வல்லினம் நேர்காணல் தொடர்ச்சி....
வல்லினம்: தமிழைத் தவிர இந்தியாவின்
பிற மொழிகளில் தலித் இலக்கியத்தின் போக்கு எவ்வாறு உள்ளது?
பாவண்ணன்: தமிழ், கன்னடம், ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் வெளிவரும் படைப்புகளைப்பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இல்லாத சூழலில் இக்கேள்விக்கு என்னால் நேரடியான பதிலைச் சொல்வதில் தயக்கமிருக்கிறது. ஆனால், இதையொட்டி எனக்குத் தெரிந்த ஒரு தகவலை மட்டும் இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
சமீபத்தில் சாகித்திய
அகாதெமி மொழிபெயர்ப்பாளருக்கான விருதுவிழாவை பெங்களூரில் நடத்தியது. விருது
பெறுவதற்காக எல்லா மாநிலங்களிலிருந்தும் வந்த மொழிபெயர்ப்பாளர்கள் கலந்துகொண்டனர். விழா முடிந்து உணவு
இடைவேளையின்போது அசாம், சிக்கிம், பீகார், உத்தரப்பிரதேசம், காஷ்மீர் போன்ற வட
இந்திய மாநிலங்களைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களிடம் சிறிது நேரம்
உரையாடிக்கொண்டிருந்தேன். அம்மொழிகளில் தலித் எழுத்துகள் சார்ந்து
உருவாகியிருக்கும் உத்வேகத்தைப்பற்றி அவர்கள் உற்சாகமாக எடுத்துரைத்தனர். சிறுகதைகளையும்
நாவல்களையும் எழுதுவதைவிட ஒவ்வொருவரும் தன்வரலாறுகளை எழுதி
வெளியிடுவதைப்பற்றி பலரும் சொன்னார்கள்.
கன்னடச்சூழலிலும் தன்வரலாறு நூல்களே பெரிதும் வருகின்றன என்று நான் அவர்களிடம்
எடுத்துரைத்தேன். அதன் காரணத்தை என்னால்
புரிந்துகொள்ள முடிகிறது. தன்வரலாறுகள் என்பவை நமது சமகாலம் பற்றி நாம்
எழுதிவைக்கும் ஆவணங்கள். அவை சார்ந்து எவ்விதமான விமர்சனங்களுக்கும் இடமில்லை. ஒரு
மனிதனாக இந்த மண்ணில் காலூன்றி நிற்பதற்கு படும் பாடுகளையும் எதிர்கொள்ள வேண்டிய
நெருக்கடிகளையும் அவை நேரடி அனுபவக்குறிப்புகளாக பதிவு செய்கின்றன. ஒவ்வொரு
மொழியிலும் குறைந்தபட்சம் ஒரு பத்து தலித் தன்வரலாறுகள் எழுதப்பட்டு
நிலைத்துவிட்டன என்று நினைத்துக்கொள்ளுங்கள். எல்லா இந்திய மொழிகளிலும் இப்படி
பத்து பத்து தன்வரலாறுகள் எழுதப்பட்டு நிலைத்துவிட்டன என்றும்
நினைத்துக்கொள்ளுங்கள். அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, அவற்றில் மிகச்சிறந்த
ஐம்பது தன்வரலாறுகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கப்படுவதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறும்
என்றால், அவையே இந்திய தலித் வாழ்க்கைநிலையின் தோராயமான சித்திரத்தை உணர்த்தும்
வரலாற்றுச்சாட்சியங்களாக திகழும் என்பது என் எண்ணம். சமூக ஆய்வாளர்கள் யாராவது
இத்தகு நோக்கத்துடன் ஒரு முயற்சியை மேற்கொண்டு செயல்பட்டால் நல்லது.
வல்லினம்:
இதன் அடிப்படையில் தலித் இலக்கியத்திற்கான வரையறை ஒன்றை உங்கள் வாசிப்பின்
புரிதலின் வழி வழங்க இயலுமா?
பாவண்ணன்: எந்த வரையறையும் தோராயமான ஒன்றுதான்.
