Home

Sunday 18 April 2021

கிஷண் மோட்வாணி - நினைவுச்சித்திரம்

 

                தமிழ்ச்சங்க நூலகத்தில் புத்தகங்களை மாற்றிக்கொண்டு ஏரிக்கரையோரமாக வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் பாதையோரமாக பலவிதமான மரபொம்மைகள் பரப்பிவைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து சில நிமிடங்கள் நிற்க நேர்ந்தது. ஒரு குளிர்சாதனப்பெட்டியின் உயரமிருந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்திலிருந்து அலைபேசி உயரத்துக்கு கைக்கு அடக்கமான நடனக்காரி சிற்பம்வரை ஏராளமாக அடுக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான சிற்பங்களுக்கு அரக்குவண்ணம் பூசப்பட்டிருந்தது. ஒருசில சிற்பங்களுக்கு வண்ணமே இல்லை. 

                அர்த்தநாரீஸ்வரர்  சிற்பம் மிகப்பெரிய கூடமொன்றின் அல்லது வணிகவளாகமொன்றின் நடுவில் வைக்கப் பொருத்தமான ஒன்று. குழலூதும் கண்ணன் சிற்பத்தை வீட்டிலேயே பார்வையாளர் அறையில் நிறுத்தலாம்.  விதவிதமான நடனமங்கையர் சிற்பங்களை நீண்ட நடையுள்ள வீட்டில் தள்ளத்தள்ளி நிறுத்தலாம். ஈட்டி தாங்கிய காவல்காரன் சிற்பம் மாடிப்படியோரம் நிறுத்த பொருத்தமானது. பூவேலைப்பாடும் மங்கையொருத்தி குளமொன்றில் தண்ணீரெடுத்து திரும்புவதுபோன்றதுமான புடைப்புச்சிற்பம் சுவரில் பதிக்கத்தக்க ஒன்று.  காட்சித்தட்டுகளில் அடுக்கத்தக்க நாய்க்குட்டிகள், மான்கள், பூக்கள், தலைப்பாகை சுற்றிய மீசைக்கார இளைஞர்கள் என இன்னும் ஏராளமான சின்னச்சின்ன சிற்பங்கள் கண்களைக் கவர்ந்தன. இவை எல்லாவற்றையும்விட என்னைக் கவர்ந்தவை அழகான குடுவைச்சிற்பங்கள். பழச்சாறுப்புட்டி அளவுக்குக் குட்டையான குடுவைமுதல் மேசையின் உயரத்துக்கு இணையான குடுவைவரை பலவிதமான அளவுகள்.  அவற்றின் பொதுஅம்சம் என்பது அடிப்பகுதியிலும் வாய்ப்பகுதியிலும் சிறுத்து இடைப்பகுதிமட்டும் பருத்திருப்பதுமட்டுமே.  இடைப்பகுதி பருமனிலும் வாய்ப்பகுதியிலும் கலைஞர்கள் காட்டியிருந்த ஆச்சரியமான வேலைப்பாடுகளில் வெளிப்பட்ட கலைத்தன்மை வசீகரம் மிகுந்ததாக இருந்தது.

                "பேக்கேன்றீ சாப்?" இந்திச் சாயலோடு கூடிய கன்னடக் கேள்வியோடு நடுவயதுள்ள ஒருவர் என்னை நெருங்கினார். நல்ல உயரம். பல மடிப்புகளைக்கொண்ட தலைப்பாகை அவரை மேலும் உயரமாகக் காட்டியது. பீடி ஒன்றை வேகமாக இழுத்துக்கொண்டிருந்தார்.

                "பாக்கறதுக்கு ரொம்ப அழகா கண்காட்சியில பாக்கறமாதிரி இருக்குது. ஒன்னொன்னயும் செய்ய எவ்வளவு நாளாவும் ஒங்களுக்கு?" என் பாராட்டுகளை நான் இந்தியிலேயே அவருக்குத் தெரியப்படுத்தினேன். அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. "எது புடிக்குது சொல்லுங்க சாப். வெல கொறச்சி தரேன் என்றார். அழகா இருக்குதே பாக்கலாம்னுதான் நின்னேன். வாங்கற  நிலைமை இப்ப இல்ல" என்று இழுத்தேன் நான். "பாருங்க, பாருங்க சாப்,  பத்து பேரு திருப்பித்திருப்பி பாத்தாதான ஒரு ஆளாவது வாங்குவாங்க" சொல்லிக்கொண்டே தோளில் இருந்த துணியை உதறி குனிந்து ஒவ்வொரு சிற்பமாக துடைக்கத் தொடங்கினார். "எத்தன தரம் தொடச்சாலும் தூசி படிஞ்சிகிட்டே இருக்குது சாப்"

