Home

Sunday, 15 December 2024

சாபம் - சிறுகதை


ஏற்பாடு செய்தாயா என்று கேட்டார் அப்பா. திறவுகோல் கொத்தை மாடத்தில் வைத்துவிட்டு நிமிர்ந்தேன். தந்தையின் பார்வை என் மேலேயே பதிந்து கிடந்தது. சாதகமான ஒரு பதிலை எதிர்பார்க்கும் ஆசை துடிக்கும் அந்தக் கண்கள் நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை. சுவரோரம் சரிந்து உட்கார்ந்தேன்.

ஏற்பாடு செய்துவிட்டாயா மகனே.”

மீண்டும் அவர் கேள்வி. மௌனமாய் நிமிர்ந்தேன். பழுத்துத் தளர்ந்த அவர் முகத்தில் துளிர்க்கிற வெளிச்சத்தையும் கண்களின் ஓரம் பொலியும் ஆவலையும் என்னால் படிக்க முடிந்தது.

இல்லை அப்பா.”

சட்டென்று தொங்கிவிட்டது அவர் முகம். ஆவல் வடிந்துவிட்டது. மௌனத்தில் உறைந்துவிட்டார். அதன் வெம்மை என்னைக் கரைத்துவிட்டது. எழுந்து அவர் அருகில் சென்றேன்.

கோசல ராஜ்யமே அயோத்திக்குள் புகுந்திருக்கிறது அப்பா, சரயுவின் அருகில் செல்வது வாலிபர்களாலேகூட ஆகாத காரியம். உங்கள் நீராடலை இந்த ஆண்டு விட்டுவிட முடியாதா?”

அம்மா இல்லாத என்னை ஆளாக்கினவர் அப்பா. அயோத்தியில் மரப்பாலம் தாண்டி ஆச்சாரியார் பயிற்சிக்கூடத்துக்குப் பக்கத்தில் அப்போது வீடு. வணிக மகனுக்குத் தேவையற்றது வில்வித்தை, மல்யுத்தம், குதிரையேற்றம். ஆசைப்பட்டுக் கேட்டதில் அனைத்திற்கும் ஏற்பாடு செய்தார். மழையெனப் பொழிந்த அவரது அன்பால் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம். அதிகாலையில் என்னை அழைத்துப் போய் சரயுவில் இறக்கி நீந்தக் கற்றுக்கொடுத்த காட்சி இன்னும் மனசிலேயே நிற்கிறது. வீடு மாற்றிய பிறகுதான் சாவடிக்கு என்னையும் பழக்கினார்.

லிங்கேஷ்வரா...”

அவரை உற்றுப் பார்த்தேன். அவர் முகம் இளகிக் குழைந்திருந்தது. சுருங்கிய பாரியான உடம்பு. கைகள் அசைத்து அசைத்துப் பேச ஆரம்பித்தார். அவர் பேசப் பேச நெஞ்சு வேகவேகமாய் ஏறி இறங்கியது. அவசரமாய் அவரைத் தடுத்தேன். ஆயாசம் நேரும்படி அவரைப் பேசவிடக்கூடாது என மருத்துவர் எச்சரித்திருந்தார்.

வேண்டுதல்கள் மீறிப் பேசத் தொடங்கினார் அப்பா. சரயு நதி தீரத்தில் தொடங்கியது அவர் வாழ்வு. ஆரம்ப காலத்தில் சாதாரண விவசாயி. சரயுவின் அமுதத்தை உண்டு பூமி வழங்கிய செல்வம். அப்புறம் வணிகம். மெல்ல மெல்ல மாறியது காலம். முதல் கட்டத்தில் வெறும் தரகு வணிகம். அடுத்த கட்டத்தில் சாவடியில் கம்பீரமான வணிகன். தள்ளாமையைக் கொடுத்து படுக்கையில் கிடத்தி விட்டது காலம். வாழ்வு கொடுத்தவள் சரயு மாதா. வருஷத்துக்கொருமுறை நடக்கும் நீராடல் அவளுக்குச் செலுத்தும் நன்றிக்கடன். பேசப்பேச அப்பாவின் கண்கள் தளும்பி கண்ணீர் பெருகியது. முகம் கோணியது. வெண்தாடிக்குள் அவர் முகம் துவண்டு நடுங்கியது. நான் தணிந்துவிட்டேன். அவர் கைகள் ஆதரவாய் அழுத்திப் பற்றினேன்.

