Home

Sunday, 29 December 2024

என்.ஆர்.தியாகராஜன்: சமூகத்தொண்டும் சங்கிலித்தழும்பும்

 

தீண்டாமை ஒழிப்பு பரப்புரைக்காக நாடு தழுவிய ஒரு பெரும்பயணத்தை மேற்கொண்டிருந்த காந்தியடிகள் தமிழகத்துக்கு வந்திருந்தபோது, ஏறத்தாழ எல்லா முக்கிய நகரங்களுக்கும் சென்றார் என்று கூறும் அளவுக்கு விரிவான அளவுக்கு பயணம் செய்தார். பழமைவாதிகளின் எச்சரிக்கையை மீறி ஏராளமான ஆண்களும் பெண்களும் காந்தியடிகள் உரையாற்றிய எல்லாக் கூட்டங்களிலும் கலந்துகொண்டனர். அவர்கள் தம் சுற்றுப்பயணத்தின் நோக்கத்தைத் தெரிந்துகொண்டிருக்கிறார்களா என்பதை அறிந்துகொள்வதற்காக ”நீங்கள் இந்த நிதியை எதற்காக அளிக்கிறீர்கள்?” என்று நேரிடையாகவே கேட்டபோது, அனைவரும் உற்சாகமான குரலில் “தாழ்த்தப்பட்டோர்களின் முன்னேற்றத்துக்காகத்தான்” என்று மக்கள் விடையளித்தனர். அந்தப் பதிலைக்  கேட்டு காந்தியடிகள் மனம் குளிர்ந்தார்.

கம்பம் பகுதிகள் தமிழகத்தின் எல்லைப்பகுதியில் அமைந்திருப்பதால் காந்தியடிகளின் சுற்றுப்பயணத்திட்டத்தில் அந்த ஊரின் பெயர் தொடக்கத்தில் இணைக்கப்படாமல் இருந்தது. பிறகு, போடிநாயக்கனூர் நித்தியானந்தமும் ‘பாரதி’ பத்திரிகை ஆசிரியரும் உப்பு சத்தியாகிரக காலத்தில் சிறைசென்றவருமான நாராயணசெட்டியாரும் வலியுறுத்தியதால் அப்பகுதிகள் இணைக்கப்பட்டன. தற்செயலாக அப்போது மதுரையில் மழை பொழிந்ததால் தமிழ்நாட்டுப்பயணம் பத்து நாட்கள் கூடுதலாக நீடித்தது.


08.02.1934 அன்று காந்தியடிகள் தொண்டர் நித்தியானந்தத்துடன் இணைந்து போடிநாயக்கனூருக்குச் சென்றார். எதிர்பாராதவிதமாக, அப்போது நகரத்துக்குள் பிளேக்நோய் பரவியிருந்த காரணத்தால் ஊருக்குள் செல்ல இயலாமல் போனது. அதனால் நகர எல்லையிலேயே நின்று பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, தாழ்த்தப்பட்டோர் நலனுக்காகத் திரட்டிவைத்திருந்த நிதியைப் பெற்றுக்கொண்டார்.  பிறகு திண்டுக்கல், வடுகப்பட்டி, வத்தலக்குண்டு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற கூட்டங்களிலும் பங்கேற்ற பிறகு பெரியகுளத்துக்கு வந்து சேர்ந்தார்.

பெரியகுளத்தில் சந்தை கூடும் இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பெரியகுளம் அரிஜன சேவாசங்கம், இந்தி பிரச்சார சபை ஆகிய அமைப்புகள் சார்பாக வரவேற்புரைகளும் பணமுடிப்புகளும் அளிக்கப்பட்டன. “பெரியகுளத்தில் வசிக்கும் மக்களில் இத்தனை பேருக்கு இந்திமொழி தெரிந்திருப்பதை அறிய எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்ற குறிப்புடன் காந்தியடிகள் தன் உரையைத் தொடங்கினார். இந்துக்களிடையில் உள்ள தீண்டாமையை அகற்றிவிட்டால், அது இந்துக்களிடையே மட்டுமல்லாது, உலக மக்கள் குலத்திலேயே ஒற்றுமையை உருவாக்கும் என்னும் கருத்தை மையப்படுத்தி சுருக்கமாக உரையாற்றினார். தேசபக்தியும்  விடுதலை வேட்கையும் கொண்ட தேனியைச் சேர்ந்த இருபத்தொன்று வயதுடைய இளைஞரொருவரும் அக்கூட்டத்தின் முன்வரிசையில் அமர்ந்து காந்தியடிகளின் உரையை ஊக்கத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் பெயர் என்.ஆர்.ட்டி என்கிற என்.ஆர்.தியாகராஜன்.

