கள். கண்களைச் சுழற்றி அவரைப் பார்த்தேன். அவர் இன்னும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
நான் எழுந்து உட்கார்ந்தேன். மேலேறிப் படரத் தொடங்கிய சூரிய வட்டத்தை கண்கள் கூசப் பார்த்தேன். நீண்ட நேரத்துக்குப் பிறகு அவர் பயிற்சியை முடித்துவிட்டு எனக்கு அருகில் வந்தார். “இன்னைக்கு நாப்பத்தஞ்சி முடிச்சேன்என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.
நேத்து நாப்பத்திரண்டு செஞ்சிங்க இல்ல?”
ஆமாஎன்று மீண்டும் சிரித்தார்.
இந்த ஊர்ல ஷோ முடிச்சிட்டு எங்க போவீங்க?”
செட்டியார் ரெண்டு வாரம் இருக்கச் சொல்லியிருக்காரு. இதுவரைக்கும் யாரும் வந்து என்ன கூப்புடல. நேத்துதான இங்க ஆரம்பிச்சிருக்குது. இங்க வந்து நாம ஜிம்னாஸ்டிக்ஸ் செய்ற சேதி மத்தவங்களுக்கு தெரியறதுக்கு மூனுநாலு நாளாச்சிம் வேணுமில்லயா? அதுக்கப்பறமாதான் யாராச்சிம் வருவாங்க.”
இப்பிடி ஊரூரா போயிட்டே இருந்தா, எப்பதான் வீட்டுக்கு போவீங்க?”
வீட்டுக்கா? எனக்கு அம்மா அப்பா யாருமில்ல. அண்ணன்தான் இருக்காரு. அவருக்கு இந்த ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யறது புடிக்கலை. ஊருல நாலு எண்ண செக்கு ஓடுது எங்களுக்கு. அத வந்து பாத்துக்கணும்னு அவருக்கு ஒரு எண்ணம். செக்குமாடா சுத்தறதுக்கு பொறந்தவனில்ல நான்னு ஒரு சவால் விட்டுட்டு வெளிய வந்துட்டன். கையில கொஞ்சம் பணம் சேத்துகிட்டுதான் அவர இனிமேல போய் பாக்கணும்.”
இருவரும் தோப்புக்கருகில் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை நோக்கி நடந்தோம். அவர் என் முதுகில் கைவைத்து ஒடம்பு இப்பிடி  தக்கையா தகரம் மாதிரி இருக்கக்கூடாது. இரும்புத்தட்டு மாதிரி இருக்கணும். யாராச்சிம் மோதினா கூட பாற மேல மோதிட்டோம்னு அவுங்க நெனைக்கணும்.”
சைக்கிளை எடுத்துக்கொண்டு மணற்பரப்பைக் கடந்து சாலைக்கு வந்தோம். செட்டித்தெருவை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
சிறிது தொலைவில் இடுப்பில் ஒரு தண்ணீர்க்குடத்துடன் கிணற்றடியிலிருந்து ஒரு பெண் வந்தாள். அவரைப் பார்த்ததும் ஒதுங்கி நின்று அவர் நெருங்கி வருவது வரைக்கும் காத்திருந்தாள்.
நேத்து ஊமப்படத்துக்கு நடுவுல நீங்க செஞ்சி காட்டன நிகழ்ச்சி ரொம்ப ரொம்ப நல்லா இருந்திச்சி ஐயா. என் ரெண்டு புள்ளைங்களும் என் கூடவே வந்திருந்தாங்க. உங்க நிகழ்ச்சிய பாத்து ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.” அவள் வாயெல்லாம் பல்லாக புன்னகைத்தபடி பேசினாள். “எல்லாம் உங்களமாதிரி புண்ணியமணிகள் செஞ்ச ஆசிர்வாதம்தான் தாயேஎன்று கைகுவித்து வணங்கினார் அவர்.
