Home

Sunday, 25 September 2022

மாற்றமும் மாற்றமின்மையும் - பூமணியின் பிறகு நாவலை முன்வைத்து சில குறிப்புகள்

 

நாவலின் தொடக்கத்தில் நாடு சுதந்திரமடைந்த தகவலும் அதற்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தலின் தகவலும் பாத்திரங்களின் உரையாடல்களின் வழியாக முன்வைக்கப்படுகின்றன. அழகிரிப்பகடை தன் இரண்டுவயது மகளோடும் முதல் மனைவியோடும் துரைச்சாமிபுரத்திலிருந்து மணலு¡த்துக்குக் குடியேறிய காலகட்டம் அது. ஏறத்தாழ கால்நூற்றாண்டுக் காலம் நகர்ந்து செல்வதை வெவ்வேறு மாற்றங்களின் ஊடாக உணர்த்திஇறுதியில் தாயைப் பறிகொடுத்துவிட்டு தனிமையில் வந்து நிற்கிற பேரப்பிள்ளை சுடலையை எடுத்து வளர்த்து பள்ளிக்குப் படிக்க அனுப்புகிற காலகட்டத்தோடு படைப்பு நிறைவெய்துகிறது. 

விஷம் - சிறுகதை

வாகனத்திலிருந்து இறக்கப்பட்ட ரங்கசாமி ஐயாவின் உடல் குளிர்ப்பதனக் கண்ணாடிப்பெட்டியில் வைக்கப்பட்டு மாலைகள் அதன்மீது பரப்பப்பட, அதற்கு அருகிலேயே கண்கலங்க செல்வகுமார் நின்றிருந்தான். அஞ்சலி செலுத்தவந்த தெருக்காரர்கள் கூட்டம்கூட்டமாக மதிலோரமாக ஒதுங்கி நின்று தமக்குள் உரையாடிக்கொண்டிருந்தார்கள். பண்ருட்டியிலிருந்து வந்திருந்த அவருடைய மூத்த மகனும் சொந்தக்காரர்களும் செய்யவேண்டிய சடங்குகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

Sunday, 18 September 2022

பல்லக்குத்தூக்கி - சிறுகதை

  

அம்பலவாணன் வாழ்க்கையில எனக்குக் கெடச்ச பெஸ்ட் ஃப்ரண்ட் சார்எனக்கு அட்வைஸர்மென்ட்டர் எல்லாமே அவன்தான்இப்படி அல்பாயுசுல போய்டுவான்னு ஒருநாளும் நெனச்சிகூட பார்த்ததில்ல” என்று நான் சொன்னேன்பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்த எக்சைஸ் இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் தலையை மட்டும் அசைத்துக்கொண்டார்ஒரேஒரு கணம் மட்டுமே என்மீது அவருடைய பார்வை படிந்து விலகியதுஎதிலும் நிலைகொள்ளாத தன்மையுடன் அருகிலிருந்த தென்னைமரங்களையும் அவற்றைச் சுற்றிச்சுற்றி விளையாடும் அணில்களையும் பார்த்துக்கொண்டிருந்தார் அவர்

சாயாவனம் - அழிவும் ஆக்கமும்

  

