வல்லினம் நேர்காணல் தொடர்ச்சி ....
வல்லினம்: உங்களுக்கு ஆதர்சமான இவ்விரு
எழுத்தாளர்களையும் ஆகியோரைச் சந்தித்துள்ளீர்களா? அந்த அனுபவத்தைப் பகிர இயலுமா?
பாவண்ணன்: நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே அழகிரிசாமி மறைந்துவிட்டார். அவருடைய மறைவுக்குப் பிறகுதான் அவருடைய புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பிற்காலத்தில், அவருடைய ஒட்டுமொத்த சிறுகதைகளை காலச்சுவடு ஒரு பெருந்தொகுதியாகக் கொண்டுவந்த போது, அத்தொகுதிக்கு அழகியல் நோக்கில் ஒரு நீண்ட முன்னுரையை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு அமையும் என்று நான் அக்காலத்தில் ஒருமுறை கூட நினைத்துப் பார்த்ததில்லை.
கதைகளைத் தவிர,
அழகிரிசாமி இரு நாடகங்களையும் எழுதியுள்ளார். இரண்டுமே மிகமுக்கியமானவை, ஒன்று
கவிச்சக்கரவர்த்தி. கம்பரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய படைப்பு. மேடையில்
நிகழ்த்தத்தக்க அளவில் மிகச்சிறப்பாக காட்சிகளை ஒருங்கிணைத்து எழுதப்பட்டது. இன்னொன்று வஞ்சமகள். சூர்ப்பனகை அவமானப்படுத்தப்படும்
காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டது. கெடுவாய்ப்பாக, இரு நாடகங்களும்
பெரிய அளவில் மேடைக்காட்சிகளாக நடிக்கப்படாததால், அவற்றுக்கு உரிய கவனம்
கிடைக்கவில்லை.
ஜெயகாந்தன் நான் எழுதவந்த
காலத்தில் ஒரு பெரிய ஆளுமையாக உயர்ந்து நின்றிருந்தார். பட்டப்படிப்பை முடித்ததுமே வேலை கிடைத்து நான்
கர்நாடகத்துக்குச் சென்றுவிட்டதால், தமிழ்நாட்டில் எழுதிக்கொண்டிருந்த பல மூத்த
எழுத்தாளர்களையும் சமகால எழுத்தாளர்களையும் நான் சந்தித்ததே இல்லை. ஒருசிலரை
மிகவும் தாமதமாகச் சந்தித்தேன்.
ஜெயகாந்தனை நான்
மூன்றுமுறை சந்தித்திருக்கிறேன். புத்தாயிரத்தாண்டு பிறந்ததையொட்டி கர்நாடக
தொலைபேசித்துறையின் தலைமையலுவகத்தில் ஒரு தமிழ்ச்சங்கம் செயல்பட்டு வந்தது. அச்சங்கத்தின்
பொறுப்பாளராக இருந்தவர் என் நண்பர் முகம்மது அலி. இப்போது முடவன்குட்டி முகம்மது
அலி என்னும் பெயரில் மொழிபெயர்ப்புகளைச் செய்து வருகிறார். அவ்விழாவுக்கு அவர்
ஜெயகாந்தனை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். அவர் தமிழில் ஆற்றும் உரையை
நான் கன்னடத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என அவர் விரும்பினார். நான் அப்பொறுப்பை
ஏற்றுக்கொண்டு ஜெயகாந்தன் உரையை மொழிபெயர்த்தேன். அதற்கு முன் அலி என்னை ஒரு
சிறுகதை எழுத்தாளர் என்று ஜெயகாந்தனிடம் அறிமுகப்படுத்தினார். ”பெயரைப் பார்த்த நினைவிருக்கிறது” என்று
என்னைப் பார்த்து புன்முறுவலோடு சொன்னார் ஜெயகாந்தன். அவரோடு வந்திருந்த
சா.கந்தசாமியும் என் கதைகளைப்பற்றி சில சொற்கள் சொன்னதை அவர் பொறுமையுடன் கேட்டுக்கொண்டார்.
அன்று ஜெயகாந்தன்
மேடையில் அரைமணி நேரம் பேசினார். நான் மொழிபெயர்த்ததை உன்னிப்பாக கவனித்தார்.
