Home

Monday 19 April 2021

வெள்ளம் - சிறுகதை

 

     அடித்துச் செல்லும் ஆற்றுவெள்ளத்தில் மூச்சுத்திணறி மூழ்கிக்கொண்டிருப்பதுபோல கனவுகண்டு திடுக்கிட்டு விழித்தெழுந்தான் சூரபுத்திரன். குகைக்குள் அடர்ந்திருந்த இருட்டையே சில கணங்கள் உற்றுப் பார்த்தான். வெளியே குயிலோசை கேட்டது. மூச்சுவாங்க உடல்வேர்வையைத் துடைத்தபடி எழுந்து உட்கார்ந்தான். கல்தரை சில்லிட்டிருந்தது. தூங்கத் தொடங்கும்வரை முதல்நாள் இரவு இடைவிடாது பெய்த மழையின் சீரான சத்தத்தில் மனம் லயித்துக்கிடந்ததை நினைத்துக்கொண்டான். இனிய நாதத்தால் இதயம் நிரம்பி வழிய உறங்கியதே தெரியாமல் போய்விட்டது.  அந்த மழையின் தொடர்ச்சியே கனவில் வெள்ளமாக பொங்கியிருக்கவேண்டும் என்று நம்பினான்.

     தலையைத் திருப்பி பக்கவாட்டில் படுத்திருக்கும்  பிட்சுகளைப் பார்த்தான். எல்லாரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள்.  மீண்டும் படுத்து உறங்கலாமா என்று எழுந்த யோசனையை மறுகணமே உதறி குகைவாசலை நோக்கினான். கனவில் கண்ட வெள்ளத்தை தீவிரமாக அவன் மனம் அசைபோட்டது. வேகம். பொங்கிப்பொங்கி மடங்கியுருளும் நீரலைகள். ஓயாத சீற்றம். ஊருக்கு வெளியே ஓடும் நதியை ஒருகணம் பார்க்கும் ஆசை அவன் மனத்தை உந்தித்தள்ளியது. இதற்குமுன்னால் நதியின் கரையில் நின்று ஒற்றை இலக்கைநோக்கிப் பாய்ந்தோடும் அதன் வேகத்தையும் அழகையும் மணிக்கணக்கில் பார்த்து மனம் பறிகொடுத்து நின்றதெல்லாம் நினைவுக்கு வந்தது. சிராவஸ்தி நகரைவிட்டு காலையில் கிளம்புவதாகத் திட்டம். காலை வழிபாட்டுக்குப் பிறகு புறப்படலாம் என்று சாரநாதர் ஏற்கனவே சொல்லியிருந்தார். அடுத்த முறை இந்த நகரத்தையோ, நதியையோ, வெள்ளத்தையோ எப்போது பார்க்கக்கிட்டுமோ என்ற எண்ணம் ஒரு ஏக்கமாக பொங்கியெழுந்தது. தன்னிச்சையாக அவன் பார்வை உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பிட்சுகள்மீது மறுபடியும் படிந்து மீண்டது. அவர்கள் எழுந்திருப்பதற்குள் ஓடோடிச் சென்று வெள்ளத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பலாம் என்று திட்டமிட்டான். அடுத்த கணமே, மெல்ல எழுந்து குகையைவிட்டு வெளியேறி வந்து பாறைகளைத் தாண்டி தரையில் இறங்கி குறுகலான காட்டுப்பாதை வழியாக ஆற்றைநோக்கி நடந்தான் சூரபுத்திரன்.

     குயிலோசையுடன் மற்ற பறவைகளின் இரைச்சலும் இப்போது இணைந்து ஒலித்தது. கிளைகளின் விளிம்புகளிலும் கொடிகளிலும் ஒட்டிக்கொண்டிருந்த மழைத்துளிகள் சொட்டின. சிறிது நேர நடைக்குள்ளாகவே அவன் கிட்டத்தட்ட நனைந்துவிட்டான். காற்று படும்பொழுது அவன் உடல் சிலிர்த்தது. ஒரு பாறையின் திருப்பத்தில் ஒரு பிளவிலிருந்து இரண்டு இலைகள்மட்டும் நீண்டிருப்பதை ஆச்சரியத்துடன் கண்டான். அவற்றின் நுனியில் திரண்டு ஒட்டிக்கொண்டிருந்த நீர்முத்துகள் காதுக்குழைகள்போல வெகுநேரம் தொங்கியிருந்துவிட்டு மெல்ல கீழே உதிர்ந்தன. அக்காட்சி தனக்குள் ஒரு மனக்கிளர்ச்சியை உருவாக்குவதை உணர்ந்தான். இரவெல்லாம் யாசித்து இலைமீது சேகரித்த செல்வத்தை ஒரே கணத்தில் இழந்து துவண்டு நிற்பவைபோல அந்த இலைகளை கற்பனை செய்துகொண்டான். மறுகணமே அந்த இலைகள் புத்தரின் கனிவைப் பொழியும் கண்களாக விரிவுபெறுவதை உணர்ந்தான். அக்கணம் புத்தரின் முழு உருவமே மனத்திரையில் மின்னி மறைந்தது. பரவசத்தில் அவன் உள்ளம் பொங்கியது. கண்ணீர் தன்னிச்சையாகப் பெருகி வழிவதையும் பித்துநிலையில் மனம் உறைந்துபோவதையும் உணர்ந்தான். வெகுநேரத்துக்குப் பிறகு ததாகதரே என்று புன்னகையோடு கண்திறந்தபோது பாறையின் முன்னால் மண்டியிட்டு இருப்பதை உணர்ந்தான். மெல்ல எழுந்து ஆற்றைநோக்கி நடக்கத் தொடங்கினான். ததாகதரின் உருவம் தன் நெஞ்சில் ஓர் அழியாத சித்திரமாக சுடர்விடுவதை நினைத்துப் பெருமிதம் கொண்டான்.

     காட்டில் அப்பகுதி முழுக்க தேக்குமரங்கள் பூத்திருந்தன.  செத்தைகளும் சருகுகளும் புதர்போல அடர்ந்துகிடக்க மழைநீர் அதற்கிடையில் ஒரு கால்வாய்போல ஓடிக்கொண்டிருந்தது.  சுரோணபரந்தாவில் மக்களிடையே நன்னெறிகளை தெளிவுபட அறிவிக்கவும் புகழ்பரப்பவும் பொருத்தமான ஆளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பூரணனிடம் புத்தர் கேட்ட கேள்விகளையும் அவற்றுக்கு பொறுமையாக பூரணன் சொன்ன பதில்களையும் பற்றி விரிவாக வகுப்பெடுத்த குருவின் சொற்கள் மனத்தில் மிதந்துவந்தன.  "உனது கடமையைச் செய்துகொண்டிருக்கும் தருணத்தில் ஒருவேளை மக்கள் உன்னை அடித்தால் என்ன நினைப்பாய் பூரணா?" என்பது  ஒரு கேள்வி.  "கையால்தானே அடித்தார்கள், கல்லால் அடிக்கவில்லையே, அவர்கள் மிகவும் மென்மையானவர்கள்" என்று நினைத்துக்கொள்வேன் என்கிறான் பூரணன்.  "அவர்கள் மீண்டும் வழிமறித்து உன்னை கல்லால் அடித்தால் என்ன செய்வாய் பூரணா?" என்று மற்றொரு கேள்வி எழுப்பப்படுகிறது.  "கல்லால்தானே அடித்தார்கள், கத்தியால் தாக்கவில்லையே, அவர்கள் மிகவும் மென்மையானவர்கள் என்று நினைத்துக்கொள்வேன்" என்று பதில் சொல்கிறான் பூரணன்.  கடமையின் பாதையிலிருந்து சிறிதுகூட விலகாத அவன் மனஉறுதியை நினைத்துநினைத்து பரவசமுற்றான்.  பூரணன்போல கொள்கைப்பிடிப்போடு கடமையாற்றும் சக்தியை அருள்கூர்ந்து  வழங்குங்கள் புத்தரே என்று மனம்குவித்து வேண்டிக்கொண்டான்.  மனத்திரையில் புத்தரின் சித்திரம் மீண்டும் அசைந்து சுடர்விடுவதை உணர்ந்தபடி தொடர்ந்து நடந்தான்.