எங்க தம்பி ஐயாவ கூப்டுகிட்டு போற?” என்று அந்த அம்மா கேட்டாள். நான் சட்டென்று எங்க வீட்டுக்குஎன்று பதில் சொன்னேன்.  உண்மையில் அப்படி ஒரு திட்டம் என் மனத்திலேயே இல்லை. அவளிடம் அப்படி சொன்ன பிறகு, அவரை எப்படியாவது அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்று தோன்றத் தொடங்கிவிட்டது.
எங்க வீட்டுக்கும் கொஞ்சம் அழச்சிட்டு வா தம்பி
எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. நான் அவரைத் திரும்பிப் பார்த்தேன். “போவலாம் போஎன்று சிரித்தார் அவர்.
அந்த அம்மா தண்ணீர்க்குடத்துடன்  முன்னால் நடக்க, நாங்கள் இருவரும் அவளுக்குப் பின்னால் சென்றோம்.
அந்த அம்மாள் வாசலில் இருந்த கயிற்றுக்கட்டிலில் எங்கள் இருவரையும் உட்காரச் சொன்னாள். உள்ளே சென்று இரு சிறுவர்களை வெளியே அழைத்துவந்து  அவர் காலடியில் விழச்செய்து ஐயா, இதுங்க ரெண்டும் என் புள்ளைங்க. ஒங்க வாயால இதுங்கள ஆசீர்வதிக்கணும்என்றாள். அவர் சற்றும் பதற்றமின்றி, ”ஆசீர்வாதமா, நானா, சரிஎன்று சிரித்தார். பிறகு அந்த தெய்வத்துடைய கருணையோடு நீங்க ரெண்டு பேரும் நல்லா சீரும் சிறப்போடும் பேரும் புகழோடும் வாழணும் செல்லங்களாஎன்று வாழ்த்தியபடி அச்சிறுவர்களைத் தொட்டுத் தூக்கி நிறுத்தினார். அவருடைய தோள்களைத் தொட்டுப் பார்த்துவிட்டு நல்ல சத்துள்ள சாப்பாடா குடுங்கம்மா. அவரக்காய் மாதிரி இருக்காங்கஎன்றார்.
ஐயா, எங்க ஊட்டுக்கு வந்திருக்கீங்க. ஏதாச்சிம் சாப்ட்டா சந்தோஷப்படுவன்
அந்த அம்மாவை ஒருகணம் ஏறிட்டுப் பார்த்தார் அவர். பிறகு உப்பு ,போட்டு கரச்சி ஒரு சொம்பு நீராகாரம் குடுங்கம்மா, அது போதும்என்று சிரித்தார். அந்த அம்மா அதிர்ச்சியிலும் கூச்சத்திலும் நெளிந்தார். “ஐயா, சோத்துநீரா?” என்று தயங்கினாள்.
சோத்துநீர் பெரும நமக்குத் தெரியறதில்ல தாயே, அதனாலதான் அத நாம மட்டமா நெனைக்கறோம். ஆத்துநீர் வாதம் போக்கும், அருவிநீர் மந்தம் போக்கும். சோத்துநீர் ரெண்டயும் போக்கும்ங்கறது பெரியவங்க சொன்ன வார்த்த. நீங்க போங்கம்மா. போய் நீராகாரத்த கலக்கி எடுத்தாங்கம்மா
அந்த அம்மா கொண்டுவந்த கொடுத்த நீராகாரத்தை பாதியளவு அவர் அருந்திவிட்டு மீதியை என்னிடம் கொடுத்தார். நானும் அதை வாங்கி அருந்தினேன். வயிற்றுக்குள் அது இறங்கி நிறைந்ததுமே உருவான புத்துணர்ச்சியை என்னால் உணரமுடிந்தது.
அந்த அம்மாவிடம் விடை பெற்றுக்கொண்டு மீண்டும் நடக்கத் தொடங்கினோம்.
