Home

Monday 26 April 2021

ஏரியின் அமைதி - கட்டுரை

 

          ஐப்பசி மாதத்தில் தீபாவளிக்கு முன்பாகவோ அல்லது பிறகோ பொழிகிற அடைமழையில் எங்கள் ஊர் ஏரியில் நீர் நிரம்பத் தொடங்கி அடுத்த பத்து நாட்களில் நிறைந்து வழிவது வழக்கம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக நான் கண்ட எங்கள் கிராமத்து ஏரியின் சித்திரம் நிறம் மாறாமல் என் மனத்துக்குள் தொங்கிக்கொண்டிருக்கிறது. "ஆத்தாடி, சமுத்திரமாட்டம் பொங்கிங்கெடக்குது", "புள்ளகுட்டிங்கள பத்தரமா பாத்துக்குங்கடி, கரபக்கமா போயிடபோவுதுங்க", "ஐநாரப்பனுக்கு கெடாவெட்டி பொங்கல் வைக்கணும்டி அவுரே இல்லன்னா இந்த ஏரிய காபந்து பண்றதுக்கு யாரு இருக்கா?" குடிப்பதற்கான தண்ணீரை அடிகுழாயில் அடித்து பாத்திரங்களில் நிரப்பியெடுக்கிற நேரங்களில் கூடியிருக்கிற பெண்கள் தமக்குள் மாறிமாறிப் பேசிக்கொண்டதெல்லாம் இன்னும் நெஞ்சில் எதிரொலித்தபடி உள்ளது. சின்ன வயதில் நாம் கண்ட ஒவ்வொன்றும் ஆழ்மனம் வரை சென்று அப்படியே புதைந்துவிடுகிறது. கிணற்றுக்குள் விழுந்துவிடும் மரப்பாச்சிப்பொம்மைபோல. நினைவுகளோடும் ரத்தத்தோடும் இரண்டறக் கலந்துவிடுகிறது. நிலத்தில் தூவப்பட்ட எருவைப்போல. அதனாலேயே நினைக்கும் நேரத்திலெல்லாம் அந்தச் சித்திரத்தை ஒரு பழைய புகைப்படத்தொகுப்பைப் பிரித்துப் பார்ப்பதுபோல நெஞ்சின் ஆழத்திலிருந்து பிரித்தெடுத்துப் பார்த்து மகிழ்கிறோம். தற்செயலாக, வேறொரு கிராமத்து ஏரியைப் பார்க்கநேர்கிற தருணங்களில் கூட அதன் உருவில் நம் மனம் நம் ஊர் ஏரியைத்தான் பார்க்கிறது.

          தென்பெண்ணை ஆறு நிரம்பிதும் எங்கள் ஏரிக்கு நீர் வரத்தொடங்கும். ஏற்கனவே பொழிந்த மழையில் அங்கங்கே சின்னச்சின்ன குட்டைகளாக தேங்கி நின்ற பகுதிகளெல்லாம் ஒன்றோடு ஒன்று கலந்துபோகும். ஆற்றுக்கும் ஏரிக்கும் இடையே நீண்ட கால்வாய் இணைப்புண்டு. சின்னச்சின்னதாக நான்கு கிராமங்களின் ஏரிகளைக் கடந்து அது எங்கள் கிராமத்து ஏரிக்கு வந்து சேரும். இதுதான் அந்த வட்டாரத்திலேயே அளவில் பெரிய ஏரி. ஆழங்கால் இணைப்பில் உள்ள கடைசி ஏரி. நான்கு திசைகளிலும் நான்கு மதகுகள் உண்டு. சுற்றியும் உள்ள பத்து பன்னிரண்டு பாளையங்களில் உள்ள நிலங்களின் பாசனத்துக்கு இங்கிருந்துதான் தண்ணீர் போகவேண்டும். ஒருமுறை நிரம்பினால் ஆறுமாத காலம் ஏரி தளும்பியபடியே இருக்கும். ஒரே கொண்டாட்டம்தான். காலாண்டுத் தேர்வு சமயத்தில் நிரம்பத் தொடங்குகிற ஏரி முழு ஆண்டுத் தேர்வு சமயத்தில்தான் வற்றத் தொடங்கும் என்பது எங்கள் விளையாட்டுக் கணக்கு.