     ஒன்றுடன் ஒன்று பின்னி முறுக்கிக்கொண்ட வேர்களுக்கு அடியில் ஒரு அணிலைக் கண்டான். அதிகாலை வெளிச்சத்தில் அதன் உடல் மின்னியது.  அடர்த்தியான முடியுடன் அதன் வால் அழகாக அசைந்தது. வேரின் விளிம்பிலிருந்து சொட்டும் மழைத்துளியை வாய்திறந்து உட்கொண்டது. அவனைப் பார்த்ததும் ஓடிவிடுவதுபோல பக்கவாட்டில் உடலைத் திருப்பியது. பிறகு அப்படியே நின்று ஒருகணம் அவனைத் தயக்கமில்லாமல் பார்த்தது. சின்ன மிளகுபோன்ற அதன் விழிகளை ஆச்சரியத்துடன் பார்த்தபடி அதைக் கடந்து சென்றான்.  மழைநீர் ஓடிய ஈரத்தடத்தில் கால்கள் அழுந்தின.

     வெளிச்சம் படர்ந்த வானத்தில் வெண்மேகங்கள் பளிங்குப் பாறைகள்போல நின்றன.  கூட்டம்கூட்டமாக பறவைகள் கிழக்குநோக்கிப் பறந்தன.

     காட்டுத்தடம் முடிந்த இடத்தில் நாணல்புதர் தொடங்கியது. புதருக்கு மறுபுறத்தில் மழைவெள்ளம் கரைபுரண்டோடும் ஓசையை அங்கிருந்தபடியே கேட்கமுடிந்தது.  காற்றின் வேகத்துக்கு மடங்கியும் வளைந்தும் ஆட்டமிடும் நாணலின் அழகை நின்று பார்த்தான். வெட்டவெளியில் உலர்த்தப்பட்ட அகலமான பட்டுத்துணிபோல நெளிந்து வளைந்தது புதர்.  கீழ்வானில் முளைத்தெழுந்த சூரியனின் வெண்கதிர்கள் மண்மீதுள்ள எல்லா உயிர்களையும் வாரித் தழுவின.  கரையோரம் வேர்களும் விழுதுகளுமாக ஆயிரம் கால்களோடு நினறிருந்தது ஆலமரம்.  மூதாட்டியின் தோளெனக் கிடந்த அதன் உச்சியை சூரியனின் பிஞ்சுக்கரங்கள் தொட்டு விளையாடின.

     ஆலமரத்திலிருந்து பார்வையைத் திருப்பிய கணத்தில்தான் அம்மரத்தில் சாய்ந்தபடி இளம்பெண்ணொருத்தி தன்னையே கவனிப்பதை அறிந்தான். அகன்ற அவள் கண்களை நேருக்குநேர் பார்த்ததும் பதற்றத்தில் அவன் உடல் அதிர்ந்தது. மறுகணமே தன் பார்வையை விலக்கி வேறு பக்கம் பார்த்தான். வானம், மேகம், பாறை, புதர், கொடியென தாவித்தாவிச் சென்ற பார்வை அடுத்த கணமே அவள் நிற்கும் திசையை நாடிச் சென்றதை அவனே ஆச்சரியமாக உணர்ந்தான். சிராவஸ்திக்கு வந்த நாள்முதல் அவளைப் பல இடங்களில் பார்த்திருப்பதையும் ஒவ்வொரு முறையும் அவள் தன்னையே விழுங்கிவிடுவதுபோல சில கணங்கள் பார்த்துவிட்டுச் சென்றதையும் நினைத்துக்கொண்டான்.  ஒருபோதும் அவளுக்கு அவன் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. ஒரு செடிபோல, ஒரு மரம்போல நினைத்து அவளைச் சட்டென்று கடந்துபோய்விடுவான்.  சில அடிகள் தொலைவு பின்னாலேயே வந்து பிறகு மறைந்துபோய்விடுவாள் அவள். வழிமறிப்பதுபோல இப்படி எதிரில் வந்து ஒருநாளும் நின்றதில்லை என்பதால் சிறிதுநேரம் தடுமாறினான்.  அவள் அசைவுகளை கூர்மையாக கவனிக்கும் புலன்களின் வேகத்தை அவளே ஆச்சரியத்துடன் உணர்ந்தான்.  காரணமில்லாமலேயே தன் இதயத்துடிப்பின்வேகம் அதிகரித்த விதம் அவனாலேயே நம்பமுடியாத ஒன்றாக இருந்தது.  உதடுகள் உலர்ந்து போவதையும் விம்மிய மார்பில் வேர்வை படர்வதையும் உணரமுடிந்தது.  பதற்றத்தில் மூச்சுவாங்கும் வேகமும் அதிகரித்தது.

     அவளிடமிருந்து பார்வையை விலக்கி அவன் வேகமாக ஆற்றைநோக்கி அடிவைத்தான். "பல நாட்களாக பல இடங்களில் உங்களைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருப்பவள்தான் நான் சூரதத்தரே. ஆச்சரியப்படவேண்டாம். உங்கள் பெயர்மட்டுமல்ல, உங்களைப்பற்றிய எல்லாத் தகவல்களும் எனக்கு மனப்பாடம். என்னைப்பற்றித்தான் உங்களுக்கு எதுவும் தெரியவில்லை. பல முறை என்னைப் பார்த்திருக்கிறீர்கள். உண்மையிலேயே என்னை அறிந்துகொள்ள ஆர்வமில்லையா?.." மென்மையும் ஆசையும் கலந்த குரல் அவனை ஒரே கணத்தில் கட்டுப்படுத்தி நிறுத்தியது.  "ஐயனே, புத்தரிடமும் தர்மத்திடமும் சங்கத்திடமும் நம்பிக்கைவைத்திருக்கும் எனக்கு அபயமளித்து பரிநிர்வாணத்துக்கு வழிகாட்டி அருளவேண்டும்" வழிபாட்டு வரிகளை அவன் உதடுகள் இடைவிடாமல் முணுமுணுத்தன. பிறகு உறுதி கைவரப் பெற்றவனாக எந்தப் பக்கமும் திரும்பாமல் நடந்தான்.

