“எல்லா இலக்கியமும் அறம் என்னும் மாபெரும் மதிப்பீட்டை வலியுறுத்தவும் நிலைநிறுத்தவும் எழுதப்படுபவையே”
பாவண்ணன் சமகால நவீனத் தமிழ் இலக்கியச்சூழலில்முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என இடையறாது தமது பங்களிப்பை அளித்துவருகிறார். கன்னடத்திலிருந்து தலித் இலக்கியங்களை மொழியாக்கம் செய்து தமிழ் தலித் இலக்கிய அலை உருவாக அடிப்படைகளை அமைத்தவர்களில் ஒருவர். மொழிபெயர்ப்புக்காக இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாதமியின் விருது, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் (கனடா) வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது , விளக்கு அமைப்பின் வாழ்நாள்சாதனைக்கான புதுமைப்பித்தன் விருது, புதுச்சேரி அரசின், இலக்கியச்சிந்தனையின் சிறந்த நாவல் விருது என இவரது பங்களிப்புக்கு தமிழ்ச்சூழலில் தகுந்த கவனம் கிடைத்துள்ளது. டிசம்பர் மலேசியாவில் நடைபெறும் வல்லினம் விழாவுக்கு வருகை தரும் அவரை மலேசிய வாசகர்கள் கூடுதலாக அறிந்துகொள்ளும் வகையில் இந்நேர்காணல் எடுக்கப்பட்டுள்ளது.
வல்லினம்: இடைவிடாது வாசித்தும் எழுதியும் வருகிறீர்கள். குடும்பத்தினர் ஆதரவு இல்லாமல் இச்சூழல் சாத்தியமாவது கடினம். அவர்களைப் பற்றி தெரிந்துகொள்வதிலிருந்து இந்த நேர்காணலைத் தொடங்கலாம்.
பாவண்ணன்: என் இயற்பெயர் பாஸ்கரன். புதுச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடையிலுள்ள வளவனூர் என்னும் கிராமத்தில் நான் பிறந்தேன். எங்கள் அப்பா தையல் தொழிலாளி. அம்மா குடும்பத்தலைவி. நான்தான் குடும்பத்தில் தலைமகன். எனக்கு இரு தம்பிகள். இரு தங்கைகள். பட்டப்படிப்பை முடித்த பிறகு தொலைபேசித்துறையில் இளநிலை பொறியாளராக தேர்வாகி கர்நாடக மாநிலத்துக்கு வந்தேன். இரண்டுமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு என் மாமா மகளுக்கும் எனக்கும் திருமணம் நடைபெற்றது. அவர் பெயர் அமுதா. பள்ளியிறுதி வரை படித்தவர். என் இலக்கிய முயற்சிகளைப்பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். அந்தக் காலத்திலிருந்து நான் எழுதும் ஒவ்வொரு படைப்பையும் உடனுக்குடன் முதல் ஆளாகப் படித்துவிடும் பழக்கம் அவருக்கு உண்டு. அவர் குறிப்பிடும் எந்தவொரு எளிய கருத்தும் எனக்கு மிகமுக்கியமானதாகும். ஒரு படைப்பு அவரை ஈர்க்கவில்லை என்றால், அதை இன்னொரு வடிவில் எழுத முயற்சி செய்வேன். அவர் பெரிய விமர்சகரல்ல என்றாலும், அவரை நிறைவுசெய்யவேண்டும் என்பதில் எனக்கு எப்போதும் அக்கறை உண்டு. வீட்டுக்கு வரும் இலக்கியப்பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் அவருக்கு ஆர்வத்தைத் தூண்டுகிறவற்றை எடுத்து அவராகவே படிப்பார். குடும்பத்தை முழுக்க முழுக்க அவரே நிர்வகிக்கிறார். எல்லாவற்றையும் அழகாக நிர்வகிக்கும் சிறப்பான குணம் அவருக்கு உண்டு. சம்பளத்தை வாங்கி வந்து என் செலவுக்கு ஒரு தொகையை மட்டும் எடுத்துக்கொண்டு எஞ்சியதையெல்லாம் அவரிடமே கொடுத்துவிடுவேன். அதன் வழியாக எனக்கு அதிக அளவில் நேரம் கிடைக்குமாறு அவர் செய்கிறார். அந்த நேரத்தை நான் எழுதுவதற்கும் படிப்பதற்கும் பயன்படுத்திக்கொள்கிறேன். அவருக்கு நிகராக, என் சகோதரசகோதரிகளும் என் மீது எந்தப் பொறுப்பையும் சுமத்துவதில்லை. எல்லா முக்கியமான வேலைகளையும் அவர்களே பார்த்துவிட்டு, இறுதி நேரத்தில்தான் என்னை அழைப்பார்கள். அவர்கள் குடும்பத்துக்காக உழைக்கும் உழைப்பில் நான்கில் ஒரு பங்கு கூட நான் உழைத்ததில்லை. என் மகன் பொறியியல் பட்டதாரி. அவன் பெயர் அம்ரிதா மயன் கார்க்கி. நல்ல வாசகன். சிறப்பான ஆங்கில நாவல்களைத் தேடி வாசிப்பவன். என் எழுத்தில் நாட்டம் கொண்டவன். என்னைச் சுற்றியிருப்பவர் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் குடும்பத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள். என் கவனம் எழுத்தின் திசையில் குவிவதற்கு அவர்களுடைய ஆதரவே முக்கியமான காரணம்.
