வெகு அருகில் சருகுகள் மிதிபடும் ஓசையைக் கேட்டு குணிதேவரும் நந்திதேவரும் குடிலுக்கு வெளியே வந்து பார்த்தார்கள். ஏதாவது விலங்காக இருக்குமோ என்கிற அச்சம் மனத்தில் சட்டெனப் பரவியதில் அவர்களுடைய இதயத் துடிப்புகள் அதிகரித்தன. இருளில் முதலில் எதையுமே சரியாகப் பார்க்க இயலவில்லை. சில கணங்களுக்குப் பிறகு குடிலை நோக்கி வரும் உருவத்தை அடையாளம் கண்டார்கள். அவசரமாக “வணக்கம் குருவே, வாருங்கள்” என்றார்கள்.
“இன்னும்
உறங்கவில்லையா நீங்கள் இருவரும்?” என்றபடி குடிலுக்குள் நுழைந்து உட்கார்ந்தார் குணாட்யர்.
காற்றில் குளிர் பரவியது. எங்கோ மொக்கவிழ்கிற மலர்களின் மணம் இருள் ஊடுருவிக்கொண்டு
வந்தது. வேகமாக வந்து குடிலின் மூலையில் இருந்த விளக்குத்திரியைத் -தூண்டினார் குணிதேவர்.
மெல்லப் பரவிய வெளிச்சத்தில் குருவின் முகத்தைப் பார்த்தார் நந்திதேவர். அவர் கண்கள்
தரையை நோக்கித் தாழ்ந்திருந்தன. ஒரு கரத்தைத் தரையில் ஊன்றியிருந்தார். சுவடிக் கட்டுகள்ப்
பிடித்த நிலையில் தளர்ந்திருந்தது மற்றொரு கரம். வாடி வதங்கிய கொடியொன்று காற்றில்
ஒதுக்கப்பட்டுக் கிடப்பதுபோல இருந்தது அவர் தோற்றம். அவர் நிமிர்ந்து தன்னைப் பார்த்துப்
பேசக்கூடும் என்று நம்பி குருவின் கண்களிலேயே பார்வையைப் பதித்து நின்றார். வெகு நேரத்துக்குப்
பிறகும் அவர் குனிந்த தலை நிமிராமலேயே இருந்தது ஆச்சரியமளித்தது.
பேச்சைத்
தொடங்கும் விதமாக “என்ன சொன்னார் அரசர்?” என்று மெதுவாகக் கேட்டார் நந்திதேவர். அவர்
குரலில் ஆவல் வெளிப்படையாகத் தோன்றியது.
கண்கள்த்
திறந்த குரு நந்திதேவரைப் பார்த்துச் சொன்னார். “அவர் சொல்ல ஒன்றுமில்லை சீடர்களே.
அரசர் அமைச்சருக்குக் கட்டுப் பட்டிருக்கிறார். அமைச்சர் பண்டிதர்களுக்குக் கட்டுப்பட்டிருக்கிறார்.
சகலவிதமான மன அழுக்குகளுக்கும் கட்டுப்பாடு என்று பெயர் சூட்டிக்கொண்டு மதிமயங்கிக்
கிடக்கிறார்கள் பண்டிதர்கள். இந்தக் குருட்டுப் பண்டிதர்கள் சொன்னால்தான் எதுவும் நடக்குமாம்.
அவர்கள் சரி என்றால் சரியாம். தப்பு என்றால் தப்பாம்” கசப்புடன்
சொல்லிக்காண்டே போனார் குரு. “அப்புறம் அரசர் என்று சொல்லிக்கொள்ள இவர் எதற்கு? ஆட்சியைப்
பண்டிதர்கள் கையில் கொடுத்துவிட்டு எங்காவது காடு, மலையைப் பார்த்துப் போகவேண்டியதுதானே?”
ஏதோ நடக்கக்கூடாதது நடந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார் நந்திதேவர்.
“உங்கள்
காவியம் பிடிக்கவில்லையா அரசருக்கு?”
குணாட்யர்
வேதனையுடன் “பூவின் மணத்தை நரிகள் எப்படி உணரும் நந்திதேவா?” என்று சிரித்தார். பிறகு
தளர்ந்த குரலில் “காவியத்தை உய்த்துணர ஒரு மனப்பக்குவம் வேண்டும். எந்தப் பக்குவமும்
இல்லாத பதர்கள் அவர்கள்”
என்றார்.
தயங்கிய
குரலில் நந்திதேவர் “உங்கள் மனம் உடையும்படி ஏதாவது பேசினாரா அவர்?” என்று கேட்டார்.
“காவியம்
பைசாச மொழியில் எழுதப்பட்டிருக்கிறதாம். அடுத்ததாக ரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறதாம்.
இரண்டுமே தீராத தீட்டுகளாம். அரசனின் பண்டித உலகம் இத்தீட்டுகள் ஏற்றுக் கொள்ளாதாம்.”
“யார்
சொன்னது?”
“வேறு
யார் சொல்வார்கள்? அரசரேதான். அவரோடு கோழிக்கூட்டம் மாதிரி அலைகிறதே பண்டிதக் கூட்டம்.
அதுவும் சொன்னது.”
நந்திதேவர்
வாயடைத்து நின்றார். இப்படி நடக்கும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“தத்துவ
சாஸ்திரப்படி இந்தத் தீட்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்கள்” குணாட்யர்
பெருமூச்சு விட்டார்.
“நந்திதேவா,
இந்தக் காவியத்தால் உலகத்தினரின் மனத்தில் இடம் பெற்றுவிட முடியும் என்று நினைத்திருந்தேன்.
பிருஹத்கதாவின் பெயர் நிலைத்திருக்கிற வரை என் பெயரும் நிலைத்திருக்கும் என்று நம்பிக்கை
வைத்திருந்தேன். இந்தப் பைசாச மொழியில் எழுதப்பட்டிருக்கிற முதல் காவியம் இது. மற்ற
எந்த மொழிகளின் காவியத்துக்கும் இக்காவியம் குறைந்தததல்ல என்பதை உணர்த்தவேண்டும் என்பது
என் ஆசை. நான் நாள் இந்த வாழ்வைத் துறந்துவிடுவேன். ஆனால் இந்த பிருஹத்கதா நிலைத்திருக்கும்.
