Home

Sunday, 8 December 2024

இரண்டு ஓவியங்கள்

  

ட்டி.என்.ஏ.பெருமாள் என்கிற தஞ்சாவூர் நடேசாச்சாரி அய்யம்பெருமாள் என்பவர் இந்தியாவின் மிகச்சிறந்த கானுயிர் புகைப்படக்கலைஞர். 2017ஆம் ஆண்டில் தம் எண்பத்தைந்தாம் வயதில் அவர் மறைந்தார். வாழ்க்கையனுபவக் கட்டுரைகளைப் விரும்பிப் படிக்கும் வாசகர்களுக்கு அவர் எழுதிய ’கானுயிர் புகைப்படக்கலைஞனின் நினைவுக்குறிப்புகள்’ (Reminiscences of a wildlife photographer) என்னும் புத்தகம் மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.

அவரைச் சந்தித்து உரையாடிய நினைவலைகளை ஐந்தாறு  ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் தொடர்ச்சியாக சில கட்டுரைகளாக தமிழினி என்னும் இணைய இதழில் எழுதிவந்தார். காட்டில் வாழும் ஆந்தைகளைப் படம் பிடிக்கச் சென்ற அனுபவம் சார்ந்து இருவரும் நிகழ்த்திய உரையாடலின் பதிவு ஒரு புனைகதையை வாசிக்கும் அனுபவத்துக்கு நிகரான ஒரு படைப்பாகும்.

எரிக் ஹஸ்கின் என்ற புகைப்படக்காரரைப்பற்றிய குறிப்பொன்று அந்த உரையாடலில் இடம்பெற்றிருக்கிறது. அவரும் பெருமாளைப்போலவே ஆந்தைகளைப் படம் எடுக்கும் கானுயிர் புகைப்படக்கலைஞர். ஒருமுறை அவர் காட்டுக்குள் இரவு வேளையில் காத்திருந்து ஆந்தையைப் படம் எடுத்தபோது, அக்கருவியில் வெளிப்பட்ட வெளிச்சத்தைக் கண்டு அஞ்சிய ஆந்தை வேகமாக வந்து தாக்கியதில் அவர் தன்னுடைய ஒரு கண்ணையே இழந்துவிட்டார். அதற்குப் பிறகும் அவர் சிறிதும் ஆர்வம் குன்றாமல் வாழ்நாள் முழுதும் கானுயிர் புகைப்படக்கலைஞராகவே தொடர்ந்தார். அந்த அனுபவத்தை நினைவூட்டும் விதமாக அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலுக்கு AN EYE FOR A BIRD என்னும் தலைப்பைச் சூட்டினார்.

ஹஸ்கினின் ஈடுபாட்டையும் அர்ப்பணிப்புணர்வையும் படித்தபோது என் மனம் சிலிர்த்தது. அதற்குப் பிறகு சிறிது காலம் தொடர்ச்சியாக என்னுடைய உரையாடலில் அவருடைய பெயர் இடம்பெறத் தொடங்கிவிட்டது. ஒரு கலைக்காக தன் வாழ்க்கையையே ஒப்புக் கொடுத்தவராக அவர் என் மனத்தில் இடம் பிடித்துவிட்டார்.

நண்பர் விட்டல்ராவைச் சந்திக்கச் சென்றிருந்த ஒரு சமயத்தில் பெருமாளைப்பற்றியும் ஹஸ்கினைப்பற்றியும் குறிப்பிட்டேன். அவருக்கு அவ்விருவரைப்பற்றியும் ஏற்கனவே தெரிந்திருந்தது. ”கானுயிர் புகைப்படங்களுக்காக கண்ணை மட்டுமல்ல, தம் உயிரையே பறிகொடுத்த ஒரு கலைஞரை எனக்குத் தெரியும்” என்றார் விட்டல்ராவ்.

”உயிரையா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டேன். “ஆமாம்” என்று சொன்னார் விட்டல்ராவ். அந்தப் பதிலைக் கேட்டு ஒருகணம் பேச்சற்று உறைந்து விட்டேன். “எப்ப சார் பார்த்தீங்க? எந்த ஊர்க்காரர்? எப்படி இறந்தார்?” என்று கேள்விகளை அடுக்கினேன்.

“இருங்க, இருங்க, சொல்றேன்” என்று என்னை அமைதிப்படுத்தினார் விட்டல்ராவ்.

“நான் சென்னையில பகல் வேளையில டெலிபோன் ஆபீஸ்ல வேலை பார்த்துகிட்டே, சாயங்கால வேளையில ஓவியம் கத்துகிட்டிருந்தேன்.  அந்த சமயத்துல ஆர்ட்ஸ் ஸ்கூல்ல மாலை வேளையில ஆர்வத்தோடு வந்து கத்துக்கிறவங்களுக்காக ஒரு டிப்ளமோ கோர்ஸ் நடத்திகிட்டிருந்தாங்க. அங்கதான் நானும் படிச்சேன். டிப்ளமா வாங்கின பிறகு மெட்ராஸ் ஆர்ட் க்ளப்ல சேர்ந்து ஓவியம் போட்டிட்டிருந்தேன். அப்ப தனுஷ்கோடிதான் அந்த க்ளப்புக்கு செக்ரட்டரியா இருந்தாரு.”

“சரி”

“அந்த நேரத்துல ஃப்ரிட்ஸ் க்ரம்ப்பெ (FRIDZ KRUMPE)ன்னு ஒரு கானுயிர் புகைப்படக்கலைஞர் சென்னையில இருந்த மேக்ஸ்முல்லர் பவன்ல தங்கியிருந்தாரு. உலக அளவுல புகழ் பெற்ற பெரிய கலைஞர். யானைகளை படம் எடுக்கறதுல அவருக்கு ஆர்வம் அதிகம் உண்டு. வெவ்வேறு  காடுகள்ல வெவ்வேறு விதமா எடுத்த யானைகள் படங்களையெல்லாம் அவர் ஒரு ஆல்பமா வச்சிருந்தாரு. அவருக்கு ஓவியத்துலயும் ஆர்வம் உண்டு. எங்க க்ளப் செக்ரட்டரி தனுஷ்கோடி அவருடைய பெஸ்ட் ஃப்ரண்ட். தனுஷ்கோடிக்கும் ஜெர்மனி மொழி நல்லா தெரியும். பல ஜெர்மனி மொழி நாடகங்கள்ல அவரு நடிச்சிருக்காரு. அவரைப் பார்த்து பேசறதுக்காக க்ரம்ப்பெ அடிக்கடி எங்க க்ளப்புக்கு வந்து போவாரு.”

