ஜெயகாந்தன் எழுதிய ரிஷிமூலம் என்னும் நெடுங்கதை எழுபதுகளில் தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது. நான் அப்போது உயர்நிலைப்பள்ளி மாணவன். எங்கள் அப்பாவின் நண்பருடைய மகன் எங்கள் ஊர் நூலகத்தில் பணியாற்றிவந்தார். அந்த நெருக்கத்தின் விளைவாக நீண்ட நேரம் நூலகத்திலேயே உட்கார்ந்து எல்லா வார, மாத இதழ்களையும் எடுத்துப் படிப்பேன்.
ஒவ்வொரு வார, மாத இதழிலும் கதைகளுக்காகவும் நகைச்சுவைகளுக்காகவும் தீட்டப்பட்ட எல்லா ஓவியங்களையும் நிறுத்தி நிதானமாகப் பார்ப்பேன். எனக்குப் பிடித்த ஓவியத்தைப் பார்த்து என் நோட்டில் அப்படியே வரைந்துகொள்வேன். அந்தக் காலத்தில் அது ஒரு பொழுதுபோக்கு. என் நண்பர்களுக்கு அவற்றைக் காட்டி மகிழ்வேன். சிலர் தம் நோட்டிலும் அந்த ஓவியங்களை வரைந்துகொடுக்குமாறு கேட்பார்கள். அவர்கள் கேட்கும் ஓவியத்தை அவர்களுடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக வரைந்துகொடுப்பேன்.
ஓவியர்கள் கோபுலுவும் ராமுவும்
வரைந்த ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பார்த்தவுடனே வரையத் தூண்டும் ஓவியங்கள்
அவை. ரிஷிமூலம் கதைக்கு கோபுலு ஓவியம் தீட்டியிருந்தார். ஒவ்வொரு வாரமும் அந்தக் கதைக்காகவும் ஓவியத்துக்காகவும்
தினமணி கதிருக்காகக் காத்திருப்பேன்.
ஒருநாள் விட்டல்ராவின்
புத்தக அடுக்கில் பைண்டிங் செய்யப்பட்ட ஒரு தடிமனான தொகுப்பைப் பார்த்தேன். அதை எடுத்துப்
பிரித்தேன். தினமணி கதிரில் அந்தக் காலத்தில் அவர் எழுதி வெளிவந்த கதைகளைக் கொண்ட பக்கங்களை
மட்டும் கத்தரித்து எடுத்து ஒரு தொகுப்பாக பைண்டிங் செய்துவைத்திருந்தார் விட்டல்ராவ்.
1973,74,75 காலகட்டத்தில் அவர் எழுதிய கதைகள். அவருடைய கதைகளுக்கு முன்னால் ஜெயகாந்தனின்
ரிஷிமூலம் கதையின் பக்கங்கள் வைக்கப்பட்டிருந்தன. மூன்று வாரத் தொடராக வெளிவந்த அத்தியாயங்கள்
வரிசையாக இருந்தன. முதல் பக்கத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த கோபுலுவின் ஓவியம். மேசையின்
மீது புத்தகத்தைப் பிரித்துவைத்துக்கொண்டு குனிந்து படிக்கும் ஒரு மாணவனின் படம். நான்
அந்த ஓவியத்தையே நெடுநேரம் கண்கொட்டாமல் பார்த்தபடி இருந்தேன். அந்த ஓவியத்தைப் பார்த்து
ஓவியமெழுதப் பழகிய பழைய நாட்கள் என் மனத்தில் நிழலாடின. என் விரல்கள் என்னை அறியாமலேயே
வெட்டவெளியில் அந்த மாணவனின் உருவத்தைத் தீட்டத் தொடங்கிவிட்டன.
“அந்த படத்தையே வைச்ச கண்ண
எடுக்காம பார்த்துட்டே இருக்கீங்களே? அதுல அப்படி என்ன விசேஷம்?” என்று கேட்டார் விட்டல்ராவ்.
நான் என் மனத்தில் பொங்கியபடி
இருக்கும் பழைய காலத்து நினைவுகளை அவரிடம் விரிவாகச் சொன்னேன். அவர் பொறுமையோடு எல்லாவற்றையும்
கேட்டுக்கொண்டார்.
பக்கங்களைப் புரட்டிப்
புரட்டி நான் அத்தொகுதியில் இடம்பெற்றிருக்கும் கோபுலுவின் பிற ஓவியங்களையே பார்த்தபடி இருந்தேன்.
தலைக்கு கையை முட்டுக்கொடுத்து கால் மீது கால் போட்டபடி ஒருக்களித்துப் படுத்திருக்கும் சாமியார், குடைகளை விரித்துப் பிடித்தபடி நடந்து
போகும் இரு நடுவயது மனிதர்கள் என ஒவ்வொன்றையும் பார்க்கப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
”வீட்டுக்கு எடுத்துச் சென்று ஒருமுறை நிதானமாகப் பார்த்துவிட்டு கொடுக்கட்டுமா சார்?”
என்று விட்டல்ராவிடம் கேட்டேன். “தாராளமா எடுத்துட்டு போங்க” என்று உடனடியாக சம்மதத்தைத்
தெரிவித்தார் அவர்.
