Home

Sunday 18 April 2021

ஒருவேளை உணவு - நினைவுச்சித்திரம்

 

     உட்கார்ந்து செல்வதற்கு வசதியாக ஏதாவது பேருந்து வரக்கூடும் என்கிற நம்பிக்கையோடு அலுவலக வளாகத்துக்கு அருகிலேயே இருக்கும் நிறுத்தத்தில் காத்திருந்தபோது "எரநூத்தியொன்னு போயிடுச்சா சார்?" என்று கேட்டபடி எதிரில் வந்து நின்றாள் ஒருத்தி.  எலும்பும் தோலுமான வற்றல் தோற்றம். கழுத்தில் படர்ந்திருந்த மஞ்சள் கயிறு சட்டென்று தமிழ் அடையாளத்தை உணர்த்தியது. இன்னும் இல்லம்மா என்று பதில் சொல்லிவிட்டு, கைப்பேசியில் உறுமலோடு வந்து இறங்கிய அவசரச் செய்தியின்மீது பார்வையைப் பதித்தேன். நண்பரொருவர் மும்பையிலிருந்து அனுப்பிய செய்தி. படித்த கையோடு அதற்குத் தகுந்த விடைச்செய்தியைத் திரையில் அடித்து அனுப்பிவிட்டு, பாதுகாப்பு கருதி கைப்பேசியை பைக்குள் வைத்தேன்.

     நிமிர்ந்த கணத்தில் அந்தப் பெண் "சார் காம்ப்ளெக்ஸ்லதான வேல செய்றிங்க?"  என்று கேட்டாள். நான் "ஆமாம்" என்றதும் "ஒங்கள அடிக்கடி பாத்திருக்கேன் சார். எத்தனாவது மாடியில சார்?" என்று மறுபடியும் கேட்டாள். "நாலாவது மாடி" என்ற என் பதிலைக் கேட்டு தலையை அசைத்துக்கொண்டாள். "காலையில தெனமும் க்வார்ட்டர்ஸ் ஓரமா நந்தியாவட்ட பூவ பறிச்சிகினு போவிங்க இல்ல?" என்று தயக்கமாகக் கேட்டாள். ஆச்சரியமாக இருந்தது. அவள் முகத்தை நான் இதுவரை ஒருமுறைகூடப் பார்த்த ஞாபகமே இல்லை. என்னை எப்படி கவனித்தாள் என்பது புரியாத புதிராக இருந்தது. "மதியான நேரத்துல சாப்பாட்ட முடிச்சிட்டு புல்தரைய சுத்தி ஒரு வாக்கிங் வந்து பூவரச மர நிழல்ல கொஞ்ச நேரம் நின்னுட்டு போகறதகூட பாத்திருக்கேன் சார்" என்று அவள் மேலும் அடுக்கிக்கொண்டே போனபோது என் ஆச்சரியம் பல மடங்காகப் பெருகியது. குழப்பத்தோடு அவளைப் பார்த்து, "ஒங்கள நான் பாத்ததே இல்லயே, எந்த ஆபீஸ் நீங்க?" என்று கேட்டேன். சிரித்துக்கொண்டே "ஆபீஸ்லாம் கெடயாது சார். அவுஸ்கீப்பிங் சார். ஜி.எம். க்வார்ட்டர்ஸ்லதான் வேல. கண்ணாடி போட்டுகினு டைலாம் கட்டிருப்பாரே அவரு ஊடு. மூணாவது மாடி. சம்பளத்த மட்டும் ஆபீஸ்ல வந்து வாங்கிக்குவேன்" என்றாள்.

     "ஒங்க பேரு?"

     "சாவித்திரி."

     பத்தாண்டுகளுக்கு முன்பு புழக்கத்துக்கு வந்து, எல்லாப் பொதுத்துறை நிறுவனங்களிலும் நிரந்தரமாக இடம்பிடித்துக்கொண்ட ஒரு சொல் ஹெளஸ்கீப்பிங். எந்த நிறுவனமும் சொந்தமாக இப்போது ஆள் எடுப்பதில்லை. அலுவலகங்களைக் கூட்டிப் பெருக்கித் தூய்மை செய்யவும் சின்னச்சின்ன வேலைகளைச் செய்து தரவும் ஒளிநகல் எடுத்துக்கொடுத்தல், தேநீர் வாங்கிவந்து விநியோகித்தல், அஞ்சல் நிலையம் செல்தல், கூரியர் அனுப்புதல், அவசரத்துக்கு கடைக்குச் சென்று பொருள்களை வாங்கிவருதல், தட்டச்சு செய்தல், கணிப்பொறியில் கடிதமெழுதி அச்செடுத்தல், கோப்புகளைக் கொண்டுசெல்தல் என எல்லா விதமான வேலைகளுக்கும் தேவையான ஆட்களை ஒப்பந்தக்காரர்கள் வழியாக பெற்றுக்கொள்கிறார்கள். இத்தனை ஆட்கள் வேண்டும் என்று சொல்லிவிட்டால் போதும். கொண்டு வந்து நிறுத்தவேண்டியது அவர்கள் கடமை. மாதம் பிறந்தால் நிறுவனம் ஒப்பந்தக்காரர்களுக்குக் கட்டணத்தைக் கொடுத்துவிடும். ஊழியர்கள் அவர்களிடமிருந்துதான் சம்பளத்தைப் பெறவேண்டும்.

