Home

Sunday 18 April 2021

சிந்தாமணி கொட்லெகெரெயின் இரண்டு கன்னடக்கவிதைகள்

 

இருபத்தாறு சிங்கங்கள்

 

அந்தச் சிறிய விதைக்குள்

ஆயிரம் காடுகளின் கனவுகளிருந்தன

ஒரு காட்டுக்குள் நான் நுழைந்தேன்

 

குகையொன்றின் முன்னால்  நின்றேன்

ஒன்பது வாசல்கள் அடுத்தடுத்துத் திறந்தன

எதிர்கொண்டன இருபத்தைந்து சிங்கங்கள்-

அக்கணத்தில் ஒருமுறை நான் அஞ்சியது உண்மை

 

சிங்கங்கள் என்னைக் கேட்டன

"நீ யாரென்று உனக்குத் தெரியுமா?"

நான் சொன்னேன்

"தெரியாது- நான் யார் என்பதை நானறியேன்"

 

"உனக்கு அது தெரியவேண்டும்" என்றன சிங்கங்கள்

"நாங்கள் இப்போது உன்னை தின்றுவிடுவோம்,

அப்போதாவது நீ அறிந்துகொள்ளக்கூடும்-

நீ ஒரு சிங்கம் என்பதை"

 

எச்சரிக்கையாக நான் சொன்னேன்

"நான் யார் என்பதை நானறிவேன்

ஆரம்பத்திலேயே எனக்கு தெரிந்துமிருந்தது."

 

சிங்கங்கள் சீறின "இல்லை.. இல்லை..

நீ யார் என்பது உனக்குத் தெரியாது..

கோழையைப்போல வாழ்வதாகச் சொன்னதுண்டு அல்லவா?.."

 

நான் வேகமாக சொன்னேன்

"கேட்டுக்கொள்ளுங்கள், நான் ஒரு சிங்கம்

இது என்னுடைய குகை, என் காடு.."

 

"அப்படியென்றால் நாங்கள் உனக்காகவே காத்திருந்தோம்"

சிங்கங்கள் வரவேற்றன

 

ஒரு சிறிய விதைக்குள்

ஒரு காட்டுக்குள்

ஒரு இருட்குகைக்குள்

ஒன்பது வாசல்களுக்கு உள்ளே

நாங்கள்

இருபத்தேழாவது சிங்கத்துக்குக் காத்திருந்தோம்.

  

நடிகன்

 மேடையிலிருந்து இறங்கிவந்தபிறகும்

பட்டப்பகலிலும்

தான் நடிக்கும் நாடகப்பாத்திரத்தைப்போலவே

ராஜ் டி.வி.யில் நடிகன் நடிக்கத் தொடங்கினான்

 

கையைத் தட்டி சேவகர்களை அழைத்தான்

", யாரங்கே"

பேசும்போது மீசையை முறுக்கினான்

ஹாஹாஹாஹா

சற்றே பின்னகர்ந்து தனக்குள்ளேயே முணுமுணுத்தான்

"அடியே" என்று அழைப்பவன் "உயிருக்குயிரானவளே" என்றான்

மகனிடம் "பிரியமுள்ள புத்திரனே.." என்றான்

தினசரி வாழ்வில் நாடகக்கோலத்தைக் கண்டு

உலகம் சிரிக்கத்தொடங்கியது

 

நடிகன்மட்டும்-

"குடிமக்களே,

ஏன் இப்படி சிரிக்கிறீர்கள்?"

என்று கேட்டபடியே இருந்தான்.