வீட்டுக்கு வந்ததும் அன்றிரவு
அந்தப் படங்களை மீண்டும் புரட்டிப் பார்த்தேன். பழைய பால்யகால நினைவுகள் மூண்டெழ ஒரு
வெள்ளைத்தாளில் அந்தப் படங்களைப் பார்த்து வரையத் தொடங்கினேன். பள்ளிக்காலத்துக்குப்
பிறகு நான் ஓவியப் பயிற்சியைத் தொடரவில்லை. வருமோ, வராதோ என்றொரு ஐயம் ஆழ்மனத்தில்
இருக்கத்தான் செய்தது. ஆனாலும் ஆசையின் காரணமாக வெட்கத்தைவிட்டு வரையத் தொடங்கினேன்.
ஆனால் சிறிது நேரத்திலேயே தினமணி கதிர் ஓவியத்தில் இருந்த மனிதர்கள் என்னுடைய தாளில்
இடம்பெயர்ந்து உட்கார்ந்துவிட்டனர். கிட்டத்தட்ட கோபுலுவின் சாயலைக் கொண்டுவந்துவிட்டேன்
என்பதில் என் மனம் நிறைவாக உணர்ந்தது.
ஓவியங்களைத் தொடர்ந்து
அந்தக் கதையையும் படித்தேன். கதையின் மொத்த சாரமும் ஒரு கேள்வியாகத் திரண்டெழுந்து
நெஞ்சில் மோதியது.
அடுத்தநாள் காலையில் ஜெயகாந்தன்
கதையைத் தொடர்ந்து அடுத்தடுத்து இணைக்கப்பட்டிருந்த விட்டல்ராவின் கதைகளைப் படிக்கத்
தொடங்கினேன். பல கதைகளை அப்போதுதான் நான் முதன்முறையாகப் படித்தேன்.
’பாசம் பிரிவது இல்லை’
என்னும் தலைப்பில் இரு சகோதரர்களைப் பற்றிய சிறுகதையொன்று இருந்தது. அதற்கு ஓவியர்
ஜெயராஜ் ஓவியம் வரைந்திருந்தார். செல்வநாதன்,
மகிமைநாதன் இருவரும் சகோதரர்கள். பாளையங்கோட்டை பக்கத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் இருவருக்கும்
இடையில் நல்ல உறவு கிடையாது. பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒரு நிகழ்ச்சியால்
உறவு முறிந்துவிட்டது. மகிமைநாதன் வாட்சுகள், எலெக்ட்ரானிக் பொருட்கள், மதுப்புட்டிகள்
என அயல்நாட்டுப் பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கடத்திச் சென்று
விற்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறான். அந்த விவகாரம் எதுவும் செல்வநாதனுக்கோ, குடும்பத்தில்
இருக்கும் மற்றவர்களுக்கோ தெரியாது. ஒருநாள் தம்பி செல்வநாதனை காரில் தன்னோடு அழைத்துக்கொண்டு
எங்கோ புறப்பட்டுச் செல்கிறான் மகிமைநாதன். எந்த இடத்துக்குச் செல்லப் போகிறோம் என்று
கேட்காமலேயே சகோதரனை நம்பி அவனோடு செல்கிறான்.
வழியில் ஒரு லெவல் க்ராஸிங்
வருகிறது. தம்பியை காரிலேயே உட்கார்ந்திருக்கும்படி சொல்லிவிட்டு மகிமைநாதன் அங்கிருந்து
புறப்பட்டுச் செல்கிறான். தற்செயலாக அங்கு சோதனைக்கு வந்து காவல்துறையினர் வண்டிக்குள்
வைக்கப்பட்டிருந்த கடத்தல் பொருட்களைப் பார்த்துவிட்டு வண்டியில் இருந்த செல்வநாதனைக்
கைது செய்துகொண்டு அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான் செல்வநாதன். தண்டனைக்காலம்
முடிந்து விடுதலை பெற்றவனை வீடு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. குடும்பப்பெருமையைக் குலைத்தவன்
என்ற எண்ணத்தில் அவனுடைய தந்தை அவனை குடும்பத்தைவிட்டு வெளியேற்றிவிடுகிறார். அன்று
வைராக்கியத்தோடு வீட்டைவிட்டு வெளியேறியவன் சென்னைக்கு வந்து பத்தொன்பது ஆண்டுகளாகப்
பாடுபட்டு தன் வாழ்க்கையை ஒரு நல்ல நிலைக்கு உயர்த்திக்கொள்கிறான். ஆனால் யாரோடும்
உறவு பாராட்டாமல் தனித்தே வாழ்கிறான்.
இளமையிலேயே பாதை மாறிவிட்ட
அவனுடைய மூத்த சகோதரனோ மீண்டும் திரும்பமுடியாத அளவக்கு அதே பாதையில் வெகுதொலைவு சென்றுவிடுகிறான்.