வரிசையின் மற்றொரு பக்கத்தில் சற்றே சிறிய மரக்கட்டைமீது உட்கார்ந்தபடி வேறொரு மரக்கட்டையை சீவிக்கொண்டிருந்தார் இன்னொருவர். இரண்டு சிறுவர்களும் நாலைந்து இளைஞர்களும் பக்கத்தில் நிழலான இடத்தில் மரத்துண்டுகளை சீவிக்கொண்டிருந்தார்கள். வெவ்வேறு அளவிலான சின்னச்சின்ன மரத்துண்டுகள் ஏராளமாக குவிந்திருந்தன. அக்குவியலுக்குப் பின்னால் இரண்டு கூடாரங்கள். ஒரு கூடாரத்தில் தயார் நிலையில் உள்ள புதிய சிற்பங்கள். இன்னொரு கூடாரத்தில் சுருட்டிவைக்கப்பட்டிருந்த அவர்களுடைய படுக்கைகள். இரண்டு கூடாரங்களையும் இணைத்துக்கட்டிய கயிற்றில் வேட்டி, சட்டைகள், பைஜாமா, துண்டுகள் உலர்ந்துகொண்டிருந்தன. காற்றில் பறந்துவிடாதபடி க்ளிப் மாட்டப்பட்டிருந்தது.

                "சாதாரணமா ஒரு நாளைக்கி எத்தன பொம்மைங்க செய்வாங்க? "

                "இத்தனன்னு நிச்சயமா ஒன்னும் கெடையாது சாப். மூனும் செய்யலாம். நாலும் செய்யலாம். எதுவுமே செய்யாமலும் உக்காந்திருக்கலாம. செய்யறதெல்லாம் விக்கணும் சாப். வித்து பணம் கெடைக்கறத பாத்தாதான் உற்சாகம் வரும் சாப்....." விரக்தி படிந்த குரலில் குனிந்தபடி பதில் சொன்னார்.

                "இந்த மான் ரொம்ப அழகா தத்ரூபமா இருக்குது.  உண்மையாவே பக்கத்துல வந்து நிக்கறதப்போல தோணுது"  பக்கத்தில் இருந்த மானைக் காட்டிச் சொன்னேன்.

                "அது நான் செஞ்சது. அறநூறு ரூபாதான். எல்லாரும் வெலகேட்டு போறாங்களே தவிர யாரும் வாங்கமாட்டறாங்க.  யாராவது நானூறு குடுத்தாகூட போதும், இன்னிக்கு குடுத்துருவேன். ஒங்களுக்கு வேணுமா?

                விற்பனையை ஒட்டியே அவர் மனம் ஓடிக்கொண்டிருந்தது. அதிக நேரம் பேச விருப்பமில்லாதவராகவே தன்னைக் காட்டிக்கொண்டார்.   பெயரைக்கூட அப்போது அவர் சொல்லவில்லை. தற்செயலாக அதற்கடுத்த வாரத்தில் புதுவீடு கட்டி குடித்தனம் போன நண்பரொருவர் வீட்டு முகப்பறையில் உள்ள காட்சி அடுக்குகளில் வைக்கப் பொருத்தமான பொம்மைகளை வாங்குவதற்குப் பொருத்தமான கடைக்குச் செல்லவேண்டும் என்றார். எனக்கு உடனே அந்த ஏரிக்கரை பாதையோரக் கடைதான் நினைவுக்கு வந்தது. சொன்னேன். ஆனால் நண்பருடைய முகத்தில் ஒருவித தயக்கம் தென்பட்டது. "அவுங்ககிட்டல்லாம் பேரம் பேசித்தானே வாங்கமுடியும். ஆனவில குதிர வில சொல்வாங்களே. ஃபினிஷிங் எப்படி இருக்குமோ தெரியாது. நல்ல கடையையே தேடி போலாமே" என்றார் நண்பர்.  நேரில் பார்த்தால் அவருடைய எண்ணங்களையெல்லாம் மாற்றிக்கொள்ள நேரிடும் என்றும் அந்த அளவுக்கு அழகழகான பொம்மைகள் அங்கே உண்டு என்றும் சொல்லி ஏற்றுக்கொள்ள வைத்தேன். அன்று சாயங்காலமே அவரை அங்கே அழைத்துச் சென்றேன்.

