Home

Sunday, 24 March 2024

உபயத்துல்லா : நல்லாற்றின் நின்ற துணை

  

முதல் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் இஸ்லாமியர்கள் வசிக்கும் துருக்கி தேசத்துக்கு எந்தப் பாதிப்பும் நேராதவகையில் பாதுகாக்கப்படும் என்று பிரிட்டன் அரசு முதலில் அறிவித்தது. ஆனால் போர் முடிவடைந்ததும் கொடுத்த வாக்குறுதியை மறந்து  துருக்கியின் மீது கடுமையான நிபந்தனைகளை விதிக்கத் தொடங்கியது. மேலும்  துருக்கியின் ஆசியப்பகுதிகளை பிரிட்டனும் பிரான்சும் பங்கு போட்டுக்கொண்டன.

இதைக் குறித்து அதிருப்தியுற்ற இந்திய இஸ்லாமியர்களிடமிருந்து முதல் எதிர்ப்பு எழுந்தது. அதன் தொடர்ச்சியாக, அலி சகோதரர்கள் என அழைக்கப்பட்ட முகம்மது அலியும் செளகத் அலியும் இணைந்து 1919இல் இந்தியாவில் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர். அந்த இயக்கத்துக்கு காந்தியடிகள் தன் ஆதரவைத் தெரிவித்து மேடைகளில் உரையாற்றினார்.  இந்திய மக்களில் ஒரு பிரிவினருக்கு இழைக்கப்படும் துரோகத்தை இன்னொரு பிரிவினருக்கும் இழைக்கப்பட்ட அநீதியாகவே கருதவேண்டும் என்று அவர் கூறினார். அனைவரும் இணைந்து அகிம்சை வழியில் போராடுவதன் மூலம் ஆங்கிலேயர் ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டுவர இயலும் என்றும் அவர் எடுத்துரைத்தார். அவருடைய உரை தேசமெங்கெங்கும் பரவி ஓர் எழுச்சியை உருவாக்கியது. ஜாலியன் வாலாபாக் படுகொலை, ரெளலட் சட்டம் போன்றவற்றால் நாடெங்கும் ஏற்கனவே பரவியிருந்த விடுதலை வேட்கை இன்னும் பல மடங்காகப் பெருகி வளர்ந்தது.

நாட்டுநடப்புச் செய்திகளை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் கொண்டிருந்த வேலூரைச் சேர்ந்த பதினைந்து வயதுள்ள இளைஞரொருவர் காந்தியடிகளின் உரைக்குறிப்பைப் படித்துவிட்டு உற்சாகமடைந்தார். அச்சமயத்தில் அவருக்காக அவருடைய  அப்பா உருவாக்கிக் கொடுத்த பாக்குமண்டி வணிகத்தை அவர் பொறுப்பேற்று நடத்தி வந்தார். அக்காலகட்டத்தில் காந்தியடிகளைப்பற்றிய தகவல்களுக்காகவும் போராட்டம் தொடர்பான தகவல்களுக்காகவும் அவர் எங்கும் செல்லவேண்டிய அவசியமே ஏற்படவில்லை. அவருடைய கடையிலேயே  வேலைசெய்து வந்த காந்தியத் தொண்டரான குப்புசாமி என்பவர் அவர் அறிந்துகொள்ள வேண்டிய எல்லாச் செய்திகளையும் ஒவ்வொரு நாளும்  அவரிடம் தெரிவித்தபடி இருந்தார். அவருக்கு அது ஓர் அரசியல் வகுப்பாக இருந்தது.

குப்புசாமி சொல்வதையெல்லாம் கேட்டுக் கேட்டு அந்த இளைஞருக்கு காந்தியடிகள் மீதான ஆர்வம் அதிகரித்தது. வேலூரிலும் அக்கம்பக்கத்து ஊர்களிலும் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டங்களுக்குச் சென்று, அங்கே நிகழ்த்தப்படும் உரைகளையெல்லாம் தொடர்ந்து கேட்கத் தொடங்கினார். அவ்வப்போது வேலூர் நகரத்தில் நடைபெறும் போராட்டங்களிலும் கலந்துகொண்டார். சென்னை கடற்கரையில் நடைபெற்ற கிலாபத் மாநாட்டிலும் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அவர் பெயர் உபயத்துல்லா.

ஒத்துழையாமை இயக்கத்தின் நோக்கங்களைப்பற்றி பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கும் பொருட்டு காந்தியடிகள் நாடு தழுவிய ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக 12.08.1920 அன்று செளகத் அலியுடன் இணைந்து சென்னைக்கு வந்தார்.  அன்று மாலை திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் இருவரும் உரையாற்றினர். காந்தியடிகள் தன் உரையில் உலகில் வன்முறையை அடிப்படையாகக்கொண்ட நீதியைவிட தன்னல மறுப்பை அடிப்படையாகக்கொண்ட நீதியே மனிதகுலத்துக்கு நன்மை விளைவிக்கும் என்று குறிப்பிட்டார்.

