24.12.2024
அன்புள்ள நண்பருக்கு
வணக்கம். நலம்தானே? வளவனூருக்குத்
திரும்பிவிட்டேன். இன்னும் சில நாட்கள் இங்குதான் இருக்கவேண்டும்.
21, 22 இருநாள் விழா நிகழ்ச்சிகளும் கனவுக்காட்சிகளைப்போல நினைவில் மிதந்தபடி இருக்கின்றன.
பிடித்த பாடல்களையும் நயங்களையும் திண்ணையிலும் கூடத்திலும் மரத்தடியிலும் உட்கார்ந்து பேசிப்பேசி இலக்கியத்தை வளர்த்து அடுத்த தலைமுறையிடம் கையளித்துவிட்டுச் சென்றவர்கள் டி.கே.சி. காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். அது ஒரு காலம். அடுத்த காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிற்றரங்குகளில் பேசியும் சிறுபத்திரிகைகளில் எழுதியும் இலக்கியத்தை முன்னோக்கிச் செலுத்தினார்கள். இன்றும் இலக்கியத்தைப் பற்றிப் பேச அரங்குகள் தேவைப்படுகின்றன. இணையம் என்னும் தொலை தொடர்புச்சாதன வசதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கொடை. உண்மையிலேயே அது அனைவரையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவந்துவிட்டது. இலக்கியச்சந்திப்புகளுக்கு அது இருவகைகளில் உதவியாக இருக்கின்றது. இணையவழி உரையாடல் ஒருவழி. ஒருங்கிணைந்த நட்பின் விளைவாக பல்வேறு வட்டாரங்களில் வெவ்வேறு நேரடி நிகழ்ச்சிகளை நடத்தி உரையாடலைச் சாத்தியப்படுத்துவது இன்னொரு வழி. இந்த நவீன வழிகளில் இலக்கியச் செயல்பாடுகள் நிகழும் விதத்தைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக விழாவின் முதல் அமர்வு அமைக்கப்பட்டிருந்தது பொருத்தமாகவே இருந்தது. இவ்விரு வழிகளிலும் இன்று முன்னணியில் நிற்கும் மந்திரமூர்த்தி அழகும் வாசகசாலை கார்த்திகேயனும் தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். இச்செயல்பாடுகளுக்காகவே தம்மை ஒப்புக் கொடுத்தவர்களாக அவர்களுடைய பதில்கள் அமைந்திருந்தன. பார்வையாளர்களிடமிருந்து எழுந்த கேள்விகளுக்கு இருவருமே பொருத்தமான பதில்களைச் சொன்னார்கள்.
இளம் எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பன்
“ஒருநாள் லீவ் சொல்லிட்டுத்தான் இங்க வந்திருக்கேன். நான் எழுத்தாளன்னு என்கூட வேலை
செய்யறவங்களுக்குத் தெரியாது” என்று புன்னகையோடு சொன்னபோது நான் என்னையே நினைத்துக்கொண்டேன்.
அந்தக் கால இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இதேபோல விதவிதமான காரணங்களைச் சொல்லி
விடுப்பெடுத்துக்கொண்டு வந்த பழைய நினைவுகள் அலைமோதின. அன்றும் இன்றும் மாறாத நிலைமை
அது. குடும்ப அமைப்பிலிருந்து பிரிந்துசெல்ல நினைக்கும் மணமக்கள் தம் விவாகரத்தை பொது
அறிவிப்பாக உலகத்துக்குத் தெரிவித்து, அதை ஒரு செய்தியாக மாற்றிவிட்டுச் செல்லும் விசித்திரமான
போக்கை நிகழ்காலத்தில் ஏற்பட்டிருக்கும் முக்கியமான மாற்றமென அவர் சுட்டிக்காட்டியதை
திகைப்புடன் மனத்தில் குறித்துக்கொண்டேன். சமீபத்தில் நான் அறிந்த பல மணவிலக்கு தொடர்பான
செய்திகளை வேகவேகமாக அசைபோட்டபோது, அவருடைய கூற்றின் பொருத்தத்தை உணர்ந்தேன். தற்சமயம்
குற்றங்கள் பெருகியிருந்தாலும் மாறவில்லை என்றும் நீதிகளும் மாறவில்லை என்றும் அறமதிப்பீடுகள்
அப்படியேதான் இருக்கின்றன என்னும் சொற்கள் அவருடைய உரையாடலின் போக்கில் இயல்பாகவே வந்து
விழுந்த விதம் சிறப்பாக இருந்தது. அவரைத் தனியாகச் சந்தித்து சிறிது நேரம் பேசவேண்டும் என நினைத்திருந்தேன்.
