Home

Monday 5 April 2021

துர்காபாய் தேஷ்முக் : தொண்டின் நாயகி

 

கடந்த நூற்றாண்டின் இருபதுகளையொட்டிய காலத்தில் தேவதாசிப் பெண்களுக்கு சமூக மதிப்பில்லாத நிலை நிலவியது. சிலர் செல்வந்தர்களின் காமவேட்கையைத் தணிக்கும் கணிகையராக வாழ்ந்தனர். சிலர் தெருவில் திருமண ஊர்வலம் செல்லும்போது, பல்லக்குகளின் முன்னால் நடனமாடிப் பிழைத்தனர். சிலர் கோயில்களில் நடனமாடி வாழ்க்கையை நடத்தினர். அவர்கள் எந்தத் தரப்பினராக இருப்பினும், திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்பது மட்டும் எல்லோருக்கும் பொதுவான விதியாக இருந்தது. எல்லோரும் தேவதாசிப்பெண்களை களிப்பூட்டும் பொம்மைகளாகவும் இழிவாகவும் மதித்திருந்த வேளையில், காகிநாடாவில் வாழ்ந்த ஒரு பள்ளிச்சிறுமி மட்டும் அவர்களை மிகுந்த கெளரவத்தோடும் கனிவோடும் அணுகிப் பழகினாள். இந்தச் சமூகமும் அவர்களைத் தகுந்த மதிப்புடன் நடத்தவேண்டும் என்று விரும்பினாள். இந்தப் பிரச்சினையை காந்தியடிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று பன்னிரண்டு வயதான அந்தப் பிஞ்சுமனத்துக்கு எப்படியோ தோன்றியது. அந்தச் சிறுமியின் பெயர் துர்காபாய்.

இளமையிலேயே மனிதர்களுடன் அன்போடு பழகவேண்டும் என்று அடிக்கடி கூறும் தன் தந்தையின்  சொல்லைக் கேட்டு வளர்ந்த பெண் அவர். பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீட்டுக்கு தன்னிச்சையாகவே உதவி செய்யச் செல்லும் தந்தையோடு சிறுவயதில் அவரும் சென்றதுண்டு. இறந்துபோனவர்களின் இறுதி ஊர்வலத்தில் பாடையைத் தன் தோளில் தாங்கிச் செல்லும் தந்தையோடு மிக நெருக்கத்தில் நின்று பார்த்தபடி வளர்ந்தவர் அவர். கருணையும் இரக்கமும் துர்காபாயின் மனத்தில் இயற்கையாகவே பெருகி நிறைந்திருந்தன.

02.04.1921 அன்று காக்கிநாடாவுக்கு காந்தியடிகள் வரவிருக்கும் செய்தியை அவள் எப்படியோ தெரிந்துகொண்டாள். தேவதாசிப் பெண்களிடையில் அவரை உரையாடவைக்க வேண்டும் என அவள் விரும்பினாள். நிகழ்ச்சியின் அமைப்பாளரைச் சந்தித்து தனக்கு உதவும்படி கேட்டுக்கொண்டாள். ஐயாயிரம் ரூபாய் தொகையை நிதியாகத் திரட்டியளிப்பதாக இருந்தால் அவர்கள் சந்திப்புக்கு ஐந்து நிமிட நேரம் ஒதுக்குவதாக அவர் சொன்னார். அவளைத் தவிர்ப்பதற்காக அவர் அப்படிச் சொன்னபோதும் அவள் உண்மையிலேயே அந்தப் பெண்கள் வழியாக ஒரு வார இடைவெளியிலேயே ஐயாயிரம் ரூபாயைத் திரட்டிவிட்டாள்.  ஒவ்வொரு நாளும் அப்பெண்களிடம் காந்தியடிகளின் சுதந்திரப் போராட்ட முயற்சிகளைப்பற்றியும் தென்னாப்பிரிக்காவில் பெண்களுக்காக அவர் நடத்திய போராட்டங்களைப்பற்றியும் சொல்லி ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கினாள்.

நகரத்தில் அவளுடைய கூட்டத்துக்கு இடமளிக்க அனைவரும்  மறுத்தபோது, தன் பள்ளிக்கூடத் தலைமையாசிரியர் உதவியால் பள்ளி வளாகத்திலேயே கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தாள். ஐந்து நிமிடத்துக்கும் மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையுடன் நிகழ்ச்சி அமைப்பாளர் காந்தியடிகளை அந்தக் கூட்டத்துக்கு அழைத்துவந்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அங்கே திரண்டிருந்தனர். திரட்டிவைத்திருந்த தொகையை அவரிடம் வழங்கிய மூத்த பெண்மணி சமூகத்தில் தம்மைப்போன்ற பெண்கள் இழிவாக நடத்தப்படும் விதத்தைப்பற்றிய மனக்குறையையும் சொல்லி முறையிட்டார். காந்தியடிகள் அன்று அவர்களிடையே அரைமணி நேரத்துக்கும் மேல் பேசினார். இந்துஸ்தானியின் அவர் ஆற்றிய உரையை துர்காபாயே தெலுங்கில் மொழிபெயர்த்தாள்.