பைசாச மொழி இருக்கிற வரையில் இக்காவியம் நிலைத்திருக்கும். இதன் வரிகளுக்கிடையே நானும்
நிலைத்திருப்பேன் எனக் கனவு கண்டேன். என் ரத்தத் துளிகள்த் தொட்டுத் தொட்டு எழுத்தாணியால்
சுவடிகளில் எழுத நேர்ந்த கணங்களிலெல்லாம் இந்த எண்ணம்தான் என் மனத்தில் ஓடும். ஆனால்
இந்தத் தீட்டு விஷயங்கள் நான் யோசிக்கவே இல்லை.”
கையில்
இருந்த சுவடிக்கட்டுகள் ஓரமாக நகர்த்தி வைத்துவிட்டு பின்னாலே நகர்ந்து சுவரில் சரிந்து
பெருமூச்சு வாங்கினார் குணாட்யர். எரியும் திரியைப் பார்த்தபடி சிறிது நேரம் பேசாமல்
உட்கார்ந்திருந்தார். ஒரு பூவின் மொக்குப் போல கூம்பி அலைந்தது திரியின் தழல்.
“வெறும்
அசடர்கள் அவர்கள் சீடர்களே, தாம் அசடர்கள் என்று தெரியாத அசடர்கள். துதி பாடுவதைப்
பெரிய காவியம் என்று நம்புகிறவர்கள் அவர்கள். நான்தான் சற்றே அவசரப்பட்டுவிட்டேன்.
வெகு வேகமாக இந்தக் காவியம் மக்களிடையே பரவ வேண்டும் என்கிற அவசரத்தில் அரசரை அணுகிவிட்டேன்.
அது பெரிய பிசகு.”
“ஓய்வெடுத்துக்
கொள்ளுங்கள் குருவே. நீண்ட தொலைவு நடந்ததில் கள்த்துப் போயிருப்பீர்கள்” ஓரமாக
நகர்ந்து மான்தோலை உதறி விரித்தார் நந்திதேவர்.
“நந்திதேவா,
பிருஹத்கதாவைப் பற்றி நீ என்ன உணர்கிறாய்? நீதானே முதலில் படித்தவன். நீயே சொல்.”
“எனக்கு
மிகப்பெரிய மனநிறைவைக் கொடுத்த காவியம் இது குருவே. இதுவரை நான் அறிந்த மொழிகளில் இப்படி
ஒரு காவியம் எழுதப்படவே இல்லை. பைசாச மொழி பாக்கியம் செய்த மொழி.”
குணாட்யர்
அமைதியாக நந்திதேவரைப் பார்த்தார். பிறகு பார்வையைத் திருப்பி வெளியே இருண்ட வானத்தை
வெறித்தபடி இருந்தார். பிறகு நிதானமான குரலில் பேசத் தொடங்கினார்.
“பல ஆண்டுகளுக்கு
முன்பு நான் நாட்டுக்குள் இருந்த சமயத்தில் இதே அரசர் ஒருமுறை என்னை அணுகினார். அவருக்குக்
கல்விப் பயிற்சி இல்லை. பெரிய வீரர். பல போர்களில் வென்றவர். கல்வியில்லாமை ஒரு பெரிய
குறையாக அவர் நெஞ்சை அரித்துக்கொண்டே இருந்தது. ஒரு நாள் பட்டமகிஷியுடன் குளித்துக்கொண்டிருக்கும்போது
அவள் கள்ப்பின் உச்சத்தில் இவரைப் பார்த்து சமஸ்கிருதத்தில் “நீரை இறைக்காதே” என்ற
சொன்னாளாம். அரசருக்கு அது புரியவில்லை. அவள் சொன்னதற்கு மாறாக அவர் வேறு ஏதோ செய்யப்
போக தான் சொன்ன சமஸ்கிருத வரிக்குப் பொருள்ச் சொன்னாளாம் பட்டமகிஷி. அவள் முகத்தையே
உற்றுப் பார்த்த அரசர் உள்ளூர உடைந்துவிட்டார். ஒரு பெரிய ஊனம் சுட்டிக் காட்டப்பட்டதுபோல்
உணர்ந்திருக்கிறார். அவர் வார்த்தைகள் மந்திரம்போலப் பல முறை சொல்லிப் பார்த்தாராம்.
மறுநாள் காலை மந்திரியை அழைத்து அவ்வார்த்தையைச் சொல்லி அர்த்தத்தைச் சரிபார்த்த பிறகுதான்
அவர் நிம்மதி அடைந்திருக்கிறார். உடனே அவர் என்னை அணுகினார். சமஸ்கிருதம் கற்கும் ஆசையை
வெளிப்படுத்தினார். சொல்லித்தர நானும் சம்மதித்தேன். ஆனால் ஆறு வருஷகாலம் சிரத்தையுடன்
பயில வேண்டும் என்றேன். அதைக்கேட்டுத் தடுமாறிவிட்டார் அவர். “ஆறு வருஷங்களா?” என்று
மீண்டும்மீண்டும் கேட்டார். உடனடியாகத் தன் பட்டமகிஷியின் முன்னால் தன்னை நிலைநிறுத்திக்
காட்டும் பதற்றத்தில் இருந்தார் அவர். அவ்வளவு கால தாமத்தை அவர் எதிர்பார்க்கவில்லை.
கூட இருந்த அமைச்சன் ஆறே மாதங்களில் அரசரை வித்வானாக்குகிறேன் என்று அவரை அடிபணிந்தான்.
எனக்கு வேடிக்கையாக இருந்தது. “மொழிகள் விற்பயிற்சியோ, குதிரையேற்றமோ அல்ல அமைச்சரே” என்று
சிரித்தேன் நான். “என்னால் முடியும்” என்று சவால் விடுத்தான் அமைச்சன். என்னைக்
கிளறிப் பார்ப்பதுபோல இருந்தது அச்சவால். அவன் முகத்திலும் அகங்காரப் புன்னகை. ஏதோ
வேகத்தில் “அப்படிச் செய்து காட்டினால் சமஸ்கிருதம், பிராகிருதம், தேஸிஸம் என்று எனக்குத்
தெரிந்த எந்த மொழிகளிலும் பேசுவதையும் எழுதுவதையும் விட்டுவிடுகிறேன். இது சத்தியம்” என்று
சொன்னேன். என் இளமை என்னை வெறிகொள்ளவைத்தது. காலமோ அமைச்சருக்குச் சாதகமாகவே முடிந்தது.