                எங்கள் தேவையைச் சொன்னதும் பெரியவர் உற்சாகமாக மரச்சிற்பங்களையும் பொம்மைகளையும் எடுத்துக்காட்டத் தொடங்கினார்.   பக்கத்தில் நின்றிருந்த பையனிடம் சொல்லி கூடாரத்துக்குள் வைக்கப்பட்டிருந்த பெட்டியொன்றை எடுத்துவரச் சொன்னார்.  அதற்குள் இன்னும் வெவ்வேறு வகையான கண்ணைப் பறிக்கும் பொம்மைகள் இருந்தன.  பொருத்தமான நிறக்கலவையைக் கொண்ட பெண்பொம்மைகள். ஆண்பொம்மைகள். விலங்கு பொம்மைகள். கிளி, குருவி பொம்மைகள்.  நண்பருக்கு சொல்லமுடியாத அளவுக்கு மகிழ்ச்சி.  "போதும் போதும் இதுங்கள கொண்டும்போயி வச்சாலே ஷோ கேஸ் களகட்டிடும்" என்றார். குழலூதும் கிருஷ்ணனும் கணமயங்கிய ராதையும் சேர்ந்திருந்த சிற்பத்தைக் காட்டி முகம்மலர்ந்தார். மீராவின் சிற்பத்தை எடுத்து நெடுநேரம் பார்த்துவிட்டு வைத்தார். எல்லா வகைகளிலும் ஒவ்வொன்றை எடுத்து தனியே வைத்துவிட்டு பிறகு அக்குவியலிலிருந்து தனக்கு மிகவும் பிடித்தமானவற்றை பிரித்fதெடுத்தார். மொத்தமாக நாலாயிரம் ரூபாய் கேட்டார் பெரியவர். நண்பரும் அவரும் பேசிக்கொண்டார்கள். நண்பர் புதுவீட்டைப்பற்றியும் மனைவியும் பிள்ளைகளும் ஆசைப்படுவதைப்பற்றியும்  சொன்னார். "படா ஐடம் செய்லாம் சாப். சோட்டா ஐடம் கஷ்டம் சாப். இதுலதான் நெறயா காம் சாப்..." என்று பொம்மையை உருவாக்குவதில் உள்ள சிரமங்களை எடுத்துச் சொன்னார் பெரியவர்.  பேச்சுவார்த்தை இறுதியாக மூவாயிரம் ரூபாயில் முடிந்தது. பணத்தை வாங்கிக்கொண்டதும் அவருடைய ஆட்கள் பொம்மைகளை அட்டைப் பெட்டிக்குள் அடுக்கினார்கள். பாதுகாப்புக்காக பெட்டியின் அடியிலும் மேற்புறத்திலும் வைக்கோலைப் பரப்பினார்கள். நான்கு அட்டைப்பெட்டிகள் நிரம்பின.  பெட்டிகளையும் நண்பரையும் ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்டு வீட்டுக்கு நான் நடக்கத் தொடங்கினேன்.

                இப்படி இரண்டுமூன்று சந்தர்ப்பங்களில் தொடர்ந்து பார்த்துப் பழகியபிறகுதான் சற்றே கலகலப்பாகப் பேசத் தொடங்கினார் பெரியவர். அதன்பிறகுதான் அவர் பெயர் கிஷன் மோட்வாணி என்றும் ஆஜ்மிர் பக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் சொன்னார். அடுத்தடுத்த சந்திப்புகளில் பல விவரங்களைத் தெரிந்துகொண்டேன்.

                கிஷன் மோட்வாணிக்கு பெங்களூரே பிடிக்கவில்லை.  அல்சூர் ஏரியை சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஏரியைப் பாதுகாக்கும் விருப்பம் மக்களுக்கும் இல்லை, அரசாங்கத்துக்கும் இல்லை என்று வருத்தமாச் சொன்னார். தன் ராஜஸ்தானில் உள்ள புஷ்கார் ஏரிக்கு நிகரான ஒரு ஏரி இந்தியாவிலேயே இல்லை என்று மார்தட்டிக்கொண்டார். நைனிடால் ஏரிக்கு அழகு இருக்கலாமே தவிர, புஷ்கார் ஏரிக்கு உள்ள பெருமை இல்லை என்று வாதித்தார். நான் அந்த எரியைப் பார்த்திருக்கிறேன் என்பது அவருக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

                "பிரம்மாவே நேரா வந்து உக்காந்து பூச செஞ்ச ஏரி அது.  விஸ்வாமித்திரர் கூட அங்கதான் தவம் செஞ்சாரு. ஊரவிட்டு வந்ததுல எங்களுக்கு கஷ்டமில்ல சாப்.  எங்க புஷ்கார்ல முழுக்கு போடறதுக்கு முடியாம போனதுதான் ரொம்ப கஷ்டம். உலகத்தயே சுத்தனாலும் கார்த்திக் மாசம் ஊருக்கு போயிடுவம் சாப். ஒரு ரெண்டு மாசம் குடும்பத்தோட தங்கியிருந்து சாமி பாத்து திருழாவுல கலந்துகிட்டு ஏரில தெனமும் முழுக்கு போட்டு சந்தோஷமா இருந்துட்டு வருவம்.  புஷ்கார்ல குளிச்சா எல்லா பாவத்துக்கும் பரிகாரம் கெடச்சிரும்  சாப்."