கோயில்பட்டி காங்கிரஸ் ஊழியராக இருந்த அவருடைய அத்தை லிங்கம்மாள் வழியாக அவர் ஏற்கனவே காங்கிரஸ் செயல்பாடுகளில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டிருந்தார். அவரும் அவரையொத்த காங்கிரஸ் செயல்வீரர்களாக நாராயணசாமி செட்டியார், சமயக்கவுண்டன்பட்டி சக்திவடிவேல் கவுண்டர், அனுமந்தன்படி கிருஷ்ணசாமி ஐயங்கார், போடி அடிகளார், இராமையா செட்டியார், தேனி ரத்தின நாடார், எஸ்.வி.எம்.சையது சாஹிப் போன்ற தலைவர்கள் உரையாற்றும் கூட்டங்களில் கலந்துகொண்டு நாட்டுநடப்புகளைப்பற்றிய தெளிவைப் பெற்றிருந்தார். பள்ளிப்படிப்பை முடிக்காதவர் என்றபோதும் தினந்தோறும் பத்திரிகைகளை வாசித்தும் பெரியவர்களின் மேடையுரைகளைக் கேட்டும் தன் அரசியல் அறிவை வளர்த்துக்கொண்டிருந்தார். காந்தியடிகளின் நிர்மாணப்பணிகளிலும் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்திலும் அவர் மனம் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தது.

கிருஷ்ணாபுரம் என்.வி.பழனிச்சாமி என்பவர் தியாகராஜனுடைய பள்ளித்தோழர். அவருடன் சேர்ந்துகொண்டு மிதிவண்டியிலேயே தம் ஊருக்கு அக்கம்பக்கத்தில் இருந்த கிராமங்களுக்குச் சென்று, பொதுமக்களுக்குத் தேசபக்தியை ஊட்டும் வகையில் மேடைகளில் பேசினார் தியாகராஜன். வயதில் இளையவராக இருந்தாலும் கருத்தாழம் கொண்ட அவருடைய உரையை அனைவரும் விரும்பிக் கேட்டனர். அப்பருவத்திலேயே மக்களுக்குச் சேவையாற்றவேண்டும் என்னும் எண்ணம் அவருக்குள் எழுந்தது.  

ஆங்கிலேய அரசு இந்தியாவில் விதித்த உப்புவரியை எதிர்த்து காந்தியடிகள் தண்டியில் நடத்திய உப்பு சத்தியாகிரகத்தைப்போல, தமிழ்நாட்டில் திருச்சியிலிருந்து வேதாரண்யம் கடற்கரை வரைக்கும் இராஜாஜியின் தலைமையில் பாதயாத்திரையாக நடந்து சென்று உப்பு அள்ளும் போராட்டம் 13.04.1930 அன்று தொடங்கியது. சர்தார் வேதரத்தினம் பிள்ளை அனைத்து வகைகளிலும் அப்போராட்டத்துக்கு உதவி செய்தார். தி.சே.செள.ராஜன், ஜி.ராமச்சந்திரன் உள்ளிட்ட தொண்ணூறுக்கும் மேற்பட்ட பல தலைவர்கள் அப்போராட்டத்தில் கலந்துகொண்டு நடந்து சென்றனர். அப்போராட்டத்தில்  நாராயண செட்டியாரும் கலந்துகொண்டார். வயதில் இளையவராக இருந்ததால் போராட்டக்குழுவினர் தியாகராஜனின் பெயரைச் சேர்க்கவில்லை. வேதாரண்யம் போராட்டத்தில் ஈடுபட்ட இராஜாஜி உள்ளிட்ட  அனைவரும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, தலைவர்கள் கைதைக் கண்டித்து தேனி பகுதிகளில் தியாகராஜன் நாள்தோறும் கண்டனக்கூட்டங்களை நடத்தினார். அவருடைய பொதுவாழ்க்கைக்கு அது ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

பஞ்சாப்  நவஜவான் பாரத சபை என்ற அமைப்பையும் மாணவர் சங்கம் ஒன்றையும் உருவாக்கி காலனி ஆதிக்கத்தைப்போன்றே வகுப்புவாத ஆதிக்கமும் ஆபத்து நிறைந்தது என்னும் கருத்தையும் மனிதனை மனிதனாக மதிக்கவேண்டுமே அன்றி இந்துவாகவோ, முஸ்லிமாகவோ, சீக்கியனாகவோ பார்க்கக்கூடாது என்னும் கருத்தையும் இளைய தலைமுறையினரின் நெஞ்சில் ஆழமாகப் பதியவைக்கப் பாடுபட்ட பகத்சிங், லாலா லஜபதிராய் இறப்பதற்குக் காரணமான காவல்துறை அதிகாரி சான்டர்ஸ் என்பவரைக் கொன்றதற்காகவும் மத்திய சட்டமன்றத்தில் குண்டுவீசிய குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டு தூக்குதண்டனை விதிக்கப்பட்டார். 23.03.1931 அன்று அவர் தூக்கிலிடப்பட்டார். அதற்கு எதிர்வினையாக தேசமெங்கும் இளைஞர் அமைப்புகள் கண்டனக்கூட்டங்களை நடத்தின. பெரியகுளத்தில் நாராயண செட்டியார் தலைமையில் நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் முன்னணிப் பேச்சாளராக தியாகராஜன் உரையாற்றினார். நிதானம் தவறாத அவருடைய எழுச்சியுரை அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருடைய கவனமும் அவர்மீது குவிந்தது.