வல்லினம்: பள்ளி வயதில் உங்கள் வாசிப்பு தொடங்கிவிட்டதைப்பற்றி
பல இடங்களில் கூறியிருப்பதைப் படித்திருக்கிறேன்.. அப்போது என்னென்ன மாதிரியான நூல்களை வாசித்தீர்கள்?
பாவண்ணன்: வளவனூரில் இருந்த
தொடக்கப்பள்ளியிலும் உயர்நிலைப்பள்ளியிலும்தான் நான் படித்தேன். அந்தக் காலத்தில்
எங்கள் பள்ளிகளிலேயே நல்ல நூலகங்கள் இருந்தன. வாரத்துக்கு ஒருநாள் நூலக வகுப்பு
என்னும் பாடவேளையும் இருந்தது. உடற்பயிற்சிக்காக ஒரு பாடவேளையை ஒதுக்கிவைப்பதுபோல
நூலக வாசிப்புக்கும் ஒரு பாடவேளையை ஒதுக்கிவைத்திருந்தார்கள். அந்தப் பாடவேளையில்
நூலகர் ஐம்பது அறுபது நூல்களைக் கொண்டு வந்து மேசை மீது வைத்துவிடுவார். எல்லாமே
சிறார் நூல்கள். சின்னச்சின்ன கதைப்புத்தகங்கள். நாட்டுக்குழைத்த நல்லோர் வரிசை
நூல்கள். நாங்கள் ஆளுக்கு ஒரு புத்தகத்தை எடுத்து அந்த வகுப்பு நேரம் முடியும்
வரைக்கும் படிப்போம். கதை நேரம் என்றொரு பாடவேளையும் உண்டு. அப்போது ஆசிரியரும்
கதை சொல்வார். மாணவர்களும் கதை சொல்வார்கள். அப்படித்தான் என் வாழ்வில் புத்தகங்களுக்கான
இடம் உருவானது.
பள்ளியில் நடைபெறும் கட்டுரைப்போட்டி,
பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, ஒப்பித்தல் போட்டி என எல்லாப் போட்டிகளிலும்
கலந்துகொள்வேன். வெற்றி பெறும்போது புத்தகங்கள் பரிசாகக் கிடைக்கும். எனக்கே
எனக்கென சொந்தமாக புத்தகங்கள் வைத்துக்கொள்வதற்கான தொடக்கப்புள்ளி அது. அழ.வள்ளியப்பா
எழுதிய ‘எங்கள் கதைகளைக் கேளுங்கள்’ என்ற புத்தகம்தான் நான் முதல்முதலாகப்
பரிசாகப் பெற்ற புத்தகம். காட்டிலிருக்கும் ஒவ்வொரு விலங்கும் தன் வாழ்க்கைக்கதையை
தானே வாய்திறந்து சொல்வதுபோன்ற அமைப்பில் எழுதப்பட்ட கதைகள். நான் அவற்றை
விரும்பிப் படித்தேன். ஒவ்வொரு வகுப்பிலும் இப்படி எனக்கு சில புத்தகங்கள்
பரிசாகக் கிடைத்தபடியே இருந்தன. வாண்டுமாமா, பெ.தூரன் போன்ற எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள். எங்கள்
வளவனூரில் ஒரு கிளைநூலகம் இருந்தது. என் அப்பாவின் நண்பருடைய மகன்தான் அதற்குப்
பொறுப்பாளர். என்னிடம் இருக்கும் புத்தகங்களையெல்லாம் எடுத்துச் சென்று அவரிடம்
காட்டி அதைப்போன்ற புத்தகங்களைப் படிப்பதற்குக் கொடுக்குமாறு கேட்டேன். என்னுடைய
ஆர்வத்தைப் புரிந்துகொண்டு அவரும் கொடுக்கத் தொடங்கினார். வீட்டுக்கு எடுத்துச்
செல்ல அனுமதிக்கமாட்டார். அங்கேயே உட்கார்ந்து படிக்கவேண்டும். அதுதான் அவர்
நிபந்தனை. அதற்கு உடன்பட்டு, அவர் கொடுத்த புத்தகங்களையெல்லாம் படித்தேன்.
என் ஆசிரியர்கள் வீட்டுக்குச் சென்று புத்தகங்களை
வாங்கிவந்து படித்ததும் உண்டு.