     "சிராவஸ்தத்திலிருந்து இன்று வெளியேறப் போகிறீர்கள் அல்லவா? வைசாலியை நோக்கியா அல்லது ஆலபியைநோக்கியா? எதைநோக்கி அடுத்த பயணம்?"

     அவள் இருப்பையோ, கேள்வியையோ பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தான்.  அவன் அடிமனம்மட்டும் அவளுடைய கேள்விகளுக்கு பதில் சொன்னபடியே இருந்தது. அவன் உடல் துடித்து முறுக்கேறியதை அக்கணத்தில் உணரமுடிந்தது.

     "என்னிடம் பேசக்கூடாதா? ஒரு கணம் நின்று நீ யாரடி பெண்ணே என்றாவது கேட்கக்கூடாதா? எதற்காக இத்தனை நாட்கள் தொடர்கிறாய் என்று ஒரு வார்த்தையாவது கேட்கக்கூடாதா?"

     அவன் இதழ்களில் ஒருவித இகழ்ச்சியான புன்னகை வெளிப்பட்டது. பக்கவாட்டில் உயரமாக அடர்ந்திருக்கும் நாணல்களை இரண்டு கைகளாலும் விலக்கியபடி நிற்காமலேயே நடந்தான். சங்கமே என் அடைக்கலம். சங்கமே என் வாழ்க்கையின் நெறி. சங்கமே என் உலகம். வேறு எதற்கும் என் வாழ்வில் இடமில்லை முணுமுணுத்தபடி அடியெடுத்துவைத்தான்.

     "என் பெயர் தாரிணி. இந்த நகரத்தின் இளம்கணிகையரில் நானும் ஒருத்தி." பிரார்த்தனை வரிகளிலிருந்து விலகி அவள் மனம் அவனைநோக்கி சொல்லப்படும் வார்த்தைகளில் குவிவதை அவனால் நம்பவே இயலவில்லை. 

     "எத்தனையோ ஆண்கள் என் அழகில் மயங்கியதுண்டு.  ஏராளமான செல்வத்தை என் காலடியில் கொண்டுவந்து கொட்டிவிட்டு தழுவிச் சென்றதுண்டு.  ஆனால் அவர்களில் என் நெஞ்சின் ஆழம்வரை சென்று பதிந்தவர்கள் ஒருவருமில்லை. அப்புறம்தான் ஓர் ஆண்மகனைச் சந்திக்கும் வாய்ப்பே இப்பிறவியில் இல்லை என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இவ்வளவு சீக்கிரம் என் எண்ணம் சுக்குநூறாக நொறங்கிச் சிதையும் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை...."

     சிறிதுநேரம் குரல் கேட்கவில்லை.  அனிச்சையாக நின்றுவிட்ட காலை எல்லா ஆற்றலையும் வழங்கி அடுத்த அடிவைக்க உந்தித் தள்ளவேண்டியதாயிற்று.  கருணையும் கனிவும் கொண்ட புத்தரின் முகத்தை ஒருகணம் நினைத்தான். அவர் உருவம் நெஞ்சத்திரையில் சுடர்விடுவதைக் கண்டு நம்பிக்கை கொண்டான். இழந்துபோன உறுதியை மீண்டும் அடைந்துவிட்டதுபோல சந்தோஷம் கொண்டான்.  அவள் நினைவுகள் முற்றிலும் அகன்று மனம் தூய்மையுற்றதுபோல உணர்ந்தான்.

     "யார் அந்த ஆண்மகன் என்று கேட்பீர்கள் என எதிர்பார்த்தேன். கேள்வியே இல்லாமல் போவதேன் சூரதத்தரே? எனக்காகவாவது அப்படி ஒரு கேள்வி கேட்டிருக்கக்கூடாதா? சரி போகட்டும், நீங்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, நானே சொல்லிவிடுகிறேன்.  நீங்கள்தான் அந்த ஆண். என் நெஞ்சைத் தொட்ட ஆண்மகன்...."

     தன் மனஉறுதி குலைந்து தளர்வதை நம்பமுடியாமல் உணர்ந்தான் அவன். மனம் கொதித்தது. கால்கள் அசைய மறுத்தன.

     "உங்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை அல்லவா? ஒவ்வொரு நாள் இரவும் உங்களைப்பற்றி நூறு கனவுகள் காண்கிறேன். வெட்கத்தைவிட்டு சொல்கிறேன். உங்களைக் கட்டித் தழுவினால்மட்டுமே இந்த உலகில் நான் பெண்ணாகப் பிறந்ததன் பலனை அடையமுடியும்..."

     அவள் குரல் தழுதழுத்தது. அது விசும்பலாக வெடித்ததைக் கேட்டபோது அவன் நின்று அவளை ஒருவித இயலாமையுடன் பார்த்தான்.

     "இத்தனை புலனடக்கமும் பிடிவாதமும் ஏன் சூரதத்தரே? இன்னும் பல பிறவிகள் காத்திருந்து அடையப்போகிற பரிநிர்வாணத்துக்காக இக்கணத்தின் சுகத்தை ஏன் இழக்கவேண்டும்? அதைப்பற்றி ஒருகணம்கூட நீங்கள் யோசித்ததே இல்லையா? ..."

     "ஒரு துறவியின் வழியில் இப்படி அத்துமீறி குறுக்கிடுவது அறமில்லாத செயல் என்பது உனக்குப் புரியவில்லையா பெண்ணே?" வரவழைத்துக்கொண்ட உறுதியோடும் தெளிவோடும் அவளைப் பார்த்துக் கேட்டான் அவன்.  காலை வெளிச்சத்தில் அவள் தங்கச்சிலைபோல நின்றிருந்தாள். கரித்துண்டால் கோடு இழுத்ததுபோல அடர்ந்த அவள் புருவங்களின் கருமையும் ஆசை மின்னும் அவள் கண்களும் காந்தங்களைப் போல கவர்ந்திழுத்தன. செவ்வரியோடிய சிவந்த உதடுகள்.  கீழுதட்டின் ஓரத்தில் புள்ளிபோல ஒரு  மச்சம். காதோரம் மென்மயிர் சுருண்டு காற்றில் அலைபாய்ந்தது. இளமையின் மினுமினுப்போடும் திரட்சியோடும் அவள் நின்ற தோற்றம் நிலைகுலையவைத்தது.

     வாய்திறந்து நீங்கள் பேசியதைக் கேட்க ஆனந்தமாக இருக்கிறது. தரையில் முத்துகள் சிந்தியிருக்கிறதா பாருங்கள் சீண்டிப்பார்க்கும் வகையில் குறும்பாக நகைத்தாள். "எல்லாவற்றையும் துறந்து ஓடுவதுதான் அறம் என்னும் நம்பிக்கையே போலியானது அல்லவா சூரதத்தரே. எது நியாயமில்லையோ அதுவே அறமில்லாத செயல். ஆண்பெண் இன்பம் இந்த மண்ணுலகம் ஏற்கக்கூடிய ஒரு நியாயம். இந்த நியாயத்தால்தானே நீங்களும் பிறந்தீர்கள். நானும் பிறந்தேன். எதிர்காலமும் அப்படித்தானே பிறக்கும். இதை நியாயமற்றதாக நினைக்கத் தொடங்கினால் மனிதகுலத்தின் ஊற்றுக்கண்ணே அறமின்மை தொடங்குகிற புள்ளியாகிவிடும் என்பது புரியவில்லையா...?"

