Home

Saturday, 2 March 2024

மகாதேவ தேசாய் : முடிவுறாத பக்திப்பாடல்

  

எல்.எல்.பி. தேர்வில் வெற்றி பெற்றதையடுத்து சூரத் நகரத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்துவிட்டு தொழிலைத் தொடங்கினார். ஆனால் அவருக்கு அங்கே போதிய வருமானம் கிடைக்கவில்லை. அவருக்கு சமஸ்கிருதம், குஜராத்தி, மராத்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் பயிற்சி இருந்தது. அதனால் வழக்கறிஞர் வேலையைத் துறந்துவிட்டு ஒரு நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலைக்குச் சேர்ந்தார். சில மாதங்களில் அந்த வேலையிலும் சலிப்பு ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேறி ஒரு வங்கியில் வேலைக்குச் சேர்ந்தார். திடீரென வங்கி நிர்வாகம் அவரை பம்பாய் நகரத்துக்கு மாற்றியது. அங்கு செல்ல விருப்பமில்லாத அவ்விளைஞர் அந்த வேலையையும் துறந்து கூட்டுறவுத்துறையில் உதவி இயக்குநராக இணைந்து பணிபுரியத் தொடங்கினார்.


இதற்கிடையில் அந்த இளைஞரின் வழியிலேயே வழக்கறிஞர் வேலையைத் துறந்த அவருடைய நெருக்கமான நண்பர் நரஹரி பரிக் காந்தியடிகளைச் சந்தித்து சபர்மதி ஆசிரமத்தில் இணைந்து பணிபுரிய அனுமதி கோரினார். அப்போது நரஹரியின் பெற்றோர் இறந்துவிட்டனர். மேலும் அப்போது ஆசிரமத்தின் சார்பில் தேசியப்பள்ளி ஒன்றை உருவாக்கும் திட்டமும் இருந்தது. அதற்கான பாடத்திட்டத்தை வகுக்கும் வேலையில் காகா காலேல்கர், சந்து ஷா போன்றோர் ஏற்கனவே ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு உதவியாக இருக்குமாறு நரஹரியைக் கேட்டுக்கொண்டார் காந்தியடிகள். ஆசிரமத்தில் நரஹரி இணைந்த பிறகு, அவ்வப்போது அவரைச் சந்திப்பதற்காக அந்த இளைஞர் அடிக்கடி ஆசிரமத்துக்குச் செல்வதை வழக்கமாக்கிக்கொண்டார்.

1917ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் ஒருமுறை சத்தியாகிரகத்தின் தன்மையை எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் காந்தியடிகள் குஜராத்தி மொழியில் ஒரு கையேட்டை எழுதினார். பிறகு அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளிக்குமாறு நரஹரி பரீக்கிடம் கொடுத்தார். இதற்கு முன்பு மொழிபெயர்த்து அனுபவமில்லாத நரஹரி பரீக் அறைக்குத் திரும்பி என்ன செய்வது என்று புரியாமல் தவித்தபடி இருந்தார். தற்செயலாக அவரைச் சந்திக்க அப்போது அங்கே சென்ற அந்த இளைஞரிடம் அந்தக் கையேட்டை மொழிபெயர்க்கும் பணியை ஒப்படைத்தார். அந்த இளைஞரும் காந்தியடிகளின் கையேட்டை தெளிவான ஆங்கிலத்தில் உடனடியாக மொழிபெயர்த்துக் கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்த காந்தியடிகள் தானே நேரிடையாக எழுதியதுபோல அந்தப் பிரதி இருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சிகொண்டு “இதை மொழிபெயர்த்தவர் யார்? நீங்களா, காகா காலேல்கரா?” என்று கேட்டார். “நாங்கள் இருவருமே செய்யவில்லை. என்னைப் பார்க்க வந்த என் நண்பரொருவர் மொழிபெயர்த்துக் கொடுத்தார்” என்று உண்மையைச் சொன்னார் நரஹரி. காந்தியடிகள் அந்த இளைஞரைப் பார்க்க விரும்பினார். அடுத்த நொடியே அந்த இளைஞரை அழைத்துச் சென்று காந்தியடிகளின் முன்னால் நிறுத்தினார் நரஹரி. அந்த இளைஞரின் பெயர் மகாதேவ தேசாய்.

அக்கணமே மகாதேவ தேசாயை தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டும் என காந்தியடிகள் விரும்பினார். மகாதேவ தேசாய்க்கும் காந்தியடிகளோடு இணைந்து பணிபுரிய விருப்பம் ஏற்பட்டது. ஆயினும் காந்தியடிகள் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. தம் பெற்றோரின் அனுமதியோடு ஆசிரமத்துக்கு வந்து சேருமாறு சொல்லி தேசாயை அனுப்பிவைத்தார் காந்தியடிகள். தேசாயின் தந்தைக்கு அவரை ஆசிரமத்துக்கு அனுப்ப மனமில்லை. அதனால் ஏதேதோ சொல்லி தாமதப்படுத்திக்கொண்டே இருந்தார். ஆயினும் மகனின் உறுதியான மனநிலையைப் பார்த்துவிட்டு அனுப்பிவைத்தார். அப்போது சம்பாரணில் இன்டிகோ விவசாயிகளின் பிரச்சினைக்காக காந்தியடிகள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். தேசாய் தன் வருகையைத் தெரிவிக்கும் விதமாக உடனடியாக அவருக்கு ஒரு தந்தியை அனுப்பிவிட்டு, 24.11.1917 அன்று துணைவி துர்காபென்னுடன் பயணம் செய்து சம்பாரணை அடைந்து காந்தியடிகளுடன் சேர்ந்தார்.

