Home

Saturday 2 March 2024

வழிகாட்டிகள் - சிறுகதை


நிரந்தரமற்ற வேலையாய் இருந்தாலும் சரி, கிடைத்தால் போதும் என்று விண்ணப்பங்களைச் சராமாரியாய்ப் போட்டுக் கொண்டே இருந்த காலம் அது. ஓர் இடத்தில் நாலு மாதமோ ஐந்து மாதமோ இருப்பேன். அப்புறம் நீக்கிவிடுவார்கள். அல்லது நானாக நின்று கொள்வேன். ஐம்பது ரூபாய் அதிகமாக சம்பளம் கொடுக்கும் மற்றோர் வேலைக்கான ஆணை வந்து விட்டிருக்கும். இப்டித் தாவிக்கொண்டே இருந்தது எனக்கும் ஒரு வகையில் பிடித்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும். பெற்றோரும் உற்றார் உறவினர்களும் நண்பர் வகையறாக்களும் என் போக்கைச் சதாகாலமும் கண்டித்துக்கொண்டே இருந்தார்கள். எங்காவது நிரந்தரமாக இரு என்று போதித்தார்கள். போதனைகளுக்கும் புத்திமதிகளுக்கும் செவிமடுக்காத பச்சை ரத்தம் எனக்கு. என் இஷ்டம் போலவே இருந்தேன். ‘‘நிரந்தர உத்தியோகம் என்றால்தானே ஏதாவது பெண்ணைப் பார்த்து கட்டிவைக்கமுடியும்”  என்று அம்மா எப்போதும் ஒரு பாட்டம் அழுவாள். இந்தக் கல்யாணத்தில் இருந்து தப்பிக்கவே நான் காலம் முழுக்க தாவிக் கொண்டிருந்தேன்.

ரிட்டர்ன் லெட்டர்ஸ் ஆபீஸில்  சில காலத்துக்கென்று இப்படித்தான் போய்ச் சேர்ந்தேன். தபால்காரர்கள் எப்பாடு பட்டும் சேர்க்க முடியாத மடல்கள் எல்லாம் எங்கள் ஆபீஸ்க்கு வந்துவிடும் எங்களாலான சகல முயற்சிகளையும் செய்வோம். உறையைப் பிரித்து மடலைப் படிப்போம். ஒவ்வொரு எழுத்தையும் கவனத்தோடு படிப்போம். உரிய இடத்தில் சேர்ப்பிக்கவோ அல்லது திரும்பியனுப்பவோ உதவக்கூடிய வகையில் எங்கேனும் சில வரிகள், சில பெயர்கள் தென்படக்கூடும். கிடைத்துவிட்டால் மீண்டும் உறையை ஒட்டி அனுப்பி விடுவோம். கிடைக்காதவை எங்களிடமேயே தங்கிவிடும்.

தங்கிப்போன ஒவ்வொரு கடிதமும் ஒரு கதையைச் சொல்லும். என் ஞாபக சக்தியின் குறையை எண்ணி இப்போது மனம் நொந்து கொள்கிறேன். எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. அப்படி முழுக்கமுழுக்க இல்லை என்று சொல்லவும் முடியாது. மனசின் மூலையில் எங்கோ கொஞ்சம் ஒட்டி இருக்கிறது ஒரு விஷயம். அதைத்தான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.  எல்லாமே ஞாபகத்தில் இருந்து சொல்வதால் சில பிசகுகள் இருக்கக்கூடும்.

யார் யார்க்கோ எழுதிய கடிதம் அது. கடிதம் என்ற வகையில் ஒரு பத்துவரிகள்தான் இருக்கும். ஆனால் கடிதத்தோடு பல செய்தித்தாள் நறுக்குகள் இணைக்கப்பட்டிருந்தன. சுவாரஸ்யமே அங்குதான். ஏராளமான நறுக்குகள் வாசகத்தை வைத்து ஒரு தந்தை மகனுக்கு அனுப்பியதாக ஊகிக்க இடமுள்ளது. ஆனால் எதைச் சாதிக்கும்பொருட்டு ஒருமகனுக்கு தந்தை இதை அனுப்பி இருக்கக்கூடும் என்று என்னால் ஊகிக்க இயலவில்லை. இந்த நறுக்குகள் எல்லாம் எந்தத் தாளில் இருந்து வெட்டப்பட்டவை என்பதை அப்போதே என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அநேக செய்தித்தாள்கள் ஒரே மாதிரியாகவே வருவதால் குழப்பம்தான் எஞ்சியது. அதனால் கூடுமான அளவுக்கு நறுக்கில் படித்த செய்தியையே எழுதி இருக்கிறேனே தவிர, பத்திரிகையின் பெயர் எழுத இயலவில்லை.