     அவள் அவனை நெருங்கிவந்தாள். அவன் கைகளை உயர்த்தி தலையைப் பிடித்துக்கொண்டான். "தயவுசெய்து என்னைக் குழப்பாதே. இங்கிருந்து போய்விடு. என்னைத் தொடராதே பெண்ணே. அரிஹத் நிலை. அதுதான் என் ஒரே ஆவல். இலக்கு. அதை நோக்கிப் பயணப்பட்டிருப்பவன் நான்.  என் மனத்தில் மோகத்தையும் ஆவலையும் தூண்டாதே...." முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு சொன்னான். பாதி சொல்லிக்கொண்டுவரும்போதே அவன் குரல் குழறியது. வேகமாக ஆற்றைநோக்கி அடியெடுத்துவைத்தான்.

மீண்டும் அவனை அமைதியாகப் பின்தொடர்ந்தாள் அவள்.  "உங்கள் விருப்பம் ஊறிப் பெருகுவதை நான் புரிந்துகொண்டுவிட்டேன்  சூரதத்தரே. பற்றிப்படரும் நெருப்பின்மீது ஆவல், இலக்கு, ஞானம் என்று எதைஎதையோ போட்டு அணைக்க முயற்சி செய்யாதீர்கள்.  இன்பம் என்பது எப்படிப்பட்டது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டாமா?"

     "எனக்கு எதுவும் தெரிந்துகொள்ளத் தேவையில்லை பெண்ணே. நீ இங்கிருந்து கிளம்பிப் போனால்போதும்...." வேகவேகமாக நடந்தான்.

     "என் மீது அப்படி என்ன வெறுப்பு உங்களுக்கு?"

     "பெண்ணே, பிட்சுகளுக்கு வெறுப்பும் இல்லை. விருப்பமும் இல்லை. தாமரை இலை தண்ணீரைப்போல வாழ்கிறவர்கள் அவர்கள்..."

     "சூரதத்தரே, பிட்சுகளுக்கு விருப்பம் உண்டா இல்லையா என்பதல்ல என் கேள்வி. உங்களுக்கு ஏன் வெறுப்பு என்பதுதான் என் கேள்வி...." அவள் சிரித்தாள். கிளிஞ்சல்களை இறைத்ததுபோல இருந்தது. அவள் கன்னங்களில் அழகாகக் குழிவிழுந்து மறைந்தது. அவள் உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டாள்.

     "பேச்சை வளர்க்கவேண்டாம் பெண்ணே. என்னைத் தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை. போய்விடு..."

     திரும்பிப் பார்க்காமல் வேகமாக நடக்கத் தொடங்கினான். சிலகணங்களுக்குப்பிறகு காலடியோசை கேட்கிறதா என்று அறிய அவன் செவிகள் கூர்மையுற்றன.  எந்த ஓசையுமில்லை.  "ததாகரரே. நல்ல வேளை.  என்னை நீங்கள் காப்பாற்றினீர்கள்..." என உள்ளூர நினைத்துக்கொண்டான்.  வழிபாட்டு வரிகளை அவசரமாக முணுமுணுத்தான். நெஞ்சில் சுடர்விடும் ததாகரரின் சித்திரத்தை மனக்கண்களால் பார்த்தான்.  நிம்மதிப் பெருமூச்சோடு இன்னும் சில அடிகள் நடந்தான்.  ஒருவேளை பூனைபோல அடிமேல் அடிவைத்து பின்தொடர்கிறாளோ என்ற ஐயத்தில் திரும்பிப் பார்த்தான்.  விலகிவந்த இடத்திலேயே ஒரு சிற்பம்போல நின்றுகொண்டு இமைக்காலம் அவனையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டான். குப்பென்று முகம் வேர்ப்பதையும் ரத்தம் உச்சந்தலையைநோக்கி பொங்கிப் பாய்வதையும் உணர்ந்தான்.  உதடுகளிடையே நாக்கைச் சுழலவிட்டபடி மோகத்தோடு அவனைப் பார்த்து குறுநகை புரிந்தாள் அவள்.  "நீங்கள் திரும்பிப் பார்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியும் சூரதத்தரே...." குறும்பு தொனிக்கச் சொன்னபடி நிதானமாக அவனைநோக்கி நடந்துவந்தாள்.

     "எனக்காகவே பிறந்திருக்கும் ஆண் நீங்கள்தான் என்பதை உங்களைப் பார்த்த முதல் கணத்திலேயே உணர்ந்துவிட்டேன் சூரதத்தரே. உங்களுக்கான பெண் நான்தான் என்பதை நீங்களும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றுதான் இத்தனை காலமும் அமைதியாக பின்தொடர்ந்து வந்தேன்...."

     எல்லா வார்த்தைகளும் செயலற்றுப் போக ஊமையென நின்றான்.  மனம் உருகியது. உலர்ந்துவிட்ட உதடுகளை ஈரப்படுத்தியப கால்களை அசைக்கமுடியாமல் நின்றான்.

     "என்னையே உங்களுக்குப் பரிசாக வழங்கப் போகிறேன் சூரதத்தரே.  இந்தப் பரிசை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்..."

     இரண்டடி மட்டுமே இடைவெளி என்கிற அளவில் நெருங்கினாள் அவள். காற்றில் அவள் கூந்தல் அலைந்தது.  கூந்தலிலிருந்தும் அவள் உடலிலிருந்தும் வீசிய மணம் இதுவரை அறியாத புதுமையான ஒன்றாகவும் கிளர்ச்சியூட்டுவதாகவும் இருந்தது.  அவனையறியாமல் ஆழ்ந்து அந்த மணத்தை ஒரு கணம் நுகர்ந்தான். மறுகணமே பதறியவனாக "எனக்கு எந்தப் பரிசும் வேண்டாம். என்னை நிம்மதியாக தனிமையில் இருக்கவிடு. அது போதும் பெண்ணே...." பலவீனமான குரலில் இரண்டுதரம் சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினான். வளைகள் ஒலிக்க அவளும் கூடவே நடந்துவந்தாள். எதிர்பாராத விதமாக நாணல் புதரிலிருந்து அகவிக்கொண்டே வெளிப்பட்ட ஒரு வண்ணமயில் தோகைகளை விரித்தபடி ஆற்றங்கரையைநோக்கி ஓடியது. அதன் பின்னால் உடலைக் குலுக்கி ஓசையெழுப்பியபடி ஓடியது இன்னொரு மயில்.

     "ஆனந்தரைப் பின்தொடர்ந்த மாதங்கிக்கு நடந்த கதை தெரியுமல்லவா?"

