கர்நாடக மாநிலத்தில் துங்கபத்திரை ஆற்றங்கரையோரத்தில் உள்ள ஹொஸபேட்டெ என்னும் ஊரில் நான் சில ஆண்டுகள் இளநிலை பொறியாளராகப் பணிபுரிந்தேன். அங்கிருந்து பதின்மூன்று கிலோமீட்டர் தொலைவில் வரலாற்றுச் சின்னமான ஹம்பி இருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் தலைநகரமாக இருந்த புகழ்பெற்ற நகரம். சிற்பக்கலைக்குப் பேர்போன இடம்.
அக்காலத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு
அன்று ஹொஸபேட்டையிலிருந்து மிதிவண்டியிலேயே ஹம்பிக்குச் செல்வதை ஒரு பழக்கமாக வைத்திருந்தேன்.
ஹம்பியின் மையத்தில் இருக்கும் விருபாட்சர் கோவில் மிகமுக்கியமான இடம் . அதன் முன்வாசல்
கோபுரம் பல அடுக்குகளைக் கொண்டது. அதன் உயரம் நாற்பதடிக்கும் மேல் இருக்கும். வாசலிலிருந்து
சிறிது தூரம் நடந்துதான் கருவறைக்குச் செல்லவேண்டும். கருவறையை ஒட்டிய முன்சுவரில்
ஒரு சிறிய துளை உள்ளது. அந்தத் துளை வழியாக வரும் ஒளிக்கற்றை பின்சுவர் வரைக்கும் நீண்டு
விழும் வகையில் கோவில் கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஒளிச்சதுரத்தின் நடுவில்
ஓர் ஓவியத்தைப்போல முன்வாசல் கோபுரத்தின் நிழல் விழும். நாற்பதடி உயரமுள்ள கோபுரத்தை
ஒரு சின்ன சுவரொட்டிச் சித்திரத்தைப்போலப் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி.
அது அசல் கோபுரமல்ல என்பது பார்ப்பவர்
எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அசலைப்போலவே அழகான இன்னொரு வடிவம். எங்கோ இருக்கும் ஒரு கோபுரத்தை எங்கோ இருக்கும்
மிகச்சிறிய ஒரு துளை முற்றிலும் புதிதான ஓர் இடத்தில் ஒரு புதுமையான கோணத்தில் முன்வைக்கும்
வகையில் அமைந்திருக்கும் கட்டுமானம் மிகப்பெரிய
அதிசயம். கட்டடக்கலையில் அது ஒரு சாதனை. ஒரு கட்டுமானத்தில் இப்படி ஒரு மாயத்தை நிகழ்த்திய
மாபெரும் கலைஞரின் ஆற்றலை எண்ணியெண்ணி மனம் மயங்கும்.
இந்த முன்னுரையில் அந்த அதிசயத்தை நான்
குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சிறுகதை என்னும் கலையும் அதையொத்த ஓர் அதிசயம்.
நம்மைச் சுற்றி விரிந்திருக்கும் வாழ்க்கையை மொழி வழியாக அதன் அழகை அருகிலிருந்து பார்க்கவைக்கும்
கலை. ஒரு மொழியில் வெற்றி பெற்ற கதையை எழுதுவது ஒரு சாதனை.
மானுட வாழ்க்கை நம்மைச் சுற்றி விரிந்திருக்கிறது.
இன்பம், துன்பம், நட்பு, துரோகம், வீரம், வேதனை, புன்னகை, அழுகை என எண்ணற்ற களங்களைக்
கொண்டது அந்த வாழ்க்கை. அந்த வாழ்க்கையிலிருந்து சிறுகதை ஒரே ஒரு கணத்தை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.
அந்தக் கணம் வழியாக மொத்த வாழ்க்கையின் சாரத்தையும் வாசகர்களுக்கு ஒரு தரிசனமாக முன்வைக்கிறது.
ஒரு சிறுகதையில் ஒரு வாழ்க்கையை ஆதியிலிருந்து அந்தம் வரைக்கும் சொல்லிக்கொண்டிருக்கத்
தேவையில்லை. ஒரே ஒரு கணம் வழியாக, ஒரே ஒரு சித்திரம் வழியாக அந்த அனுபவத்தை உணரவைத்தாலே
போதும். அது மகத்தான சிறுகதையாக அமைந்துவிடுகிறது. விருபாட்சர் கோவில் சுவரில் உள்ள
சிறியதொரு துளை மாபெரும் கோபுரத்தின் நிழலை காட்சிப்படுத்துவதற்கு நிகரானது இச்சாதனை.