     நகரங்களில் வாழ்கிற ஹெளஸ்கீப்பிங் ஒப்பந்தக்காரர்கள் காட்டில் இப்போது அடைமழைக்காலம். ஒற்றைரூபாய்கூட முதலீடு இல்லாத தொழில். ஐம்பது பேர்களை வேலைக்கு அனுப்பக்கூடிய வசதியுள்ள ஒரு ஹெளஸ்கீப்பிங் நிறுவனம் உட்கார்ந்த இடத்தில் சுளையாக மாதத்துக்கு ஐம்பதாயிரம் சம்பாதித்துவிடும். ஆள் ஒருவருக்கு நிறுவனத்திடமிருந்து நாலாயிரம் ரூபாய் என்று கணக்குக்காட்டி வாங்குகிற பணத்தில் மூவாயிரம்  ரூபாயைமட்டும் சம்பளமாகக் கொடுத்துவிட்டு ஆயிரம் ரூபாயை தனக்குரிய சேவைக்கட்டணமாக வைத்துக்கொள்ளும். அலுவலகங்கள்மட்டுமின்றி, பெரியபெரிய அடுக்கங்களில் வசிப்பவர்களும் எண்ணற்ற நடுத்தரக் குடும்பங்களும் இன்று ஒப்பந்தக்காரர்களின் சேவையைச் சார்ந்திருப்பவர்களாக மாறிப் போய்விட்டார்கள்.

     ஒப்பந்தக்காரர்களிடம் எப்போதும் இரண்டு தூண்டில்கள் உண்டு. கிராமத்தில் வாழ வழியில்லாமல் நகரைநோக்கி வருகிற உடலுழைப்பாளர்களைநோக்கி ஒரு தூண்டில் எப்போதும் நீண்டிருக்கும். வசதியில்லாத காரணத்தால் நகரத்திலேயே பள்ளியிறுதிப் படிப்போடு கல்வியை முடித்துவிட்டு எதிர்காலம் குறித்த அச்சத்தோடு உலவிக்கொண்டிருக்கும் இளைஞர்களையும் இளம்பெண்களையும் ஈர்க்கும் வகையில் மற்றொரு தூண்டில் நீண்டிருக்கும். இந்த இரைகளை பல திசைகளிலும் தேடி அழைத்துவந்து சேர்ப்பதை ஒரு துணைத்தொழிலாகக் கருதிச் செய்கிற கூட்டமும் நகரத்தில் இருக்கிறது.

     ஹெளஸ்கீப்பிங் என்னும் ஒற்றைச்சொல்லால் எங்கெங்கோ இழுத்துச்செல்லப்பட்ட எண்ணங்களைச் சட்டென்று உதறி "எந்த ஜி.எம். ஆபீஸ்னு சொன்னிங்க?" என்று மறுபடியும் கேட்டேன். "ஆபீஸ் கெடயாது சார். ஊட்டுவேலதான்" என்று பெயரைச் சொன்னாள்.

     "ஒரு வருஷமா இங்கதான் வேல சார். இதுக்கு மின்னால கோரமங்களாவுல ஒரு ஜி.எம் ஊட்டுல ரெண்டு வருஷம் வேல பாத்தன். தங்கமானவங்க. கேரளாவுக்கு மாத்தலாயி போயிட்டாங்க. போவும்போது எனக்கு நல்லநல்ல பொடவைலாம் குடுத்துட்டு போனாங்க. அதுக்கும் மின்னால மல்லேஸ்வரத்துல ரெண்டுமூணு டிஜியெம் ஊடுங்கள்ல வேல பாத்தன்..." அவள் அடுக்கிக்கொண்டே சென்றாள். வீட்டுவேலைகளில் அவளுக்கு ஏழாண்டு கால அனுபவம் இருந்தது. தன் பணிக்காலத்தில் பல அதிகாரிகளின் பெயர்களை அவள் தெரிந்துவைத்திருந்தாள். வேலை செய்த வீட்டு அதிகாரிகளைமட்டுமில்லாமல் அவர்களைத் தேடி வந்து பார்க்கிற பலருடைய பெயர்களையும் நடவடிக்கைகளையும் தெரிந்துவைத்திருந்தாள். அவர்களையெல்லாம் தெரியுமா என்று கேட்டாள். அவள் குறிப்பிடும ஒருவரையும் எனக்குத் தெரியவில்லை என்பதை நம்பாததுபோல  அவள் கண்கள் ஒருகணம் சுருங்கின.

     "எந்த ஊருப்பக்கம் நீங்க?" நான் கேள்வியை அவள்பக்கமாகத் திருப்பினேன்.

     "திருக்கோயிலூரு பக்கம் சார். சொல்லிக்கறதுக்குத்தான் சொந்த ஊரே தவிர சொந்தம்ன்னு சொல்லிக்க இப்ப யாரும் அங்க இல்ல சார்..." கைப்பையை தரையில் வைத்துவிட்டு, கலைந்துபோன தலைமுடியை அவிழ்த்து முடித்து கொண்டையாகக் கட்டினாள்.