     "ஆனந்தரைப்பற்றி பேசாதீர்கள் சூரதத்தரே.  அம்மா இவன் அடிக்கிறான், இவன் கிள்ளுகிறான் என்று புகார் சொல்கிற சின்னப்பிள்ளைபோல மாதங்கியைப் பற்றி புத்தரிடம் ஓடோடிப் புகார் சொன்னவர் அவர். தன்னுடைய பிரச்சனையை இன்னொருவருடைய பிரச்சனையாக மாற்றிவிட்ட அப்பாவி..."

     "கடைசியில் அவளும்தானே துறவியானாள்?"

     "வேறென்ன செய்யமுடியும்? கூறுகெட்டவன்மீது கொண்ட காமத்தைவிட துறவு மேலென்று நினைத்துவிட்டாள் பைத்தியக்காரி..."

     "ஒரு புலியின் வாயில் விழலாம். கொலைகாரனின்  கத்திக்குக் கீழும் கழுத்தை வைக்கலாம்.  ஆனால் ஒரு பெண்ணுடன் காமத்தை வளர்ப்பது கூடவே கூடாது என்பது எங்களுக்குச் சொல்லித்தந்த பாடம்..."

நிதானமான குரலில் அவளைப் பார்த்துச் சொன்னான்.

     "சொல்லித்தந்த பாடம் இருக்கட்டும் சூரதத்தரே. மனம் ஒரு கிளிப்பிள்ளைபோல. எதைச் சொல்லித் தருகிறோமோ அதையே அது திருப்பித்திருப்பிச் சொல்லிப் பழகிவிடும். காமமே சத்தியம். காமமே சொர்க்கம். காமமே உலகம் என்று ஒரு நூறுமுறை திருப்பித்திருப்பிச் சொல்லுங்கள். அதையும் உங்கள் மனம் பழகிக்கொள்ளும். பிறகு அதையே மந்திரம்போல முணுமுணுக்கத் தொடங்கிவிடுவீர்கள்..." அவள் சிரித்தபோது பற்கள் முல்லைஅரும்புபோல பளிரென்று மின்னின.

     "என்னைத் திசைதிருப்பாதே பெண்ணே. நான் யாரையும் இதுவரை இந்த அளவுக்கு அருகில் சேர்த்ததில்லை. அசட்டுத் துணிச்சலோடு பேசி நேரத்தை வீணாக்காதே.  உன் வழியே நீ செல்.  என் வழியில் நான் செல்கிறேன்...." கறாராக எச்சரிக்கும் குரலில் சொன்னான்.  அதை அவள் கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை.  "இரண்டுக்கும் இடையே பொதுவழி ஏதுமில்லையா சூரதத்தரே?" என்று கேலிப் புன்னகையோடு கேட்டாள்.  வேகமாகத் திரும்பி அவளை முறைத்தான் அவன்.  எதையோ சொல்லி முணுமுணுத்துக்கொண்டான்.  உதடுகள்மட்டுமே அசைந்து துடித்தன.

     "நான் சொல்வதில் ஒரு வார்த்தைகூட உன் நெஞ்சில் பதியவில்லையா?  ஏன் இப்படி பிடிவாதமாகத் தொடர்ந்து வருகிறாய்?" அவன் கிட்டத்தட்ட அதட்டும் குரலில் சொல்லிவிட்டு முறைத்துப் பார்த்தான். அருகே ஆறு பொங்கியோடும் ஓசை செவியில் மோதியது. புதுமழையின் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.  வேரோடு சாய்ந்த ஒரு பெரியமரத்தை ஆறு வேகவேகமாக புரட்டிப்போட்டு இழுத்துச் சென்றது. சட்டென்று அவள் அவனைக் கடந்து முன்னால் சென்று இரண்டு கைகளையும் நீட்டி அவன் வழியை மறித்தாள். வேகமான நடையால் மூடியிருந்த மேலாடைக்குள் அவள் மார்புகள் அசைந்து அடங்கின. அவள் தோள்களிலிருந்து சின்னத் தண்டுபோல நீண்ட மெல்லிய விரல்களில் பச்சை நரம்புகள் தெரிந்தன.  ஒரு இலைபோல உட்குழிந்த உள்ளங்கைகளில் செஞ்சாந்து பூசியிருந்தாள். கணையாழியில் பொருத்தப்பட்டிருந்த வெண்முத்துகள் மின்னின.

     "எந்தத் தொழிலை நீங்கள் செய்தாலும் அதைத் திறம்படச் செய்யுங்கள். நீங்கள் விவசாயியானால் நிலத்தை மிக அதிகம் விளைச்சல் தரத்தக்கதாகச் செய்யுங்கள்.  வியாபாரியானால் மிக அதிக லாபமீட்டும் தொழிலைச் செய்யுங்கள்.  பணியாளரானால் பணிந்து போகிறவராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் நடந்துகொள்ளவேண்டும் என்று சொன்னது யார் தெரியுமா சூரதத்தரே?" மூச்சுவிடும்போது அவள் அடிவயிறு ஒட்டிக் குழிவது காற்றில் ஆடை விலகிய கணத்தில் தெரிந்தது. 

     "என் ஐயன் சொன்ன வார்த்தைகளை தூக்கத்தில்கூட மறக்கமுடியாது பெண்ணே..." அவளை நோக்கி இகழ்ச்சியாகச் சிரித்தான்.

     "நல்ல சீடர்தான் நீங்கள்.  ஐயன் சொன்ன வார்த்தைகள்மட்டும் சரி. அதையே நான் கடைப்பிடித்துச் செய்தால் பிழையா?"

     "பைத்தியத்தைப்போல உளறாதே.."

     "உங்களை அடையவேண்டும் என்பதே என் ஆசை. மிக அதிக பலன் தரும் வகையில் என் ஆசையை வளர்த்துக்கொள்வதும் அதற்காக உங்களைப் பின்தொடர்வதும் எப்படிப் பிழையாகும் சூரதத்தரே..."  அவள் கைகளை இறக்கி அவனைநோக்கி அடியெடுத்துவைத்தாள்.

     "மனிதகுலத்தின் கடைத்தேற்றத்துக்கு ஐயன் சொன்ன வழி அது. உன் விருப்பத்துக்கு அதை இழுத்து வளைத்துப் பொருள் கொள்ளாதே..."