ஒருபோதும் தீர்மானமாக எதையும் வரையறுத்துவிட முடியாது. எப்போதும் மாற்றங்களுக்கான
வழிகளையும் அது தன்னகத்தே கொண்டிருக்கிறது. தலித் இலக்கியம் என்பது தனி
வரையறைகளைக் கொண்ட உறுப்பல்ல. அது பேரிலக்கியம் என்னும் சட்டகத்தின் உறுப்பு. எந்தத்
தலித் படைப்பும் இலக்கியம் என்னும் மாபெரும் வடிவத்துக்கே உரிய அழகியலையும்
ஆழத்தையும் கொண்டிருக்க வேண்டும்.
வல்லினம்: உங்களைக் கவர்ந்த புனைவுகள்
குறித்து தொடர்ந்து பதிவு செய்து வருகிறீர்கள். இலக்கிய விமர்சனம்
செய்துள்ளீர்களா? என் வாசிப்பில் இல்லை என்றே கருதுகிறேன். அப்படியென்றால் ஏன்?
பாவண்ணன்: நான் எழுதத் தொடங்கிய
காலகட்டத்திலிருந்தே புத்தகங்களைப்பற்றிய அறிமுகக்கட்டுரைகளையும் எழுதத்
தொடங்கிவிட்டேன். ஆரம்பத்தில் அவற்றைப்பற்றி சிறுசிறு நினைவுக்குறிப்புகளாக
நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களில் பதிவுசெய்து அனுப்பிக்கொண்டிருந்தேன். பிறகுதான்
அவற்றை தனிக்கட்டுரைகளாக எழுதும் ஆர்வம் பிறந்தது. நூல் அறிமுகக்கட்டுரைகளை
எழுதுவதற்கு நான் எனக்கென சில வழிமுறைகளை வகுத்துவைத்திருக்கிறேன். சிறுகதை,
நாவல், கட்டுரை என எந்தத் துறை சார்ந்த புத்தகமானாலும் சரி, அதில் வெளிப்பட்டிருக்கும்
அழகியல் பார்வைகளையே நான் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். ஒரு வாசகனாக
அக்கூறுகள் எனக்கு அளிக்கக்கூடிய நிறைவுணர்வு மிகமுக்கியமானது என்று
கருதுகிறேன். ஆகவேதான் நான் எப்போதும்
என்னைக் கவர்ந்த புத்தகங்களை மட்டும் முன்வைத்து எழுதுகிறேன். அவற்றை ஒருபோதும்
பிறர் எழுதும் மதிப்புரைக்கட்டுரைகளுக்கு இணையானதாக வைத்து மதிப்பிடக்கூடாது. எனக்கு
நிறைவைத் தராத ஒரு படைப்பைப்பற்றி நான் ஒருபோதும் எழுதுவதில்லை. உள்ளடக்கம்
சார்ந்தோ, வடிவம் சார்ந்தோ, மொழி சார்ந்தோ ஏதோ ஒரு வகையில் ஒரு படைப்பு எனக்கு
நிறைவை அளிக்கவேண்டும். அந்த அம்சத்தை ஒரு பற்றுக்கோடாகப் பிடித்துக்கொண்டு என்
அறிமுகத்தைத் தொடங்குவேன். அப்படைப்பில் நான் மிகவும் ரசித்துப் படித்த பகுதிகளை
முன்வைப்பேன். நூலில் அங்கங்கே உருவகங்களாகவும் படிமங்களாகவும்
முன்வைக்கப்பட்டிருக்கும் புதிர்களை விடுவித்து உணர்த்தியபடி செல்வேன். அப்போது
அடையக்கூடிய பரவசங்களைப்பற்றியும் குறிப்பிடுவேன். ஒரு வாசிப்பு என்பது எவ்வளவு
தொலைவுக்கு என் சிந்தனையை முன்னோக்கிச் செலுத்துகிறது என்பதையும் முக்கியமான
கூறாகக் கருதுவேன். படைப்புக்கணங்கள் வழியாக வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும்
வழிமுறையையும் சுட்டிக் காட்டுவேன். இலக்கியத்தைப் புரிந்துகொள்வதன் வழியாக
வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் அறிமுகக்கட்டுரைகளை அமைத்துக்கொள்வேன்.