          ஏரி நிரம்பிப் பொங்குவதைப் பார்ப்பது எங்களுக்கெல்லாம் ஒரு திருவிழாபோல. வயது வித்தியாசம் இல்லாமல் பெருங்கூட்டமே அப்போது கரையில் நின்று வேடிக்கை பார்க்கும். நாக்கை நீட்டியபடி வேகவேகமாக ஊர்ந்துவரும் ஒரு விலங்குபோல, நுரைபொங்க தரைமீது புதுவெள்ளம் பரவிவரும். கலங்கலாகப் புரளும் புதுவெள்ளத்தைக் கண்டு ஓவென்று இரைச்சலெழுப்புவோம். தைரியமான சில சிறுவர்கள் சட்டென்று உள்ளே இறங்கி, "வாடி கண்ணு வா, வந்து என்ன புடி பாப்பம்" என்று நுரைத்தபடி முன்னகரும் தண்ணீரலைகளின் முன்னால் நின்று நடனமாடுவார்கள். அலை தாவி எழுந்து காலை நனைத்ததும், இன்னும் பின்னால் நகர்ந்து "வாடி வாடி  என் பின்னாலயே வா" என்று நாய்க்குட்டியை அழைப்பதுபோல விரல்களைத் தட்டி அழைத்துவிட்டு குதிப்பார்கள். "மொளச்சி மூணு எல உடல. அதுக்குள்ள என்னா திமிரு பாத்தியா அதுக்கு?" என்று முணுமுப்பார்கள் கரையில் நிற்கும் பெரியவர்கள். சாரல் காற்றில் குளிரும் மார்பின் குறுக்காக கைகளைக் கட்டி சூடேற்றியபடி பரவசமும் அச்சமுமாக பார்த்துக்கொண்டு நிற்போம். அப்படியே படுத்து ஆசைதீர தண்ணீருடன் சேர்ந்து புரளவேண்டும் என்று மனம் துடிக்கும். ஆசையையும் வேகத்தையும் கட்டுப்படுத்தமுடியாமல், சட்டென்று ஓட்டமாக ஓடிப்போய் வெள்ளத்தில் இறங்கிவிடுவோமோ என்கிற கலவரத்தில்  எங்கள் தோள்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருப்பார்கள் அம்மாமார்கள். சிறுகச்சிறுக உயரும் நீர்மட்டம் முதலில் கரைச்சரிவில் பதிக்கப்பட்டிருக்கும் கல்அடுக்குகளைத் தொட்டு, வேலிக்காத்தான் முட்செடியின் வேரை நனைத்து, பிறகு பனைமரங்களைத் தீண்டிவிட்டுத் தளும்பும். கத்தாழைகள் நனைந்துவிட,  கீற்றின் விளிம்புகளோடு பூக்கள்மட்டும் தண்ணீருக்கு வெளியே காற்றில் அசையும்.

          தண்ணீர் நிரம்பிய ஏரியின் சித்திரம் நெருக்கமான ஒரு நண்பனுடைய முகத்தைப்போல எங்கள் கனவுகளில் தினந்தினமும் வரும். தனிமையில் உட்கார்ந்திருக்கும் போது அக்காட்சிக்குத் தகுந்தவிதமாக ஒரு இசையை நம் அகமனம் மீட்டிமீட்டி இணைத்துவிடும். ஏதோ சொல்லவருவதுபோல. எதையோ தயங்கித்தயங்கிக் கேட்பதுபோல. அந்த இசை எல்லாத் தருணங்களிலும் நெஞ்சில் ஒலித்தபடி இருக்கும். யாராவது பக்கத்திலிருப்பவர்கள் ஏரியைப்பற்றி பேசத் தொடங்கினாலோ, பழைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினாலோ, உடனே அந்த இசையின் வேகம் அதிகரிக்கும். மனம் அதிரும்போது ஈரத்துணியைப்போல உடல்நடுங்கி அடங்குவதை உணரமுடியும். கனவும் மயக்கமும் கலந்த நிலையில் அந்த இசையில் திளைத்தபடி உறங்கும் இரவு வேளைகளில், கரையை உடைத்தபடி பொங்கிவருகிற வெள்ளம் சாலைகளையும் வாசல்களையும் கடந்து நுரைத்துக்கொண்டு ஓடும். அடிஅடியாக முழுகும் வீடுகளையும் மரங்களையும் ஆசையும் அச்சமும் கலந்த மனநிலையில் நம் அகவிழி திறந்து கவனித்தபடி இருக்கும்.

