Home

Monday 12 April 2021

நான் கண்ட பெங்களூரு - முன்னுரை

 

கடந்த ஆண்டில் ஒரு நாள் வழக்கம்போல தொலைபேசியில் உரையாடியபோதுஉங்கள் நினைவில் பதிந்திருக்கிற பெங்களூரைப்பற்றி  ஒரு புத்தகம் எழுதவேண்டும்என்று நண்பர் நடராஜன் சொன்னார். அப்போது தொடர்ந்து சிறுகதைகளை எழுதும் முனைப்பில் மூழ்கியிருந்தேன். ”சரி, எழுதுகிறேன்என்று அவருக்கு அக்கணத்தில் பதில் சொன்னபோதும் கதைகளின் உலகத்திலேயே வாழ்ந்திருந்தேன்.

சில வாரங்களுக்குப் பிறகு வேறொரு தகவலைப்பற்றிக் கேட்பதற்காக நடராஜன் மீண்டும் தொலைபேசியில் அழைத்தார். உரையாடலின் முடிவில், பேச்சோடு பேச்சாக பெங்களூரு புத்தகம் எழுதுவது தொடர்பான விஷயத்தை மீண்டும் நினைவூட்டினார். இரு தொகுதிகளுக்கான அளவுக்கு கதைகளை எழுதிமுடித்துவிட்டு, ஏதோ வேகத்தில் கட்டுரைகளின் திசையில் அப்போது திரும்பியிருந்தேன். அப்போதும்நினைவிருக்கிறது, எழுதுவேன்என்று சொன்னேனே தவிர, எழுதுவதற்கான விசை மனத்தில் திரண்டெழவில்லை. இப்படி ஐந்தாறு முறைக்கும் மேல் நடந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் வேறுவேறு வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதில் முனைந்திருந்தேனே தவிர, பெங்களூரு புத்தகத்தின் தொடக்கத்துக்கான பிடி கிடைக்கவில்லை.

ஒருநாள் அஞ்சலகத்துக்குச் சென்று திரும்பும் வழியில்  தற்செயலாக என் பழைய நண்பரொருவரைச் சந்தித்தேன். எங்கள் அலுவலகம் சேஷாத்ரிபுரத்தில் இருந்தபோது, நாலைந்து கட்டடங்களுக்கு அப்பாலிருந்த இந்தியன் வங்கியில் பணிபுரிந்தவர் அவர். அந்த வங்கியில்தான் நான் கணக்கு வைத்திருந்தேன் .ஒருநாள் வங்கிக்குச் சென்றபோது நான் கையில் வைத்திருந்த இந்தியா டுடே தமிழிதழைப் பார்த்துவிட்டுஒரு நிமிஷம் பார்த்துட்டு தரட்டுமா?” என்று கேட்டு வாங்கி வேகவேகமாகப் புரட்டினார். அவருடைய ஆர்வத்தைப் பார்த்துவிட்டுவீட்டுக்கு எடுத்துச் சென்று பொறுமையா படிங்க சார், நான் நாளைக்கு வந்து வாங்கிக்கறேன்என்று சொன்னேன். மீண்டும் மீண்டும் நன்றி சொன்னபடி அந்த இதழை தன் மேசை இழுப்பறைக்குள் வைத்துக்கொண்டார் அவர். ”நாங்க இருக்கிற வட்டாரத்துல தமிழ்பத்திரிகையே கிடைக்கறதில்லை சார். சென்னையில இருக்கிற வரைக்கும் வாராவாரம் எல்லாத்தயும் படிப்பேன். இங்க எந்த பத்திரிகையையும் பார்க்க முடியாம பைத்தியம் புடிச்சமாதிரி ஆயிட்டுதுஎன்று சிரித்தார். அப்படித்தான் நாங்கள் நண்பர்களானோம்.

இன்னும் சர்வீஸ்ல இருக்கீங்களா, ரிட்டயராய்ட்டீங்களா சார்?” என்று ஆவலுடன் கேட்டார் நண்பர்.

ரிட்டயராகி மூனு வருஷமாச்சிஎன்றேன்.

இருக்கும் இருக்கும்என்றபடி மனசுக்குள் சில கணங்கள் ஏதோ கணக்குப் போட்ட பிறகுபாத்துக்க வாய்ப்பே இல்லாததால, ரிட்டயர்மென்டுக்குப் பிறகு சொந்த  ஊருக்கே திரும்பிப் போயிருப்பீங்கன்னு நெனச்சேன்என்றார். பிறகு அவராகவேநானும் ரிட்டயராகி ரெண்டு வருஷம் ஓடிட்டுது சார். அடுத்த மாசமே வீட்ட காலி பண்ணிட்டு சேலத்துக்கு போயிட்டோம். அங்க போன பிறகுதான் பொண்ணுக்கு கல்யாணத்த முடிச்சோம். இப்ப வீட்டுல நாங்க ரெண்டு பேருதான். அக்கம்பக்கத்துலயே அம்மா, அப்பா, அண்ணன் தம்பிங்க  எல்லாரும் இருக்கறதால மனசுக்கு நிம்மதியா இருக்குதுஎன்று தெரிவித்தார்.