குழந்தைகளுக்காகவே அந்தக் காலத்தில் வெளிவந்த டமாரம், கண்ணன், பாலர் மலர்,
கரும்பு, தம்பி புத்தகங்களையெல்லாம் கட்டுக்கட்டாக அவர் பைண்டிங் செய்து
வைத்திருந்தார். அவற்றையெல்லாம் படிப்பதற்காக எனக்குக் கொடுத்தார். அவரிடமிருந்தே
பிற்காலத்தில் பஞ்சதந்திரக்கதைகள், ஈசாப் கதைகள், சித்திர ராமாயணம், ஆலிஸின்
அற்புத உலகம், டாம் சாயரின் அனுபவங்கள் போன்ற புத்தகங்களை வாங்கிப் படித்தேன்.
பிறகு துப்பறியும் கதைகளையும் அம்புலிமாமா கதைகளையும் படக்கதைகளையும்
தேடியெடுத்துப் படித்தேன். பள்ளியிறுதித்தேர்வை எழுதிவிட்டு விடுமுறையில் இருந்த
காலத்தில் என் நண்பனொருவனின் அக்காவிடமிருந்து பொன்னியின் செல்வன் ஐந்து
பாகங்களையும் வாங்கி வந்து படித்தேன்.
எங்கள் வீட்டுக்குப் பக்கத்துவிட்டில் ஒரு அக்கா
இருந்தார். பள்ளியிறுதி வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார். ஒவ்வொரு வாரமும் அவருக்காக வாராந்திரிகளை
கடையிலிருந்து வாங்கிவந்து கொடுப்பேன். அவற்றையெல்லாம் அவர் படித்துமுடித்த பிறகு எனக்கும்
படிக்கக் கொடுப்பார். ஒருநாள் திடீரென அவருக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது.
அப்போது அவர் அதுவரை படித்துச் சேர்த்துவைத்திருந்த புத்தகங்களையும் இதழ்களையும்
ஒரு கட்டாகக் கட்டி கடையில் போட்டுவிட்டு வருமாறு கூறினார். தேவைப்படுகிற
புத்தகங்களை அந்தக் கட்டிலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறினார். நான்
அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று பிரித்து எனக்குப் பிடித்தவற்றை தனியாக
எடுத்துவைத்துக்கொண்டு எஞ்சியவற்றை மட்டும் கட்டி கடையில் போட்டுவிட்டு பணம்
வாங்கிவந்து கொடுத்துவிட்டேன். அப்போதுதான் கு.அழகிரிசாமியின் ‘ராஜா
வந்திருக்கிறார்’ தொகுப்பையும் ஜெயகாந்தனின் ‘ஒரு பிடி சோறு’ தொகுப்பையும்
படித்தேன். அதுவரை நான் படித்த கதைகளின் தன்மையிலிருந்து அந்தக் கதைகள் முற்றிலும்
வேறுபட்டிருந்தன. என் வாசிப்புப்பயணத்தில் அது ஒரு திருப்புமுனையான தருணம்.
ஒருநாள் அப்புத்தகங்களை நூலகத்துக்கு எடுத்துச் சென்று அந்த அண்ணனிடம் காட்டி
அதேபோன்ற புத்தகங்களை படிப்பதற்குக் கொடுக்குமாறு கேட்டு வாங்கிப் படித்தேன்.
வல்லினம்: மரபுக்கவிதையில் உங்கள் எழுத்துப்பயணத்தைத் தொடங்கிய நீங்கள், அதை ஏன் தொடரவில்லை? எழுதியவரை ஏதும் நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளதா?
பாவண்ணன்: பள்ளியில் எனக்குத்
தமிழ்ப்பாடம் நடத்திய கண்ணன், ராதாகிருஷ்ணன், சாம்பசிவன் போன்ற ஆசிரியர்கள்
பாடங்களை நடத்திய விதம்தான் எனக்கு மரபுக்கவிதையில் ஆர்வம் பிறக்கக் காரணமாக
இருந்தது. பாரதியாரையும் பாரதிதாசனையும் படிக்கத் தொடங்கியதற்கு அவர்களே
தூண்டுகோல். கல்லூரியில் படிக்கவந்தபோது எனக்குத் தமிழாசிரியராக இருந்தவர்
ம.இலெ.தங்கப்பா. பெரிய இயற்கைப்பாவலர். அவருடைய அறிமுகம் சங்க இலக்கியநூல்களையும்
ராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களையும் படிக்கவேண்டும் என்கிற உந்துதலைக்
கொடுத்தது. மரபுவடிவமும் பாடல் உருவாகும் விதமும் பிடிபடத் தொடங்கியதும் நானே
சொந்தமாகப் பாடல்களை எழுதினேன். என் ஆசிரியர் தங்கப்பா அவற்றையெல்லாம் பொறுமையாகப்
படித்து செம்மைப்படுத்த ஆலோசனைகள் சொல்வார். கணக்கில்லாத மரபுக்கவிதைகளை அப்போது
எழுதினேன். ஆயிரம் இரண்டாயிரம் வரிகளைக் கொண்ட நீளமான குறுங்காவியங்களை எழுதினேன்.