சென்னை தெருவில் நடந்துகொண்டிருந்த சமயத்தில் பத்தொன்பது ஆண்டுகளாக பார்க்காத சகோதரனை
தற்செயலாகப் பார்த்துவிட்டு சிறிது இடைவெளியோடு
அவனைப் பின்தொடர்ந்து வந்து, அவன் சென்ற அதே அலுவலகத்துக்குள் நுழைகிறான். அவனை வரவேற்பறையிலேயே
தடுத்து நிறுத்திய அந்த நிறுவனத்தின் உதவியாளர் தொலைபேசி வழியாக தன் மேலாளரிடம் அண்ணன்
என்று சொல்லிக்கொண்டு ஒருவர் வந்திருப்பதாகத் தெரிவிக்கிறாள். ஒருகணம் உறைந்துவிடும்
தம்பியின் நெஞ்சில் பழைய நினைவுகள் நிழலாடுகின்றன.
அறையை விட்டு வெளியே வந்த
செல்வநாதன் மகிமைநாதனைச் சந்திக்கிறான். அவனுடைய அழுக்குக்கோலத்தைப் பார்த்து ஒருபுறம்
சங்கடமாகவும் இன்னொருபுறம் குரூரதிருப்தியாகவும் உணர்கிறான். காரணமே இல்லாமல் சிறைத்தண்டனையை
ஏற்றுக்கொள்ள வைத்தவன் என்கிற எண்ணத்தையோ, அவன் மீது கொண்ட கோபத்தையோ அவனால் மாற்றிக்கொள்ளவே
இயலவில்லை. வெளியே அழைத்துச் சென்று அவனுக்கு மாற்று உடைகளை வாங்கிக்கொடுக்கிறான்.
கடன்பட்டவன் என்னும் உணர்வு தன் சகோதரனுக்குள் எழவேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறான்.
சாப்பிட்டு முடித்த பிறகு ஒரு சிறு தொகையையும் கொடுத்து நல்லதொரு விடுதியில் தங்கி
இரவைக் கழிக்கும்படி சொல்கிறான்.
அடுத்தநாள் மகிமைநாதன்
மீண்டும் செல்வநாதனின் அலுவலகத்துக்கு வருகிறான். தன் தரப்பிலிருந்து அவனுக்குச் சாப்பாடு
வாங்கிக் கொடுக்க அழைக்கிறான். முந்தையநாள் இரவு செல்வநாதன் கொடுத்த பணத்தை வைத்து
மங்காத்தா விளையாடியதாகவும் அதில் வெற்றி பெற்று ஏராளாமாக சம்பாதித்ததாகவும் சொல்கிறான்.
முதல்நாள் தனக்காக செல்வநாதன் செலவழித்த தொகையைத் திருப்பித் தருகிறான். அப்படியே உரையாடல்
நீண்டுகொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் இருவரும் தம் ஆழ்மனத்தில் தேக்கிவைத்திருக்கும்
பாசத்தைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் பயணம் செய்ய நேர்ந்த பாதைகள் வேறுவேறாயினும்
அவரவர்கள் குறைநிறைகளோடு ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை இருவருமே அடைகிறார்கள்.
சிறுகதையை முழுமையாகப்
படித்த பிறகு, மனத்துக்குள் அசைபோட்டபடியே அந்தக் கதைக்காக வரையப்பட்டிருந்த ஓவியர்
ஜெயராஜ் வரைந்திருந்த ஓவியத்தை சில கணங்கள் பார்த்தேன். அப்போதுதான் அந்தக் கதையை எழுதியவரின்
பெயர் வி.கமலாராவ் என்று இருப்பதைப் பார்த்தேன். அவ்வளவு நேரமும் நான் அந்தக் கதையை
எழுதியவர் விட்டல்ராவ் என்றே நினைத்திருந்தேன். வேறொரு பெயரைப் பார்த்ததும் யாராக இருக்கக்கூடும்
என்றொரு கேள்வி எழுந்தது. ஒருவேளை அவரே பெயர் மாற்றி எழுதியிருக்கக்கூடுமோ என்றும்
ஒருகணம் நினைத்துக்கொண்டேன். அவர் எழுதிய கதையாக இல்லாவிட்டால் அக்கதையை பைண்டிங் செய்யப்பட்ட
அத்தொகுப்பில் ஏன் சேர்க்கவேண்டும் என்றொரு கேள்வியும் எழுந்தது.
தொகுப்பில் இருக்கும் மற்ற
சிறுகதைகள் எப்படி பிரசுரமாகியிருக்கின்றன என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் பக்கங்களை
வேகவேகமாகப் புரட்டினேன். துளசி ஒரு கண்காட்சி, அம்பூ, ரஞ்சிதம், பணிஞார் வீடு, திகைப்பு
+ திரிபுரசுந்தரி என கதைகளின் வரிசை நீண்டுகொண்டே சென்றது. எல்லாமே விட்டல்ராவ் என்னும்
பெயரிலேயே வெளிவந்த கதைகள். பெரும்பாலான கதைகளுக்கு ஜெயராஜே ஓவியம் வரைந்திருந்தார்.
அந்த வரிசையில் ‘எஞ்சின்
தண்ணீர்’ என்னும் சிறுகதை மட்டும் தனித்து வி.கமலாராவ் என்னும் பெயரில் வெளியான கதையும்
இணைந்திருப்பதைப் பார்த்தேன். உடனே அந்தக் கதையையும் ஆர்வத்தோடு ஒரே மூச்சில் படித்துமுடித்தேன்.