ஆம்பூரில் கெளரவ மாஜிஸ்ட்ரேட்டுகளாகச் செயல்பட்டு வந்த பங்கி ஹயாத் பாஷா, மாலிக் அப்துல் ரகுமான், முகம்மது காசிம், செங்கலப்பா ஆகியோர் ஒத்துழையாமைக்கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு தம் பதவிகளிலிருந்து விலகுவதாக அரசுக்குக் கடிதம் எழுதித் தெரியப்படுத்தினர். அவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் 14.08.1920 அன்று ஆம்பூரில் ஒரு கூட்டம் நடைபெற்றது. காந்தியடிகள் அக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர்களைப் பாராட்டிப் பேசினார். அன்று ஆம்பூரிலேயே வேறு பகுதியில் நடைபெற்ற கிலாபத் மாநாட்டிலும் கலந்துகொண்டு உரையாற்றினார். ஆம்பூர் நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும்  பிற தலைவர்களுடன் சேர்ந்து வேலூருக்குச் சென்றார்.

காந்தியடிகளை வரவேற்க ஹஸ்ராத் மக்காவில் உள்ள ரயில்வே க்ராஸிங் அருகில் நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி நின்றிருந்தனர்.  அவரை வரவேற்று, பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த கோட்டை மைதானம் வரைக்கும் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அங்கே இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். காந்தியடிகளின் உரையை யாகூப் ஹசன் இந்துஸ்தானியிலும் ராஜாஜி தமிழிலும் மொழிபெயர்த்தனர்.  காந்தியடிகள் ஆற்றும் உரைச்சுருக்கங்களை மட்டுமே பத்திரிகைச்செய்திகள் வழியாகவும் குப்புசாமி வழியாகவும் மட்டுமே அதுவரை தெரிந்துவைத்திருந்த உபயத்துல்லாவுக்கு அன்றைய நிகழ்ச்சி பெரியதொரு வாய்ப்பாக அமைந்தது. காந்தியடிகளை நேருக்கு நேர் பார்க்கவும் அவருடைய உரையை அவருக்கு எதிரிலேயே நின்று கேட்கவும் கிடைத்த வாய்ப்பை பெரும்பேறாகவே அவர் நினைத்தார்.

காந்தியடிகளைப்போலவே மேடையில் நின்று மக்களுக்குத் தேவையான கருத்துகளை எடுத்துரைக்கவேண்டும் என்ற எண்ணம் உபயத்துல்லாவின் நெஞ்சில் எழுந்தது. அவருடைய உற்சாகத்தைக் கண்ட குப்புசாமி, உள்ளூர் காங்கிரஸ் மேடைகளில் அதற்கான வாய்ப்புகளை தொடக்கத்தில் உருவாக்கிக் கொடுத்தார். உபயத்துல்லாவின் மனத்தெளிவின் மீதும் புரிந்துகொள்ளும் ஆற்றல் மீதும் அவருடைய தேசப்பற்றின் மீதும் குப்புசாமிக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. அவர் எதிர்பார்த்தபடியே, உபயத்துல்லா வெகுவிரைவில் சிறந்த மேடைப்பேச்சாளர் ஆனார். உருதும் தமிழும் கலந்த அவருடைய ஆற்றொழுக்கான பேச்சுக்கு அனைவரையும் ஈர்க்கும் ஆற்றல் இருந்தது. சொல்ல முற்படும் கருத்தை தெளிவாகவும் எளிமையாகவும் எளியவர்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் எடுத்துரைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். காங்கிரஸ் இயக்கம் அவரை நன்கு பயன்படுத்திக்கொண்டது.  அவருடைய உரையைக் கேட்பதற்காகவே வெகுதொலைவில் இருந்து வந்து பலரும் காத்திருக்கத் தொடங்கினர்.

தம்முடைய வீடு இருக்கும் பகுதியிலேயே காந்தி சங்கம் என்கிற பெயரில் உபயத்துல்லா ஓர் அமைப்பை உருவாக்கினார். அப்பகுதியில் வசிக்கும் தன் வயதையொத்த இளைஞர்கள் அனைவரையும் திரட்டி அந்த அமைப்பில் உறுப்பினராக்கினார். பிறகு அவர்களையும் அழைத்துக்கொண்டு வேலூரின் சுற்றுவட்டாரங்களில் ஊர்வலமாகச் சென்று பரப்புரையில் ஈடுபட்டார். மக்களுக்குப் பயனுள்ள வகையில் சிறுசிறு சேவைகளைச் செய்தார். இஸ்லாமியர்களும் இந்துக்களும் இணைந்து போராடுவதன் வழியாகவே விடுதலையைப் பெறமுடியும் என்பதை விளக்கினார்.