ஆட்கள் நின்றிருந்த ஒவ்வொரு திருப்பத்திலும் அவரைத் தடுத்து நிறுத்தியது ஒரு கூட்டம். நேற்று இரவு நிகழ்ச்சி பற்றி வாய்நிறைய பாராட்டினார்கள். ஒருவர் ஒரு பை நிறைய பழங்களைப் போட்டுக் கொண்டுவந்து கொடுத்தார். ஒரு கடைக்காரர் ஒரு சீப்பு வாழைப்பழம் கொடுத்தார். மற்றொருவர் நாலைந்து தேங்காய்களை ஒருசேரக் கட்டிக் கொடுத்தார். அவர் எதையும் மறுக்கவில்லை. ஒவ்வொன்றாக வாங்கி என் சைக்கிளில் கட்டித் தொங்கவிட்டார்.
செட்டித்தெரு வழியாகச் செல்லாமல் வேறு வழியாக நான் அவரை எங்கள் வீட்டுக்கே அழைத்துவந்தேன். வாசலைத் தொட்ட பிறகு இதான் எங்க ஊடு. ஒரே ஒரு நிமிஷம் உள்ள வரணும்என்று கேட்டுக்கொண்டேன். “அதுக்கென்ன, வரேன் வா. வீட்டுல பெரியவங்க இருக்காங்களா?” என்று கேட்டார். நான் தலையசைத்தபடி வாசலாக வைக்கப்பட்டிருந்த வேலிப்படலைத் தள்ளிவிட்டு இருவருமாக உள்ளே நுழைந்தோம்.
போனா போன எடம், வந்தா வந்த எடம்னு இருந்தா எந்த காலத்துலடா உருப்படுவ நீ?” என்று வேகமாகத் தொடங்கிய அம்மா என்னோடு அவரும் உள்ளே வருவதைப் பார்த்ததும் சட்டென்று குரலை அடக்கினாள். அவள் குரல் அடங்கியதை உணர்ந்ததும் ஏதோ சந்தேகத்தில் அப்பாவும் வெளியே வந்துவிட்டார்.
நான் அவரை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அறிமுகப்படுத்தினேன்.
ஊரே உங்க பேச்சாதான் இருக்குது ஐயா. ஏரிக்கரை, கொளத்தங்கர, வாய்க்கா கரை எல்லா எடங்கள்லயும் உங்கள பத்திதான் பேசறாங்க. நேத்து ராத்திரி நீங்க செஞ்சி காட்டனத பாத்து எல்லாரும் மூக்கு மேல விரல வச்சிட்டாங்களாம்.”
பாக்கறவங்க கண்ணும் மனசும் நெறஞ்சா போதும்ங்கய்யா. அதுதான் கடவுள் எனக்கு கொடுத்த வேலய சரியா செஞ்சேங்கற திருப்திக்கு அடையாளம்
எந்த வயசிலேர்ந்து இத கத்துக்கிட்டிங்க?”
திண்ண பள்ளிக்கூடத்துல  படிக்கற காலத்திலயே இந்த பயிற்சி மேல ஒரு ஈடுபாடு உண்டு. எங்க  வீட்டு பக்கத்துல ஒரு சாமியாரு இருந்தாரு. பெரிய யோகி. தேடி வரவங்களுக்கு யோகாசனம்லாம் கத்து குடுப்பாரு. அவர் வழியாதான் நான் ஒன்னொன்னா கத்துகிட்டேன். எல்லாமே உடம்ப வளைக்கற வித்தைதானே? இப்பிடி வளைச்சா எப்பிடி இருக்கும், அப்பிடி வளச்சா எப்பிடி இருக்கும்ன்னு நானா புதுசுபுதுசா யோசிச்சி சிலத செஞ்சி பாத்து அத வளத்துகிட்டேன்.”
இரும்ப உருக்கி அச்சில ஊத்தி எடுக்கறமாதிரி உடம்ப உருக்கி மாத்தி புதுசுபுதுசா செஞ்சி காட்டறீங்க.”