இப்ப எப்படி இந்தப் பக்கம்…?” என்று இழுத்தேன்.

, அதுவா? பழைய கலீக் ஒருத்தர் பொண்ணுக்கு இன்னைக்கு காலையில கல்யாணம். அவசியம் வரணும்ன்னு சொன்னாரு. அதான் வந்தேன்என்றார் அவர். தொடர்ந்துஇந்த ஊருல எதுக்கு சார் தனியா கஷ்டப்படறீங்க? பேசாம சொந்த ஊருக்கே கெளம்பிப் போங்க சார். ஆயிரம் வசதி இருந்தாலும் சொந்த ஊரு போல வருமா?” என்று ஆலோசனை சொன்னார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்னு படிச்சிட்டு சொந்த ஊர், சொந்தமில்லாத ஊர்னு எப்படி சார் பிரிச்சி பார்க்கமுடியும்? எல்லா ஊரும் ஒன்னுதானே சார். இருக்கற ஊரை சொந்த ஊரா நெனச்சிக்கிறதுதான புத்திசாலித்தனம்?”

நான் அப்படி பதில் சொல்வேன் என அவர் எதிர்பார்க்கவில்லை. சில கணங்களுக்குப் பிறகுஅந்த அளவுக்கு அதிசயமா இந்த ஊருல என்ன  சார் இருக்குது?” என்று கேட்டார்.

ஏதாவது இருந்தாதான் ஒரு ஊர் மனசுக்கு பிடிக்கணுமா என்ன? அப்படி பார்த்தா, மொத்தத்துல இந்த ஊரே எனக்கு புடிச்சிருக்குது. முப்பது வருஷம் வாழ்ந்த ஊர எப்படி சார் திடீர்னு ஒருநாள் தூக்கி போட்டுட்டு போகமுடியும்? அதனாலதான் இங்கயே இருக்கலாம்னு முடிவு செஞ்சிட்டேன்

நல்ல வேளையாக, அந்த உரையாடல் அதற்குமேல் தொடரவில்லை. வேறு செய்திகளையொட்டியதாக பேச்சு மாறிவிட்டது. அருகில் தென்பட்ட ஒரு கடைக்குச் சென்று இருவரும் காப்பி அருந்தினோம். பிறகு அவர் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.

வீட்டுக்குத் திரும்பும் வழியில்அதிசயமா இந்த ஊருல என்ன சார் இருக்குது?” என்று அவர் கேட்ட கேள்வியை முன்வைத்து யோசித்துக்கொண்டே வந்தேன். அவருக்கு எப்படியோ, எனக்கு எல்லாமே அதிசயங்களாகவே  தோன்றின. இந்த நகரத்தின் ஏரிகள், பூங்காக்கள், மரங்கள், கலைச்சின்னங்கள், கோட்டைகள், குன்றுகள், வரலாற்றுச்சின்னங்கள், நாடகங்கள், யட்சகானம், இசைவிழாக்கள், கோவில்கள் ஒவ்வொன்றும் எனக்கு அதிசயமே. நாள்தோறும் இந்த அதிசயங்களுக்கு நடுவில் வாழ்ந்துவிட்டு, இன்று திடீரென என்னால் எப்படி உதறிவிட்டுச் செல்லமுடியும்?

அக்கணத்தில் சட்டென நண்பர் நடராஜன் எப்போதும் வலியுறுத்திவந்த கோரிக்கை நினைவுக்கு வந்தது. வங்கி நண்பரின் கேள்விக்கான பதில்களைத் தொகுப்பதன் வழியாக, நடராஜனின் விருப்பத்தை எளிதாக நிறைவுசெய்துவிடலாம் என்றும் தோன்றியது.

அன்று இரவே ஒரு வேகத்தில் முதல் அத்தியாயத்தை எழுதினேன். எழுத எழுத நினைவுகள் வெள்ளமென பெருக்கெடுத்து வரத் தொடங்கின. ஒரு தருணம் நினைவிலெழும்போது, அத்தருணத்தில் கண்ட மனிதர்களின் முகங்கள், சொற்கள், சூழல்கள், உணர்ச்சிகள், உரையாடல்கள், நிகழ்ச்சிகள் என அனைத்தும் பின்னிப்பிணைந்ததாக எழுவதே வழக்கம். நான் எதையும் கூட்டவுமில்லை. குறைக்கவுமில்லை. எந்தக் கட்டுப்பாடுமின்றி நினைவுக்கு வந்ததையெல்லாம் எழுதிக்கொண்டே சென்றேன். ஒவ்வொரு நாளும் ஓர் அத்தியாயம் எழுதினேன். நாற்பது நாட்களில் நாற்பது அத்தியாயங்கள்.