     "இங்க எப்ப வந்திங்க?" நாலாக மடிக்கப்பட்ட கைப்பையில் அழுக்காகத் தெரிந்த முருகன் படத்தில் கன்னத்துக்கருகே சுருங்கியிருந்தது. அங்கிருந்த பெரிய ஓட்டையொன்று மஞ்சள் நூலால் தைக்கபட்டிருந்தது.

     "அது வந்து பன்னெண்டு பதிமூணு வருஷம் இருக்குங்க சார். சாதி மாறி கட்டிகிட்டதால ஊருல இருக்கமுடியலை. அடிச்சி தொரத்திட்டாங்க. பெங்களூருல பொழச்சிக்கலாம்ன்னு அந்த காலத்துல ரெண்டு பேரும் இங்க வந்துட்டம். பனசங்கரி பக்கத்துல  நெறயா வீடுங்க கௌம்பன நேரம் அது. ரெண்டு பேருமே கட்டட வேலைக்குப் போனம். நல்லா சம்பாரிச்சோம். மடிவாளா பக்கத்துல ஒரு சின்ன ஊட்டுல வாடகைக்கு இருந்தம். தங்கமாட்டம் நல்ல மொறையில வச்சிதான் பாத்துகினாரு அவரு. மூணு புள்ளைங்க பொறந்தாங்க. எங்க கெட்ட நேரம், ஒரு பில்டிங்குல சாரம் பிரிக்கற சமயத்துல கீழ மாட்டிகினு செத்துட்டாரு" ஒரு கணம் தரையைப் பார்த்து ஆழமாக மூச்சை இழுத்துவிட்டாள்.  தரையில் கிடந்த ஒரு சின்ன கல்லை கால்விரலாலேயே ஓரமாகத் தள்ளிவிட்டாள். நான் வெகுநேரமாக எதிர்பார்த்திருந்த பேருந்து வந்து நின்றது. ஓடிச் செல்ல அது பொருத்தமான நேரமாகத் தோன்றாததால், அவள் சொல்வதைக் கேட்பதிலேயே கவனமாக இருந்தேன்.

     "எல்லாரும் ஊருக்கே திரும்பிப் போயிடுன்னு சொன்னாங்க. யாருகிட்ட போயி ஒதுங்கமுடியும் சொல்லுங்க? அவுங்க காறி துப்பறதயெல்லாம் தாங்கிகினு வாழ முடியுங்களா? நல்லதோ கெட்டதோ பொழைக்கறதுக்கு வந்த ஊருலயே வாழ்ந்துடலாம்ன்னு புடிவாதமா இருந்துட்டேன். கட்டட வேல, காய்கறி சந்தை வேல, ஊட்டு வேலன்னு நான் பாக்காத வேலயே இல்ல. ஒரு ஆஸ்பத்திரியில கக்கூஸ்கூட கழுவி உட்டிருக்கன். நல்லாதான் சம்பளம் குடுத்தாங்க. அங்க ஒரு பொறம்போக்கு கம்பவுண்டரு புருஷன் இல்லாதவதான நீ, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கக்கூடாதான்னு பல்ல இளிச்சினு கைய புடிச்சி இழுத்துட்டான். வந்த கோவத்துல தொடப்பத்தாலயே நாலு மாத்து மாத்திட்டு வெளிய வந்துட்டேன். ஒரு வாரமா வேலயில்லாம சுத்திசுத்தி வந்தேன். அப்பதான் மார்க்கெட்டுல ஒரு ஆளு இட்டும்போயி மடிவாளாவுல அவுஸ்கீப்பிங் ஆபீஸ்ல சேத்து உட்டாரு"  அவள் முகத்தில் தேங்கிய துயரத்தின் அடர்த்தி அவள் அடைந்திருக்கக்கூடிய காயங்களையும் வேதனைகளையும் குறிப்பால் உணர்த்தியது. உலர்ந்துபோன ஒரு மரக்கிளைபோல ஒடுங்கிய தோற்றத்தோடு நின்றிருந்த அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

     சாவித்திரிக்கு ஹெளஸ்கீப்பிங் வேலை பிடித்திருந்தது. ஆபத்தான நேரத்தில் கடவுளே கண்திறந்து வழிகாட்டியதாக நினைத்து, அந்த வழியிலேயே தொடர்ந்து நடக்கத் தொடங்கினாள். தன்னை முன்னிலைப்படுத்தி ஒரு பெரிய சுரண்டல் நடக்கிறது என்பது தெரிந்தும் தெரியாததுபோலவே நடந்துகொண்டாள். மாதம் பிறந்தால் தன் கைக்கு நிரந்தரமாக ஒரு தொகை வருகிறது, பிழைக்க அது போதும் என்று நிறைவோடு ஏற்றுக்கொண்டாள்.  ஒவ்வொரு அதிகாரியின் வீட்டிலும் வெவ்வேறு விதமான மனிதர்கள் வாழ்ந்தார்கள். வேலைக்கு வந்திருக்கும் பெண் என்பவள் சிலருடைய பார்வையில் அடிமை. சிலருடைய பார்வையில் பொம்மை. சிலர் பார்வையில் எதையும் தாங்கிக்கொண்டு நிற்கும் மரம். மற்றும் சிலர் பார்வையில் அடி தாங்கிக்கொண்டு பின்னாலேயே வரும் வீட்டுவிலங்கு. உலகம் பலவிதம் என்று உள்ளூர நினைத்தபடி எல்லாச் சூழல்களையும் அனுசரித்து நடந்துகொண்டாள் சாவித்திரி. ஆனால் அவளுடைய சகிப்புத்தன்மையின் எல்லையையும் உடைப்பதுபோன்ற சம்பவங்கள் புதிய அதிகாரியின் வீட்டில் நடக்கத் தொடங்கிய பிறகு, அனுசரிக்கும் வழி புரியாமல் திகைத்துவிட்டாள்.