                ஏரியைப்பற்றி பேசச் சொன்னால் நாள்முழுக்க சலிக்காமல் பேசக்கூடியவராக காணப்பட்டார் மோட்வாணி. பெருமை மிகுந்த ஏரிக்கரையோரம் வசிக்கிற நல்வாய்ப்பை தனது தலைமுறை இழந்துவிட்டதில் மிகுந்த வருத்தம் அவரிடம் தென்பட்டது.  மோட்வாணிக்கு சிற்பம் செய்வது குடும்பத்தொழில். அவருக்குச் சொந்தமாக நாலைந்து ஏக்கர் வயலுண்டு. கோதுமை விளையும் வயல்கள். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக சாகுபடி சரியாக அமையவில்லை.  ஒருமுறை பயிர்கள் அளவற்ற வெயிலில் வாடிக் கரிந்துபோயின. இன்னொரு முறை பழுதான பண்ணைவிதைகளை விதைத்து வளர்ந்த பயிரில் பூவே விடாமல் சாவியாகப் போய்விட்டது. மற்றொரு முறை தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. அதற்கடுத்த முறை அதீதமான பனியில்  வீணாகி அரையும் காலுமாகத்தான் அறுவடை செய்யமுடிந்தது. ஒவ்வொரு முறையும் ஏராளமான தொகை நஷ்டம். வங்கியில் வாங்கிய கடனுக்கு பாதி வயல்வெளியை எழுதிவைக்கவேண்டியதாயிற்று. மோட்வாணியைப்போல பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஏராளம். பிழைக்க வழியில்லாத நிலையில் ஊரைவிட்டு வெளியேறினார்கள் அவர்கள்.  கொஞ்சம் பேர் வடக்குப் பக்கம் போனார்கள்.   இன்னும் கொஞ்சம்பேர் நாக்பூர் பக்கம் சென்றார்கள். 

                கிஷண் மோட்வாணியின் குடும்பம் மிகப்பெரியது.  அவர்தான் பெரியவர் நான்கு தம்பிகள். இரண்டு தங்கைகள். கூட்டும்குடும்பம். எங்க ஊடு கல்யாண மண்டபம்போல இருக்கும் சாப் என்று சொன்னபோது மோட்வாணியின் குரல் உடைந்துவிட்டது. பல நொடிகள் பேச்சே வராமல் தரையையே பார்த்தார்.  சிறிது காலம் பசுக்களின் பாலை விற்று சாப்பாட்டுச் செலவை ஈடுகட்டினார்கள். தீவனத்துக்கு வழியில்லாதபோது பசுக்களையே விற்கும்படி ஆயிற்று. பிறகு தோட்டத்தில் நின்ற மரங்களை வெட்டி விற்றார்கள். வெட்டப்பட்ட ஒரு மரத்துண்டில் நேரம் கழிவதற்காக தற்செயலாக ஒரு பொம்மையைச் செய்தார் மோட்வாணி. செய்துமுடித்த பிறகுதான் அதையும் விற்றுப் பணமாக்கும் எண்ணம் உதித்தது. எப்போதோ நிறுத்திவைக்கப்பட்ட குடும்பத்தொழில் மறுபடியும் தொடர்ந்தது. உறுப்பினர்கள் அனைவரும் உட்கார்ந்து பத்துபதினைந்து நாட்களில் ஏராளமான சிற்பங்களை செய்துமுடித்தார்கள். ஆஜ்மீருக்கும் புஷ்கார் ஏரிக்கும் சென்று சுற்றுலாப் பிரயாணிகளிடம் விற்றார்கள். அந்தப் பணத்தில் சிறிது காலம் கடந்தது. எண்ணிக்கையில் ஏராளமான ஆட்களைக் கொண்ட குடும்பத்துக்காக கடுமையான உழைப்பு தேவைப்பட்டது.  வீட்டுப் பெண்களுக்கு காவலாக கடைசிச் சகோதரனைமட்டும் நிறுத்திவிட்டு மற்ற நான்கு சகோதரர்களும் மைத்துனர்களும் ஆளுக்கொரு திசையில் சென்றார்கள்.  ஜெய்ப்பூர், உதய்ப்பூர் என ராஜ்ஸ்தான் எல்லைக்குள்ளேயே ஒரு கூட்டம் சுற்றியது. பூனா, மும்பை பக்கம் இன்னொரு கூட்டம் சென்றது.  பெல்காம் பக்கத்தில் ஒரு கூட்டம் இறங்கிக்கொண்டது. கிஷண் மோட்வாணி பெங்களூர் வந்துவிட்டார்.  கார்த்திகை மாதத்துக்கு முன்னும் பின்னுமாக இரண்டு மாதங்கள் எல்லாருமே வியாபாரத்தை நிறுத்திவிட்டு ஊருக்குத் திரும்பிவிடுவார்கள்.  ஓர் ஆண்டில் இரண்டு மாதங்கள்மட்டுமே ஊர்வாசம். திருவிழா பார்ப்பார்கள். புஷ்கார் ஏரியில் குளித்து பூசை செய்வார்கள்.  மனைவி பிள்ளைகளோடு ஆனந்தமாக இருப்பார்கள்.  பிறகு வீட்டுப் பெண்கள் ஆண்டுமுழுதும் செய்துவைத்திருந்த மண்பொம்மைகளையும் மரச்சிற்பங்களையும் பெட்டிகளில் அடுக்கியெடுத்துக்கொண்டு புறப்பட்டுவிடுவார்கள்.