வாழ்க்கைப்பாதையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரு கணம்தான் படைப்பாக மாறுகிறது.
அக்கணத்தை உருப்பெருக்கம் செய்யச்செய்ய அது வாழ்க்கையின் பேருருவத்தைக்
காட்டுகிறது. வாழ்க்கையிலிருந்து இலக்கியத்துக்கும் பிறகு இலக்கியத்திலிருந்து
வாழ்க்கைக்கும் செல்லத்தக்க வட்டப்பாதையில் வெளிச்சம் விழும்படி என் கட்டுரைகளை
அமைத்துக்கொள்வேன். தொண்ணூறுகளின் இறுதியில் திண்ணை என்னும் இணைய இதழ் தொடங்கப்பட்ட
போது, அதில் ‘எனக்குப் பிடித்த கதைகள்’ என்னும் தலைப்பில் நூறு கட்டுரைகளை
எழுதினேன். தமிழகத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளையும் இலங்கையில் எழுதப்பட்ட
சிறுகதைகளையும் பிற இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் எழுதப்பட்டு பிரபலமான
சிறுகதைகளையும் முன்வைத்து, இலக்கியத்தின் வழியாக வாழ்க்கையின் பேருருவத்தை
அணுகிப் புரிந்துகொள்ளும் விதமாக அக்கட்டுரைகளை எழுதினேன். அதன் இன்னொரு பகுதியாக
ஐம்பது கவிதைகளை முன்வைத்து உயிரோசை என்னும் இணையதளத்தில் ’மனம் வரைந்த ஓவியம்’
என்னும் தலைப்பில் கட்டுரைகளை எழுதினேன். அவை அனைத்தும் அழகியல் வழியாக வாழ்வியலை
நெருக்கமாக உணர உதவி செய்பவை என்பது என் நம்பிக்கை. ஒன்றை மதிப்பிட்டு அதன் எல்லா
அம்சங்களையும் பரிசீலித்து வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு வழிமுறையை
விமர்சனம் என குறிப்பிடலாம் என்றால், என்னையும் நீங்கள் இலக்கிய விமர்சகன் என்று ஏற்றுக்கொள்ளலாம்.
வல்லினம்:
சத்தியத்தின் ஆட்சி, எல்லாம் செயல்கூடும், நிலமிசை நீடு வாழ்பவர், எப்பிறப்பில்
காண்போம் இனி, மண்ணில் பொழிந்த மாமழை என காந்திய ஆளுமைகள் குறித்த கட்டுரை நூல்கள்
எழுதியுள்ளீர்கள். உங்களை காந்தியவாதி என வரையறுக்கலாமா?
பாவண்ணன்: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு
புத்தகத்தைப்பற்றிய தகவலுக்காக இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது தற்செயலாக ஒரு
புத்தகத்தைக் கண்டுபிடித்தேன். அது இலங்கையைச் சேர்ந்த இராஜகோபால் என்பவர் எழுதிய
தன்வரலாற்று நூல். எப்போதும் தன்வரலாற்று நூல்கள் மீது எனக்கு ஒரு பித்து உண்டு.
உடனே அந்த இணையப்பிரதியை அச்சுப்படியாக மாற்றி ஒரே நாளில் படித்துமுடித்தேன்.