கர்நாடகப் பின்னணியில் அக்கதை எழுதப்பட்டிருந்தது. தும்கூர் என்னும் நகரத்துக்கு அருகில்
உள்ள குப்பி என்னும் சிறிய ரயில்வே ஸ்டேஷன்தான் அச்சிறுகதை நிகழும் களம்.
ஸ்டேஷனை ஒட்டி அகன்றதொரு
புல்வெளி இருக்கிறது. லம்பாடிகள் எனப்படும் நாடோடியினத்தைச் சேர்ந்த சில குடும்பங்கள்
அங்கே கூடாரங்கள் போட்டு தங்கியிருக்கின்றனர். ஸ்டேஷனை ஒட்டி ஒரு கிணறு இருக்கிறது.
அதில் ஊற்று குறைவு என்பதால் அவர்களுக்குப் போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. பகல் நேரத்தில்
அந்த ஸ்டேஷனுக்கு ஒரு பாசஞ்சர் ரயில் வரும். குடங்களுடன் காத்திருந்து அந்த ரயில் எஞ்சின்
தண்ணீரைப் பிடித்துக்கொண்டு சென்று தன் தேவையை நிறைவேற்றிக்கொள்கிறார்கள் நாடோடிகள்.
பார்ப்பதற்கு அழகாக இருக்கும் நாடோடிப் பெண்ணொருத்தியின் நடவடிக்கையை சிக்னல் கேபினில்
நின்று வேலை செய்யும் ஊழியன் ஒருவன் தொடர்ந்து கவனித்துவருகிறான்.
அந்தப் பெண்ணுக்கும் அவன்
மீது நாட்டம் இருக்கிறது. ஒருநாள் பகலில் அவனிடம் தன்னை இழக்கிறாள் அவள். அவளுக்கு
அவன்மீது உண்மையான ஈடுபாடு இருக்கிறது. ஆனால் அவளுடைய உடல்மீது மட்டும் நாட்டம் கொண்டிருந்த
அவனுக்கு அவளுடைய காதல் மீது நாட்டமில்லை. அடிக்கடி வரவேண்டாம் என்று சொல்கிறான். அவள்
அளித்த இன்பத்துக்கு ஈடாக பணம் கொடுக்கிறான். அதைப் பிடுங்கி அவன் முகத்திலேயே வீசிவிட்டு
வெளியேறிவிடுகிறாள் அவள்.
அன்று இரவு அந்தச் செய்தி
எப்படியோ நாடோடிக் கூட்டத்தினரிடம் பரவி விடுகிறது. அடுத்தநாள் அவன் வேலைக்கு வந்ததும்
பார்த்துக்கொள்ளலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மறுநாள் விடிகிறது. அவன் வேலைக்கு
வரவில்லை. வழக்கமாக வரும் பாசஞ்சர் ரயிலும் வரவில்லை. எஞ்சின் தண்ணீருக்கும் வழியில்லாமல்
போகிறது. அடுத்த நாளும் அவன் வரவில்லை. ரயிலும் வரவில்லை. அந்த ஸ்டேஷனில் நிற்காமல்
போகிற மெயில் வண்டி மட்டும் போவதும் வருவதுமாக இருக்கிறது.
பாசஞ்சர் ரயில் வராமல்
போனதால் அவர்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. தண்ணீர் இல்லாமல் நாடோடிக் குடும்பங்கள்
தவியாய்த் தவிக்கின்றன. நகரத்தில் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதாகவும் அதனால்
பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை என்றும் பேசிக்கொள்கிறார்கள். வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளச்
சென்றுவிட்டதால்தான் கேபின்காரன் ஸ்டேஷனுக்கு வரவில்லை.
நிற்காமல் ஓடுகிற மெயில்
ரயிலை நிறுத்துவதற்கு வழி என்ன என்று நாடோடிகள் யோசிக்கிறார்கள். ரயில் பாதையில் பொருத்தப்பட்டுள்ள
பிளேட்டுகளை நீக்கி தடையை ஏற்படுத்தினால் எந்த ரயிலானாலும் நின்றுதான் போகவேண்டும்
என்று அவர்களுடைய மனம் சிந்திக்கிறது. அதனால் இரவில் யாருக்கும் தெரியாமல் பிளேட்டுகளை
நீக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள் இரு இளைஞர்கள். ஆயினும் கண்காணிப்புக்காவலர்களிடம்
சிக்கி சிறைப்படுகிறார்கள். அவர்கள் பெட்டியில் அடைக்கப்படுவதைப் பார்த்து செய்வதறியமால்
தவிக்கிறது நாடோடிக்கூட்டம்.
இரு கதைகளுமே சிறப்பாக
இருந்தன. ஆனால் கமலாராவும் விட்டல்ராவும் ஒருவரா அல்லது வேறுவேறானவரா என்பதுதான் குழப்பமாக
இருந்தது. ஒருகணம் அவரையே தொலைபேசியில் அழைத்து தெளிவு பெற்றுவிடலாமென்று நினைத்தேன்.
தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளையும் படித்த பிறகு கேட்டுக்கொள்ளலாமே, என்ன அவசரம் என்று
ஒருகணம் தோன்றியதால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.