காந்தி இர்வின் ஒப்பந்தப்படி அரசு அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தது. 07.09.1931 அன்று லண்டனில் நடைபெறவிருந்த வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ள காங்கிரஸ் இசைவளித்தது. காந்தியடிகள், சரோஜினிதேவி நாயுடு உள்ளிட்டோர் காங்கிரஸ் சார்பாக மாநாட்டில் கலந்துகொள்ள லண்டனுக்குச் சென்றனர். எனினும் அப்பயணம் வெற்றியளிக்கவில்லை. 28.12.1932 அன்று இந்தியாவுக்குத் திரும்பிவந்த காந்தியடிகள் 03.01.1932 அன்று மீண்டும் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார். உடனே அரசாங்கம் நான்கு நெருக்கடிச் சட்டங்களைப் பிறப்பித்து அடுத்த நாளே காந்தியடிகளைக் கைது செய்து எரவாடா சிறையில் அடைத்தது. காங்கிரஸ் சட்டவிரோதமான அமைப்பு என்றும் அறிவிக்கப்பட்டது. அரசின் நடவடிக்கையை எதிர்த்து  கண்டனக்கூட்டம் நடத்திய தியாகராஜனை காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்றம் அவருக்கு ஆறுமாதம் சிறைத்தண்டனை வழங்கியது.

அவரைப்போலவே தண்டனை பெற்ற காங்கிரஸ் தொண்டர்கள் பலர் அச்சிறையில் இருந்தனர். வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களோடு அறிமுகமாகவும் பேசிப் பழகவும் அச்சிறைவாசம் உதவியாக இருந்தது. தியாகராஜன் பாரதியார் பாடல்களை மனப்பாடமாகத் தெரிந்துவைத்திருந்தார். ஓய்வு நேரங்களில் சிறையிலிருந்த அனைவருக்கும் பாரதியார் எழுதிய தேசபக்திப் பாடல்களைப் பாடிக் காட்டி உத்வேகமூட்டினார். பிற கைதிகளும் அப்பாடல்களைக் கற்று பாடத் தொடங்கினர். மெல்ல மெல்ல அச்செய்தி   பரவி, சிறைத்துறை அதிகாரியை அடைந்தது. அப்போது பாரதியாரின் நூல்கள் சென்னை மாகாணத்தில் தடைசெய்யப்பட்டிருந்தது. சிறை அதிகாரி தியாகராஜனை அழைத்து கண்டித்து அனுப்பினர். ஆயினும் அதைப் பொருட்படுத்தாத தியாகராஜன் அடுத்த நாள் மாலைவேளையில் வழக்கம்போல பிற தொண்டர்களுடன் சேர்ந்து பாரதியார் பாடல்களைப் பாடினார். செய்தியை அறிந்த சிறைஅதிகாரி உடனே அந்த இடத்துக்கு விரைந்துவந்து, அவருடைய ஆணையை மீறிய குற்றத்துக்காக அவருடைய தலையில் பத்து கிலோ எடையுள்ள மரக்கட்டையை ஏற்றிவைத்து , அக்கட்டையோடு இணைக்கப்பட்ட இரும்புச்சங்கிலியை அவருடைய காலில் பிணைத்துவிட்டார். விடுதலையடையும் காலம் வரைக்கும் பகல்வேளை முழுதும் அந்தக் கட்டையை அவர் தன் தலைமீது சுமந்த நிலையிலேயே எல்லா வேலைகளையும் செய்ய நேர்ந்தது. 

விடுதலை பெற்று ஊருக்குத் திரும்பியதும் எழுச்சிகொண்ட மனநிலையில் கூட்டங்களில் உரையாற்றத் தொடங்கினார் தியாகராஜன். தன் வயதையொத்த இளைஞர்களை ஓர் அணியாகத் திரட்டி அழைத்துச்சென்று தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிகளில் சுகாதாரப்பணிகளிலும் கல்விக்கூடங்கள் அமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு சேவை புரிந்தார். தீண்டாமை ஒழிப்பின் முக்கியத்துவம் தொடர்பாக பல மேடைகளில் உரையாற்றினார். ஒவ்வொரு முறையும் ’அன்பர்களே’ என்று தொடங்கி ‘ஜெய் ஹிந்த்’ என்று முடிக்கும்வரை ஆற்றொழுக்காகவும் செறிவான கருத்துகளோடும் அமைந்த அவருடைய உரையைக் கேட்க அனைவரும் காத்திருப்பது வழக்கமானது.