          ஏரியின் பக்கத்திலேயே இருக்கும் தெரு என்பதால், எங்கள் மீது பெரியவர்களின் கண்காணிப்பு எப்போதும் இரண்டுமடங்காகவே இருக்கும். தனிமையில் ஏரிப்பக்கம் செல்ல எங்களுக்கு எப்போதும் அனுமதியில்லை. அம்மாவோ அல்லது அப்பாவோதான் விரலைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவார்கள். தண்ணீரை கண்டு குளிக்கிற வேகத்தில் ஆடைகளை கழற்றுகிற பிள்ளைகளைப் பார்த்ததுமே, தெரிந்தவர் தெரியாதவர் வித்தியாம் இல்லாமல் "வேணாம்டா, சொன்னா கேளுங்கடா" என்று கெஞ்சித் தடுக்காத குரலே இருக்கமுடியாது. எல்லாத் திசைகளிலிருந்தும் இந்த மன்றாடுதல் ஒலிக்கும். இளமையின் வேகமும் முரட்டுத் தைரியமும் கட்டுப்பாட்டின் கோட்டைத் தாண்டும் இச்சையும் நிறைந்த இளம்பட்டாளத்தின் காதுகளில் இந்த வார்த்தைகள் விழவே விழாது. ஒவ்வொருவரும் ஒரு அம்புபோலப் பாய்வார்கள். கலங்கலான நீரில் நீந்திக் களிப்பது ஒரு திருவிழாவில் கலந்துகொள்வதுபோன்ற அனுபவம்.

          கரையையொட்டி நின்றிருக்கும் இரண்டு பெரிய ஆலமரங்களின் கிளைகள் ஏரிக்குள் வெகுதூரம் நீண்டு தாழ்ந்து சென்றுமுடியும். மரத்திலேறி, கிளையின்மீது படுத்தவாக்கில் தவழ்ந்துவந்து, கிளையின் நுனியிலிருந்து சிறகுவிரித்தபடி பறந்தெழுகிற ஒரு பறவையைப்போல  தண்ணீருக்குள் தாவிக் குதிக்கிற குறும்புக்காரச் சிறுவர்கள் இரண்டுமூன்று பேர்கள் எல்லாக் காலத்திலும் உண்டு. ஒரு ஆண்டில் பரசுராமனும் ஜெயபாலனும். இன்னொரு ஆண்டில் வரதனும் சுப்பிரமணியனும். வேறொரு ஆண்டில் சின்னசாமியும் சுந்தரமூர்த்தியும். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், ஒருமுறை எல்லாரும் கைதட்டி உற்சாகப்படுத்த, குதிரைவண்டிக்கார வீட்டு கௌரி மரக்கிளையின் உச்சிவரை சென்று தண்ணீருக்குள் தாவிக் குதித்ததை ஒருபோதும் மறக்கமுடியாது. எங்கள் தெருவில் ஆண்களுக்கு நிகரான வீராங்கனையாக இருந்தாள் அவள். ஏரியின் நடுவில் இருக்கிற ஐயனார் திட்டுவரை நிறுத்தாமல் நீந்தித் தொட்டுவிட்டு வருவது, ஆழத்தில் மூச்சடக்கி மண்ணெடுத்துவருவது, மிதந்துபோகிற கிளையை இழுத்து கரையில் போடுவதுவரை ஆண் பிள்ளைகள் ஈடுபடும் எல்லா விளையாட்டுகளிலும் கலந்துகொண்டு கலக்கியெடுப்பாள்.

          மழை நின்ற நான்கைந்து நாட்களில் கலங்கிய சேற்றுக் குழம்பாகக் காட்சியளித்த நீர் தெளிந்து பளபளப்பாக மாறியதும் ஏரி களியாட்ட இடமாக மாறிவிடும். ஒரு பக்கத்தில் பிள்ளைகளின் குளியல். இன்னொரு பக்கத்தில் கால்நடைகளின் குளியல். மற்றொரு பக்கத்தில் துணிதுவைக்கும் கூட்டம். தலைமீது ஒரு வெள்ளைத் துண்டை தலைப்பாகையாகச் சுற்றிக்கொண்ட ஒரு பெரியவர் ஓரமாக ஒதுங்கி உட்கார்ந்து தூண்டில் போட்டுவிட்டு நம்பிக்கையோடு காத்திருப்பார். "தாத்தாவுக்கு ஆசய பாருடி, அதுக்குள்ள தூண்டில தூக்கியாந்துட்டாரு" என்று கேலி பேசும் பெண்களிடம் "அரசமரத்த சுத்திட்டு அடிவயித்த தொட்டு பாக்கறவளுக்கு இருக்கற நம்பிக்கை எனக்கு இருக்கக்கூடாதா, சரிதான் போம்மா" என நறுக்கென்று பதில்சொல்லி வாயை அடக்கிவிடுவார் தாத்தா. முணுமுணுத்தபடி நகரும் பெண்களின் பக்கம் நிமிர்ந்துகூட பார்க்காமல் வெற்றிலைபாக்கை மென்றபடி தூண்டில்மீதே கவனமாக இருப்பார்.