ஆறே மாதங்களில் சமஸ்கிருதத்தில் வல்லவராகிவிட்டார் அரசர். பட்டமகிஷியை வெல்லும் வேட்கையினால் வெகுவேகமாகக் கற்றுத் தேர்ந்துவிட்டார் அவர். என்
அகந்தைக்கு அது பெரிய அடி. அப்படியே சுருங்கிப்போனேன். என்னை யாரும் போ என்று சொல்லவில்லை.
ஆனால் நானாகவே அங்கிருந்து வெளியேறி இந்த விந்தியக் காட்டுக்குள் வந்தேன். எனக்குத்
தெரிந்த எல்லா மொழிகள்யும் மறக்க முயற்சி செய்தேன். இந்த காட்டுவாசிகளுடன் பேசிப் பழகி
அவர்களின் பைசாச மொழியைக் கற்று முடித்தேன்.”
நந்திதேவர்
அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருந்தார். பெரிதும் மனம் குலைந்த நிலையில் குருவைப்
பார்க்க வருத்தமாக இருந்தது. சீடனாக இருந்தாலும் தந்தைக்கு நிகராக அன்பைப் பொழியத்
தவறியதில்லை அவர். அவரை அமைதிப்படுத்தும் வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறினார். தொடர்ச்சியாகக்
குரு பேசிக்கொண்டே போனதும் கூட அவரை உள்ளூர கவலையில் ஆழ்த்தியது.
குணாட்யர்
மறுபடியும் தொடங்கினார். “பிருஹத்கதாவை எழுத முடிவு கட்டியதுமே அதைப் பைசாச மொழியில்தான்
எழுதவேண்டும் எனத் திட்டமிட்டிருந்தேன். எத்தனை ஆண்டுகள் இதை எழுதியிருப்பேன் தெரியுமா?
யோசிக்கும்போது இதை நானா எழுதினேன் என்று இப்போது மலைப்பாக இருக்கிறது. ஏழு லட்சம்
வரிகள். ஒவ்வொரு வரியையும் இந்த மரத்தையும் கொடியையும் புதரையும் வானத்தையும் பார்த்தபடி
எழுதினேன். காட்டின் அழகிலும் மர்மத்திலும் லயித்தபடி இருக்கிற ஏதோ ஒரு கணத்தில் திடுமென
ஒருவரி உடைத்துக்கொண்டு மனத்தில் பொங்கும். உடனே அதைப் பதிய வைத்துக்கொள்வேன். ஒவ்வொரு
வரியையும் ரத்தத்தால் எழுதினேன். முதல் வரியை ரத்தத்தால் எழுதும்போது பைத்தியம் பிடித்தாட்டியது
என்னை. ஏன் அப்படி முடிவெடுத்தேன். தெரியவில்லை ஏதோ ஒரு பித்து நிலை. அவ்வளவுதான்.
பிருஹத்கதா ரத்தத்தால் எழுதப்பட்ட ஒரு காவியம். என் உடலின் ஒவ்வொரு துளி ரத்தத்தையும்
இக்காவியத்தின் எழுத்துக்களாக மாற்றினேன்.”
பதற்றத்தில்
அவர் உடல் துடித்தது. அடிபட்டதுபோல துவண்ட முகம். காவிய வேலைகளில் வருத்திக்கொண்டதில்
வற்றித் தோலான உடல். முழங்கைக்குக் கீழே ரத்தம் வேண்டி எழுத்தாணியால் கீறப்பட்ட புண்களின்
பள்ளங்கள்.
நந்திதேவர்
கவலையுடன் குருவைப் பார்த்தார். குருவின் நிலையைக் கண்டு அவர் மனம் வேதனையில் துடித்தது.
தன்னால் எதுவும் செய்ய இயலாத நிலையை எண்ணி உள்ளூர நொந்து கொண்டார்.
பல கணங்களுக்குப்
பிறகு “நந்திதேவா”
என்று அழைத்தார் குரு. “குருவே”
என்று ஓரடி முன்னால் நகர்ந்தார் நந்திதேவர். “நேரம் மிகவும் பிந்திவிட்டது. இல்லையா?
கண்விழித்தது போதும். இருவருமே செல்லுங்கள். ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்” என்றார்.
அவர் குரல் சட்டென அமைதியுற்றதைப்போல இருந்தது.
“குருவே” ஏதோ
சொல்ல வாயெடுத்தார் நந்திதேவர். “ஒன்றும் தயங்க வேண்டாம். சென்று ஓய்வெடுங்கள்” என்று
மறுபடியும் சொன்னார் குணாட்யர். சீடர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி
நின்றனர். ஒரு கணம் தயங்கி, தீபத்தின் அருகில் சென்றார் நந்திதேவர். அவர் எண்ணத்தைப்
புரிந்துகொண்டது போல “திரி எரியட்டும் நந்திதேவா, அடக்கவேண்டாம்” என்றார்
குரு. அமைதியாக குருவின் முகத்தை ஒரு கணம் ஏறிட்டுப் பார்த்த பிறகு இருவரும் அக்குடிலைவிட்டு
வெளியேறி சற்று தொலைவில் இருந்த தம் குடிலை நோக்கிச் சென்றார்கள்.
குணாட்யர்
எரியும் சுடரையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். அவர் நெஞ்சின் சுவர்களில் அரசரின்
வார்த்தைகள் மோதியபடி இருந்தன. தன் மீது கொதிக்கும் தண்ணீர் கொட்டப்பட்டதுபோல உணர்ந்தார்.
அரசரின் வார்த்தைகள் மறுபடியும் அவர் மனதில் மிதந்து வந்தன.
காவியத்
தீட்டு. ஒற்றை வார்த்தையால் ஒரு மொழியையும் மக்கள்யும் ஒரு விள்யாட்டு போலத் தள்ளி
வைக்க எப்படி முடிகிறது? மீட்சி இல்லாத பெரிய சங்கிலி அந்த வார்த்தை. சங்கிலியில் ஒவ்வொரு
கண்ணியிலும் ஒவ்வொரு மனிதன். அவன் மொழி. அவன் வாழ்வு. அவன் காவியம். நீளும் சங்கிலித்தொடர்
முழுக்க மனித குலத்தின் செல்வங்கள். இந்த வார்த்தையிலிருந்து நீளும் கத்திகள் ஒவ்வொரு
கழுத்தையும் துண்டிக்கின்றன. அந்தரத்தில் நிரந்தரமாக மிதக்கும் கத்திகளின் விளிம்புகள்
உடல்கள்க் கிழித்தபடியே இருக்கின்றன.
