Home

Sunday, 24 March 2024

அடையாளம் - சிறுகதை

 இரண்டரை வருஷம் ஜெயில்வாசம் மாதிரி துபாயில் கழித்துவிட்டு ஆசை ஆசையோடு வந்திருந்த ராகவனை அப்பா என்று கூப்பிடாமல் குழந்தை ராணி மாமா என்று கூப்பிட்டதுதான் பிரச்சனை. ஆனமட்டுக்கும் முயற்சி செய்து பலிக்காமல் மிகவும் மனம் உடைந்த ராகவனை சமாதானம் செய்து, தான் குழந்தையை எப்படியும் அப்பாவென்று கூப்பிட வைப்பது உறுதியென்றும் இதெல்லாம் அற்ப விஷயம் என்றும் இதற்கெல்லாம் மனம் உடைந்து தளரலாகாது என்றும் சொன்னாள் கல்பனா.

தேவி கண்ணு. நா யாரு

அம்மா

இது யாரு

தாத்தா

இது யாரு

ஆயா

இது யாரு

மாமா

ஐயோ மாமா இல்லடி முண்டம். போட்டாவ பாத்தியேடி மறந்துட்டியா. அப்பா நம்ம அப்பா. எங்க அப்பான்னு கூப்புடு

மாமா

த்ச்ச்ச். இன்னாடி நீ கொழப்பற. தேவி நல்ல பாப்பா தான நீ

ம்

பாப்பாவுக்கு இங்க இன்னா இருக்குது

நெத்தி

இங்க இன்னா இருக்குது

கண்ணு

இங்க இன்னா இருக்குது

மூக்கு

இங்க இன்னா இரக்குது

கை

இந்த கை யார் மேல இருக்குது

அம்மா மேல

இந்த கை யார்மேல இருக்குது

மாமா மேல

தேவிகண்ணு இன்னாமா சண்டித்தனம் பண்ணற. சரியான மண்டா இருக்கியேடி. இத்தன தரம் சொல்றன். கொஞ்சம் கூட புரிஞ்சிக்கமாட்டேங்கறியே. இவருவேற மூஞ்சிய -தூக்கி வச்சிக்கினிருக்காரு. இங்க பாரு தேவிம்மா ஒனக்கு சாக்லெட் வேணுமா

ம்

சைக்கிள் வேணுமா

ம்

புது கவுன் வேணுமா

ம்

அப்ப நல்ல பொண்ணா அப்பான்னு கூப்புடணும்

மாமா

ஐயோ பைத்தியமா இருக்கியேடி முண்டம். இங்கபாரு அம்மா சொல்றதெல்லாம் சொல்றியா

ம்

பெரியப்பா

பெரியப்பா

நடு அப்பா

நடு அப்பா

சித்தப்பா

சித்தப்பா

அப்பா

அப்பா

அப்பாடி உயிர் வந்திச்சி எங்க இப்ப கூப்புடு அப்பான்னு...’

மாமா

தேவி இப்ப பாரு ஒடம்பு தோல் பிஞ்சிரும். செல்லம் குடுத்து குடுத்து ஒன்ன கெடுத்தாச்சி. எத்தினிதரம் போட்டாவுல காட்டி சொன்னன் மறந்துட்டியா? அப்பான்னு கூப்புடும்மா

மாமா

தேவி, அம்மாவ கோபப்பட வய்க்கக் கூடாது. சொல்ற பேச்ச கேக்கணும். அப்பதா புடிக்கும். எங்க சொல்லு பாப்பம் ஜிப்பா

ஜிப்பா

டப்பா

டப்பா

குப்பா

குப்பா

அப்பா

அப்பா

ஆங் நீ சிங்கக்குட்டி. அதாண்டி. அதான் சரியா சொல்றியே. அப்டியேதான் கூப்படனும். இப்ப கூப்புடு பாப்பம். ஏங்க இங்க பாருங்க. மூஞ்ச தொங்க போட்டுக்கினிங்க. புள்ள கூப்புடப்போவுது பாருங்க. கூப்புடுடி. அப்பா என்னப்பாருன்னு கூப்புடுடி...’

மாமா...’

தேவி அம்மாவுக்கு ஆத்தரம் ஜாஸ்தி யாச்சின்னா இன்னா செய்வன் தெரியுமா. கரண்டிய காயவச்சி பழுக்க பழுக்க சூடு இழுத்துருவன். ஒழுங்கா சொன்னபடி கூப்படணும் எங்க சொல்லு. ...’

ப்

ப்

பா

பா

அப்பா

அப்பா

அப்றம் என்னடி கேடு முண்டம். வாயில வார்த்த வருதில்ல. அப்டியே கூப்புட வேண்டியதுதான. மொளச்சி மூணு எல உடல. அதுக்குள்ளாற ஆங்காரத்த பாரு. கூப்புடு. அப்பான்னு கூப்புடுடி

மாமா

அழுது விடுகிறது மாதிரி நெஞ்சு அடைத்தது ராகவனுக்கு குழந்தை மாமா என்று சொல்கிற ஒவ்வொரு முறையும் இதயத்தில் சவுக்கடி விழுந்தது. வலித்தது. பொங்கியது. இம்சையாய் இருந்தது. பயந்து மிரண்டு நடுங்கி நிற்கிற குழந்தையை ஏறிட்டுப் பார்த்துத் திரும்பி கல்பனாவின்பக்கம்த்ச். உடுடி கல்பனா. கொழந்தய தொந்தரவுபடுத்தாதஎன்று சொன்னான்.

இதுக்கு போயி ஏங்க இப்டி சலிச்சிக்கறிங்க. வயித்துல ஏழுமாசக் கொழந்த அவ நீங்க போவும் போது, பொறந்ததிலேந்து இப்பதான மொதல் மொதலா ஒங்கள பாக்கறா. அதான் கொஞ்சம் பயப்படறா. கொஞ்சம் பொறுமையா இருங்க, கூப்படாம எங்க  போவப் போறா...’

கூப்டட்டும் கல்பனா. நிதானமா கூப்படட்டும்

ச். இங்க பாருங்க. எந்த கவலயும் இல்லாம இருங்க நீங்க. அவள அப்பான்னு கூப்பட வைக்க வேண்டியது என் பொறுப்பு போதுமா

ராகவன் வேதனையாய் சிரித்தான்.

இந்த லீவோட இங்கியே இருந்துறப் போறன் கல்பனா. திரும்பி துபாய்க்கு போவபோறதில்ல

ஏங்க

பின்ன இன்னாடி? அடையாளம் தெரியாத ஆளா கொழந்த முன்னால நிக்கறதவிட பணமாடி பெரிசு....?’

ஐயோ ஒலகம் தெரியாம பேசாதிங்க. இந்த காலத்துல பணம்தா பெரிசு பணமில்லன்னா யாரு மதிப்பா. அந்த மாதிரிலாம் பேசாதீங்க. இந்த நாய இன்னம் பத்து நிமிஷத்துல அப்பான்னு கூப்பட வய்க்கறன் பாக்கறிங்களா? முதுவுல நாலு சாத்து சாத்தனா தானா சொல்வா...’

தேவியை இழுக்கப்போன கல்பனாவின் தோளை அழுத்தித் தொட்டு நிறுத்தித் திருப்பினாலும் ராகவனுக்கு யாரோ அடையாளம் தெரியாத பெண்ணாய்த் தோன்றினாள் கல்பனா.

(நிஜம் -1989)