“சரி”

“ஒரு தரம் அவர் யானைகளை நேருல பார்த்து படம் புடிக்கிறதுக்காகக் முதுமலைக்குப் போயிருந்தாரு. ஒரு காட்டு யானையைப் படம் எடுக்கற சமயத்துல, யானை அவர் பக்கமா திரும்பிப் பார்த்துட்டுது. நம்மை என்னமோ செய்யப் போறாருங்கற சந்தேகத்துல,  அந்த யானை வேகமா ஓடி வந்து அவரை முரட்டுத்தனமா தாக்கிடுடிச்சி. அவரால தப்பிச்சி ரொம்ப தூரம் ஓட முடியலை. இக்கட்டான ஒரு இடத்துல சிக்கிட்டாரு. யானை அவரை தும்பிக்கையால தூக்கி போட்டு மிதிச்சி சாகடிச்சிடுச்சி.”

“ஐயையோ”

விட்டல்ராவுடைய விவரணையைக் கேட்கக்கேட்க என் அடிவயிறு கலங்கியது. ஒரு படத்துக்காக உயிரைப் பறிகொடுத்தவர்கள் இங்கும் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வியப்பாகவும் இருந்தது.

“அப்புறம்?”

“அப்புறம் என்ன? வனத்துறை ஆட்கள் வழியா செய்தி கிடைச்சி மேக்ஸ்முல்லர் பவன் காரங்க முதுமலைக்குப் போனாங்க. எம்பசி ஆட்களும் வந்தாங்க. அவருடைய உடலை வாங்கி மரியாதையோடு அடக்கம் செஞ்சாங்க. படம் எடுக்கறதுக்காக க்ரம்ப்பெ எடுத்துட்டு போயிருந்த பொருட்களையெல்லாம் வனத்துறை அதிகாரிகள் மேக்ஸ்முல்லர் பவன்கிட்ட ஒப்படைச்சாங்க. அவர் தங்கியிருந்த அறையிலயும் இன்னும் சில பொருட்கள் கிடைச்சது. பவன் பொறுப்பாளர்கள் எல்லாத்தயும் ஒன்னா சேர்த்து எடுத்துவந்து எங்க மெட்ராஸ் ஆர்ட் க்ளப்ல ஒப்படைச்சி, அத வித்து வரக்கூடிய பணத்தை வச்சி க்ரம்ப்பெ பேரால ஒவ்வொரு ஆண்டும் ஒரு விருது கொடுக்கணும்னு கேட்டுகிட்டாங்க.”

“நல்ல திட்டம்தான் சார்”

“அதுக்கப்புறம் க்ளப் முறையான ஒரு அறிவிப்பை வெளியிட்டு ஏலத்துக்கு ஏற்பாடு செஞ்சாங்க. நானும் என் நண்பர்களும் அந்த ஏலத்துக்குப் போயிருந்தோம். பல பேரு   பல பொருட்களை கேட்டு வாங்கினாங்க. நான் சில ப்ரஷ்கள வாங்கிகிட்டேன். அந்த ஏலத்தின் வழியா கணிசமான ஒரு தொகையைத் திரட்டமுடிஞ்சிது. பவன்ல இருந்த ஆட்களும் தம்முடைய பங்களிப்பா ஒரு தொகையைக் கொடுத்தாங்க. எல்லாத்தையும் சேர்த்து ஒரு நல்ல தொகையைத் திரட்டமுடிந்தது. அந்த மொத்த தொகையையும் வங்கி இருப்புல வச்சி, அதன் மூலமா கிடைக்கக்கூடிய வட்டித்தொகையை ஆண்டுக்கு ஒரு தரம் எடுத்து  க்ரம்ப்பெ பேருல ஒரு ஓவியப்போட்டி நடத்தி விருது கொடுக்கலாம்னு ஒரு முடிவெடுக்கப்பட்டது. அந்தப் போட்டி  எங்க மெட்ராஸ் ஆர்ட் க்ளப் மெம்பர்ஸ்க்கு மட்டுமேயான ஒரு போட்டி. எங்களுக்குள்ள ஒரு போட்டி நடத்தி,  அதுல சிறந்த ஓவியரைத் தேர்ந்தெடுத்து கெளரவிக்கணும்ங்கறது அவுங்க எண்ணம். அந்தப் போட்டியில சென்னையில இருக்கக்கூடிய பிற அமைப்புகளுக்கு இடமில்லை.”

”போட்டிக்கு வேற எந்த நிபந்தனையும் இல்லையா?”

“வாட்டர் கலர் பெயின்ட்டிங்காதான் இருக்கணும்ங்கறதுதான் ஒரே நிபந்தனை. வேற எதுவும் இல்லை. வாட்டர்கலர் பெயின்ட்டிங் போட பொருத்தமான தாள் அந்தக் காலத்துல இந்தியாவுல கிடையாது. லண்டன்லேர்ந்துதான் வரணும். அதுக்கு வாட்மன் ஷீட்னு பேரு. விலையும் அதிகம். ஆனாலும் வேற வழி இல்லாததால, காசிருக்கற காலத்துலயே நாலஞ்சி தாளுங்க மொத்தமா வாங்கி வச்சிகிட்டு ஒன்னொன்னா வரைவோம்.  பிறகு ரொம்ப காலம் கழிச்சி பாண்டிச்சேரியில ஹேண்ட்மேட் பேப்பர்னு ஒரு தாளை தயார் செஞ்சி விக்க ஆரம்பிச்சாங்க. அது கொஞ்சம் விலை மலிவு. ஆனாலும் வாட்டர்கலர் பெயின்ட்டிங்க்குக்கு அது பொருத்தமா இருக்கும். அதனால  கொஞ்சம் கொஞ்சமா எல்லாருமே ஹேண்ட் மேட் பேப்பருக்கே மாறிட்டாங்க.”