அவர்
மனம் மெல்ல அடங்கிக்கொண்டிருந்தது. மெதுவாக எழுந்து குடிலுக்கு வெளியே வந்தார். கருத்த
வானில் வெண்மையான மேகங்கள் பஞ்சுப் பொதிகளாக நகர்ந்துகொண்டிருந்தன. அள்ளி வீசிய தும்பைப்
பூக்களாக நட்சத்திரங்கள் வானெங்கும் இறைபட்டுக் கிடந்தன. உடைந்த கண்ணாடித் துண்டு போல
பாதி நிலவு மிதந்துபோனது. “என்ன ஆயிற்று உனது காவியம்?” என்று அவை கேட்பதுபோல இருந்தது.
மறுபடியும் அவர் நெஞ்சில் நெருப்பு பரவியது. ஒவ்வொரு வரியையும் இந்த மேகத்தலிருந்தும்
நிலவிலிருந்தும் விண்ணிலிருந்தும் மரத்திலிருந்தும் புதரிலிருந்தும் உருவாக்கிய பழைய தருணங்கள் மனத்தில் மோதின. எழுத்தெழுத்தாக
விரிந்த அந்த வரிகள் மறக்கமுடியவில்லை. ஒரு சீரான இசையோடு அந்த வரிகள் மனத்துக்குள்
பாடினார். மறுகணமே தீட்டான மொழியில் புனையப்பட்ட காவியம் என்கிற சொல்லம்பு கூராகத்
தைத்தது நெஞ்சை. அப்போதே அவர் நரம்புகள் தொய்ந்தன. ஒரு பெரிய பாறை இதயத்தின் மீது ஏற்றி
வைக்கப்பட்டதுபோல வலித்தது. இந்தக் காவியத்தை எழுதியே இருக்கக்கூடாது என்று நினைத்தார்
குணாட்யர். அவர் கண்களில் நீர் துளிர்த்தது. காவியத்தின் கனவை, காவியத்துக்குப் புறம்பான
முள் தைத்துக் கிழித்துவிட்டது. ரத்தம் கசியக் கசிய ஆழமாக உள்ளே இறங்கி அறுத்துவிட்டது.
ஒரு புறம் தீட்டுற்ற மொழி. மறுபுறம் -தூயமொழி. ஒரு பூப்போல, ஒரு குழந்தையின் அழைப்பு
போல தாமாக மலர்ந்த மொழிகளின் நடுவே முட்செடிகள் நட்டு வளர்த்த அரக்கனின் கையை வெட்டி
எறிந்தால்தான் நிம்மதி படரும்போலத் தோன்றியது.
மரங்களும்
கிள்களும் தன்னைக் கவலையுடன் பார்ப்பது போலத் தோன்றியது. அவற்றின் காற்று விரல்களாக
மாறி ஆறுதல் சொல்வதுபோல இருந்தது. காலம் காலமாகத் துப்பப்பட்டு வரும் விஷத்தைத் தாங்கி
உறைந்துபோன ஒரு தாயின் தீண்டலாக உணர்ந்தார் குணாட்யர். ஒரு கணம் அத்தாய்மையை நினைத்து
மனம் கரைந்தார். மறுகணமே ஏதோ ஒரு வெறி அவரை உலுக்கியது. அரசரின் வார்த்தைகள்க் கேட்டுத்
தன்னால் அடங்கமுடியாது என்று சொல்லிக்கொண்டார். காவியப் புனைவில் கழிந்த பல -தூக்கமற்ற
இரவுகள் நினைத்துக் கொண்டார். கூடவே தனக்கு அறிமுகமான பைசாசர்களின் முகங்கள் அனைத்தும்
மனத்தில் படம் படமாக நகர்ந்தன. அவர்கள் முகங்களில் துளியும் வேதனை தெரியவில்லை. கிஞ்சித்தும்
-தூக்கம் இல்லை. ஆனந்தமும் சிரிப்புமான அவர்கள் கண்கள்ப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.
எப்படிச் சிரிக்க முடிகிறது இவர்களால்? தீட்டின் கோர முள் இதயத்தில் தைத்திருப்பதையும்
மீறி எப்படி ஆனந்தம் கொள்கிறார்கள் இவர்கள்? அவருக்கும் அப்புதிரின் ரகசியம் தெரியவில்லை.
குழம்பினார். தலை வெடிப்பதைப்போல இருந்தது. திகைப்புடன் தலை குனிந்தபடி கீழே அமர்ந்தார்
குணாட்யர்.
வெகு
தொலைவில் ஒரு பெண்ணின் தாலாட்டுப் பாடலொலி கேட்டது. பாதி இரவில் விழித்தெழுந்து அழும்
குழந்தையைத -தூங்கவைக்கப் பாடுகிறாள் போலும் என நினைத்துக்கொண்டார். தன் அன்பையே குரலில்
குழைத்து தாலாட்டின் வரிகளில் வெளிப்படுத்தினாள் அவள். ஒரு சங்கீதம் போல அப்பைசாச மொழிச்சொற்கள்
அவரை நெருங்கின. அவர் மனம் கரைந்துவிட்டது. ஒரு கணம் அந்த இசைமழையில் அவர் மனம் இணைந்துகொள்ள,
சற்றே கண்கள் மூடினார். அந்த இதம். அந்தச் சிலிர்ப்பு. அது கொடுத்த ஆனந்தம். அவர் கண்களில்
கண்ணீர் கசிந்தது. இந்த வார்த்தைகளின் மீது தீட்டென்னும் சாயம் பூசித் தள்ளுகிறாரே
அரசர் என்கிற சோகம் மனத்தில் தைத்தது.
காவிய
அரங்கேற்றத்துக்கு அரசரை நம்பிப் போனது எவ்வளவு பிழை எனத் தன்னையே நொந்துகொண்டார் குணாட்யர்.
தன்மீதே தன் கோபத்தைத் திருப்பியபோது சுய பரிதாபமே மிஞ்சியது. பெருமூச்சுடன் வானை வெறித்தபடி
பார்க்கத் தொடங்கினார்.