          துணிவெளுக்கிற குப்புசாமித் தாத்தாவின் பேத்தி சரஸ்வதி என் வகுப்புத்தோழி. எப்போதும் இரட்டைச்சடைபோட்டு கனகாம்பரம் சூடியிருப்பாள். அவள் வீட்டுத் தோட்டத்தில் புதர்புதராக கனகாம்பரமும் அஞ்சுமல்லியும் பூத்துக் கிடக்கும். மூன்று பைசாவுக்கு நூறு பூ. விற்றவை போக எஞ்சியவற்றையெல்லாம் கட்டி சரஸ்வதி தலைநிறைய வைத்துக்கொள்வாள். சிரிக்கும்போது ஒரு கண் சற்றே மாறுகண்ணாக விலகி சில கணங்களில் இணைந்துகொள்வதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும். ஏதாவது ஒரு கணக்கில் அவளுக்கு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும்.  ஆளைப் பார்த்ததுமே எதையாவது ஒன்றைத் தொடங்கி கேள்விமழையை ஆரம்பித்துவிடுவாள். 

          முதுகில் துணிமூட்டை சுமந்த கழுதையை ஓட்டிக்கொண்டு அம்மாவோடு ஏரிக்கரைக்கு வந்த சரஸ்வதி புதரோரமாக நிழலில் உட்கார்ந்த என்னைப் பார்த்துவிட்டாள். "என்னடா, வழக்கம்போல துணிங்களுக்கெல்லாம் நீதான் காவல்தெய்வமா?"  என்று அருகில் குவிந்திருந்த துணிகளைப் பார்த்தபடி கேட்டாள். "ம் ம்" என்று தலையசைத்தபடி குளிக்கிறவர்களின் பக்கம் பதிந்திருந்த பார்வையை விலக்காமலேயே பதில் சொன்னேன்.

          "நீயும் போய் குளிக்கறதுன்னா குளிடா, எல்லாத் துணிங்களயும் நான் பாத்துக்கறேன்" இரண்டு சடைகளையும் இணைத்து பின்பக்கமாகவே முடிந்து ஒரு கொண்டையாகச் சுருக்கியபடி சொன்னாள் சரஸ்வதி. நச்சென்று குத்தியதுபோல இருந்தது. கோபமாக அவள் பக்கம் திரும்பினாலும் எந்த வார்த்தையும் வராமல் முறைத்தேன்.

          "இத்தன பேரு குளிக்கறானுங்களே, எவன்கூடயாவது சேர்ந்து நீயும் துணிஞ்சி எறங்கி கத்துக்கலாமில்ல, அதயெல்லாம் உட்டுட்டு எதுக்குடா இந்த வேல?"

          "எல்லாம் எனக்கு தெரியும், நீ போயி ஒன் வேலய பாரு" வேண்டுமென்றே எரிச்சலாக அவளைப் பார்த்துப் பதில் சொன்னேன்.

          "இதயெல்லாம் இந்த வயசிலயே கத்துகினாதான் உண்டுடா. அப்பறமா சுட்டுப் போட்டாலும் வரவேவராது" பற்களைக் கடித்துக்கொண்டு எனக்கு யாரையாவது குத்தவேண்டும் போல இருந்தது. வேகமாக மூச்சை இழுத்தபடி அவளைப் பார்த்தேன். "காலம்பூரா கரையில கால்நீட்டி பாட்டிக் குளியல்தான் போடணும்ங்கறதுதான் ஒன் தலயெழுத்துபோல..." அவள் புன்னகை மாறாமல் சொன்னபோது ஆத்திரத்தில் என்ன சொல்வது என்று புரியாமல் குழப்பமாக இருந்தது.

          "ரொம்ப சுலபம்டா. ஒரு பக்கம் கைய தூக்கணும், இன்னொரு பக்கம் கால தூக்கணும். அப்பறம் அப்படியே தப்புதப்புனு அடிச்சிகினே போவணும். அடிக்கஅடிக்க நம்ம ஒடம்பு கப்பலாட்டம் ஆயிரும்டா.."

காற்றிலேயே நீந்திச் செல்வதுபோல அவள் கைகளை விரித்தபடி சொன்னாள். அவள் காதோரமாக இருந்த மச்சம் ஒட்டவைத்த பொட்டுபோல இருந்தது.

          "பெரிய பெரிய கணக்கயெல்லாம் டீச்சரு கத்துக்குடுத்ததுமே கத்துக்கற? இது என்ன பெரிய வித்தையா, கத்துக்கமுடியலை?" அவள் என்னைநோக்கி இரண்டடி வைத்தாள்.