மேலும் இரு நாட்கள் நேரமெடுத்துக்கொண்டு
ஒவ்வொரு கதையாகப் படித்து முடித்தேன். ஒவ்வொரு கதையும் புதுப்புது களம் சார்ந்து அழகாக
எழுதப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் படித்துமுடித்ததும் ஒருவித நிறைவில் மனம் தளும்பியது.
அடுத்த வாரம் அவரைச் சந்திக்கச்
செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தேன். தொலைபேசியில் அழைத்துச் சொன்னபோது, அவர் தன்
மகள் வீட்டில் இருப்பதாகச் சொன்னார். வீட்டுக்குத் திரும்பிவந்து அவர் என்னை அழைத்தபோது,
நான் ஏதோ வேலையாக ஜெயநகர் பக்கம் தொடர்ந்து இருநாட்கள் செல்லும்படி நேர்ந்தது.
இதற்கிடையில் எனக்கும்
விட்டல்ராவுக்கும் பொதுவான நண்பரொருவர் ஒரு சின்ன அறுவைசிகிச்சைக்குப் பிறகு தன் வீட்டுக்குத்
திரும்பியிருப்பதாக தகவல் கிடைத்தது. இருவரும் சேர்ந்து சென்று அவரைப் பார்த்துவிட்டு
வரலாம் என்று சொன்னார் விட்டல்ராவ். உடனடியாக “அப்படியே செய்யலாம்” என்று நானும் சொல்லிவிட்டேன்.
மறுநாள் காலையிலேயே விட்டல்ராவ்
எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார். ஒரு தேநீர் அருந்திவிட்டு நாங்கள் இருவரும் வீட்டிலிருந்து
ஆட்டோவில் புறப்பட்டோம். அந்த நண்பரின் வீடு ஆடுகோடி பகுதிக்கு அருகில் இருந்தது. நீண்ட
நேரப் பயணம். வண்டியில் அமர்ந்தபடி எதைஎதையோ பேசிக்கொண்டே சென்றோம்.
பேச்சுக்கு நடுவே தினமணி
கதிர் தொகுப்பில் படித்த கதைகள் சட்டென நினைவுக்கு
வந்தன. நான் உடனே விட்டல்ராவிடம் அக்கதைகளைக் குறிப்பிட்டு “கதையை எழுதினவங்க பேரு
கலாராவ்னு இருக்குது. அது உங்க மனைவி பேருதான? அந்த பேருலயும் நீங்க கதை எழுதியிருக்கீங்களா?”
என்று கேட்டேன்.
“அது நான் எழுதிய கதை இல்லை
பாவண்ணன். என் மனைவியே எழுதிய கதை” என்று புன்னகைத்தபடி சொன்னார் விட்டல்ராவ்.
அந்தக் கோணத்தில் நான்
யோசித்தே இராததால், ஒருகணம் நான் அவரையே அமைதியாகப் பார்த்தேன்.
“அவளுக்கு கதை எழுதுறதுல
ரொம்ப ஆர்வம் உண்டு பாவண்ணன். நல்லாவே எழுதுவா. சின்ன வயசுலேர்ந்தே அவள் நல்ல படிப்பாளி.
ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், க.நா.சு., அசோகமித்திரன்,
தி.ஜானகிராமன், சிங்காரம், சா.கந்தசாமி எல்லாருடைய கதைகளையும் படிச்சிருக்கா. ஓய்வு
நேரத்துல சின்ன சின்ன ஆர்ட் ஒர்க் செய்வா. பனங்கொட்டையை நல்லா தேச்சி மழமழன்னு ஆக்கி,
அதும் மேல ஓவியங்கள் வரைவா. அவளுக்கு நல்ல கலையுணர்ச்சி இருந்தது. அதனால இயல்பாவே படிக்கறதுலயும்
எழுதறதுலயும் அவளுக்கு நாட்டம் இருந்தது…”
“உங்க கதைகளைப் படிச்சிப்
படிச்சி அவுங்களுக்கும் கதை எழுதிப் பார்க்கிற ஆசை வந்ததா?”
“என்னுடைய செல்வாக்குன்னு
சொல்றமாதிரி ஒரு விழுக்காடு கூட எதுவுமே அவகிட்ட கிடையாது. சுயமா தானாவே எழுதக் கத்துகிட்டா
அவள். நல்ல திறமைசாலி. வீட்டுக்கு வரக்கூடிய உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிகைகள் எல்லாத்தயும்
அவளும் படிப்பா. சுவாரசியமான குறிப்புகள் ஏதாவது கண்ணுல பட்டா, அதை அழகா தனியா ஒரு
துண்டு செய்தியா எழுதி எல்லாப் பத்திரிகைக்கும் அனுப்புவா. அஞ்சி ரூபா, பத்து ரூபான்னு அதுக்கு சன்மானம்லாம்
மணியார்டர்ல அவளுக்கு வந்துட்டே இருக்கும். அந்த எழுத்துப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமா
வளர்ந்து வளர்ந்து தானாவே அவளுக்கு கதை எழுதற ஆர்வமா மாறிட்டுது”
“தினமணி கதிர் தொகுப்புல
இருக்குதே, இதுதான் அவுங்க முதல் கதையா? அல்லது இதுக்கும் முன்னாலயே எழுதினாங்களா?”