எந்தக் கணம் சிறுகதைக்கு உகந்த கணம்
என்று தேர்ந்தெடுத்து முன்வைப்பதில்தான் ஒரு கலைஞனின் எழுத்தாளுமை அடங்கியிருக்கிறது.
தமிழின் மகத்தான சிறுகதைக்கலைஞர்களின் படைப்புகளில் அத்தகு கணங்கள் நிறைந்திருப்பதைப்
பார்க்கலாம். எடுத்துக்காட்டாக, புதுமைப்பித்தனின் ‘செல்லம்மாள்’, கு.அழகிரிசாமியின்
‘ராஜா வந்திருக்கிறார்’, ந.பிச்சமூர்த்தியின் ‘பதினெட்டாம் பெருக்கு’, கி.ராஜநாராயணனின்
’காய்ச்சமரம்’, சுந்தர ராமசாமியின் ‘விகாசம்’, அசோகமித்திரனின் ’புலிக்கலைஞன்’, தி.ஜானகிராமனின்
‘பாயசம்’ என மிகநீண்ட பட்டியலையே கொடுக்கமுடியும்.
அத்தகு கணங்களைத் தேடித்தேடி கண்டடைவதுதான்
ஒரு சிறுகதை எழுத்தாளனுக்கு உள்ள சவால். மழை வரும் கணமும் குழந்தை பிறக்கும் கணமும்
யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் இருப்பதைப்போலவே கதைக்கருவைக் கண்டடையும் கணமும்
யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. பறவையியலாளர்கள் குறிப்பிட்ட ஒரு பறவையின் வருகைக்காக
வனப்பகுதிகளிலும் மலைப்பகுதிகளிலும் நாட்கணக்கிலும் மணிக்கணக்கிலும் வானத்தைப் பார்த்தபடி
காத்திருப்பதுண்டு என்பதை பல பறவையியலளார்கள் தம் நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார்கள்.
சிறுகதையாசிரியர்கள் வாழ்விலும் அத்தகு அனுபவங்கள் உண்டு.
கடலூரைச் சேர்ந்த பா.ஆசைத்தம்பி தொடர்ச்சியாக
பல ஆண்டுகளாக எழுதி வருபவர். ஏற்கனவே இரு தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். இது மூன்றாவது
தொகுதி. பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கிய இத்தொகுதியை ஒரே அமர்வில் படித்துமுடித்தேன். புராணப்பின்னணியாக இருந்தாலும் சரி, சமூகப்பின்னணியாக
இருந்தாலும் சரி, மனிதவாழ்க்கையை துயரத்தில் ஆழ்த்தும் தருணங்களைத் தொகுத்து வாழ்க்கையை
மதிப்பிட ஆசைத்தம்பி முயற்சி செய்திருக்கிறார். பல நேரங்களில் மழையில் சிக்கி மூழ்கிவிடும்
காகிதப்படகைப்போல மனித வாழ்க்கை துயரத்தில் மூழ்கிவிடுகிறது. ஒருசில நேரங்களில் நீர்ச்சுழலில்
சிக்கி தத்தளிப்பவற்றைத் தொட்டிழுத்து கரைக்குக் கொண்டுவரும் யாரோ ஒருவருடைய கைகளைப்போல
யாரோ ஒருவருடைய கருணையால் மனித வாழ்க்கை துயரத்திலிருந்து தப்பித்துவிடுகிறது. இருவேறு
வாழ்க்கை அமைப்புகளையும் ஆசைத்தம்பி தம் சிறுகதைகளில் காட்சிப்படுத்துகிறார். புராணப்பின்னணியிலும்
வரலாற்றுப்பின்னணியிலும் ஒருசில சிறுகதைகளை முயற்சி செய்திருக்கிறார்.
இத்தொகுதியில் முக்கியமான ஒரு சிறுகதை
‘என் மன வானில்’. கல்லூரியில் பணிநியமன ஆணையைப் பெற்றுக்கொண்ட இளைஞனொருவன் நன்றி தெரிவிக்கும்
வகையில் மேடையிலேயே அப்பாடலைப் பாடுகிறான். அரங்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் அந்தப்
பாடலைக் கேட்டு அதன் இனிமையில் திளைத்திருக்கிறார்கள். அந்தப் பார்வையாளர்கள் கூட்டத்தில்
முன்வரிசையில் அமர்ந்தபடி அந்த இளைஞனின் தந்தையும் கேட்டுக்கொண்டிருக்கிறார். பார்வையிழந்தவரான
அவருடைய மனம் நெகிழ்ந்துபோகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் பாடிய
பாடல் அது. பார்வையிழந்தவர்களுக்காகவே உருவாக்கப்பட்டதுபோல எங்கெங்கும் பாடப்பட்ட பாடல்.