இலங்கைக்கு வந்த காந்தியடிகளின் உரையால் ஈர்க்கப்பட்ட இராஜகோபால் பெற்றோரின்
அனுமதியோடு, தமிழகத்துக்கு வந்தார். மதுரையை
மையமாகக் கொண்டு நடைபெற்ற விடுதலைப்போராட்டங்களில் கலந்துகொண்டு சிறையில் அடைபட்டு
துன்பப்பட்டார். விடுதலைக்குப் பிறகு இலங்கைக்கு மீண்டும் சென்று காந்திய வழியில்
இறுதி மூச்சுள்ள வரை மக்களுக்குத் தொண்டாற்றினார். அவருடைய வாழ்க்கை வரலாறு ஆழ்ந்த
மன எழுச்சியை ஊட்டியது. பல நண்பர்களிடம் அவரைப்பற்றி உரையாடினேன். ஒருவருக்கும்
அவரைப்பற்றிய விவரம் தெரிந்திருக்கவில்லை. அதைக் கேட்க எனக்குச் சங்கடமாக
இருந்தது. அவருடைய பெயர் மீதும் தியாகத்தின் மீதும் இருள் படிந்துவிடாமல் காப்பது
என்னுடைய கடமை என்று தோன்றியது. ஆதலால் தமிழ்ச்சூழலில் அவரை அறிமுகப்படுத்தும் விதமாக
ஒரு கட்டுரையை எழுதி வெளியிட்டேன். அதன் தொடர்ச்சியாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த
எண்ணற்ற தியாகிகளைப்பற்றியும் எழுதவேண்டும் என்றொரு வேகம் பிறந்தது. அவர்களைப்பற்றி
வெளிவந்திருக்கும் பதிவுகளுக்காகவும் புத்தகங்களுக்காகவும் நூலகங்களில் தேடித்தேடி
எடுத்தேன். தமிழகமெங்கும் வசிக்கும் என் நண்பர்களைத் தொடர்புகொண்டு, அவர்களையும்
அத்தேடலில் ஈடுபடுத்தி தகவல்களைப் பெற்றேன். அவ்வப்போது எழுதிய அக்கட்டுரைகள்
சர்வோதயம் மலர்கிறது, கிராம ராஜ்ஜியம் ஆகிய இதழ்களில் தொடர்ச்சியாக வெளிவந்தன.
நீங்கள் குறிப்பிட்டுள்ள தொகுதிகளில் அக்கட்டுரைகள் அடங்கியுள்ளன. இதுவரை ஏறத்தாழ
எழுபது ஆளுமைகளைப் பற்றி எழுதிவிட்டேன். குறைந்தபட்சமாக நூறு ஆளுமைகளைப்பற்றி
எழுதவேண்டும் என்பது என்னுடைய கனவு. என் தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அவர்களெல்லாரும் வாழ்ந்து முடிந்து பல ஆண்டுகள்
கடந்துவிட்ட நிலையில் அவர்களைப்பற்றிய தகவல்கள் கிடைப்பதுதான் சிரமமாக உள்ளது.
காந்தியவாதி என்னும் சொல்
நாம் நினைத்திருப்பதைவிட மிகுந்த ஆழமான பொருளையுடையது. காந்தியடிகளின் பேச்சாலும் எழுத்தாலும்
செய்துகாட்டிய தொண்டுகளாலும் ஈர்க்கப்பட்டு தம் வாழ்நாள் முழுதும் தேசமக்களுக்காக
தொண்டாற்றிய இந்த ஆளுமைகளுக்குத்தான் காந்தியவாதி என்னும் அடைமொழி பொருந்தும்.
என்னைப் போன்றவர்களுக்குப் பொருந்தாது. வேண்டுமென்றால், என்னை காந்திய எண்ணம்
கொண்டவன் என்று குறிப்பிடலாம்.
கேள்வி:
காந்தியின் மீது அல்லது காந்திய தத்துவத்தின் மீது உங்களுக்கு எப்படி ஆர்வம்
உண்டானது?
