Home

Sunday, 31 March 2024

புதிய தலைமுறையினருக்கு உதவும் கையேடு

 

1764ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனி சென்னை, கல்கத்தா, பம்பாய் ஆகிய நகரங்களில் முதன்முதலாக அஞ்சல் நிலையங்களைத் தொடங்கியது. அப்போது, இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் வர்த்தகத்தகவல்களைப் பரிமாறிக்கொள்வதுதான் அதனுடைய முதன்மை நோக்கமாக இருந்தது.  நாளடைவில் அஞ்சல் சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதன் வழியாக ஒரு சிறு தொகையை வருமானமாக ஈட்டமுடியும் என்பதை அரசு புரிந்துகொண்டது. உடனடியாக பணமதிப்புக்கு இணையாக பலவிதமான அஞ்சல்தலைகள் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அனுப்பும் கடிதத்தின் எடைக்குத் தகுந்தபடி கட்டணம் முடிவுசெய்யப்பட்டு, அக்கட்டணத்துக்கு இணையான அஞ்சல்தலைகள் வழங்கப்பட்டன.  அந்த அஞ்சல் தலைகளில், புராதனச்சின்னங்களின் படங்களும் மாநகரத்தோற்றத்தின் படங்களும் லண்டன் அரசர்களின் படங்களும் அச்சிடப்பட்டன.

நம் நாடு சுதந்திரமடைந்த பிறகு, 21.11.1947 அன்று முதல் அஞ்சல்தலையை புதிய அரசு வெளியிட்டது. இந்திய தேசியக் கொடியின் படமும் ‘ஜய் ஹிந்த்’ முழக்கமும் அந்த அஞ்சல்தலையில் அச்சிடப்பட்டன. அதன் விலை மூன்றரையணா. அடுத்த அஞ்சல்தலையில் தேசிய சின்னமான சிங்கங்களைக்கொண்ட படம் அச்சிடப்பட்டது. அதன் விலை ஒன்றரையணா. காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகு, அவருடைய படம் அச்சிடப்பட்ட அஞ்சல்தலை 15.08.1948 அன்று வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகு, வெவ்வேறு ஆலோசனைக்குழுக்களின் முடிவுக்கேற்ப தேச விடுதலைக்காகவும் மானுட சமத்துவத்துக்காகவும் கலை, தத்துவ வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட ஆளுமைகளின் படங்களை அரசு அடுத்தடுத்து வெளியிடத் தொடங்கியது.  இராஜகோபாலாச்சாரியார், காமராஜர், சத்தியமூர்த்தி, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, ஆர்.வெங்கடராமன், அப்துல் கலாம், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். என பல தமிழக ஆளுமைகளின் உருவங்கள் அஞ்சல் தலைகளில் இடம்பெற்றன. இன்றளவும் அந்த முயற்சி தொடர்ந்து வருகிறது.

தமிழக ஆளுமைகளைப்போலவே பிற மாநில ஆளுமைகளின் உருவங்களும் அஞ்சல்தலைகளில் இடம்பெற்று வந்துள்ளன. அவர்களில் தேசிய ஆளுமைகளான நேதாஜி, நேரு, பக்த்சிங், அம்பேத்கர் போன்ற ஒருசிலரைப்பற்றி மட்டுமே நாம் அறிவோம். ஆனால், பிறரைப்பற்றி பெயரளவில் தெரிந்திருக்குமே தவிர, அவரைப்பற்றிய தகவல்களை  நாம் அறிந்திருக்கமாட்டோம்.  பிற மாநில ஆளுமைகளைப்பற்றிய அறிமுகமோ, முற்றிலுமாக இல்லை.

சமீபத்தில் காமராஜ் மணி எழுதி வெளிவந்திருக்கும் தபால்தலை சாதனையாளர்கள் புத்தகம் அக்குறையை ஓரளவு தீர்த்துவைக்கிறது.  இதுவரை நம் அஞ்சல்தலைகளில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாற்பத்தைந்து ஆளுமைகளைப்பற்றிய தகவல்களைத் திரட்டி சிறுசிறு கட்டுரைகளாக எழுதித் தொகுத்திருக்கிறார். பலர் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்தவர்கள். பலர் மானுட மேன்மைக்காக பாடுபட்டவர்கள். சிலர் கவிஞர்கள். சிலர் சமூக சேவையில் ஈடுபட்டவர்கள். அவர்களுடைய சுருக்கமான வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ள காமராஜ் எழுதியிருக்கும் சின்னஞ்சிறு கட்டுரைகள் உதவியாக இருக்கின்றன.