அந்தச் சந்திப்பு நிகழ்வதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பாகவே 1915இல் தேசாயும் நரஹரியும் இணைந்து ஒருமுறை காந்தியடிகளைச் சந்தித்ததுண்டு. தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியதும் அவர் கோச்ரப் என்னும் இடத்தில் ஆசிரமத்தைத் தொடங்கியிருந்த நேரம் அது. ஆசிரமத்தில் சேர விரும்புகிறவர்கள் கடைபிடிக்கவேண்டிய  விதிமுறைகள் தொடர்பாக ஒரு கையேட்டை உருவாக்கிய காந்தியடிகள் அதற்கு பதினோரு விரதங்கள் என்னும் தலைப்பில் வெளியிட்டிருந்தார். அகமதாபாத்தின் பண்பாட்டு மையமாக விளங்கிய குஜராத் கிளப்பைச் சேர்ந்த தேசாயும் நரஹரியும் அந்தக் கையேட்டைப் படித்தனர். உடனடியாக அதையொட்டிய தம் கருத்துகளைத் தொகுத்து எழுதி கையெழுத்திட்டு அவருக்கு அனுப்பிவைத்தனர். கட்டாய பிரம்மச்சரியம் பல தீமைகளை விளைவிக்கும் என்றும் கைத்தொழில் மீது அழுத்தம் கொடுப்பது நாட்டின் முன்னேறத்துக்கு இடையூறாக இருக்கும் என்றும் அக்கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடி காந்தியடிகளிடமிருந்து எவ்விதமான பதிலும் உடனடியாக வரவில்லை. அதனால் ஒருவேளை தம் கடிதத்தை காந்தியடிகள் பொருட்படுத்தவில்லையோ என நினைக்கத் தொடங்கினர்.

சில நாட்களுக்குப் பிறகு 04.07.1915 அன்று பிரேமா பாய் ஹால் என்னும் இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுவதற்காக காந்தியடிகள் வந்தார். இரு நண்பர்களும் அவரை அப்போது ஓடோடிச் சென்று சந்தித்து தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவர்களை தம் அறைக்கு அழைத்துச் சென்ற காந்தியடிகள் அவர்கள் எழுப்பிய ஐயங்களுக்கு ஒவ்வொன்றாக ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் உரையாடி விளக்கமளித்தார். அந்த விளக்கம் அவர்களுக்கு ஏற்புடையதாக இருந்தது.  பிரேமா பாய் கூட்டத்தைத் தொடர்ந்து அகமதாபாத், பம்பாய் என காந்தியடிகள் உரைநிகழ்த்தும் கூட்டங்களுக்கெல்லாம் இருவரும் தொடர்ந்து சென்றனர். அவருடைய ஒவ்வொரு உரையையும் செவிமடுத்தனர். ஆனால் அப்போதெல்லாம் காந்தியடிகளுடன் இணைவது தொடர்பாக அவ்விருவராலும் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருந்தது.

ராஜ்குமார் சுக்லா என்பவரின் வேண்டுகோளை ஏற்று, சம்பாரண் நகரத்துக்குச் சென்ற காந்தியடிகள் இண்டிகோ விளைச்சல் தொடர்பாக முதலில் ஒரு நீண்ட கேள்விப்பட்டியலைத் தயாரித்துக்கொண்டார்.  பிறகு  சம்பாரண் வட்டாரத்தில் வசித்துவந்த எல்லா விவசாயிகளையும் சந்தித்து அவர்களுடைய பதில்களைத் தொகுக்கும் வேலையில் ஈடுபட்டார். அதுவே அவருடைய முதன்மைப்பணியாக இருந்தது. அவருடைய தொண்டர்களில் ஒரு குழு அந்த வேலையில் ஈடுபட்டிருந்தது. அவர் சென்ற கிராமப்புறங்களில் எல்லாம் மக்கள் அறியாமையில் மூழ்கியிருப்பதையும் சுகாதாரமற்ற சூழலில் வாழ்வதையும் காந்தியடிகள் பார்த்தார். அவற்றுக்கான திட்டங்களையும் உடனடியாக வகுத்து, அதற்கான பணிகளில் இன்னொரு குழுவை அவர் ஈடுபடுத்தினார். தேசாய், நரஹரி, ராஜேந்திர பிரசாத், கிஷோர் பிரசாத், மஜ்ரூல் ஹக் என பலரும் அக்குழுவில் இருந்தனர்.

தற்காலிகக் கல்விக்கூடங்களை நிறுவிய தொண்டர்கள் அங்கு வசித்தவர்களுக்கு அன்றே கற்பிக்கத் தொடங்கினர். தினமும் சுற்றுப்புறங்களில் சுகாதாரப் பணிகளிலும் ஈடுபட்டனர். தேசாய் ஆர்வத்துடன் கல்விப்பணியிலும் அவருடைய மனைவி துர்காபென் சுகாதாரப்பணியிலும் ஈடுபட்டு உழைத்தனர். பொதுக்கிணறுகளை ஒட்டி தேங்கியிருந்த சேற்றையும் சகதியையும் நீக்கினர். கழிவுநீர் கிணற்றுக்குள் சென்று சேராதபடி தடுத்தனர்.

அனைவரும் ஒரே இடத்தில் தங்கியிருந்தனர். சமையல்வேலை, பாத்திரங்களைக் கழுவும் வேலை, பரிமாறும் வேலை, தண்ணீர் இறக்கும் வேலை, தங்குமிடங்களையும் கழிப்பறைகளையும் சுத்தம் செய்யும் வேலை என எல்லா வேலைகளையும் தமக்குள் பகிர்ந்துகொண்டனர். போராட்டம் ஒருபுறம் நடந்துகொண்டிருந்தபோதே, இன்னொருபுறம் கிராம முன்னேற்றப் பணிகளும் தேசாயின் பொறுப்பில் நடந்துகொண்டிருந்தன.

சம்பாரண் போராட்டம் வெற்றி பெற்றதை அடுத்து அகமதாபாத் நெசவுத்தொழிலாளர்களுக்கான போராட்டத்திலும், பயிர்கள் விளையாததால் வரி கொடுக்க இயலாமல் திண்டாடிய கேடா விவசாயிகளுக்கான போராட்டத்திலும் அடுத்தடுத்து காந்தியடிகள் ஈடுபட வேண்டியிருந்தது. அவருடைய அறவழிப் போராட்டம் எல்லா இடங்களிலும் அவருக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. காந்தியடிகளின் நிழலாகவே தேசாய் பணியாற்றினார். கடிதங்கள் எழுதுதல், கட்டுரைகள் எழுதுதல் எல்லாவற்றிலும் காந்தியடிகளுக்கு அவர் உற்ற துணையாக இருந்தார். காந்தியடிகளின் ஆசிரம வாழ்க்கைமுறை, அவரோடு இருந்த அனைவருக்கும் வேலையாட்கள் இல்லாமல் வாழும் வழியையும் ஏழைகள் நடுவில் வாழும் முறையையும் கற்பித்தது.