பாவண்ணன்: பள்ளியில் படித்துக்கொண்டிருந்த
காலத்தில் ஒரு கட்டுரைப்போட்டியில் எனக்குப் பரிசாகக் கிடைத்த சத்திய சோதனை
புத்தகம்தான் தொடக்கப்புள்ளி. எங்கள் வகுப்பில் தமிழ்ப்பாடத்தில் நான் டீடெயில்
பிரிவுக்காக பாடமெடுத்த ஆசிரியர் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து பல
நிகழ்ச்சிகளை அடிக்கடி எங்களுக்குக் கதையாக விவரித்துச் சொல்வது வழக்கம். அதுவும் காந்தியடிகள்
மீது எனக்கு ஆர்வம் பிறக்கக் காரணமாக இருந்தது. பள்ளிப்படிப்பு முடிந்து
விடுமுறையில் இருந்த சமயத்தில் நூலகத்தில் ‘நாட்டிற்குழைத்த நல்லோர்’ என்னும்
பொதுத்தலைப்பு வரிசையில் ஏராளமான விடுதலைப்போராட்டத் தலைவர்கள், தியாகிகள், சமூக
சீர்திருத்தக்காரர்கள், சமயப்பெரியோர்கள் என பலரைப்பற்றி கைக்கு அடக்கமான சிறிய
சிறிய நூல்களை எடுத்துப் படித்தேன். எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விதத்தில்
காந்தியடிகள் செல்வாக்கு செலுத்திய மனிதராக இருந்திருப்பதை என்னால் புரிந்துகொள்ள
முடிந்தது. அந்தத் தகவல்களெல்லாம் காந்தியடிகளைப்பற்றி இன்னும் தெரிந்துகொள்ள
வேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டியது. தொடர்ந்து தேடித்தேடிப்
படித்துக்கொண்டிருந்தேன். இளநிலை பொறியாளருக்குரிய பயிற்சியை முடித்ததும் நான் வேலைக்குச்
சென்று சேர்ந்த இடம் கர்நாடகத்தில் உள்ள மாவட்டத்தலைநகரங்களில் ஒன்றான பெல்லாரி. கன்னட
மொழியைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் அன்று மாலையே கடைத்தெருவுக்குச் சென்று அரிச்சுவடிப் புத்தகங்களை வாங்கிவந்த கதையை
ஏற்கனவே நான் சொன்னேன் அல்லவா? அதைத் தொடர்ந்து நான் செய்த மற்றொரு செயல், அந்த
நகரத்தின் சிறைச்சாலை இருக்குமிடத்தை விசாரித்துத் தெரிந்துகொண்டு
சென்றதாகும். சிறைச்சாலையின் வாசலில்
நின்றபடி அதையே வெகுநேரம் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். அச்சிறையில்
காந்தியடிகளும் பிற காங்கிராஸ் தொண்டர்களும் அடைக்கப்பட்டிருந்த செய்திகளெல்லாம்
அப்போது ஏராளமான சித்திரங்களாக மனத்தில் அலைமோதின. அச்சிறையின்
சுற்றுச்சுவரையொட்டி வெகுதொலைவு காந்தியடிகளின் நினைவில் தோய்ந்தபடி நடந்துசென்று
திரும்பினேன். காந்தியடிகளின் மூச்சுக்காற்று அங்கு சுற்றியிருந்த மரங்கள் மீதும்
சுவர்கள் மீதும் படிந்திருக்கக்கூடும் என்ற எண்ணம் எழுந்தது. நான் சுவாசிக்கும்
காற்றில் அது இன்னும் நிறைந்திருக்கிறது என கற்பனை செய்துகொள்ள எனக்குப்
பிடித்திருந்தது. இரவு கவியும்வரை அங்கேயே நின்றிருந்துவிட்டு
திரும்பிவிட்டேன். சில ஆண்டுகளுக்குப்
பிறகு ஒரு பத்து நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு போர்பந்தருக்குச் சென்று
காந்தியடிகள் பிறந்த இல்லத்தைப் பார்த்துவந்தேன். அவர் உட்கார்ந்து படித்த
மேசையையும் நாற்காலியையும் அவருடைய அறையையும் பார்க்கப் பார்க்க பரவசமாக
இருந்தது. பூனா நகரத்தைச் சேர்ந்த ஆகாகான்
சிறைச்சாலைக்கும் சென்று அவர் அடைக்கப்பட்டிருந்த அறையையும் கஸ்தூர்பா, மகாதேவ
தேசாய் கல்லறைகளையும் பார்த்துவந்தேன். இப்படித்தான் காந்தி மீதான என் ஆர்வம்
தொடங்கியது. .