     "நான் பாத்ததுலயே இப்பிடி ஒரு கெடுபிடி, இப்பிடி ஒரு கொடும, வேதனய எங்கயுமே கண்டதில்ல சார்" வேலை செய்யும் அதிகாரியின் வீட்டைப்பற்றி வருத்தத்தோடு குறிப்பிட்டாள் சாவித்திரி. "அந்த அதிகாரி பேச்சுக்கு ஊட்டுல ஒரு துளியும் கௌரவம் கெடயாது சார். எல்லாமே அந்த அம்மா போடற சட்டம்தான். அவுங்க ஒக்காருன்னா ஒக்காரணும். எழுந்திருன்னா எழுந்திருக்கணும். அவருக்கே அந்த நெலமைன்னா நாமெல்லாம் எந்த மூலை சார். பாத்து பாத்து பதமாதான் நடந்துக்குவேன். அப்படியும் மீறி என்னைக்காவது ஒரு நாள் தப்பா நடந்துடும். அப்ப அந்த அம்மா பேசற பேச்ச காதுகுடுத்து கேக்கமுடியாது சார். தெலுங்குல வண்டவண்டயா பேசும். மூஞ்சிமேலயே சாணிய கரச்சி ஊத்தறாப்புல இருக்கும். ஏழயா பொறந்துட்டு இதுக்கெல்லாம் கோவிச்சிக்கமுடியுமா? மாரியாத்தா தாயேன்னு பல்ல கடிச்சினு தாங்கிக்குவேன். ஒரு வேள சோத்துக்குக்கூட வழியில்லன்னுதான இந்த வேலைக்கு வந்தம், மானம் ரோசம்லாம் பாத்தா எங்க போயி நிக்கறதுன்னு பல்ல கடிச்சினு போயிடுவேன். நான் பட்டினியா கெடக்கலாம், நான் பெத்த புள்ளைங்கள பட்டினியா போடலாமா சொல்லுங்க?" அவள் விசாரித்த தடம் எண் இருநூற்றியொன்று பேருந்து வந்து நின்றதைக் கவனித்ததும் மெதுவாக "நீங்க கேட்ட பஸ்...." என்று இழுத்தேன். ஒரு பெருங்கூட்டத்தையே தனக்குள் திணித்துக்கொண்டு நின்ற பேருந்தை திகைப்போடு ஒருகணம் பார்த்துவிட்டு "அடுத்த பஸ்ல போறன் சார்" என்றாள். அவள் சொல்வதையெல்லாம் மனமுருகக் கேட்டபடி இருந்தாலும், தன் கதையையெல்லாம் அவள் எதற்காக என்னிடம் பகிர்ந்துகொள்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளூர குழப்பமாக இருந்தது.

     "ரெண்டு நாளுக்கு முன்னால பையனுக்கு ரொம்ப காய்ச்சல் சார். வேலைக்கி வரதுக்கு முன்னால ஆஸ்பத்திரில காட்டிரலாம்ன்னு போனன். போன எடத்துல ரெண்டுமூணு மணிநேரம் கூடவே ஆயிடுச்சி. அப்படியும் பன்னெண்டு மணிக்குலாம் வந்துட்டேன். கதவத் தெறந்ததுமே அந்த அம்மா ஒரே ஆர்ப்பாட்டம் சார். ஒன்ன நம்பிதான துணிலாம் ஊற வச்சிருக்கன். நேரத்துக்கு வராம, இப்பிடி சித்தன் போக்கு சிவன்போக்குன்னு வந்தா என்னடி அர்த்தம்? பெரிய மகாராணியா நீ? என்ன நெனச்சிக்கற ஒன் மனசுலன்னு ஆரம்பிச்சி வாய்க்கு வந்ததயெல்லாம் பேசிட்டுதான் அடங்கிச்சி. "

     என் உடலில் ஒருவித நடுக்கம் பரவுவதை உணர்ந்தேன். ஒருபோதும் கடுமையாகப் பேச முடியாதவன் நான். அப்படி யாராவது பேசுவதையும் தாங்கிக்கொள்ளும் சக்தி இல்லாதவன். சாவித்திரி சொன்னதைவிட சொல்லாதது இன்னும் பத்து மடங்கு இருக்கக்கூடும் என்று தோன்றியது. தாங்கிக்கொள்ள முடியாத ஏதோ ஒன்றுமட்டும் மிதந்து வெளியே விழுந்துவிட்டது.