05.04.1918 அன்று வசாத் என்னும் ஊரிலிருந்து நதியாத் என்னும் ஊருக்கு ரயிலில் சென்றுகொண்டிருந்தார் காந்தியடிகள். தேசாய் தன்னோடு நின்று தனக்கென ஆற்றும் பணிகளை நினைத்தபோது, எதிர்பாராத விதமாக அவருடைய தந்தையாரையும் அவர் நினைத்துக்கொண்டார். உடனே ரயிலில் இருந்தபடியே அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். ”பணம் மட்டுமே வாழ்க்கையில் மகிழ்ச்சியை அளித்துவிடாது என்னும் உண்மையை தேசாய் மிகச்சிறிய வயதிலேயே புரிந்துகொண்டுள்ளார், துர்காவும் தேசாயைப்போலவே நினைக்கும் மனம் கொண்டவராக இருக்கிறாள். என்னைப் பொறுத்தவரையில் அவ்விருவரும் என்னை நாடி வந்தது எனக்கு மிகப்பெரிய புதையலே கிடைத்ததைப்போன்றதாகும். ஆழ்ந்த படிப்பு, அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணம், உயர்ந்த நடத்தை, அன்பு அனைத்தும் தேசாயிடம் குடிகொண்டுள்ளன. இவ்விருவரைப்பற்றியும் நீங்கள் எவ்விதமான கவலையும் படவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் வாழ்வில் நன்றாகப் பயணம் செய்யவேண்டும் என்று நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டும் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்பதுதான் அக்கடிதத்தின் சுருக்கம். கடிதம் கிடைத்ததும் நவ்சாரி என்னும் ரயில்நிலையத்துக்கு வந்த தேசாயின் தந்தை ஹரிபாய் காந்தியடிகளையும் தேசாயையும் துர்காவையும் சந்தித்து உரையாடிவிட்டுச் சென்றார்.

ஒருமுறை காந்தியடிகளும் தேசாயும் கடும் வெயிலில் எங்கோ நடந்து போய்க்கொண்டிருந்தனர். களைப்பின் காரணமாக ஓரிடத்தில் காந்தியடிகள் ஒரு மரத்தடியில் படுத்து ஓய்வெடுத்தார். தேசாய் அவருக்கு விசிறியால் விசிறிக்கொண்டிருந்தார். ஏதோ ஒரு கணத்தில் அவரும் தன்னை அறியாமலேயே உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். அவர் மீண்டும் கண்விழித்து எழுந்தபோது, காந்தியடிகள் தனக்குப் பக்கத்தில் அமர்ந்தபடி விசிறிக்கொண்டிருப்பதைக் கண்டார்.  ஓர் உதவியாளரான தேசாய்க்கு காந்தியடிகள் சேவை செய்யலாமா என பலரும் அவரிடம் கேள்வி கேட்டனர். தனக்காக எல்லா வேலைகளையும் ஆர்வத்தோடு இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிற ஒருவருக்கு தனக்குக் கிடைத்த சிறு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு சேவை செய்ததில் பிழையொன்றும் இல்லை என்று காந்தியடிகள் தெரிவித்தார்.

காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமம் கூட்டு வாழ்க்கைமுறையின் ஆய்வுக்கூடமாக விளங்கியது. தேசாய் கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவர, துர்காபென் சமைக்க,  நரஹரி துணிகளைத் துவைக்க, அவர் மனைவி மனிபென் அவற்றை உலர்த்தி மடித்துவைக்க, சமத்துவ முறையில் அனைவரும் அனைத்து வேலைகளையும் பகிர்ந்துகொண்டனர். சுத்தம் செய்யும் வேலையையும் அனைவராலும் ஒவ்வொரு நாளுக்கு ஒருவர் என்ற வகையில் பகிர்ந்துகொண்டனர்.

அகமதாபாத்தில் ஆலை முதலாளிகளுக்கு எதிராக நெசவுத்தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் உண்மைத்தன்மையை நாட்டில் வசிப்பவர்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் விதமாக காந்தியடிகளின் ஆலோசனைப்படி தேசாய் ’நேர்மையான போராட்டம்’ என்னும் தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். விலைவாசி உயர்வையும் ஆண்டுக்கொருமுறை வழங்கப்பட்டு வந்த போனஸ் பணத்தை நிறுத்தியதையும் தொழிலாளர்களின் துயரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அந்தப் புத்தகத்தை எழுதியிருந்தார் தேசாய். அது மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் செய்தித்தாளில் அப்போராட்டம் தொடர்பான கட்டுரைகளையும் குறிப்புகளையும் எழுதி உண்மை நிலவரத்தை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தொடர்ந்து வெளியிட்டார். இறுதியில் காந்தியடிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டு போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. கேடா சத்தியாகிரகப் போராட்டத்தை காந்தியடிகள் தொடங்கிய சமயத்திலும் தேசாய் அவரோடு இணைந்து வெற்றிக்காகப் பாடுபட்டார்.

நான்காண்டு காலத்திலேயே காந்தியடிகளுக்கு அந்தரங்கச் செயலாளராகும் தகுதியை அடைந்துவிட்டார் தேசாய். குஜராத்தி,   மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவர் தனித்திறமை பெற்றிருந்தார். அவருடைய கையெழுத்து அனைவரும் மயங்கிவிடும் வகையில் அழகாக இருந்தது. அதே சமயத்தில் ஆசிரமத்துக்கு வரக்கூடிய கடிதங்களில் எத்தகைய தெளிவில்லாத கையெழுத்தாக இருந்தாலும் அதைப் படித்துவிடும் ஆற்றல் கொண்டவராகவும் இருந்தார் தேசாய்.