வல்லினம்: மனித உறவுகளைக் குறித்த
சிடுக்கான பகுதிகளை உங்கள் புனைவுகள் பெரும்பாலும் பேசுகின்றன. உங்கள் புனைவுலகம்
என்பதன் அடிப்படையான செல்திசை என்ன என்று உங்களுக்கு ஏதேனும் தெளிவுகள் உண்டா?
அல்லது உங்கள் புனைவுலகின் ஆதார கேள்வியென நீங்கள் ஏதேனும் அவதானித்துள்ளீர்களா?
பாவண்ணன்: இலக்கியம் எழுதப்பட்ட
காலத்திலிருந்தே அன்பும் அறமும் வாழ்வில் மிகமுக்கியமாக பேணப்பட வேண்டிய பண்புகள்
என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டே வந்துள்ளது. அவை எவ்வளவு பழமையான
குரல்கள் என்றாலும் என் சூழலில் என் வாழ்வை முன்வைத்து அந்த மதிப்பீடுகளை மறுவரைவு
செய்வதையே என் இலக்கியவழியாக மேற்கொண்டிருக்கிறேன். அன்பின் மேன்மை, அன்பின்
மென்மை, அன்பினால் அடையும் சிறுமை, அன்பினால் விளையும் பாதகங்கள், அன்பினால்
அடையும் நன்மைகள், தீமைகள் என்பவற்றை ஒரு பக்கமாகவும் அன்பின்மையால் ஏற்படும்
வெறுமை, விரக்தி, கசப்பு, பொறாமை, போட்டி, துன்பம் போன்றவற்றை இன்னொரு பக்கமாகவும்
அடுக்கிவைத்தால் அவை அனைத்தையுமே அன்பின் பாற்பட்டவையாகவே குறிப்பிடவேண்டும்.
அதையே அறத்துக்கும் சொல்வேன். இலக்கியத்தில் அவற்றை அவ்வகையில் முன்வைப்பதே என்
வாழ்நாள் பணியென நான் தீர்மானித்துக்கொண்டேன். அவற்றைத் தொகுத்துப் பார்த்துக்கொள்ளும் ஒருவரால் சமகால வாழ்வின்
தடங்களை எளிதில் உணரமுடியும் என்பது என் நம்பிக்கை. ‘என்னை நன்றாக இறைவன்
படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே’ என திருமந்திரத்தில் ஒரு பாடலில்
ஒரு குறிப்புண்டு. ஏறத்தாழ என் ஆழ்மன எண்ணமும் அதுதான். அன்புக்காகவும்
அறனுக்காகவும் குரல் கொடுத்தபடி இருப்பதை என் வாழ்நாள் பணியாக கருதிக்கொள்கிறேன்.
வல்லினம்: தமிழகத்தை விட்டு தமிழில்
எழுதப்படும் பிறநாட்டு இலக்கியங்களை வாசிப்பதுண்டா?
பாவண்ணன்: வாசிப்பதில் எப்போதும்
ஆர்வம் உள்ளவன் நான். பாரதியார் காலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு
வெளிவந்த மொழிபெயர்ப்புகளில் பெரும்பாலானவற்றை நான் படித்திருக்கிறேன். பாரதியார்,
சுத்தானந்த பாரதியார், புதுமைப்பித்தன், க.நா.சு., அழகிரிசாமி, தி.ஜானகிராமன், சுந்தர
ராமசாமி, கா.ஸ்ரீ.ஸ்ரீ., ஆர்.சண்முகசுந்தரம், அ.கி.ஜெயராமன், துளசி ஜெயராமன்,
த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, சு.கிருஷ்ணமூர்த்தி, தி.ஜ.ர., பெ.தூரன் என எண்ணற்ற
மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்த்த புத்தகங்களையெல்லாம் தேடித்தேடி
படித்திருக்கிறேன். தல்ஸ்தோய், தஸ்தாவெஸ்கி, கார்க்கி, குப்ரின், செகாவ்,
துர்கனேவ், ஷோலகோவ், புஷ்கின் போன்ற ரஷ்ய எழுத்தாளர்களின் நூல்களையும் ஐரோப்பிய
எழுத்தாளர்களின் நூல்களையும் மொழிபெயர்ப்பு வழியாகவே படித்திருக்கிறேன்.