தெருவோரங்களில் அமர்ந்து அப்படி பாடிப்பாடித்தான் அந்தக் காலத்தில் பொருளீட்டி தம்
குடும்பத்தை அவர் காப்பாற்றினார். இசையும் பாட்டும் அவருக்கு சோறு போட்டது. இப்படி
பல எண்ணங்கள் அவர் நெஞ்சில் அலைமோதுகின்றன. பல பழைய அனுபவங்கள் காட்சித்தொகுப்புகளாக
ஆழ்மனத்திலிருந்து எழுந்து வருகின்றன.
வடமாநிலத்திலிருந்து பிழைக்க வந்தவர்
அவர். அவருக்கு ஒரு சிமெண்ட் ஆலையில் வேலை கிடைக்கிறது. அவருடைய மனைவிக்கு சித்தாள்
வேலை கிடைக்கிறது. அதில் கிடைக்கும் ஊதியத்தைக்
கொண்டு நிம்மதியாக வாழ்க்கையை நடத்துகிறார்கள். அவர்களுக்கு இரு பிள்ளைகள். குடும்ப
வாழ்க்கைப்படகு எப்படியோ தடுமாறித் தடுமாறி முன்னோக்கிச் செல்கிறது.
ஒருநாள் வேலை செய்யும் இடத்தில் அவர்
மீது சிமெண்ட் மூட்டைகள் சரிந்துவிடுகின்றன. அவர் மூட்டைகளுக்கு அடியில் சிக்கிக்கொள்கிறார்.
சகதொழிலாளர்கள் அவரைக் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அவருடைய உயிரைக் காப்பாற்றும்
மருத்துவர், சிமெண்ட் படிந்ததால் பாழ்பட்டு கலைந்து குழைந்த கண்களைக் காப்பாற்ற முடியவில்லை.
அவருடைய பார்வைத்திறன் போய்விடுகிறது. மனைவியின்
வருமானத்தில் வாழ்க்கைவண்டி தள்ளாடித்தள்ளாடி ஓடுகிறது. தன்னால் வருமானம் ஈட்டமுடியவில்லையே
என்னும் கவலை அவனுடைய ஆழ்மனத்தில் அரித்தபடியே இருக்கிறது.
பார்வையிழந்த அவர் பாதையோரமாக நடந்துசெல்லும்போது
திண்ணையில் ஆர்மோனியம் இசைத்தபடி உட்கார்ந்து பாட்டு பாடும் ஒருவருடைய வீட்டின் முன்
சிறிது நேரம் நின்று கேட்டுவிட்டுச் செல்கிறார். ஒவ்வொரு நாளும் இது தொடர்கிறது. ஒருநாள்
பாட்டு கேட்கவில்லை. பக்கத்தில் சென்று விசாரிக்கிறார். அங்கிருந்த வயதான தம்பதியினர்
நகரத்தில் வசிக்கும் மகனின் அழைப்பை ஏற்று நகரை நோக்கிச் செல்ல வேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.
மகனின் அழைப்பை அவரால் தட்ட இயலவில்லை. பார்வைத்திறன் இல்லாவிட்டாலும் இசையில் நாட்டமுள்ளவர்
என்பதை அந்தப் பெரியவர் உணர்ந்துகொள்கிறார். அவரிடம் தன் ஆர்மொனியப்பெட்டியைக் கொடுத்துவிட்டுச்
சென்றுவிடுகிறார். பெரியவருக்கு நன்றி கூறி பெற்றுக்கொள்கிறார் பார்வையில்லாதவர்.
பார்வைக்குறைபாடு உள்ளவரின் வாழ்க்கைத்
திசையையே அந்த ஆர்மோனியப்பெட்டி மாற்றிவிடுகிறது. இரு வேளைகளிலும் தெருவோரமாக உட்கார்ந்து
ஆர்மோனியத்தில் வாசித்து பொதுமக்களுக்கு இசைவிருந்து வைக்கத் தொடங்குகிறார். அப்போதுதான்
அன்றைய சூழலில் பிரபலமாக இருந்த ’என் மன வானில்’
பாட்டை இசைக்கிறார். மக்கள் மகிழ்ச்சியோடு கொடுக்கும் சிறுசிறு அன்பளிப்புகள் அவருடைய
தினசரி வருமானமாக மாறிவிடுகிறது. வறுமை கொஞ்சம் கொஞ்சமாக அகன்றுவிடுகிறது. பிள்ளைகள்
வேகவேகமாக வளர்கிறார்கள். படித்து பட்டதாரிகளாகிறார்கள். போட்டித்தேர்வில் வென்று பணிநியமன
ஆணையைப் பெறுகிறார்கள்.