இராட்டை தேசத்தின் கெளரவத்தை மட்டுமன்றி தனிமனிதனின் கெளரவத்தையும் காப்பாற்றும் ஆற்றல் கொண்ட கருவியென அன்று உரைத்தார் காந்தியடிகள். அவமதிப்புக்குரிய நிலையில் வாழ்வதன் வழியாக கிட்டும் வசதிகளை முற்றிலும் நிராகரித்துவிட்டு இராட்டையின் பாதையில் செயல்பட்டால் சுயமரியாதையோடு வாழ்வது எளிது என்று எடுத்துரைத்தார். எல்லாப் பெண்களையும் அவர் கதரியக்கத்தை நோக்கி ஈர்த்தார். அடுத்தநாள் முதல் பெரும்பாலானோர் நூல்நூற்போர் இயக்கத்தில் சேர்ந்து நூல்நூற்கத் தொடங்கினர். உயர்சாதியினரின் கருணையில் சலுகைகளைப் பெற்று வாழும் வாழ்க்கையை வெறுத்து தம் சொந்த உழைப்பில் வாழத் தொடங்கினர். கதராடைகளை அணிந்து பிற ஆடைகளைத் துறந்தனர். காலம்காலமாக கடைபிடித்துவந்த மரபான பழக்கங்களை உதறி அப்பெண்கள் தம் பிள்ளைகளை சமூகக்கட்டுப்பாடுகளை மீறி மணம் செய்துகொள்ளத் துணிந்து வந்த இளைஞர்களுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

துர்காபாயின் தந்தையார் தம் வீட்டிலேயே ஒரு பாலர் பள்ளியைத் தொடங்கி இந்தியும் பிற பாடங்களும் கற்பிக்கத் தொடங்கினார். இராட்டையில் நூல் நூற்கவும் தறியில் நெசவுவேலை செய்யவும் தகுதியான ஆசிரியர்கள் வழியாக கற்பிக்க ஏற்பாடு செய்தார். ஆங்கிலப்பள்ளியைவிட்டு வெளியேறிய துர்காபாய் அந்தப் பள்ளியில் படிக்கத் தொடங்கினாள். 1925இல் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக காந்தியடிகள் மீண்டும் காகிநாடாவுக்கு வந்தார். அப்போது தட்சிண இந்தி பிரச்சார சபையின் சார்பில் முதல் இந்தி சாகித்ய சம்மேளனமும் காகிநாடாவில் நடைபெற்றது. பாலர் பள்ளியைச் சேர்ந்த துர்காபாயும் அவள் தோழிகளும் அந்த மாநாட்டில் தன்னார்வலராகத் தொண்டாற்றினர். நுழைவாயிலில் அனுமதிச்சீட்டைப் பரிசோதித்து பங்கேற்பாளர்களை உள்ளே அனுப்பும் வேலையில் ஈடுபட்டிருந்த துர்காபாய், அனுமதிச்சீட்டு இல்லாததால்  மாநாட்டுக்கு வந்திருந்த நேருவை தடுத்து நிறுத்திவிட்டாள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஓடிவந்து அவருக்காக சீட்டு வாங்கி ஒப்படைத்துவிட்டு உள்ளே அழைத்துச் சென்றனர். இளம்வயதிலேயே துர்காபாயிடம் குடிகொண்டிருந்த நேர்மையுணர்ச்சியைப் பாராட்டிவிட்டுச் சென்றார் நேரு.

பாலர் பள்ளியில் படிப்பவராக இருந்த துர்காபாய் தன் தந்தையாரின் எதிர்பாராத மரணத்துக்குப் பிறகு அதை நிர்வகித்து நடத்தும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.  சென்னையில் உள்ள இந்தி பிரச்சார சபையுடன் அப்பள்ளியை இணைத்து, அது வகுத்தளித்த பாடத்திட்டத்தைப் பின்பற்றி  மாணவிகளைத் தேர்வெழுத வைத்து சான்றிதழ்கள் பெறவைத்தார். மிகக்குறைவான கால அளவிலேயே துர்காபாயின் பள்ளி காகிநாடா வட்டாரத்தில் புகழ்பெற்று விளங்கத் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானோர் அந்தப் பள்ளியில் படித்து முடித்து சான்றிதழ் பெற்று வெளியேறியிருந்தனர்.

1930 வரைக்கும் எல்லாமே நல்லபடியாகவே போய்க்கொண்டிருந்தது. அந்த ஆண்டில் காந்தியடிகள் தொடங்கிய உப்பு சத்தியாகிரகப் போராட்டம் அவரை ஈர்த்தது. உடனே பள்ளியின் பொறுப்பை துர்காபாய் தன் தாயாரிடம் ஒப்படைத்துவிட்டு சென்னைக்குச் சென்று பிரகாசம் தலைமையில் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டபோது அவர் கைது செய்யப்பட்டார். வேலூர் சிறையில் அடைபட்டிருந்த அவர் ஒரே காரணத்துக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கு வருகிறவர்களை தரம் பிரித்து வெவ்வேறு சூழலில் அடைத்து வைக்கும் நடைமுறையை எதிர்த்து குரல்கொடுத்தார். சிறை நிர்வாகிகளுக்கும் அவருக்கும் இடையில் இது தொடர்பாக தொடர்ந்து விவாதங்கள் நிகழ்ந்தபடியே இருந்தன. சிறைவிதிகளை மாற்றமுடியாது என இறுதியாக அரசு அவரிடம் தெரிவித்துவிட்டது.