                மீரா பொம்மை செய்வதில் தன் மகள் திறமைசாலி என்பதில் மோட்வாணிக்குப் பெருமை. அவளுக்கு விரைவில் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்பது அவர் ஆசை.  ஒரு திருமணம் என்பது மூன்றுநாட்கள் நீளும் சடங்கு.  செலவுக்கு ஏராளமாக பணம் வேண்டும். கடுமையான சிரமங்கள் இருந்தபோதும் கல்யாணச்செலவில் கஞ்சத்தனம் காட்டக்கூடாது. இனத்துக்கே அது பெரிய கேவலமாகிவிடும். ஊர் கௌரவமே அந்தக் கல்யாணத்தில்தான் இருக்கிறது. இந்த ஆண்டுக்குள் அல்லது அடுத்த ஆண்டுக்குள் அவளை கரையேற்றிவிட்டால் முக்கியமான கடமையொன்று முடிந்துவிடும் என்றார் மோட்வாணி.

                கிறிஸ்துமஸை ஒட்டி நண்பரொருவர் தேவாலயத்துக்கு வருகிற பிள்ளைகளுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கான பொம்மைகளை எங்கே வாங்கலாம் என்று ஆலோசனை கேட்டார். அவரை மோட்வாணியிடம் அழைத்துச் சென்றேன். வெள்ளையுடுத்திய தேவதைப் பொம்மைகளும் ஏசு பொம்மைகளும் விலங்கு, பறவை பொம்மைகளும் ஏராளமாக இருந்தன. நண்பர் தேர்ந்தெடுத்து வாங்கிக்கொண்டார்.  பணியிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் எங்கள் உயர் அதிகாரிக்காக நினைவுப்பரிசொன்றை தேர்ந்தெடுத்து வாங்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டதை ஒட்டி அதே மாதத்திலேயே இன்னொரு முறை சென்றேன்.  ஒரு தாய் தன் மடியில் குழந்தையோடு உட்கார்ந்திருக்கும் பொம்மையொன்றை தேர்ந்தெடுத்து வாங்கிவந்தேன்.

                ஒரு சந்திப்பில் மோட்வாணியின் முகம் மிகவும் வாட்டமடைந்திருந்தது.  மிகவும் வற்புறுத்திக் கேட்டபிறகுதான் மெதுவாகச் சொல்லத் தொடங்கினார்.  போலீஸ்காரர்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டதாகச் சொன்னார்.  பத்மாஷ் லோக், பேஇமான் லோக் என்று திட்டித்திட்டி ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.  அந்த மாதத்தில் நான்கு முறை வந்துவிட்டார்களாம். ஒவ்வொரு முறையும் கையில் இருக்கிற பணத்தைப் பிடுங்கிக்கொண்டு போய்விடுகிறார்களாம்.  கொடுத்த நூறு ரூபாய் நோட்டை வாங்கிக் கசக்கி அவன் முகத்திலேயே வீசி எறிந்துவிட்டு "எங்கள என்ன பிச்சைக்காரங்கன்னு நெனச்சிட்டியா?" என்று கேட்டுவிட்டு அறைந்தார்களாம். "நாங்கமட்டும் என்ன பிச்சைக்காரங்களா, இப்படி தொல்ல குடுக்கறிங்களே?" என்று பதிலுக்கு கேட்டாராம் மோட்வாணி.  அந்தக் கேள்வி வந்தவனை எங்கோ தைத்துவிட்டது போலும். கையிலிருந்த லத்தித்தடியால் தொடையிலேயெ ஐந்தாறு அடிகள் அடித்துவிட்டானாம். மற்ற வேலைக்காரர்கள் ஓடிவந்து கெஞ்சிப் பேசி தடுத்து காப்பாற்றினார்களாம். "ஸ்டேஷனுக்கு நடங்கடா" என்று எல்லாரையும் நெட்டித் தள்ளினாராம் காவலர். "கம்பி எண்ணினாத்தான்டா ஒங்களுக்கு புத்தி வரும். ஊருவிட்டு ஊரு வந்து பொழைக்கற நாய்க்க்கே இவ்வளவு கொழுப்பு இருந்தா இதே ஊரு தண்ணி குடிச்சிட்டு வளர்ர எனக்கு எவ்வளவு இருக்கும்?" என்று மறுபடியும் அடித்தாராம்.  அதிகார மிடுக்கு குறையாமலேயே ஐந்நூறு ரூபாயை வாங்கிக்கொண்டு போனாராம். ஒரே மாதத்தில் நான்கு முறை வந்து பிடுங்கிக்கொண்டு போனால் பிழைப்பது எப்படி என்று வருத்தத்துடன் கேட்டார்.