சரியான வாய்ப்பு அமையாமல் போய்விட்டது. அடுத்த சந்திப்பில் பேசவேண்டும்.
கவிதை எழுதுவது மொழிபெயர்ப்புக்கு
உதவுகிறது என்னும் குறிப்போடு உரையாடத் தொடங்கிய கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான தென்றல்
சிவக்குமார் தான் ஈடுபட்டிருக்கும் பணிகளைப்பற்றி சிறப்பாகவே குறிப்பிட்டார். மொழிபெயர்க்கும்போது
மூலப்பிரதியில் இருப்பதை வரிக்கு வரி செய்யவேண்டும். ஆனால் வரியைப் படித்ததுமே செய்துவிடக்
கூடாது என்று சொன்ன வாசகம் அவருடைய அனுபவத்துக்குச் சான்றாக விளங்குகிறது.
சித்தமருத்துவரும் சிறுகதை எழுத்தாளருமான
சித்ரன் தன் அமர்வு முழுதும் தன்னம்பிக்கையோடு பேசினார். பார்வையாளர்கள் கேட்ட எல்லாக் கேள்விகளையும் இயல்பாக
எதிர்கொண்டு பதில் சொன்னார். அவருடைய ஒவ்வொரு சொல்லும் தன் படைப்புப்பாணியின் மீது
அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை உணர்த்துவதாக
இருந்தது. மாயத்தன்மை என்பது இன்றைய இலக்கியப்பரப்பில் புதிதாக வந்து ஒட்டிக்கொண்ட
ஒன்றல்ல என்றும், தமிழிலக்கியப்பரப்பில் தொன்றுதொட்டு நீடிக்கும் ஒரு குணமே என்றும்
அழுத்தம்திருத்தமாகச் சொன்னார். பாரதியார் தொடங்கி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன் காலம் வரையிலான ஒரு சிறிய காலகட்டத்தை மட்டும் கழித்துவிட்டு,
எஞ்சியிருக்கும் தமிழிலக்கிய காலகட்டத்தைத் தொகுத்து மதிப்பிட்டால் இலக்கியப்பரப்பு
முழுவதிலும் மாயத்தன்மையைக் காணலாம் என்று தன் தரப்புக்கான உண்மையையும் தெரிவித்தார். அதை ஒரு புதிய கண்டுபிடிப்பாகவே நான் உணர்ந்தேன்.
சிறுகதையாசிரியரும் நாவலாசிரியருமான
லாவண்யா சுந்தரராஜன் தம் படைப்பனுபவங்களை அழகாகப் பகிர்ந்துகொண்டார். அவருடைய சிறுகதைகளைப்பற்றிய
கேள்விகளைவிட, குழந்தையின்மையைப்பற்றிய விவாதக்களமாக
விளங்கும் அவருடைய காயாம்பூ என்னும் நாவலைப்பற்றிய கேள்விகளே அதிக அளவில் எழுந்தன.
குழந்தையின்மை சார்ந்த மன அழுத்தம் பெண்களுக்கு இருப்பதைவிட ஆண்களுக்கு அதிகம் என்றும்
பல சமயங்களில் அது தற்கொலை வரைக்கும் கூட அவர்களைச் செலுத்திவிடும் என்றும் தெரிவித்தார் அவர். கெடுவாய்ப்பாக, எழுத்துலகம்
பெண்கள் எதிர்கொள்ளும் சங்கடங்களை மட்டுமே முன்வைக்கிறதே தவிர, ஆண்கள் எதிர்கொள்ளும்
சங்கடங்களை மெளனமாகக் கடந்துவிடுகிறது என்றும் அவர் தெரிவித்தார். இரு வடிவங்களில் அவருடைய நாவல் வெளிவந்திருப்பதை
ஒரு புதுமை என்றே சொல்லவேண்டும்.
கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான
கயல் பார்வையாளர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் நட்பார்ந்த தன்மையுடன் இயல்பாக பதில்களைச்
சொல்லிக்கொண்டே சென்றார். ஒரு வாசகர் கயல் எழுதிய ஆரண்யம் என்னும் கவிதைத்தொகுதியில்
வழக்கமாக ஒரு காட்டுக்கே உரிய எந்த விலங்கும் இடம்பெறாமல் இருப்பதற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு கயல் சொன்ன பதிலை அவையினர்
அனைவருமே கைத்தட்டல்களோடு வரவேற்றனர். தான்
தமிழகத்திலேயே அதிகமாக வெயில் அடிக்கக்கூடிய வேலூர்ப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும்
தன் பகுதியில் தண்ணீரே இல்லாத பாலாறு ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் அங்கு ஒரு தொட்டியில்
கூட செடியை வளர்ப்பது சிரமமென்றும் கோடையின் கடுமையால் இலைகள் பழுத்து பட்டுப் போவதைத்
தவிர்க்கமுடியாது என்றும் அவர் தெரிவித்தார். எதார்த்தத்தின் கடுமையை மறப்பதற்கு தன்
நெஞ்சுக்குள் தானே ஒரு ஆரண்யத்தை உருவாக்கிக்கொண்டதாகவும் அந்தக் கற்பனை ஆரண்யத்தில்
விலங்குகளுக்கு இடமில்லை எனவும் மரங்களும் பறவைகளும் நீர்நிலைகளும் நிறைந்த குளிர்ந்த
இடமென்றும் அவர் தெரிவித்தார். அப்பதிலை பார்வையாளர்கள் கைத்தட்டி ரசித்தனர். அப்துல்
ரசாக் குரானா எழுதிய போரொழிந்த வாழ்வு நாவலையும் நவீன திபெத் கதைகளைக் கொண்ட பழைய துர்தேவதைகளும்
புதிய கடவுளரும் தொகுதியையும் முன்வைத்து வாசகர்கள் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும்
கயல் நகைச்சுவை உணர்வோடு சொன்ன பதில்கள் அனைத்துமே பிடித்திருந்தன.
இளம்நாவலாசிரியரான தமிழ்ப்பிரபாவின்
அமர்வில், அவருடைய எழுதிய பேட்டை, கோசலை நாவல்கள் குறித்து பல கோணங்களில் வாசகர்கள்
கேள்விகளை எழுப்பினர். எழுப்பப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் அவர் பொறுமையாகப் பதில்
சொன்னார். சென்னை நகரத்துக்கென தனித்துவமான இசை பற்றிய கேள்வி எழுந்தபோது ஒரு நூற்றாண்டுக்கு
முன்பு உருவான குஜிலி பாட்டுகள் அத்தகு தனித்துவத்தோடு எழுந்தவையே என்றும் கெடுவாய்ப்பாக
அது தொடராமல் போய்விட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். தற்சமயம் பாடப்பட்டுவரும் கானா
பாடல்கள் ஒரு புதியவகையான இசைமரபை உருவாக்கி வருகிறது என்றும் அவர் நம்பிக்கையோடு குறிப்பிட்டார்.
இரண்டாம் நாள் காலை அமர்வு எழுத்தாளர்
கீரனூர் ஜாகிர்ராஜாவோடு தொடங்கியது. எல்லா
இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் ஒரு தமிழ் எழுத்தாளராகவும் இந்திய எழுத்தாளராகவும்
மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். மதச்சாய்வு
மனநிலை அற்றவராகவே அவர் தன்னை ஒவ்வொரு பதிலிலும் முன்னிலைப்படுத்திக்கொண்டார். தன் எழுத்து முயற்சிகளில் தனக்கு எப்போதும் ஊக்கமூட்டுகிறவராக
வாழ்ந்துவரும் தன் துணைவியாரைப்பற்றி அவையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அனைவருடைய
கவனமும் ஜாகிர்ராஜா மீது குவிந்திருக்கும் தருணத்தில் பார்வையாளர்களிலிருந்து எழுந்த
ஒரு பெண்மணி “இதோ முடித்துவிடுவேன், இதோ முடித்துவிடுவேன்
என நீங்கள் பல கூட்டங்களில் சொல்லிவரும் நாவலை எப்போது முடிப்பதாக உத்தேசித்திருக்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வியைக் கேட்டார். கீரனூரால் உடனடியாக
அக்கேள்வியை எதிர்கொள்ள இயலவில்லை. அந்தக் கேள்வியைக் கேட்டவர் அவருடைய மனைவி. இப்படி
ஒரு நெருக்கடியை உருவாக்கி முற்றுப்பெறாத தன் நாவலை எழுதுவிக்க அவர் செய்யும் மறைமுக
முயற்சிதான் அந்தக் கேள்வியின் பின்னணி என பிறகு அவரே சொன்னார். இசைக்கும் நடனத்துக்கும்
கலைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் சூஃபி ஞான மரபுதான் தனக்குப் பிடித்த மரபென்றும்
அது ஒன்றே அடிப்படைவாதத்துக்கு மாற்றுமருந்தென்றும் அவர் குறிப்பிட்டார். ஒருசில பார்வையாளர்களின் கேள்விகள் மதம் சார்ந்த பார்வைகளுக்கான விளக்கங்களைக் கோருவதாக
இருந்தாலும், பெரும்பாலானவர்கள் தம் கேள்விகளை அவர் எழுதிய மீன்காரத்தெரு, கருத்த லெப்பை,
துருக்கித்தொப்பி, வடக்கேமுறி அலிமா முதலிய நாவல்களை ஒட்டியே கேட்டனர்.
அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த
இரா.முருகன் அமர்வு சிறப்பாகவே இருந்தது. அவருடைய நினைவுப்பிசகின் காரணமாக அவர் சொல்லமுன்வரும்
பதில்கள் சிற்சில தருணங்களில் அடிக்கடி நீண்டு போவதாக இருந்தாலும் சட்டென விலகி வேறொன்றைச்
சொல்வதாக இருந்தாலும், சொன்ன அனைத்தையும் அவர் சுவாரசியாகச் சொன்னார். சர்ரியலிசம்,
மேஜிக் ரியலிசம், ஃபேண்டசி அனைத்தையும் சரியான பக்குவத்தில் கலந்து எல்லாவற்றையும்
ஒன்றென ஆக்கிப் பார்க்க தன் மனம் விழைவதாகவும் தன் மொத்தப் படைப்புலகும் அப்படி உருவாக்கப்பட்டதுதான்
என்றும் அவர் ஒரு பதிலில் குறிப்பிட்டார். அவருடைய படைப்புகளின் பட்டியலைப் பார்க்கும்போது மலைப்பை ஏற்படுத்தியது. 72 வயதிலும் அவருடைய குன்றாத ஊக்கத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. அறிவார்ந்த
மென்பொருள் துறை சார்ந்த பல செய்திகளை புன்னகையோடு முன்வைக்க முடிந்ததை அவருடைய சாதனை
என்றே சொல்லவேண்டும். அவருடைய நாவலில் இடம்பெறும் கப்பல் துறைமுகக் காட்சிகள் மிகவும்
துல்லியமாக எழுதப்பட்டிருப்பதாகப் பாராட்டுணர்வோடு பேசிய ஒரு வாசகர், அவருக்கு அந்த
அனுபவம் எப்படிக் கிடைத்தது என்று ஆர்வத்தோடு கேட்டார். இரா.முருகன் புன்னகைத்தபடி
தனக்கு கப்பல் அனுபவமே கிடையாது என்றும் கப்பல்
தொடர்பான பல புத்தகங்களைப் படித்துத் தெரிந்துகொண்ட தகவல்களின் அடிப்படையிலேயே அனைத்தையும்
எழுதியதாகக் குறிப்பிட்டபோது வியப்பாகவே இருந்தது. அவருடைய ஈடுபாட்டின் அளவைப் புரிந்துகொள்ள
அது ஒன்றே போதுமாக இருந்தது. முதிய பருவத்தில்
இளம்பருவத்து அனுபவங்களை அவரால் எப்படி எழுத முடிகிறது என்னும் கேள்விக்கு அவர் தன்
மனம் பத்து வயது அனுபவங்கள் இன்னும் பல நிறைந்திருக்கின்றன, தான் இன்னும் அந்தப் பத்து
வயதிலேயே நிலைத்து நின்றிருப்பதாகவும் வளரவே இல்லை என்றும் 72 வயது என்பது வெறும் எண்தான்
என்றும் அவர் நகைச்சுவையோடு சொன்னபோது, வாசகர்களின் கைத்தட்டலால் அரங்கமே அதிர்ந்தது.
சிறப்பு விருந்தினரான விவேக் ஷான்பாக்
இவ்விழாவில் கலந்துகொள்வதற்காகவென்றே பெங்களூரிலிருந்து வந்திருந்தார். அவர் கன்னட மொழியில் எழுதி தமிழில் வெளிவந்த சிறுகதைகளையும்
காச்சர் கோச்சர், சகீனாவின் முத்தம், ஆகிய
நாவல்களையும் படித்துவிட்டு வந்திருந்த பார்வையாளர்கள் அவற்றையொட்டி அடுத்தடுத்து
கேள்விகளை எழுப்பி அவரை வியப்பில் ஆழ்த்தினர். ஒரு மாற்றுமொழியில் தான் இந்த அளவு தீவிரமாக
வாசிக்கப்பட்டிருப்பதை அறிந்து தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார் ஷான்பாக்.