     "இன்னிக்கும் ஆஸ்பத்திரிக்கு போவற வேல இருக்குது, கொஞ்சம் லேட்டா வரன்னு நேத்து கௌம்பும்போதே சொல்லிட்டுதான் சார் கௌம்பனேன். அந்த பாழா போன ஆஸ்பத்திரில டாக்டரு இருந்தா ஊசி போடறவன் இல்ல, ஊசி போடறவன் இருந்தா மாத்திர குடுக்கறவன் இல்ல. ஒரொரு எடத்துக்கும் லோள்பட்டு லொங்கழிஞ்சி வந்து சேர்ரதுக்குள்ள மத்தியான நேரமாய்டுச்சி. ஆள பாத்ததுமே அந்த அம்மாவுக்கு உச்சந்தலை வரைக்கும் ஏறிடுச்சி கோவம்.  இடிஇடிக்கறமாதிரி ஆஊன்னு ஒரே சத்தம். ஒரு மணிநேரம்னு சொல்லிட்டு, அரநாளு வரிக்கும் என்னடி செஞ்ச? ஆஸ்பத்திரிக்குத்தான் போனியா? எவன்கூடயாச்சிம் சுத்திட்டு வரியா? வேலைன்னா ஒரு ஒழுங்கு வேணாமா? எந்த நேரம் வேணுமின்னாலும் வந்து எந்த நேரம் வேணுமின்னாலும் போவறதுக்கு இது என்ன சத்தரமா சாவடியா? என்ன நெனச்சினுகிற ஒன் மனசுல? ஹெளஸ்கீப்பிங் காரனுக்கு ஒரேஒரு போன் போட்டு சொன்னா போதும்டி, ஒன் சீட்ட கிழிச்சி இன்னிக்கே வெளிய தொரத்தி உட்டுருவான் தெரியுமான்னு வாய் ஓயாம பேசிகினே  போனாங்க."

     "இதான் காரணம்ன்னு ஒரு வார்த்த சொல்லவேண்டிதுதான?"

     "வேற வெனயே வேணாம் சார். ஒரு வார்த்தைக்கு ஈடா ஆயிரம் வார்த்த பேசுவாங்க அவுங்க. அதெல்லாம் தெரிஞ்ச கதைதான் சார். அதனால அவுங்க பேசறதயே காதுல வாங்கக்கூடாதுன்னு மொதல்ல சமயல்கட்டு பக்கம் போய் நின்னேன். அப்பறம் துணிதொவைக்கலாம்ன்னு போனன். அத முடிச்சிட்டு ஹால்பக்கமா பெருக்கலாம்ன்னு தொடப்பத்த எடுத்துகினு வந்தன். எங்க போனாலும் பின்னாலியே வந்து மைக்குல பேசறாப்புல பேசிகினே இருந்தாங்க."

     "கடவுளே, இப்படியுமா ஆளுங்க இருப்பாங்க?"

     "எதுக்குமே நான் வாய தெறக்கலை சார். ஏதோ ஒரு வேள சோத்துக்கு கடவுள் காட்டியிருக்கற வழியில நாமளே மண்ணள்ளி போட்டுக்கக்கூடாதுன்னு பேசாம இருந்துட்டேன். அதயும் அந்த அம்மாவால தாங்கிக்கமுடியலை. வாய்ல என்னடி வச்சிருக்க? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமாட்டியா? அந்த அளவுக்கு கொழுப்பேறிடுச்சான்னு அதுக்கு ஒரு அரமணிநேரம்  பேச்சு ஏச்சு. கடசியா அவுங்க மனசுல என்ன நெனச்சாங்களோ தெரியலை, அகங்காரம் புடிச்சவளுக்கெல்லாம் என் ஊட்டுல எடம் கெடயாது, மொதல்ல வெளிய போன்னு ஒரேவடியா சத்தம் போட்டாங்க. எனக்கு கையும் ஓடலை. காலும் ஓடலை. ஒடம்புலாம் நடுங்குது. அந்த அம்மாவுக்கு ரத்தம் கட்டனமாதிரி மூஞ்சியே செவந்துபோச்சி. போ போன்னு சத்தம் போட்டாங்க. வரவே கூடாது நீ? இந்த வாசப்படியே மிதிக்கக்கூடாது நீ. ஜி.எம்.கிட்ட  ஒரு வார்த்த சொன்னா போதும், இனிமேல எந்த ஹெளஸ்கீப்பிங்காரனும் ஒன்ன எடுக்காதபடி செய்யறதுக்கு என்னால முடியும் தெரியுமான்னு வெரல நீட்டிநீட்டி பேசனாங்க. எதுவும் பேசாம அங்கயே நின்னதுமே, போ போன்னு வாசல்பக்கமா கைய காட்டி சத்தம் போட்டாங்க. மத்த வீட்டுக்காரங்கள்ளாம் வெளிய வந்து வேடிக்க பாக்கற அளவுக்கு ஆயிடுச்சி.  எதுவும் பதில் பேசாம வெளிய வந்துட்டேன்" கலங்கித் தளும்பிய அவளுடைய கண்களைப் பார்க்கப்பார்க்க வருத்தமாக இருந்தது. மேற்கொண்டு எந்தக் கேள்வியையும் நான் அவளிடம் கேட்கவில்லை. அவளாகவே ஒரு சமநிலைக்கு வந்த பிறகு பேசட்டும் என்று அமைதியாக இருந்தேன். எனக்குரிய ஒரு பேருந்தும் அவQக்குரிய ஒரு பேருந்தும் அமைதியாக வந்து நின்று ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்றன.