நிகழ்ச்சி முடிந்து தேநீர் அருந்தும் வேளையில் என்னைப்பற்றிக் கேட்டார். நான்
படித்தது, வேலை கிடைத்து கர்நாடகத்துக்குள் வந்தது. பல ஊர்களில் பணி செய்த
அனுபவத்தோடு பெங்களூருக்கு வந்து சேர்ந்த கதையையும் எழுதத் தொடங்கிய கதையையும்
சுருக்கமாகச் சொன்னேன். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டபிறகு விடைபெற்றுச்
சென்றார்.
அடுத்து ஒன்றிரண்டு
ஆண்டுகளிலேயே அவருக்கு ஞானபீட விருது கிடைத்தது. அக்காலத்தில் தினமணி நாளேட்டில்
அவ்வப்போது நடுப்பக்கக்கட்டுரைகளை நான் எழுதி வந்தேன். ஜெயகாந்தன் ஞானபீட விருது
பெற்றமைக்காக அவரைப் பாராட்டும் விதமாக ’கலையைத் தேடி வந்த கெளரவம்’ என்னும்
தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினேன். அது பரவலான கவனத்தைப் பெற்றது. அடுத்து இரண்டு
மூன்று ஆண்டுகள் இடைவெளியிலேயே மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது
எனக்குக் கிடைத்தது. அதற்கான விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அதற்கு சிறப்பு
விருந்தினர்களாக ஜெயகாந்தனும் எம்.டி.வாசுதேவன் நாயரும் கலந்துகொண்டனர். ஒருவர்
சால்வை அணிவிக்க, ஒருவர் மாலையிட அவ்விருதை நான் பெற்றுக்கொண்டேன். என் வாழ்வின்
அரிய தருணங்களில் அது ஒன்று. அன்று ஜெயகாந்தன் மேடையில் என்னைப் பார்த்ததும்
அருகில் அழைத்து “நீங்க தினமணியில எழுதிய கட்டுரையைப் படிச்சேன்” என்று
புன்னகைத்தபடி என் கைகளை அழுத்தமாகப் பற்றிக் குலுக்கினார். பிறகு “பெங்களூருல
நீங்க என் பேச்சை மொழிபெயர்த்தீர்கள் அல்லவா?” என்று புன்னகையுடன்
தலையசைத்துக்கொண்டார்.
மேலும் சில
ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பர்கள் சிலர் ஒருங்கிணைந்து
தமிழில் வார்த்தை என்றொரு மாத இதழையும் எனி இந்தியன் என்னும் பதிப்பகத்தையும்
தொடங்கினர். ஐந்து புத்தகங்களை ஒருசேர முடித்து ஒரு வெளியீட்டு விழாவை அவர்கள்
நடத்தினர். அக்கூட்டத்துக்கு தலைமையேற்று புத்தகங்களை வெளியிட்டவர் ஜெயகாந்தன்.
என்னுடைய நதியின் கரையில் என்னும் கட்டுரைத்தொகுதியை அப்போது அவர் வெளியிட்டார்.
அப்போதும் ஐந்தாறு நிமிடங்களுக்கு அப்பால் அவரோடு உரையாட சரியான வாய்ப்பு
அமையவில்லை. அவ்விதமாக, நான் அவரை மூன்றுமுறை சந்தித்தபோதும், ஒவ்வொரு முறையும்
ஐந்து நிமிடங்கள் மட்டுமே அவரோடு உரையாட
முடிந்தது. ஆனால் அதுவே எனக்குப் பெரிய மனநிறைவை அளித்தது. ஒருவேளை நான்
சென்னைவாசியாக இருந்திருந்தால், தினமும் சந்தித்து உரையாடக்கூடிய நண்பராக
மாறியிருப்பேன்.
வல்லினம்: விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்த நீங்கள், பெங்களூருக்குத் தொழில் நிமித்தமாகக் குடியேறிய காலத்தில் இணைய வசதியெல்லாம் இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். அங்கிருந்தபடி தமிழ் இலக்கியச் சூழலை எவ்வாறு அறிந்துகொண்டீர்கள்? அச்சூழல் உங்களை எழுத்தாளனாகத் தொடர உதவியதா?