அவருடைய முற்போக்குப் பார்வையை ஏற்றுக்கொள்ள இயலாத பலர் அவர் மீது வெறுப்புகொண்டு “இப்படிப் பேசும் நீ தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதியில் தண்ணீர் வாங்கிக் குடிப்பாயா?”  என்று குதர்க்கமாகக் கேட்டனர். அவர்களுக்கு வாய்ச்சொல்லால் அன்றி, செயல்வழியில் பதில் சொல்ல விரும்பிய தியாகராஜன் தம்மிடம் கேள்வி கேட்டவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் குடியிருப்புப்பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த குடிசைகளில் அமர்ந்து தாழ்த்தப்பட்டோருடன் உரையாடி, உணவருந்தி, தண்ணீரையும் வாங்கிப் பருகினார்.  பேச்சும் செயலும் ஒன்றெனவே வாழும் பண்பு தியாகராஜனின் நெஞ்சில் எப்போதும் குடிகொண்டிருந்தது.

தன் தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்க இலட்சுமிபுரத்தில் வருமானத்துக்காக ‘மகாத்மா காந்தி ஸ்டோர்’ என்னும் பெயரில் ஒரு சிறு கடையைத் தொடங்கி நடத்தினார். ஆனால், ஓரிடத்தில் அமர்ந்து வணிகத்தைக் கவனிக்கும் மன அமைப்பு அவரிடம் இல்லாததாலும் அரசியல் ஈடுபாட்டின் காரணமாக மேற்கொள்ள வேண்டிய திடீர் பயணங்களாலும் அவரால் கடைவணிகத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் அந்தக் கடையை அவர் விரைவிலேயே மூடிவிட வேண்டியதாயிற்று.

எதிர்பாராத விதமாக, 1935இல் அவருடைய தந்தையார் மறைந்துவிட்டார். அதனால் அவர் தேனி பகுதிக்கு குடியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. இரவு நேரங்களில் கூட்டங்களில் கதர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் பகல்நேரத்தில் கதராடைகளை விற்பனை செய்யும் வகையில் ஒரு கடையைத் தொடங்கி நடத்தினார். கடைக்கு வரும் தொண்டர்களும் ஊர் மக்களும் படித்துப் பயன் பெறும் வகையில் பாரதி, சுதந்திரச்சங்கு போன்ற இதழ்களை வாங்கி விற்பனை செய்தார்.

1936ஆம் ஆண்டு லக்னோ நகரில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் நேருவின் எதிர்ப்பையும் மீறி, 1937இல் நடைபெறவிருந்த தேர்தலில் பங்கேற்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. இந்தியாவில் இருந்த பதினொரு மாகாணங்களிலும் தேர்தல் நடைபெற்றது. சென்னை மாகாணத்தில் இராஜாஜி தலைமையில் காங்கிரஸ் அத்தேர்தலை எதிர்கொண்டது. பல முதல்நிலைத் தலைவர்கள் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்குப் பொருத்தமான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் ஆலோசனைக்கூட்டங்களை நடத்தினர்.

பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் யாரை நிறுத்துவது என்னும் முடிவை எடுக்க சத்தியமூர்த்தியின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.  நீதிக்கட்சியின் அரசாங்கத்தில் அமைச்சராகப் பணியாற்றிய ஒருவர்தான் அக்கட்சியின் சார்பில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அச்சூழலில் அவரை வெல்லும் ஒருவரை தேர்தலில் நிறுத்த காங்கிரஸ் விரும்பியது. போட்டியிட விருப்பமுள்ளவர்கள் முன்வரலாம் என்று கூட்டத்தில் கலந்துகொண்டவர்களைப் பார்த்து வெளிப்படையாகவே கேட்டார் சத்தியமூர்த்தி. ஒருவரும் போட்டியிட விரும்பாததால், அரங்கத்தில் ஆழ்ந்த அமைதி நிலவியது.

அதைக் கண்டு திகைத்த சத்தியமூர்த்தி “போட்டியிட யாருக்குமே இங்கு விருப்பமில்லையா?” என்று ஆற்றாமையுடன் கேட்டார். அப்போதும் ஒருவரும் கையை உயர்த்தவில்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகு கூட்டத்தில் அமர்ந்திருந்த தியாகராஜன். எழுந்து நின்றார். “ஒருவரும் போட்டியிடவில்லை என்றால் நான் போட்டியிடத் தயாராக இருக்கிறேன்” என்று அறிவித்தார். அவருடைய துணிச்சலைப் பாராட்டிய சத்தியமூர்த்தி அவருக்கு அருகில் சென்று முதுகில் தட்டிக்கொடுத்து பாராட்டினார். அவருக்கே உரிய கணீரென்ற குரலில் “சபாஷ் ராஜா, வாடா சிங்கக்குட்டி, நீ முன்னால் இருக்கவேண்டியவன்” என்று சொல்லி அழைத்துச் சென்று தனக்குப் பக்கத்தில் அமரவைத்துக்கொண்டார்.  “உன் துணிச்சல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று புகழ்ந்துரைத்தார்.