இன்னும் ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறேன். எல்லா நறுக்குகளிலும் ஒரு விஷயமே ஊடுசரடாய் உள்ளது. அது அரசியல். மிக உன்னிப்பாக இதன் லாப நஷ்டங்கள் பற்றி கவனிக்கப்பட்டே தொகுக்கப்பட்டுள்ளன. அவை தொகுக்கப்பட்ட வரிசையின்படி இது இல்லை. அங்கங்கே இறைந்தபடி உள்ளன. ஞாபகக் குறைவுதான் இதற்குக் காரணம்.

*

அன்புள்ள செல்லத்துறைக்கு அநேக ஆசிகளுடன் எழுதிக் கொள்வது. ஏற்கனவே நான் நான்கு முறை அனுப்பிய நறுக்குகளைப் படித்திருப்பாய். இன்னும் சிலவற்றை உன் பார்வைக்கு அனுப்புகிறேன். படித்துவிட்டு ஆழமாய் யோசனை செய். உன் மனசை மாற்றிக்கொண்டு என் வழிக்குத் திரும்ப வேண்டும் என்பது என் விருப்பம். என் விருப்பம் மட்டும் நிறைவேறிவிட்டால் அந்த ஏழுமலை ஆண்டவனுக்கு உன் கையால் ஒரு லட்ச ரூபாய் காணிக்கை செலுத்துவேன்.

*

பொய் சொல்வது பெரிய கலை. சொன்ன பொய்யை நினைவாக வைத்திருக்கவேண்டும். குறுக்குக்கேள்வி கேட்டால் சிக்காமல் இருக்க வேண்டும். இதை மறைக்க நூறு பொய் சொல்ல  வேண்டும். திருதிரு என முழிக்காமல் இருக்கவேண்டும். எச்சில் விழுங்காமல், முகம் காட்டிக் கொடுத்து விடாமல் சொல்ல வேண்டும்.

*

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பெண் எம்.பி. ஒருவர் அவையின் மையப்பகுதிக்குச் சென்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகே அமர்ந்து அழத் தொடங்கினார். தன் தாய்மொழியை அன்னிய மொழி என்று இன்னொரு எம்.பி. கூறியதற்கு ஆட்சேபம் தெரிவித்து அவர் கண்ணீர் விட்டார்.

*

புதுடில்லி நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜேஷ்கன்னாவும், பாரதீய ஜனதா கட்சி சார்பில் நடிகர் சத்ருஹன்சின்காவும், ஜனதா தளம் சார்பில் ஜெய்பகவான் ஜாதவும் தேர்தலில் நிற்கிறார்கள். இப்போது பிரபல கொள்ளைக்காரி பூலன்தேவியும் போட்டியில் இறங்க இருக்கிறார். மீரட்டில் உள்ள எல்லா இனத்தவர்களும் என்னைப் போட்டி இடும்படி கேட்டுக்கொண்டார்கள். அதனால் சிறையில் இருந்தபடி போட்டி இடுகிறேன் என்கிறார் பூலன்தேவி.  இவர் எட்டு ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அரசியலில் இருக்கிறவர்கள் அத்தனை பேரும் திருடர்கள். நான்  கொள்ளைக்காரி. நான்  அரசியலுக்கு வந்தால் குடியா முழுகி விடும் என்று கேட்கிறார் இவர்.

*

சேவாஎன்கிற சமூக சேவை நிறுவனம் சார்பில் அளிக்கப்படும்சேவா வீர்விருது இவ்வாண்டு ஒரு பிரபல அரசியல் தலைவர் ஒருவருக்குக் கிடைக்கலாம் என்று ஊகங்கள் அடிபடுகின்றன.