லிங்கேஷ்வரா என்றது அப்பாவின் குரல். என் காதின் வெகு அருகில் அவர் குரல் கேவலாய் ஒலித்தது. அவர் கண்களில் மீண்டும் கண்ணீர். அவர் கேட்டதெல்லாம் முந்தின ஆண்டு போல ஒரு பல்லக்கு. அவ்வளவுதான்.

ஏற்பாடு செய்வாயா மகனே?”

முழுக்கக் கரைந்துவிட்டேன் நான். “சரி அப்பா, இப்போதே போய் செய்கிறேன் என்றேன். அவர் முகத்தில் பிரகாசம். திருப்தி. சந்தோஷம். என் கைகள் வாங்கி தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டார். குனிந்து என் நெற்றியில் தன் உதடுகள்ப் பதித்தார். உருண்ட அவர் கண்ணீர்த்துளிகள் என் கன்னத்தில் மோதின. எனக்குச் சிலிர்த்தது. அவரை நிமிர்ந்து பார்த்தேன்.

அடுத்த ஆண்டு உனக்கு தொந்தரவு தரமாட்டேன் லிங்கேஷ்வரா!”

மெதுவாகத்தான் சொன்னார். அவசரமாய் அவர் உதடுகள் மூடினேன்.

அப்படிச் சொல்லாதீர்கள் அப்பா. உங்களுக்கு எல்லாக் காலத்திலும் செய்வேன்.”

முதுகுப்புறம் தட்டித் தந்தார். நான் மீண்டும் குளிர்ந்தேன். அவர் முகத்தைத் துடைத்து கட்டிலில் சாய்த்து வெளியேறினேன்.

அயோத்தி நகரமே ஜொலித்துக்கொண்டிருந்தது. இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தன அலங்கார விளக்குகள். உயர்ந்த மாளிகைச் சுவர்களில் பல வர்ண விளக்குகள் தொங்கிக் கொண்டிருந்தன. தெருவில் புதுக் கம்பங்கள் நின்றன. தோரணம் அசைந்தது. சூரிய வம்சக் கொடி மூலைக்கு மூலை பறந்துகொண்டிருந்தது. வாசலில் வடிவான கோலங்கள். மாடங்களிலும், சாளரங்களிலும் திரைச்சீலை பிடித்த பெண்களின் அழகான வதனங்கள். கோசல ராஜ்யத்தின் சகல பகுதிகளிலுமிருந்தும் வந்து சேர்ந்த மக்களின் கண்களில் அயோத்தியைக் கண்ட பிரமிப்பும், சந்தோஷமும். இரவும், பகலும் தொடர்ந்து நடக்கும் வணிகம். ஆடைகள் சரசரக்க உற்சாகத்தோடு நடமாடும் உள்ளூர் மக்கள்.

ராமனின் படைக்குதிரைகள் தெருவதிர ஓடின. அரண்மனையில் இருந்து சரயுவின் கரை வரைக்கும் பாதை புதுப்பிக்கப்பட்டுவிட்டது. மாடுகள் இழுத்து வந்த வண்டியிலிருந்து புதுமணலைக் கவிழ்த்திருந்தார்கள். மட்டப் பலகையை இழுத்து ஓய்ந்த யானைகள் கொட்டடிக்குத் திரும்பிக்கொண்டிருந்தன. அம்பாரியில் உட்கார்ந்தபடி பரதன் மேற்பார்வையிட்டான். அகலப் பாதையின் இருமருங்கும் கம்பம் நட்டு தடுப்புகள் செய்திருந்தார்கள் அடிமைகள். தொலைவில் சரயுவின் அலையோசை.