“தினமணி கதிர்ல கதை வர்ரதுக்கு
முன்னாலயே அவ கதை எழுத ஆரம்பிச்சிட்டா. அவளுடைய முதல் கதை கல்கி இதழ்ல வந்தது. அப்ப
கல்கி இதழ் ஒரு சிறுகதைப்போட்டிய அறிவிச்சிருந்தாங்க. எனக்கு சர்ப்ரைஸா இருக்கணும்னு
எனக்குத் தெரியாமலேயே ஒரு கதையை எழுதி அனுப்பி வச்சிட்டா. அந்தப் போட்டியில்ல அவளுக்கு
ரெண்டாவது பரிசு கிடைச்சிது. அவளுக்கு அதுல ரொம்ப சந்தோஷம். அவளக்கு தன்னாலயும் முடியும்னு
ஒரு தன்னம்பிக்கை வந்துட்டுது. தினமணி கதிர்ல வந்த கதை அவள் எழுதிய மூனாவது கதைன்னு
நினைக்கிறேன்”
அவர் தன் மனைவியைப் பற்றிப்
பேசத் தொடங்கியதும் அவருடைய முகத்தில் ஒரு வெளிச்சம் படிந்ததைப் பார்த்தேன். ஆட்டோவுக்குள்
அவர் அருகில் நெருக்கமாக அமர்ந்தபடி அவர் சொல்வதைக் கேட்டபடி இருந்தேன்.
“கல்கியில வந்த கதையுடைய
தலைப்பு ஓய்வு. ஒருநாள் வேலையிலிருந்து திரும்பி வரும்போது வழக்கமா வீட்டுக்கு வாங்கி
வரக்கூடிய வாராந்திரப் பத்திரிகைகள வாங்கிவந்தேன். அதுல கல்கியும் இருந்தது. அந்தக்
கல்கியிலதான் சிறுகதைப் போட்டி முடிவுகள் வந்திருந்தது. ஒரு ஆர்வத்துல அந்தப் பட்டியலைப்
படிச்சிப் பார்த்தேன். ஓய்வுங்கற பேருல அவ எழுதுன கதையுடைய தலைப்பு அந்தப் பட்டியல்ல
இருந்தது. இரண்டாவது பரிசு. என்னம்மா, உன் பேரெல்லாம் கல்கியில வந்திருக்குதேன்னு அவகிட்ட
காட்டினேன். அவ உடனே அந்தப் பத்திரிகைய வாங்கிப் பார்த்துட்டு ஆமாம், நான்தான் அனுப்பினேன்னு
சொன்னா. ஐநூறு ரூபாயோ என்னமோ அந்தக் காலத்துல அதுக்கு பரிசா கிடைச்சிது. அவளுக்கு ரொம்ப
சந்தோஷம்”
“நீங்க அந்தக் கதையை படிச்சீங்களா?”
“ஆமாம். உடனே வாங்கிப்
படிச்சேன். நல்லாவே எழுதியிருந்தா. ஒரு உண்மைச்சம்பவத்தை அழகா ஒரு கதையா மாத்தியிருந்தா. ஆனால் அந்தக் கதையைப் படிச்சதுமே எனக்குத்தான் ஒருவிதமான
அச்சம் உருவாச்சி”
“என்ன அச்சம்?”
“எங்க வீட்டுக்கு பக்கத்துலயே
ஒரு ஆள் இருந்தார். ரயில்வேயில வேலை செஞ்சிட்டு ஓய்வு பெற்றவர். அவருடைய வாழ்க்கையில
உண்மையிலயே நடந்த சம்பவம் அது. அதைத்தான் அவ கதையா எழுதியிருந்தா.”
“அப்புறம்?”
“என்னம்மா, அந்த ஆள் கதைய
எழுதிட்டயே? அவங்க வீட்டுலயும் . ரெகுலரா கல்கி வாங்கறாங்க, தெரியும் இல்லையா? நிச்சயமா
இந்தக் கதையை அவுங்களும் படிப்பாங்க. படிச்சிட்டு நம்மகிட்ட சண்டைக்கு வந்தா என்னம்மா
செய்யறதுன்னு கேட்டேன். அதெல்லாம் வரமாட்டாங்க விடுங்கன்னு ரொம்ப தைரியமா சொல்லிட்டு
சிரிச்சிட்டே போயிட்டா?”
“அதுக்கப்புறம் என்னதான்
ஆச்சு?”
“கடைசியில அவ சொன்னமாதிரிதான்
ஆச்சி. அந்த ரயில்வேக்காரர் அந்தக் கதையைப் படிச்சாரோ இல்லையோ, நான் நெனச்சமாதிரி எதுவும்
நடக்கவே இல்லை. அந்த வகையில ஒரு திருப்தி”
“போட்டிக்கதையைத் தவிர
கல்கியில வேற ஏதாவது கதை வந்ததா?”
“ஆமாம். பரிசு வாங்கி சில
மாதங்களுக்குப் பிறகு இன்னொரு கதையும் வந்திச்சி.
“அதுக்கப்புறம்தான் தினமணி
கதிர்ல எழுத ஆரம்பிச்சாங்களா?”