ஒருமுறை காந்தியடிகளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அவர் சார்பாக பணிகளை ஆற்றினார் தேசாய். சென்னையில் திருவல்லிக்கேணி மைதானத்தில் காந்தியடிகளால் பேசமுடியாதபடி தொண்டைப்பிரச்சினையால் அவதிப்பட்ட சமயத்தில், அவர் எழுதி வைத்திருந்த பேச்சுக்கான குறிப்புகளை தேசாயே படித்தார்.

இந்திய வரலாற்றில் 1919 முதல் 1921 வரையிலான மூன்று ஆண்டுகள் மிகமுக்கியமான காலகட்டமாகும். ஆங்கில அரசு கொண்டு வந்த ரெளலட் சட்டத்தை எதிர்ப்பதற்கான போராட்டமும் ஒத்துழையாமை இயக்கப் போராட்டமும் ஜாலியன் வாலா பாக் படுகொலையை எதிர்க்கும் போராட்டமும் கிலாஃபத் இயக்கமும் இக்காலகட்டத்தில்தான் நடைபெற்றன. ஒருகணம் கூட காந்தியடிகளைவிட்டு விலகாமல் அவர் விழித்திருக்கும் நேரமெல்லாம் தேசாயும் விழித்திருந்து வேலை செய்தார். ஒத்துழையாமை இயக்கத்துக்கான தேவையை மக்களுக்கு விளக்கிச் சொல்லவும் கதர் நிதி திரட்டவும் காந்தியடிகள் தேசம் தழுவிய ஒரு பயணத்தை மேற்கொண்டபோது தேசாயும் அவரோடு இணைந்து  எல்லா ஊர்களுக்கும் சென்றார்.

லாலா லஜபதி ராய் தொடங்கி நடத்திவந்த யங் இந்தியா என்னும் வார பத்திரிகையை நடத்தும் பொறுப்பை காந்தியடிகள் ஏற்றுக்கொண்டார். அதை நிர்வகிக்கும்  பொருட்டு தேசாய் பம்பாய்க்குச் சென்று ஒரு வாடகை வீட்டில் குடிபுகுந்தார். அதைத் தொடர்ந்து புதிதாக பாம்பே க்ரானிக்கல் என்னும் பத்திரிகையையும் தொடங்கினார். குஜராத்தி மொழியில் ஒரு பத்திரிகையைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்பிய காந்தியடிகள் நவஜீவன் என்னும் பத்திரிகையை அகமதாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கினார். அதற்கு காந்தியடிகளே பொறுப்பாசிரியராக இருந்தாலும், எல்லா வேலைகளையும் தேசாயே கவனிக்கவேண்டியதாக இருந்தது.

அப்போது மோதிலால் நேரு அலகாபாத்திலிருந்து இன்டிபெண்டன்ட் என்ற ஆங்கிலப்பத்திரிகையை நடத்திவந்தார். அப்பத்திரிகையைக் கவனித்துவந்த ஜோசப் என்பவர் வேல்ஸ் இளவரசர் வருகையை ஒட்டி 21.11.1921 அன்று கைது செய்யப்பட்டதால், இன்டிபென்டன்ட் பத்திரிகையை நடத்த யாருமில்லாத சூழல் ஏற்பட்டது. காந்தியடிகளின் ஆலோசனையின் பேரில் அந்தப் பத்திரிகையின் பொறுப்பையும் தேசாய் ஏற்றுக்கொண்டார். அந்தப் பத்திரிகைக்காக தேசாய் பல புதிய கட்டுரைகளை எழுதினார். அவை அனைத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்தன. தொடர்ச்சியாக வெளிவந்த அக்கட்டுரைகளுக்கு மக்கள் ஆதரவு பெருகியது. அதனால் அரசாங்கம் அப்பத்திரிகைக்கு தடை விதித்தது. 24.12.1921 அன்று தேசாயைக் கைது செய்தனர். அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் கட்டத் தவறினால் ஒரு மாதம் கூடுதலாக சிறையில் இருக்கவேண்டுமென்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. முதலில் நைனி சிறையிலும் பிறகு ஆக்ரா சிறையிலுமாக அவருடைய தண்டனைக்காலம் கழிந்தது.

சிறைவாசம் முடிந்து விடுதலை பெறும் சமயத்தில் அதுவரை பத்திரிகைகளைக் கவனித்துவந்த காகா காலேல்கரும் ராமதாஸ் காந்தியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதனால் பத்திரிகைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு தேசாயிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது காந்தியடிகளும் சிறையில் இருந்தார். நிர்மாணத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஏராளமான கட்டுரைகளை அவர் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதினார். மற்றவர்களிடமிருந்தும் கட்டுரைகளை வாங்கிப் பிரசுரித்தார். ஒவ்வொரு வாரமும் நாட்டு நிலைமையை உள்ளது உள்ளபடி தெரிவிப்பதை முதல் பொறுப்பாகாவும் எதிர்காலத்துக்கான வழியைச் சுட்டிக்காட்டுவதை இரண்டாவது பொறுப்பாகவும் காந்தியடிகள் இருந்திருந்தால் எப்படி எதிர்வினை ஆற்றக்கூடும் என கூர்மையாக யோசித்து அதை எடுத்துரைப்பதை மூன்றாவது பொறுப்பாகவும் கருதினார். எல்லாத் தேசியத் தலைவர்களோடும் தொடர்புகொண்டு அவர்களுடைய எண்ணங்களை எழுதி வாங்கிப் பிரசுரித்தார்.