நெரிசலில் புகுந்து நடந்தேன். எங்கும் புதிய முகங்கள். எல்லா முகங்களிலும் ஆனந்தம். சரயுவில் மூழ்கித் திள்க்க வந்த ஆனந்தமா, சரயுவில் குளிக்க வரும் சீதாதேவியைக் காண வந்த ஆனந்தமா, பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை எனக்கு. இரவுக்குள் இன்னும் லட்சக்கணக்கான மக்கள் கூடிவிடுவார்கள். அயோத்தியின் மடி தாங்குமா என்று கலவரப்பட்டேன்.

ராமனுக்கு பட்டாபிஷேகம் நடந்து முடிந்தது சமீபத்தில்தான். பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடித்து திரும்பிவரும் ராமனைக் காண அன்றும் இதேபோல் அயோத்தியில் மக்கள் நெரிபட்டார்கள். மோதல். கூச்சல். ஓட்டம். ராமனும், சீதையும் மற்றவர்களும் வந்த தேர்கள் எல்லையைத் தொட்டபோது கட்டுப்பாடு குலைந்தது.  

மூச்சுக்கூட விடமுடியவில்லை. கால்களுக்குக் கீழே பல பிணங்கள் மிதிபட்டன. புதுமணலில் ரத்தம் உறைந்தது. அரியாசனத்தில் ராமன் அமர எழுப்பிய மங்கல ஒலியுடன், அயோத்தியின் பல வீடுகளிலும் மரண ஓலம். அடையாளம் தெரியாத பிணங்கள் அவசரம் அவசரமாய் அப்புறப்படுத்தப்பட்டு சமுத்திரத்தில் விசிறியடிக்கப்பட்டன. ரத்தத்தின் மணம் குறைவதற்குள் மீண்டும் ரத்தத்தில் நனைந்தது அயோத்தித் தெரு. அது ராமனுடன் வந்த வானரச் சேனையை விடைகொடுத்து அனுப்பப் போனபோது, சிதைந்த, விறைத்த பிணங்கள். ரத்தச்சேறு, கண்ணீர், ஓலம். நேரில் கண்ட அச்சித்திரங்கள் இன்னும் நெஞ்சில் சுமந்து திரிந்துகொண்டிருந்தேன். அதற்குள் இன்னொரு திருவிழா. மக்கள் விழா.

தெருமுனையில் பல்லக்குத் தூக்கிகள் கிடைத்தார்கள். விஷயத்தைச் சொன்னதும் அச்சாரம் கேட்டார்கள். கொடுத்தேன்.

காலையிலேயே வந்துவிடுங்கள். குளியலை முடித்துக்கொண்டு திரும்பிவிடலாம்.”

பொன் நாணயங்கள் இடுப்புப் பட்டையில் செருகியபடி சிரித்தான் பல்லக்குத் தூக்கி.

வீட்டைக் காட்டுகிறேன். வருகிறீர்களா?”

சம்மதத்துடன் தலையசைத்தவர்கள் அழைத்துக் கொண்டு திரும்பினேன். திடுமென என்னைச் சுற்றிப் பரபரப்பு. பதட்டத்துடன் சாலையை விட்டு ஒதுங்கி ஓரத்துக்குப் பாய்ந்தார்கள் மக்கள். குழப்பத்துடன் தடுமாறினேன். நான் கும்பலின் வேகத்தால் தானாக ஒதுக்கப்பட்டேன். “அரண்மனைக் குதிரைகள் வருகின்றன என்றான் ஒரு பல்லக்குத் தூக்கி. அதற்குள் நாற்சந்தியில் வந்து நின்றன குதிரைகள். முரசு முழங்க ஆரம்பித்ததும் நிசப்தம். குதிரைக்காரன் கூட்டத்தைப் பார்த்தான். பிறகு கம்பீரமான குரலில் கொண்டுவந்த ஓலையைப் பிரித்துப் படித்தான்.