          "நான் வேணும்னா கத்துக்குடுக்கட்டுமா, வரியாடா?" அவள் கண்களைப் பார்க்க கூச்சமாகவும் கோபமாகவும் இருந்தது. "என்ன எதுக்கு வெளுக்கற? என்னாச்சி ஒனக்கு இன்னைக்கு? போ போ, போயி வேலய பாரு" பொறுமையாகவே ஏரியைப் பார்த்து கையைக் காட்டியதும் அவள் முகம் வாடிவிட்டது. இரண்டுமூன்று கணங்கள் நின்று முறைத்துவிட்டு, உதடுகளைக் கோணியபடி துணிமூட்டையின் பக்கம் சென்றாள்.

          சுமந்துவந்த வாழைமரத்தை ஒரு கட்டுமரத்தைப்போல இழுத்துச் சென்ற நண்பர்கள் எல்லாரும் ஒரே கூட்டமாக ஓவென்று கூச்சலிட்டபடி அதன்மீது ஏறி உட்கார்ந்தார்கள். உட்கார்ந்த வேகத்தில் மரம் ஏரிக்குள் முழுகியது. எல்லாரும் உள்ளே முழுகி, தலையை சிலுப்பியபடி ஒவ்வொரு மூலையிலிருந்து வெளிப்பட்டுச் சிரித்தார்கள்.  ஒருவர்மீது ஒருவராக தண்ணீரை அள்ளித் தௌiத்துக்கொண்டார்கள். துளிகள் கண்ணாடிச் சில்லுகளாக ஒளிவிட்டுச் சிதறின. இதற்கிடையே தனியாக வெளிப்பட்டு மிதக்கத் தொடங்கிய வாழைமரத்தின்மீது சுந்தரம் சட்டென்று ஏறிப் படுத்தபடி கைகளால் தண்ணீரை நாசுக்காகத் தள்ளியதும் வாழைமரம் அழகாக ஒரு வாகனம்போல முன்னேறியது. பார்க்கப் பார்க்க பரவசமாக இருந்தது. ஓவென்று இரைச்சலோடு எல்லாரும் கைதட்டிக் குதித்தார்கள். ஒரு வட்டமடித்து திரும்பிய வாழைமரத்தைப் பற்றி இன்னொருவர் வட்டமடித்தார்கள். மானசிகமாக அந்த மிதக்கும் மரத்தின்மீது நானும் அமர்ந்திருப்பதைப்போல நினைத்துக்கொண்டேன்.

          "ஊட்டுக்கணக்குலாம் போட்டுட்டியா நீ?" பிழிந்த துணியை உதறி உலரவைப்பதற்காக வந்த சரஸ்வதி அருகில் வந்து கேட்டாள். மெதுவாக தலையை அவள் பக்கமாகத் திரும்பி தலையை அசைத்தேன்.

          "மீட்டர், சென்டிமீட்டர், கிலோமீட்டர்லாம் குடுத்து மாத்த சொல்றதயெல்லாம் போட்டியா, எனக்கு ஒன்னுமே புரியலைடா.."

          "வாய்ப்பாடெல்லாம் ஒழுங்கா படிச்சா ஏன் கொழம்புது?" வெடுக்கென்று அவளைப் பார்த்துக் கேட்டேன்.

          "வாய்ப்பாடெல்லாம் மனப்பாடமா தெரியுது. இந்த ரெண்டு ஸ்தானம் தள்ளி புள்ளிவைக்கறது, மூணு ஸ்தானம் தள்ளி புள்ளிவைக்கறதுதான் புரியமாட்டுது."

          தரையிலேயே எண்களை எழுதி, குச்சியால் ஸ்தானம் பிரித்து விளக்கமாகச் சொன்னேன். சொல்லிமுடிக்கிறவரைக்கும் தலையை வேகவேகமாக அசைத்தவள், சட்டென்று ஏதோ யோசனை வந்தவளாக, "இந்த மூணு ஸ்தானம் தள்ளி புள்ளிவைக்கறத எப்பவுமே சோத்துக்கை பக்கத்துலேருந்ததான் வரணுமா? பீச்சக்கை பக்கத்துலேருந்து வரக்கூடாதா?" என்று கேட்டாள். அவள் நெற்றியிலும் முகவாயிலும் கழுத்திலும் வழிந்த வியர்வை தரையில் கோடாக இறங்கியது.

          "சின்ன அளவுலேருந்து பெரிய அளவ கண்டுபுடிக்கணும்னா சோத்துக்கை பக்கத்துலேருந்துதான் வரணும். பெரிய அளவுலேருந்து சின்ன அளவுக்கு மாத்தணும்ன்னாதான் பீச்சக்கை பக்கத்துலேருந்து சோத்துக்கை பக்கமா வரணும்" அவள் தலையை அசைத்துக்கொண்டாள்.