“நீங்க போட்டியில கலந்துகிட்டதுண்டா?”

“போட்டியில ஓவியம் தீட்டறதுங்கறது ஒரு மகத்தான அனுபவம். அதுல பங்கெடுத்துகிட்டவங்களாலதான் அதை உணரமுடியும். அந்தப் போட்டி ஆரம்பிச்ச வருஷத்துலேர்ந்தே நான் தொடர்ச்சியா பங்கேற்று ஓவியம் தீட்டியிருக்கேன்.”

“பரிசு வாங்கியிருக்கீங்களா?”

“போட்டி ஆரம்பிச்சி முதல் மூனுநாலு வருஷத்துல எனக்கு எந்தப் பரிசும் கிடைச்சதில்லை. ஜெயராமன், கே.எஸ்.பாலகிருஷ்ணன், அச்சுதன் கூடலூர் எல்லாரும் வாங்கினாங்க.  அதுக்கடுத்த வருஷத்துல நான் வரைந்த ஓவியத்துக்கு முதல் பரிசு கிடைச்சது”

“என்ன மாதிரியான ஓவியம் போட்டீங்க சார், ஞாபகம் இருக்குதா?”

“நல்லாவே ஞாபகம் இருக்குது. அன்னைக்கு ஓவியர் அந்தோணிதாஸ்தான் வகுப்புக்கு வந்திருந்தார். ஒரு மாடலை வரவழைச்சி நிக்கவச்சி போட்டிக்கான ஓவியம் தீட்டணும்கறதுதான் அன்னைக்கு ஒரிஜினல் திட்டமா இருந்தது. துரதிருஷ்டவசமா அன்னைக்கு அந்த மாடல் வரலை. ஒருமுறை அறிவிச்ச போட்டியை ஒத்திவைக்க அந்தோணிதாஸ்க்கு விருப்பமில்லை. திட்டமிட்ட ஒரு விஷயத்தை நடத்தியே முடிக்கணும்ங்கறதுல ரொம்ப தீர்மானமா இருந்தாரு அவரு.”

“நல்ல கொள்கைதான். வேற மாடலை ஏற்பாடு செஞ்சாரா?”

“அப்படியெல்லாம் செய்யலை. அந்த நேரத்துல அவருகிட்ட வாட்69 விஸ்கி பாட்டில் ஒன்னு காலியா இருந்தது. அந்த காலி பாட்டிலை கொண்டுவந்து மேசை மேல வச்சாரு. எங்க க்ளப்ப சுத்தி வேலியோரத்துல  ரோஜாப்பூ கலர்ல சின்னச்சின்னதா பேரு தெரியாத பூக்கள் பூத்திருந்தன. அந்தப் பூக்களையும் இலைக்கொத்துகளையும் கொண்டுவந்து அந்த விஸ்கி பாட்டிலுக்குள்ள வச்சி நிரப்பச் சொன்னாரு. மதுப்புட்டியிலிருந்து பூக்களும் இலைகளும் முளைச்சி நிக்கிறமாதிரியான தோற்றம். அதுதான் மாடல், அதை வரைங்கப்பான்னு சொல்லிட்டாரு அந்தோணிதாஸ்.”

படைப்பூக்கம் மிக்க ஒருவரால் மட்டுமே அப்படி யோசிக்கமுடியும் என்று தோன்றியது. அப்படி ஒரு திட்டத்தை யோசித்ததற்காகவே அந்த ஆசிரியரைப் பாராட்டவேண்டும் போல இருந்தது.

“பூக்கள் செருகப்பட்ட மதுப்புட்டி. நல்ல க்ரியேட்டிவான மூளைதான் சார் அவருக்கு. அழகா சிம்பாலிக்காவும் இருக்குது. அந்த இடத்துல  வேற யாரா இருந்தாலும் போட்டியையே தள்ளித்தான் வச்சிருப்பாங்க. அபூர்வமா சில பேராலதான் இப்படி யோசிக்கமுடியும்”

“அந்தோணிதாஸ் மிகச்சிறந்த கலைஞர். அப்படிப்பட்ட ஆசிரியர்கிட்ட நான் ஓவியம் கத்துகிட்டேன்ங்கறது என்னுடைய அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும்”

“நீங்க அந்தப் புட்டியை வரைஞ்சீங்களா?”

”அந்த கான்செப்ட் எனக்கு ரொம்ப இன்ட்டரஸ்டிங்கா இருந்தது. ஒவ்வொரு பூவுடைய நிறத்தையும் வேறுபடுத்திக் காட்டி நான் அந்த ஓவியத்தை ரொம்ப உற்சாகத்தோடு வரைஞ்சி முடிச்சேன். அந்தோணிதாஸ்க்கு அந்தப் படம் ரொம்ப புடிச்சிருந்தது. அந்தப் போட்டியில அந்த ஓவியத்துக்குத்தான் க்ரம்ப்பெ விருது  கிடைச்சது.”

“அம்பது வருஷத்துக்கு முன்னால விருது வாங்கிய கதையா இருந்தாலும், நீங்க சொல்றதை கேக்கும்போது என்னமோ நேத்து நடந்த போட்டியில கலந்துகிட்டு விருது வாங்கிட்டு வந்த கதையைக் கேக்கறமாதிரி இருக்குது. அந்த நேரத்துல எப்படி உங்க மனசுல என்ன ஓடிச்சி  சார்?”

“ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது பாவண்ணன். நாம செஞ்சிட்டிருக்கிற வேலை உண்மையிலேயே தகுதியான ஒரு வேலைதான்ங்கறத இந்த மாதிரியான நேரங்கள்லதான் நம்மால உணரமுடியும்.”

“என்ன பரிசு கொடுத்தாங்க?”

“ஒரு தங்கப்பதக்கமும் ஒரு சான்றிதழும் கொடுத்தாங்க”

“கண்காட்சி முடிஞ்ச பிறகு அந்த ஓவியத்தை என்ன செஞ்சீங்க? வீட்டுக்கு கொண்டுவந்துட்டீங்களா?”

“ஆமாம்”

எனக்கு அந்த ஓவியத்தைப் பார்க்கவேண்டும் என்று ஆவலாக இருந்தது. “இருக்குதா சார்? இன்னும் வச்சிருக்கீங்களா?” என்று அவசரமாகக் கேட்டேன்.