                இந்தியா முழுக்க போலீஸ்காரர்கள் ஒரேமாதிரியான சுபாவத்தோடுதான் இருக்கிறார்கள் என்றார் மோட்வாணி. ஆஜ்மீரில் கண்ணால் பார்த்த சம்பவமொன்றைச் சொன்னார்.  ஒருநாள் வியாபாரத்தை முடிக்கிற நேரத்தில் மழை பொழியத் தொடங்கிவிட்டதால் அன்று கிராமத்துக்குத் திரும்பாமல் மற்ற விற்பனையாளர்கள் தங்கியிருந்த பாதையோரக் கூடாரங்களுக்கு அருகில் இருந்த கடைத்திண்ணையொன்றில் படுத்துக்கொண்டார். நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் ஏதோ கூச்சல் கேட்டு எழுந்தார்.  ஒரு போலீஸ் வாகனம் நின்றிருந்தது.  இரண்டு போலீஸ்காரர்கள் ஒரு கூடாரத்தின் வாசலில் சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.  ஸ்டேஷனுக்கு இரண்டு பெண்களை அனுப்பச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். அவர்களைத் தடுக்கவே முடியவில்லை.  நினைத்தபடி பெண்களை அழைத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பறந்துவிட்டார்கள். அதிகாலை இருள் பிரிவதற்கு முன்பாக மறுபடியும் வாகனம் வந்து பெண்களை இறக்கிவிட்டுச் சென்றது.  முக்காடு போட்டு முகத்தை மூடியபடி வேகவேகமாக ஓடிவந்த பெண்கள் கூடாரத்துக்குள் புகுந்த காட்சி ஆழமாக மனத்தில் பதிந்துவிட்டது என்றார்.  எந்தக் காரணத்தை முன்னிட்டும் தன் வீட்டுப் பெண்களை கடைத்தெருப் பக்கமாக அழைத்துவருவதில்லை என்னும் முடிவை அப்போதுதான் எடுத்ததாகச் சொன்னார். "பணத்துக்கும் பொம்பளைக்கும் நாயவிட கேவலமா அலையறாங்க சாப்."

                அன்பளிப்புப் பொம்மைகளையும் சிற்பங்களையும் சகாயவிலையில் மோட்வாணி கொடுக்கிற  செய்தி அலுவலக நண்பர்களிடையே பரவலாகப் பரவிவிட்டது.  புதுவீடு குடித்தனம் போகிறவர்கள், நவராத்திரி கொண்டாடுகிறவர்கள், திருமணம், ஆண்டுவிழா, வெற்றிவிழா,  விளையாட்டுவிழா, மனமகிழ்மன்ற விழா ஏற்பாடு செய்கிறவர்கள் என பொம்மைகள் தேவைப்படும் கூட்டம்  அதிகரிக்கத் தொடங்கியது. ஓர் ஆண்டில் குறைந்தது ஐந்தாறு சந்தர்ப்பங்களில் அப்படிப்பட்ட வியாபாரம் அமையும்.