ஒரு வாசகர் அவருடைய நாவல்களில் நிலம் பற்றிய விவரணைகளையே பார்க்கமுடியவில்லை என்பதைக்
குறிப்பிட்டு கேட்டபோது, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் நாவல்களில் நிலம் பற்றிய
விவரணைகளுக்கான தேவை இல்லை என்பதால் எழுதவில்லை என்றும் ’ஒருபக்கம் கடல்’ என்னும் மற்றொரு
நாவலில் அத்தகு விவரணைகள் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். வீடு என்பது கூட
ஒரு வகையில் நிலமே என்றும் வீட்டைப்பற்றிய குறிப்புகள் கூட நிலம்சார்ந்த குறிப்புகளுக்கு
இணையானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாலையில் அரங்கு நிறைந்த அவையில்
இரா.முருகனைப் பற்றி அகரமுதல்வன் இயக்கிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. ஒரு கூத்துக்கலைஞனின்
கூற்று வழியாக படம் விரிவடையும் விதம் அற்புதமான அனுபவமாக இருந்தது. கனவுகளைப்பற்றியும் மாயங்களைப்பற்றியும் விசித்திரங்களைப்பற்றியும்
ஏராளமாக எழுதி நிலைத்திருக்கும் இரா.முருகனைப்பற்றிய ஆவணப்படமும் ஒரு கனவுக்காட்சியைப்போல
மாயத்தன்மையோடு அமைந்திருந்தது. அகரமுதல்வனின் ஆற்றலைப் புரிந்துகொள்ள இந்தப் படம்
ஒரு நல்ல அடையாளமாக இருக்கும் என்று குறிப்பிடத் தோன்றுகிறது. நீலி இணைய இதழின் ஆசிரியரும்
நீலத்தாவணி சிறுகதைத்தொகுப்பை எழுதியவருமான இளம் எழுத்தாளர் இரம்யா, எம்.கோபாலகிருஷ்ணன்,
ஜெயமோகன் அனைவரும் இரா.முருகனின் படைப்புலகத்தை முன்வைத்து வெவ்வேறு கோணங்களில் தம்
ஆய்வுப்பார்வையைப் பகிர்ந்துகொண்டனர். சிறப்பு விருந்தினரான விவேக் ஷான்பாக் பூசலார்
நாயனார் புராணத்தை நினைவுபடுத்தி, தன் நெஞ்சிலேயே இறைவனுக்கு அவர் எழுப்பிய கலைக்கோவிலைப்போல
இரா.முருகன் தான் நம்பும் மாய எதார்த்த பாணியில் தன் படைப்புலகைக் கட்டியெழுப்பி நிறுத்தியுள்ளார்
என்று பாராட்டினார். இறுதியாக இரா.முருகன்
மனம் நெகிழ, ஆனந்தத்தோடு விருதை ஏற்றுக்கொண்ட காட்சி மனநிறைவை அளித்தது. அவருடைய ஏற்புரையும்
மனத்தைத் தொட்டது.
மாலை ஐந்து மணிக்கு ஆவணப்படத்
திரையிடலோடு தொடங்கிய நிகழ்ச்சி இரா.முருகனின் ஏற்புரையோடு எட்டு நாற்பதுக்கு முடிவடைந்தது. நான் ஒன்பதரை மணிக்குப் புறப்படும் பேருந்தில் பயணச்சீட்டு
பதிவு செய்திருந்தேன். அதனால் யாரிடமும் முறையாக விடைபெற முடியாமல் வேகவேகமாக அரங்கத்தைவிட்டு
வெளியேறவேண்டியதாக இருந்தது. கோவையைவிட்டு வண்டி புறப்பட்ட பிறகு, இருநாள் அனுபவங்களையும்
சந்திப்புகளையும் நிதானமாக அசைபோட்டபடி இருந்தேன். ஏராளமான முகங்கள். கைகுலுக்கல்கள்.
புன்னகைகள். தழுவல்கள். ஒளிப்படங்கள். போக்குவரத்தின் நெரிசல் காரணமாக உறைந்துபோன சாலையைப்போல மாறிவிட்டது மனம். ஊர் சேரும்
வரைக்கும் தூங்கவே இல்லை. ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தபடி வந்தேன். இருள் மெல்ல
மெல்ல கலைந்து பொழுது வானம் புலரத் தொடங்கிய போது ஊர் வந்துவிட்டது.
அன்புடன்
பாவண்ணன்
(ஜெயமோகன் தளத்தில் 26.12.2024 அன்று வெளிவந்த கடிதம்)