அப்போது மரபுக்கவிதைகளோடு வெளிவந்த இதழ்கள் எல்லாவற்றிலும் என் கவிதைகள்
வெளிவந்தன. கல்லூரியில் இறுதியாண்டு முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த
சமயத்தில் புதுவை அரசு சவரிராயலு நாயக்கர் நூற்றாண்டு நினைவை ஒட்டி ஒரு குறுங்காவியப்போட்டியை
அறிவித்தது. நான் அதற்காக பெண்மை போராடுகிறது என்னும் தலைப்பில் ஒரு
குறுங்காவியத்தை எழுதி அனுப்பினேன். அப்போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசு
கிடைத்தது. முதல் பரிசு பெற்ற காவியத்தையும் என்னுடைய காவியத்தையும் இணைத்து ஒரே
புத்தகமாக புதுச்சேரி அரசாங்கமே வெளியிட்டது. மூன்று நான்கு தொகுதிகள் வெளியிடும்
அளவுக்கு அப்போது என்னிடம் கவிதைகள் இருந்தன. ஆனால் புத்தகம் போடுவதெல்லாம் அந்தக்
காலத்தில் எளிதான செயலல்ல. அப்படியே விட்டுவிட்டேன். என் கவனமும் மெல்ல மெல்ல
மரபுக்கவிதை வடிவத்திலிருந்து புதுக்கவிதையை நோக்கி நகர்ந்துவிட்டது. சிறுகதைகளே
என் செல்திசை என என் மனம் உணர்ந்து செயல்படத் தொடங்கிய பிறகு, புதுக்கவிதை முயற்சிகளை சற்றே
குறைத்துக்கொண்டேன். ஆனால் நிறுத்தியதில்லை. அது இன்றளவும் என் பிரியத்துக்குரிய
இன்னொரு களனாகவே இருந்துவருகிறது.
வல்லினம்: மரபுக்கவிதையில் தொடங்கியதால்தான் பாஸ்கரன் என்ற பெயரை பாவண்ணன் என மாற்றிக்கொண்டீர்களா?
பாவண்ணன்: இல்லை. தொடக்கத்தில் என்
சொந்தப் பெயரிலேயே நான் எழுதிவந்தேன். அப்போது புதுச்சேரியில் எழிலேந்தி என்கிற நண்பர்
இலக்கியக்கூடல் என்னும் பெயரில் ஓர் இலக்கிய அமைப்பை உருவாக்கி மாதம்தோறும் ஒரு
கூட்டம் நடத்தி வந்தார். அதையொட்டி ஒரு கவிதைப்போட்டியை அவர் அறிவித்தார். நான்
அப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். தங்கப்பா வழியாக போட்டியைப்பற்றிய
செய்தியை அறிந்துகொண்டதும் நான் அப்போட்டிக்காக ஒரு கவிதையை எழுதி அனுப்பிவைத்தேன்.
முதல் கூட்டம் நடைபெறும் தருணத்தில் போட்டியின் முடிவு அறிவிக்கப்படும் என்று
அறிவித்திருந்தார்கள். முடிவைத் தெரிந்துகொள்வதற்காக நான் அந்தக் கூட்டத்துக்குச்
சென்றிருந்தேன். புதுவையைச் சேர்ந்த இலக்கண வல்லுநரும் அறிஞருமான திருமுருகனார்
என்பவர்தான் போட்டிக்கு நடுவராகச் செயல்பட்டவர். போட்டிக்காக வந்திருந்த
ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளின் பொதுப்போக்கு பற்றி சிறிது நேரம் உரையாடிவிட்டு
அவர் தமக்கு மிகவும் பிடித்த கவிதைகள் என ஐந்து கவிதைகளைக் குறிப்பிட்டார்.
அவற்றில் மிகமிகப் பிடித்தது என அவர் என் கவிதையைக் குறிப்பிட்டு அதைப் படித்துக்
காட்டிய பிறகு, இதுவே முதல் பரிசுக்குரிய கவிதை என்று அறிவித்தார். அந்தக்
கூட்டத்தில் ஒருவனாக அமர்ந்திருந்த எனக்கு வானத்திலேறிப் பறப்பதுபோல இருந்தது.