          "சீக்கரமா வந்து எடுத்துட்டும் போடி, வெயிலு எறங்கிச்சின்னா துணிங்கள காயவைக்க முடியாது. ஈரத்துணிங்கள ஊட்டுக்குள்ள வச்சா, ஊடே நாறிப் போயிரும்" என்று கரையிலிருந்து வந்த அம்மாவின் குரலைக் கேட்டதுமே "தோ, வரம்மா" என்று சிட்டாகப் பறந்துபோனாள் சரஸ்வதி.

          வாழைமரத்தில் மிதப்பவர்களைப் பார்க்கத் தொடங்கினேன். இப்போது அவர்கள் வடக்குப் பக்கத்திலிருந்து திரும்பி கிழக்கு நோக்கித் திரும்புவது தெரிந்தது. அது முன்னகரும் புள்ளியில் இரண்டு பிரிவாகப் பிரியும் நுரைக்கோடுகளைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. கணநேரம் நௌiந்து பொங்கிய அலைகள் நிதானமாக அடங்கிக் கரைந்துபோயின. ஒரு வேடிக்கைபோல நிகழும் அந்தத் தோற்றமும் மறைவும் பார்க்கப் பார்க்க பரவசமாக இருந்தது.  உடல்முழுதும் ஒரு குழைவு படர்ந்து சிலிர்த்தது.

          மிகப்பெரிய கனவாக விளங்கிய நீச்சலைக் கற்க முடியாமல் போனதை நினைத்து எனக்குள் பொங்கிய துக்கம் கொஞ்சநஞ்சமல்ல.  முதல்முறையாக அப்பா எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாமே தோற்றுவிட்டன.  ஏதோ ஒன்றை என்னால் கடைசிவரைக்கும் சரியாகச் செய்யவே இயலவில்லை. கைகள் உயரும்போது கால்கள் உயர்வதில்லை. கால்கள் உயர்ந்தெழும் சமயங்களில் கைகளை உயர்த்த முடியவில்லை.   தண்ணீருக்குள் முழுகி இசகுபிசகாக தண்ணீர் குடித்ததும் இருமியதும் பல முறை நிகழ்ந்த சங்கதிகள். அப்பாவும் மனமுடைந்து தன் பயிற்சியை நிறுத்திவிட்டார். அவருக்கு அடுத்தபடியாக இன்னொரு மழைக்காலத்தில் எனக்கு அண்ணன் முறையாக வேண்டப்பட்டவரிடம் அனுப்பப்பட்டேன்.  துரதிருஷ்டவசமாக அந்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கவில்லை. அவருடைய விரிந்த கைகள்மீது படுத்தபடி சரியாகச் செயல்படுத்துகிற விஷயத்தை, அவர் கைகளை விலக்கிக்கொண்டதுமே செய்ய இயலாமல் போனது. தன்னிச்சையாக ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு செயலைச் செய்ய முயற்சி செய்தது.  நிலைகுலைந்து தண்ணீருக்குள் முழுகினேன். சேற்று வாசத்தில் மூச்சு தடுமாறியது. முதுகில் யாரோ ஒரு பெரிய பாறையைவைத்து அழுத்துவதைப்போலத் தோன்றியது. ஆழம் ஒரு ரகசிய உலகம்போல வெளிச்சமும் இருளும் சமஅளவில் அடர்ந்திருந்தது. சின்னச்சின்ன குமிழ்கள் வெடித்துச் சுருண்டன. ஒரு நீலத்துணியின் அசைவுபோல தண்ணீர் நெளிந்தது. அந்தத் திரையை விலக்கவிலக்க தண்ணீரின் அறைகள் திறந்துகொள்வதுபோலத் தோன்றியது. கண்கள் பிதுங்கி விழுந்துவிடுவதுபோல வலித்தன. கற்குவியல்களிடையே உடல்மோதிப் புரண்ட கணத்தில் மூச்சுமுட்ட மார்பு இறுகியது. சட்டென இரண்டு கைகள் என் வயிற்றை முறுக்கி மேலே இழுத்தன. காற்று கிடைத்ததும் வேகவேகமாக மூச்சை இழுத்தபடி அண்ணாந்து பார்த்தபோது வானம் தென்பட்டது. இயலாமை ஒருவித அவமானமாக நெஞ்சைத் தாக்கியதும் கண்கள் கலங்கின. அவர் என்னைத் தாங்கி மேலே தூக்கி பாதுகாப்பாகப் பிடித்து தைரியமுட்டினார்.