நாள் சரயுவின் ஆற்றுத் திருவிழாவையொட்டி அயோத்தி மாதா, மகாராணி சீதை வர இருப்பதால் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சாலையில் இந்தக் கணத்திலிருந்து விழா முடிவு வரை பொதுமக்களின் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. மகாராணியைக் காண விரும்புபவர்கள் தடுப்புகளுக்கு அந்தப் பக்கம் நின்று பார்க்கலாம். ஆற்றுக்குச் செல்ல விரும்பும் உள்ளூர் மக்களும் வெளியூர் மக்களும் வேறு வழிகளில் செல்லுமாறு கட்டள் இடப்படுகிறது. இது அரசாங்க ஆணை. ஆணையை மீறுபவர்கள் யாராயினும் கடுந்தண்டனைக்கு ஆளாவார்கள்.”

எங்கும் மௌனம் நிலவியது. குதிரைக்காரன் கூட்டத்தின் இடையில் மீண்டும் பார்வையை ஓட்டிவிட்டு குதிரையைத் தட்டினான். புழுதியைப் பரப்பிக்கொண்டு ஓடி மறைந்தன குதிரைகள்.

பல்லக்குத் தூக்கிகளுடன் நடக்க ஆரம்பித்தேன்.

எதற்காக இத்தனை ஆரவாரமும் ஆடம்பரமும் கெடுபிடிகளும்.ராமனைத் தட்டிக் கேட்க யாருமில்லையா?”

ராமன் ஊரில் இல்லை.”

அப்போது இந்த ஏற்பாடுகள்?”

சீதை சொல்லி லட்சுமணன் செய்பவை.”

திடீரென சீதைக்கு ஏன் ஆற்றில் குளிக்கும் ஆசை! சாதாரணமாகவே அரண்மனை ஆள்கள் என்றால் போதும். இம்மக்களுக்கு தலை கால் புரிவதில்லை. கிறுக்காகி விடுவார்கள். குளிக்க வருவது தேவி என்றதும் கூடுதல் போதை ஏறி விட்டது.”

அசோகவனத்தில் இருந்தபோது தேவியின் பிரார்த்தனையாம். சபதம் நிறைவேறியதும் சரயுவில் குளிப்பதாக....”

சாதாரண நாளில் குளிக்கலாமே.”

புண்ணிய தினம். மகாராணி விருப்பம். சாமான்யர்கள் என்ன செய்ய முடியும்?”

என் மனத்தில் சலிப்பு உண்டாகியது. கூட்டம் மெல்ல மெல்ல அதிகரித்தபடி இருந்தது. புறநகரின் எல்லையில் கண்ணுக்கெட்டிய வரைக்கும் வண்டிகள். குதிரைகளும் எருதுகளும் இள்ப்பாறிக்கொண்டிருந்தன. எங்கெங்கும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் அலைந்துகொண்டே இருந்தார்கள். பலவிதமான முகங்கள். பலவிதமான பேச்சு.

இதுதான் வீடு.”

பல்லக்குத் தூக்கிகள் நின்றுவிட்டார்கள்.

அதிகாலை வந்துவிடுகிறோம்.”

எவ்வளவு சீக்கிரம் வருகிறீர்களோ அவ்வளவு நல்லது. நீராடிவிட்டுத் திரும்பலாம்...”

அவர்கள் வணங்கித் திரும்பியதும் வீட்டுக்குள் சென்றேன். என்னை நிமிர்ந்து பரபரப்புடன் பார்த்தார் அப்பா. அவர் கண்கள் “ஏற்பாடு செய்தாயா?” என்று கேட்டன.

பல்லக்குக்குச் சொல்லிவிட்டேன் அப்பா. அதிகாலையில் வந்துவிடும்.”