ஓர் இயந்திரம் மனித வாழ்வுக்குத் துணையானதா அல்லது எதிரானதா என்கிற கேள்விக்கு வரையறுக்கப்பட்ட விடையைக் கூறுவது எளிதல்ல.  வெறும் கைகளால் மண்ணைத் தோண்டிக்கொண்டிருந்த ஆதிமனிதன்வலிமையும் கூர்மையும் பொருந்திய கல்லாலும் கட்டையாலும் வேகமாகவும் அதிகமாகவும் மண்ணை அகழ்ந்தெடுக்கமுடியும் என்பதைக் கண்டறிந்த கணத்தில் அவன் நிச்சயமாக ஆனந்தக் கூத்தாடியிருப்பான்.  முரட்டுத்தனமான அந்த ஆயுதங்களை மெல்ல உருமாற்றிஉருமாற்றி மண்வெட்டியாக வளர்த்தெடுத்தது அவனுடைய மாபெரும் சாதனை.  அதன் தொழில்நுட்பம் மென்மேலும் செழுமைப்படுத்தப்பட்டு மின்சாரத்தால் இயக்கப்படும் மண்நீக்கியாக இன்று மாபெரும் உருவத்துடன் வடிவமைக்கப்பட்டதும் மானுடனின்  மதிநுட்பமே.  தோற்றத்தில் மண்வெட்டி ஒரு சின்ன ஆயுதமாக இருந்தாலும் அது மனிதக்கைகளின் நீட்சியாகவும் விரல்களாகவுமே வேலை செய்கிறது.  அக்கணத்தில் அவனுக்கு அது அருந்துணை.  நூறு மனிதர்களின் கைவிரல்கள் ஒரே சமயத்தில் இணைந்து வேலை செய்வதுபோன்ற வேகத்தைக்கொண்டது இயந்திர மண்நீக்கி.  ஒருவகையில் நூறு மனிதர்களின் உழைப்பை அது தன்னந்தனியாக ஈடு செய்கிறது. தன் உழைப்புக்குப் பதிலியாக வந்து நிற்கிற ஓர் இயந்திர மண்நீக்கியைஉழைப்பையே நம்பியிருப்பவனின் பார்வையில் எதிரியாகக் காட்சியளிப்பது தவிர்க்கமுடியாத ஒன்று.  

Sunday, 11 September 2022

புற்று - சிறுகதை

 

”எல்லாமே உயிருள்ள மீனுங்க பார்வதி. பானையில தண்ணிக்குள்ள சலக்குபுலக்குனு வட்டமடிக்குதுங்க. எங்க தாத்தா ஏரிக்குள்ள தூண்டில் போட்டு புடிச்சி குடுத்தாரு. இது போதும் ஒன் தொட்டிக்கு. ஊட்டுக்கு எடுத்தும்போன்னு சொல்லி அனுப்பிட்டாரு. நானும் பானைய தூக்கி இடுப்புல வச்சிகினு ஊட்டுக்கு நடந்து வந்துகினே இருந்தன். ஏரியத் தாண்டி, தோப்பத் தாண்டி, கருமாதி கொட்டாயயும் தாண்டி நடந்துவந்துட்டன்.  கால்வாய் பக்கமா திரும்பி நடந்துவர சமயத்துல எதுத்தாப்புல திடீர்னு ரெண்டு கோழிங்க ஓடியாந்துதுங்க. கெக்கெக்கேனு ஒன்ன ஒன்னு துரத்திகினு  என் கால் மேல மோதறமாதிரி வந்துட்டுதுங்க. எங்க மோதிடப் போவுதுங்கன்னு பீச்சாங்கை பக்கமா கால தூக்கி வச்சி நவுந்த நேரத்துல எப்படியோ கால் சறுக்கி கீழ உழுந்துட்டன். உழுந்த வேகத்துல இடுப்புல இருந்த பானை கால்வாய்க்கரை ஓரமா கெடந்த கல்லுல மோதி துண்டுதுண்டா ஒடைஞ்சிட்டுது. கண்ண மூடி கண்ண தெறக்கற நேரத்துல எல்லாமே நடந்துட்டுது. நாலு பக்கமும் மீனுங்க தரையில துள்ளித் துள்ளி துடிக்குதுங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே புரியலை. சட்டுனு சுதாரிச்சிகினு எழுந்து எல்லா மீனயும் புடிச்சி புடிச்சி பொழச்சிக்கோ போ பொழச்சிக்கோ போன்னு ஒன்னொன்னா கால்வாய்க்குள்ள வீசினேன். கனவுன்னு தெரியாம கொஞ்சம் சத்தமாவே போபோன்னு சொல்லிட்டேன்போல. பசங்க ரெண்டும் உலுக்கி எழுப்பன பிறகுதான் கண்ண தெறந்து பார்த்தன். அப்புறம்தான் நடந்ததெல்லாம் கனவுன்னு எனக்கே தெரிஞ்சது. பசங்கதான் பயத்துல என்னம்மா என்னம்மான்னு கேட்டுகினே கெடந்துதுங்க. நல்ல கனவோ கெட்ட கனவோ தெரியலை. வெடியற நேரத்துல வந்தது. காலையிலேந்து அதயே நெனச்சி பயந்துகிட்டு கெடக்கறேன்”