                ஒருமுறை இலையில் சுருட்டிய மாவைக் கொடுத்து சாப்பிடச் சொன்னார்.  கோதுமை மாவை வறுத்துச் சலித்து ஏராளமான  இனிப்புப் பொருட்களை திட்டமிட்டு கலந்து செய்யப்பட்ட ஒருவகையான எளிய இனிப்பு.  கிட்டத்தட்ட பொறிவிளங்காய் உண்டை சாப்பிடுவதைப்போல இருந்தது. இனிப்பில் என் கண்கள் மலர்ந்ததைக் கண்டு மோட்வாணி இன்னும் கொஞ்சம் அள்ளிவைத்து "சாப்டு சாப்" என்றார்.  சொல்லிக்கொண்டே இரண்டு கைகள் அள்ளி வைத்துவிட்டார்.  முடித்ததும் சூடான பாலில்லாத தேநீர் தந்தார்.  உரையாடலை முடித்துக்கொண்டு கிளம்பும்போதுதான் "என் பொண்ணுக்கு பொறந்தநாளு சார் இன்னிக்கு" என்றார்.  "இருபத்திஒன்னு முடிஞ்சி இருபத்திரெண்டு தொடக்கம் சாப். இந்த வருஷத்திலாவது கல்யாணத்த முடிச்சிரணும் சாப்" என்றார்.  எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.  மனம் குழைந்தது.  "ஒரு கவலயும் வேணாம் மோட்வாணி. எல்லாம் நல்லபடியா நடக்கும்" என்று தோளைத் தொட்டுச் சொன்னேன்.  அவர் மனம் குவிந்த புள்ளியிலிருந்து சற்றே விலகி வருவதற்காக "பையன முடிவுபண்ணிட்டீங்களா மோட்வாணி?" என்று கேட்டேன்.  "தயாராய்ருக்கான் சாப். ஜெய்ப்பூர் பக்கம் சொந்தமா கட வச்சிருக்கான். கட்டிக்குடுத்துட்டா நம்ம பாரம் எறங்கும்" என்றார்.  பிறகு நகைகள், பாத்திரங்கள், துணிமணிகள், வரதட்சணை, சடங்குகள், செலவு என எங்கெங்கோ சென்று இறுதியாக பேச்சு ஒரு முடிவுக்கு வந்தது.

                "எல்லாருக்கும் வாங்கித் தரீங்களே சாப். நீங்க ஏன் வாங்க மாட்டறிங்க?" ஆச்சரியமாக ஒருமுறை கேட்டார் மோட்வாணி. அன்பளிப்புகளை பெரும்பாலும் புத்தகங்களாக நான் கொடுத்துவிடுவதாகச் சொன்னேன்.

                "வீட்டுக்கு?"

                ஒருகணம் அவரை நிமிர்ந்து பார்த்தேன். "என் பையனுக்கு யான பொம்மதான் ரொம்ப புடிக்கும். உங்ககிட்ட அது  இல்லயே"

                அவருக்கே அது ஆச்சரியமாக இருந்தது.  "மான், புலி, சிங்கம்லாம் இருக்குது. யான இல்லயே. யாராச்சிம் இப்படி சொன்னாத்தானே தெரியும்...." இயலாமை தொனிக்கும் பார்வையோடு அவர் என்னைப் பார்த்தார்.  சட்டென குனிந்து ஒரு வினாயகர் பொம்மையை எடுத்து  "இத வச்சிக்க சாப். இவரும் ஒருவகையிகல பாதி யானதான?" என்று சிரித்தார்.  நான் புன்னகையோடு மறுத்தேன்.  "அடுத்த தரம் ஊருலேருந்து திரும்பும்போது உங்களுக்கு ஒரு யானயோடு வரேன் சாப்" என்றார். பிறகு பையனுக்கு என்ன வயசு என்று கேட்டார்.

                "இருபத்தி ஒன்னு."

                "அட, கிட்டத்தட்ட நம்ம பொண்ணு வயசுதான். ஒரு நாளைக்கி இந்தப் பக்கமா கூட்டி வா சாப். அவன பாக்கலாம்."

                "நிச்சயமா."

                சொல்லிவிட்டு வந்தேனே தவிர அவனை அழைத்துச் செல்வது அவ்வளவு எளிய செயலாக இல்லை.  ஒவ்வொரு ஞாயிறு அன்றும் நூலகத்துக்குக் கிளம்பும் வேளையில் அவனுக்கு வேறு ஏதாவது வேலை இருந்தது.  பாடத்தில் ஏதோ சந்தேகம் என்ற நண்பர்கள் யாராவது அவனைத் தேடி வந்துவிடுவார்கள்.  அல்லது இவனே மற்றவர்களைத் தேடிச் சென்றுவிடுவான்.  ஸ்பெஷல் க்ளாஸ் என்று கல்லூரிக்குச் சென்றுவிட்டான் ஒருமுறை.  "பி.வி.ஆர்.ல சக்தே இந்தியா போட்டிருக்கான்பா. நாங்க பத்துபேரு செட்டா போறோம். இன்னிக்கு பாத்து கூப்புட்டா எப்படிப்பா?"  என்றான் இன்னொருமுறை.  ஒவ்வொரு முறையும் மோட்வாணிக்கு அவன் சொன்ன காரணத்தையே விரிவாக்கிச் சொல்லவேண்டியதாக இருந்தது.  அவர் நம்பினாரா நம்பவில்லையா என்பது எனக்குத் தெரியவில்லை.  நாலைந்து வாரங்களுக்குப் பிறகு கேட்பதையே நிறுத்திவிட்டார்.  பேச்சோடு பேச்சாக நான்தான் சொல்லிக்கொண்fடிருந்தான். "இருக்கட்டும் இருக்கட்டும்" என்று அவரும் தலையாட்டிக்கொண்டார்.  எனக்குள் பெருகிய குற்ற உணர்ச்சியை எப்படி சொல்லி புரியவைப்பது என்றே தெரியவில்லை.