அப்பாவுக்கு ஏக சந்தோஷம். அவர் உடம்பு குலுங்குவது தெரிந்தது. வெண்தாடிக்குள் அவர் முகம் சிரித்தது.

இரவு முழுதும் தூக்கமே இல்லை. ஏதேதோ எண்ணினேன். குழப்பங்கள். “லிங்கேஷ்வரா... லிங்கேஷ்வரா என்ற குரல் தொலைவில் இருந்து ஒலிப்பதுபோல இருந்தது. விழித்தபோது அப்பாதான் எழுப்பிக்கொண்டிருந்தார். அவர் முகத்தில் அமைதியான சிரிப்பு. எழுந்தேன். முகம் கழுவி ஆடை மாற்றித் தயாரானபோது கதவு தட்டப்படும் சத்தம். திறந்து பார்த்தபோது பல்லக்குத் தூக்கிகள் வணங்கினார்கள்.

நான் உள்ளே வந்து அப்பாவிடம் தகவல் சொன்னேன். கைத்தாங்கலாய் அவரை வெளியே அழைத்து வந்தேன். வெளியே வந்ததும் பல்லக்குத் தூக்கிகள் உதவினார்கள். பல்லக்கை லாவகமாய் வள்த்துத் திருப்பி வைத்தார்கள். அப்பா சுலபமாய் உள்ளே உட்கார்ந்துகொண்டார்.

கிளம்பலாமா?”

மீண்டும் உள்ளே சென்று மாற்றுத் துணிகள் பைக்குள் அழுத்தியபடி வெளியே வந்தேன். கதவைப் பூட்டிவிட்டுத் திரும்பினேன்.

பல்லக்கு கிளம்பியது. சுற்று வழிகளில் புகுந்துபுகுந்து நடந்தோம். நேர் தெருக்களில் நடக்கமுடியவில்லை. நெருக்கியடித்து நடக்கிற கூட்டம்.

சரயுவின் கரையில் எங்கும் மனிதத் தலைகள். ஏக கெடுபிடிகள், உத்தரவுகள். சவுக்கு பிடித்த அரண்மனைச் சேவகர்கள் குதிரைகளில் சுற்றிக்கொண்டே இருந்தார்கள். சீதையின் வருகைக்குக் காத்திருந்தார்கள். நாங்கள் தள்ளித் தள்ளி நடந்தோம். ஒரே கூச்சல். ஜெயகோஷங்கள். ஆரவாரம். அங்காங்கே சீதையின் பெருமையைப் பாடிக்கொண்டிருந்தார்கள். ரொம்ப தூரம் நடந்து பல்லக்கு நின்றது. சரயுவின் கரையருகில் செல்ல இயலவில்லை. கைத்தாங்கலாய் அப்பாவை இறக்கினோம். அவர்கள்க் காத்திருக்கச் சொல்லிவிட்டு ஜே ஜே என நெரிபடும் ஜனத்திரளுக்கு மத்தியில் அப்பாவை அழைத்துக்கொண்டு போனேன். கரையைச் சென்று சேர்வதற்குள் படாத பாடு பட்டுவிட்டோம்.

சரயுவைத் தொட்டு வணங்கினார் அப்பா. ஆனந்தத்தில் அவர் முகம் பிரகாசமானது. மின்னும் கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள வெகுநேரம் சரயுவையே பார்த்தபடி இருந்தார். மானசீகமாய் சரயுவோடு பேசுவதுபோலக் காணப்பட்டார். அவர் மௌனத்தைக் குலைக்க விரும்பவில்லை நான். சற்றே பின்வாங்கினேன்.

திடுமென என்னைச் சுற்றி ஒரு வேகம் எழுந்து படர்வதை உணர்ந்தேன். தொடர்ச்சியான ஜெயகோஷங்கள். எம்பிஎம்பிப் பார்க்கிற திசையில் கூட்டம் அலைமோதியது. நான் திரும்பினேன்.