05.03.1931 அன்று ஏற்பட்ட காந்தி இர்வின் ஒப்பந்தத்தை  அடுத்து துர்காபாய் வேலூர் சிறையிலிருந்து விடுதலையடைந்தார். அம்மாத இறுதியில் கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். வல்லபாய் படேல் தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில் உரையாற்றிய அனைவரும் பூரண சுயராஜ்ஜியமே தம் குறிக்கோள் என முழங்கினர். தொழிலாளர் நலன், விவசாயிகள் நலன், இலவச பள்ளிக்கல்வி தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டிலிருந்து திரும்பி வந்த பிறகு மீண்டும் அவர் போராட்டத்தில் கலந்துகொண்டதால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு காலம் கடுங்காவல் தண்டனை விதித்தது. மதுரையில் தூக்குதண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த அறைகளுக்கு நடுவில் தனிமைச்சிறையில் அவரை அரசு அடைத்தது. நாள் முழுதும் மரண ஓலத்தையும் அழுகையையும் கேட்டுக்கொண்டே இருந்த சூழல் அவரை அமைதியிழக்க வைத்தது. 1933 வரைக்கும் அவர் சிறையில் கழிக்க நேரிட்டது.

துர்காபாயின் சிறைவாசத்தைத் தொடர்ந்து அவருடைய தாயார் பாலர் பள்ளியை நடத்திவந்தார். அப்போது இந்தி பிரச்சார சபையின் கிளைகளும் காவல்துறையின் கண்காணிப்புக்கு இலக்காகியிருந்த காலமென்பதால், துர்காபாயின் பள்ளியும் கண்காணிப்புக்கு உட்பட்டது.  ஒரு தருணத்தில் அவருடைய தாயாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் பள்ளி செயல்படமுடியாத நிலையை எட்டியது. அதன் கதவுகள் மூடினாலும், அப்பள்ளியில் படித்து சான்றிதழ் பெற்றுச் சென்றவர்களில் சிலர் ஆங்காங்கே புதுப்புது கிளைகளைத் தொடங்கி இளம்தலைமுறையினருக்கு கல்வியறிவூட்டத் தொடங்கினர். ஏதோ ஒருவகையில் கல்விப்பணி தொடர்ந்தது..

விடுதலைக்குப் பிறகு துர்காபாய் காகிநாடாவில் வசித்துவந்த ராமச்சந்திரராவ் என்னும் தாவரவியல் பேராசிரியரின் உதவியால் காசி இந்து பல்கலைக்கழகத்தில் தனி தேர்வராக தேர்வெழுதி 1934இல் தன் இருபத்தைந்தாவது வயதில் மெட்ரிகுலேஷனில் வெற்றி பெற்றார். பிறகு காசிக்குச் சென்று கல்லூரியில் நேரிடையாக இணைந்து இன்டர்மீடியட் படிப்பையும் படித்தார். அவருக்கு அரசியல் பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பைப் படிக்க ஆர்வமிருந்தது. ஆனால் இந்து பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்த மாளவியா அது பெண்களுக்குரிய படிப்பல்ல என்பதால் இடம்வழங்க மறுத்தார். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆந்திரப் பல்கலைக்கழகம் அவருக்கு இடமளிக்க ஒப்புக்கொண்டது. ஆனால் அந்தப் பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கென தனிவிடுதி வசதி இல்லை.

மனம் சோர்ந்துபோகாத துர்காபாய் செய்தித்தாளில் ஒரு விளம்பரம் கொடுத்தார். விடுதி வசதி இல்லாததால் படிப்பைத் தொடரமுடியாத பெண்கள் சேர்ந்து ஒரு வீட்டையே விடுதியாக மாற்றிக்கொண்டு படிப்பைத் தொடரலாம் என்றும் விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம் என்று அறிவித்தார். அவர் அறிவிப்புக்குப் பலன் கிடைத்தது. ஏறத்தாழ பத்து பெண்கள் ஒன்றிணைந்தார்கள். அனைவரும் கல்லூரி முதல்வரை மீண்டும் சந்தித்து அவரவருக்குப் பிடித்தமான பிரிவில் இணைந்தனர். தான் விரும்பிய அரசியல் அறிவியல் பிரிவுத் துறையிலேயே துர்காபாய் சேர்ந்து படிக்கத் தொடங்கினார்.