உபயத்துல்லாவைப்போலவே அவர் வயதையொத்த இன்னொரு இளைஞரும் அக்காலத்தில் ஆர்வத்தோடும் துடிப்போடும் இந்திய சுதந்திரத்தைப்பற்றி மேடைகளில் முழங்கிவந்தார். அவரும் குப்புசாமி என்னும் பெயருடையவர். மேடைப்பேச்சில் இடிபோல முழங்கக்கூடியவர் என்பதால் அவரை  கோடையிடி குப்புச்சாமி என்னும் பட்டப்பெயரிட்டு அழைப்பதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆரம்ப அறிமுகத்தைத் தொடர்ந்து இருவரும் நண்பர்களாயினர். அதற்குப் பிறகு மேடைதோறும் இருவரும் இணைந்து முழங்கத் தொடங்கினர்.

பொது இடங்களில் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு ஏராளமான விதிமுறைகள் நடைமுறையில் இருந்த காலம் அது. ஒருமுறை டாக்டர் அன்சாரி, ஹக்கீம் அஜ்மல்கான் ஆகியோரைக் கொண்ட குழுவொன்று 1923இல் மார்ச் மாதத்தில் ஜபல்பூருக்கு வருகை புரிந்தது. அன்றைய ஜபல்பூர் நகரசபை அக்குழுவுக்கு வரவேற்பு அளித்தது. அச்சமயத்தில் விருந்தினர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நகரசபை கட்டிடத்தில் இந்திய தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது. நகரசபைக் கட்டிடத்தில் ஆங்கிலேயரின் யூனியன் ஜாக் கொடி மட்டுமே பறக்கவேண்டும் என்னும் மரபை மீறி அவர்கள் அன்று தேசியக்கொடியைப் பறக்கவிட்டனர். அதுமட்டுமன்றி, இனி நகரசபையில் தேசியக்கொடியை மட்டுமே ஏற்றவேண்டும் என ஒரு தீர்மானத்தையும் முன்மொழிந்து நிறைவேற்றிவிட்டனர்.

ஆட்சியாளருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. உடனே, அவர்கள் அதைப்பற்றிய தகவலை ஜபல்பூர் மாவட்ட நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். உடனே 01.05.1923 அன்று விசாரணை நடத்திய ஜபல்பூர் மாவட்ட நீதிபதி அத்தீர்மானத்தை ரத்து செய்து, தேசியக்கொடியை ஏற்றுவதற்கு தடை உத்தரவு பிறப்பித்தார். அதை எதிர்த்து நாக்பூரில் தேசியக்கொடியை ஏந்தி ஊர்வலமாகச் செல்ல காங்கிரஸ் முடிவெடுத்தது. தேசியக்கொடியை ஏற்ற தடைவிதித்த செய்தி சில நாட்களிலேயே நாடெங்கும் பரவிவிட்டது.

18.06.1923 அன்று ஜமன்லால் பஜாஜின் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் நாக்பூருக்குச் சென்று கொடியேந்தி ஊர்வலமாகச் சென்று தம் எதிர்ப்பைப் புலப்படுத்தினர். அவர்கள் அனைவரும் காவல்துறையினரால் அன்றே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். உடனே தேசிய காங்கிரஸ் செயற்குழு கூடி நாடெங்கும் உள்ள மாநில காங்கிரஸ் அமைப்பாளர்கள் நாக்பூர் கொடிப்போராட்டத்தில் பங்கேற்பதற்குத் தொண்டர்களை அனுப்பி வைக்கும்படி கோரிக்கையை அனுப்பியது.

வேலூர் மாவட்ட காங்கிரஸ் அமைப்பாளர்கள் அந்தக் கோரிக்கை கைக்குக் கிடைத்ததும் பங்கேற்பாளர்களைத் தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கினர். அப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என விரும்பிய உபயத்துல்லா தாமாகவே அவர்களைச் சந்தித்து தன் பெயரை பதிவு செய்துகொண்டார். அவருடைய ஆர்வத்தைப் பார்த்து மகிழ்ந்த அமைப்பாளர்கள் வேலூர் மாவட்டம் சார்பாக தொண்டர்களைத் திரட்டி உபயத்துல்லாவின் தலைமையிலேயே நாக்பூருக்கு அனுப்பி வைத்தனர். பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைப்பற்றிய முழுத்தெளிவுடனேயே உபயத்துல்லாவும் பிற தொண்டர்களும் வேலூரிலிருந்து நாக்பூரை நோக்கிப் புறப்பட்டனர். இருநாள் பயணத்துக்குப் பிறகு நாக்பூரை அடைந்தனர்.  31.07.1923 அன்று ஒவ்வொருவரும் தேசியக்கொடியை ஏந்தி தெருவில் ஊர்வலமாகச் சென்றனர். காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் அந்த இடத்திலேயே கைது செய்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். நீதிமன்றம் அனைவருக்கும் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தது. அனைவரும் நாக்பூருக்கு அருகில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டனர்.