சர்வ அலங்காரங்களுடன் யானைகள், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையை ஒட்டி வந்து நின்றன. முதல் யானையில் இருந்து இறங்கினான் லட்சுமணன். உறுதியைச் சொல்லும் புடைத்த தோள்கள். அடுத்த யானையில் இருந்து சீதை இறங்கினாள். சிவந்த அவள் முகம் இளஞ்சூரியனின் கிரணங்கள் பட்டு மின்னியது. அப்புறம் ஊர்மிள். அதற்கப்புறம் பரதன்.

சீதை மேடையில் முன்னேறி சரயுவையும், சூரியனையும் வணங்கினாள். அங்கிருந்தபடி மக்கள் நோக்கிப் புன்முறுவலுடன் கையசைத்தாள். பரபரப்பு கூடியது. உற்சாக வேகம். மீண்டும் ஜெயகோஷம்.

மேடையில் புரோகிதர்கள் தோன்றினார்கள். மந்திர ஒலிகள் காற்றில் கலந்தன. சரயு நீர் நிறைந்த முப்பத்திரெண்டு குடங்களுக்கும் படையல் நடந்தது. குடங்கள் தலைமைப் புரோகிதர் எடுத்துக் கொடுக்க ஊர்மிளா வாங்கி சீதையின் தலையில் ஊற்றினாள். சீதையின் உடம்பில் சரயு வழிந்தது. அவள் முகத்தில் நிறைவின் குளுமை படர்ந்தது.

உற்சாக வெள்ளம், மக்கள் மேலும்மேலும் நெருக்கத் தொடங்கினார்கள். சரயுவைக் கிழித்துக்கொண்டு சீதையை நோக்கித் தாவியது கூட்டம். பயம் கவ்வியது என்னை, அப்பாவைப் பிடித்துக் கொள்ளத் திரும்பினேன். ஊடே பிளந்துகொண்டு முன்னேறத் துடித்த ஒரு கூட்டம் என்னைத் தள்ளிவிட்டது. தடுமாறி எழுந்து முன்னேறுவதற்குள் மேலும் மேலும் அழுத்தியது கூட்டம். அப்பாவைக் கூவிக் கூவி அழைத்தேன். அப்பாவின் திசையில் இருந்து மறு பதில் இல்லை. அவர் முகமும் தெரியவில்லை. மேடையை நோக்கிப் பாயும் ஜனத்திரள் என்னைச் சுற்றிச் சுழற்றித் தள்ளியது. முட்டித்தள்ளியது. கால் ஊன்றி சமாளிப்பதற்குள் மேலும் உருட்டி ஒதுக்கப்பட்டேன்.

அப்பா... அப்பா...”

திரும்பிப் பார்த்தேன். பல்லக்குத் தூக்கிகளும் பார்வையிலிருந்து மறைந்துவிட்டார்கள். அதிர்ச்சியில் குலைந்துவிட்டேன். கால்கள் தளர்ந்தன. மனம் கூவ ஆரம்பித்தது.

பக்கத்தில் பேரோசை. பெரிய கலங்கரை விளக்கமும், மதிலும் மக்கள் கூட்டத்தை நோக்சிக் சரிந்துகொண்டிருந்தன. கீழே மக்கள் சிதறல். கண்ணெதிரில் சாவுகள்க் கண்ட மற்றவர்களின் ஓலம். கரையிலும் நதியிலும் ஒரே குழப்பம். திக்குமுக்காடி மூழ்கும் ஜனங்கள். பதற்றம், பீதி நிறைந்த குரல்கள்.

மக்கள் வெள்ளத்தில் இங்குமங்கும் அலைக்கழிந்தேன். கரையை விட்டு வெகுதூரம் ஒதுங்கிவிட்டிருந்தேன். அப்பாவின் முகம் தேடி ஓடினேன்.