பாவண்ணன்: கர்நாடகத்தில் இளநிலை
பொறியாளராக பணியாற்றச் சென்றபோது என் வயது 24. நூலக வாசிப்பின் விளைவாக எனக்கு
தமிழின் மிகச்சிறந்த சாதனைப்படைப்புகளின் அறிமுகம் இருந்தது. ரஷ்ய இலக்கியமும்
ஐரோப்பிய இலக்கியமும் அறிமுகமாகியிருந்தது. நான் பணியாற்றத் தொடங்கியது பெல்லாரி
மாவட்டத்தில். ஆறு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஊர்மாற்றி ஊர் சென்றுகொண்டே
இருந்தேன். என் முகவரிகள் மாறிக்கொண்டே இருந்தன. அப்போது தமிழ்நாட்டில் வெளிவந்த
எல்லா சிறுபத்திரிகைகளையும் சந்தா கட்டி வரவழைத்துப் படித்தேன். அவற்றில்
வெளிவரும் விளம்பரங்களைப் பார்த்து புதிய புத்தகங்களின் வரவைப்பற்றித்
தெரிந்துகொண்டேன். அவற்றை வி.பி.பி. வழியாக வரவழைத்துப் படித்தேன். சென்னைக்கு என்
நண்பர்கள் புறப்படும்போதெல்லாம் அவர்களிடம் ஒரு புத்தகப்பட்டியலைக் கொடுத்தனுப்பி
வாங்கிவரச் சொல்லி படிப்பேன். அப்போதுதான் ஜெராக்ஸ் வசதி நம் சூழலில்
அறிமுகமாகியிருந்தது. நண்பர்கள் வழியாக அரிய நூல்களின் ஜெராக்ஸ் பிரதிகளை வரவழைத்துப் படித்தேன்.
அன்னா கரினினா, மதகுரு, நிலவளம் போன்ற மொழிபெயர்ப்புகளையெல்லாம் ஜெராக்ஸ்
பிரதிகளாகவே படித்தேன். எனக்கு உதவும் நண்பர்கள் எல்லா ஊர்களிலும் இருந்தார்கள்.
அவர்களுடைய அன்பான உதவியால் எந்தப் புத்தகத்தைப்பற்றியும் உடனுக்குடன்
தெரிந்துகொள்ளவும் படிக்கவும் என்னால் முடிந்தது. என் நண்பர்கள் இயற்கை எனக்களித்த
அருங்கொடை. அவர்களால் என் வாசிப்பும் எழுத்துமுயற்சியும் இன்றுவரை தொடர்ந்துகொண்டே
இருக்கிறது.
வல்லினம்: கன்னட மொழியை பெங்களூர் சென்றுதான் கற்றீர்களா?
பாவண்ணன்: பெல்லாரியில் இறங்கி பணியில்
இணைந்த முதல் நாளே கன்னட மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் எனக்குள்
விதையாக விழுந்துவிட்டது. என்னோடு என் முகாமில் என்னைப்போலவே ஆறு இளநிலை
பொறியாளர்கள் இருந்தனர். இருவர் ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர் கர்நாடகத்தைச்
சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் நான் கன்னடத்தில் பேச உதவி செய்தார்கள். எங்கள்
முகாமில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றினார்கள். அவர்களில் தெலுங்கு
பேசுகிறவர்களும் இருந்தனர். கன்னடம் பேசுகிறவர்களும் இருந்தனர். அவர்களிடம்
மேற்கொண்ட அரைகுறையான உரையாடல்களும் என் கன்னட அறிவுக்கு உதவியாக இருந்தது.