குளிர்ந்த
காற்று இரைச்சலுடன் கடந்து சென்றது. தலைக்கு மேல் அங்குமிங்கும் ஒன்றிரண்டு பறவைகள்
ஒலி எழுப்பின. மரங்களில் தொற்றியிருந்த இருட்டுத் திரை விலகத் தொடங்கியது. காட்டுக்குப்
பின்னால் மெல்லமெல்ல வெளிச்சம் படர ஆரம்பித்திருந்தது. திடுமென குணாட்யருக்கு மனம்
பொங்கியது. இக்காவியத்தை அரங்கேற்ற வேண்டிய இடம் அந்தக் காடுதான் என்றும் அரங்கேற்ற
வேள் அதுதான் என்றும் தோன்றியது. தவிப்புடன் எழுந்தார். எதிரில் மலையின் பக்கம் மெல்லிய
வெள்ள் நிறம் ஒரு போர்வைபோல படர்வது தெரிந்தது. வேகவேகமாக எழுந்து புதர்கள் விலக்கியபடி
ஒற்றையடிப் பாதையில் நடந்து குளத்தையடைந்தார். பனி படிந்த பாதையில் நடக்கும்போது ஏதோ
விடுதலையுணர்வு அவருக்குப் பொங்கியது. கரிய மினுக்கத்துடன் குளத்தின் நீர்ப்பரப்பு
வசீகரமாக இருந்தது. தொலைவில் தாமரை இலைகளும் மொக்குகளும் காற்றில் படகுகள் போல அசைந்தாடின.
குணாட்யர்
மெல்ல குளத்தை நெருங்கி நீரைத் தொட்டு கண்களில் ஒத்திக்கொண்டார். பின்னர் இறங்கினார்.
இடுப்பு வரை குளத்தின் ஆழத்துக்குள் நடந்தார். சின்னச் சின்ன மீன்களில் தீண்டல் கூச்சமாக
இருந்தது. இறைவா... என்றபடி கைகூப்பி மூழ்கினார். எழுந்து முகத்தில் படிந்த முடியை
ஒதுக்கிவிட்டுச் சுற்றும்முற்றும் பார்த்தார். மறுபடியும் மூழ்கி மூழ்கி எழுந்தார்.
அவர் மனப்பாரம் பெரிதும் இறங்கியதைப் போல இருந்தது. சிறிது தொலைவு நீந்திவிட்டுத் திரும்பினார்.
கரையேறியபோது
ஒற்றையடிப் பாதை துலக்கம் பெற்றிருந்தது. தொலைவில் ஏதோ ஒரு மரத்தின் உச்சியில் கொண்டை
போட்டமாதிரி சூரியனின் சுழற்சி தெரிந்தது. புதர்கள்த் தாண்டி பறவைகள் கிறீச்சிட்டபடி
பறந்தன. ஒன்றிரண்டு முயல்கள் ஒரு புதரிலிருந்து
இன்னொரு புதரை நோக்கித் தாவின. அவற்றின் வேகத்தை வியப்புடன் பார்த்தார் குணாட்யர்.
குடிலை
நெருங்கியதும் ஈரத் தோலாடையுடன் அக்கினி குண்டத்தின் முன் உட்கார்ந்தார். குண்டத்தின்
அடிப்புறத்தில் கனப்பைக் கிளறிப் பெரிதாக்கினார். காற்றின் வேகத்தில் தழல் எழுந்தது.
பிறகு கனிந்து மஞ்சள் நிறச் சுடரானது. சுள்ளிகளின் நுனிகள் மஞ்சள் நிறமாகவும் சிவப்பாகவும்
மாறிமாறித் தெரிந்தது. சுவரோரம் இந்த சுள்ளிக்கட்டுகள்க் கொண்டு வந்து குறுக்கும் நெடுக்கும்
அடுக்கினார். கண்மூடி மனத்துக்குள் மந்திரங்கள் உச்சரித்தார். அப்புறம் நெய்யைச் சொரிந்ததும்
சுடர்விட்டெழுந்தது கனல். உற்சாகத்துடன் தீயின் நாவுகள் மேலேறிப் பொங்கின. எட்டு திசையும்
பரவிய தீயின் நாக்குகள் காற்றின் அசைவில் இதழ்விரித்து துடிக்கும் மலர்போல இருந்தது.
சில கணங்களுக்குப் பிறகு தீ ஒரே சீராக எரியத் தொடங்கியது. குணாட்யர் நெருப்பையே கவனித்தார்.
நெருப்பும் அவரைப் பார்ப்பதுபோல இருந்தது. ஒவ்வொரு கணமும் நெருப்பின் நுனிச்சுடர் அசையும்போது,
அது நாக்கை சுழற்றிப் பேசுவதுபோல இருந்தது. புனிதமானது நெருப்பு. பாகுபாடு பார்க்காதது
நெருப்பு. அனைத்தையும் உட்கொண்டு புகையாக மாறி வானத்தை நோக்கித் தாவுவது நெருப்பு.
ஒரு கணம் நெருப்புக்குத் தீட்டு இல்லை எனத் தோன்றியது. மறுகணமே மொழிக்குத் தீட்டு கற்பித்த
அரசரின் வார்த்தைகள் மனத்தில் ஒலித்தன. இப்போது கோபம் பொங்கவில்லை. சிரிப்பு வந்தது.
ஏழு லட்சம் காவிய வரிகள்யும் நெருப்புக்கு அர்ப்பணிக்க வேண்டும் எனத் தோன்றியது.
உள்ளுக்குள்
புன்னகைத்தபடி ஓலைச்சுவடிக் கட்டுகள்ப் பிரித்தார் குணாட்யர். ஏழு வித்தியாதரர்களின்
கதைக்கோவை அது. மொத்தம் ஏழு லட்சம் வரிகள். மெதுவாக முதல் கோவையைப் பிரித்து முதல்
சுவடியை எடுத்தார். சிறிது நேரம் மறுபடியும் கண்கள் மூடி நெருப்பைத் துதித்தார். “தீயே
கேள், சுடரே கேள், வானே கேள், ஒளியே கேள், காற்றே கேள், மலையே கேள், மரமே கேள், மண்ணே
கேள், செடி கொடி புதர்களே கேளுங்கள், புழு முதல் சிங்கம் வரையிலான விலங்குகளே கேளுங்கள்,
உங்களுக்கான பாட்டு இது. உங்கள் முன் அரங்கேற்றுகிறேன்” தொடர்ந்து
ஓங்கிய குரலில் முதல் வரியைப் படித்தார்.