“நம்மை எதிர்த்து நிற்பவரை வெல்ல, இந்தத் துணிச்சல் மட்டும் போதாது. பரவலான அறிமுகமும் வேண்டும்” என்று எடுத்துரைத்து, அப்பகுதியைச் சேர்ந்த பல முன்னணித்தலைவர்களோடு உரையாடி அனைவருக்கும் அறிமுகமான   சக்திவேல் கவுண்டர் என்பவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தார் சத்தியமூர்த்தி. அவருடைய வெற்றிக்காக தியாகராஜன் இரவு பகலாக கடுமையாக உழைத்தார்.  அத்தேர்தலில் நீதிக்கட்சி வேட்பாளரைவிட கூடுதலான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் சக்திவேல் கவுண்டர். மாகாண அளவில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இராஜாஜி தலைமையில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.

தேனி சந்தை மிகப்பெரிய வணிக மையமாக விளங்கிய காலம் அது. அக்கம்பக்கத்துக் கிராமங்களைச் சேர்ந்த சிறுவணிகர்கள் அனைவருக்கும் அந்தச் சந்தை மட்டுமே பெரிய விற்பனை மையமாகும். பல சிறு வணிகர்கள் தலைச்சுமையாக எடுத்துவரும் வணிகப்பொருட்களுக்குக் கூட நுழைவு வரி விதிக்கும் நடைமுறை அந்தக் காலத்தில் இருந்தது. அது சில்லறை வணிகத்தைப் பெரிதும் பாதித்தது. முந்தைய ஆட்சியில் நடைமுறையில் இருந்த அப்பழக்கம் தொடரக்கூடாது என்ற எண்ணத்துடன் ஒரு போராட்டத்தைத் தொடங்கினார் தியாகராஜன். சிறுவணிகர்கள் அனைவரும் அவருடன் நின்றனர். அவருடைய கோரிக்கை அரசாங்கத்தின் கவனத்துக்குச் சென்றது. நுழைவு வரி வசூலிக்கும் நடைமுறை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. தியாகராஜன் அனைவருடைய பாராட்டுக்கும் உரியவரானார். அதைத் தொடர்ந்து பெரியகுளம் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் அவரை அணுகி தம் இடர்களை முன்வைக்கத் தொடங்கினர். அதைக் கேட்டு தியாகராஜனும் அல்லும் பகலும் ஓய்வின்றி மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க தம்மால் இயன்றவகையில் பாடுபட்டார். மக்கள் அனைவரும் விரும்பும் அன்புத்தலைவராக அவர் உயர்ந்தார்.

சேவையுணர்வோடு தொண்டாற்றி வந்த தியாகராஜன் தொடக்கத்தில் திருமண ஏற்பாட்டுக்கு உடன்படாமலேயே காலத்தைத் தள்ளிவந்தார். இறுதியில் தன் தாயாரின் அன்புக்கோரிக்கைக்கு இணங்கி தன் அரசியல் ஈடுபாட்டுக்குக் காரணமான தன் அத்தை மகளை 15.01.1939 அன்று லட்சுமிபுரத்தில் சக்திவேல் கவுண்டர் தலைமையில் திருமணம் செய்துகொண்டார். அவரே வடிவமைத்த அந்தக் காலத் திருமண அழைப்பிதழ் அனைவரும் கூடிப் பேசும் பேசுபொருளாக அமைந்தது. அழைப்பிதழின் முகப்பில் வந்தே மாதரம், ஆமென், அல்லாஹு அக்பர் ஆகிய வாசகங்கள் இடம்பெற்றிருக்க, அவற்றுக்குக் கீழே சுதந்திரதேவியின் உருவத்தையும் நூல்நூற்கும் கைராட்டை ஓவியத்தையும் தாங்கிய இந்திய தேசத்தின் வரைபடம் அமைந்திருந்தது. அவ்வரைபடத்துக்கு ஒருபுறம் காந்தியடிகளின் படமும் மறுபுறம் திலகரின் படமும் இடம்பெற்றிருந்தன. அதற்குக் கீழே ‘இதந்தரும் மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும்’ என்று தொடங்கும் பாரதியாரின் அறுசீர்விருத்தப் பாடலும் அச்சிடப்பட்டிருந்தது. அதற்கும் கீழே இறுதிப்பகுதியாக மணமக்கள் விவரமும் திருமண விவரமும் கொடுக்கப்பட்டிருந்தன. மணமகன் பெயருக்கு முன்னால் ‘தேசச்சேவகன்’ என்னும் அடைமொழியும் மணமகள் பெயருக்கு முன்னால் ‘தேசச்சேவகி’ என்னும் அடைமொழியும் அச்சிடப்பட்டிருந்தன.