     "இப்படிச் சொல்வது உங்கள் ஐயனா அல்லது நீங்களா?" நெருங்கி அவன் தோள்களை உரிமையோடு தொட்டாள். "என்னைத் தொடாதே, விட்டு விலகிப்போ..." என்று எழுந்த குரல் அவன் விருப்பத்தையும் மீறி சட்டென ஒடுங்கிவிட, அவள் வசமானான் அவன். ஆசையும் அதிர்ச்சியும் கலந்து மின்னும் அவன் கண்களில் குனிந்து முத்தமிட்டாள் அவள். உதறித் தள்ளிவிட்டு தன்வழியே செல்லப் பரபரத்த அவன் கைகளோடு தன் கைகளைக் கோர்த்து இழுத்துத் தழுவினாள். மார்புத்தசைகளின் அழுத்தம் அவனை வெறிகொள்ளவைத்தது. ஐயனே என்று மந்திரம்போல முணுமுணுத்து அவருடைய சுடர்விடும் முகத்தை நெஞ்சில் நிலைநிறுத்த எடுத்த முயற்சி துவண்டு தோல்வியுற்றது. தழுவிய நிலையிலேயே புதர்களின் உட்பகுதியைநோக்கி நடந்தார்கள்.  கால்கள் அசைய மறுப்பதுபோல கனத்த கணத்தில் தரையில் சாய்ந்தார்கள்.  காலகாலமாக அவனை அறிந்தவள்போல இடைவிடாமல் பலவிதமான உணர்ச்சிகளைக் காட்டிப் பேசினாள் அவள். குழைந்தாள். கொஞ்சிக்கொஞ்சிச் சிரித்தாள். மாறிமாறி முத்தமிட்டாள். இறுதியில் தன் உடலை அறியும்படி செய்தாள். தசைகளும் நரம்புகளும் பின்னிப்பிணைந்த இந்த உடலுக்குள் காணக் கிடைக்காத மாபெரும் புதையலைக் கண்ட ஆனந்தமும் பரவசமும் அவன் கண்களில் அலைமோதின.  தன்னிச்சையாக கைகளை நீட்டி அவளைச் சேர்த்துத் தழுவினான். தசைகளின் வடிவமும் மணமும் அவனைக் கிளர்ச்சியுறச் செய்தன. நுகர்ந்தும் தொட்டும் அவற்றை அறிந்துகொள்வதில் உற்சாகம் பிறந்தது. ஒரு பொம்மையைப்போல சீராகவும் வெகுநுட்பமாகவும் அவனை இயக்கினாள் அவள்.

     விழித்த கணத்தில் சூரியனின் ஒளியில் கண்கள் கூசுவதை உணர்ந்தான்.  உடலின் கனம் முதன்முறையாக ஆச்சரியமூட்டியது.  நடந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் கோர்வையாக்கி நினைத்துப் பார்த்தான். நம்பவும் முடியவில்லை.  நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.  உதடுகள் மீது இன்னும் மிச்சமிருக்கும் சுவையையும் மணத்தையும் மனதார விரும்பியபடி பார்வையைத் திருப்பி அருகில் பார்த்தான். அவளைக் காணவில்லை. முரட்டுத்தனமான பிடிவாதம் இவளுக்கு. கடைசியாக அவள் நினைத்து வந்ததை சாதித்துவிட்டுப் போய்விட்டாள் என்று புன்னகையோடு நினைத்துக்கொண்டான். எழுந்து உட்கார்ந்து புதரிடையே அவள் எங்காவது போயிருக்கக்கூடுமோ என்று பார்வையால் தேடினான். காணவில்லை. எங்காவது மறைந்திருந்துவிட்டு எதிர்பாராத கணத்தில் வெளிப்பட்டு சட்டென தழுவி ஆச்சரியப்படுத்த நினைத்திருப்பாளோ என்றெண்ணி நான்கு பக்கமும் சுற்றிச்சுற்றிப் பார்த்தான்.  அவள் நடமாடும் சுவடே தெரியவில்லை.  அவள் சொன்ன பெயரை மனத்துக்குள் துழாவியபடி பெண்ணே பெண்ணே என்று அழைத்தான். ஒரு பக்கம் ஏமாற்றமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் சரி போகட்டும் என்று சொல்லிக்கொண்டு எழுந்தான்.

     சிராவஸ்தி நகரைவிட்டு வெளியேறும் கணம் என்பது தாமதமாகவே அவனுக்கு உறைத்தது. "ஐயனே, ததாகதரே..." என்று அலறினான். தன் முட்டாள்தனத்தை நினைத்து மனம் நொந்தான். அப்படியே திரும்பி ஓடலாமா என்று நினைத்தான். அழுக்குப் படிந்த உடலை அருவருப்போடு பார்த்தான். குளிக்காமல் செல்வது எவ்வகையிலும் சரியில்லை என்று சொல்லிக்கொண்டான். வேகமாக ஓடிச் சென்று ஆற்றில் விழுந்து மூழ்கினான். வெள்ளத்தை ஆசைதீரப் பார்க்கவந்த இடத்தில்  இப்படி நேரும் என்று சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. காலையில் வந்த கனவு எல்லாவற்றையும் குழப்பித் திசைமாற்றிவிட்டதே என்று சொல்லிக்கொண்டான்.  நாலைந்து மூழ்குதல்களுக்குப் பிறகு உடல் புத்துணர்ச்சியடைந்தது. ஐயனே என்றபடி மீண்டும் மூழ்கினான். சுடர்விடும் அவருடைய திருமுகத்துக்கு மாறாக அந்தப் பெண்ணின் அழகும் செழிப்பும் மிகுந்த வளைவுகளும் வனப்பும் கொண்ட உடல் சுடர்விட்டு ஒளிர்வதைக் கண்டு அதிர்ச்சியுற்று சரேலென எழுந்தான்.  முதன்முறையாக அவன் மனம் பயத்தை உணர்ந்தது. கண்கள் கலங்கி உறைந்தன. வேகமாக தலையை உதறிக்கொண்டான். நீர்த்துளிகள் நான்கு திசைகளிலும் சிதறின. மறுபடியும் நீருக்குள் முழுகி ஐயனின் வாக்குகளை உச்சரித்தபடி அவர் உருவத்தைக் கட்டியெழுப்ப முயற்சி செய்தான். அவன் நினைத்ததற்கு மாறாக, அவளுடைய சிரித்த முகமும் செழிப்பான உடல்தோற்றமும் மட்டுமே மிதந்தெழுந்தன. நடுங்கியபடி கரைக்கு வந்து நின்றபோது கண்ணீர் ஆறாகப் பெருகியது. கூடாது, கூடாது என்று தலையசைத்தபடி குகையை நோக்கி ஓடத் தொடங்கினான். தன் குழுவோடு இணைந்துவிட்டால் போதும், பிறர் இருப்பை ஒரு பற்றுக்கோடாகக் கொண்டு மீட்சிபெற்றுவிடலாம் என்னும் நம்பிக்கை அவனை ஓடவைத்தது.  மிதிபடும் சகதி, கற்கள், செத்தை, கிளைகள், முள்கள், புதர்கள், குட்டை எதையுமே பொருட்படுத்தாமல் ஒரே மூச்சில் மொத்த தொலைவையும் கடந்து குகையை அடைந்தான்.