டாக்டர் துவாரகநாத் கோட்னிஸ் என்பவர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். இரண்டாம் உலகப்போரின் விளைவாக 1938ஆம் ஆண்டில் ஜப்பான் துருப்புகள் சீனாவைத் தாக்கின. போரில் பாதிக்கப்பட்ட சீன வீரர்களுக்கு போதிய மருத்துவ உதவி  இல்லை. தகுதியுள்ள மருத்துவர்களை வரவேற்பதாக ஓர் உலகளாவிய விளம்பரத்தை வெளியிட்டது சீன அரசு. இந்தியாவிலிருந்து ஐவர் அடங்கிய ஒரு குழு சென்றது. இளநிலை மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு முதுநிலை படிப்புக்குத் தயாராகிக்கொண்டிருந்த துவாரகநாத் அக்குழுவில் ஒருவராகச் சேர்ண்டுகொண்டார். அவர் சீனாவில் எண்ணூறுக்கும் மேற்பட்ட வீரர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்றினார். மருத்துவக்குழுவைச் சேர்ந்த பிற மருத்துவர்கள் போர் முடிந்து இந்தியாவுக்குத் திரும்பிவிட்ட நிலையில், துவாரகநாத் மட்டும் சீனாவிலேயே தங்கி மருத்துவச்சேவையைத் தொடர்ந்தார். சீன மொழியைக் கற்று சீனப் பெண்ணையே மணந்துகொண்டார். பணிச்சுமையின் காரணமாக 1942இல் உயிரிழந்தார். அவருடைய கல்லறையில் ‘ராணுவத்துக்கு உதவும் கரங்களையும் ஒரு நல்ல நண்பனையும் சீனா இழந்துவிட்டது’ என்னும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு அவர் பிறந்த ஊரான ஷோலாப்பூரில் அவருக்கான நினைவகத்தை அமைத்தது. அவர் நினைவைப் போற்றும் வகையில் அஞ்சல் தலையையும் வெளியிட்டது.

தரிகொண்ட வேங்கமாம்பா என்பவர் ஒரு கவிஞர். ஆந்திரத்தைச் சேர்ந்தவர். பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஊர்க்காரர்கள் அனைவரும் ‘பெருமாள் பைத்தியம்’ என்று அழைத்து கேலி செய்யும் அளவுக்கு எம்பெருமான் மீது பக்தி கொண்டவர். இளம்வயதிலேயே கணவனை இழந்துவிட்ட போதும், எம்பெருமானையே கணவனாக மானசிகமாக வரித்துக்கொண்டு எப்போதும் மங்களகரமான ஆடை அணிகலன்களுடன் வாழ்ந்தார். யோக சாஸ்திரம் கற்று யோகினி பட்டம் பெற்றிருந்ததால் திருப்பதியில் பெருமாள் சன்னதிக்குள் சென்று பக்திப்பாடல்களைப் பாடுவதற்கு அவருக்கு அனுமதி இருந்தது. தெலுங்கு மொழியில் அவரே பாடல்களை எழுதிப் பாடினார். வேங்கமாம்பா பாடிய ஒவ்வொரு பாடலுக்கும் பரிசு தரும் விதமாக ஏழுமலையானின் ஒவ்வொரு முத்துநகை காணாமல் போய்க்கொண்டிருந்தது. நகைகளை அவரே திருடியிருக்கலாம் என சந்தேகித்த ஆலய நிர்வாகத்தினர் அவரை கோவிலிலிருந்து வெளியேற்றினர். வெகுதொலைவில் ஒரு குகையில் அவர் அடைக்கப்பட்டார். ஆனால் அவர் பாடலைக் கேட்கும் ஆர்வத்தால் பெருமாளே தன் கருவறையிலிருந்து அவர் அடைக்கப்பட சிறை வரைக்கும் ஒரு பாதாள வழியை உருவாக்கிக் கொடுத்தார். ஏறத்தாழ ஆறாண்டுக்காலம் அந்த வழியிலேயே தினமும் சென்று எம்பெருமானை வணங்கிவந்தார் வேங்கமாம்பா. அவருடைய பக்தியைப் புரிந்துகொண்ட கோவில் நிர்வாகம் ‘வேங்கமாம்பா ஆரத்தி’ என ஒரு சிறப்பு வழிபாட்டு நேரத்தை ஏற்படுத்தி ஒதுக்கி அவருடைய பாடல்களால் ஆராதனை செய்தனர். அவருடைய  பாட்டுத்திறமையையும் பக்தியையும் பாராட்டும் விதமாக அவருடைய படத்தைக் கொண்ட அஞ்சல்தலையை அரசு வெளியிட்டது.