உடம்ப எப்பவும் புதுசா இருக்கணும்னா அத  உருக்கிகிட்டேதான் இருக்கணும். உருக்காம கெட்டு போச்சினு வைங்க, அதுக்கப்புறம் காலமெல்லாம் துன்பம்தான். சமையல் கெட்டா ஒருநாள் துன்பம், அறுவடை கெட்டா ஆறுமாசம் துன்பம். படிப்பு கெட்டா ஒரு வருஷம் துன்பம், ஆனா உடம்பு கெட்டா வாழ்க்கை முழுக்க துன்பம்னு எங்க குரு சொலறதுண்டு.”
பெரியவங்க சொல்ற வார்த்த பெருமாளே சொல்றமாதிரி. நீங்க சொல்றது நூத்துல ஒரு வார்த்த.”
அப்பா நெகிழ்ச்சியுடன் பேசுவதை அன்றுதான் நான் முதன்முதலாகப் பார்த்தேன். எப்போதும் வெறுப்பும் கசப்பும் ஏறிய அவர் முகத்தை மட்டுமே பார்த்துப் பழகிய அவர் முகம் கனிந்து குழைந்ததைப் பார்க்க விசித்திரமாக இருந்தது.
சட்டென அவர் என் தோளைத் தொட்டு அருகில் அமர வைத்துக்கொண்டு தம்பிய கடற்கரையில பாத்தேன். ஓட்டத்துல நல்ல வேகம் தெரியுது. இயற்கையிலயே அவருக்குள்ள ஒரு பருந்து பறக்குது. அது அவர ரொம்ப உயரத்துக்கு அழச்சிட்டு போவும். ஓடறது மட்டுமில்லாம அவர் இந்த ஜிம்னாஸ்டிக்ஸயும் கத்துக்கணும்னு எனக்கு ஆசை. அதுக்கான விசையும் அவருக்குள்ள இருக்குது. தம்பி எனக்கு சீடப்புள்ள மாதிரி ஆயிட்டாரு. நான் இன்னைக்கு கடற்கரையில வச்சி சூரிய நமஸ்காரத்துல ஆரம்பிச்சிட்டேன். நீங்க இந்த ஊருல யாராவது ஒரு குருவ கண்டுபுடிச்சி யோகாசனம் கத்துக்க வைங்க. அதுக்கப்புறம் ஜிம்னாஸ்டிக்ஸ் தானாவே வந்துடும்.”
அவனுக்கு ஏற்கனவே உடம்புல கொஞ்சம் பிரச்சின இருக்குதுனு வைத்தியர் சொன்னார். அதுக்காகத்தான் அவன ஓடணும்னு சொன்னாரு.”
அதயெல்லாம் அவர் சீக்கிரம் கடந்து போயிடுவார். கவலப் படாதீங்க
அப்பா ம்ம் என்று மூச்சு வாங்கியபடி தரையையும் கூரையையும் பார்த்தார். பிறகு பொருளில்லாமல் அம்மாவைப் பார்த்தார். பிறகு சரிங்க. நீங்க சொல்றமாதிரி கத்துக் குடுக்க ஏற்பாடு செய்யறேன்என்று சொல்லி புன்னகைத்தார்.
ரொம்ப சந்தோஷம். நான் வந்த வேல முடிஞ்சிட்டுது. நான் கெளம்பறேன்அவர் கைகூப்பிக்கொண்டே எழுந்து புறப்படுவதற்குத் தயாரானார்.
இந்தப் பழங்கள்?” என்று சொன்னபடி சைக்கிளில் இருக்கும் பைகளை எடுக்கச் சென்றேன். “அது எல்லாம் உனக்கேஎன்று சிரித்தார் அவர். ”அப்புறம் என்ன தம்பி, அப்பாவே ஏற்பாடு செய்றேன்னு சொல்லிட்டாரு. சிரத்தயா கத்துக்கவேண்டியது உன் கடமைஎன்றபடி என் தோளைத் தட்டிப் புன்னகைத்தார். “உடம்ப கோயிலாக்கறது இனிமே உன் கையிலதான் இருக்குது
என் கையிலா?” என்று திகைத்தேன் நான்.
ஆமாஎன்றபடி படலை நோக்கி நடந்து செல்லத் தொடங்கினார் அவர்.

(சொல்வனம் – 7 ஜூன் 2020)