விட்டல்ராவ் இல்லை என்பதன் அடையாளமாக இரு கைவிரல்களையும்     விரித்து அசைத்தார். த்ச் என்று நாக்கு சப்புக் கொட்டியபடி உதட்டைப் பிதுக்கினார்.

“ஏன் சார்? என்ன செஞ்சீங்க?”

“அப்ப சென்னை ஜி.எச்.ல வரதராஜன்னு ஒரு சீஃப் சர்ஜன் இருந்தார். இக்கட்டான பல நேரங்கள்ல அவர் எனக்கு உதவி செஞ்சிருக்காரு. அதுக்கு ஒரு நன்றிக்கடனா, அந்த ஓவியத்தை அவருக்கு அன்பளிப்பா கொடுத்துட்டேன். அவர் அந்த ஓவியத்தை தன்னுடைய அறையிலயே மாட்டி வச்சிகிட்டார்.”

“அவர் ஓவியத்துல்ல ஈடுபாடுள்ளவரா?”

“ஆமாமாம். நல்ல ரசனை உள்ள மனிதர்தான் அவரு. அவருடைய மனைவி கூட கலைநாட்டம் உள்ளவருதான். நடிப்பு மேல அவருக்கு ரொம்ப பிரியமுண்டு.  ஜெர்மன் மொழியை நல்லா பேசுவாங்க. தனுஷ்கோடி கூட சேர்ந்து நிறைய நாடகங்கள்ல நடிச்சிருக்காங்க.”

“அவுங்க பேரு என்ன சார்?”

“சுதா. என் மனைவிக்கு பெஸ்ட் தோழி அவுங்க. வரதராஜனுக்கும் சுதாவுக்கும் ஒரு மகன் இருந்தான். அவன் பேரு ரகு. அவனும் படிச்சி முடிச்சி அப்பாவை மாதிரியே டாக்டராயிட்டான். அம்மா பேருலயே சுதா சர்ஜிக்கல் கிளினிக்னு ஒரு கிளினிக் வச்சி நடத்தறான்.”

“அந்த பூப்புட்டி ஓவியம் இன்னும் அந்த கிளினிக்ல இருக்குமா?”

“தெரியலையே பாவண்ணன். வரதராஜன் நடத்திய கிளினிக்ல நான் அந்தப் படத்தைப் பார்த்திருக்கேன்.  ரகு வச்சிருக்காரா, இல்லையான்னு தெரியலை. நான் பார்த்ததில்லை.”

“அந்த ஓவியத்துடைய ஞாபகமா  உங்ககிட்ட ஒன்னும் இல்லையா சார்?”

விட்டராவ் உதட்டைப் பிதுக்கியபடி புன்னகைத்தார். “என்னுடைய ஞாபகத்தைத் தவிர, வேற எதுவுமே எங்கிட்ட இல்லை. அந்தக் காலத்துல கேமிரா விலையெல்லாம் ரொம்ப அதிகம். எனக்குக் கிடைச்ச குறைச்சலான சம்பளத்துல ஒரு சாதாரணமான கேமிரவைக்கூட வாங்கற நிலையில நான் இல்லை.  எல்லாக் கஷ்டங்களுக்கும் நடுவுலயும் ஏதோ படிச்சிட்டிருந்தேன், எழுதிட்டிருந்தேன். ஓவியம் போட்டிட்டிருந்தேன். அதுவே எனக்கு பெரிசா தெரிஞ்சது. அந்தக் காலத்துல எல்லாரும் ப்ளாக் அண்ட் ஒயிட் கேமிராவைத்தான் வாங்கி பயன்படுத்திகிட்டிருந்தாங்க. ஒரு நண்பர் எனக்காக அந்த வாட்டர் கலர் பெயிண்ட்டை ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொடுத்தார். அதுதான் என்கிட்ட இருக்கிற ஒரே அடையாளம். ஆனா ஒரு கலர் படத்தை ஒரு கறுப்புவெள்ளை படமா பார்க்கறதுக்கு சங்கடமாதான் இருக்கும்.”

“பரவாயில்லை சார். ஒரு தரம் பார்த்தா நல்லா இருக்குமேன்னு நெனச்சேன். எப்பனா நேரம் இருக்கும்போது, எனக்காக ஒருதரம் தேடி எடுத்து வைங்க சார்.”

“இருக்கும். இருக்கும். எங்கயாவது ஒரு பொட்டிக்குள்ள இருக்கும். தேடிப் பார்த்து எடுத்துவைக்கறேன்”

நண்பர்களோடு சேர்ந்தும் தனியாகவும் பலமுறை ஓவியக் கண்காட்சி வைத்த அனுபவங்களையெல்லாம் அவர் ஏற்கனவே பலமுறை என்னிடம் சொன்னதுண்டு. அவையெல்லாம் அந்த நேரத்தில் நினைவுக்கு வந்தன. கண்காட்சி அனுபவங்களின் பின்னணியில் காலவெளி என்கிற தலைப்பில் அவர் ஒரு நாவலையும் நினைத்துக்கொண்டேன். எப்போதோ ஒருமுறை பெங்களூரில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்துகொண்டதைத் தெரிவித்த நினைவிருந்தது. ஆனால் முழு தகவல் நினைவில் இல்லை. அதைத் தெரிந்துகொள்ளும் ஆவலில் அதையே அவரிடம் ஒரு கேள்வியாகக் கேட்டேன்.