*

ஆர்.கே. ருத்ரமூர்த்தி 1912 மார்ச் 4&ஆம் தேதி கேரளத்தில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தார். குடும்ப வறுமையின் காரணமாக ஏராளமான துயரச்சம்பவங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எல்லாவற்றையும் சமாளித்து வாழ்வில் முன்னேற அரும்பாடுபட்டார் இவர். எதிர்நீச்சல் போட்டு முன்னேற இவருக்குத் துணையாக இருந்தது அரசியல் வாழ்வு. அரசியல்தான் அவர் வாழ்வில் விளக்கேற்றி வைத்தது. 1938ல்  ஒரு சாதாரண பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கினாலும் அரசியல் அவரை அன்போடு அரவணைத்துக்கொண்டது. முதலில் பஞ்சாயத்துத் தலைவர். அப்புறம் நடந்த தேர்தல்களில் பங்கெடுத்து மூன்று முறை மாநில அவையிலும் இரண்டு முறை மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில உணவு அமைச்சராக இரண்டு முறையும் பொதுப்பணித் துறை அமைச்சராக ஒரு முறையும் இருந்தார். மத்திய அரசில் கனரகத் தொழில் பிரிவுக்கு மந்திரியாக சில காலம் இருந்தார். துருக்கி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தூதராகவும் பணியாற்றியுள்ளார். எல்லாப் பதவிகளையும் வெற்றிகரமாய் அலங்கரித்து வாழ்வின் உயர்ந்த நிலையை அடைந்துள்ளார். அன்னாரின் சேவையை கௌரவித்து அஞ்சல் தலை ஒன்று வரும் செப்டம்பர் முதல் தேதி அன்று வெளியிடப்பட உள்ளது.

*

கேள்வி : சுறுசுறுப்பாய் இருக்க என்ன வழி?

பதில் : காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை மனதில் விதைத்துக் கொண்டால் போதும்.

கேள்வி : பொய்ப் பேச்சு + வாக்குறுதி தவறுதல் + ஊழல் = அரசியல்வாதி என்பது சரியா?

பதில் : இல்லை. இவற்றில் ஒன்று இருந்தாலே அரசியல்வாதிதான். இரண்டு இருந்தால் அரசியல் முக்கியஸ்தர். மூன்றும் இருந்தால் அரசியல் தலைவர்.

கேள்வி : ரௌடியின் அதிகாரத்துக்கும், அரசியல்வாதியின் அதிகாரத்துக்கும் வித்தியாசம் என்ன?

பதில் : சுத்த பழமைவாதிகளாக இருக்கிறீர்களே!   அந்த வித்தியாசம் எல்லாம் மறைந்து இப்போது சரிநிகர் சமானமாகிவிட்டது.

*

சாதி ஒரு அரசியல் ஆயுதம். அரசியல் சொந்த ஆதாயத்துக்கு ஒரு ஏணி. அவ்வளவுதான். தம் இஷ்ட தெய்வமான பதவி வெறிக்கு முன்பாக இப்போது இவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை நிறுத்திக் குளிப்பாட்டி, மஞ்சள் தடவி மாலை போடுகிறார்கள். மரியாதை செய்கிறார்கள் என்று நினைத்து தாழ்த்தப்பட்ட மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. பலி கொடுக்க நினைக்கிறார்கள்.  ஜாக்கிரதை.

*

உள்ளூர் எம்.எல்..க்கும், தாசில்தார்க்கும் இருக்கும் தகராறு எல்லோர்க்கும் தெரிந்த ஒன்றே. கடந்த 27 ஆம் தேதி காலை தாசில்தாரை ஓடஓட விரட்டித் தாக்க முயற்சி செய்தார் எம்.எல்.. தாக்குதலில் இருந்து தப்பிக்க தாசில்தார் காவல் நிலையத்திற்குள் புகுந்தார். எம்.எல்..வும் விடாமல் காவல் நிலையத்திற்குள் புகுந்து தாசில்தாரை மறுபடியும் தாக்க ஆரம்பித்தார்.

*

பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர் சட்டைப்பையில் ஒரு கடிதம் கண்டெடுக்கப்பட்டது. அதன் குறிப்பு பின் வருமாறு: ஒரு சீட்டுக்கு இரண்டு லட்சம் கேட்கிறார்கள். ஒரு லட்சம் எம்.எல்..வுக்கு. ஒரு லட்சம் நிர்வாகத்துக்கு. எம்.எல்..விடமிருந்து கடிதம் வாங்கிப் போனால்தான் நிர்வாகம் இடம் தரும். இது வெறும் படிப்புச்செலவு. வேலைக்கு மீண்டும் லட்சங்களைப் பிரித்துத் தரவேண்டும். கடவுளே, என் தங்கையைக் காப்பாற்றும் வழி தெரியாமல் தற்கொலை செய்துகொள்கிறேன். அடுத்த ஜென்மத்திலாவது நான் எம்.எல்..வாகப் பிறக்க வேண்டும்.