அக்காலத்தில் மதுரையைச் சேர்ந்த காந்தியவாதியான வைத்தியநாத ஐயர் தாழ்த்தப்பட்டோரின் ஆலயப்பிரவேசத்துக்கு ஆதரவாக தொடர்ந்து பரப்புரை செய்துவந்தார். 08.07.1939 அன்று தடையை மீறி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தன் நண்பர்களுடன் சேர்ந்து கோயிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்தார். இதன் விளைவாக அவர் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ள வெண்டியிருந்தது. அதைத் தொடர்ந்து சென்னை மாகாண ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம், 11.07.1939 அன்று ஆலயப்பிரவேச சட்ட மசோதாவை நிறைவேற்றியது. வைத்தியநாதரின் செயலைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் 22.07.1939 அன்று அரிஜன் இதழில் காந்தியடிகள் ஒரு குறிப்பை எழுதினார். அதைத் தொடர்ந்து தமிழகத்தின் எல்லா முக்கிய நகரங்களிலும் அடுத்தடுத்து ஆலயப்பிரவேசங்கள் தொடர்ந்தன. காங்கிரஸ் தலைவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்களோடு எதிர்ப்புகளை மீறி ஆலயப்பிரவேசம் செய்யத் தொடங்கினர்.  அரசியல் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துவந்த தியாகராஜன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நண்பர்களை அழைத்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்று ஆண்டிப்பட்டி ஜம்புலிபுத்தூர் பெருமாள் கோவிலுக்குள் பிரவேசித்து ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தினார். அரசியல் விடுதலையோடு சமூக விடுதலையும் முக்கியமானது என்னும் கருத்தை தன் ஒவ்வொரு மேடையுரையிலும் தொடர்ந்து வலியுறுத்தினார்.

சமத்துவ சிந்தனை சிறார்களிடையில் பள்ளிப்பருவத்திலேயே விதைக்கப்பட வேண்டும் என்பதில் தியாகராஜனுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களே மிகச்சிறந்த அறிவும் நல்லொழுக்கமும் தேசபக்தியும் கொண்ட மாணவர்களை உருவாக்கமுடியும் என்று அவர் நினைத்தார். ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளியாசிரியர்கள் அனைவருக்கும் ஒரு பொதுவான கடிதத்தை எழுதி அனுப்பிவைத்தார். மாணவர்களின் நெஞ்சில் நல்லெண்ணங்களைப் பதியவைக்கவேண்டிய முயற்சிகளில் ஒவ்வொரு ஆசிரியரும் ஈடுபடவேண்டிய முக்கியத்துவத்தையும் பொறுப்பையும் ஆசிரியர்கள் உணரும் வகையில் அக்கடிதம் அமைந்திருந்தது. ஏற்றத்தாழ்வுக்கு இடம் கொடுக்காமல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் பிற மாணவர்களும் இணைந்து பேசிப் பழகும் சூழலை வளர்த்தெடுப்பதில் ஆசிரியர்கள் ஆற்றவேண்டிய கடமையைப்பற்றியும் குறிப்பிட்டிருந்தார். ஆசிரியர்கள் மேற்கொள்ளும் அத்தகு முயற்சிகளால் சாதிவேறுபாடு நிலவாத சமூகத்தை உருவாக்கிவிட முடியும் என தியாராஜன் கருதினார். அவருடைய சுற்றறிக்கையின் விளைவாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த எல்லா பள்ளிகளிலும் சுமுகமான சூழல் நிலவத் தொடங்கியது.

1942ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வார்தாவில் கூடிய காங்கிரஸின் செயற்குழு வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான ஆயத்தத்தைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 08.08.1942 அன்று பம்பாயில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் பேசிய காந்தியடிகள் ’செய் அல்லது செத்துமடி’ என்று முழங்கி ’வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைத் தொடங்கிவைத்தார். உடனடியாக அரச்சு காந்தியடிகளையும் பிற தலைவர்களையும் கைது செய்து வெவ்வேறு சிறைகளில் அடைத்தது. காங்கிரஸ் கட்சியும் தடை செய்யப்பட்டது.  நாடு முழுதும் போராட்டங்களும் கிளர்ச்சிகளும் தன்னிச்சையாக வெடித்தன.  போராட்டச்செய்தியை அறிந்த தியாகராஜன் காங்கிரஸ் தொண்டர்களையும் பொதுமக்களையும் ஒருங்கிணைத்து தேனியில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி எழுச்சியோடு உரையாற்றினார். அவருடைய உணர்ச்சிமயமான உரை அனைவரையும் கிளர்ந்தெழச் செய்தது. அவர் தலைமையில் நகரத்துக்குள் எதிர்ப்பு ஊர்வலமொன்றும் நடைபெற்றது. அதைக் கண்டு வெகுண்டெழுந்த காவல்துறையினர் தேனி நகரில் சந்தை நடப்பதற்கு ஊறு விளைவித்தார் என்றும் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துகளைப் பரப்பினார் என்றும் பொய்க்குற்றம் சுமத்தினர் நீதிமன்றம் அவருக்கு சிறைத்தண்டனை விதித்தது.