          "தலச்சன் புள்ளய தண்ணியில இப்பிடி தவிக்கவைக்காத. போனா போவட்டும் உடு. இவன் நீச்சல் கத்துகிட்டு மெடலா வாங்கப் போறான்?  காவேரியில குளிக்கப்போறானா? இல்ல கடல்லதான் குளிக்கப்போறானா? இப்பிடியே இருந்துட்டு போவட்டும்" அம்மா எல்லாருடைய முயற்சிகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளியை வைத்துவிட்டார்.

          ஒரு பக்ரீத் தினம். ஜாபர் வீட்டில் மதிய சாப்பாடுக்காக எல்லாரும் சேர்வதாக திட்டம். நானும் பழனியும் துரையும் ஏரிக்கரையோரமாக பேசிக்கொண்டே வெகுதொலைவு நடந்தோம். பழைய பங்களாவின் ஓரமாக சில்லென்று காற்றை வீசுகிற புளியமரத்தடியில் உட்கார்ந்து கதை பேசினோம். அன்னக்கிளி, பதினாறு வயதினிலே போன்ற படப்பாடல்களில் படிந்திருந்த கிராமியச்சாயலை சுவையாக அசைபோட்டோம். நேரம் கடந்து போனதே தெரியவில்லை. அதே விஷயத்தை உரையாடியபடி ரயில்வே ஸ்டேஷன் வழியாக ஆலமரத்தின் பக்கம் இறங்கி வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். எங்கள் எதிரே இன்னொரு கும்பல் ஏரிக்குக் குளிக்கச் சென்றுகொண்டிருந்தது. பழனியின் தம்பி சேகர் அதில் இருந்தான். "வீட்டுல அம்மா கெழங்கு அவிச்சிவச்சிருக்காங்கண்ணே. பாத்தா வரச்சொன்னாங்க" என்று சொல்லிவிட்டு நடந்தான். ரயில்வே ஸ்டேஷன் நிழலில் இன்னும் சிறிதுநேரம் பேசியிருந்துவிட்டு சத்திரம் வழியாக நடந்து ஜாபர் வீட்டைச் சென்றடைந்தோம்.

          கால்மணிநேரத்தில் ஒரு சிறுவன் சைக்கிளில் வேகமாக வந்திறங்கி எங்களைப் பார்த்ததும் அலறினான். "சேகரு தண்ணியில முழுவிட்டாண்ணே. கூட குளிச்சவனுங்கள்ளாம் இருக்காங்க. அவன காணம்ண்ணே" அவன் உரக்க அழத் தொடங்கினான். நாங்கள் பதறி, அவனருகில் சென்று "என்னடா என்னடா?" என்றோம். அவன் சொன்னதையே மீண்டும்மீண்டும் சொல்லி அழுதான்.

          "எல்லாரும் சேந்துதாண்ணே குளிச்சம். ஐனாரு திட்ட தொட்டுத் திரும்பணும்ன்னு பந்தயம் கட்டினு போனம்ண்ணே. தொடும்போது இருந்தாண்ணே. திரும்பும்போதுதாண்ணே காணாம போயிட்டான்" அவன் தன் நெஞ்சில் மாறிமாறி அடித்துக்கொண்டான். ஈரம் விலகாத அவன் உடலில் வேர்வை வழிந்திருந்தது. "உள்நீச்சல்லயே வரான்னு நெனச்சிட்டண்ணே. பாவி பையன் இப்படி காணாம பேவாண்ணு தெரியாம போச்சிண்ணே.."

          நாங்கள் எல்லாருமே ஏரியைநோக்கி ஓடினோம். "எங்கடா ஓடறிங்க?" என்று ஒரு அக்கா வீட்டு மதிலோரமாக நின்று எங்களைப் பார்த்து சத்தம் போட்டது. நாங்கள் பதில் சொல்ல நிற்காமல் ஓடினோம். பின்னால் வந்த சிறுவன்தான் நின்று பதில் சொல்வதைக் கேட்டோம்.

          ஒரு பெரிய கும்பலே கரைமீது நின்றிருந்தது. போன வேகத்தில் பழனியும் ஜாபரும் தண்ணீரில் இறங்க சட்டைகளைக் கழற்றினார்கள். "வேணாம்டா கண்ணுங்களா. கெட்டிக்கார பசங்க நாலு பேரு எறங்கி தேடறாங்க. கொஞ்சம் இருங்கடா..." கரையில் இருந்த பெரியவர் அவர்களை அவசரமாகத் தடுத்து நிறுத்தினார். "கூடப்பொறந்த பொறப்பு, தடுமாறி எறங்கிடப் போவுது. புடிச்சிக்கிங்கப்பா.." ஒரு கிழவி ஆற்றாமையில் புலம்பினாள். கரையில் குடியிருந்த எங்கள் வெங்கடேசன் சார் கண்கலங்க பார்த்தபடி நின்றிருந்தார்.