1927இல் ஆங்கிலேய அரசு ஏழு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பாராளுமன்றக்குழு ஒன்றை சைமன் என்பவர் தலைமையில் அமைத்தது. இந்தியாவில் பயணம் செய்து ஆட்சியாளர்கள், ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் என எல்லாத் தரப்பினரையும் சந்தித்து அவர்களுடைய கருத்துகளைத் திரட்டவும் அடுத்து நடைமுறைப்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி பரிந்துரை செய்யவும் அக்குழு உருவாக்கப்பட்டது. அக்குழுவினர் 03.02.1928 அன்று இந்தியாவுக்கு வந்து பம்பாயில் இறங்கினர். ஆனால் இந்தியாவின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு குழுவில் ஓர் இந்தியர் கூட இல்லையே என்னும் வருத்தமும் அதிருப்தியும் ஒவ்வொருவருடைய ஆழ்நெஞ்சிலும் இருந்தன. அதனால் ‘சைமனே திரும்பிப் போ’ என்னும் போராட்டத்தைத் தொடங்கினர். எல்லா நகரங்களிலும் அது எதிரொலித்தது.

வேலூர் நகரத்திலும் சைமன் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் நடைபெற்றது. ஒரு பிரிவினருக்குத் தலைமை தாங்கி உபயத்துல்லா முன்னணியில் நடந்துசென்றார்.  எதிர்ப்பு முழக்கங்களுடன் அந்த ஊர்வலம் முன்னேறிக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென அங்கு வந்து சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தினர். அக்கணமே அனைவரும் கலைந்துசெல்லவேண்டுமென்றும் இல்லையென்றால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுமென்றும் எச்சரிக்கை விடுத்தார். அவருடைய அதிகாரத்தொனியையும் ஊர்வலத்தினரை அவர் ஏளனத்தோடும் அலட்சியத்தோடும் பார்த்த பார்வையையும் கண்டு முன்வரிசையில் நின்றிருந்த உபயத்துல்லா சீற்றம் கொண்டார். ஒரு கணமும் யோசிக்காமல் சட்டென தன் மேல்சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு “சுடுங்கள்” என்று அதிகாரியின் முன்னால் நிமிர்ந்து நின்று மார்பைக் காட்டினார். ஒரு கணம் உபயத்துல்லாவின் வேகத்தையும் வீரத்தையும் கண்டு காவல்துறை அதிகாரி திகைத்து செய்வதறியாமல் நின்றுவிட்டார். ஆயினும் அடுத்தகணமே முன்னேறி உபயத்துல்லாவைப் பிடித்து கீழே தள்ளி கைத்தடியால் சரமாரியாக அடிக்கத் தொடங்கினார். அதைக் கண்ட பிற காவலர்களும் துணிச்சல் கொண்டு ஊர்வலத்தில் பங்கெடுத்த அனைவரையும் கீழே தள்ளி தடியடி நடத்தத் தொடங்கினர். நகரமெங்கும் அவர்களின் ஓலக்குரல் எதிரொலித்தது. அடித்து அடித்து களைத்த காவல்துறையினர் கடைசியாக ஊர்வலத்தினரை வண்டியில் ஏற்றி நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். நீதிமன்றம் அவர்கள் அனைவருக்கும் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தது.

சிறையிலிருந்து விடுதலை பெற்று உபயத்துல்லா வீட்டுக்குத் திரும்பிய சில மாத இடைவெளியிலேயே காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். 12.03.1930 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட 78 தொண்டர்களுடன் தண்டி யாத்திரையைத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் உள்ள பல நகரங்களிலும் உப்பு எடுக்கும் போராட்டம் தொடங்கியது. திருச்சியிலிருந்து வேதாரண்யத்தை நோக்கி இராஜாஜி தலைமையிலான ஒரு குழு நடைப்பயணத்தைத் தொடங்கியது. சென்னை நகரில் 13.04.1930 அன்று பிரகாசம் – துர்காபாய் தேஷ்முக் தலைமையில் உப்பு சத்தியாகிரகம் தொடங்கியது. ஏற்கனவே சென்னையை அடைந்து போராட்ட நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த சேலம் சுப்பிரமணியம் என்னும் தொண்டர் தந்தி வழியாக உடனே புறப்பட்டு வரும்படி  உபயத்துல்லாவுக்கு செய்தியனுப்பினார். உடனே சாமி சண்முகானந்த அடிகள் தலைமையில் நண்பர் கோடையிடி குப்புசாமி முதலியாரோடும் நூற்றுக்கணக்கான தொண்டர்களோடும் சென்னையை நோக்கி பாதயாத்திரையாகவே உபயத்துல்லா புறப்பட்டுச் சென்றார்.  

சென்னையைச் சேர்ந்த மயிலாப்பூரில் உதயவனம் என்ற கட்டிடத்தில் சத்தியாகிரகிகள் அனைவரும் தங்கிக்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழு முன்னனியில் நின்று போராட்டத்தை நடத்தி கைதானது. பிரகாசம் முதலில் கைதானார். 25.05.1930 அன்று உபயத்துல்லா கைது செய்யப்பட்டார். அவருக்கு பதினெட்டு மாதங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது.

ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக தொண்டர்கள் உத்வேகம் குறையாமல் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்து கைதாவதைக் கண்டு செய்வதறியாமல் திகைத்தனர் காவல் துறையினர். எதிர்காலத்தில் இனி எந்தத் தொண்டரும் போராட்டத்தில் ஈடுபட அச்சம் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தோடு மிகவும் கடுமையான முறையில் காவலர்கள் இரக்கமே இல்லாமல் நடந்துகொள்ளத் தொடங்கினர். ஒவ்வொரு நாளும் தடியடி நிகழ்ந்தது. ஒருசில தொண்டர்கள் அந்த ரணத்திலிருந்து மீளாமலேயே இறந்துவிட்டனர்.

ஒருமுறை சென்னை சட்டசபையில் கவர்னர் அமரும் நாற்காலிக்கு அருகில் தொங்கிக்கொண்டிருந்த விரிப்பின் மடிப்பில் ஒரு கைத்துப்பாக்கியையும் மூன்று பயன்படுத்தப்படாத தோட்டாக்களையும் 16.03.1933 அன்று காவல்துறையினர் கண்டுபிடித்தனர். உடனே தமிழ்நாடெங்கும் சுதந்திரப்போரில் தலைமைப்பொறுப்புடன் ஈடுபட்டு வரும் எல்லாத் தலைவர்களுடைய இல்லங்களிலும் திடீரென புகுந்து சோதனை செய்ய அரசு ஆணை பிறப்பித்தது.  17.03.1933 அன்று உபயத்துல்லாவின் வீட்டுக்கு வந்த காவல்துறையினர் பல மணி நேரங்கள் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக ஒரு வாரம் எல்லா இடங்களிலும் சோதனை செய்தபோதும் ஆயுதங்களை கவர்னர் நாற்காலி வரைக்கும் கொண்டு சென்று வைத்தவர் யார் என்பதை அரசாங்கத்தினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒருமுறை வேலூர் நகரசபையில் உறுப்பினராக உபயத்துல்லா தேர்ந்தெடுக்கப்பட்டார். நகரத்தை சுகாதாரத்தோடு பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டார். ஒருமுறை மக்களுக்கான கலைநிகழ்ச்சியை பொறுப்பேற்று நடத்தும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தபோது விசுவநாததாஸ் நாடகக்குழுவை வரவழைத்து ஒரு நாடகத்தை அரங்கேற்றவைத்தார். நல்ல தேசபக்திக் கருத்துகள் அடங்கிய பாடல்களை ஏராளமாகப் பாடி பார்வையாளர்களை அவர் கவர்ந்தார். அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடகக்குழுவை அழைத்து வந்து வாய்ப்பளித்ததாக உபயத்துல்லாவைப் பிடிக்காதவர்கள் நகரசபைத்தலைவரிடம் கோள் மூட்டினர். ஆனால் அந்தப் புகாரைப் பொருட்படுத்தாமல் தலைவர் ஒதுக்கிவிட்டதால் உபயத்துல்லா சுதந்திரமாகவே செயல்பட்டார்.

1937இல் மாகாணத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் உபயத்துல்லா தன் நண்பர் குப்புசாமி முதலியாரோடு சேர்ந்து வேலூரைச் சுற்றிய எல்லா ஊர்களுக்கும் பயணம் செய்து காங்கிரஸ் வெற்றி பெற மேடையில் முழக்கமிட்டார். இடைவிடாத அவருடைய தொடர் பயணமும் பரப்புரையும் நல்ல பயனை அளித்தன. காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களை வென்று ஆட்சியமைத்தது. காங்கிரஸ் தலைவர்கள் உபயத்துல்லாவுக்கு நன்றி கூறினர். ஆனால் அந்த அரசு நீண்ட காலம் நீடித்துச் செயல்பட முடியாதபடியான சூழல் ஏற்பட்டது.

1939இல் இரண்டாம் உலகப்போர் அறிவிக்கப்பட்டதும், பிரிட்டன் அரசு தன்னிச்சையாக இந்தியா ஆங்கிலேயர் சார்பாக போரில் ஈடுபடும் என்று அறிவித்துவிட்டது. அந்தப் போக்கினை விரும்பாத காங்கிரஸ் தம் கட்டுப்பாட்டில் இருந்த மாகாணங்களின் ஆட்சிப்பொறுப்பிலிருந்து வெளியேறியது. 1940இல் ராம்கர் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். 1941ஆம் ஆண்டு இறுதி வரைக்கும் அந்த சத்தியாகிரகம் தொடர்ந்தது. தேசமெங்கும் ஆயிரக்கணக்கான  தலைவர்களும் தொண்டர்களும் சிறைபுகுந்தனர். இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயருக்கு வெற்றி கிடைத்தபோதும், அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளும் பொருளாதாரச் சரிவுகளும் அதிகமாக இருந்தன. அதன் காரணமாக காரணமாக இந்தியர்களிடம் அவர்கள் மிகவும் கடுமையான விதத்தில் நடந்துகொண்டனர். இதற்கிடையில் 06.04.1942 அன்று ஆந்திரப்பிரதேசத்தில் விசாகப்பட்டினத்திலும் காகிநாடாவிலும் ஜப்பான் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