நாற்பது அத்தியாயங்களையும் தொகுக்கும் விதமாக, இன்று அனைத்தையும் ஒருசேரப் படிக்கும் தருணத்தில் இக்கட்டுரைகளில் இந்த மாநகரில் எனக்குப் பிடித்த ஒவ்வொரு இடமும் நண்பர்களின் முகங்களும் அழகான கோட்டோவியங்களாக வெளிப்பட்டிருப்பதை உணரமுடிகிறது. இவற்றின் சாரத்தைச் சுவைத்தே நான் உருவாகி வந்திருக்கிறேன். ஒரு மாபெரும் நாவலின் சின்னச்சின்ன பாத்திரங்களைப் போல இவை காட்சியளிக்கின்றன.

1989ஆம் ஆண்டு நான் பெங்களூருக்கு வந்தேன். அப்போது முப்பது வயது இளைஞன் நான். இந்தத் தொகுதியில் உள்ள கட்டுரைகளின் பின்னணி நிகழ்ச்சிகள் அனைத்தும் 1989க்கும் 1992க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை. இதற்குப் பிறகான காலகட்டச் சித்திரங்களை இனிமேல்தான் எழுதவேண்டும். இந்த நிகழ்ச்சிகளில் சித்தரிக்கப்படும் பல இடங்கள் இன்று இல்லை. குறிப்பாக பேகம் மகால் இல்லை. சீனா மணி இல்லை. லிபர்ட்டி, எல்ஜின், நடராஜா, சென்ட்ரல் என பல திரையரங்குகள் இல்லை. ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்த பின்னி மில் இல்லை. ப்ரீமியர் புக் ஷாப் இல்லை. திருக்குறள் மன்ற நூலகமும் இல்லை. ஆயினும் அவையனைத்தும் என் நினைவின் அடுக்குகளில் பாதுகாப்பாக உள்ளன. பெங்களூரைப்பற்றி அசைபோடும்போதெல்லாம் இவையும் இணைந்தே நினைவில் எழுகின்றன.

இந்தக் கனவை எனக்குள் விதைத்த நண்பர் நடராஜனை இக்கணத்தில் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். அவர் உருவாக்கிய விசையால்தான் இந்தக் கட்டுரைகளை எழுதிமுடித்தேன். இந்த நாற்பது நாட்களும் முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை வாழ்ந்ததுபோல இருந்தது. ஒவ்வொரு கட்டுரையையும் எழுதி முடித்ததுமே முதல் வாசகியாக படித்தவள் என் அன்பு மனைவி அமுதா. பல கட்டுரைகளில் அவளும் ஒரு பாத்திரமாகவே வருவதால், அந்தப் பழைய காலத்தை நினைவுக்குக் கொண்டுவந்து அசைபோடும்போதெல்லாம், அவள் முகத்தில் படரும் பரவசத்தை பலமுறை பார்த்திருக்கிறேன். அது ஒரு தனி அனுபவம். என் முயற்சிகளில் எப்போதும் எனக்கு உற்ற துணையாக விளங்கும் அமுதாவுக்கு என் கனிந்த அன்பு.  நண்பர்கள் பழனியும் கே.பி.நாகராஜனும் நல்ல ரசனையுணர்வு மிக்க வாசகர்கள். இக்கட்டுரைகளை மின்னஞ்சலில் அனுப்பிவைத்த வேகத்தில் படித்துவிட்டு ஒவ்வொரு முறையும் அவர்கள் நிகழ்த்திய உரையாடல்கள் எனக்குப் பயனுள்ளதாக இருந்தன. அவ்விருவருக்கும் என் அன்பார்ந்த நன்றி.

காவ்யா சண்முகசுந்தரம், முகம்மது அலி, மகாலிங்கம் மூவரும் நான் பெங்களூரில் அடியெடுத்து வைத்த நாள்தொடங்கி இன்றுவரை என் மீது மாறாத அன்போடும் மதிப்போடும் நட்பு பாராட்டி வருபவர்கள். அம்மூவருக்கும் இந்தப் புத்தகத்தை வணக்கத்துடன் சமர்ப்பணம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். புத்தகத்தை மிகச்சிறந்த முறையில் வெளியிட்டிருக்கும் என் அன்புக்குரிய நண்பரும் பதிப்பாசிரியருமான சந்தியா நடராஜனுக்கும் என் மனமார்ந்த நன்றி