05.02.1924 அன்று காந்தியடிகள் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தார். காங்கிரஸில் உருவாகியிருந்த இரு பிரிவுகள் அவருக்குக் கவலையளித்தன. அவர்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டார். காந்தியடிகள் செல்லும் இடங்களுக்கெல்லாம் தேசாயும் கூடவே சென்றார். அங்கு நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளையும் அவருடைய   உரைகளையும் அவ்வப்போது குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு, பிறகு விரிவாக்கி கட்டுரைகளாக எழுதி நவஜீவன், யங் இந்தியா இதழ்களில் வெளியிட்டார். பெல்காமில் நடைபெற்ற மாநாட்டுக்குத் தலைமை வகிக்க காந்தியடிகள் சென்றபோது, அவரோடு தேசாயும் சென்றார். காங்கிரஸின் இரு பிரிவினரையும் சந்தித்து உரையாடவும் அவர்களை இணைக்கும் வழிமுறைகளைக் கண்டறியவும் காந்தியடிகள் அப்பயணத்தைப் பயன்படுத்திக்கொண்டார். அங்கிருந்த சமயத்தில்தான் துர்காபென் ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்திருப்பதாக தேசாய்க்கு செய்தி கிடைத்தது.

நிர்மாணத் திட்டங்களைப்பற்றி பொதுமக்களிடையில் ஒரு விழிப்புணர்வை உருவாக்குவதற்காகவும் குறிப்பாக கதர்த்திட்டத்தை விளக்குவதற்காகவும் காந்தியடிகள் வங்காளத்திலும் குஜராத்திலும் ஒரு நீண்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அவர் சென்ற இடங்களிலெல்லாம் கதர் வளர்ச்சிக்காக மக்கள் நன்கொடைகளை வழங்கினர். காந்தியடிகளுடன் பயணம் செய்த தேசாயும் பிற உதவியாளர்களும் நன்கொடைத்தொகையைச் சேகரித்து, ஒவ்வொரு நாளும் இரவு வேளையில் கூடியமர்ந்து கணக்கிட்டு காந்தியடிகளிடம் ஒப்படைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒருமுறை தேசாய் வைத்திருந்த பணப்பை காணாமல் போய்விட்டது. எண்ணூறு ரூபாய் அளவிலான தொகை அந்தப் பையில் இருந்தது. எங்கு தேடியும் அந்தப் பை கிடைக்கவில்லை. அதை நினைத்து தேசாய் கவலையும் வருத்தமும் கொண்டார்.  அச்செய்தியை காந்தியடிகளிடம் நடுக்கத்துடன் தெரிவித்தார் தேசாய். அவருடன் இருந்த மற்ற தொண்டர்கள் அனைவரும் காந்தியடிகள் தேசாயை மன்னித்துவிடுவார் என்றே எதிர்பார்த்தனர்.  ஆனால் தேசாய் சொன்னதைக் கேட்ட காந்தியடிகள் நம்முடைய கவனக்குறைவால் தொலைப்பதற்காக மக்கள் நன்கொடை கொடுக்கவில்லை,  அந்தப் பணத்தை திருப்பிச் செலுத்தவேண்டியது உன் கடமை என்று முடிவான குரலில் சொல்லிவிட்டார். தன் மீது கொண்ட நம்பிக்கையும் அன்பும்தான் காந்தியடிகளிடமிருந்து கடுமையாக வெளிப்படுகிறது என்று புரிந்துகொண்ட தேசாய். அதைத் தொடர்ந்து தன் இரவுத்தூக்கத்தைக் குறைத்துக்கொண்டு அயல்நாட்டுப் பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை எழுதி பொருளீட்டி, அதன் வழியாக தொலைந்துபோன தொகையை ஈடுகட்டினார்.  அதற்குப் பிறகே தேசாயின் மனம் அமைதியடைந்தது.

ஓய்வில்லாத தொடர் பயணங்களுக்கு நடுவில் காந்தியடிகள் 1926இல் சில மாதங்கள்  மட்டும் சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருந்தார். அப்போது ஆசிரமவாசிகளுக்காக  ஒன்பது மாத காலம் கீதை வகுப்புகள் நடத்தினார். பிறகு தன் உரைகளைச் செம்மைப்படுத்தி நூலாகவும் எழுதினார்.

1927இல் மீண்டும் அவருடைய பயணம் தொடங்கியது. நிர்மாணத் திட்டங்களை மக்களிடையில் பரப்பும் வகையிலான முயற்சிகளில் ஈடுபட்டார். அந்த மூன்றாண்டுகளிலும் காந்தியடிகளோடு கூடவே இருந்து அவருடைய  செயல்களையெல்லாம் குறிப்பெடுத்தார் தேசாய். பிறகு அவற்றை நவஜீவன், யங் இந்தியா பத்திரிகைகள் வழியாக நாட்டுமக்களுக்கு எடுத்துரைத்தார்.

அதே ஆண்டில் நவம்பர் மாதத்தில் காந்தியடிகள் கதர்ப்பிரச்சாரம் செய்வதற்காக இலங்கைக்குச் சென்றார். அவரோடு தேசாயும் சென்றார். அங்கு பல பத்திரிகைகள் காந்தியடிகளிடம் பேட்டி எடுத்தன. சில சொற்பொழிவுகளையும் அவர் ஆற்றவேண்டியிருந்தது. அவை அனைத்தையும் ஒன்று விடாமல் தேசாய் குறிப்பெடுத்துக்கொண்டார்.  அந்த அனுபவங்களையெல்லாம் ‘சிலோனில் காந்தியுடன்’ என்னும் தலைப்பில் ஒரு புத்தகமாகவே அவர் எழுதி வெளியிட்டார்.

1928இல் மீண்டும் பர்தோலியில் பிரச்சினை வெடித்தது. முப்பது விழுக்காட்டுக்கும் அதிகமாக நிலவரி உயர்த்தப்பட்டது. விவசாயிகள் கண்ணீரில் மூழ்கினர். வல்லபாய் படேல் அந்தப் பிரச்சினையை எதிர்கொண்டார். போராட்டம் தீவிரமடைந்தது. படேலுடன் சென்றிருந்த தேசாய் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியையும் நேருக்கு நேர் பார்த்து உடனுக்குடன் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டார். பர்தோலி சத்தியாகிரகத்தின் காரணமாக காந்தியடிகளைவிட்டு தேசாய் சிறிது காலம் பிரிந்திருக்கும்படி நேர்ந்தது. ‘பர்தோலி சத்தியாகிரக வரலாறு’ என்றொரு நூலை எழுதி வெளியிட்டார் தேசாய். தேசமெங்கும் அதற்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்தது.