சூதாட்டமும் காதலும் - (ஒரு சங்கீதம்போல – மலையாள நாவல் அறிமுகம் )


உலகின் மிகப்பெரிய இலக்கிய மேதை தஸ்தாவெஸ்கி. அவருடைய குற்றமும் தண்டனையும், கரம்சேவ் சகோதரர்கள், சூதாடி, அசடன் ஆகிய நாவல்கள் இலக்கிய வாசகர்களின் உள்ளங்களில் நிரந்தர இடம்பிடித்தவை. பலவிதமான ஏற்ற இறக்கங்களும் கொண்டது அவருடைய வாழ்க்கை. அமைதியென்பதே இல்லாத அளவுக்குச் சதாகாலமும் துக்கங்களாலும் சோதனைகளாலும் துரத்தப்பட்டபடி இருந்த மனிதர் அவர். எல்லாச் சுமைகளுக்கிடையேயும் அவர் உறுதியாக மூழ்கிப் பணிபுரிந்த ஒரே களம் இலக்கியத்துறை மட்டுமே. தன் மனக்கொந்தளிப்பையெல்லாம் கொட்டித் தீர்க்கவும் அவற்றை மையப்படுத்தித் தன்னையும் தன் வாழ் வையும் பரிசீலித்துக்கொள்ளவும் ஒரு வடிகாலைப்போல அவர் பெரிதும் நம்பிச் செயல்பட்டது இலக்கியக் களத்தில் மட்டுமே என்று தோன்றுகிறது. அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையே மையமாகக் கொண்டு ஒரு நாவல் எழுதுவது என்பது சுவாரஸ்யமான ஒரு சவாலாகவே இருக்கும். மலையாள எழுத்தாளர் பெரும்படவூர் ஸ்ரீதரன் என்னும் எழுத்தாளர் அச்சவாலை முழுஅளவில் ஏற்றுக்கொண்டு ஒரு சங்கீதம் போல என்னும் படைப்பை எழுதியுள்ளார். அதன் சுவை சற்றும் குறையாத அளவில் சிற்பி  தமிழில் மொழிபெயர்த்துள்ளார். புத்தகத்தில் உள்ள குறிப்புகள் இப்படைப்பை நாவல் என்று சொன்னாலும் இதை அழகான நீள்கதை என்றே சொல்லவேண்டும்.

Wednesday, 7 September 2022

கடலோர வீடு - சிறுகதை

 வீட்டுத் தரகன் முத்தப்பன் பேச்சோடு பேச்சாகராசியில்லாத வீடுஎன்று குத்திக்காட்டியதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. எனக்குள் சட்டெனச் சீறியெழும் எரிச்சலையும் கோபத்தையும் சிரமத்துடன் கட்டுப்படுத்திக்கொண்டேன். ஆனால் என் முகக்குறிப்பிலேயே அதை உணர்ந்துகொண்ட முத்தப்பன்ஊருல அப்படி ஒரு பேச்சு பரவி இருக்குது சார். நாலு பேரயும் கலந்து பேசிட்டுத்தான கஸ்டமர் கடைசியில் நம்மகிட்ட வரான்என்று பட்டப்பெயர் சூட்டியதில் தன் பங்கு எதுவுமில்லை என்பதைப் போலப் பின்வாங்கினான். மறுகணமே பத்து லட்ச ரூபாய் விலை மதிப்புள்ள வீட்டைப் பாதியாகவும் முக்காலாகவும் மாற்றத் தரகர்கள் வழக்கமாகக் கையாளும் தந்திரப்பேச்சுதான் இது என்று எனக்குப் புரிந்துவிட்டது. “இந்த கஸ்டமர் போனா என்ன, வேற கஸ்டமர் வந்தா பாத்துக்கலாம் முத்தப்பாஎன்று பொதுவாகச் சொல்லிப் பேச்சை முடிக்கப் பார்த்தேன்.