          பழனியின் அம்மாவும் அப்பாவும் ஒரு புதரருகே நிலைகுலைந்து அழுதபடி உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் உடல்முழுக்க கண்களாக நிறைந்து வழியும் ஏரியையே பார்த்திருந்தார்கள்.

          கடல்போல நீர் தளும்பிக்கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று எங்கெங்கும் மோதியது. கடந்த ஆண்டிலும் அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் ஏரியில் விழுந்து பலியானவர்களின் கதைகளெல்லாம் ஒருவித துக்கத்துடன் நினைவுபடுத்தப்பட்டன. "வருஷத்துக்கு ஒன்னுரெண்டு பேர பலியா வாங்கனாதான் இதும் தாகம் அடங்கும்போல. பெரிய ராட்சசி..." கசப்போடு ஒருவர் ஏரியைப் பார்த்து முகம் சுளித்தார்.

          ஒருமணிநேரத் தேடுதலுக்குப் பிறகு சேகரைக் கண்டெடுத்து கரைக்குத் தூக்கி வந்தார்கள். ஒருசில மணிநேரங்களுக்கு முன்னால் பார்த்து பேசிவிட்டுச் சென்றவனா இவன் என்று மனம் பதறியது. உயிரற்ற உடல்மீது மோதி அவன் அம்மாவும் அப்பாவும் அழுவதைப் பார்க்கமுடியவில்லை. துக்கம் நெஞ்சை அடைத்தது.

          "நீச்சல் தெரிஞ்ச புள்ளதாம்பா. எப்பிடி முழுவனான்னே தெரியலையே.."

          "தங்கமான புள்ள. காலயிலதான் கடததெருவுல பாத்து பேசனன் பாத்துக்குங்க.."

          பேச்சு. பேச்சு. இடைவிடாத பேச்சு. ஏரிக்கரையில், சாவுக்கிடங்கில், இறுதி ஊர்வலத்தில், இடுகாட்டில் எல்லா இடங்களிலும் வாய்ஓயாத பேச்சாகவே இருந்தது. முளைத்து கதிர் பிடிக்கிற பருவத்தில் சாய்ந்துபோன பயிராக மாறிவிட்ட வாழ்வின் துரதிருஷ்டத்தை ஒவ்வொருவரும் ஒருவித ஆற்றாமையோடு பழித்தார்கள். கசப்போடு பகிர்ந்துகொள்ள ஒவ்வொருவரிடமும் பல நினைவுகள் குவிந்திருந்தன.

          இடுகாட்டிலிருந்து திரும்பும்போது குளிப்பதற்காக அதே ஏரியில்தான் எல்லாரும் இறங்கினோம். கசப்பின் உரையாடல்கள் முடிவேயில்லாமல் தொடர்ந்தபடி இருந்தன.

          "காலையிலதான் வண்டிக்காரன் மருமளுக்கு ஆம்பளபுள்ள பொறந்திருக்குதுன்னு சொன்னாங்க, போயி பாத்துட்டு வந்தன். இதோ இப்ப இந்த சாவு. பொறக்கறதும் சாவறதும் யாரு கையிலயும் இல்ல. யாரோ போடற கணக்குக்கு நாம ஆடிங்கெடக்கறம்.."

          "மூச்சுபேச்சில்லாம இழுத்துங்கெடக்கற கெழம்கட்டைலாம் இன்னும் பொழச்சிங்கெடக்குது. அறியாப் புள்ளைங்களயெல்லாம் அள்ளிட்டு போவற சாவப்பத்தி என்ன சொல்றது, வயிறே எரியுது.."

          "பெத்தவங்க வலி எந்தக் காலத்தலயும் புள்ளைங்களுக்கு தெரியாது போல. குளிக்கறதுக்கு ஊடு இல்லியா, தண்ணி இல்லியா? இப்படி வந்து ஏரிக்குள்ளயா முழுவணும்?.."

          எல்லாவற்றையும் கேட்டபடி கரையோரமாக தண்ணீரில் உட்கார்ந்து குளித்துக்கொண்டிருந்தேன். முகத்தில் அடிக்க கைகளால் நீரை அள்ளும்போது ஏரியைப் பார்த்தேன். எல்லாம் தெரிந்தும் எதுவும் தெரியாத  பாவனையில் அசைவே இல்லாமலிருந்தது ஏரி. அமைதியான அதன் முகத்தை முதன்முதலாக அச்சத்துடன் பார்த்தேன்.

 

( வடக்கு வாசல், 2010)