     "காம்ப்ளெக்ஸ்லதான வேல செய்றிங்க, எங்க ஜி.எம்.கிட்ட எனக்காக ஒரு வார்த்த சொல்லிப் பாக்கறிங்களான்னு கேக்கலாம்ன்னுதான் ஒங்ககிட்ட பேச வந்தன். அந்த அம்மா பேசன பேச்ச கேட்டப்பறமா, நாளைக்கி என்ன உள்ள உடுவாங்களேன்னே தெரியலை" மிகவும் நம்பிக்கையோடு அவள் என்னைப் பார்த்தாள்.

     "முன்னபின்ன எனக்கு பழக்கமே இல்லாதவரும்மா அவரு. என் பேச்ச எப்படிம்மா கேப்பாரு?" தயக்கத்தோடும் ஒருவித இயலாமையோடும் சொன்னேன். அவர் விழிகளில் உடனடியாக வெளிப்பட்ட ஏமாற்றத்தை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. "பாழாப் போன காச்சலால என் தலயில இப்பிடி ஒரு இடி எறங்கிடுச்சி சார். ஒரு வேளை சோத்துக்குன்னு இருந்த வழியில நானே முள்ள வாரி போட்டுகிட்டேன். ஏழைபாழைங்களுக்கெல்லாம் காய்ச்சலு கீச்சலுன்னு வரவே கூடாது. வந்தா ஒரேடியா அள்ளிகினு போயிடணும்..." என்னை நோக்கியதாக இல்லாமல் பக்கத்திலிருந்த தூணையும் பாறையையும் பார்த்தபடி தனக்குள்ளாகவே பேசினார். அந்தப் புலம்பல் இன்னும் துயரம் தருவதாக இருந்தது. அவரை எப்படி ஆறுதல்படுத்துவது என்று சில கணங்கள் யோசனையாக இருந்தது.

     "நீங்க பயப்படறமாதிரிலாம் ஒன்னும் நடக்காதும்மா. அந்த அம்மா ஏதோ ஒரு வேகத்துலதான் அப்படி பேசியிருக்கணும். பொதுவா அதிகாரிங்க மனைவிங்க எல்லாருக்குமே இப்பிடி ஒரு வெறியும் பைத்தியமும் உண்டு. அதிகாரி நாலு பேர மெரட்டறமாதிரி தன்னாலயும் நாலுபேர உருட்டிமெரட்டி வேல வாங்கமுடியும்ன்னு இந்த உலகத்துக்குக் காட்டறதுக்கு நெனைப்பாங்க. இது மனசுக்கு வரக்கூடிய காய்ச்சல். அவுங்க இல்லாம ஒங்களால வாழமுடியும். ஆனா ஒங்களமாதிரி ஆளுங்க இல்லாம அவுங்களால வாழவே முடியாது. அதனால கவலயே படாதிங்க. நாளைக்கு வழக்கம்போல வேலைக்கு போங்க. ரெண்டு சத்தம் போட்டா போட்டுகிடட்டும். பதில் சொல்லாம அமைதியா கேட்டுக்குங்க. முடிஞ்சா ஒரு தரத்துக்கு ரெண்டு தரம் ஒரு சாரி சொல்லுங்க. ஒங்களத்தாம்மா நம்பியிருக்கோம்னு சும்மா ஒரு வார்த்த சொல்லிவைங்க. அது போதும். யாரும் ஒங்கள வெளிய அனுப்பமுடியாது, போய்வாங்க. எதுவுமே நடக்கலைன்னா, கடசி கட்டமா  ஒங்க கம்பெனிகாரங்கள விட்டே பேசவைக்கலாம். தைரியமா போய்வாங்க."

     கிளம்பும்வரை சாவித்திரிக்கு என் வார்த்தைகளில் நம்பிக்கை வரவே இல்லை. அவரை அமைதிப்படுத்தி அனுப்பிவைக்கச் சொன்ன வார்த்தைகளாகவே அவற்றை எடுத்துக்கொண்டாள். உண்மையிலியே சேத்துக்குவாங்களா சார் என்று பலமுறை திரும்பத் திரும்பக் கேட்டபடியே இருந்தாள். அவள் பேருந்து பிடித்துச் சென்றபிறகு நான் எனக்குரிய வண்டியில் ஏறி வீட்டையடைந்தேன்.