பெயரை அறிவித்ததும் எழுந்து சென்று பரிசாகக் கொடுக்கப்பட்ட புத்தகங்களைப்
பெற்றுக்கொண்டு திரும்பி வந்துவிட்டேன். கூட்டத்தில் அமர்ந்திருந்த பலரும் என்னை
வாழ்த்தி கைகுலுக்கிப் பாராட்டினர். அனைவரும் கலைந்துசென்ற பிறகு ஒரு பெரியவர்
எனக்கு அருகில் வந்து மெல்லிய குரலில் பாடலில் அவர் கண்டடைந்த நயத்தைச்
சுட்டிக்காட்டிப் பாராட்டினார். அதன் தொடர்ச்சியாக நீங்கள் ஏன் நல்லதொரு
புனைபெயரில் எழுதக்கூடாது என்று கேட்டார். நான் அதைப்பற்றியெல்லாம் யோசித்ததே
இல்லை. நீங்களே ஒரு பெயர் சொல்லுங்கள், இனி அப்பெயரிலேயே எழுதுகிறேன் என்று
அவரிடம் சொன்னார். அவர் ஒரு கணம் யோசித்த பிறகு அழகாகப் பாட்டு எழுதுகிறீர்கள்,
பாவண்ணன் என்னும் பெயரில் எழுதுங்கள். பொருத்தமாக இருக்கும் என்று சொன்னார்.
எனக்கும் அந்தப் பெயர் பிடித்திருந்தது. அப்படியே செய்கிறேன் என்று அவரிடம் அன்று
தெரிவித்தேன். அடுத்தநாள் முதல் நான் எழுதிய கவிதைகளையெல்லாம் அந்தப் பெயரில்தான்
எழுதினேன். எனக்கு அருகில் வந்து எனக்குப் பெயரை ஆலோசனை வழங்கிய பெரியவர் யார்
என்றே எனக்குத் தெரியாது. அதற்கு முன்பு அவரை நான் பார்த்ததே இல்லை.
இலக்கியக்கூடல் நிகழ்ச்சியில் அதற்குப் பிறகும் பார்க்கவில்லை. அவர் முகம் கூட
எனக்கு மறந்துவிட்டது. அந்தப் பெயரை எழுதும் ஒவ்வொரு முறையும் முகமறியாத அம்மனிதரை
ஒருகணம் நினைத்துக்கொள்கிறேன்.
வல்லினம்: பொதுவாகக்
கவிதை என இந்த நேர்காணலில் நீங்கள் குறிப்பிடுவது மரபுக்கவிதையையா? அல்லது
புதுக்கவிதையும் எழுதியுள்ளீர்களா?
பாவண்ணன்: கல்லூரியில்
படித்து முடிக்கும் காலம் வரைக்கும் மரபுக்கவிதைகளைத்தான் எழுதி வந்தேன்.
சிறுபத்திரிகைகளின் அறிமுகம் கிடைத்த பிறகு புதுக்கவிதையின் அறிமுகம் கிடைத்தது. பாரதியாரின்
வசன கவிதைகளின் மீது பெரிய அளவில் நாட்டம் கொண்டிருந்தேன். பிதற்றலைப்போன்ற
தோற்றத்தில் காணப்படும் அவ்வரிகளுக்கு அடியில் தெரிந்த காட்சிச்சித்திரங்கள்
அளித்த அனுபவம் மகத்தானது. கச்சிதமான எதுகைகளும் மோனைகளும் பொருந்திவந்த பாட்டைவிட
கூடுதலான மன எழுச்சியை அவ்வரிகள் அளித்தன. அதன் தொடர்ச்சியாக அப்துல் ரகுமான்,
மீரா, இன்குலாப் போன்றோரின் கவிதைத்தொகுதிகளைப் படித்தேன். கருத்துகளை
முன்வைக்கும் கவிதைகளைவிட, அனுபவங்களை முன்வைக்கும் கவிதைகளை கூடுதலாக மதித்தேன். பிறகு,
என் தேடலின் விளைவாக பசுவய்யா, விக்கிரமாதித்யன், கலாப்ரியா, கல்யாண்ஜி,
தேவதச்சன், தேவதேவன் போன்றோரின் கவிதைகளைத்
தேடி வாசித்தேன். அவர்கள் எழுதிய கவிதைகள் எந்தப் பத்திரிகையில் வெளிவந்தாலும்
அவற்றை ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்துக்கொண்டு அடிக்கடி பிரித்துப்
படித்தபடி இருப்பேன். அவற்றின் தொடர்ச்சியாக நானும் புதுக்கவிதைகளை எழுதத்
தொடங்கினேன். சிறுகதைகளை எழுதத் தொடங்கிய சமயத்திலேயே புதுக்கவிதைகளையும் எழுதி
வந்தேன். ’வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ என்கிற என்னுடைய முதல் சிறுகதைத்தொகுதி
1987இல் வெளிவந்தது. ஆனால் என்னுடைய முதல் கவிதைத்தொகுதி ’குழந்தையைப் பின்தொடரும்
காலம்’ 1997இல்தான் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ‘கனவில் வந்த சிறுமி’ என்னும்
தொகுதி 2006இலும் ‘புன்னகையின் வெளிச்சம்’ என்னும் தொகுதி 2007இலும் வெளிவந்தன.
இன்றும் தொடர்ந்து கவிதைகளை எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். கவிதை வாசிப்பும்
கவிதை எழுதுவதும் என்னைக் கூர்மைப்படுத்த உதவும் பயிற்சிகள்.