“அந்தக் காலத்துல தேசிய அளவுல ஒவ்வொரு ஆண்டும் மாக்ஸ்முல்லர் பவன்ல ஓவியக்கண்காட்சி நடக்கும். ஒவ்வொரு நகரத்துலயும் ஓவ்வொரு அமைப்பிலேருந்தும் சிறப்பான ஓவியங்களைச் சேகரித்து ஏதாவது ஒரு பவன்ல ஒரு கண்காட்சியை ஏற்பாடு செய்வாங்க. சுற்றுமுறையில ஒவ்வொரு வருஷமும் ஒரு ஊருல இருக்கற பவன்ல அந்தக் கண்காட்சி நடக்கும். ஒருமுறை பெங்களூருல இருக்கற மாக்ஸ்முல்லர் பவன்ல அந்த மாதிரியான ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அந்தக் கண்காட்சிக்கு நான் வரைஞ்ச ரெண்டு ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு போயிருந்தது. அதனால நான் அந்தக் கண்காட்சியில கலந்துக்கறதுக்காக சென்னையிலிருந்து பெங்களூருக்கு வந்திருந்தேன். ஒரு நண்பருடைய அறையில தங்கி, தெனமும் கெளம்பி கண்காட்சியை பார்க்கறதுக்காக வந்தேன். அந்தக் கண்காட்சியில ஏறத்தாழ இருநூறு ஓவியங்கள் வச்சிருந்தாங்க. என்னுடைய ரெண்டு படங்களும் அந்தக் கண்காட்சியில வித்துடுச்சி. ஒவ்வொரு ஓவியத்துக்கும் எனக்கு ஐநூறு ரூபா கிடைச்சது.”

“ஆயிரம் ரூபாயா?”

“ஆமாம். ஆயிரம் ரூபாய். அந்தக் காலத்துல பெரிய தொகை. ஆனால், அந்த ஓவியங்களை வரையறதுக்கும் அதுங்களுக்கு ஃப்ரேம் போட்டு பாதுகாக்கறதுக்கும் ஒவ்வொரு முறையும் படங்கள ஒரு இடத்துலேர்ந்து இன்னொரு இடத்துக்கு ரிக்‌ஷாவுல ஏத்தி எடுத்துட்டுப் போய் திரும்பி வர்ரதுக்கு நான் செஞ்ச செலவை நினைச்சிப் பார்த்தா, அதுவே பல ஆயிரம் தாண்டும்.”

”அந்தப் படங்கள் எல்லாம் யாரோ ஒருவருடைய வீட்டிலோ, அலுவலகத்திலோ, ஏதோ ஒரு சுவர்ல ஒரு ஒப்பனைப்பொருளா தொங்கிகிட்டிருக்கலாம். அந்த ஓவியத்தை நீங்கதான் வரைஞ்சீங்கங்கறதுக்கு அடையாளமா உங்க கையெழுத்து கூட அதுல இருக்கலாம். ஆனா, உங்ககிட்ட எதுவுமே இல்லையே, அதை நினைச்சாதான் சார் கஷ்டமா இருக்குது…”

“என்ன செய்யறது பாவண்ணன்? வேணும்ன்னு நான் எதையும் செய்யலை. ஆனா, எப்படியோ, ஒன்னொன்னா என் கையை விட்டு போயிடுச்சி.”

உரையாடிக்கொண்டே வந்த விட்டல்ராவ் திடுமென ஏதோ நினைவில் மூழ்கி அமைதியாகிவிட்டார். சில கணங்களுக்குப் பிறகு அவரை மீண்டும் உரையாடலில் இழுக்கும் பொருட்டு “உங்க படங்களைப் பார்க்க  முடியலைங்கறது மனசுக்குள்ள ஒரு குறையாவே இருக்குது. அது போகட்டும். நீங்க எந்த எந்த மாதிரியான தீம்ல உங்க ஓவியங்களை வரைஞ்சியிருக்கீங்க. அதைப் பத்தி சொல்லுங்க சார். என் கற்பனையில அதை நான் ஒரு ஓவியமா பார்த்துக்கறேன்” என்று கேட்டேன்.

“அதுவா?” என்று முகத்தை அசைத்தபடி புன்னகைத்தார். பிறகு ஒரு பெருமூச்சோடு “எல்லாப் படங்களைப் பத்திய  ஞாபகமும் மனசுல இருக்குதுன்னு சொல்லமுடியாது. ஆனா முக்கியமான சில படங்களைப்பத்திய ஞாபகம் மட்டும் தெளிவா இருக்குது” என்றார்.

“சொல்லுங்க சார். எது நல்லா ஞாபகத்துல இருக்குதோ, அதை மட்டும் சொல்லுங்க. அது போதும்” என்று நான் அவரை உற்சாகப்படுத்தினேன்.

“மெட்ராஸ் வெயில் எப்படி இருக்கும்ங்கறத காட்டறத ஒரு தீமா வச்சிகிட்டு ஒருமுறை ஒரு ஓவியம் வரைஞ்சிருந்தேன். கடுமையான வெயில். நடமாட்டமே இல்லாத ஒரு புறநகர்ப்பகுதி. மொத்த லேண்ட்ஸ்கேப்லயும் ஒரே ஒரு பனைமரம் மட்டும் உயரமா நிக்குது. அந்த மரத்தடியில பஸ்சுக்காக ஒரு குடும்பம் நின்னுகிட்டிருக்குது. புருஷன், பொண்டாட்டி ரெண்டு பேரும் வெயில்ல பஸ் வர்ர பாதையை பார்த்துகிட்டு நிக்கறாங்க. பையனும் பொண்ணுமா அவங்களுடைய ரெண்டு புள்ளைங்களும் ஒரே குடைக்குள்ள நிழல்ல ஒதுங்கி நிக்கிறாங்க.”

அவருடைய விவரணையைக் கேட்கக்கேட்க எனக்குள் உற்சாகம் பெருக்கெடுத்தோடியது.  “நீங்க சொல்லச்சொல்ல அந்த ஓவியத்தையே மனசுக்குள்ள பார்க்கிறமாதிரி இருக்குது சார். வாட்டர்கலர்ல அந்த வெயிலை எப்படி காட்டியிருப்பீங்கங்கறத கூட என்னால கற்பனை செஞ்சிக்கமுடியுது..” என்று மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.