காடு
திடுமென அதிர்ந்தது. காற்று அசைவற்று நின்றது. மரங்கள் தம் கிள்கள் அக்கினி குண்டத்தை
நோக்கித் திருப்பின. காட்டு விலங்குகள் அவர் குரல் கேட்டு ஓடோடி வந்தன.
முதல்
சுவடியைப் படித்து முடித்ததும், அச்சுவடியை நெருப்பிலிட்டார். நெய்க்குப் பதிலாக குண்டத்தில்
இறங்கிய சுவடியை ஆயிரம் கைகள் நீட்டிப் பணிவுடன் வாங்கிக்கொண்டது நெருப்பு. குணாட்யரின்
கண்களில் இனம் புரியாத நிறைவு பரவியது. மெல்ல அடுத்த சுவடியை எடுத்தார். அதன் வரிகள்
இசையுடன் படிக்கத் தொடங்கினார்.
குருவின்
குரலைக் கேட்டு நந்திதேவர் முதலில் அதை ஏதோ கனவென்று நினைத்தபடி கண்கள்த் திறந்தார்.
சாளரத்தில் வந்து விழுந்த வெளிச்சத்தைக் கண்டதும் “ஐயோ, விடிந்து விட்டதா?” என்று பரபரப்புடன்
எழுந்தார். குருவின் குரல் தெளிவாகத் தொடர்ந்து கேட்கவும்தான் ஏதோ விபரீதம் என்று மனம்
சொன்னது. அதே கணத்தில் நெய்யின் புகை மணம் காற்றில் பரவியதையும் முகர்ந்தார். அவசரமாகக்
குணிதேவரை எழுப்பிவிட்டுக் குடிலைவிட்டு ஓடி வந்தார். அக்கினியின் முன் குரு உட்கார்ந்திருந்த
கோலம் அவருக்கு அச்சத்தைத் தந்தது. நடக்கும் காட்சியை மனத்தில் வாங்கிக்கொள்ளச் சில
கணங்கள் பிடித்தன. என்ன செய்வது என்று புரியாமல் ஓடிவந்து குருவின் காலில் விழுந்தார்.
“குருவே என்ன இது?” எனப் பதறினார். “பிருஹத்கதாவின் காவிய அரங்கேற்றம் நந்திதேவா, மரமும்
செடியும் காடும் வானும் கதிரும் முகிலும் சாட்சியாகக் காவிய வரிகள் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறேன்” குரு
தெளிவான குரலில் எந்தப் பதற்றமும் இல்லாமல் சொன்னார்.
ஒருகணம்
தடுமாற்றத்தில் உறைந்து நின்றார் நந்திதேவர். நெருப்பிலெரியும் சுவடிகள்யும் எழுத்தாணியாலான
புண்கள் நிரம்பிய குருவின் முழங்கையையும் மாறிமாறிப் பார்த்தார். ரத்தத்தால் ஒவ்வொரு
எழுத்தாகக் குரு செதுக்கியது இந்த நெருப்புக்கு அவிசாகப் போடவா என்று வேதனையால் மனம்
நொந்தார். கையைக் குறுக்கே நீட்டிச் சுவடியை அவசரமாக எடுக்கப் போனார். “என்ன குருவே
இது? ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?”
“நகரு
நந்திதேவா” என்றார்
குணாட்யர். பொறுமையாகத்தான் வார்த்தைகள் வந்தன. ஆனால் அளவிடமுடியாத உறுதி அக்குரலில்
தொனித்தது. “பைசாச மொழியைத் தீட்டு என்று சலிக்கிற மானுடப்பதர்களின் கரம்பட்டு இக்காவிய
வரிகள் தீட்டாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் அக்னிதேவனிடம் ஒப்படைக்கிறேன். செல்.
நிஷ்டைகள் முடித்துவிட்டுவா.”
பதிலை
எதிர்பார்க்காத குரு அடுத்த சுவடியை எடுத்துப் படித்தார். நந்திதேவரின் உடலிலும் மனத்திலும்
பதற்றம் கூடியது. குணிதேவரை அழைத்துக்கொண்டு குளத்துக்கு ஓடினார். வேகவேகமாக ஒரு முழுக்குப்போட்டுவிட்டுத்
திரும்பினார். சட்டென ஒரு எண்ணம் மனத்தில் உதித்ததும் குணிதேவரின் பக்கம் திரும்பிக்
“குணிதேவா, அவசரமாக ஒரு வேலை செய்யவேண்டும். ஓடு. காட்டுக்குள் வாழ்பவர்களிடம் இந்த
விபரீத காவிய அரங்கேற்றதைப் பற்றிச் சொல். அங்கேயே குதிரை ஏதேனும் கிடைத்தால் அரசரிடம்
செல். அவரிடமும் சொல். ஏதாவது ஏற்பாடு செய். ஓடு. நிற்காதே. ஓடு. அவசரம்” என்று
விரட்டினார். இதற்குள் அவர் கண்கள் குளமாகிவிட்டன. அழுகையில் அவர் இதயம் வேகவேகமாகத்
துடித்தது.
குருவின்
குரல் ஒரே சீராகக் காவிய வரிகள் அரங்கேற்றியபடி இருந்தது. படித்து முடிக்கப்பட்டதும்
சுவடி அக்னியில் போடப்பட்டது.
“வா...
உட்கார். இச்சுள்ளிகள்யும் நெய்யையும் எடுத்துக்கொள்” அவற்றை
அவர் பக்கம் நகர்த்தினார். நடுங்கும் கைகளால் இரண்டையும் எடுத்தார் நந்திதேவர்.
“அக்னியின்
ஸ்பரிசம் சுவடியில் பட்டதும் நெய்யை விடு நந்திதேவா”
குரு
அடுத்த சுவடியைப் படிக்கத் தொடங்கினார். கண்களில் நீர் வழிய சுள்ளிகள் எடுத்து அடுக்கினார்
நந்திதேவர். குருவின் வாய் உச்சரிக்கும் வரிகள் மனத்துக்குள் பதிய வைத்துக் கொள்ளப்
பெருமுயற்சி செய்தார். அதன்மூலம் அக்காவியத்தையே மனனம் செய்துவிடலாம் என்று நம்பினார்.
ஆனால் பதற்றத்தில் ஒரு கணம் பதியும் வரிகள் மறுகணம் அழிந்தபடி இருந்தன. அவர் அழுகை
பெருகத் தொடங்கியது.
குருவின்
குரலில் கம்பீரம் கூடியபடி இருந்தது. வாழ்வில் என்றென்றும் காணாத நிறைவை அக்கணத்தில்
உணர்ந்தார் அவர்.