துர்காபாயின் சகோதரருக்கு 1937இல் சென்னை மாகாண சட்டசபையில் சபாநாயகராக இருந்த சாம்பமூர்த்தி அவர்களின் செயலாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் சிறையிலிருந்து விடுதலையான தாயாரோடு அவர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். கல்லூரி விடுமுறையின்போது சிற்சில வாரங்கள் துர்காபாயும் சென்னைக்கு வந்து தாயாருடன் தங்கியிருந்தார். ஒருமுறை தம் வீட்டருகில் உள்ள வெட்டவெளியில் நாள்முழுக்க ஏராளமான சிறுமிகள் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அனைவரும் நான்கு முதல் பத்து வயது வரை உள்ள சிறுமிகள். அக்கணமே அச்சிறுமிகளின் வாழ்க்கை விளையாட்டிலேயே கழிந்துவிடக் கூடாது என்று துர்காபாய்க்குத் தோன்றியது. உடனே அவர்களை தம் வீட்டுக்கே வரவழைத்து அவர்களுக்கு கதைகளும் பாடல்களும் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். அதைப் பார்த்ததும் அக்கம்பக்கத்தில் வசிக்கும் பல சிறுமிகளும் அவர்களோடு இணைந்துகொண்டனர். சிறுமிகளின் எண்ணிக்கை மெல்லமெல்லப் பெருகி ஒரு வகுப்பறையைப் போல ஆனது. ஏற்கனவே பள்ளி நடத்திய அனுபவத்தில் துர்காபாயின் தாயார் அச்சிறுமிகளுக்கு இந்தி கற்பித்தார்.

அச்சமயத்தில் சென்னை வானொலி நிலையம் புதிய முயற்சியாக குழந்தைகள் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியைத் தொடங்கி நடத்திவந்தது. தம்மிடம் படிக்கும் சிறுமிகளுக்கு போதிய பயிற்சியைக் கொடுத்த துர்காபாய் அவர்களை வானொலி நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்று பங்கேற்கவைத்தார். அந்நிகழ்ச்சியால் சிறுமிகளுடைய ஊக்கம் அதிகரித்தது. தம் செல்வாக்கின் வழியாக பல நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புகளைப் பெற்ற துர்காபாய் சிறுமிகளுக்கு தீவிரமான பயிற்சியளித்து ஒவ்வொருமுறையும் அவர்கள் தம் திறமையை சிறப்பாக வெளிப்படுத்த வழிவகுத்தார்.

சிறுமிகளோடு, அச்சிறுமிகளின் அன்னையரும் கல்வியும் இசையும் கற்கும் விருப்பத்தால் வீட்டுக்கு வரத்தொடங்கினர். எல்லோருக்கும் துர்காபாயின் தாயார் கல்வி சொல்லிக்கொடுத்தார். நூறு சிறுமிகளும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களும் என படிக்க வருகிறவர்களின் எண்ணிக்கை பெருகியபோது இடப்பற்றாக்குறையால் என்ன செய்வது என்று தவிக்க நேர்ந்தது. அப்போது சபாநாயகரான சாம்பமூர்த்தி தன் வீட்டின் ஒரு பகுதியையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்தார். இப்படியாக இரு பகுதிகளாக அவர்களுடைய வகுப்புகள் நடைபெற்றன. அப்பள்ளிக்கு சிறுமிகளின் பிருந்தாவனம் என்று பெயரிட்டார் துர்காபாய்.

கல்விப்பயிற்சியை முறைப்படுத்தி செழுமைப்படுத்த போதிய இடவசதியின்றி துர்காபாய் தவித்தார். அப்போது சபாநாயகரின் வழிகாட்டலுக்கு இணங்கி சென்னபுரி ஆந்திர மகாசபா அவர்களுக்கு இடமொதுக்கிக் கொடுத்தது. முதல் வகுப்பில் தேறி பி.. (ஹானர்ஸ்) பட்டம் பெற்ற துர்காபாய் 1939இல் விசாகபட்டினத்திலிருந்து நிரந்தரமாக சென்னைக்குத் திரும்பினார். லண்டனுக்குச் சென்று உயர்கல்வியைத் தொடர்வதற்கு அவருக்கு உதவித்தொகை கிடைத்தபோதும் இரண்டாம் உலகப்போர் தொடங்கிய நிலையில் அவரால் அயல்நாட்டுப் பயணத்தை மேற்கொள்ள இயலவில்லை. அதனால் சென்னைக்குச் சென்று சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார்.

பிருந்தாவனத்தில் பயிற்சி பெறும் பெண்கள் அனைவரையும் தம்மைப்போலவே பட்டதாரிகளாக்க வேண்டும் என்று கனவு கண்டார் துர்காபாய். தனக்கு உதவியாக இருந்த காசி இந்து பல்கலைக்கழகம் வழியாகவே அதைச் சாதிக்கமுடியும் என்று அவருக்குத் தோன்றியது. அவர்கள் அனைவரையும் தனித்தேர்வராக மெட்ரிக் தேர்வெழுத  அனுப்பிவைக்கவேண்டும் என்று முடிவெடுத்து அப்பெண்களுக்கு எல்லாப் பாடங்களிலும் நல்ல  பயிற்சி கொடுத்தார். அவருடைய தோழிகளும் உறவினர்களும் அவர் முயற்சிக்குத் துணையாக நின்றனர். இதற்கிடையில் லஸ் சர்ச் தெருவில் நல்லதொரு வீடு கிடைத்ததால் நல்ல இதயங்களின் நன்கொடைகளின் உதவியோடு அதை பள்ளிக்கூடத்துக்கு உகந்த இடமாக மாற்றினார் துர்காபாய். ஆந்திர மகாசபாவில் இயங்கிய பள்ளிக்கூடம் இடம் மாறி ஆந்திர மகிளா சபாவாக நிலைத்தது.