“இன்னொரு ஓவியம் மெட்ராஸ் மழை எப்படி இருக்கும்ங்கறதை உணர்த்தற ஓவியம். சோன்னு கொட்டற மழையில ஒரு தெருவுக்குள்ள  பல பேரு சுத்தி சுத்தி நடக்கறாங்க. மழை பெய்யுதேன்னு மத்த ஊருல ஒதுங்கி நிக்கிறமாதிரி மெட்ராஸ்ல யாரும் ஒதுங்கி நிக்கற பழக்கமில்லை. நடக்கறது நடக்கட்டும்னு எறங்கி போயிட்டே இருப்பாங்க. அவுங்க எல்லாருக்கும் நேரம்தான் முக்கியம். அந்த மாதிரியான ஒரு மழை நாள்தான் அந்த ஓவியம். கொட்டோ கொட்டுனு அடிக்கிற மழையில ஏராளமான குடைகள் மட்டுமே தெரியற காட்சி  அது. விதம்விதமான குடைகள் தலைக்கு மேல விரிஞ்சிருக்குது. அதே மாதிரி எல்லாருடைய கால்கள்லயும் விதம்விதமான ஹவாய் செருப்புகள். யாருடைய முகமும் ஓவியத்துல கெடையாது. எல்லாருமே முதுகுப்பக்கம் மட்டுமே தெரியற மனிதர்கள்.”

விட்டல்ராவ் அளித்த தகவல்களை வைத்தே அந்த ஓவியம் எப்படி இருந்திருக்கக்கூடும் என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. சென்னையில் மழையைக் கண்டதும் மனிதர்கள் பொறுமையே இல்லாமல் நடந்துகொள்கிற விதத்தை நேரில் பலமுறை பார்த்த அனுபவத்தில் அவர் முன்வைக்கும் காட்சியை எளிதாக ஊகித்துக்கொள்ள முடிந்தது. “ரொம்ப அருமையான சித்தரிப்பு சார்” என்றேன். அவர் “அந்தக் காலத்துல ஓவியர் பணிக்கர் அந்த ஓவியத்தை ரொம்பவும் ரசிச்சிப் பார்த்தாரு.  என்னை பக்கத்துல அழைச்சி பாராட்டிட்டு போனாரு.” என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுபோல புன்னகைத்தபடியே சொன்னார்.

அடுத்த ஓவியத்துக்கான நினைவை அசைபோடும் விதமாக சில நொடிகள் பக்கவாட்டில் மேசை மீதிருந்த புத்தக அடுக்கை வேடிக்கை பார்த்தார்.

“இன்னொரு முக்கியமான ஓவியத்தைப் பத்தி சொல்லணும். ஒரு இறுதி ஊர்வலம்தான் அந்த ஓவியத்துடைய மையக்கரு.”

“என்ன, இறுதி ஊர்வலமா? ரொம்ப இண்டரஸ்டிங்கா இருக்குதே சார். அப்படி கூட வரைவாங்களா?”

“இதைத்தான் வரையணும், இதையெல்லாம் வரையக்கூடாதுன்னு சொல்றது மாதிரி ஏதாவது விதிமுறை இருக்குதா என்ன?”

“அப்படியெல்லாம் ஒன்னுமே கெடையாது சார். பூமிக்கு மேலே, வானத்துக்குக் கீழே எதை வேணும்ன்னாலும் வரையலாம்.”

“ஒரு பகல் நேரத்துல ஒரு பிராமணனுடைய இறுதி ஊர்வலம் போவுது. பாடையை தூக்கிட்டு போற நாலு பேரு. முன்னால கொள்ளிச்சட்டியோடு ஒருத்தர். பாடைக்குப் பின்னால ஒருத்தர். அவ்ளோதான் ஊர்வலம். நான் சென்னையில ஏராளமான  இறுதி ஊர்வலங்களைப் பார்த்திருக்கேன். பல ஊர்வலங்கள் ஜேஜேன்னு இருக்கும். அம்பது, நூறு பேருக்கு மேல் கலந்துக்குவாங்க. மேளதாளம், ஆட்டம், வெடி எல்லாம் இருக்கும். ஆனா பிராமணர்களுடைய இறுதி ஊர்வலத்துல பாடைக்குப் பின்னால அதிகமான ஆட்கள் போறதில்லை. அது ஒரு துயரமான உண்மை. அதைத்தான் அந்த ஓவியத்துல மெளனமா சுட்டிக் காட்டியிருந்தேன்”

விட்டல்ராவ் சொன்னதை ஒரு கணம் மனத்துக்குள் அசைபோட்டுப் பார்த்தேன். என் அனுபவத்திலும் நான் அப்படிப்பட்ட பல காட்சிகளைப் பார்த்ததுண்டு.

“உண்மைதான். நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை. எனக்கும் அதையெல்லாம் பல இடங்கள்ல பார்த்திருக்கேன் சார்”

“அந்த ஓவியத்தை யாரோ இருநூறு ரூபா கொடுத்து வாங்கிட்டு போயிட்டாங்க.”

“ரொம்ப வித்தியாசமான கருவை எடுத்துத்தான் ஓவியங்களை வரைஞ்சிருக்கீங்க. நீங்க சொல்லச்சொல்ல, அந்த ஓவியம் எப்படி இருந்திருக்கும்ங்கற என்னால கற்பனை செஞ்சி பார்க்கமுடியுது சார்”

“இன்னொரு முக்கியமான ஓவியம் வரைஞ்ச சந்தர்ப்பம் ஞாபகம் வருது. அதை நீங்க அவசியம் தெரிஞ்சிக்கணும்”

“சொல்லுங்க சார்”

“அந்தக் காலத்துல பாகிஸ்தானுக்கும் பங்களாதேசத்துக்கும் சண்டை நடந்த சம்பவம் உங்களுக்கு ஞாபகம் இருக்குதா?”