     பயணத்திலும் அன்று இரவு உறக்கத்துக்கிடையிலும் பலமுறை அவள் வார்த்தைகள் காதில் ஒலித்தபடியே இருந்தன. ஒருவேளை சோத்துக்கு என்ற சொற்கள் ஆழத்தில் தைத்தன. எல்லாருமே ஏதோ ஒரு வகையில் உணவுத்தேவையை சமாளிக்க உழைக்கிறவர்கள்தான். ஆனால் அந்த வார்த்தையை எல்லாரும் பயன்படுத்துவதில்லை. ஒருசிலர்மட்டுமே அதை அடிநெஞ்சிலிருந்து வெளிப்படுத்துகிறார்கள். அதற்கான காரணம் எதுவாக இருக்கும் என்று யோசனையில் உழன்றபடி இருந்தபோதே, விடையைக் கண்டடைந்தது மனம். உழைப்பின் வழியாகக் கிடைக்கிற வருமானம்தான் அதைத் தீர்மானிக்கிற சக்தி. சிலர் வருமானம் உணவுத் தேவையைத் தாண்டி, இன்னும் பல தேவைகளையும் தீர்த்துவைக்கும் அளவுக்கு சக்தியுள்ளதாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் உரையாடலில் உணவைப்பற்றிய பேச்சே இடம்பெறுவதில்லை. வீடு, வாசல், வாகனம், சொத்து என பல திசைகளில் உணவைத் தாண்டிய தேவைகளைநோக்கி விரிந்துபோகிறது. சிலர் வருமானம் உணவுத்தேவையைத் தீர்த்துக்கொள்ளவே முடியாதபடி பற்றாக்குறையாக இருக்கிறது.  அவர்கள் மனஆழத்தில் உள்ளூர உணவைப்பற்றிய அச்சம் எப்போதும் நெருப்பாக கொழுந்துவிட்டு எரிந்தபடியே இருக்கிறது. அதன் வெப்பமே அவர்களை அறியாமல் சொற்களாக வெடித்து விழுகிறது. வள்ளுவரின் இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுகஇவ்வுலகியற்றியான் என்னும் சுடுவரிகளே உடனடியாக நினைவில் வந்தன.

     மறுநாள் காலை பயணத்தின்போது எதிர்பாராதவிதமாக சார்லி சாப்ளின் வாழ்க்கைவரலாற்றை நினைத்துக்கொண்டேன். அதைப் படித்தவர்கள் யாருமே, அவர் தன் தாயைக் குறித்து எழுதியிருக்கும் வரிகளை மறக்கமாட்டார்கள். கல்லையும் கரையவைப்பவை அவ்வரிகள். கணவன் வேறொரு பெண்ணை மணந்துகொண்டு சென்றுவிட்டதால், அந்தத் தாய் குழந்தையான சாப்ளினையும் அவருடைய சகோதரரையும் தன்னந்தனியே பல சிரமங்களுக்கிடையே வளர்க்கிறார். மலைபோல அவர் நம்பியிருந்த நாடக அரங்கும் சர்க்கஸ் அரங்கும் அவரைக் கைவிட்டுவிடுகின்றன. தீராத வறுமையில் வாடுகிறது அந்தக் குடும்பம். வாடகை கொடுக்கமுடியாமல் பல முறை வீடு மாறுகிறார்கள். ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு கிடைத்தால்கூட போதும் என்னும் அளவுக்கு வறுமையில் தவிக்கிறார்கள். வறுமையிலிருந்து மீளமுடியவில்லையே என்கிற எண்ணமே தீராத வேதனையாக மாறி, அவரை மனநோயாளியாக சிதைத்துவிடுகிறது. அவர் மருத்துவமனைக்குச் செல்ல, குழந்தைகள் ஆதரவற்றோர் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பல ஆண்டுகள் தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிக்கும் உழைப்புக்கும் ஒருநாள் நல்ல பலன் கிடைக்கிறது. சாப்ளின் ஓரளவு பொருளாதார அளவில் நல்ல நிலையை அடைகிறார். தன் தாயை தன்னோடு வைத்துக்கொண்டு தக்கமுறையில் கவனிக்கவேண்டும் என்பது அவருடைய நீண்டநாள் ஆசை. ஆனால் துரதிருஷ்டவசமாக அது கடைசிவரை நிறைவேறவே இல்லை. மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வருவதும் பிறகு சில மாதங்களிலேயே மீண்டும் மனச்சிதைவுக்கு ஆளாகி மருத்துவமனைக்குச் செல்வதுமாகவே அவர் வாழ்க்கை கடைசிவரை கழிந்துபோகிறது. ஆறுதலாகப் பேச வந்த சாப்ளினிடம் அவர் "ஒருமுறை உங்களுக்கெல்லாம் சின்ன வயதில் ஒரு வேளை உணவைக்கூட ஒழுங்காக தரமுடியாமல் தவித்து அலைந்த காலத்தில், அந்த இயலாமையே ஒரு சுமையாக மாறி உருவான அழுத்தத்தின் கொடுமையை என்னால் மறக்கவே முடியவில்லை மகனே. அதிலிருந்து ஒருகணம்கூட என்னால் மீண்டு வரும் வழி புரியாமல் குழம்பிக்குழம்பித் தவிக்கிறேன்" என்று சொல்கிறார். குணமாகாமலேயே அவர் வாழ்வு மருத்துவமனையில் முடிவடைந்துவிடுகிறது. சாப்ளினின் தாயையும் ஒருவேள சோத்துக்கு வழியில்லன்னுதானே இந்த வேலைக்கு வந்தம் என்று கண் தளும்ப நின்ற சாவித்திரியையும் தற்செயலாக என் மனம் இணைத்துப் பார்த்து அதிர்ச்சியில் மூழ்கியது. கடவுளே, அப்படியெல்லாம் நேரவே கூடாது என்று பதற்றத்தோடு மறுகணமே எனக்குள் முனகினேன்.