அங்கு சேரும் பெண்கள் தாமே உழைத்து தம் வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு இராட்டையில் நூல்நூற்றல், நெசவு, தையல், பூவேலைப்பாடு என எல்லா கைத்தொழில்கள் சார்ந்தும் உழைக்க ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். இதற்கிடையில் 1942இல் தன் சட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்து முதல் வகுப்பில் தேறினார் துர்காபாய்.

அத்தருணத்தில் தனித்தேர்வராக தேர்வெழுத மகிளா சபாவைச் சேர்ந்த பதினெட்டு பெண்கள் தகுதி பெற்றிருந்தனர். அவர்களுடைய பயிற்சி முடிவுற்றிருந்தது. அனைவரும் காசிக்குச் சென்றுதான் தேர்வெழுத வேண்டும். வெளியூர்ப்பயணம் என்பதால் சில குடும்பங்கள் தம் பெண்களை அனுப்ப மறுத்தனர். வேறு வழியின்றி தயாராக இருந்த பதினைந்து பேர்களை மட்டும் அழைத்துச் சென்றார் துர்காபாய். அவர்களில் பதிமூன்று பேர் வெற்றி பெற்றனர். ஆனால் சென்னை பல்கலைக்கழகம் இன்டர்மீடியட் படிப்பில் அவர்களுக்கு இடம்வழங்க மறுத்தது.  சட்ட அறிவு மிக்க துர்காபாய் காசி பல்கலைக்கழகத்தாருடன் தொடர்புகொண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தாருக்கு அறிவுறுத்தும்படி கேட்டுக்கொண்டார். இறுதியாக மகிளா சபா பெண்களுக்கு கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களை கல்லூரியில் சேர்த்துவிட்ட பிறகே  துர்காபாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார்.

பள்ளிப்படிப்பு இல்லாத அல்லது ஏற்கனவே படிக்கத் தொடங்கி பாதியில் படிப்பை நிறுத்திய பெண்கள் நேரிடையாக கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான ஒரு வழிமுறையை துர்காபாய் தம் ஆந்திர மகிளா சபா வழியாக ஏற்படுத்தியதை பெண்கல்வியில் ஒரு திருப்புமுனையாகவே சொல்லவேண்டும். பல குடும்பப்பெண்களையும் அது கல்வியின்பால் கவனம் கொள்ளவைத்தது. கைத்தொழில் பயிற்சிக்கு மகிளா சபா கொடுத்த முக்கியத்துவமும் பாராட்டுக்குரியது. 1946இல் மகிளா சபாவுக்கு சொந்தமாக ஒரு வளாகத்தை அவர் உருவாக்கியபோது, அந்த விழாவில் காந்தியடிகள் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். கல்விநிலையம், நூலகம், தொழிற்கூடம், பொழுதுபோக்குக்கூடம், மருத்துவமனை என எல்லா அம்சங்களையும் கொண்டதாக அந்த வளாகம் மெல்ல மெல்ல வளர்ந்தது.

அவருடைய திறமையை நன்கறிந்த நேரு நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு அவரை தில்லிக்கு அழைத்தார். இந்திய அரசியலமைப்பு சட்டக்குழுவில் அவரை உறுப்பினராகச் செயல்பட வைத்தார். தமது நுண்ணுணர்வால் பல சட்டக்கூறுகளைச் செம்மைப்படுத்த அவர் உறுதுணையாக இருந்தார். 26.01.1950இல் புதிய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்ததும் சென்னைக்குத் திரும்பி மகிளா சபை வேலைகளில் ஈடுபடவேண்டும் என துர்காபாய் விழைந்தார். ஆயினும் அவர் அரசியலில் நீடிக்கவேண்டும் என்று விரும்பிய நேரு அவருக்கு ஒரு புதிய பொறுப்பை வழங்கினார்.

இந்தியப் பிரிவினையின்போது பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியோருக்கு உதவும் வகையில் மறுவாழ்வு உதவி மையமொன்று  தில்லியில் உருவாக்கப்பட்டது. திருமதி மெளண்ட்பேட்டன் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். இந்தியா குடியரசு பெற்ற நாடாக மலர்ந்த பிறகு அவர் தன் தாய்நாட்டுக்குச் செல்ல விரும்பினார். அதனால் அவரிடமிருந்து பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி துர்காபாயைக் கேட்டுக்கொண்டார் நேரு. தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்தில் மற்றொரு கிளையைத் தொடங்கினார் துர்காபாய். அங்கேயே தங்கி பிரிவினையால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் பயணம் செய்தார். எண்ணற்ற முகாம்களை நடத்தி பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் நேருக்கு நேர் சந்தித்து உரையாடினார். அங்கே ஏற்கனவே பணியாற்றிக்கொண்டிருந்த மிருதுளா சாராபாய், பிரேமா தாப்பர் போன்றோரின் உதவியோடு அவருடைய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் குடியிருப்பு வசதிகளையும் வேலைவாய்ப்பு வசதிகளையும் உருவாக்கிக் கொடுத்தார்.