“ஆமாம். எனக்குத் தெரியாமதான்
அனுப்பி வைப்பா. கதை வந்ததுக்கு பிறகுதான் எனக்கே தெரியும். இந்த மாதிரி கதை வந்துருக்குது
பாருங்கன்னு சொல்லி என்கிட்ட காட்டுவா. என்னுடைய பரிந்துரையில வந்ததுங்கற பேரு வந்துடக்
கூடாதுங்கறதுல ரொம்ப எச்சரிக்கையாவே இருந்தா. அவளா எழுதுவா. அவளே அனுப்பி வைப்பா. அந்த
சுதந்திரத்துல நான் தலையிட்டதே இல்லை”
“அது நிச்சயம் பெருமைக்குரிய
ஒரு விஷயம்தான் சார்”
“தினமணி கதிர்ல அவ நாலு
கதைகள் எழுதினாள். ஒருமுறை ஏதோ ஒரு கூட்டத்துல சாவியை அவளுக்கு அறிமுகப்படுத்தனேன்.
அவளுடைய ஆர்வத்தை தெரிஞ்சிகிட்டு அவளை ரொம்பவே ஊக்கப்படுத்தினார் அவரு. பார்க்கும்போதெல்லாம்
எழுதும்மா எழுதும்மான்னு சொல்லிட்டே இருந்தாரு. ஆனா அவளாலதான் தொடர்ந்து எழுதமுடியாம
போயிட்டுது பாவண்ணன்”
நாக்கு சப்புக்கொட்டியபடி
சொல்லிவிட்டு ஒருகணம் வாகனங்கள் விரைந்தோடும் சாலையின் பக்கம் பார்த்தார்.
“ஏன், என்ன பிரச்சினை?”
“உடம்பு சிக்கல். டாக்டருங்க
சரியா டயக்னஸ் செய்யாம குடுத்த ட்ரீட்மென்ட்டால புதுசா வந்த சிக்கல். எல்லாம் சேர்ந்து
அவளை ரொம்ப கஷ்டப்படுத்திட்டுது. படிக்கறதுல அவளுக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. எப்படியோ
சமாளிச்சி படிச்சிடுவா. ஆனா உட்கார்ந்து எழுதற வேலையை அவளால செய்யமுடியலை….”
“அப்படின்னா, அவுங்க எழுதியதே
அந்த ஆறு கதைகள் மட்டும்தானா? வேற எந்தக் கதையும் இல்லையா?”
விட்டல்ராவ் ஒருகணம் யோசனையில்
மூழ்கிவிட்டு பிறகு முகவாயை வருடியபடி “முகங்கள்ங்கற பேருல அந்தக் காலத்துல ஒரு பத்திரிகை
வந்திட்டிருந்தது. அதுல அந்தப் பத்திரிகைக்காரங்க ஒரு கதை கேட்டாங்கன்னு நான் ஒரு கதை
அனுப்பி வச்சேன். அந்தக் கதை வெளியாச்சி. அது வந்த பிறகு ஏதோ ஒரு வேகத்துல அவளும் ஒரு
கதை எழுதி அனுப்பி வச்சா. ஒரு மாசம் கழிச்சி அந்தக் கதையும் வெளியாச்சி. என் கதையும்
வந்திருக்குது பார்த்தீங்களான்னு என்கிட்ட சந்தோஷமா காட்டினா” என்றார்.
இன்னும் சில விவரங்கள்
கிடைக்கக்கூடுமோ என எனக்குள் ஓர் எண்ணம் எழுந்தது. “இதைத்தவிர வேற பத்திரிகைகள்ல ஏதாவது
முயற்சி செஞ்சாங்களா? குமுதம், குங்குமம், ஆனந்தவிகடன் மாதிரியான பத்திரிகைகள்ல எதுவும்
வரலையா?” என்று கேட்டேன்.
“அதுலல்லாம் எழுதணும்னு
அவளுக்கு ஆசை இருந்தது. சொல்லிட்டே இருப்பா. ஆனா எழுதலை.” என்றபடி மெல்ல தலையை அசைத்து
உதட்டைப் பிதுக்கியபடி நாக்கு சப்புக்கொட்டினார்.
“இல்லை பாவண்ணன். வேற எதுவும் இல்லை. அந்த ஏழு கதைகள்தான் அவளுடைய படைப்புலகம்”
என்றார்.
அந்தப் பதில் என்னையும்
ஒருகணம் உறையவைத்துவிட்டது. அவர் மனைவியை நான் அறிவேன். இறுதிக்காலத்தில் அவர் அனுபவித்த
உடல் தொந்தரவுகளையும் அறிவேன். அதனாலேயே உரையாடலை எப்படித் தொடர்வது என்று புரியாமல்
அமைதியாக சாலையின் பக்கம் பார்வையைத் திருப்பினேன். அல்சூர் சுப்பிரமணியர் ஆலயத்தைக்
கடந்து ஆட்டோ போய்க்கொண்டிருந்தது.
“நான் எடுத்துவந்த தினமணி
கதிர் தொகுதியில ரெண்டு கதைகள்தான இருக்குது? அப்படின்னா மிச்ச ரெண்டு கதைகள் வேற தொகுதியில
இருக்குதா?” என்றொரு கேள்வியோடு அவரை மீண்டும் உரையாடலுக்குள் இழுத்தேன்.