     அன்று பகல்முழுக்க அலுவலகத்தில் நிலைகொள்ளமுடியாமல் தவிப்பாக இருந்தது. சாவித்திரி வந்திருக்கக்கூடும், வேலைக்குச் சேர்ந்திருக்கக்கூடும் என்றெல்லாம் ஒருபக்கம் நம்பிக்கையாக இருந்தாலும் வெளியே போ என்று தள்ளியிருக்கக்கூடுமோ என் மற்றொரு பக்கம் அவநம்பிக்கையாகவும் இருந்தது. அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் மனம் ஒருவகையில் குரங்குபோல. இப்படியும் தாவலாம். அப்படியும் தாவலாம். ஒருவேளை சாவித்திரியின் முகம் தட்டுப்படும் என்கிற எண்ணத்தில் குடியிருப்பு அடுக்ககத்துக்கருகே  இரண்டுமூன்று முறை குறுக்கும் நெடுக்குமாக நடந்துவிட்டுத் திரும்பினேன். வழக்கத்தைவிட அதிக நேரம் பூவரச மரத்தடியிலும் நந்தியாவட்டைச் செடியருகிலும் எதிர்பார்ப்போடு நின்று ஏமாற்றமடைந்தேன்.

     பொழுது சாயச்சாய என் நம்பிக்கை குறைந்துகொண்டே வந்தது. பேருந்து நிறுத்தத்திலும் கூடுதலாகவே கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்த்துவிட்டு, கிளம்பினேன். அதிகாரியின் மனைவியைப்பற்றிய என் கணிப்பு பொய்த்துவிட்டதோ, சாவித்திரி வெளியேற்றப்பட்டிருப்பாளோ, பாவம், சின்னக் குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன பாடுபடுகிறாளோ என்றெல்லாம் குழப்பத்தில் சோர்வடைந்திருந்தது மனம். இரவு முழுக்க ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத சிந்தனைகள்  தோன்றித்தோன்றி மறைந்தன.

     மறுநாள் காலையில் நந்தியாவட்டைச் செடியருகில் சாவித்திரியைக் காணமுடியாததால் தொடங்கிய ஏமாற்றம் மாலை பேருந்து நிறுத்தம்வரைக்கும் தொடர்ந்தபடியே இருந்தது. வழக்கம்போல உட்கார்ந்துசெல்ல வசதியாக ஏதாவது வண்டி வரக்கூடும் என்று சாலையையே பார்த்துக்கொண்டிருந்த தருணத்தில் "நல்லா இருக்கியா சார்?" என்ற கேள்வியோடு வந்து நின்றாள் சாவித்திரி. திரும்பி அவளை நேருக்குநேர் பார்த்த கணத்தில் மொத்த மனபாரமும் வடிந்துபோனது. அவள் கண்களில் ஒரு நிம்மதிக்கீற்று சுடர்விடுவதை என்னால் பார்க்கமுடிந்தது. நான் பேசத் தொடங்குவதற்குள் "நீங்க சொன்னபடிதான் சார் நடந்திச்சி. நேத்து காலையில போய் வாசல்ல நின்னதும் வெறிபுடிச்சமாதிரி ஒரே சத்தம். அவளே இவளேன்னு கன்னாபின்னான்னு கேட்டாங்க. எதுக்கும் பதில் சொல்லாம கல்லுமாரி நின்னுட்டிருந்தேன். அஞ்சிபத்து நிமிஷத்துக்கு அப்பறமா அவுங்களே போ போ, குப்பையாட்டமா துணிங்க கெடக்குது, போய் தொவச்சி போடு போன்னு சொன்னாங்க. அதுக்கு அப்பறமாதான் எனக்கு நிம்மதியாச்சி. என்ன வேணுமின்னாலும் சொல்லிக்கோ தாயே, என் சோத்துல மண்ணள்ளி போடாம இருந்தியே, அதுவே போதும்ன்னு ஒக்காந்துட்டேன். ஒடுங்கிய கன்னங்களிடையே அவள் புன்னகையைப் பார்த்தபோது சற்றே நிம்மதியாக இருந்தது.

     "எதுக்கும் பயப்படாதிங்கம்மா. ஒழைக்கத் தெரிஞ்சவங்களுக்கு வாழ்க்கையில எப்பவுமே எதாவது ஒரு வழி இருந்துகிட்டேதான் இருக்கும் .."

     நான் சொல்லிமுடிக்கும் முன்பாகவே மறுபடியும் பேசத் தொடங்கினாள் சாவித்திரி. "நேத்து நானே கொஞ்ச நேரம் கூடுதலா இருந்து வேலை செஞ்சிட்டு வந்தன் சார். ஒங்கள பாக்க முடியலை. இன்னிக்காவது பாத்து சொல்லணும்ன்னுதான் சீக்கிரமா வந்தேன். என்னதான் ராட்சசியா இருந்தாலும் மனசுவந்து நேத்து ஒத்துகினாங்களே, அதுவே பெரிய புண்ணியம்தான் சார். ஒருவேள ஒத்துக்காம போயிருந்தா, கண்டிப்பா எனக்கு  பைத்தியமே புடிச்சிருக்கும் சார்.  அந்த அளவுக்கு கொழம்பி போயிருந்தன்." அவள் கைவிரல்கள் கிழிந்துபோன கைப்பையை உறுதியாகப் பற்றியிருந்தன.

 

( வடக்கு வாசல், 2009)