ஆசிரமப்பணிகளின் காரணமாக தேசாய் தண்டி யாத்திரயில் கலந்துகொள்ள முடியாமல் போனது. அந்த இழப்புணர்ச்சியை ஈடு  செய்யும் வகையில், பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சத்தியாகிரகத்தின் வழிமுறையை எடுத்துரைப்பதைக் கடமையாக அமைத்துக்கொண்டார். தண்டியிலிருந்து காந்தியடிகள் கடிதங்கள் வழியாக தேசாய்க்கு மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டிய கருத்துகள் தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஆலோசனைகளை வழங்கியபடியே இருந்தார். ஒரு கடிதத்தில் காந்தியடிகள் தொலேரா என்னும் இடத்துக்குச் சென்று காவல்துறையினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வழங்கி உற்சாகப்படுத்தும்படி ஒரு கடிதம் எழுதியிருந்தார். உடனே தேசாய் தொலேராவுக்குச் சென்று மக்கள் மீண்டும் உற்சாகமடையும் வண்ணம் உரையாடினார். அவர்களோடு கூட்டமாக கடற்கரை வரைக்கும் ஊர்வலமாகச் சென்று உப்பெடுத்தார். அங்கு எடுக்கப்பட்ட உப்பிலிருந்து ஒரு கைப்பிடி உப்பை தனியாக எடுத்து காந்தியடிகளுக்கு அஞ்சலில் அனுப்பிவைத்தார். அத்துடன் ”வரி இல்லாத உப்பை உங்களுக்கு இத்துடன் வைத்து அனுப்பியிருக்கிறேன். உங்களுக்கு இது பிடிக்கும் என நினைக்கிறேன்” என்று ஒரு கடிதமும் எழுதி இணைத்து அனுப்பிவைத்தார். அதைத்தொடர்ந்து 23.04.1930 அன்று காவல் துறையினரால் தேசாய் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை கிடைத்தது மேலும் 250 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்தத் தொகையைக் கட்டவில்லை என்றால் கூடுதலாக ஒன்றரை மாதம் சிறையிலேயே கழிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டது.

நீதிமன்றத்திலிருந்து சிறைக்குச் செல்லும் வழியில் மக்கள் தேசாய்க்கு மாலை அணிவிக்க விரும்பினர். ஆனால் காவலர்கள் அவர்களைத் தடுத்துவிட்டனர். அதனால் கோபம் கொண்ட ஒருவர் ஒரு காவலரை நோக்கி ஒரு கல்லை வீசினார். அதனால் காவலரின் முகவாயில் காயம் ஏற்பட்டது. வேதனையின் காரணமாக அந்தக் காவலர் எல்லோரையும் திட்டத் தொடங்கினார். அச்சூழலைக் கண்டு தேசாய் மனம் வருந்தினார். காந்தியடிகளின் அகிம்சைக்கொள்கைக்குப் புறம்பாக மக்கள் நடந்துகொள்ளும் முறை தனக்கு வேதனை அளிப்பதாக கூட்டத்தினரிடம் குறிப்பிட்டார். அனைவருடைய சார்பாகவும் அந்தக் காவலரிடம் மன்னிப்பைக் கோரினார் தேசாய். மேலும் ”நீங்கள் விரும்பினால் அந்தக் கல்லால் என்னை அடியுங்கள். அல்லது அந்தக் கல்லை என்னிடம் கொடுங்கள். நானே என்னை அடித்துக்கொள்கிறேன்” என்றும் தெரிவித்தார் தேசாயின் மனப்பான்மையைப் புரிந்துகொண்ட காவலர் அந்த விஷயத்தைப் பெரிதுபடுத்தாமல் அப்படியே விட்டுவிட்டார். அங்கிருந்து வாகனம் புறப்பட்டு சிறையை நோக்கிச் செல்லும் தருணத்தில் அந்தக் காவலரின் பெயரை வினவினார் தேசாய். அந்தக் காவலர் சொன்ன பெயர் சரியாகப் புரியாததால், தேசாயிடமிருந்த பேனாவை வாங்கி தன்னுடைய பெயரை ஒரு தாளில் எழுதிக் காட்டினார். பிறகு பேனாவை தேசாயிடமே திருப்பிக் கொடுத்தார். தன்னுடைய நினைவாக காவலரிடமே அந்தப் பேனா இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார் தேசாய். மேலும் “இந்தப் பேனாவின் மூலம் இப்போது நடைபெற்ற கசப்பான நினைவுகள் மறந்துபோகட்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இர்வின் - காந்தி ஒப்பந்தப்படி லண்டனில் நடக்கவிருந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ள காந்தியடிகள் பயணமானார். அப்போது தேசாயும் அவருடன் சென்றார். 1931 செப்டம்பரிலிருந்து டிசம்பர் வரை அந்தப் பயணம் அமைந்தது. அந்த மாநாடு தோல்வியில் முடிவடைந்தாலும் அங்கு தங்கியிருந்த காலத்தில் பெர்னார்ட்ஷா, மரியா மாண்டிசோரி அம்மையார்,  ரோமண்ட் ரோலண்ட், சார்லி சாப்ளின் என பலரை அவர் சந்தித்தார். பன்னிரண்டு இடங்களில் நீண்ட சொற்பொழிவை ஆற்றினார். அனைத்தையும் குறிப்பெடுத்துக்கொண்டார் தேசாய். இந்தியாவுக்குத் திரும்பியதுமே 04.01.1932 அன்று காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். மூன்று நாட்கள் கழித்து தேசாயும் கைது செய்யப்பட்டார். ஒவ்வொரு நாளும் மாலையில் காவல் நிலையத்துக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு 04.02.1932 அன்று தேசாய் மட்டும் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் தேசாய் அந்த நிபந்தனைக்கு உடன்படாததால் அவருடைய தண்டனைக்காலம் ஒன்றரை ஆண்டாக நீட்டிக்கப்பட்டது. சபர்மதி, நாசிக் ஆகிய சிறைகளில் சிறிது காலம் வைக்கப்பட்டிருந்தார். பிறகு காந்தியடிகள் அடைக்கப்பட்டிருந்த எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார்.