“நல்லாவே ஞாபகம் இருக்குது சார். நான் அப்ப ஹைஸ்கூல்ல ஒன்பதாவது வகுப்புல இருந்தேன். அந்தப் போர்க்காட்சிகளுடைய படங்களை தினத்தந்தியில ஒவ்வொரு நாளும் ஒரு பக்கம் முழுக்க அச்சடிச்சி, பக்கத்துலயே செய்தியும் போடுவாங்க. நாங்க அதை ஒவ்வொரு நாளும் பாடபுஸ்தகத்தைப் படிக்கிறமாதிரி படிப்போம். அந்த நாளையெல்லாம் மறக்கமுடியாது சார்”

“அந்த நேரத்துல அமெரிக்க அரசாங்கம் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தது. பாகிஸ்தானுக்கு உதவி செய்யணும்ங்கற எண்ணத்தோடு ஒரு கப்பல் படையை கல்கத்தாகிட்ட நிக்கிற மாதிரி அனுப்பினாங்க. கப்பல்படைக்கு இங்க்லீஷ்ல ஃப்ளீட்னு சொல்வாங்க. அமெரிக்க கப்பல் நடமாட்டத்தைப் புரிஞ்சிகிட்ட ரஷ்யா அவனை முந்திகிட்டு தன்னுடைய கப்பல் படையை கல்கத்தா பக்கம் போய் நிக்கிறமாதிரி அனுப்பினாங்க. ரஷ்யக் கப்பல பார்த்ததும் அமெரிக்கக் கப்பல் திரும்பிப் போயிடுச்சி. அதை வேடிக்கை பார்த்த சீனாக்காரன் அந்த சம்பவத்தை கிண்டல் செய்யற மாதிரி ‘இவையெல்லாம் வெறும் காகிதக்கப்பல்கள்’னு கிண்டல் செஞ்சி எழுதினான். இங்க்லீஷ்ல பேப்பர்ஸ் டைகர்னு சொல்ற மாதிரி பேப்பர்ஸ் ஃப்ளீட். அமெரிக்கன் ஃப்ளீட், ரஷ்யன் ஃப்ளீட், பேப்பர்ஸ் ஃப்ளீட்னு பத்திரிகையில தினமும் செய்தி வரும். அதைப் படிச்சிப்படிச்சி அந்த வார்த்தை என் மனசுல பதிஞ்சிடுச்சி. சாதாரண கப்பல், ஒற்றைக் கப்பல், இரட்டைக்கப்பல், கத்திக்கப்பல், பாய்மரக்கப்பல்னு விதவிதமா அந்த விளையாட்டுக்கப்பல்களுடைய வடிவங்களை படமா வரைஞ்சி, பொதுவா காகிதக்கப்பல்னு தலைப்பு கொடுத்திருந்தேன். எங்க செக்ரட்டரி தனுஷ்கோடி   அந்த ஓவியத்தைப் பார்த்துட்டு, படம் தனிப்பட்ட விதத்துல நல்லாதான் இருக்குது. ஆனா ஒரு பொலிட்டிக்கல் ரெஃபரென்ஸ் இருக்கறதால கண்காட்சியில வைக்கறதுக்கு தேர்ந்தெடுக்கமுடியாதுன்னு சொல்லி திருப்பிக் கொடுத்துட்டாரு”

அதைத் தொடர்ந்து அவரால் பிற ஓவியங்களை உடனடியாக நினைவுகூர்ந்து சொல்லமுடியவில்லை. நானும் அதை வலியுறுத்த விரும்பாததால் அடுத்து எதைப்பற்றிப் பேசலாம் என உள்ளூர யோசனையில் மூழ்கியிருந்தேன்.

“நாங்க இருந்தது வாடகை வீடு. வரையற எல்லா ஓவியங்களையும் ஃப்ரேம் போட்டு பாதுகாக்கிற அளவுக்கு இட வசதியும் கிடையாது. இன்னொரு பக்கம் பண வசதியும் கிடையாது. அந்தக் காரணத்தாலேயே யாராவது ஆசைப்பட்டு கேட்டாங்கன்னு சொன்னா, எடுத்து கொடுத்துடுவேன். அப்படித்தான் பல ஓவியங்களை கொடுத்துட்டேன்.”

எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. எதுவும் பேசாமல் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“எல்லாத்தயும் கொடுத்துட்டாலும் ஒரு இருபது படங்களை மட்டும் ரொம்ப காலத்துக்கு பாதுகாப்பா   கட்டி வச்சிருந்தேன். அப்ப அயர்லாந்துலேர்ந்து ஒரு கிறித்துவப் பாதிரியார் மெளண்ட் சர்ச்சுக்கு வந்திருந்தாரு. நான் அப்ப மெளண்ட் எக்சேஞ்ச்லதான் வேலை செஞ்சிட்டிருந்தேன். எங்க ஆபீஸ்ல கேப்ரியேல்னு ஒரு கேஷியர் இருந்தாரு. அவரு எனக்கு ரொம்ப நெருக்கமானவரு. அந்தப் பாதிரியாருக்கு ஓவியம்னா ரொம்ப புடிக்கும்னு கேப்ரியேல் சொன்னாரு. உங்ககிட்ட ஓவியங்கள் இருந்தா கொண்டுவாங்க, அவருகிட்ட காட்டலாம், ஒருவேளை அவருக்கு அந்தப் படங்கள் புடிச்சிருந்தா, அவர் அதை பணம் கொடுத்து வாங்கிக்குவாருன்னு சொன்னாரு.”

“சரி”

“நானும் அதை நம்பி எல்லாப் படங்களையும் ஒரு ரிக்‌ஷாவுல ஏத்திட்டு சர்ச்சுக்கு போனேன். கேப்ரியேல் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினாரு. அவரும் ஓவிய ரசனை உள்ளவருதான். ஓவியங்களைப்பத்தி ரொம்ப நேரம் பேசிட்டிருந்தாரு. அப்புறமா நான் கொண்டு போயிருந்த ஓவியங்களையெல்லாம் பிரிச்சி பார்த்து சந்தோஷப்பட்டாரு. இங்கயே வச்சிட்டுப் போங்கன்னு சொன்னாரு. எல்லாத்தயும் அவரே எடுத்துக்குவாரோ என்னமோன்னு நெனச்சி நானும் சந்தோஷத்தோடு அந்தப் படங்களை அங்கயே விட்டுட்டு வந்தேன். அதுக்கப்புறம் நான் சர்ச் பக்கம் போகலை. கேப்ரியேல்கிட்ட மட்டும் ஒன்னுவிட்டு ஒருநாள் ஓவியங்களை பத்தி பாதிரியார் என்ன சொன்னார்னு கேட்டு விசாரிச்சிட்டிருந்தேன். என்கிட்ட சொல்றமாதிரி தகவல் எதுவும் அவர்கிட்ட இல்லை. இன்னைக்கு சொல்வாரு, நாளைக்கு சொல்வாருன்னு நெனச்சி நானும் ஒவ்வொரு நாளும் ஆவலோடு காத்திட்டிருந்தேன். மொத்தமா எடுத்துகிட்டாலும் பரவாயில்லை, ஒரு தொகை கிடைக்கும், ஏதாவது ஒரு செலவுக்கு ஆகும்னு நெனைச்சி பொறுமையா இருந்தேன்” என்று சொல்லிக்கொண்டு வரும்போதே அவர் முகத்தில் புன்னகைக்கோடுகள் விரிந்தன.