பண்டிட் சுந்தர்லால் ஷர்மா என்பவர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில அரசு  கண்டேல் என்னும் கிராமவாசிகளின் தண்ணீர் வசதிக்காக மகாநதியிலிருந்து இரு கால்வாய்களை வெட்டியது. ஆனால் அத்தண்ணீரைப் பயன்படுத்திக்கொள்ள அவர்கள் அரசுக்கு ஒரு பெரிய தொகையை கட்டணமாகக் கொடுக்கவேண்டும் என்று ஒரு விதியை ஏற்படுத்தியது.  ஏழைகள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத பெரிய தொகை அது. அதனால் அவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தைச் செலுத்தவில்லை. அதற்கிடையில் அரசு அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் நோட்டீஸ் அனுப்பியது. வேறு வழியில்லாமல் அந்தக் கிராமவாசிகளைத் திரட்டி ஒரு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார் ஷர்மா . காந்தியடிகளையும் அந்தக் கிராமத்துக்கு வரவழைத்தார். அவர் முன்னெடுத்த போராட்டம் நாடு தழுவிய செய்தியாக மாறியது. வேறு வழியில்லாமல் அரசு எல்லா அறிவிப்பையும் ரத்து செய்தது.  சம்பாரண் சத்தியாகிரகத்தைப்போலவே கண்டேல் சத்தியாகிரகமும் புகழ்பெற்றது. தாழ்த்தப்பட்டோர்களுக்கான ஆசிரமத்தை உருவாக்குவதிலும் ஷர்மா பெரும்பங்கு வகித்தார். அவருடைய தேச சேவையைப் பாராட்டும் விதமாக அரசு ஓர் அஞ்சல் தலையை வெளியிட்டது.

அப்துல் கயாம் அன்சாரி பீகாரில் பிறந்தவர். சிறந்த பத்திரிகையாளர். எழுத்தாளர். சைமன் கமிஷன் கல்கத்தாவுக்கு வந்தபோது ஓர் இளந்தலைவராக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார். காந்தியடிகளுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டார். இந்தியாவைப் பிரித்து பாகிஸ்தானை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என ஜின்னா ஒரு கோரிக்கையை முன்வைத்தபோது, அதற்கு எதிராகக் குரல் கொடுத்தவர் அன்சார். 1947இல் பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீர்  பகுதிகளை ஆக்கிரமித்தபோது, அன்சாரி அதை எதிர்த்து குரல்கொடுத்தார். இறுதிவரை காங்கிரஸ் கட்சியிலேயே நீடித்தார். அவர் நினைவைப் போற்றும் வகையில் அரசு ஓர் அஞ்சல் தலையை வெளியிட்டது.

வீர்சந்த் ராகவ்ஜி காந்தி என்பவர் குஜராத்தில் பிறந்தவர். பன்றிகளைக் கொன்று அதன் கொழுப்பிலிருந்து மெழுகுகளைத் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்க நினைத்த ஆங்கில அரசு, அதற்குரிய இடமென பால்கஞ்ச் மலை அடிவாரத்தைத் தேர்ந்தெடுத்தது. ஜைன மதத்தைச் சேர்ந்த 21 தீர்த்தங்கரர்கள் ஞானமடைந்த இடமென அனைவராலும் நம்பப்படும் இடம் பால்கஞ்ச் மலை. ராகவ்ஜி காந்தி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் வழக்கு தோல்வியுற்றது. உடனே கல்கத்தா நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கு அவருக்கு வெற்றி கிடைத்தது. சாதாரண எழுத்தராக தன் வாழ்க்கையைத் தொடங்கிய அவர் தன் சொந்த முயற்சியால் சட்டம் பயின்று வழக்கறிஞரானார். அந்தக் குறிப்பிட்ட வழக்கில் அவர் வெற்றி பெற அவரே வழக்கறிஞராக இருந்ததுவும் ஒரு காரணம். 1893இல் சிகாகோவில் நடைபெற்ற உலகச் சமய மாநாட்டில் விவேகானந்தரும் அனகாரிகா தர்மபாலாவும் கலந்துகொண்டபோது, வீரசந்த் ராகவ்ஜி காந்தி ஜைன மதக் கோட்பாடுகளை உலகுக்கு அறிவித்தார். அவருடைய வாழ்க்கையின் செய்தியை இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில் அரசு ஓர் அஞ்சல் தலையை வெளியிட்டது.