தில்லிக்குத் திரும்பிய அவரை 1951இல் நடைபெற்ற முதல் பாராளுமன்றத் தேர்தலில் நேரு போட்டியிடச் செய்தார். காங்கிரஸ் கட்சி ஆந்திரப்பிரதேசத்தில் ராஜமுந்திரி தொகுதியை அவருக்கு ஒதுக்கியது. அத்தேர்தலில் அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பொதுவுடமைக் கட்சி வேட்பாளரிடம் தோல்வியுற்றார். இருப்பினும் துர்காபாய் அரசியல் களத்திலேயே நீடிக்கவேண்டும் என விரும்பிய நேரு அவரை அனந்தபூர், கடப்பா, சித்தூர், கர்நூல் ஆகிய மாவட்டங்களைக் கொண்ட ராயலசீமைக்கு பஞ்சநிவாரண வேலைகளைக் கவனிக்குமாறு அனுப்பிவைத்தார். அப்போது ராயலசீமை கடும்பஞ்சத்தில் மூழ்கித் தவித்துவந்தது. ராயலசீமைப் பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டறிந்தார் துர்காபாய். அரசு அமைப்புகளையும் தன்னார்வல அமைப்புகளையும் கிராம அமைப்புகளையும் ஒருங்கிணைத்து நிவாரணப்பணிகளை விரைவுபடுத்தினார். எல்லா உதவிகளும் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கும் வகையில் தொடர்ச்சியாக கண்காணித்து சரிப்படுத்தினார். ஏறத்தாழ இருமாத காலம் அங்கேயே தங்கி அனைத்தையும் முறைப்படுத்திவிட்டு தில்லிக்குத் திரும்பினார்.

விஜயலட்சுமி பண்டிட் தலைமையில் ஒரு நல்லெண்ணக்குழுவை அமைத்து சீனாவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நேரு, அக்குழுவில் துர்காபாயையும் ஓர் உறுப்பினராக இணைத்தார். 1952இல் மே மாதத்தில் புறப்பட்ட அந்தக் குழு ஏறத்தாழ ஒன்றரை மாத காலம் சீனாவில் சுற்றுப்பயணம் செய்தது. அங்கு செயல்படும் நீதியமைப்பு துர்காபாயைப் பெரிதும் கவர்ந்தது. அங்கு குற்ற வழக்குகளையும் பொதுவழக்குகளையும் விசாரிப்பதற்கென ஒரு நீதி அமைப்பும் குடும்பநல வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கென ஒரு தனி நீதி அமைப்பும் தனித்தனியாகச் செயல்பட்டு வந்தது. அங்கிருப்பவர்களிடம் அவற்றைப்பற்றி விரிவாகக் கேட்டறிந்தார் துர்காபாய்.

குடும்பநல வழக்குகளை தனிமைப்படுத்தி விசாரிப்பதன் மூலம் பல நன்மைகள் கிட்டுவதற்கு வாய்ப்பிருப்பதை அவர் அறிந்துகொண்டார். முதலாவதாக ஏதோ ஒரு வேகத்தில் வழக்குத் தொடுத்துவிட்டு பிரிந்து வாழும் கணவனும் மனைவியும் ஒரு பொது அமைப்பின் முன்னால் உரையாடும்போது தத்தம் குறைகளை உணர்ந்து மீண்டும் ஒன்றிணைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகத் தோன்றியது. அதற்கு மாறாக, எல்லா வழக்குகளையும் ஒரு பொது நீதிமன்றமே கவனிக்குமெனில் குறிப்பிட்ட குடும்பநல வழக்கு விசாரணைக்கு வருவதில் ஏற்படும் தாமதம் பல குடும்பங்களில் பிளவுக்கே வழிவகுக்கும். இதையெல்லாம் எண்ணிப் பார்த்த துர்காபாய் தாயகத்துக்குத் திரும்பியதும் தம் எண்ணத்தை நேருவிடம் பகிர்ந்துகொண்டார்.

இந்தியா போன்ற பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாட்டில் குடும்பநல வழக்குகளை விசாரிப்பதற்கென தனி நீதிமன்றங்களை ஏற்படுத்துவது நலம்பயக்கும் என எடுத்துரைத்தார். இது உயர்நீதிமன்றத்தின் பணிச்சுமையையும் உச்சநீதிமன்றத்தின் பணிச்சுமையையும் குறைக்கும் என்று சுட்டிக் காட்டினார். தேங்கிக் கிடக்கும் குடும்பநல வழக்குகள் விரைவில் முடிவுக்கு வரும்போது பல குடும்பங்கள் அமைதி பெறும் என்றார். அவர் கருத்தை நேரு ஏற்றுக்கொண்டார். ஆனால் அக்கருத்தையொட்டி விவாதிக்கப்பட ஒவ்வொரு முறையும் எந்த முடிவையும் எடுக்காமல் ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே இருந்ததால் காலதாமதம் ஏற்பட்டது. 1984இல்தான் துர்காபாயின் கருத்துருவை ஒட்டிய விவாதம் முடிவுக்கு வந்து குடும்பநல வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் ஏற்பட்டது.  துரதிருஷ்டவசமாக அந்த வெற்றியைக் காணாமலேயே நேருவும் மறைந்துவிட்டார். துர்காபாயும் மறைந்துவிட்டார்.

முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் பகுதியாக 1952இல் திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டபோது அதன்  உறுப்பினராகப் பணியாற்றும்படி துர்காபாயை நியமித்தார் நேரு. கல்வி, ஆரோக்கியம், மறுவாழ்வு, தொழில், சமூகசேவை ஆகிய துறைகள் சார்ந்து புதிய திட்டங்களை உருவாக்கும் குழுவில் அவர் இணைந்துகொண்டார். அத்தருணத்தில் அவர் ஆற்றிய அரும்பணிகள் பல.

நாட்டில் போதிய மருத்துவமனைகளோ மருத்துவர்களோ இல்லாத காலம் அது. அளவில் பெரிய நிலப்பரப்பும் எண்ணற்ற கிராமங்களும் கொண்ட இந்தியாவில் மருத்துவமனைகளை எல்லா இடங்களிலும் உடனடியாக உருவாக்குவது சாத்தியமில்லை. ஆனால் கிராம மக்களின் மருத்துவச் சேவைக்காக குறைந்தபட்சமாக செவிலியர்களை மட்டுமே விரைவில் உருவாக்க முடியும் என்று நினைத்தார் துர்காபாய். ஆனால் அப்போது செவிலியராக தேர்ந்தெடுப்பதற்கு குறைந்தபட்சமாக பள்ளியிறுதிப்படிப்பில் தேர்வடைந்திருக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது. நீண்ட பயிற்சிக்காலமும் இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில் உடனடியாக நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு கிராமத்தில் மருத்துவச்சேவையைப் புரிய மருத்துவச்சி என்னும் அடையாளத்துடன் புதிய பணியாளர்களை உருவாக்கலாம் என்றும் அவர்கள் எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும் என்றும் அவர் ஆலோசனை சொன்னார். ஏற்கனவே கஸ்தூர்பா அறக்கட்டளையின் உதவியோடு அங்கங்கே செயல்பட்டு வரும் ஆரோக்கிய மையங்களைப் போல மருத்துவச் சேவை மையங்களை உருவாக்குவது துர்காபாயின் கனவாக இருந்தது. நேருவுக்கும் அந்தத் திட்டம் பிடித்திருந்தது. ஆனால் அவையில் கருத்துரைத்த பலரும் அதற்கு எதிராகவே பேசினர். கல்வித்தகுதியைக் குறைப்பதை முன்னிட்டு நீண்ட நேரம் விவாதித்துக்கொண்டே இருந்தனர். சேவை செய்ய ஆளே இல்லாத சூழலில் கல்வித்தகுதியை ஒரு காரணமாகக் காட்டி இத்திட்டத்தை மறுப்பது அழகல்ல என்று முடிவாக எடுத்துரைத்தார் நேரு. இறுதியில் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அரசின் ஒப்புதலுக்குப் பிறகு மருத்துவச்சி பயிற்சி மையங்கள் நாடெங்கும் உருவாக்கப்பட்டன. ஐந்து கிராமங்களுக்கு ஒரு மருத்துவச்சி என்னும் அடிப்படையில் ஒன்றரை லட்சம் கிராமங்களுக்கு முப்பதாயிரம் மருத்துவச்சிகள் பயிற்சி பெற்று கிராமங்களில் ஆரோக்கிய மையங்களில் மருத்துவச்சேவைக்காக நியமிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து பத்து கிராமங்களுக்கு ஒரு செவிலியர் பணியும் உருவாக்கப்பட்டது.  இதன் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்ச மருத்துவ வசதி உறுதிசெய்யப்பட்டது. ஒவ்வொரு மருத்துவச்சியோடும் தொழிற்கல்வியைக் கற்பிக்கும் ஒரு ஆசிரியையும் சேர்ந்து செயல்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் கிராமப்புறப் பெண்களுக்கு கைத்தொழில்களில் பயிற்சியும் ஓய்வு நேரங்களில் படிக்கவும் எழுதவும் கற்பிக்கவும் வழிவகுக்கப்பட்டது.