*

விற்பனைக்குத் தயாராகிவிட்டது. அரசியல் பேராசான். மொத்தம் 800 பக்கங்கள். இத்தனை பக்கங்களில் விரிந்திருக்கும் ஒரு நூலில் எந்தப் பக்கத்தின் சிறப்பைச் சொல்வது. எதை விடுப்பது. கொஞ்சம் கவனியுங்கள். சேர். சேர். சேர். இந்த மூன்றும் ஒன்றுதானா? ஒன்றானால் மூன்று எதற்கு? ஒவ்வொரு வேர்ச் சொல்லுக்கும் அர்த்தம் என்ன? வணங்கு. வணங்கு. வணங்கு. இவற்றில் முதலில் இருக்கும் வணங்குக்கும் மூன்றாவதாக இருக்கும் வணங்குக்கும் என்ன வித்தியாசம் இப்படிச் சிக்கலாக இருக்கும் பல விஷயங்களை சிக்கறுத்துத் தெளிவாக விளக்கியுள்ளாம். அரசியல் கற்க இந்த ‘‘அரசியல் பேராசான் ஒன்று போதும். நூல் விலை ரூபாய் 75/- மட்டுமே.  தபால் செலவு ரூ.10 சேர்த்து ரூபாய் 85.  எம்.. செய்க. உடனே புத்தகத்தைப் பதிவு அஞ்சலில் அனுப்புகிறோம். பணம் அனுப்ப வேண்டிய முகவரி:  தேசபக்தி பதிப்பகம், நன்னிலம் காம்ளெக்ஸ், தி. நகர், சென்னை - 17

*

. ராமசாமிக்கும், முசோலினிக்கும் சரிப்பட்டு வரவில்லை என்ற செய்திகள் ஒருபுறம் இருக்க இருவரும் சேர்ந்து திருநெல்வேலி சிதம்பரனார் மாவட்டங்களில் பதினாறு கூட்டங்களில் பேசினார்கள். பழைய தலைவர்களை அழைத்துக் கூட்டம் நடத்தினால் கூட்டம் கூடுவதில்லை. இவர்கள் இருவரும் சேர்ந்து பேசிய கூட்டங்களுக்குப் பெரும் கூட்டம் சேர்ந்தது. இருவருமே பேசி சகஜமாய் நண்பர்களாய்க் காட்சி தந்தார்கள். கோவில்பட்டி, சங்கரன் கோயில், தூத்துக்குடி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் நடந்த இந்த இருவர் கூட்டத்துக்கும் பிரமிப்பூட்டும் அளவுக்கு கூட்டம் இருந்தது என்றார் மாவட்டத் தலைவர்.

*

சனிக்கிழமை இரவு சிங்கப்பூர் விமானத்தில் வந்து இறங்கிய பிரபல அரசியல்வாதி ஒருவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அவர் வைத்திருந்த சூட்கேஸில் சுமார் ஆறரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வருமானவரி புலனாய்வுத் துறை அதிகாரிகளும் இச்சம்பவத்தின்போது உடன் இருந்தார்கள். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் இரண்டு வீடியோ காமிராக்கள், சோனி மைக்ரோ கேசட் ரெக்கார்டர்கள், 150 கால்குலேட்டர்கள், கம்ப்யூட்டர் டிஸ்க் டிரைவர்ஸ், கார்ட்லெஸ் போன், 3 காமிராக்கள் ஆகியவை அடங்கும். ரூ. 20000 மதிப்புள்ள சன்கிளாஸும் இதில் அடக்கம்.

*

சென்ற மாதம், கட்சியை விட்டு நீக்கப்பட்ட இரண்டு முக்கியப் புள்ளிகளான காரை கோவிந்தசாமியும், நெல்லை சின்னக் கண்ணனும் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக கட்சித் தலைவர் அறிவித்தார்.