அதைத் தொடர்ந்து பல கட்டங்களாக வார்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு ஆங்கில அரசு உடனடியாக இந்தியாவைவிட்டு உடனடியாக வெளியேறவேண்டும் என்றொரு தீர்மானத்தை முன்வைத்து விவாதம் நடத்தியது.  அதையொட்டி முக்கியமான ஒரு முடிவை எடுப்பதற்காக 07.08.1942 அன்று பம்பாயில் சிறப்பு செயற்குழு கூட்டமொன்றை ஏற்பாடு செய்வது தொடர்பான செய்தி இந்தியாவில் உள்ள எல்லா அமைப்பாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. எல்லாப் பத்திரிகைகளிலும் அதைப்பற்றிய சிறப்பு அறிவிப்பு வெளியானது. இதனைக் கண்ட ஆட்சியாளர்கள்  என்ன செய்வது என அறியாமல் முதலில் திகைத்தனர். பிறகு  பம்பாய் காங்கிரஸ் கூட்டத்தை நடத்தவிடாமல் தடை செய்ய யோசித்தனர். தலைவர்கள் யாரும் பம்பாய்க்கு வராமல், நாட்டின் பல பாகங்களில் தங்கி ஆங்காங்கு போராட்டங்களில் ஈடுபடவே அந்தத் தடை வழிவகுக்கும் என்றும் வேறொரு கோணத்தில் நினைத்துப் பார்த்தனர். இறுதியில் பம்பாய் கூட்டம் நடைபெற்ற பிறகு தக்க நடவடிக்கைகள் எடுக்கலாம் என ரகசியத் திட்டம் தீட்டிய பிறகு அமைதி காத்தனர்.

ஏற்கனவே திட்டமிட்டபடி 08.08.1942 அன்று பம்பாயில் கூடிய மாபெரும் கூட்டத்தில் ஆட்சியாளர்கள் இந்தியாவைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைத்து நீண்ட நேரம் உரையாற்றினார் காந்தியடிகள். அக்கூட்டத்துக்கு தமிழகத்திலிருந்து காமராஜர், சத்தியமூர்த்தி, பக்தவத்சலம், சி.என்.முத்துரங்க முதலியார் போன்ற தலைவர்களுடன் உபயத்துல்லாவும் சென்றிருந்தார்.

அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள், தொண்டர்கள் பற்றிய விவரங்களை ரகசியக்காவலர்கள் வழியாக ஆட்சியாளர்கள் உடனுக்குடன் சேகரித்துக்கொண்டனர். அவர்களுடைய பெயர்ப்பட்டியலை தயார் செய்து நாடு முழுவதிலும் உள்ள எல்லா காவல் நிலையங்களுக்கும் ரகசியமாக அனுப்பினர். பம்பாயிலிருந்து ஊர் திரும்பும் எல்லாத் தலைவர்களையும் தொண்டர்களையும் உடனடியாக நடுப்பயணத்திலேயே கைது செய்ய கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

பம்பாயிலிருந்து சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்த ரயில் அரக்கோணம் நிலையத்தில் நின்றதும் காங்கிரஸ் தலைவர்களைக் கைது செய்ய சிவப்புத்தொப்பி அணிந்த காவலர்கள் படை தயாராக இருந்தது. அப்போது போராட்டத்தை நடத்த வேண்டிய வழிமுறைகள் தொடர்பான ஏராளமான துண்டுப்பிரசுரங்கள் காமராஜரிடம் இருந்தன. இன்னும் சிறிது நேரத்தில் கைது செய்யப்படுவோம் ரயிலுக்குள் இருந்த அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அதை நினைத்து யாரும் கலங்கவில்லை. எப்படியாவது பிரசுரங்களை மாவட்ட, நகர அமைப்பினரிடம் சேர்க்கவேண்டுமே என்ற கவலைதான் அவர்களை வாட்டியது. ஒரே கணத்தில் அவர்கள் சேர்ந்து உரையாடி முடிவெடுத்து பிரசுரங்களோடு காமராஜரை தப்பித்துச் செல்ல கேட்டுக்கொண்டனர். மறுகணமே எதையும் யோசிக்காமல் சாதாரணப் பிரயாணியைப்போல தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு பிரசுரங்களைக் கொண்ட சுமையை மூட்டை போல சுமந்தபடி நிலையத்தைவிட்டு வெளியேறிவிட்டார் காமராஜர். அவரைத் தவிர பெட்டியில் இருந்த உபயத்துல்லா உட்பட அனைவரையும் காவலர்கள் கைது செய்து அழைத்துச் சென்றனர். காட்பாடி வழியாக அவர்கள் அனைவரையும் வேலூருக்கு அழைத்துவந்து  மத்திய சிறையில் அடைத்துவைத்தனர். உபயத்துல்லா உட்பட அனைவருக்கும் 26 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அமராவதி, அலிப்பூர், வேலூர், தஞ்சாவூர் ஆகிய சிறைகளில் உபயத்துல்லா சிறைத்தண்டனையை அனுபவித்தார்.