காட்டுப்பறவைகளும்
விலங்குகளும் அங்கே சூழத் தொடங்கின. பைசாச மொழியின் இசைத்தாளம் அவற்றை அதிசயிக்க வைத்துவிட்டன.
வேகவேகமாக ஓடிவந்த காட்டுவாசிகள் குருவின் கம்பீரமான தோற்றத்தால் சற்றே கலவரமுற்று
ஒதுங்கி நின்றனர். குருவின் குரலில் குழைந்த வெளிப்பாடு பைசாச மொழியின் ஏற்ற இறக்கங்கள்
அவர்கள் இன்பத்தில் ஆழ்த்தியது. அதன் இனிமை. அதன் தாளம். அவர்களின் தலைகள் ஆடத் தொடங்கின.
கண்கள் தளும்பத் தொடங்கின. கைகூப்பி வணங்கிய நிலையில் வேறு எதுவும் சொல்லத் தோன்றாமல்
அதே இடத்தில் உட்கார்ந்தார்கள். அவர்கள் கண்கள் நெருப்பில் பதிந்திருந்தன. சுள்ளிகளின்
நுனிகளில் ஓலைச்சுவடி விழுவதும் நெருப்பின் நுனி தீண்டி அது பொசுங்கிக் கனிந்து சாம்பலாகிப்
பக்கங்களில் உதிர்வதுமாக இருந்தது. நீலத்தழல் அணையாமல் எரிந்தது.
இரண்டாவது
வித்தியாதரரின் கதைக்கோவைத் தொகுப்பைப் பிரித்தார் குரு. முதல் சுடிவயைப் பிரித்துப்
படித்தார். காட்டுவாசிகள் திடுமென அந்த வரிகள்த் திருப்பிச் சொன்னார்கள். தன் மொழியிலிருக்கும்
இசைத்தன்மையை முதன் முதலில் அறிந்தார்கள் அவர்கள். உற்சாகத்தால் குரு சொன்ன வரிகள்
மறுபடியும் பாடினார்கள். எல்லாருமே தத்தம் நெஞ்சங்களில் அவ்வரிகள் அலைஅலையாக நிரம்புவதை
உணர்ந்தார்கள். இரண்டாவது கதைக்கோவையைத் தொடர்ந்து மூன்றாவது, நான்காவது வித்தியாதரரின்
கதைக்கோவையின் சுவடிக்கட்டுக்கள்ப் பிரித்து எடுத்தபடி இருந்தார் குரு.
சட்டென்று
அங்கே ஒருவிதமான பரபரப்பு ஏற்படுவதைக் காட்டுவாசிகள் உணர்ந்தார்கள். திரும்பித் திரும்பிப்பார்த்துவிட்டு
மெதுவான குரலில் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். தன்னருகே நின்ற ஒரு இளம்பெண்ணிடம்
ஒரு காட்டிள்ஞன் பயம் படிந்த குரலில் “அரசர் வந்திருக்கிறார்” என்றான்.
“எங்கே?” என்று கேட்டாள் அவள். அவள் கவனம் காவிய வரிகளிலிருந்து விலகி அரசர் மீது பதிந்தது.
முதன் முறையாக அந்த நாட்டு அரசரைப் பார்க்கப் போகும் ஆவல் அவள் முகத்தில் தெரிந்தது.
“எஙகே?” என்று எம்பிக் கூட்டத்தின் நடுவில் பார்த்தாள். எங்கெங்கு பார்த்தாலும் மனிதத்தலைகளும்
பறவைகளும் விலங்குகளும் தாம் தெரிந்தன. தொலை-தூரத்தில் புகையெழுப்பியபடி நகர்ந்துவரும்
அரச ரதத்தை அவளுக்குச் சுட்டிக்காட்டிவிட்டு காவியத்தில் லயிக்கத் தொடங்கினான் காட்டிள்ஞன்.
தொடர்ந்து ரதம் கும்பலிடையே புகுந்துவர இயலவில்லை. பாதி தொலைவில் ரதத்தை நிறுத்திவிட்டு
இறங்கி நடந்துவந்தார் அரசர். பட்டாடை அணிந்த கம்பீரமான உடல். எடுப்பான மூக்கு, சிவந்த
கண்கள், வேகவேகமாக வந்தார் அவர். பக்கத்திலேயே குணிதேவர் ஒடிவந்தார். அரசர்மீது எல்லாருடைய
கவனமும் ஒரு கணம் திரும்பியது. உறுதியான தோள்கள். திரண்ட மார்பு. ஒரே ஒரு மணியாரம்
மட்டும் அவர் மார்பில் புரண்டபடி இருந்தது. பட்டுத்துணியைப் போர்த்தியிருந்தார். வீரக்கழல்
அணிந்திருந்தார். மகுடம் அணியாத அவர் தலைமுடி நாலு பக்கமும் வந்ததில் அவர் உடல் வியர்த்திருந்தது. ஆவலுடன் அவர்
கண்கள்ப் பார்த்தார்கள் காட்டுவாசிகள். அவர் முகத்தில் தவிப்பும் குற்ற உணர்வும் குடிகொண்டிருந்தன.
எதிர்பாராத ஒன்று திடுமென நடந்துவிட்டது போல அவர் முகம் சோகத்தில் மூழ்கி இருந்தது.
அதைக் கண்டு காட்டுவாசிகள் தம்மையறியாமல் ஒடுங்கினார்கள். அரசரையும் அக்னியின் முன்
அமர்ந்திருக்கும் குருவையும் மாறிமாறிப் பார்த்தார்கள் அவர்கள்.
ஆறாவது
வித்தயாதரரின் கதைக்கோவையின் கடைசிச்சுவடியை இசையுடன் படித்தார் குரு. ஒவ்வொரு பைசாச
சொல்லும் ஒரு சிறு -தூறலாக மாறி மனத்தில் தெறித்தது. ஒரு அமுதத்துளியாக மாறி நாவில்
கரைந்தது. காற்றின் தீண்டலாக மாறி நெஞ்சை வருடியது. அரங்கேற்றி முடித்ததும் அச்சுவடியை
அக்னியில் போட்டார் குரு-.
“குருவே.”
உணர்ச்சி
கொப்பளிக்கும் குரலில் அழைத்தபடி ஓடோடி வந்து அக்னி குண்டத்தின் முன் விழுந்தார் அரசர்.
“குருவே... குருவே...” என்று அவர் வாய் தொடர்ந்து பிதற்றியபடி இருந்தது. “ஏன் இப்படி
செய்தீர்கள் குருவே? ஏன் இந்தத் தண்டனை எனக்கு?” என்று புலம்பினார். “என்னை மன்னித்துவிடுங்கள்
குருவே” என்று
குணாட்யரின் காலைப் பற்றினார். கூட்டத்திடையே பரபரப்பும் ஆச்சரியமும் அலையலையாகப் பரவின.
“தீட்டான
காவிய அரங்கேற்றத்தில் பங்கேற்க நீங்கள் ஏன் வந்தீர்கள் சாதவாகனரே”
நிதானமான
குரலில் கேட்டார் குரு. மறுகணம் திரும்பி குணிதேவரின் பக்கமும் நந்திதேவரின் பக்கமும்
பார்வையை படரவிட்டார். அவர்கள் இருவரும் குருவின் பார்வையை நேருக்கு நேர் சந்திக்க
இயலாமல் தலைகவிழ்ந்தார்கள்.
தழுதழுத்த
குரலில் பேசத் தொடங்கினார் அரசர். “என்னை மன்னித்துவிடுங்கள் குருவே... இப்படி நடக்கும்
என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஏதோ போதையில், ஏதோ செருக்கில் மயங்கிக்கிடந்துவிட்டேன்.
இப்போது என் மயக்கம் அறுந்துவிட்டது. குருவே... சிற்றறிவுப் பிராணிகள் முதல் செடிகொடி
மரங்கள்யும் பறவைகள்யும் கூட ஆட்படுத்துகிற பைசாச மொழியின் வல்லமையைக் கண்கூடாகப் பார்த்துவிட்டேன்.
உங்கள் காவியத்தை நான் அரங்கேற்றுகிறேன் குருவே...
நான் அரங்கேற்றுகிறேன்... தயவு செய்து எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்...”
சிறிது
நேரம் மௌனம்.
“பைசாச
மொழியின் பாடல்கள்க் கேட்டு அரசரின் அவை தீட்டாகிவிட்டால் சம்பிரதாயவாதிகள் சும்மாவிட
மாட்டார்கள், அரசரே.”
வலி தாளதவர்
போலக் கண்கள் மூடினார் அரசர். “சொற்களால் என்னைத் தைக்காதீர்கள் குருவே... இப்போது
என் கண்கள் திறந்துவிட்டன. தீட்டு என்பது பொய். பித்தர்கள் உருவாக்கிய சதி. எல்லாமே
எனக்குப் புரிந்தது குருவே... வாருங்கள்... இன்றே, இக்கணமே அரசவையில் உங்கள் காவியத்தை
அரங்கேற்றுங்கள்...”
உடனே
கூடியிருந்த கும்பலிலும் “ஆமாம். அரசவையில் அரங்கேற்றுங்கள்... அரசவையில் அரங்கேற்றுங்கள்” என்று
குரல்கள் எழுந்தன. கோரிக்கைகள் அடங்க நெடுநேரம் பிடித்தது. குரு தன்னைச் சுற்றி ஒரு
கணம் பார்வையைச் சுழலவிட்டார். பிறகு கசப்பான ஒரு புன்னகையைச் சிந்தி “காவிய அரங்கேற்றம்” என்று
மெதுவாக முணுமுணுத்தார். திடுமென அவர் பலம் முழுக்கக் குன்றியதைப்போல இருந்தது. மெல்ல
“எங்கே இருக்கிறது காவியம்?” என்றார். அவர் கண்கள் அக்னி குண்டத்தில் படிந்தன.
மெதுவாகக்
கையூன்றி எழுந்தார். அண்ணாந்து பார்த்தார். பொலிவுடன் விரிந்திருந்தது வானம். அவர்
மனம் பொங்கியது. சட்டென தன் உடல் பெரும் பாரமானதைப்போல உணர்ந்தார். இனம் புரியாத ஏக்கத்தால்
அவர் நெஞ்சம் விம்மியது. பக்கத்தில் அக்னிகுண்டத்தில் பார்த்தார். மூச்சுத் திணறியது.
அந்த நெருப்பில் இதழ் போல அமுங்கி எரிந்த சுவடிகள் நினைத்துக்கொண்டார். அந்த ரத்த வரிகள்
ஞாபகத்துக்குக் கொண்டுவர முயற்சி செய்தார். அவர் கண்கள்- கசிந்தன. நெஞ்சு வேகமாக அடித்துக்கொண்டது.
அப்படியே உறைந்து போன மாதிரி நின்றார்.
“குருவே”
அரசர்
மறுபடியும் அவரை நெருங்கினார்.
குணாட்யர்
தம் உடலெங்கும் சோர்வு படர்வதை உணர்ந்தார். இனம் புரியாத பலவீனம் அவர் புலன்கள்த் தாக்கின.
எனினும் அந்தத் தருணத்திலும் ஏதோ ஓர் வேகம் அவர் மனத்துக்குள் செயல்பட்டுக்கொண்டிருந்தது.
இனி அந்த இடத்தில் தங்கக் கூடாது என்று அவர் மனம் முடிவு கட்டியது. வேறு ஏதோ ஓர் இடம்
தன்னைநோக்கி அழைப்பதுபோல இருந்தது. அந்த இடத்தைத் தேடி அடைய அவர் மனம் விழைந்தது.
அவர்
நகர்ந்தபோது, அவர் கால்களில் ஓலைச்சுவடிக்கட்டு இடறியது. ஏழுலட்சம் வரிகளில் எஞ்சியிருக்கும்
நரவகனதத்த சரிதம் அது. ஒரு லட்சம் வரிகள். வித்தியாதரர்கள் வரிசையில் கடைசிக் கதை.
குனிந்து அச்சுவடிகள் எடுத்து நந்திதேவரிடம் கொடுத்துவிட்டுக் காட்டின் உட்பகுதியை
நோக்கி மெல்ல நடக்கத் தொடங்கினார். கைகள் நடுங்க அச்சுவடிகள்ப் பெற்றுக் கொண்ட நந்திதேவர்
நாத் தழுதழுக்கக் “குருவே”
என்று அழைத்தார். விம்மல்களுக்கிடையே அவர் குரல் வெளியே கேட்கவில்லை.
(பிரசுரமாகாதது
- 2000)