வல்லினம்: மரபுக்கவிதையில் இருந்து உரைநடக்குத் தாவிய அந்தக் காலக்கட்டத்தை நினைவு கூற முடியுமா?
பாவண்ணன்: மரபுக்கவிதையை ஓர்
எழுத்துவழியாக நான் பின்பற்றி இயங்கி வந்த காலத்திலேயே , அதற்கு இணையாக
புனைகதைகளையும் நாவல்களையும் வாசித்துக்கொண்டுதான் இருந்தேன். பள்ளிக்கூட
காலத்திலிருந்தே தொடங்கிவிட்ட கதை வாசிப்புதான் அதற்குக் காரணம். கதை வடிவத்தின் மீது இனம் தெரியாத ஈர்ப்பும்
இருந்தது. எங்கள் கல்லூரி நூலகத்தில் தீபம், கணையாழி, செம்மலர், தாமரை போன்ற
இலக்கிய இதழ்கள் கிடைக்கும். அவையனைத்தும் அந்தப் பருவத்திலேயே எனக்கு அறிமுகமாகி
இருந்தன. இதற்கு நடுவில் கர்நாடக மாநிலத்தின் சார்பாக இளநிலை பொறியாளராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்குரிய ஓராண்டு பயிற்சியைப் பெறுவதற்காக ஐதராபாத்
சென்றிருந்தேன். என் குடும்பத்தில் அது
ஒரு கடுமையான காலகட்டம். எங்கள் அப்பா உடல்நலம் குன்றியிருந்தார். வருமானம்
போதுமானதாக இல்லை. இரண்டு தம்பியரும் இரண்டு தங்கையரும் படித்துக்கொண்டிருந்தனர்.
குடும்பத்தை நடத்தமுடியாமல் அம்மா சிரமத்தில் மூழ்கியிருந்தார். கடுமையான மன
உளைச்சலில் தவித்தேன். எனக்குக் கிடைக்கும் உதவித்தொகையில் ஓரளவு சாப்பிடுவதற்குத்
தேவையான தொகையை மட்டும் வைத்துக்கொண்டு எஞ்சியதை வீட்டுக்கு அனுப்பிவந்தேன்.
ஒருநாள் இரவு சாப்பிடுவதற்கு என்னிடம் பணமில்லை. கொஞ்சம்
சில்லறைகள் மட்டுமே இருந்தன. நண்பர்களிடம் சாப்பிடச் செல்வதாகச் சொல்லிவிட்டு
அறையைவிட்டு வெளியே சென்றேன். நெடுந்தூரம் நடந்துசென்று இருந்த சில்லறைக்கு
நாலைந்து வாழைப்பழங்கள் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் அருந்தினேன். அதுவரை
இரைச்சலிட்ட வயிறு மெல்ல மெல்ல அடங்கியது. மெதுவாக நடந்து அறைக்குத் திரும்பினேன்.
சிலர் உறங்குவதற்கு தயார் செய்துகொண்டிருந்தனர். சிலர் தேர்வுக்குப்
படித்துக்கொண்டிருந்தனர். என் மனத்திலோ ஏராளமான துன்பக்காட்சிகள் மூச்சுவிட
முடியாதபடி பெரும்பாரமாக நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்தன. எப்படியாவது அவற்றைக் கொட்டி
இறக்கிவிட வேண்டும் என்று தோன்றியது. எழுத்து ஒன்றே என் புகலிடம். மின்னலடித்ததுபோல,
துன்பத்தை எழுதிக் கடப்பது தொடர்பாக கார்க்கியின் புத்தகத்தில் எங்கோ படித்த
நினைவு வந்தது. கார்க்கியால் எழுதிக் கடக்கமுடியும் என்றால் என்னாலும் என்
துக்கத்தை எழுதிக் கடக்கமுடியும் என்று நம்பினேன். ஆனால் நான் அதுவரை பழகிவந்த
கவிதை வடிவம் அதற்கு உகந்ததல்ல என்பது எனக்குப் புரிந்தது. சிறுகதை வடிவமே
அதற்குப் பொருத்தமான வழி என்றும் தோன்றியது. எழுதுவதற்குரிய காட்சிகள் ஏராளமாக
நெஞ்சில் முட்டிமுட்டி மோதிக்கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் என்னை எழுது என்னை எழுது
என்று உந்தி எழுந்தன. அந்தக் கணத்தில் நான் இளநிலை பொறியாளர் பதவிக்கான நேர்காணலுக்காக
பெங்களூரில் இருந்த தலைமை அலுவலகத்துக்குச் சென்றுவந்த அனுபவம் மனத்திரையில்
மின்னியது. உடனே அதை எழுத முடிவெடுத்தேன்.
எந்தப் புள்ளியில் தொடங்கவேண்டும்,
எதைஎதையெல்லாம் அடுக்கடுக்காகச் சொல்லவேண்டும் என்பதெல்லாம் காட்சிவெளியாகத்
தெரிந்தன. அந்த நிமிடத்திலேயே எழுதத் தொடங்கிவிட்டேன். அப்போது இரவு பத்தரை மணி.