 மாநிலங்களின் தலைநகரங்களாக உள்ள பெரும்பாலான நகரங்களில் எல்லா வசதிகளுடன் கூடிய பெரிய மருத்துவமனைகள் இருந்தன. ஆனால் மருத்துவத்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ளவும் வளர்ந்துவரும் மருத்துவத்துக்கு ஏற்ற வகையில் புதிய தகவல்களை புதிய மருத்துவர்கள் பயிற்சி பெறுவதற்கும் பொருத்தமான பயிற்சி நிலையம் என்பதே இந்தியாவில் இல்லை. எல்லா வசதிகளும் கொண்ட விரிவான ஒரு பயிற்சி நிலையத்தை தில்லியில் உருவாக்குவது வளர்ந்துவரும் இந்தியா போன்ற நாட்டுக்கு மிகவும் அவசியம் என்று திட்டமிட்டார் துர்காபாய். வழக்கம்போல அதற்கும் எதிர்ப்பு வந்தது. அதை மருத்துவமனை என நினைத்து ஒவ்வொரு மாநிலமும் அதை தன் மாநிலத்தில் நிறுவவேண்டும் என வாதாடியது. ஏற்கனவே சப்தர்ஜங் மருத்துவமனை உருவாகி வரும் சூழலில் தில்லியில் மற்றொரு மருத்துவ மனை தேவையில்லை என்றொரு கருத்தும் முன்வைக்கப்பட்டது. அந்தக் கனவுத்திட்டம் வெறும் மருத்துவமனை மட்டுமல்ல, மருத்துவத்துடன் கூடிய ஆய்வகமும் பயிற்சியகமும் கொண்ட நிலையம் என்பதை துர்காபாய் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்த வேண்டியிருந்தது. ஒரு முடிவை எட்ட முடியாத சூழலில் இறுதியாக திட்ட ஆணையமே தன் வரம்புக்குட்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த ஆய்வகத்தை தில்லியில் அமைக்க முடிவெடுத்தது.  அப்படித்தான் எய்ம்ஸ் எனப்படும் அனைத்திந்திய மருத்துவக் கழகம் உருவானது.

பெண்கல்வி சார்ந்து துர்காபாய் வகுத்தளித்த ஒரு திட்டமும் மிகமுக்கியமானது. ஒரு காலத்தில் காசி இந்து பல்கலைக்கழகத்தில் மட்டுமே இருந்த ஒரு கல்வி வசதி முறையை நாடெங்கும் செயல்படுத்தவேண்டும் என்று அவர் விழைந்தார். இளமையில் தமக்கு உதவியதுபோல நாட்டில் பல பெண்களுக்கு அத்திட்டம் பேருதவியளிக்கும் என அவர் கருதினார். பெண்களில் கல்விவாய்ப்பைத் தவறவிடுகிறவர்கள்  இருவகையினர். பெண்கல்வியைச் சுமையெனவும் வீண்செலவெனவும் நினைத்து பெற்றவர்களே தம் பெண்களைப் பள்ளிக்கு அனுப்பாததால் கல்வி வாய்ப்பு தவறிப்போவது ஒருவகை. மிகக்குறைந்த படிப்புக்குப் பிறகு வீட்டிலேயே நிறுத்திவைத்துக்கொள்வதால் கல்வி வாய்ப்பைத் தவறவிடுவது மற்றொரு வகை. படிப்பைத் தவறவிட்ட திருமணமான, திருமணமாகாத பெண்களும் விதவைப்பெண்களும் தனியாகப் படித்து மெட்ரிக் தேர்வு எழுதித் தேர்ச்சி பெறும் வகையில் ஒரு பொதுத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என விரும்பினார். பள்ளியில் நேரடியாகக் கிடைக்கும் கல்வியறிவை குறைந்த கால அவகாசத்தில் பயிற்சியளித்து வழங்கும் வகையில் ஒரு செயல்திட்டத்தை உருவாக்கி உதவித்தொகையுடன் கூடிய அப்படிப்பை நாடெங்கும் அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்தார். குறைந்தபட்ச கல்வித்தகுதியுடன் பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட இத்திட்டம் பெரிதும் உதவியது.

1959இல் முதல்முதலாக மகளிர் கல்வி தேசியக் கழகம் உருவாக்கப்பட்டபோது, துர்காபாயையே தலைமைப்பொறுப்பை ஏற்கும்படி செய்தார் நேரு. பெண்கள் படிக்கும் எல்லாக் கல்வி மையங்களிலும் கண்டிப்பாக விடுதி வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்னும் முக்கிய விதியை அப்போது அவர்தான் கொண்டுவந்தார்.

1962இல் நேரு தமக்களித்த எல்லாப் பொறுப்புகளையும் செவ்வனே நிறைவேற்றிய பிறகு மனநிறைவுடன் தில்லியிலிருந்து விடைபெற்று ஐதராபாத்துக்குத் திரும்பினார் துர்காபாய். இடைப்பட்ட காலத்தில் அவருடைய தாயின் முயற்சியால் ஆந்திர மகிளா சபா ஐதராபாத்திலும் ஒரு மையத்தைத் தொடங்கியிருந்தது. ஆந்திரத்திலேயே பத்துக்கும் மேற்பட்ட கிளைகள் உருவாக்கப்பட்டிருந்தன. தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, கல்லூரி, தொழிற்கல்வி, மருத்துவமனை, கைத்தொழில்கள் என எல்லா வசதிகளும் அந்த சபாவில் நிறைந்திருந்தன. சின்னஞ்சிறு அமைப்பாக தன் தாயுடன் இணைந்து அவர் உருவாக்கிய அமைப்பு பெரிய ஆலமரமாக விழுதுவிட்டு வளர்ந்திருப்பதைக் காண அவருக்கு நிறைவாகவே இருந்தது. சபாவுக்கு அருகிலேயே ஒரு வீட்டில் வசித்தபடி தன் இறுதிக்காலம் வரை அவர் மகளிருக்குத் தொண்டாற்றினார். Chintaman and I என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதை மிகமுக்கியமான ஆவணம்.

 

(கிராம ராஜ்ஜியம் – 15.03.2021 இதழில் வெளிவந்த கட்டுரை)