08.05.1933 அன்று காந்தியடிகள் 21 நாட்கள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்ட அரசாங்கம் அவரை உடனடியாக விடுதலை செய்தது. அதற்குப் பிறகு சில நாட்களிலேயே தேசாய்க்கும் விடுதலை கிடைத்தது. சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு காந்தியடிகள் அரிஜன நல நிதிக்காக நாடு தழுவிய ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். தேசாய், படேல், காந்தியடிகள் மூவரும் தீண்டாமை ஒழிப்பு தொடர்பான பேட்டிகளிலும் கடிதப்போக்குவரத்திலும் ஈடுபட்டிருந்தனர். புனாவை விட்டு வெளியே செல்லக்கூடாது என அனைவருக்கும் அரசு தடை விதித்தது. அந்தத் தடையை காந்தியடிகள் மீறினார். அதனால் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உடனே சிறையிலேயே உண்ணாவிரதம் தொடங்கினார் காந்தியடிகள். அவர் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்படையத் தொடங்கியது. அதனால் அரசு அவரை விடுதலை செய்துவிட்டது. தன்னுடைய தண்டனைக்காலம் முடிவடையும் வரை எந்தப் போராட்டத்திலும் ஈடுபடாமல் அரிஜன நல நிதிக்கான சுற்றுப்பயணத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தார் காந்தியடிகள்.

தேசாய் மட்டும் பெல்காம் சிறைக்கு மாற்றப்பட்டார். சிறையில் அவர் காந்தியடிகள் எழுதிய அனாசக்தி யோகம் நூலை மொழிபெயர்த்தார். 1934 ஜூலையில் அவருக்கு விடுதலை கிடைத்தது. உடனே காந்தியடிகளின் விருப்பப்படி வடமேற்கு எல்லைப்புற மாகாணத்துக்குச் சென்று கான் அப்துல் கபார்கான் பற்றியும் அவருடைய சகோதரர் கான்சாகிப் பற்றியும் தகவல்கள் திரட்டி குஜராத்தி மொழியில் ‘பை குதாய் கித்மத்கார்’ என ஒரு வரலாற்றுநூலை எழுதினார். 

1938இல் ஒரிசாவில் பூரி மாவட்டத்தில் டெலாங் கிராமத்தில் நடைபெற்ற ‘காந்தி சேவா சங்க’ மாநாட்டுக்கு அனைவரும் சென்றிருந்தனர். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருட்காட்சியைத் திறந்துவைத்து காந்தியடிகள் உரையாற்றினார். தன் உரையில் ‘இந்த நகரத்தில் உள்ள உலகப் பிரபுவின் கோவில் தாழ்த்தப்பட்டோரும் கண்டு தரிசனம் செய்யும் வகையில் திறந்துவிடப்படவில்லை. என்னைப் பொறுத்தவரை அவர் உலகப்பிரபு அல்ல, அவருடைய நிழலில் நன்றாக உண்டு உறங்குவோரின் பிரபு’ என்று குறிப்பிட்டார். எதிர்பாராத விதமாக தேசாயின் மனைவியும் பாவும் அதே தினத்தில் இறைவனை வணங்கிவிட்டு வர கோவிலுக்குள் சென்று விட்டனர். அச்செய்தி காந்தியடிகளை எட்டிவிட்டது. மிகுந்த வேதனையுடன் அவர் அன்றிரவு அனைவரோடும் பேசினார்.

உலகத்துக்கே ஒரு கொள்கையை எடுத்துச் சொல்லும் ஒருவரைச் சுற்றியுள்ள குடும்ப உறுப்பினர்களே அதை முழுமையாக நம்பி பின்பற்றுகிறவர்களாக இல்லையென்பது அவப்பெயரைத் தேடித் தரும் செயல் என்பது காந்தியடிகளின் எண்ணமாக இருந்தது. பெண்களுக்கு அருகிலேயே இருந்தும், அவர்களுக்கு எடுத்துச் சொல்லாமல் தேசாய் மிகப்பெரிய பிழையைச் செய்துவிட்டதாக மனவேதனையுடன் குறிப்பிட்டார். அதைக் கேட்டு மனமுடைந்த தேசாய் ஆசிரமத்திலிருந்து வெளியேறுவது என்ற முடிவுக்கு வந்தார். காந்தியடிகளும் தேசாயும் மாற்றிமாற்றி கடிதங்கள் எழுதிக்கொண்டனர். இறுதியில் எப்படியோ இருவரும் சமாதானமாயினர். தேசாயும் ஆசிரமத்தைவிட்டு வெளியேறும் தன் முடிவைக் கைவிட்டார்.

இரண்டாவது உலகப்போர் 1939இல் தொடங்கியது. இந்திய வைசிராய் இந்தியாவின் சம்மதம் இல்லாமலேயே இந்தியாவை போரில் ஈடுபடுத்தியதை காங்கிரஸ் எதிர்த்தது. தன் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக அதுவரை மாகாண ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் அரசு ஆட்சியிலிருந்து வெளியேறியது. போரின் விளைவாக நாடெங்கும் பல துன்பங்கள் விளைந்தன. அரசாங்கம் கடுமையான தணிக்கைச்சட்டத்தைக் கொண்டுவந்தது. பேச்சுச்சுதந்திரத்தை எதிர்த்து காங்கிரஸ் 1940இல் தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கியது. முதல் சத்தியாகிரகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வினோபா களத்தில் இறங்கி கைதாகி சிறைக்குச் சென்றார். அவரைத் தொடர்ந்து பல தலைவர்கள் சிறைக்குச் சென்றனர். 1941இல் ஏப்ரல் மாதத்தில் அகமதாபாத்தில் இனக்கலவரம் தலைதூக்கியது. அங்கு சென்று அமைதி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு தேசாயை அனுப்பி வைத்தார் காந்தியடிகள். கிரிப்ஸ் வருகைக்குப் பிறகு ஆங்கிலேயர் இந்தியாவைவிட்டு வெளியேறுவது நல்லது என்று காந்தியடிகளுக்குத் தோன்றியது. 08.08.1942 அன்று காங்கிரஸ் கட்சியினர் பம்பாயில் கூடி ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்தை நிறைவேற்றினர். அரசாங்கத்துக்கு பதினைந்து நாள் கெடு விதிப்பதாகவும் அதற்குள் சாதகமான பதில் கிடைக்காவிடில் போராட்டத்தைத் தொடங்க நேரும் என்று காந்தியடிகள் குறிப்பிட்டார். கெடுவாய்ப்பாக அன்று நள்ளிரவில் அவரும் தேசாயும் கைது செய்யப்பட்டு ஆகாகான் மாளிகை அறையில் சிறைவைக்கப்பட்டனர். சிறைக்குச் செல்லும்போது தேசாய் தன்னுடன் கீதையையும் தாகூரின் முத்ததாரா நாடகநூலையும் மட்டும் எடுத்துக்கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு கஸ்தூர் பாவும் கைது செய்துகொண்டு அதே சிறைக்குக் கொண்டுவந்தனர்.