எல்லோருக்கும் தெரிந்த ஒரு சிறிய இசைத்துணுக்கு
வழியாக வாழ்க்கையின் வீழ்ச்சியையும் எழுச்சியையும் காணச் செய்கிறார் ஆசைத்தம்பி. அந்த
வகையில் அது ஒரு நல்ல முயற்சி. கதை ஒரு முக்கியான கணத்தில் தொடங்கி பின்னோக்கிய பார்வையில்
ஒரு முழு வட்டமடித்துவிட்டு மீண்டும் அதே கணத்தில் முடிவடைகிறது. ’அருக்காணியும் அக்கா வீட்டுக்குச் சென்றுவந்த கிழவியும்’
சிறுகதையையும் அந்த வரிசையில் சேர்க்கமுடியும்.
எழுதும் கலை என்பது ஒருவகையில் உள்முகமாக
நம் எண்ணங்களை வரிசைப்படுத்திக்கொள்ளவும் தொகுத்துக்கொள்ளவும் உதவக்கூடிய ஒரு முயற்சி.
ஒரு வகையில் ஒருவருடைய சிந்தனைகளை அது ஒழுங்குபடுத்தி சீரமைக்கிறது. ஓர் அனுபவத்தை
மற்றொரு அனுபவத்தோடு ஒப்பிட்டு தன் கருத்துகளைச் செம்மைப்படுத்திக் கொள்கிறது. மனிதர்களிடம்
வெளிப்படும் அபூர்வமான பண்புகளைப் பதிவு செய்கிறது. அத்தகு வெளிப்பாட்டுக்காகவே அப்பாத்திரங்கள்
என்றென்றும் வாசகர்களின் நினைவில் நீடிக்கும் பாத்திரங்களாக அமைந்துவிடுகிறார்கள்.
தனக்குச் சொந்தமான ஆர்மோனியப்பெட்டியை
அன்பளிப்பாக எடுத்துக் கொடுக்கும் பெரியவரின் பாத்திரம் மறக்கமுடியாத ஒன்று. கொடுத்த
கடனைத் திருப்பித் தர தாமதமானதால் சீற்றமுற்ற ஒருவன் கடன் வாங்கியவனின் கையிலிருந்த
ஆர்மோனியப்பெட்டியைப் பிடுங்கி தரையில் அடித்து உடைத்துவிடுகிறான். அப்படிப்பட்ட மனிதர்கள்
வாழ்கிற உலகத்தில்தான் இப்படிப்பட்ட பாத்திரங்களும் வசிக்கிறார்கள். ஆர்மோனியப்பெட்டியை
ஏற்றுக்கொள்ளும் மனிதனுக்கு இந்த இருவேறு குணங்களைக் கொண்ட மனிதர்களையும் பார்க்கும்
வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இப்போது இந்த உலகத்தை மதிப்பிடுவது
எப்படி என்றொரு கேள்வி எழுகிறது. உடைத்தவரை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுவதா? கொடுத்தவரை
அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுவதா? ஒரு வாசகனாக, கதையை வாசித்து முடித்த பிறகு இப்படி
ஒரு கேள்வி திரண்டெழுவதை உணர்கிறேன். மனிதன் மிருகமாக மாறும் தருணங்கள் எல்லோருடைய
வாழ்க்கையிலும் ஏற்படுகின்றன. சமநிலை தவறும் தருணத்தில் ஆழ்மனத்தில் உறங்கும் மிருகம்
விழித்தெழுந்து ஆட்டம் போடத் தொடங்கிவிடுகிறது. அதில் எவ்விதமான புதுமையும் இல்லை.
ஆனால் மனிதன் மாமனிதனாக உயர்ந்து நிற்கும் தருணங்கள் எல்லோருடைய வாழ்விலும் அமைவதில்லை.
அது ஓர் அபூர்வமான தருணம். ஆகவே அதையே மதிப்பிடுவதற்கான அளவுகோலாக எடுத்துக்கொள்வதுதான்
பொருத்தமாக இருக்கும்.