அறைக்கு வெளியே கூடத்து விளக்கு வெளிச்சத்தில் உட்கார்ந்து எழுதினேன். மறுநாள்
அதிகாலை ஐந்து மணி வரைக்கும் நிறுத்தாமல் எழுதி அந்தக் கதையை எழுதி முடித்தேன்.
அக்கணத்தில் என் மனம் ஒரு தாளைப்போல எடையற்று லேசாக இருப்பதை உணர்ந்தேன்.
பறப்பதுபோலத் தோன்றியது. என்னையறியாமல் புன்னகைத்தேன். நான் எழுதியது ஒரு
துன்பியல் கதை. ஆனால் ஒரு துன்பத்தை இறக்கிவைத்த மனநிறைவில் மகிழ்ச்சி பிறப்பதை
முதன்முதலாக உணர்ந்தேன். துன்பத்தை எழுதிக் கடக்கும் கார்க்கியின் வரிகளில் பொதிந்திருக்கும்
உண்மையை நேரிடையாகவே உணர்ந்தேன். இன்னும் விடியாத வானத்தையும் மங்கத் தொடங்கிய
விண்மீன்களையும் சிறுசிறு மேகங்களையும் பார்த்தேன். என் மடிமீது ஒரு குழந்தைபோல
கிடந்த தாள்களையே மீண்டும் மீண்டும் பார்த்தேன். என் மனம் மகிழ்ச்சியில்
விம்மியது. இனி என் வாழ்வில் துக்கமில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அதற்குள்
அறைக்குள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நண்பர்கள் அதிகாலையில் படிப்பதற்காக
ஒவ்வொருவராக எழுந்து வெளியே வந்தனர். “என்னடா செய்யற இங்க?” என்று கேட்டனர். நான்
என் கையிலிருந்த கதைப்பிரதியைக் காட்டினேன். அவர்கள் புன்னகைத்தபடியே “சரி சரி,
வா, டீ சாப்ட்டுட்டு வரலாம்” என்று என்னையும் தன்னோடு அழைத்துச் சென்றனர்.
இப்படித்தான் என் முதல் சிறுகதையை எழுதிமுடித்தேன்.
வல்லினம்: 'நான் இலக்கியவாதிதான்' என நீங்கள் மெய்யான ஒரு பயணத்தை மேற்கொண்டது எந்த ஆண்டு? அப்போது உங்கள் வயது என்ன? தமிழ் இலக்கியத்தில் அச்சமயம் யாரெல்லாம் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தனர்?
பாவண்ணன்: என் முதல் சிறுகதையை
எழுதிமுடித்த கணத்திலேயே நான் என்னை ஓர் எழுத்தாளனாக உணர்ந்துவிட்டேன். அது
1982ஆம் ஆண்டு. என் பாதை எனக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. என் முதல் சிறுகதையைத் தீபம் இதழுக்கு
அனுப்பிவைத்தேன். ஒரு மாதம் காத்திருந்தேன். பிரசுரமாகவில்லை. உடனே தீபத்துக்கு
இன்னொரு புதிய சிறுகதையை அனுப்பிவைத்தேன். அது பிரசுரமானது. என் பயணம் தொடங்கிவிட்டது
என்பதை நான் உணர்ந்தேன். அப்போது நான் 24வது வயதில் இருந்தேன். எழுபதுகளில் எழுதத்
தொடங்கி தம்மை உறுதியாக நிறுவிக்கொண்ட முன்னணி எழுத்தாளர்கள் வண்ணதாசன்,
வண்ணநிலவன், பூமணி, பிரபஞ்சன், கந்தர்வன், நாஞ்சில்நாடன் போன்ற ஆளுமைகளும்
என்னைவிட சற்றே வயதில் மூத்த கோணங்கி, சுப்ரபாரதிமணியன், சங்கரநாராயணன்,
இரா.முருகன் போன்றோரும் எழுதிக்கொண்டிருந்தனர்.
வல்லினம்: பக்கத்து வீட்டு அக்காவின் பழைய புத்தகங்களில் இருந்துதான்
ஜெயகாந்தனையும் கு. அழகிரிசாமியையும் கண்டடைந்ததாகக் கூறினீர்கள்.
அதேபோல உங்கள் சிறுகதை உலகத்தை அடையாளம் காண உதவியவர்கள் இவர்கள் இருவரும்தான் என ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளீர்கள். அது குறித்து கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்கள்?