     வாசலில் ஒருவரையும் காணவில்லை. மூச்சிரைக்க தவிப்போடு "கோபகரே, பார்க்கவரே தம்மாரமரே.." என்று சங்கத்தவர்கள் அனைவரையும் பெயரிட்டு அழைத்தபடி உள்ளே ஓடினான். அவன் குரல் மட்டுமே குகைச்சுவர்களில் பட்டு எதிரொலித்தது. "சாரநாதரே.." என்று ஆறேழுமுறை ஆற்றாமையோடு அழைத்துக் கதறினான்.  இனிமேல் அழுது புலம்பிப் பயனில்லை என்பதை அவன் மனம் தாமதமாக உணர்ந்தது. அந்த வழியே எதிர்காலத்தில் இன்னொரு சங்கம் வரும்வரையில் அதே இடத்தில் அவன் காத்திருக்க வேண்டும் என்பதுதான் சங்கத்தின் விதி. பல ஆண்டுகாலப் பயிற்சியில்  அவன் எய்திய நிலைகளெல்லாம் பொருளற்றுப் போக மீண்டும் தொடங்கிய புள்ளிக்கே வந்து நிற்பதை வேதனையோடு உணர்ந்தான். உடலும் மனமும் குன்றிச் சுருங்குவதை உணர்ந்தபடி குகையின் சுவர்களை வெறித்தபோது ஓரமாக அவன் பிச்சைப்பாத்திரம் தனித்துக் கிடப்பது தெரிந்தது. எழுந்து சென்று அதை எடுத்துக்கொண்டு வந்து பாறைமீது உட்கார்ந்தான். மீண்டும் அழுகை வெள்ளம்போலப் பொங்கி உடல் நடுங்கியது. பாத்திரத்தாலேயே தலையில் அடித்துக்கொண்டான். அழுகை ஓய்ந்து பெருமூச்சோடு "ஐயனே என்னை மன்னித்துவிடுங்கள்..." என்று முனகினான். கால்களை மடித்து அமர்ந்து ததாகதரை நினைத்து கண்மூடி நெஞ்சில் அவர் முகம் மிதந்துவரக் காத்திருந்தான். ததாகதரே ததாகதரே  என்னைக் கைவிட்டுவிடாதீர்கள் என்று அவன் வாய் ஓயாமல் முணுமுணுத்தபடி இருந்தது. மோகப் பார்வையும் குறுநகையும் கொண்டு உதடு சுழித்து உடல்பூரிக்க நிற்கும் பெண்ணின் உருவம் மிதந்துவந்து சுடர்விட்டதைக்கண்டதும் அவன் கண்கள் அதிர்ச்சியோடு விழித்தன. மாறிமாறி கைகளால் தலையில் அடித்துக்கொண்டான். ஐயனே என்று குற்ற உணர்ச்சியோடு உடல்குலுங்கி அழுதான்.

     மனம் வெறுமையில் அமிழ காற்றில் அசையும் மரக்கிளைகளைப் பார்த்திருந்த கணத்தில் அருகில் பூஞ்சோலையிலிருந்து வெளிவரும் பிக்குகளின் வரிசையைக் கண்டான். முதலில் சாரநாதர். அவரைத் தொடர்ந்து பார்க்கவர்,  அவருக்குப் பின்னால் மற்றவர்களின் அணிவகுப்பு. முதலில் அந்த வரிசை அவன் பிரக்ஞையில் பதியவே இல்லை. ஏதோ கனவுக்காட்சி என்று எண்ணினான்.   உண்மை என உணர்ந்த தருணத்தில் பரபரப்போடு துள்ளியெழுந்தான். கண்களைத் துடைத்துக்கொண்டான். நிம்மதியில் அவன் மனம் நிறைந்தது. உங்கள் பாதங்களைப் பணிகிறேன் "ஐயனே, நன்றி. நன்றி. கோடி கோடி நன்றி..." என்று உள்ளூரப் பிதற்றினான். உதடுகள் துடித்தன.  வரிசை தன்னைக் கடந்துசெல்லும்போது சாரநாதரின் பார்வைவை அவனால் எதிர்கொள்ள இயலவில்லை. மன்னிப்பை யாசிப்பதுபோல கைகுவித்தபடி வெட்கத்துடன் தலைகவிழந்து நின்றான். வரிசை கடக்கும்வரை காத்திருந்து, இறுதியாக இணைந்துகொண்டான். காட்டு வழியாகவே அந்த வரிசை சிராவஸ்தியைக் கடந்துசென்றது. வழிநெடுக புத்தரை மீண்டும்மீண்டும் நினைத்து நன்றிப்பெருக்கில் கண்ணீர் சொரிந்தான்.

     பலமணிநேரங்களுக்குப் பிறகு இளைப்பாற உட்கார்ந்த சோலையில் சாரநாதர் இளம்பிக்குகளுக்கு வகுப்பெடுக்கத் தொடங்கினார்.

     "புத்தபெருமானின் அருள் உங்களுக்குப் பரிபூரணமாக கிடைக்கட்டும் பிக்குகளே. இன்று உங்களுக்கு திரிமாவின் கதையைச் சொல்லப் போகிறேன்.  ராஜகிருக நகரத்தில் வாழ்ந்த கணிகை திரிமா. தொழிலால் கணிகையாக இருந்தாலும் புத்த சங்கத்தின்மீதும் பிக்குகள்மீதும் மிகுந்த அபிமானம் கொண்டிருந்தாள் திரிமா. எந்த நேரமாக இருந்தாலும் சரி, பிச்சைக்காக வந்து நிற்கும் பிக்குகளுக்கு உணவு படைக்க ஒருநாளும் தயங்காதவள். அவளுடைய அன்பான உபசரிப்பையும் அழகையும் கண்டு மனம் தடுமாறினான் ஓர் இளம்பிக்கு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டுக்குச் சென்று பிச்சையெடுக்கவேண்டும் என்பதுதான் சங்கத்தின் நியாயம். ஆனால் இளம்பிக்கு அவர்மீது கொண்ட மோகத்தால் தினமும் அவள் வீட்டுக்கே சென்றான்.  பிக்குகளுக்கே உரிய கடமைகளில் கவனம் செலுத்த இயலாத அளவுக்கு அவள்மீது கொண்ட மோகம் அவனைத் தடுத்தது. புத்தர் அதைக் கவனித்தார். ஆனாலும் பொறுமை காத்தார்.  ஒருநாள் திரிமா திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்தாள்.  இறப்பையொட்டி அந்த இளம்பிக்குவையும் அழைத்துக்கொண்டு திரிமாவின் வீட்டுக்குச் சென்றார் புத்தர்.  திரிமாவின் உடல் ஊதிப் பெருத்திருந்தது. ஈக்களும் எறும்புகளும் மொய்த்திருந்தன.  வாசனைத் திரவியங்களையும் மீறி அவள் உடலிலிருந்து சகிக்கமுடியாத துர்நாற்றம் வீசியது. இது என்ன என்று இளம்பிக்குவைப் பார்த்துக் கேட்டார் புத்தர்.  திரிமாவின் உடல் என்று பதில் சொன்னான் அவன். இவள் உயிரோடு இருந்த காலத்தில் ஒரேஒரு இரவை இவளோடு கழிக்க மக்கள் ஆயிரம் பொன்னைக்கூட கொண்டுவந்து அவள் காலடியில் கொட்டத் தயாராக இருந்தார்கள் அல்லவா என்று கேட்டார் புத்தர். ஆமாம் என்று தலையசைத்தான் அவன். அன்று இன்பத்தை வழங்கிய அதே உடம்புதான் இன்று இங்கே இருக்கிறது. ஆயிரம் வேண்டாம், ஐந்நூறு பொன்னாவது கொடுத்து இவளைத் தழுவிக்கொள்ள இப்போது யாராவது முன்வருவார்களா என்று அமைதியாக மறுபடியும் கேட்டார். யாரும் வரமாட்டார்கள் என்று பதில்சொன்னான் அவன். அழகு எவ்வளவு அநித்தியமானது பார்த்தாயா? அநித்தியமான அழகை நுகர்ந்து அடையும் இன்பமும் அநித்தியமானது. கணநேரம் தோன்றி மறைந்துபோகும் அந்த இன்பத்துக்காக மனிதன் துன்பங்களை ஏற்கவேண்டுமா என்று கேட்டார் புத்தர். அவன் மௌனமாக அவரை ஏறிட்டுப் பார்த்தான். அநித்தியத்தைவிட சத்தியமே பெரிது மாணவனே என்று அவனுடைய தலையைத் தொட்டு ஆசி வழங்கினார். கண்ணீர் பெருக, என் கண்களைத் திறந்துவிட்டீர்கள் ஐயனே என்று அவர் பாதங்களில் விழுந்தான் அவன்.