*

நாலாயிரம் கோடி ரூபாய்கள். பேங்க்குகள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள பொதுப்பணம், தேசத்தின் பணம் அப்படியே ஸ்வாஹா ஆகியிருக்கிறது. ஷேர் புரோக்கர்கள் வழியாக பங்கு மார்க்கெட்டில் விழுந்து மோசடிக் சூட்டில் நீராவியாக மாறி மறைந்தேவிட்டது. பொதுப் பணம் இவ்வளவு சூறையாடப்பட்டு இருக்கிறதே என்ற அதிர்ச்சி மக்களிடையிலும்  கூடக் காணோம். ஏதோ பங்கு மார்க்கெட் வியாபாரத்தில் ஒரு சிலர் பணம் சம்பாதித்த கதை என்பதுபோல இதை ஒதுக்க மக்களே முன்வந்துவிட்டமாதிரி கூட தோன்றுகிறது. அரசியல்வாதிகள் நம்மையெல்லாம் இப்போது அதிர்ச்சிக்குள்ளாக்குவது இல்லை. அதை சகஜமாய் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டோம். மீண்டும் இவர்களையே தேர்ந்தெடுக்கிறோம். இவர்களைச் சகித்துக்கொள்கிறோம்.

*

சமீபத்தில் நடந்த கட்சித் தாவலில், கட்சி மாறிய ஒவ்வொரு உறுப்பினர்க்கும் தலைக்கு சுமார் இருபது லட்சம் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

*

பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிக் கல்வி நிறுவனம் நடப்புக் கல்வி ஆண்டுக்கான திட்டங்களை அறிவிக்கின்றது. கடந்த ஆறு ஆண்டுகளாக நிறுவனம் இந்தக்  கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தி  நடத்தி வருகிறது. நாட்டிலேயே இப் பல்கலைக்கழகம்தான் இத் துறையை முதன் முதலில் ஆரம்பித்து வெற்றிகரமாய் நடத்துகிறது. சேர்க்கை எண்ணிக்கை ஓராண்டுக்கு நூறு என்கிற அளவில் மட்டுமே. வாய்மொழித் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் மட்டுமே இவ்விடங்கள் நிரப்பப்படும். இதுவரை இங்கு  ‘‘அரசியல் கலைபடிப்பில் அறுநூறு பட்டதாரிகள் தயாரிக்கப்பட்டுள்ளார்கள். தகுதிகள்&தகவல் விளக்கக் குறிப்புப்புத்தகத்தில் உள்ளபடி. விண்ணப்பத்தையும், தகவல்விளக்கப் புத்தகத்தையும் ரூ.25&க்கான ‘‘டைரக்டர், இன்ஸ்டியூட் ஆஃப் கரெஸ்பான்டென்ஸ் அன்ட் கண்டிநியுவிங் எஜுகேஷன்”  என்ற பெயரில் பெறப்பட்ட அக்கௌன்ட் பேயீ டிமான்ட் டிராப்ஃட்டுடன் சுயமுகவரி எழுதிய தபால் தலை ஒட்டப்படாத 16 செ.மீ. X 26 செ.மீ. அளவு  உறை  இணைக்கப்பெற்ற கோரிக்கையை சமர்ப்பிப்பதன் பேரில் பெறமுடியும்.

*

நான் எவ்வளவோ முயற்சி செய்தும் அனுப்புநர் முகவரியையோ, பெறுநர் முகவரியையோ கண்டுபிடிக்க முடியவில்லை. மடலில் எங்கும் கையெழுத்து தெளிவில்லை. எங்கேயோ மழையில் சக்கையாய் நனைந்து விட்டபடியால் உறையின் மேல் இருக்கும் எழுத்துக்கள் கரைந்துவிட்டிருந்தன. உள்ளே இருக்கிற மடலிலும்   லட்ச ரூபாய் காணிக்கை செலுத்துவேன் என்கிற வரிக்குப் பிறகு எதுவும் தெரியவில்லை. எங்கள் பூதக் கண்ணாடிகளும், ஆய்வுகளும் பிரயோஜனப்படவில்லை. கடைசிவரை இது பட்டுவாடா செய்யப்படவே இல்லை. என் வேலை இந்த மடலோடு போயிற்று. ஒப்பந்தக்காலம் முடிந்துவிட்டதால் எடுத்துவிட்டார்கள்.

(பிரசுரமாகாதது 1992)