பாவண்ணன்: அழகிரிசாமியின்
சிறுகதைகளிலும் ஜெயகாந்தன் சிறுகதைகளிலும் காணக் கிடைத்த மனிதர்களில் பலர்,
கதைகளுக்காக உருவாக்கப்பட்ட கற்பனை மனிதர்களல்லர் என்பதையும் நம்மைச் சுற்றி
வாழ்கிற உண்மையான மனிதர்களே என்பதையும் அவர்களுடைய வாழ்வின் ஒரு தருணத்தைக்
கண்டெடுத்து அவ்விருவரும் கதைகளாக எழுதியிருக்கிறார்கள் என்பதையும் நான்
கொஞ்சம்கொஞ்சமாகப் புரிந்துகொண்டேன். என்னுடைய நிஜவாழ்க்கையில் என்னைச் சுற்றி
வாழும் மனிதர்களில் பலர் அழகிரிசாமியும் ஜெயகாந்தனும் தீட்டிக் காட்டிய கதைமாந்தர்களின் சாயலோடு இருப்பதை என்னால்
புரிந்துகொள்ள முடிந்தது. அவர்களுடைய வாழ்வில் புதைந்திருக்கும் கதைகளைக் கண்டடைய
அந்த முன்னோடிகளின் ஆக்கங்களும் அவர்களின் வழிமுறையும் துணையாக இருக்கும் என்று நம்பிக்கை பிறந்தது.
அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. புதுமைப்பித்தனையும் மெளனியையும் விட இவ்விருவரும்
படைத்திருக்கும் கதைப்பாத்திரங்களில் என்னால் மிக எளிதாக ஒன்றிப் போக முடிந்தது. அவர்களின் வழியாக மானுட குலத்தின் தீராத
துக்கத்தையும் அழியாத உண்மையையும் கண்டறியும் பயணத்தை எழுத்து வழியாக
நிகழ்த்தமுடியும் என்றொரு நம்பிக்கை பிறந்தது. இன்று வரையில் அந்தப் பாதையில் என்
பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
வல்லினம்: உங்களின் சிறுகதைகளை வாசிக்கும்போது
சில சமயம் கு.அழகிரிசாமியின் நினைவு வருகிறது. யதார்த்தமான ஒரு சூழலில் நிகழும்
அசாதாரணமான தருணங்களாக அவை பதிவாகி பெரும் தாக்கத்தை நிகழ்த்துகின்றன. உங்கள் கதைகளில் வரும் மனிதர்களோடு உங்கள் கதைச் சொல்லலின் அழகியலையும்
கு. அழகிரிசாமியிடம் பெற்றீர்கள் எனச் சொல்லலாமா?
பாவண்ணன்: நாம் வாழும் உலகத்தில்
ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மனிதர்களைப் பார்க்கிறோம். ஆயிரக்கணக்கான
தருணங்களைக் கடந்துவருகிறோம். ஆனால் எல்லா மனிதர்களையும் அல்லது எல்லாத்
தருணங்களையும் நாம் ஒரு சிறுகதையாக வடிவமைக்க முயல்வதில்லை. நாம் முன்வைக்க
நினைக்கும் மனிதர் என ஒருசிலரே இருப்பார்கள். அல்லது நாம் முன்வைக்க நினைக்கும்
தருணம் என ஒருசில தருணங்கள் மட்டுமே இருக்கும். இந்தத் தேர்வின் பின்னணியில் நம்
மனம் ஒரு சல்லடையாக செயல்படுகிறது. எல்லோருடைய மனத்திலும் ஒரு சல்லடை இருக்கும்.
ஒவ்வொருவரும் தத்தம் வாழ்வனுபவத்துக்கும் எண்ணப்போக்குக்கும் உகந்த வகையில் ஒரு
சல்லடையை உருவாக்கி வைத்துக்கொள்கிறார்கள்.
ஆரம்பக் காலத்தில், எனக்கு உகந்த சல்லடையை நான் உருவாக்கிக்கொள்ள எனக்கு
உதவியவர்கள் அழகிரிசாமியும் ஜெயகாந்தனும். என் எழுத்துக்கான அழகியலின்
தொடக்கப்புள்ளியாகவும் அவர்கள் இருந்தனர். என் வாசிப்பு பெருகப்பெருக,
புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், தி.ஜானகிராமன்,
ஆ.மாதவன், வண்ணதாசன், வண்ணநிலவன், பிரபஞ்சன் போன்ற பல மூத்த
படைப்பாளிகளிடமிருந்தும் அழகியல் கலையை அறிந்துகொண்டேன். ரஷ்ய எழுத்தாளர்கள்
தல்ஸ்தோய், தஸ்தாவெஸ்கி, கார்க்கி, செகாவ், குப்ரின், புஷ்கின், துர்கனேவ் என நான்
நன்றி சொல்லவேண்டிய எழுத்தாளர்களின் பட்டியல் மிகவும் நீண்டது. அழகியல் கலையை
அறிந்துமுடிந்த ஒன்றாக ஒருபோதும் சொல்லவே முடியாது. அறிதோறும் அறிதோறும்
அறியாமையையே அதிக அளவில் உணர்த்தும் கலை அழகியல் கலை. அதன் அனுபவத்தை
விரிவாக்கிக்கொள்ள இன்னும் நான் பயிற்சி செய்தபடியே இருக்கிறேன்.
(தொடரும் )