பெருமூச்சுடன் என் பக்கமாகப்
பார்த்த விட்டல்ராவ் “எனக்கு சரியா சொல்லத் தெரியலை. ஒரு முறை பார்த்துட்டுதான் சொல்லணும்
பாவண்ணன்” என்றார்.
“இதைத்தவிர இன்னும் தொகுதிகள்
இருக்குது, இல்லையா?”
“ஆமாம். இன்னும் ரெண்டு
இருக்குது”
“ஒருவேளை அதுல இருக்கலாம்
சார். அடுத்த முறை வரும்போது நான் எடுத்துவந்து தேடிப் பார்க்கறேன்”
“சரி பாவண்ணன், எடுத்து
வைக்கறேன்”
“இப்ப தினமணி கதிர்ல வந்த
நாலு கதைகளையும் எடுத்துடறோம்னு வைங்க. கல்கி இதழ் கதைகளையும் முகங்கள் பத்திரிகையில
வந்த கதையையும் இப்படி தொகுப்பா பைண்டிங் செஞ்சி வச்சிருந்தா கொடுங்க. அந்த மூனு கதைகளையும்
எடுத்துடலாம்?”
“த்ச். அந்த மாதிரி எதையும்
பைண்டிங் பண்ணி வைக்கலையே பாவண்ணன்”
அந்தப் பதில் எனக்குத்
திகைப்பை அளித்தது.
“தொகுப்பா இல்லைன்னு சொன்னா,
அந்தக் கதை வந்த பத்திரிகைகள தனியா வச்சிருக்கீங்களா?”
“அப்படியெல்லாம் தனியாவும்
எடுத்து வைக்கலை பாவண்ணன். தேடினா கிடைக்குமா கிடைக்காதான்னு கூட என்னால சரியா சொல்லமுடியலை.
எத்தனையோ பழைய பத்திரிகைகள், பேப்பர் கட்டிங்ஸ், படங்கள்னு கணக்கில்லாம பைண்டிங் செஞ்சி
பாதுகாப்பா வச்சிருக்கிற ஆளுதான் நான். ஆனா இந்த விஷயத்துல எப்படியோ நான் கோட்டை விட்டுட்டேன்.
என்ன சொல்றதுன்னே எனக்குத் தெரியலை. ஏதோ அஜாக்கிரதையால எல்லாமே போயிடுச்சி”
ரொம்ப சங்கடமான குரலில்
விட்டல்ராவ் சொன்ன பதில் எனக்கும் வருத்தமாகவே இருந்தது. அவருடைய நினைவாற்றல் மீது
எனக்கு அபாரமான நம்பிக்கை உண்டு. அவருடைய தயக்கமான பதில் அவை அவரிடம் இல்லாமல் இருக்கக்கூடும்
என்ற எண்ணத்தையே கொடுத்தது.
“சரி சார். அவசரமே இல்லை.
ஒரு நம்பிக்கை வச்சி தேடுவோம் சார். மூனு கதைதான. கண்டுபிடிச்சிடலாம். எல்லாப் பத்திரிகைகளும்
இப்ப ஆர்க்கீவ்ஸ்ங்கற பேருல ஒரு இணையக்காப்பகம் உருவாக்கறாங்க. எதிர்காலத்துல தமிழ்ப்பத்திரிகைகளுக்காக
அப்படி ஒரு காப்பகம் உருவாகி வரலாம். அந்த நேரத்துல அம்மாவுடைய மிச்ச கதைகளையும் கண்டுபிடிச்சி
எடுத்துடலாம்.”
“அப்படியா, அதெல்லாம் சாத்தியமா?”
என்று ஆச்சரியத்தோடு விட்டல்ராவ் கேட்டபோது மீண்டும் அவரிடம் பழைய உற்சாகம் திரும்பியிருப்பதைப்
பார்த்தேன்.
“நூத்துக்கு நூறு விழுக்காடு
சாத்தியம்தான் சார். கவலையே வேணாம் சார். எடுத்துரலாம். கதிர்ல வந்த நாலு கதைகள், கல்கியில
வந்த நாலு கதைகள், முகங்கள்ல வந்த ஒரு கதை எல்லாத்தையும் சேர்த்து ஒரு தொகுப்பா கொண்டு
வந்துடலாம். அம்மாவுடைய பிறந்த நாள் அல்லது நினைவு நாள் ஏதோ ஒரு நாள்ல அத வெளியிட்டுடலாம்.
அவுங்களுக்கு நாம செலுத்தற அஞ்சலியா அந்தத் தொகுப்பு இருக்கும்”
என்னை மீறி தன்னிச்சையாக
வெளிப்பட்ட என் சொற்கள் எனக்கே ஒருவித நிறைவை அளித்தன. வி.கமலாராவ் என்று பெயரிடப்பட்ட
புதியதொரு சிறுகதைத்தொகுப்பின் முகப்புப்பக்கம் என் கண்முன் நிழலாடுவதுபோல இருந்தது.
“செய்யலாம் பாவண்ணன், செய்யலாம்” என்று விட்டல்ராவும் உற்சாகத்தோடு சொன்னார்.
(அம்ருதா – மார்ச் 2024)