முதல்நாள் மாலை வேலை முடிந்ததும் நகரத்துக்குச் சென்று. கன்னட அரிச்சுவடிப்
புத்தகத்தையும் முதல் வகுப்புக்குரிய பாடபுத்தகத்தையும் வாங்கிக்கொண்டு வந்தேன். உயிரெழுத்துகளும்
மெய்யெழுத்துகளுமாக கன்னடத்தில் மொத்தம் 49 எழுத்துகள். என் நண்பர்கள் வழியாக
அவற்றை இரண்டே நாட்களில் கற்றுக்கொண்டேன். அடுத்து உயிர்மெய்யெழுத்துகளையும் ஒரு
வாரத்தில் கற்றுக்கொண்டேன். பிறகு இரண்டெழுத்துச்சொற்கள், மூன்றெழுத்துச்சொற்கள்
என அவர்களே அடுத்தடுத்து கற்பித்தனர். எழுத்துமொழியை நண்பர்கள் வழியாகவும்
பேச்சுமொழியை என் தொழிலாளர்கள் வழியாகவும் வெகுவிரைவில் கற்றுக்கொண்டேன். பிறகு
ஒன்றாம் வகுப்பு கன்னடப்புத்தகத்தை அடுத்து இரண்டு, மூன்று என தொடங்கி எட்டாம்
வகுப்பு கன்னடப்புத்தகம் வரை வாங்கிவந்து படிக்கவும் எழுதவும் தீவிரமாகப் பயிற்சி
செய்தேன். ஆறு மாதத்தில் கன்னடம் கரதலப்பாடமாகிவிட்டது. பிறகு செய்தித்தாள், வார இதழ், மாத இதழ் என கொஞ்சம் கொஞ்சமாகத்
தொடங்கி எல்லாவற்றையும் படிக்கும் பயிற்சியை எடுத்துக்கொண்டேன். ஓராண்டுக்குப்
பிறகு நேரிடையாக கன்னட நாவலைக் கையிலெடுத்துப் படித்தேன். எனக்கு மிகவும் பிடித்த
எழுத்தாளர் சிவராம காரந்த். அவருடைய ‘சோமனதுடி’ நாவலைத்தான் நான் முதன்முதலில்
படித்தேன். அது ஒரு பரவசமான அனுபவம். பெருநகரங்களையும் சிறுநகரங்களையும் கேபிள்
வழியாக இணைத்து எல்லா ஊர்களுக்கும் எஸ்.டி.டி.வசதியை ஏற்படுத்தித் தருவதுதான்
எங்கள் பணி. இப்படி பெல்லாரியில் தொடங்கிய என் பயணம் ஹொஸபெட்டெ, கொப்பள், கதக்,
ஹூப்ளி, தார்வாட் வரைக்கும் சென்று முடிந்தது. பிறகு ஆந்திரத்தில் திருப்பதி,
சித்தூர் என ஒரு ஆண்டு. மீண்டும் கர்நாடகத்தில் ஷிமோகா, சித்ரதுர்கா, பத்ராவதி,
ஹரிஹர் என இரண்டு ஆண்டுகள். 1989இல்தான் நான் பெங்களூருக்கு வந்தேன். அதற்குப்
பிறகும் என் குடும்பத்தினர் இங்கிருக்க, நான் மட்டும் ஊரூராக அலைந்துகொண்டுதான்
இருந்தேன். அது எல்லா ஊர்களின் பேச்சுமொழியையும் வட்டாரவழக்கையும் புரிந்துகொள்ள
உறுதுணையாக இருந்தது. என் பயணங்களின் வழியாக நான் அனுபவபூர்வமாக அறிந்துகொண்ட உண்மை
ஒன்றுண்டு. நம் வாழ்க்கையில் நடப்பவை அனைத்தும் வரையறுத்துச்சொல்ல முடியாத ஏதோ
ஒருவகையில் நல்லதற்கே என்பதுதான் அது. அது ஒன்றும் புதிய விஷயமல்ல. என்றென்றும்
இருக்கக்கூடிய ஒரு பழங்காலத்து உண்மைதான்.
வல்லினம்: தமிழில் தலித் இலக்கியம்
உருவாக கன்னட தலித் சிறுகதைகளை நீங்கள் மொழியாக்கம் செய்தது உங்களின் முதன்மையான
பங்களிப்புகளில் ஒன்று. உங்களுக்கு அந்த எண்ணம் எப்படி உருவானது?
பாவண்ணன்: நான் கன்னட மொழியைக்
கற்று, கன்னட இலக்கியப் படைப்புகளை நேரடியாகப் படிக்கத் தொடங்கிய காலத்திலேயே
கர்நாடகத்தில் தலித் இயக்கம் உருவாகி நிலைபெற்றுவிட்டது. அதற்குச் சில ஆண்டுகள்
முன்பாக கர்நாடகத்தின் அண்டை மாநிலமான மகாராஷ்டிரத்திலும் அந்த இயக்கம்
நிலைபெற்றிருந்தது. பெல்காம் என்பது இரு மாநிலங்களுக்கும் இடையிலான பகுதி என்பதால்
மராத்தி இலக்கியம் கன்னடத்திலும் கன்னட இலக்கியம் மராத்தியிலும் மொழியாக்கம்
செய்யப்படுவது மிக இயல்பாக நடந்தேறிக்கொண்டிருந்தது. அரசியல் களங்களில் ஏற்பட்ட
மாற்றங்களின் விளைவாக உருவான தலித் எழுச்சியும் சுதந்திர இந்தியாவில் கல்வியால்
தலைநிமிர்ந்த முதல் தலைமுறை தலித் இளைஞர்களின் வேட்கையும் இணைந்து ஒரு புதிய
சிந்தனைப்போக்கு உருவாவதற்குத் தூண்டுகோலாக அமைந்தன. கவிதை, சிறுகதை என பல
தளங்களில் தலித் படைப்பாளிகள் உருவானார்கள். தாம் எப்படி உலகத்தாரால்
நடத்தப்படுகிறோம் அல்லது நசுக்கப்படுகிறோம் என்பதை படைப்புகளாக எழுதி வெளியுலகம்
அறியும்படி செய்தார்கள். ஒரு சிறுகதையாகவோ அல்லது நாவலாகவோ முன்வைக்கும்போது, அது
புனைவாக கருதப்பட்டுவிடும் என்னும் எச்சரிக்கை உணர்வால், தம் வாழ்க்கையை
தன்வரலாற்று நூல்களாக அவர்கள் எழுதத் தொடங்கினர். உண்மைத்தன்மை உணரப்பட வேண்டும் என்னும்
எச்சரிக்கை உணர்வு அவ்விதத்தில் செயல்படத் தூண்டியது. ஏற்கனவே வெளிவந்திருந்த
மராத்திய தலித் எழுத்தாளர்களின் தன்வரலாற்று நூல்கள் கன்னட தலித்
எழுத்தாளர்களுக்கும் உத்வேகமூட்டி, அவர்களையும் எழுத வைத்தன. அத்தகு படைப்புகள்
எழுந்து வந்த காலத்தில் நான் அவற்றுக்கு வெகு அருகில் இருந்தேன். அதனால் ஏற்பட்ட
மாற்றங்களை நேருக்குநேர் பார்த்தேன். இப்படிப்பட்ட வீச்சுடன் தமிழுலகத்திலும்
தன்வரலாற்று நூல்கள் எழுதப்பட வேண்டும் என நான் நினைத்தேன். யாராவது ஒருவர்
தொடங்கிவைத்தால், பிறர் அதே வழியில் விருப்பத்தோடு எழுதக்கூடும் என நான்
நம்பினேன். அதனால் உடனடி முன்மாதிரியாக
விளங்கிய கன்னடச்சிறுகதைகளையும் தன்வரலாற்று நூல்களையும் அறிமுகம் செய்யும் விதமாக
மொழிபெயர்த்து வெளியிட்டேன்.
வல்லினம்:
உங்கள் முயற்சிக்குப் பின் அவ்வாறான தலித் இலக்கியங்கள் தமிழில் உருவானதா?
அவற்றில் குறிப்பிடத்தக்க படைப்புகள் எவை?
பாவண்ணன்: என் மொழிபெயர்ப்பில், வெளிவந்த இரு
தலித் தன்வரலாறுகளும் கன்னட தலித் எழுத்தாளர்களின் சில தேர்ந்தெடுத்த சிறுகதைகளைக்
கொண்ட புதைந்த காற்று என்னும் தொகுதியும் பலராலும் விரும்பி வாசிக்கப்பட்டன. பத்திரிகைகளில்
நல்ல மதிப்புரைகளும் வெளிவந்தன. அந்தக் காலகட்டத்தில் பல இளைஞர்களை அந்த நூல்கள்
ஈர்த்தன. அவர்களில் சிலர் ஊக்கம் கொண்டு எழுதத் தொடங்கினர். இந்த நூல்களை அவர்கள்
முன்னோடி நூல்களாகக் கருதினார்களா இல்லையா என்பதை குறிப்பிட்ட எழுத்தாளர்கள்தான்
சொல்லவேண்டும். நானாக அப்படிச் சொல்வது பிழையாகும். இந்த மொழிபெயர்ப்புகள்
வெளிவருவதற்கு முன்பேயே பாமா எழுதிய கருக்கு வந்துவிட்டது. இவை வெளிவந்த சில
ஆண்டுகளுக்குப் பிறகு கே.ஏ.குணசேகரன் எழுதிய ’வடு’ என்னும் தன்வரலாறு வெளிவந்தது. இரண்டுமே
தமிழ்ச்சூழலில் முக்கியமான ஆரம்பப்புள்ளிகள். இன்றளவும் அனைவராலும்
வாசிக்கப்படுபவை. திருக்குமரன் கணேசனின் ’கறிவிருந்தும் கவுளி வெற்றிலையும்’ சமீப
காலத்தில் வெளிவந்த மிக முக்கியமான தன்வரலாற்று நூல். அந்நூலுக்காக அவர்
எழுதியிருக்கும் முன்னுரையில், கவர்ன்மெட்
பிராமணன் தன்வரலாற்றை எழுதிய அரவிந்த மாளகத்தியை நினைவுகூர்ந்து பதிவு செய்திருக்கிறார்.
ராஜ் கெளதமன் எழுதிய சிலுவைராஜ் சரித்திரம் ஒரு நாவல் என்றபோதும் அதைத்
தன்வரலாற்று நாவல் என்றே குறிப்பிடலாம். இன்னும் கூட சில படைப்புகள் இருக்கலாம்.
நான் படித்திராத நிலையில் ஒரு முழுமையான பட்டியலை கொடுப்பது மிகவும் சிரமம்.
வல்லினம்: தலித் இலக்கியம் என்பது
தமிழ் இலக்கியச் சூழலில் சாதிய இலக்கியம் என இன்று பேசப்படுகிறது. உங்கள்
வாசிப்பில் தலித் இலக்கியம் என்பதை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
பாவண்ணன்: ’இட்டார்
பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்’ என மானுட குலத்தை அறத்தின் அடிப்படையில் இருபெரும்
பிரிவுகளாகப் பிரித்து மதிப்பிட்ட இலக்கிய மரபில் வந்தவர்கள் நாம். எல்லா இலக்கியமும்
அறம் என்னும் மாபெரும் மதிப்பீட்டை வலியுறுத்தவும் நிலைநிறுத்தவும்
எழுதப்படுபவையே. அழகிரிசாமி எழுதிய ஒரு கதை நினைவுக்கு வருகிறது. அந்தக் கதையின்
தலைப்பு சுயரூபம். இவ்வாழ்வில் ஒருவனை இரு குணங்கள் விலங்காக மாற்றுவதற்குத் தயாராக இருக்கின்றன. ஒன்று பசி.
இன்னொன்று சாதிப்பெருமிதம். ஒருவன் சாதிப்பெருமிதம் மேலோங்கியிருக்கும் தருணத்தில்
சாப்பாட்டுக்கடையில் உட்கார்ந்துகொண்டு உணவைப்பற்றி பொருட்படுத்தாதவனைப்போல
ஏளனமாகப் பேசிச் சிரிக்கிறான். அவனே பசி
மேலோங்கிய தருணத்தில் இன்னொருவனை அடித்து வீழ்த்தி விலங்கைப்போல
அடுத்தவனிடமிருக்கும் உணவைப் பறித்துக்கொள்ள முயற்சி செய்கிறான். இரு
விலங்குகளையும் கட்டுப்படுத்தி ஆளத் தெரிந்தவர்களுக்குப் பிரச்சினை இல்லை.
கட்டுப்பாடு அற்றவர்கள் ஏதோ ஒன்றுக்கு இரையாகி வீழ்ந்துவிடுகிறார்கள். சாதிய
அடையாளம் வெளிப்படையாக முன்வைப்பதாலேயே இக்கதையை சாதியக்கதை என யாரும்
வகுத்துவிடமுடியாது. சாதிப்பெருமையில் அடங்கியிருக்கும் வெறுமையையும்
அறிவீனத்தையும் உணர்த்தும் கதை என்றுதானே சொல்லமுடியும். இன்னொரு சிறுகதையும்
நினைவுக்கு வருகிறது. அது நாஞ்சில் நாடன் எழுதிய கதை. அது ஒரு விற்பனைப்பிரதிநிதியின் கதை. தொழில் காரணமாக
காலை முதல் அலைந்துகொண்டே இருந்ததில்
அவனுக்கு சாப்பிடக்கூட நேரமில்லை. ஒரு
சாப்பாட்டுக்கடையில் நான்கு ரொட்டிகளை பொட்டலமாகக் கட்டி எடுத்துக்கொண்டு அவசரமாக
ஓடிவந்து ரயிலைப் பிடிக்கிறான். ரயில் ஓடத் தொடங்கியதும் அந்தப் பொட்டலத்தைப்
பிரித்து உண்ணத் தொடங்குகிறார். இன்னும்
அரைத்துண்டு ரொட்டி மட்டுமே மிச்சமிருக்கும் நிலையில் அறிமுகமில்லாத இன்னொருவர்
அவர் கையைப் பிடித்து நிறுத்தி ’நாம் சாப்பிடலாம்’ என்று சொல்கிறார். அவர்
அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க, அந்தப் பெரியவர் பொட்டலத்தை தன் பக்கம் இழுத்து
சாப்பிடத் தொடங்குகிறார். சாதி, மொழி, இனம் என அனைத்தையும் கடந்து பசியின் விளைவாக
ஒன்றிணையும் மானுட உணர்வை இக்கதையின் சித்தரிப்பு உணர்த்துவதை நம்மால்
உணரமுடிகிறது அல்லவா? ஒரு கதையில் முன்வைக்கப்படும் ஒரு பாத்திரத்தை எந்த
அடையாளமும் இல்லாமல் மொட்டையாக எப்படி ஒருவர் குறிப்பிடமுடியும்? அவருடைய மொழி,
இன, சாதி அடையாளம் இடம்பெறுவதை ஒரு படைப்பாளியால் தவிர்க்கமுடியாது. ஆனால் அவை
அனைத்தும் சிறுகதை உணர்த்த முற்படும் சித்திரத்துக்கு துணைநிற்பவையாகவும்
நம்பகத்தன்மையை உருவாக்குவதாகவும் மட்டுமே தொழிற்படுகின்றன. அதுவே அதன் எல்லை.
நல்ல சிறுகதைகள் அனைத்தும் அப்படித்தான் அமைந்துள்ளன. அக்கதைகளை ஒருவரும்
சாதியக்கதைகள் என மதிப்பிடுவதுமில்லை. ஒதுக்குவதுமில்லை. அப்படிப்பட்ட நிலையில்
சாதிய அடையாளம் சுட்டிக்காட்டப்படுவதாலேயே தலித் எழுத்தாளர்களின் கதைகளை மட்டும்
சாதியக்கதைகள் என எப்படி வகுக்கமுடியும்? யார் எழுதிய கதையாக இருந்தாலும் சரி, அது
எந்தப் புள்ளியை நோக்கி பயணம் செய்கிறது, எத்தகு சித்திரத்தை அளிக்கிறது, எத்தகைய
உண்மையை நமக்கு உணர்த்துகிறது என்பதுதான் முக்கியம். வேறு எந்த அம்சமும்
முக்கியமில்லை.
வல்லினம்:
இந்தக் கேள்வியை இன்னும் விளக்கமாகக் கேட்கிறேன். கெய்ல் ஓம்வெத் தலித்தியம்
என்பதை கொஞ்சம் விரிவு படுத்தி தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள்,
நிலமற்றவர்கள், ஏழை விவசாயிகள், அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் மதத்தின்
பெயராலும் சுரண்டப்படும் அனைவரும் தலித்துகள் என்கிறார். தயாபவர் போன்ற மராட்டிய
எழுத்தாளர்களும் பொருளாதார கலாச்சார அடக்குமுறைக்கு ஆளானவர்களையும் தலித் எனும்
வகைமையில் அடக்கலாம் என்கிறார். ஆனால், தமிழில் தலித் இலக்கியம் என்பது சாதிக்குள்
அடங்கியுள்ளதா எனக் கேட்கிறேன். கன்னடத்திலும் சாதிய ஒடுக்குமுறை அல்லது
தீண்டாமையைப் பேசும் சூழல்தான் தலித் இலக்கியமாக முன்வைக்கப்படுகிறதா?
பாவண்ணன்: களச்செயல்பாடு என்பது வேறு.
இலக்கியச்செயல்பாடு என்பது வேறு. ஒரு சமூகத்தில் சில நன்மைகளுக்காகவும்
உரிமைகளுக்காகவும் மக்களுக்கு களச்செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. அப்படிப்பட்ட
தருணத்தில் ஒருங்கிணைந்து நின்றால் மட்டுமே வெற்றியை அடையமுடியும்.
இலக்கியச்செயல்பாடு என்பது இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அது முழுக்க
மனம் சார்ந்தது. சிந்தனை சார்ந்தது. ஓர் இலக்கியச்செயல்பாட்டை ஒரு சாதி
அமைப்புக்கு உரியதாக ஒருபோதும் வகுக்கவே முடியாது. அது தன்னிச்சையானது. தனக்கேயான
பாதையைக் கொண்டது. வாசகர்கள் வகைப்படுத்தி புரிந்துகொள்வதற்கான ஒரு சட்டகமாக
மட்டுமே தலித் இலக்கியம் என்னும் அடையாளம் தேவைப்படுகிறது. தலித்துகள்
வாழ்க்கைநிகழ்ச்சிகளையும் வலியையும் முன்வைப்பதால் மட்டுமே ஒரு படைப்பு
இலக்கியப்படைப்பாக நிலைத்து நிற்கமுடியாது. எந்தப் படைப்பும் இலக்கியம் என்னும்
மாபெரும் வடிவத்துக்கே உரிய அழகியலையும் ஆழத்தையும் அது கொண்டிருந்தால் மட்டுமே
நிலைத்து நிற்கமுடியும்.
சங்க இலக்கியத்தை அகப்பாடல்கள்,
புறப்பாடல்கள் என நாம் ஏன் பிரிக்கிறோம்? பாடல் வடிவங்களை ஆசிரியப்பா, வெண்பா, விருத்தப்பா,
கலிப்பா, வஞ்சிப்பா என ஏன் பிரிக்கிறோம். கூடுதலான புரிதலுக்காக மட்டுமே
வகைமைப்படுத்துவது அவசியமாகிறது. ஒரு பாடல், பாட்டுக்கே உரிய தாளத்தையும்
ஆழத்தையும் கொண்டிருக்கும்போது மட்டுமே பாடலாக ஒரு வாசகனின் மதிப்பைப் பெறும்.
ஏராளமாக எழுதிக் குவிக்கப்பட்ட பாடல்களைச் சலித்துச் சலித்துத்தானே நம் முன்னோர்கள்
அகநானூறையும் புறநானூறையும் தொகுத்து வைத்தார்கள். அந்தக் காலத்து
வகைமைப்படுத்தலின் விளைவாகவே அதை நாம் கருதுகிறோம்.
ஒரு வாசகனின் கோணத்தில் தலித்
இலக்கியமும் ஒரு வகைமையே. எல்லா மாபெரும் இலக்கியங்களும் தொட்டு நிற்கக்கூடிய
ஆழத்தை தலித் இலக்கியமும் தொடவேண்டும். அப்படி தொடுகிற படைப்புகளே வாசக மனத்தில்
இடம் பிடிக்கிறது. வரலாற்றிலும் இடம் பிடிக்கிறது. நான் அறிந்த வகையில் நான்
பேசிப் பழகிய சித்தலிங்கையா, தேவனூரு மகாதேவ, மொகள்ளி கணேஷ் ஆகியோரின் படைப்புகள்
அந்த ஆழத்தைத் தொட்டு நிற்பவை. சாதிய அடையாளத்தைக் கடந்துசெல்பவை. ஒடுக்குமுறை
அனுபவங்களையும் தீண்டாமை அனுபவங்களையும் பிறரைவிட தலித்துகள் எதிர்கொள்கிறார்கள்
என்பது எதார்த்தமான உண்மை. ஓர் எழுத்தாளருக்கு, தொடக்க நிலையில் சொந்த அனுபவங்கள்
சார்ந்து யோசிப்பதும் எழுதுவதும் எளிதாக இருக்கும். ஆனால் ஒருவரும் அதை மட்டுமே
நம்பியிருப்பதில்லை. மனப்பயிற்சியும்
எழுத்துப்பயிற்சியும் பெருகப்பெருக, பிறர் அனுபவங்களையும் அவர்
தன்வயமாக்கிக்கொள்கிறார். வாடிய பயிரைக்
காணும்போது அவரால் வாடாமல் இருக்கமுடிவதில்லை. அதுதான் ஒரு படைப்பாளிக்குரிய மனம்.
அது ஒரு நீண்ட பயணம். எல்லா
எழுத்தாளர்களும் அந்தப் பயணத்தில் எங்கும் தடைப்பட்டு நிற்காமல் தொடர்ந்து
சென்றுகொண்டே இருப்பவர்களே.