சிறையில் தேசாய் அடிக்கடி உடல்நிலை பிரச்சினையால் அவதிப்பட்டார்.14.08.1942 அன்று. இரவு அவர் நன்றாகத் தூங்கினர். ஆனால் மறுநாள் காலையில் தாமதமாக எழுந்த காரணத்தால் அன்று நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அதிகாலை நடைப்பயிற்சி சமயத்தில் காந்தியடிகளுடன் இணைந்துகொண்டார். அறைக்குத் திரும்பிய சிறிது நேரத்தில் திடீரென அவர் மயங்கி விழுந்துவிட்டார். மருத்துவரான சுசிலா நய்யார் அடுத்த அறையிலிருந்து ஓடி வந்து பார்ப்பதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது. சிறைச்சாலை வளாகத்திலேயே ஓர் இடத்தில் அவருடைய உடல் எரியூட்டப்பட்டது. ஒரு தந்தையார் மகனுக்குக் கிரியை செய்வதுபோல காந்தியடிகள் தேசாயின் இறுதிச்சடங்குகளைச் செய்தார். தகனத்துக்கு மறுநாள், அந்த இடத்திலிருந்து சாம்பலைத் திரட்டி இரு சிறு பாத்திரங்களில் நிரப்பி வைத்துக்கொண்டார். ஒரு பாத்திரத்தை சுசிலா நய்யாரிடம் கொடுத்து விடுதலைக்குப் பிறகு தேசாயின் மகனிடம் ஒப்படைத்துவிடவேண்டும் என்று தெரிவித்தார். மற்றொரு பாத்திரத்தை தேசாயின் நினைவாக தன் வசமே வைத்துக்கொண்டார்.

ஏறத்தாழ கால்நூற்றாண்டுக்காலம் காந்தியடிகளோடு இணைந்திருந்து அவருடைய வலதுகரத்தைப்போல செயல்பட்டவர் மகாதேவ தேசாய். எப்போதும் புத்துணர்ச்சியோடும் புன்னகை பூத்த முகத்தோடும் அனைவரோடும் வேறுபாடின்றி பழகி வந்தார். பல சிக்கலான சூழல்களை எதிர்கொண்ட தருணங்களில் அவற்றை சரியான முறையிலும் வேகமாகவும் அறிவுபூர்வமாகவும் கையாளும் ஆற்றல் அவருக்கு இருந்தது. காந்தியடிகளோடு அமர்ந்து விவாதிக்கும்போதும் அவருடைய  செயல்பாடுகளைக் குறித்துக்கொள்வதிலும் பிறகு அவற்றை நேர்த்தியாக விரித்தெழுதுவதிலும் அவர் காட்டிய வேகத்தைக் கண்டு வியக்காதவர்களே இல்லை. அவரை அறிந்த அனைவருக்கும் இறுதி மூச்சுள்ள வரை அவர் ஓர்  அசாதாரணமான மனிதராகவே காட்சியளித்தார்.

 

 

குஜராத் மாநிலத்தில் சூரத் மாவட்டத்தில் சரஸ் என்னும் சிற்றூரில் 01.01.1892 அன்று மகாதேவ தேசாய் பிறந்தார். அவருடைய தந்தையார் பெயர் ஹரிபாய். தாயார் பெயர் ஜமுனாபென். குஜராத் இலக்கியங்களை ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார். கீதை, உபநிடதம், இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் அவருக்கு நல்ல பயிற்சி இருந்தது. குஜராத்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி, மராத்தி, வங்கமொழி ஆகிய ஆறு மொழிகளை அவர் அறிந்திருந்தார். இருபத்தைந்து ஆண்டுகள் காந்தியடிகளின் செயலாளராக பணிபுரிந்தார். பல ஆண்டுகளாக அவர் எழுதிவந்த நாட்குறிப்புகள் இருபது தொகுதிகளாக வெளிவந்துள்ளன. குஜராத்தியில் எழுதப்பட்ட காந்தியடிகளின் சத்திய சோதனை புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நேருவின் வாழ்க்கை வரலாற்றை குஜராத்தியில் மொழிபெயர்த்தார். 15.08.1942 அன்று பூனாவில் உள்ள ஆகாகான் மாளிகையில் காந்தியடிகளின் மடியில் உயிர்நீத்தார். மகாதேவ தேசாயின் வாழ்க்கை வரலாற்றை அவருடைய மகன் நாராயண் தேசாய் Fire and the Rose என்னும் தலைப்பில் ஒரு நூலாக எழுதியுள்ளார். அவற்றின் சாரமான பகுதிகளை உள்ளடக்கி அவருடைய வாழ்க்கை வரலாற்றை ‘மகாதேவ தேசாய் (காந்தியின் நிழல்)’ என்னும் தலைப்பில் விப்ரநாராயணன் எழுதிய புத்தகத்தை சிறுவாணி வாசகர் மையம் 2023 ஆண்டில் வெளியிட்டது

 

(சர்வோதயம் மலர்கிறது – பிப்ரவரி 2024)