அரக்கோணத்தில் வெளியேறிய காமராஜர் அங்கிருந்து இராணிப்பேட்டைக்குச் சென்று அந்த ஊரைச் சேர்ந்த கல்யாணராம ஐயர் என்னும் சுதந்திரப்போராட்ட வீரரிடம் பிரசுரங்களை குறிப்பிட்ட சில  வட்டார நகர பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.  வேறு சில இடங்களுக்கு காமராஜரே நேரிடையாக எடுத்துச் சென்று ரகசியமாக ஒப்படைத்தார். அதன் பிறகு விருதுநகருக்குச் சென்ற அவர் அந்த ஊர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அங்கிருந்து வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நண்பர்கள் குழுவுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இக்காலகட்டத்தில் இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் மதப்பிரச்சினை மூண்டு, தேசமெங்கும் காட்டுத்தீயென வெகுவேகமாக பரவத் தொடங்கியது. தண்டனைக்காலம் முடிவடைந்து உபயத்துல்லா வேலூருக்குத் திரும்பி வந்த நேரத்தில் மத அடிப்படையில் நாட்டையே பிரிக்கும் முழக்கங்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. 1944ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகளுக்கும் ஜின்னாவுக்கும் இடையில் நிகழ்ந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துவிட்டது. இந்தியா பிரிக்கப்பட வேண்டும் என்பதிலும் இஸ்லாமியர்களுக்கென தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையிலும் ஜின்னா கொண்ட உறுதி பேச்சுவார்த்தையைத் தோல்வியடையச் செய்துவிட்டது.

லண்டனுக்குச் சென்று திரும்பிய வைசிராய் வேவல் 25.06.1945 அன்று சிம்லாவில்  காங்கிரஸ் தலைவர்களுக்கும் முஸ்லிம் லீக் தலைவர்களுக்கும்  இடையில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். வைசிராய் கவுன்சிலுக்கு முஸ்லிம் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் உரிமை முஸ்லிம் லீக் கட்சிக்கே வழங்கப்பட வேண்டும் என்ற நிலைபாட்டில் உறுதியாக இருந்த ஜின்னாவின் போக்கினால் அந்தச் சந்திப்பும் தோல்வியடைந்தது.  பிரிட்டனில் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட அட்லி இந்திய அளவில் உடனடியாக ஒரு பொதுத்தேர்தலை நடத்தும் திட்டத்தை அறிவித்தார்.

நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கிய பிரிவினைப்பேச்சைக் கேட்டு காந்தியடிகள் மிகுந்த மனவேதனை கொண்டார். அவரைப்போலவே உபயத்துல்லாவையும் அந்தப் பிரிவினைப்பேச்சு வாட்டியது. இந்துக்களும் இஸ்லாமியர்களும் மத வேறுபாடுகளை மறந்து சகோதரர்களென இணைந்து வாழும் நாடு தொடர்பான கனவே அவருடைய நெஞ்சில் நிறைந்திருந்தது. அது கலைந்துபோவதில் அவருக்கு விருப்பமில்லை. இராஜாஜி போன்ற தமிழ்நாட்டுத் தலைவர்கள் சுதந்திரம் வேண்டும் என்பதற்காக பிரிவினைக்கு ஆதரவான குரலை எழுப்பியபோது, வெளிப்படையாகவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் உபயத்துல்லா. பெருந்தலைவர் ஒருவரை எதிர்க்கிறோம் என்கிற தயக்கமே இல்லாமல் தன் எதிர்ப்புக்குரலை மேடை தோறும் முழங்கினார்.

தமிழ்நாட்டில் வசித்த இஸ்லாமியர்கள் சிலர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒரே காரணத்தால் ஜின்னாவின் தனிநாடு கோரிக்கையை நியாயப்படுத்தி மேடைகளில் பேசத் தொடங்கினர். அவர்கள் உபயத்துல்லாவை அணுகி தம் பக்கத்தில் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் பிளவுபடாத இந்தியா என்பதில் உறுதியாக இருந்த உபயத்துல்லா அவர்களுடைய கோரிக்கைக்கு இணங்க மறுத்தார். அது மட்டுமன்றி, பிரிவினைக்குரலுக்கு எதிராக ஒருங்கிணைந்த இந்தியாவின் அவசியத்தைக் குறித்து விளக்கும் விதமாக பல நகரங்களில் மாநாடுகளை ஏற்பாடு செய்து மேடையில் மத ஒற்றுமையை வலியுறுத்தி முழக்கமிடவும் தொடங்கினார். கும்பகோணத்தில் நடைபெற்ற பிரிவினை எதிர்ப்பு மாநாட்டில் அவர் ஆற்றிய பேருரை எல்லாச் செய்தித்தாட்களிலும் வெளியாகி, அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. திருச்சியைச் சேர்ந்த சையத் முர்த்துசா, எஸ்.ஏ.ரஹீம் போன்ற பெரியவர்கள் அனைவரும் அந்த மாநாட்டில் கலந்துகொண்டு உபயத்துல்லாவின் முயற்சியைப் பாராட்டினர்.