                அவருடைய அக்டோபர் பயணம் நெருங்கி வந்தது.  ஊருக்கு கிளம்புவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துமுடித்துவிட்டார்.  "இந்த தரம் உங்களுக்கு யானபொம்ம கட்டாயமா எடுத்தாரேன் சாப்" என்று சிரித்தார்.  "பொண்ணு கல்யாணத்த மொதல்ல நடத்துங்க மோட்வாணி. யானய அப்பறமா பாத்துக்கலாம்" என்றேன்.  அந்த வார இறுதியில் கூடாரங்களைக் காலி செய்துவிட்டு அவர்கள் கிளம்பிச் சென்றார்கள்.

                அவர் இல்லாத இரண்டு மாதங்களிலும் நூலகத்திலிருந்து திரும்பும்போது கூடாரங்கள் இருந்ததற்கான அடையாளங்களாக தனித்துத் தெரியும் செவ்வகப் பரப்புகளைப் பார்த்ததுமே  மோட்வாணியின் முகம் நினைவில் வந்துபோனது.  அவர் மகள் திருமணம் முடிந்திருக்கும் என்று தோன்றியது.

டிசம்பர் கடந்தும்கூட அவர் வரவில்லை.  வாரங்கள் நகர்ந்தன.  முக்கியமான குடும்ப வேலை தடுத்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

                பொங்கலைக் கொண்டாடுவதற்காக விடுப்பெடுத்துக்கொண்டு ஊருக்குச் சென்று திரும்பிய பிறகு இரண்டு வாரங்கள் நூலகம் செல்லவே நேரமில்லாமல் போய்விட்டது. பிறகு வந்த ஒரு விடுப்புநாளில் அந்தப் பக்கம் சென்றேன்.  நூலகத்திலிருந்து படியிறங்கும்போதே தொலைவில் கூடாரங்கள் தென்பட்டன.  ஏதோ ஒரு வகையில் நிம்மதி மனத்தில் படர்ந்தது.  மோட்வாணியைச் சந்தித்ததும் கேட்கப்போகும் செய்திகளைப் பட்டியலிட்டபடி வேகவேகமாக நடந்தேன்.  பொம்மை வரிசைகள் பார்வைக்கு நன்றாகத் தெரிந்தன. வெள்ளைச் சட்டடையணிந்த முதுகுப்பக்கம்தான் எனக்குத் தெரிந்தது. "மோட்வாணிஜி...." என்று வேகமாக அழைத்தபடி அருகில் சென்று நின்றேன்.  ஆனால் திரும்பியவர் மோட்வாணி அல்ல. வேறு யாரோ.  அதிர்ச்சியில்  ஒருகணம் தடுமாறினேன். அப்போதுதான் பக்கத்தில் நின்றிருந்த உதவியாட்களும் புதியவர்களாக இருப்பதைக் கவனித்தேன். அதற்குள் அவர் "க்யா....க்யா? என்று மூன்றுமுறைகள் கேட்டுவிட்டார்.

                "மோட்வாணின்னு பொம்ம விற்கறவரு இதுக்கு முன்னால இங்க இருந்தாரு. அவரோன்னு நெனச்சிட்டேன்" என்று இழுபட்டது என் குரல்.  அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார்.  மோட்வாணியைப்பற்றி எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். அவருக்கு எந்தத் தகவலும் தெரியவில்லை.  உதட்டளவில் பிதுக்கினார்.  பிறகு "பாருங்க சாப். புதுப் பொம்மைங்கதான். வெல கொறச்சித் தரேன். எதுவேணும் கேளு சாப்" என்று என் முகத்தைப் பார்த்தார். நான் தலையசைத்துவிட்டு ஏரிக்கரையோரமாக நடக்கத் தொடங்கினேன்.  ஒரு கணம் அல்சூர் ஏரி புஷ்கார் ஏரியைப்போலவே என் கண்களுக்குத் தெரிந்தது.

(வடக்கு வாசல், 2010)