சுய உணர்வு மீண்டபோது சூரியன் உச்சியில் இருந்தது. சரிந்து விழுந்த மண்டபங்கள்யும் மதிலையும் ஒட்டிக் காவலர்கள் நின்றார்கள். அம்பறாத்தூணிகளில் பொதிந்திருந்த கூரான அம்புகள் வெயிலில் மின்னின. யுத்த பூமி போல இருந்தது சரயுவின் கரை. அரண்மனை யானைகள் திரும்பிவிட்டிருந்தன. வேகமாக கரையை ஒட்டி நடந்தேன். காலையில் நின்றிருந்த அடையாளம் குழப்பியது. அப்பா அப்பா என்று அரற்றினேன். நடந்தபடியே தேடினேன். உடைந்த மரத்துணுக்குகள் காலில் மோதின. நின்று உற்றுப் பார்த்தேன். ‘இதுதானே என்ற எண்ணம் ‘இதுவல்ல என்றும் குழப்பம். என் மனம் தவித்து விம்மியது. கரையோரமாகவே மீண்டும் ஓடத் தொடங்கினேன்.

தூரத்தில் கும்பலொன்று என் கவனத்தை இழுத்தது. நெருங்கினேன். மணிமுடியுடன் லட்சுமணன் நின்றிருந்தான். எதிரில் சரயுவிலிருந்தும், மதில் சிதைவுகளுக்கடியிலிருந்தும் மீட்டெடுக்கப்பட்ட உடல்கள். சில நூறு பிணங்கள்.

எனக்கு அடிவயிறு கலங்கியது. இதயம் சுருங்கி விரிந்தது. நெருப்பில் சுட்டுக்கொண்டதுபோல ஒரு துடிப்பு எழுந்து அடங்கியது. அவசரமாய் உடல்களின் அருகில் சென்று குனிந்து நடந்து பார்த்தேன். என்னைப்போலவே தேடும் மற்றவர்கள். ஒவ்வொரு முகமாய்ப் பார்த்து நடந்தேன். கண்கள் குத்திட்ட முகம். பல்லை இறுக்கி கடித்தபடி அவஸ்தையில் துடித்த முகம். தலை உடைந்து ரத்தம் இறங்கி உறைந்த முகம். நகர நகர என் கையும் காலும் நடுங்கத் தொடங்கின. கடந்து செல்லச்செல்ல என் அப்பாவின்  முகத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். தளர்ந்து பாரியான முகம். எது இருக்கக்கூடாதென மனம் வேண்டி உருகியதோ அதே முகம்.

அப்பா...”

நான் அவர் தலையை உயர்த்தி மடியில் வைத்துக்கொண்டேன். அழுதேன். குமுறினேன். என் மனம் கரைய ஆரம்பித்தது. வெகுநேரம் ஆகி இருக்கவேண்டும். பக்கத்தில் நிழலாடியது. நிமிர்ந்தேன். லட்சுமணன்.

அரசு சார்பாக என் ஆழ்ந்த வருத்தங்கள்.”

என் சமநிலை குலைந்தது. இழப்பின் துயரம் சட்டென்று அவன்மேல் ஆத்திரத்தையும் எரிச்சலையும் கிளப்பியது. மடியிலிருந்த தலையை இறக்கி வைத்துவிட்டு எழுந்தேன். தீ மூடப்பட்டது போல என் உணர்வுகள் எரிந்துகொண்டிருந்தன.

செத்துக்கொண்டே இருக்க ஒரு மக்கள் கூட்டம். வருத்தப்பட்டுக் கொண்டே இருக்க ஓர் அரசு.... அரசியலில் கற்றுக்கொண்டது இதுதானா லட்சுமணரே?”

ஆக்ரோஷத்தைக் கொட்டத் தொடங்கினேன். மறுகணம் இரண்டு தளபதிகள் என்னை நோக்கிப் பாய்ந்தார்கள். சேவகர்களின் கைகள் அம்புகள் உருவின. லட்சுமணன் அதட்டித் தடுத்தான்.

உங்கள் இழப்பின் பாதிப்பு புரிகிறது. மீண்டும் அரசு சார்பில் வருத்தங்கள். நஷ்டஈட்டை அரசு தரும்.”