உபயத்துல்லாவுடைய நேர்மையான பேச்சினால் அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் அதிகம். உபயத்துல்லாவின் மதத்தைச் சேர்ந்தவர்களே அவரை தம்மைவிட கீழானவரைப்போல ஒதுக்கி நடக்கத் தொடங்கினர். சில அமைப்புகள் அவரை மதத்தைவிட்டு வெளியேற்றுவதாக அறிவித்தன. காபிர் என்று அவரைப் பழித்தன. அவருடைய தாயார் மரணமடைந்த தருணத்தில் அவருடைய உடலை அடக்கம் செய்ய இஸ்லாமியர்களின் இடுகாட்டில் இடமொதுக்கித் தர மறுத்தனர். உடலைச் சுமப்பதற்காஅக வழக்கமாக கபர்ஸ்தானிலிருந்து அனுப்பும் பாடையை அனுப்பி உதவ மறுத்தனர். ஒரு காலத்தில் அவருடைய பேச்சாற்றலைக் கண்டு வியந்து ஜனாப் என்று மதிப்புடன் அழைத்தவர்களே காபிர் என அழைத்துப் பழிக்கத் தொடங்கினர். ஆனால் அதைப்பற்றியெல்லாம் சிறிதும் கவலை கொள்ளாத உபயத்துல்லா, காந்தியடிகள் வகுத்தளித்த பாதையே தன்னுடைய வாழ்நாள் பாதையென்பதில் உறுதியாக இருந்தார்.

உபயத்துல்லாவின் மறைவுக்குப் பிறகு அவருடைய தியாகத்தைப் போற்றி கெளரவிக்கும் விதமாக அவருடைய குடும்பத்தாருக்கு அரசு நிலமொதுக்கியது. ஆயினும் தேச நலனுக்காக தன் கணவர் ஆற்றிய சேவைக்கு நிகராக வேறெதையும் வைத்துவிட முடியாது என நினைத்த அவருடைய துணைவியார் புன்னகையுடன் அதை ஏற்க மறுத்துவிட்டார். பிறகு அரசு வேலூர் நகரத்தில் புதிதாகக் கட்டிய பேருந்து நிலையத்துக்கு உபயத்துல்லாவின் பெயரைச் சூட்டி, அவருடைய பெயரை காலத்தில் நிலைநிறுத்தியது.

 

 

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாணியம்பாடியில் 02.05.1905 அன்று உபயதுல்லா பிறந்தார். அவருடைய தந்தையார் பெயர் மாதர் பாட்சா. பாக்குமண்டி வணிகராக வாழ்க்கையை நடத்தி வந்தார். அவருடைய தாயார் ரபியாபஸ்ரி என்கிற பிஜுமா. பிள்ளைகளின் எதிர்கால வளம் கருதி அவர்கள் வாணியம்பாடியிலிருந்து வேலூருக்குக் குடிபெயர்ந்தார்கள். சிறந்த மேடைப்பேச்சாளர். சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு பல முறை சிறை சென்றவர். சென்னை மாகாண சட்டசபைத் தேர்தல்களிலும் மாவட்ட நிர்வாகத் தேர்தல்களிலும் வட ஆற்காடு மாவட்டத்தில் மட்டுமன்றி தமிழகமெங்கும் சுற்றித் திரிந்து காங்கிரஸுக்கு ஆதரவாக பரப்புரை செய்து வெற்றியைத் தேடித் தந்தார். நகரசபை உறுப்பினராகவும் ஜில்லா போர்டு உறுப்பினராகவும் பணியாற்றினார். 1946இல் டில்லி ராஜ்யசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஒரு காலத்தில் வேலூர் கோட்டையைச் சுற்றியிருந்த மைதானத்தில் பொதுமக்கள் கூடுவதைத் தடை செய்துவைத்திருந்த சட்டத்தை அகற்றி, அவ்விடத்தை பொதுமக்களின் நடமாட்டத்துக்குரிய இடமாக மாற்றினார். அந்த இடத்துக்கு காந்தி மைதானம் என்று பெயர் சூட்டவும் காரணமாக இருந்தார். 22.02.1958 அன்று இயற்கையெய்தினார். அவரைக் கெளரவிக்கும் விதமாக, வேலூர் நகரத்தில் உருவான பேருந்து நிலையத்துக்கு உபயதுல்லா பேருந்து நிலையம் என அவருடைய பெயர் சூட்டப்பட்டது. ‘விடுதலைப்போரில் வேலூர் வீரர் உபயத்துல்லா’ என்னும் தலைப்பில் செ.திவான் எழுதிய சிறு அறிமுகநூலொன்றை நெல்லையைச் சேர்ந்த ரெகான் - ரய்யா பதிப்பகம் 2023இல் வெளியிட்டது.

(சர்வோதயம் மலர்கிறது - மார்ச் 2024)