அடுத்தடுத்த சிறைவாசத்தாலும் போராட்டத்துக்கான பயணங்களாலும் . தியாகராஜனால் தன் குடும்பத்தைச் சரிவர கவனிக்க இயலாமல் போனது. அவருடைய துணைவியார் தம் பிள்ளைகளோடு தாய்வீட்டில் சிறிது காலமும் மாமனார் வீட்டில் சிறிது காலமும் என மாறிமாறி வாழ்ந்து அனைவரையும் காப்பாற்றினார். அச்சூழல் தியாகராஜனுக்கு ஆறாத துயரத்தை அளித்ததென்றாலும், அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழி தெரியவில்லை. தேசத்துக்கு தான் ஆற்றவேண்டிய கடமையே அவரை முன்னோக்கிச் செலுத்தும்  விசையாக இருந்தது. 18.02.1947 அன்று துக்கத்தின் உச்சத்தில்  இருந்த கணத்தில், தன்னுடைய தினசரி நாட்குறிப்பில் “வீட்டிலோ மனைவி துணையில்லாமல் கஷ்டப்படுகிறார். குழந்தைகளுக்கோ அடிக்கடி நோய் வந்துவிடுகிறது. நானோ வாரத்துக்கு ஒரு முறைதான் வீட்டுக்குச் செல்ல முடிகிறது. ஏழை காங்கிரஸ்காரர்களுக்கு குடும்பம் இருப்பது துரதிருஷ்டம்தான். காங்கிரஸ் தொண்டர்களைக் கல்யாணம் செய்துகொள்ளும் பெண்கள் பாவம் செய்தவர்கள்” என்று எழுதி மனபாரத்தைத் தணித்துக்கொண்டார்.

விடுதலைக்கான நாள் குறிக்கப்பட்டதுமே, இந்திய அரசு நிர்வாகப்பணிகளை எளிதாக்கும் வகையில் மொழிகளின் அடிப்படையில் மாநிலங்களைச் சீரமைக்கும் பணியைத் தொடங்கியது. அப்பணிகள் நடைபெற்று வரும் நேரத்திலேயே தமிழர்கள் வாழும் நாகர்கோவில் பகுதியை கேரள மாநிலத்தோடு இணைத்துக்கொள்ளும் முயற்சியில் திருவிதாங்கூர் மன்னர் திட்டமிட்டபோது, அதற்கு எதிராகவும் தேவிகுளம், பீர்மேடு, இடுக்கி, மூணார் ஆகிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும் என்றும் தியாகராஜன் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்தார். மக்களைத் திரட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஊர்வலங்களையும் பொதுக்கூட்டங்களையும் நடத்தினார். 25.06.1947 அன்று அவரே ஒரு துண்டுப்பிரசுரத்தை எழுதி வெளியிட்டு பொதுமக்களின் ஆதரவைக் கோரினார். ‘திருவிதாங்கூர் திவானின் தனிச்சுதந்திர பிரகடனத்தை எதிர்த்துப் போராட்டம்’ என்று தலைப்போடும் ’என்.ஆர்.தியாகராஜன், தலைவர், மதுரை ஜில்லா காங்கிரஸ் கமிட்டி’  என்ற அடிக்குறிப்போடும் வெளிவந்த அப்பிரசுரம் அனைவருடைய உள்ளார்ந்த விழைவின் வெளிப்பாடாக அமைந்தது.

“திருவிதாங்கூர் திவான் சர்வாதிகாரி சர்.சி.பி.ராமசாமி அய்யரின் தனிச்சுதந்திரப் பிரகடனத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யவும், அஹிம்சா முறையில் தடையுத்தரவுகளை மீறவும், வரி மறுக்கத் தூண்டவும், நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழர் வாழும் பகுதிகளையும் பெரியகுளம் தாலுகாவைச் சேர்ந்த மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளையும் அங்கு வாழும் பதினைந்து லட்சம் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டாரின் சொத்துகளுக்கும் விடுதலை அளித்து தமிழ்நாட்டுடன் சேர்க்கவும், திருவிதாங்கூர் சமஸ்தான மக்களின் இஷ்டத்தின் மீது இந்திய யூனியனில் திருவிதாங்கூரை ஓர் அங்கமாக்கவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உத்தரவை எதிர்பார்த்து நம் ஜில்லாவின் ஒரு லட்சம் பேர் கொண்ட தொண்டர் படை திரட்டப்பட்டு வருகிறது. இந்திய ஐக்கியத்துக்காக நடத்தப்படும் இந்த முதல் புனிதப் போராட்டத்தில் கலந்து தியாக நெருப்பாற்றில் எதிர்நீச்சலடிக்க மதுரை ஜில்லா மக்கள் முன்வந்து ஆங்காங்குள்ள நகர, தாலுகா காங்கிரஸ் கமிட்டிகளில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்”

அந்தத் துண்டுப் பிரசுரத்தின் விளைவாக, அவருடைய குரல் அழுத்தம் திருத்தமாக எங்கெங்கும் ஒலித்தது. மக்கள் ஆதரவும் பெருகியது. அவருடைய கோரிக்கைக்கு மதிப்பளித்து அன்றைய சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆயினும், இறுதிக்கட்டத்தில் நாகர்கோவில் மட்டுமே தமிழ்நாட்டின் எல்லைக்குள் கொண்டுவரப்பட்டது. இதோ நிகழ்ந்துவிடும், இதோ நிகழ்ந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட பிற இணைப்புகள் கடைசிவரையில் நிகழாமலே போனது. தியாகராஜனின் கனவு, கனவாகவே கலைந்தது.