     சாரநாதர் கூறிவரும் கதையில் தன் மனம் குவிய மறுப்பதை உணர்ந்தான் சூரதத்தன். "அழகு அநித்தியமில்லை சாரநாதரே, அதுவும் ஒருவகை சத்தியம், அது வழங்கும் இன்பமும் சத்தியம்.." என்று சொல்ல அவன் மனம் துடித்தது. வார்த்தைகளை அடக்கிக்கொண்டு குறுகுறுப்போடு அவரைப் பார்த்தான். ஆற்றங்கரையில் சந்தித்த பெண்ணின் குறுஞ்சிரிப்பு காதில் ஒலிப்பதுபோல இருந்தது. அந்தச் சிரிப்பு. அவள் உதடுகள். மிருதுவான கன்னம். உருண்ட பெரிய கண்கள். ஒவ்வொரு உறுப்பாக தோன்றி இணைந்து அவள் உடல் ஒரு சிலைபோல மனத்தில் உருவாகி நின்றது. ஏதோ பெயர் சொன்னாளே, என்ன சொன்னாள் என்று கண்டறியத் தடுமாறினான்.

     "அனைவரும் இணைந்து புத்தபெருமானின் வாக்கியங்களைச் சொல்லுங்கள் பிக்குகளே" என்று சாரநாதர் சொல்வது கேட்டது.

     "ஒரு மனிதனின் மிகப்பெரிய செல்வம் தன்னம்பிக்கை...."

     "கரகரத்த குரலில் இளம்பிக்குகள் அதையே திருப்பிச் சொன்னார்கள்.  "ஒரு மனிதனின் மிகப்பெரிய செல்வம் தன்னம்பிக்கை..." சூரதத்தனால் அவர்களுடன் ஒன்ற முடியவில்லை. அந்தப் பெண்ணின் பெயரைக் கண்டறியும் வேகம் அவனுக்குள் வெள்ளமெனப் பொங்கியது.

     ணி என்ற எழுத்தில் முடிகிற ஒரு பெயர் என்பது மட்டுமே முதலில் நினைவுக்குவந்தது. நீண்ட கருங்கூந்தலின் நுனியை விரல்களில் சுற்றியபடிதான் தன் பெயரைச் சொன்னாள். அந்தச் சித்திரம் மட்டும் அப்படியே புத்தம்புதுசாக எழுந்து வந்தது. பெயர் மட்டும் தௌiவாகத் தெரியவில்லை.

     "சுவைகளில் மிகச்சிறந்த சுவை சத்தியம்..."

     இடைவிடாது அவள் முன்வைத்த வாதங்களும் வார்த்தைகளும் புன்னகையும் அடுக்கடுக்காக மிதந்து வந்தன. ரோகிணி, பூரணி, மோகினி என பல பெயர்களைச் சொல்லிப் பார்த்தான்.

     "மெய்யான அறத்தின்வழியாக அறிவதே சத்தியம்..."

     உங்களுக்கான பெண் நான்தான் என்பதை நீங்களும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றுதான் இத்தனை காலமும் அமைதியாக பின்தொடர்ந்து வந்தேன் என்று அவள் சொன்ன வார்த்தைகள் அப்படியே  காதருகே ஒலிப்பதுபோல இருந்தது. ஒவ்வொரு வார்த்தைக்கும் அவள் கொடுத்த அழுத்தத்தை நினைத்ததும் உள்ளூரப் புன்னகை படர்ந்தது. அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நினைவில் பதிந்திருக்கும்போது பெயர்மட்டும் மறந்துபோன விதம் வருத்தமளித்தது.

     "சத்தியமே வாழ்வதற்கு மிகச்சிறந்த வழி...."

     தாரணி என்ற பெயரை சட்டென்று அவன் மனம் கண்டறிந்தது. தாரணி தாரிணி என்று மனத்துக்குள் மீண்டும்மீண்டும் சொல்லிப் பார்த்துக்கொண்டான். அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

     "நெஞ்சில் புத்தரின் சித்திரத்தை எழுப்பி நிலைநிறுத்தி, கண்களை மூடி சிறிதுநேரம் தியானம் செய்வோம் பிக்குகளே..."

     சாரநாதர் கண்களை மூடினார். பிக்குகளும் அப்படியே தியானத்தில் ஆழ்ந்தார்கள். சூரதத்தனும் விழிகளை மூடினான். வழிபாட்டுக்குரிய முதல் வரியை அவன் மனம் உச்சரித்தது.

     எதிர்பாராத விதமாக எடுப்பும் வளைவுகளும் குழைவுகளும் கொண்ட சிற்பம்போல தாரிணியின் உருவம் மிதந்துவந்து நெஞ்சில் நிலைபெற்றது. அவள் நின்ற கோலம். நடந்த கோலம். கிடந்த கோலம். பல நிலைகளில் அந்த உருவம் அசைந்தது. அவனுக்குள் குறுநகை பொங்கியது. ததாகரரே என்று முணுமுணுத்தபடி மீண்டும் வழிபாட்டு வரியிலிருந்து தொடங்கினான். விலக்கமுடியாத சித்திரமாக மறுபடியும் அவளே வந்தாள். மிகஅருகில் இருப்பதுபோல அந்தச் சித்திரம் துல்லியமாக இருந்தது. இது என்ன என்று கூச்சமாக உணர்ந்தான். காலையில் பொங்கிப்பொங்கி வந்து தடுமாறவைத்த குற்றஉணர்வோ பாவ உணர்வோ சிறிதும் இல்லாதிருப்பதை அக்கணத்தில் ஆச்சரியத்தோடு உணர்ந்தான்.  முகமும் உடலும் எதையும் வெளிக்காட்டிவிடாதபடி வழக்கமான நிலையிலேயே அமர்ந்fது தாரிணியின் சித்திரத்தில் ரகசியமாக மனம் குவித்தான்.

 **

( வார்த்தை 2009 )