“என்ன சார் சிரிக்கறீங்க? நீங்க எதிர்பார்த்தது நடந்ததா, நடக்கலையா?”

நான் அப்படிக் கேட்டதும் அவர் வாய்விட்டுச் சிரித்துவிட்டார். அது அடங்க சிறிது நேரம் பிடித்தது. ஏதோ பிழையாகக் கேட்டுவிட்டோமோ என்று கூச்சமாக இருந்தது. “ஏன் சார் சிரிக்கறீங்க?” என்று அடங்கிய குரலில் கேட்டேன்.

“என்னை அமைதிப்படுத்தறமாதிரி ஒவ்வொரு நாளும் கேப்ரியேல் எனக்கு பதில் சொல்லிட்டிருந்தாரே தவிர, அவருக்கு பாதிரியார் ஊரைவிட்டு புறப்பட்டு போயிட்ட விஷயமே தெரியலை. அவர் கெளம்பிப் போன நாலைஞ்சி நாளுக்குப் பிறகுதான் அவருக்கு சேதியே தெரிஞ்சிருக்குது”

“த்ச்.த்ச்”

“நான் கேக்கறதுக்கு முன்னாலயே ஒருநாள் என்கிட்ட வந்து அந்தப் பாதிரியார் அயர்லாந்துக்கே திரும்பிப் போயிட்டாருன்னு சொன்னாரு. சரி, அந்த ஓவியங்களைப் பத்தி என்ன சொன்னாருன்னு கேட்டேன். அவரு ரொம்ப சங்கடப்பட்டுகிட்டே எல்லா ஓவியங்களையும் கையோடு எடுத்துட்டு போயிட்டாராம், எங்கிட்ட எதுவுமே சொல்லலைன்னு சொன்னாரு. அதக் கேட்டு எனக்கு அதிர்ச்சியா இருந்தது. என்னாலயும் எதையும் யோசிக்கமுடியலை”

“பிறகு?”

“வாங்க டீ சாப்புடப் போவலாம்னு கேப்ரியேல் வெளிய என்னை அழைச்சிட்டு வந்தாரு. ஓவியங்களை எடுத்துட்டுப் போனாரே தவிர, பணம் எதுவும் கொடுத்துட்டு போகலையாம்ன்னு சங்கடத்தோட சொன்னாரு. என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு ஒன்னுமே புரியலை. உங்க வீட்டு பரண்லயாவது அந்தப் படங்கள் எங்கயாவது ஒரு ஓரமா உங்க கண்ணு முன்னால இருந்திருக்கும். அவரு பணம் கொடுத்து வாங்கிக்குவாருங்கற எண்ணத்துல உங்களுக்கு ஒரு நம்பிக்கையையைக் கொடுத்து, எல்லாப் படங்களயும் அவருகிட்ட கொடுக்க வச்சிட்டேன். இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கலை”

“சரி விடுங்க கேப்ரியேல், இதுல உங்களை குறை சொல்ல ஒன்னுமே இல்லை. விட்டுத் தள்ளுங்க. ஒருவேளை அவர் ஊருக்குப் போனதும் பணம் அனுப்பி வைப்பாரோ என்னமோன்னு சொல்லி அனுப்பிவச்சிட்டேன்”

“பணம் வந்ததா?”

“ஒரு பைசாவும் வரலை. அது கப்பலேறி போய்டுச்சின்னு எனக்கு அப்பவே புரிஞ்சிடுச்சி. ஆனாலும் இந்த விஷயத்துல கேப்ரியேல் ரொம்ப மனசு ஒடைஞ்சிட்டாரு. அவருக்கு ஆறுதலா இருக்கும்னு நான் அப்படி சொன்னேன்”

“நீங்க ஓவியரா இருந்தீங்கங்கறதுக்கு சாட்சியா இப்ப எந்த ஓவியமும் இல்லையா?”

“இருக்குது. ரெண்டு ஓவியங்கள் இருக்குது. ஆனா, எங்கிட்ட இல்லை”

“என்ன சார் சொல்றீங்க? புரியலையே”

“என்னுடைய போக்கிடம் நாவல் கையெழுத்துப் பிரதிக்கு இலக்கியச்சிந்தனை  பரிசு கிடைச்ச சமயத்துல ஒருநாள் அந்த அமைப்பினுடைய பொறுப்பாளர் பாரதி வீட்டுக்கு வந்து ரொம்ப நேரம் பேசிட்டிருந்தார். அப்ப நான் வரைந்த ஒரு ஓவியத்தை ஃப்ரேம் போட்டு சுவத்துல மாட்டியிருந்தேன். பாரதி அந்தப் படத்தைப் பார்த்துட்டு ரொம்ப அழகா இருக்குதுன்னு மகிழ்ச்சியா சொன்னாரு. உடனே நான் அந்தப் படத்தைக் கழற்றி துடைச்சி ஒரு பேப்பர்ல சுத்தி அவருகிட்ட என்னுடைய அன்பளிப்பா வச்சிக்குங்கன்னு சொல்லி கொடுத்துட்டேன்.”

“இன்னொன்னு”

“சேலத்துல என் கூட பாலுன்னு ஒருத்தர் படிச்சாரு. பெரிய ஸ்போர்ட்ஸ்மேன். அவருடைய தம்பி இங்கதான் பெங்களூருல இருக்காரு. அவரு பேரு விஜயன். அவரு ஆசைப்பட்டுக் கேட்டாருன்னு இன்னொரு  படத்தை பேப்பர்ல சுருட்டி அன்பளிப்பா கொடுத்துட்டேன்”

சொல்லிக்கொண்டே ஒரு பெருமூச்சோடும் புன்னகையோடும் எதிரில் இருந்த மேசையின் மீது தாளமிடுவதுபோல தட்டினார் விட்டல்ராவ்.

 

(அம்ருதா – டிசம்பர் 2024)