காந்தியக்கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த தியாகராஜன் காந்தியக்கொள்கைகளைப் பரப்பும் வகையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே.கல்லுப்பட்டியில் கோ.வெங்கடாசலபதி அவர்கள் உருவாக்கிய காந்திநிகேதன் ஆசிரம வளர்ச்சிக்கு பக்கத்துணையாக நின்று எல்லா உதவிகளையும் செய்தார். திண்டுக்கல் காந்தி கிராமத்தில் உருவான கஸ்தூர்பா மருத்துவமனைக்கும் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்தார்.

1944ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், ஆங்கிலேய அரசால் தண்டவாளங்கள் அகற்றப்பட்டு மதுரை – போடி ரயில் நிறுத்தப்பட்டது.  சுதந்திரமடைந்த பிறகு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி மதுரை – போடி ரயில்போக்குவரத்தை மறுபடியும் தொடங்கும்படி செய்தார் தியாகராஜன். பெரியார் நீர் மின்நிலையத் திட்டமும் பி.டி.ஆர்.கால்வாய் திட்டமும் நிறைவேறுவதற்கு தியாகராஜனே காரணமாக இருந்தார். 

நாடு சுதந்திரமடைந்த பிறகு 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேனி தொகுதியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விவசாயிகளின் பாசனத்துக்காக வைகை அணையைக் கட்டும் முயற்சியில் பெரிதும் பங்கு வகித்தார். மைசூருக்கு அருகில் கிருஷ்ணசாகர் அணையை ஒட்டி பிருந்தாவனம் என்னும் பெயரில் பூங்கா அமைக்கப்பட்டதுபோல, வைகை அணையை ஒட்டி கண்ணைக் கவரும் வகையில் எழில்மிக்க ஒரு பூங்கா  உருவாக்கப்பட்டது. தேனி-அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர்த்திட்டம் நிறைவேற்றப்பட்டது. பலருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் வகையில் தேனி தொழிற்பேட்டையை உருவாக்கினார். போஜராஜ் டெக்ஸ்டைல்ஸ் ஆலையின் உருவாக்கத்திலும் அவருடைய பங்களிப்பு இருந்தது.

 

 

 

என்.ஆர்.தியாகராஜன்:  பொதுமக்களால் என்.ஆர்.ட்டி. என அன்போடு அழைக்கப்படும் என்.ஆர்.தியாகராஜன் தேனி அருகில் இலட்சுமிபுரத்தில் ரத்தினசாமி நாயுடு – வெங்கட்டம்மாள் இணையருக்கு 16.04.1913 அன்று பிறந்தார்.  இளம்பருவத்திலிருந்தே தேச விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். 1957 -1962 காலகட்டத்தில் தேனி தொகுதி சார்பாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றினார். மதுரை மாவட்டப் பகுதிகளில் பல பள்ளிகளின் உருவாக்கத்திலும் குடிநீர்த்திட்டங்களை நிறைவேற்றுவதிலும் முக்கியப் பங்காற்றினார். 1964-1968 காலகட்டத்தில் மேலவை உறுப்பினராகப் பணியாற்றினார். 1957இல் தொடங்கப்பட்ட தேனி கூட்டுறவுச்சங்கத்தின் தலைவராக இறுதிவரை தொண்டாற்றினார். அப்பகுதியில் பல விவசாய கூட்டுறவு வங்கிகள் உருவாகவும் காரணமாக இருந்தார்.  எதிர்பாராத விதமாக 27.04.1969 அன்று மறைந்தார். சிறைத்தண்டனையின்போது மாதக்கணக்கில் கால்களில் பிணைக்கப்பட்டிருந்த இரும்புச்சங்கிலியின் காரணமாக ஏற்பட்ட தழும்புகள் இறுதிவரை மறையாத அடையாளமாக நீடித்தது. தியாகராஜன் அவர்களின் நூற்றாண்டையொட்டி என்.ஆர்.டி.: தேனியில் ஒரு தியாக வரலாறு என்னும் சிறு பிரசுரத்தை முகம்மது சபி என்னும் சமூகச் செயல்பாட்டாளர் 2013இல் எழுதி வெளியிட்டார்.

(சர்வோதயம் மலர்கிறது – டிசம்பர் 2024)