அல்லூரி சீதாராம ராஜு ஆந்திரத்தைச் சேர்ந்தவர். பழங்குடியினரல்லாத போதும் இறுதி மூச்சு வரைக்கும் பழங்குடியினர் நலனுக்காகப் பாடுபட்டவர். அவர் வாழ்ந்த காடுகளும் மலைகலும் சூழ்ந்த  பகுதிக்கு ராம்பா என்று பெயர். ஏறத்தாழ 28000 குடும்பங்கள் அங்கு வசித்துவந்தன. அவர்களுக்குத் தெரிந்த ஒரே தொழில் விவசாயம் மட்டுமே. ஆங்கில அரசு அவர்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு அப்பகுதியில் ரயில் போக்குவரத்துக்கு பாதை அமைக்க நினைத்தது. மக்களைத் திரட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் சீத்தாராம ராஜு. கொரில்லா போர் முறையில் பழங்குடியினரை துணையாகச் சேர்த்துக்கொண்டு ஆங்கில அதிகாரிகளைக் கொல்லும் முடிவை எடுத்தார். ஏறத்தாழ இரண்டாண்டுக்காலம் தலைமறைவாகவே செயல்பட்டு போராட்டத்தை தளர்ந்துவிடாமல் பார்த்துக்கொண்டார். அரசு அவருடைய இருப்பிடத்தை அறிந்துகொள்வதற்காக பழங்குடியினரைட் துன்புறுத்தியது. தன் பொருட்டு எளிய மக்கள் வதைபடுவதை விரும்பாத சீதாராம ராஜு சரணடைந்தார். பெயருக்கு ஒரு விசாரணை மட்டும் நடத்தப்பட்டு, காவல்துறையினரால் மரத்தில் கட்டிவைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். காட்டு ராஜா என மக்களால் அன்போடு அழைக்கப்படும் அவர் இன்றளவும் நினைவுகூரப்படுகிறார். அவர் வாழ்ந்த பகுதி மாவட்டமாக மாறியபோது, அம்மாவட்டத்துக்கு அவருடையை பெயரையே அரசு சூட்டி கெளரவித்தது. அவருடைய உருவப்படத்தைக் கொண்ட அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.

அஞ்சல்தலையை ஒரு காரணமாகக் கொண்டு, இப்படி நாற்பத்தைந்து ஆளுமைகளின் பங்களிப்பை நாம் அறிந்துகொள்ள வழிவகுத்திருக்கிறார் காமராஜ் மணி. அவர்களுடைய தியாக வாழ்க்கையை நாடும் நாட்டு மக்களும் இன்றும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உலகத்துக்குத் தெரிவிக்கும் வழியாகவே அஞ்சல்தலைப்படங்கள் அமைந்துள்ளன. எண்மப்பரிமாற்றத்தின் விளைவாக அஞ்சல் சேவைகளில் அஞ்சல் தலைகள் சிறுகச்சிறுக குறைந்துகொண்டே வரும் இன்றைய சூழலில் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அஞ்சல்தலை பயன்பாடு நீடிக்கும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியவில்லை. தந்திச்சேவை நின்றுபோனதுபோல அடுத்த கால்நூற்றாண்டுக் காலத்துக்குள் ஒருவேளை அஞ்சல்தலைச் சேவை மறைந்துபோகக்கூடும். ஓர் ஆவணக்காப்பகப் பொருளாக மாறினாலும் மாறிவிடவும் கூடும். அத்தகு சூழலில், காமராஜ் மணி போன்றவர்களின் ஆர்வத்தால் எழும் இதுபோன்ற நூல்களே, அஞ்சல்தலை உருவாக்கத்தின் வளர்ச்சியையும் பெருமையையும் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அறிந்துகொள்ள உதவும் கையேடாக இருக்கும்.

(தபால்தலை சாதனையாளர்கள் – காமராஜ் மணி. சுவாசம் பதிப்பகம், 52/2 பி.எஸ்.மகால் அருகில், சென்னை -600127. விலை. ரூ.160)

(புக் டே – இணையதளம் – 13.03.2024)