’ஒளரங்கசீப்பின் மனசாட்சிக்குத் தெரியும்’
சிறுகதையில் அஜ்யா என்னும் ஒரு திருநங்கை பாத்திரத்தை இடம்பெறச் செய்திருக்கிறார் ஆசைத்தம்பி.
ஆர்மோனியப் பெட்டியை எடுத்துக் கொடுத்த பெரியவரைப்போலவே தன் உயிரையே ஒளரங்கசீப்புக்காக
கொடுக்கிறாள் அந்தத் திருநங்கை. அவருடைய பாத்திரமும் மிகமுக்கியமானது.
அரசரின் கண்வலிக்குக் காரணம், அவர்
கண்களின் விழித்திரையில் ஒட்டிக்கொண்டிருக்கும் சின்னஞ்சிறிய கொடுக்குநுனிதான் என்பதை
ஓரிரு கணங்களிலேயே கண்டுபிடித்து, கவனமாக அவற்றை எடுத்து குணப்படுத்தும் அளவுக்கு நுட்பமான
பார்வை கொண்டவள் அவள். அவளுடைய நுண்ணுணர்வைப் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டாகவே தனக்கு
அருகிலேயே அவளை ஆட்சிக்காலம் முழுதும் வைத்துக்கொள்கிறார் ஒளரங்கசீப். இறுதிப்படுக்கையில் இருக்கும் மன்னரின்
இறுதிவிருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு அவர் அளித்த கூடையை துர்கான்பூர் மசூதிக்கு
அனுப்பிவைக்கிறாள். ஒரு பழைய தொப்பியும் மன்னரே சொந்த உழைப்பினால் ஈட்டிய ஆயிரம் பொற்காசுகளும்
மட்டுமே அக்கூடையில் இருக்கின்றன. ஆனால் அக்கூடையில் வைரவைடூரியங்களை வைத்து மன்னர் வெளியேற்றிவிட்டார்
என்னும் ஐயம் கொண்ட ஒளரங்கசீப்பின் பிள்ளைகள் அத்திருநங்கையைக் கொண்டுவிடுகின்றனர்.
ஒரு படைப்பில் முன்வைக்கப்பட வேண்டிய
தருணம் எது என்பதை முடிவு செய்வது ஒரு படைப்பாளிக்குரிய சுதந்திரம். அத்தருணத்தின் வழியாக அகக்காட்சிகளையும் புறக்காட்சிகளையும்
ஒருங்கிணைத்து வாசகர்களின் முன்னிலையில் காட்சிப்படுத்துவது ஒரு கலை. அந்தச் செய்நேர்த்தியில்
கூடிவரும் நுட்பமே ஒரு படைப்பை மிகச்சிறந்த படைப்பாக மாற்றும். ஒரு சம்பவம் சார்ந்து
ஒரு செய்தித்தாளுக்கு செய்திக்கட்டுரையை எழுதும்
எழுத்தாளருக்கும், பார்வையாளர் அரங்கத்தில் அமர்ந்திருக்கும் பொதுமக்கள் முன்னிலையில்
அதை விவரிக்கும் ஒரு பேச்சாளருக்கும், இலக்கிய
இதழுக்கு ஒரு சிறுகதையை எழுதும் எழுத்தாளருக்கும் இடையிலுள்ள வேறுபாடு மிகமுக்கியமானது.
ஒவ்வொன்றுக்கும் ஒருவித நுட்பம் தேவைப்படுகிறது. நுட்பம் தேவையற்ற கலை என எதுவுமில்லை.
தமிழ்ச்சிறுகதைக்கு ஒரு நூற்றாண்டுக்கும்
மேற்பட்ட வரலாறு உண்டு. நமக்கு முன்னால் நம் மொழியையும் சிறுகதை வகைமையையும் வளர்த்து
பெருமைப்படுத்திய ஆளுமைகள் பலர். அவர்களுடைய படைப்புகளைத் தேடித்தேடிப் படிப்பது ஒரு
பயிற்சி. சிறுகதைத்துறையில் சிறந்து விளங்க எண்ணும் ஆசைத்தம்பி, ஒருபக்கம் இடைவிடாமல்
எழுதிக்கொண்டிருந்தாலும் இன்னொருபக்கம் வாசிப்புப்பயிற்சியிலும் ஈடுபட்டிருக்கவேண்டும்.
ஆசைத்தம்பிக்கு என் நட்பார்ந்த வாழ்த்துகள்.
(பா.ஆசைத்தம்பியின்
’தகிப்பு’ சிறுகதைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரை)