தமிழிலக்கியத்தில் நவீனத்துவம் அழுத்தமாக வேரூன்றியதில் தமிழில் தோன்றிய சிறுபத்திரிகை மரபு ஆற்றிய பங்கு முக்கியமானது. தொடக்க காலத்தில் செய்திகளுக்கான ஊடகமாகவும் விளம்பரங்களுக்கான களங்களாகவும் உருவான பத்திரிகைகள், கொஞ்சம் கொஞ்சமாக தம் வாசகர்களின் வளையத்தை பெரிதாக்கிக்கொள்ளும் பொருட்டும் தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டும் பொழுதுபோக்குக்கூறுகளையும் தம் உள்ளடக்கங்களில் ஒன்றாக எடுத்துக்கொள்ளத் தொடங்கின. இலக்கியப்படைப்புகளும் அதன் ஒரு பகுதியாக இடம்பெறத் தொடங்கின. ஒரு புதிய ஊடகம் ஒரு சமூகத்தில் தன்னை நிலைக்கவைத்துக்கொள்ளும் பயணத்தில், இது தவிர்க்க இயலாத ஒரு செயல்பாடாகும். இப்படித்தான் தமிழ்ச்சூழலிலும் நிகழ்ந்தது.
ஆனால்
பொழுதுபோக்கின் எல்லைகளைக் கடந்து விரிந்துசெல்லும் ஆற்றலை, இலக்கியம் தன்னகத்தே கொண்டிருந்ததால்
அதற்கு வேறொரு ஊடகம் தேவைப்பட்டது. அதுதான் சிறுபத்திரிகை. பொழுதுபோக்குக்கு அப்பால்
சென்று வாழ்க்கையின் விதவிதமான கோலங்களை, முரண்களை, வேதனைகளை, கேள்விகளை, தடுமாற்றங்களை,
விமர்சனங்களை முன்வைக்கும் படைப்புகளுக்கு அது களம் அமைத்துக்கொடுத்தது.
ஒரு சிறுபத்திரிகை
எவ்வளவு காலம் செயல்பட்டது, எத்தனை பிரதிகளை வெளியிட்டது என்பதுபோன்ற அம்சங்கள் எதுவுமே
சிறுபத்திரிகையை மதிப்பிடுவதற்கான அளவுகோல்
அல்ல. மாறாக, ஒரு வாசகனுக்கு அல்லது ஒரு விமர்சகனுக்கு இலக்கியம் சார்ந்து எப்படிப்பட்ட
புதிய பார்வையை அது வழங்கியது என்பதுவே முக்கியமான அளவுகோலாக இருக்கும். இத்தகு பார்வைகளின்
தொகுப்பாகவே தமிழில் நவீனத்துவம் தோன்றி வளர்ந்து நிலைபெற்றது. மணிக்கொடி காலம், எழுத்து
காலம், சரஸ்வதி காலம், பிரக்ஞை காலம், தீபம் காலம், கணையாழி காலம் கசடதபற காலம் என
பத்திரிகையின் பெயரை முன்னொட்டாகக் கொண்டே அப்பத்திரிகை செயல்பட்ட காலம் ஆய்வாளர்களால்
வரையறுக்கப்பட்டது.
அந்தந்தக்
காலகட்டங்களில் வெளியான கதைகளும் அவ்வப்போது தொகுக்கப்பட்டு மணிக்கொடி கதைகள், எழுத்து
கதைகள், சரஸ்வதி கதைகள் என நூல்களாக வெளிவந்தன. கலைமகள் பத்திரிகையில் வெளிவந்த கதைகள்
கூட தொடக்கக்காலத்தில் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன. அவையெல்லாம் காலத்தின் மாறுபட்ட
அடையாளங்களாக அல்லது வரலாற்றுப்புதையல்களாக நம்மிடையே இன்றும் இருக்கின்றன.
இத்தகு
நூல்வரிசையில் வைத்து மதிப்பிடத்தக்க அளவுக்கு சமீபத்தில் பனிக்குடம் இதழ் சிறுகதைகள்
என்னும் தொகுதி வந்துள்ளது. சிறுபத்திரிகை
மரபில் புத்தாயிரத்தாண்டுக்குப் பிறகு வெளிவந்த இதழ்களில் ஒன்று பனிக்குடம். கவிஞர்
குட்டிரேவதியின் ஆசிரியத்துவத்தில் சில இதழ்கள் வெளிவந்தன. பெண் எழுத்துகளை தமிழ்ச்சூழலில்
அறிமுகப்படுத்துவதே அதன் நோக்கமாக இருந்தது.. மிகவும் குறுகிய காலம் மட்டுமே அப்பத்திரிகை
இயங்கினாலும் ஒவ்வொரு இதழிலும் தரமான சிறுகதைகள் இடம்பெற்றன. அவ்விதழ் நின்று பத்தாண்டுகள்
கழிந்த நிலையில் கவிஞரும் சிறுகதையாசிரியருமான நா.கோகிலன் பனிக்குடம் இதழில் வெளிவந்த
முக்கியமான சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். தமிழ்ச்சூழலில் பனிக்குடம்
ஆற்றிய பங்கு எத்தகையது என்பதை இன்றைய இளம் வாசகர்கள் புரிந்துகொள்வதற்கு இது மிகவும்
பயனுள்ளதாக இருக்கும்.
இத்தொகுப்பில்
பாமா, சிவகாமி, விஷயலட்சுமி சேகர், உமா மகேஸ்வரி, அம்பை, ஃபஹிமா ஜஹான், செந்தமிழ்மாரி
ஆகியோரின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்துமே தமிழில் நேரடியாக எழுதப்பட்ட சிறுகதைகள்.
மொழிபெயர்ப்புப்பிரிவில் வங்க எழுத்தாளரான மகாஸ்வேதா தேவி எழுதிய ஒரே ஒரு சிறுகதை மட்டும்
சேர்ந்துள்ளது. படைப்பாளர்கள் பற்றிய குறிப்புகளை தனியாக எழுதிச் சேர்த்திருந்தால்,
வாசகர்கள் அவர்களைப்பற்றி அறிந்துகொள்ள உதவியாக அமைந்திருக்கும்.
அம்பை
எழுதிய வற்றும் ஏரியின் மீன்கள் சிறுகதை
குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும். இக்கதை வெளிவந்த காலத்துக்குப் பிறகு, அவருடைய தொகுப்பொன்று
இதே தலைப்பில் வெளிவந்து அனைவருடைய பாராட்டுகளையும்
பெற்றது.
ஒளவையார்
தன் மூதுரை நூலில் ஒரு குளத்தின் காட்சியை
முன்வைத்து எது நல்ல உறவு, எது போலியான உறவு என வரையறுக்க உதவும் அளவுகோலைப்பற்றிக்
குறிப்பிட்டிருக்கிறார். ‘அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல உற்றுழி தீர்வார் உறவல்லர்
அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலுமே ஒட்டி உறுவார் உறவு’ என்பதுதான்
அக்காட்சி.
ஒரு குளத்தின்
நீர் வற்றியதும் அக்குளத்தைவிட்டு பறவைகள் நீங்கி எங்கோ சென்றுவிடுகின்றன. வாய்ப்புகளுக்காக
மட்டுமே உறவு கொண்டாடுபவர்கள் அத்தகையவர்களாக இருப்பார்கள். குளத்தின் ஈரத்தை நம்பி
வளர்ந்து செழிக்கும் கொட்டியும் ஆம்பலும் நெய்தல் பூக்களும் குளத்திலேயே மக்கி மண்ணாகிவிடுகின்றன.
அன்புக்காகவும் நெருக்கத்துக்காகவும் நட்பு பாராட்டுகிறவர்கள் அத்தகையவர்களாக இருப்பார்கள்.
உலகையே இருபெரும் பிரிவாகப் பிரித்து உறவின் இலக்கணத்தைப் புரிந்துகொள்ள வைக்கிறார்
ஒளவையார்.
அக்பர்
காலத்தில் வாழ்ந்த அப்துல் ரஹீம்கான் என்னும் கவிஞர் கிட்டத்தட்ட இதே கருத்தை ஒரு கவிதையில்
வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த உண்மையை தன் கதையில் ஓரிடத்தில் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்
அம்பை.
ஏரி வற்ற,
பறவைகள் பறந்து
வேறு
உறைவிடம் தேடும்
ஏ ரஹீம்,
சிறகில்லா மீன்கள்
எங்குதான்
போகமுடியும்?
கொட்டியையும்
ஆம்பலையும் நெய்தலையும் ஒளவையார் சுட்டிக்காட்டியது போல, ரஹீம்கான் மீன்களைச் சுட்டிக்
காட்டுகிறார். ஆனால் மழை பொழியும் என அந்த மீன்கள் நம்புகின்றன. அவை சாக பயப்படுவதில்லை.
ஏரி நிரம்புவதற்காக காத்திருக்கின்றன. எக்காரணத்தை முன்னிட்டும் ஏரியை விட்டு விலகிச்
செல்ல விரும்பாத மீன்கள்.
அக்கதையில்,
ஒரு துறவியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒருவர் ரோஜாத்தோட்டம் வைத்து வளர்க்கிறார்.
இன்னொருவர் சின்னச் சின்ன கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவப்பயன்கள் கிட்டுவதற்கு
ஏற்பாடு செய்கிறார். மற்றொருவர் ஏழைப்பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடம் கட்டுகிறார். அவர்கள்
குளமாகவும் இருக்கிறார்கள். மீன்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் அழைப்பை ஏற்று
நகரத்திலிருந்து புறப்பட்டு வரும் ஒரு பெண்மணியும் அந்த இலட்சிய வாழ்க்கையை வாழ்வதற்குத்
தயாராகிற கதையைத்தான் அம்பை ஒரு கோட்டோவியத்தைப்போலவே எழுதியிருக்கிறார். அவர் விட்டுவைத்திருக்கும்
இடைவெளிகளை நம் எண்ணங்களால் நிரப்பி அக்கதையை நாம் நம் நினைவில் விரித்தெடுக்கலாம்.
முதலில் உருவான தயக்கங்கள் எல்லாம் உதிர்ந்துவிட, மெல்ல மெல்ல அவளும் அக்குளத்தில்
ஒரு மீனாக மாறிவிடுகிறாள். ஓர் இலட்சிய வாழ்க்கையின் சித்திரத்தையே இச்சிறுகதையில்
தீட்டிக் காட்டியிருக்கிறார் அம்பை.
மற்றொரு
முக்கியமான சிறுகதை குந்தியும் வேட்டுவச்சியும்.
மகாபாரதப் பின்னணியில் எழுதப்பட்ட இக்கதை பெரும்பாலும் உரையாடல் வடிவிலேயே அமைந்துள்ளது.
அரண்மனையை விட்டு வெளியேறிய திருதராஷ்டிரனும் காந்தாரியும் காட்டையே தம் புகலிடமாக
அமைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு உதவியாக குந்தியும் வந்துவிடுகிறாள். முதுமை ஒரு
பாரமாக அவர்கள் உடலை வருத்துகிறது. பிள்ளைகளை இழந்த கண்ணுக்குத் தெரியாத துயரம் இன்னொரு
பாரமாக அவர்கள் மனத்தை அழுத்துகிறது. இரு பாரங்களுக்கிடையில் சிக்கி அமைதி இழந்தவர்களாக
தடுமாறுகிறார்கள் அவர்கள். யோசித்து யோசித்து அவர்கள் கண்டடையும் பதில்கள் சில நேரங்களில்
அமைதியளித்தாலும் பல நேரங்களில் குற்ற உணர்ச்சியைப் பெருக்குவதாகவே அமைந்துவிடுகின்றன.
திருதராஷ்டிரனையும் காந்தாரியையும் பார்க்கும்போதெல்லாம் குந்தியுடைய குற்ற உணர்ச்சி
மேன்மேலும் அதிகமாகிறது.
குற்ற
உணர்ச்சியிலிருந்து மீண்டெழ, அகன்று விரிந்த அந்தக் காட்டில் மனம் போன போக்கில் அலைந்து
திரிவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறாள் குந்தி. அந்த இலக்கில்லாப் பயணத்தில் குந்தி
ஒரு வேட்டுவப்பெண்ணைச் சந்திப்பதுபோல ஒரு கதைத்தருணத்தை அமைத்துக்கொள்கிறார் மகாஸ்வேதா
தேவி. அந்த உரையாடலே கதையின் சாரமான பகுதி. அந்த உரையாடலின் முடிவில் வேட்டுவப்பெண்
குந்தியிடம் ஒரு கேள்வி கேட்கிறாள். அந்தக் கேள்வியே இக்கதைக்கு முதுகெலும்பாக அமைந்திருக்கிறது.
குருக்ஷேத்திரப் போரை அனைவரும் அறத்தை நிலைநாட்ட நடைபெற்ற யுத்தம் என்று நம்பிக்கொண்டிருக்கும்
சூழலில், அந்த நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குகிறது அவள் வினா.
உரையாடலின்
போக்கில் அந்த வேட்டுவப்பெண் குந்தியிடம் அரக்குமாளிகை பற்றிய நிகழ்ச்சியை நினைவுபடுத்துகிறாள்.
துரியோதனின் சதியிலிருந்து தப்பிக்க, அடைக்கலம் தேடிவந்த ஒரு மூதாட்டியையும் அவளுடய
ஐந்து பிள்ளைகளையும் தம் மாளிகையில் தங்கவைத்துவிட்டு, தம் பிள்ளைகளோடு குந்தி தப்பித்துச்
சென்றது எப்படிப்பட்ட அறம் என்று வேட்டுவப்பெண் எழுப்பும் கேள்விக்கு குந்தியால் பதில்
சொல்லமுடியவில்லை. அரச குடும்பங்களுடன் ஒரு தொடர்பும் இல்லாத வனவாசிகளை நெருப்புக்கு
இரையாக்கிவிட்டு தப்பித்துச் சென்றதன் வழியாக எந்த அறம் நிலைநிறுத்தப்பட்டது என்பதுதான்
அவள் கேள்வி.
அறமற்ற
செயல்களைச் செய்த ஒரு குடும்பம் அறத்தை நிலைநாட்டுவதற்காக போர் நடத்தியதாகச் சொல்வதில்
இருக்கும் முரணை அவளுடைய கூர்மையான கேள்வி உணர்த்திவிடுகிறது. அறம் என்பது தமக்குச்
சாதகமான தருணங்களில் மட்டும் முன்வைத்துப் பேசுவதற்கும் பிற தருணங்களில் அமைதியாகக்
கடந்துசெல்வதற்கும் உரிய ஒன்றல்ல. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நிலைபிறழாது கடைபிடிக்கவேண்டிய
அல்லது பின்பற்ற வேண்டிய ஒரு பண்பு.
அந்த
வேட்டுவப்பெண் எழுப்பும் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் குந்தி தடுமாறுகிறாள். வேட்டுவப்பெண்ணின்
கேள்விக்கு பதில் சொல்வதற்கு மாறாக, வேட்டுவப்பெண் யார், எத்தகையவள் என்பதைத் தெரிந்துகொள்வதில்
அவள் ஆர்வம் திசைதிரும்பி விடுகிறது. அரக்குமாளிகையில்
அழிந்துபோன குடும்பத்தின் கொடிவழியிலிருந்து வந்தவள் என அவள் தன்னைப்பற்றித் தெரிவித்துக்கொள்கிறாள்.
அதைக் கேட்டதும் திகைப்பில் மூழ்கிவிடுகிறாள் குந்தி.
கதை அத்துடன்
முடியவில்லை. மகாஸ்வேதா தேவி இன்னும் கூடுதலாக ஒரு பகுதியை எழுதிச் சேர்க்கிறார். மரத்தில்
பிசின்மரங்களின் பட்டைகளில் ஒட்டிக்கொண்ட பிசின் உருண்டைகள் கீழே விழுந்து உலர்ந்து
கிடக்கும். மரத்திலிருந்து விழும் பழங்கள் அந்த உருண்டைகள் மீது விழும்போது ஏற்படும்
உராய்வில் சட்டென தீப்பற்றிக்கொள்ளும். குந்தியும் வேட்டுவப்பெண்ணும் உரையாடிக்கொண்டிருக்கும்
நேரத்தில் காட்டில் எங்கோ ஒரு மூலையில் அத்தகு தீ பற்றிக்கொண்டுவிட்டதையும் அது வேகமாக
பரவிக்கொண்டு வருவதையும் அதன் மணத்தின் மூலம் உணர்ந்துகொள்கிறாள் வேட்டுவப்பெண். குந்தியிடம்
அதைத் தெரிவித்துவிட்டு அக்கணமே அங்கிருந்து
தப்பித்துவிடுகிறாள். அக்கணத்தில் அந்தக் காடே
அரக்குமாளிகையாக மாறிவிட்டதையும் முதுமை கொண்ட மூவர் மட்டுமே அந்தத் தீயில்
சிக்கிக்கொண்டதையும் குந்தி உணர்ந்துகொள்கிறாள். மனிதர்களின் அறம் பொழுதுக்கு ஒன்றாக
மாறுபடினும் இயற்கையின் அறம் ஒருபோதும் மாறுவதில்லை என்பதை, மகாஸ்வேதா தேவியின் சிறுகதை
நம்மை உணரச் செய்கிறது.
இன்று
பனிக்குடம் இதழ் தன் இயக்கத்தை நிறுத்திவிட்டது என்பது துயர்தரும் உண்மை. ஆனால் அந்தப்
பொறுப்பை இன்னொரு இதழ் வந்து தானாகவே எடுத்துக்கொண்டது. அது ஒரு தொடர் ஒட்டம் போல.
ஒருபோதும் நிற்பதில்லை. நாம் மூச்சுவிடுவதுபோல தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது.
(பனிக்குடம் இதழ் சிறுகதைகள். தொகுப்பாசிரியர் நா.கோகிலன். தேநீர் பதிப்பகம்,
மசூதி பின் தெரு, சந்தைக்கோடியூர், ஜோலார்பேட்டை 635851. விலை. ரூ.130)
(புக் டே இணைய தளத்தில் 28-09.2024 அன்று வெளியானது)