எந்த உயிரின் இழப்பும் புரியாதவர்கள் நீங்கள். பொய் சொல்ல வேண்டாம். உங்கள் சரித்திரம் தெரிந்தவன் நான்.”

நேர்மைக்கும் நீதிக்கும் பேர் போனது அயோத்தி அரசு.”

நேர்மை உங்களிடமும் இருந்ததில்லை. உங்கள் அண்ணனிடமும் இருந்ததில்லை. வாலி வதை ஒன்றே போதும் உங்கள் தகுதியைப் பறைசாற்ற. அசோகவனத்துச் சிறையில் சீதையிடம் இருந்த நீதி அரண்மனைக்கு வந்ததும் அடியோடு போயிற்று...”

லட்சுமணனின் பக்கத்தில் ஒரு தளபதி நெருங்கினான். அவன் கை வாள்ப் பிடித்திருந்தது.

சீதையைப் பற்றி எதுவும் பேசாதே. அவர் நம் மகாராணி.”

வாள் அசைத்தபடி பேசினான் தளபதி.

இகழ்ச்சியாய்ச் சிரித்தேன் நான்.

உனக்கு மகாராணி. எனக்கு கொலைகாரி.”

லட்சுமணன் உடல் பதற ஓரடி முன் வந்தான்.

மகாராணியைத் தூற்றும் நாக்கைத் துண்டித்து விடுவேன்.”

உங்கள் துடுக்கு உலகம் அறிந்ததுதான் லட்சுமணரே!”

அவன் முகம் சிவந்துவிட்டது. உதடுகள் துடித்தன. அகன்ற மார்பில் வேர்வை வழிந்தது.

சரயுவில் நீராட மகாராணிக்கு உரிமை இல்லையா?”

உரிமைப்பிரச்சினை இல்லை இது. உயிர்ப்பிரச்சனை இள்யவரே. அரண்மனை முகம் என்றாலே ஆவென்று வாயைப் பிளக்கிற கூட்டம் இது. இங்கு மகாராணி நீராட வந்தது வீணான விளம்பரம்.”

வாயை மூடு நீசனே தளபதி கூவினான்.

அயோத்தி ராணியை அவமானப்படுத்துபவனை உயிரோடு விடக்கூடாது...”

கூடி இருந்த சேவகர்கள் பட்டாளம் என்மீது பாய்ந்தது. நான் திமிறினேன். என்மேல் விழுந்த கைகள்யும் தோள்கள்யும் தள்ளினேன். முட்டி மோதினேன். சுற்றிலும் கைகள். நீண்ட ஆயுதங்கள். நான் லட்சுமணனை நோக்கித் தாவ முயன்றேன்.

எங்கள் வாழ வைக்கும் இந்த சரயு நதிக்கரையில் இருந்து சொல்கிறேன். என் சாபம் உங்கள்த் துரத்தும். உங்கள் சீதையைத் தாக்கும். என் அன்பான தந்தையிடம் இருந்து நான் எப்படி பிரிக்கப்பட்டேனோ அதைவிடக் கொடுமையாய் உங்கள் சீதையின் பிள்ள்கள் பிரிந்திருக்கட்டும். தந்தை முகமே காணக்கிடையாத அனாதைகளாக வளரட்டும். எந்த அரியாசனமும் முடிசூட்டிக்கொண்டு இந்தக் காரியத்தைச் செய்தாளோ, அந்த அரியாசனமும், மணிமுடியும் அவளுக்கு இல்லாமல் போகட்டும். பலிக்கும் பார் என் சாபம்...”

திடீரென்று நான்கு திசைகளில் இருந்தும் என் நெஞ்சில் இறங்கின வாள்கள். மரணம் என்று உள்மனம் சொல்ல தளர்ந்து விழுந்தேன். மங்கும் என் கண்களின் முன் ரத்தம் மின்னும் வாள்கள் நிழலாடின.

(கணையாழி -1992)