இந்தியாவின் பிற மொழிகளிலிருந்தும் உலக மொழிகளிலிருந்தும் காலச்சுவடு, எதிர்,
கிழக்கு, தடாகம், நூல்வனம் போன்ற பதிப்பகங்கள் வெளியிடும் மொழிபெயர்ப்புகளையும்
உடனுக்குடன் வாங்கிப் படித்துவிடுகிறேன்.
வாசிப்பு என்னை எப்போதும் உற்சாகம் கொண்டவனாக வைத்திருக்கிறது.
வல்லினம்:
நீங்கள் சொல்வது மொழிப்பெயர்ப்புகள். நான் அறிந்துகொள்ள விரும்புவது தமிழகத்தைக்
கடந்தும் தமிழ் இலக்கியங்கள் உள்ளன. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில்
அவை படைக்கப்படுகின்றன. அவற்றை வாசிக்கிறீர்களா? அவை குறித்த உங்கள் பதிவுகள்
அரிதாக இருப்பதால் கேட்கிறேன்.
பாவண்ணன்: இலங்கையின் எழுத்துகளைத் தொடர்ந்து
வாசித்து வருகிறேன். தொடக்கத்தில் கைலாசபதியும் சிவத்தம்பியும் சுட்டிக்காட்டிய
எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டுமே தேடியெடுத்துப் படித்தேன். பிறகு
தளையசிங்கத்தின் எழுத்துகள் அறிமுகமாகின. அதற்குப் பிறகு மேலும் பலரை நானாகவே
தேடிப் படிக்கத் தொடங்கினேன். எஸ்.பொன்னுத்துரை, வ.அ.இராசரத்தினம், முருகானந்தன்,
என்.கே.ரகுநாதன், கே.டேனியல், சி.வி.வேலுப்பிள்ளை, டொமினிக் ஜீவா,
அ.முத்துலிங்கம், சாந்தன், கே.கணேஷ், தெளிவத்தை ஜோசப், மாத்தளை சோமு, இளைய
அப்துல்லா, பவானி என பலருடைய படைப்புகளை விரும்பிப் படித்தேன். இலங்கைப்
படைப்புகளைத் தேடிப் படித்த அளவுக்கு நான் மலேசிய, சிங்கப்பூர் படைப்புகளைப்
படித்ததில்லை. இங்குள்ள நூலகங்களில் அவை இல்லாததும் ஒரு காரணம். இரண்டுமூன்று
ஆண்டுகள் முன்பாக உங்களிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட வல்லினம் மலர் வழியாகவே
இங்கு நடைபெற்ற இலக்கிய முயற்சிகளைப் பற்றி தெரிந்துகொண்டேன். சீ.முத்துசாமியின் மலைக்காடு
நாவலிலிருந்தும் உங்களுடைய பேய்ச்சி நாவலிலிருந்தும்தான் என்னுடைய மலேசிய இலக்கிய
வாசிப்பு தொடங்கியது.
வல்லினம்: நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளீர்கள். 'நயனக்கொள்ளை' உங்களின் நூறாவது நூல். எழுத்தின் வழியாகவே இலக்கியச் சூழலில் நன்கு அறியப்பட்டவர் நீங்கள். ஆனால் பொதுவாசகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படாதவராக இருக்கிறீர்கள். உங்களை முன்னிறுத்திக்கொள்ளாதது நீங்களாக எடுத்த முடிவா?
பாவண்ணன்: உண்மைதான்.
அது நானாகவே எடுத்த முடிவுதான். எழுத்திலும் வாசிப்பிலும் மட்டுமே என் மனம் தோய்ந்திருக்கிறது.
வல்லினம்: பெரும்பாலும் இலக்கிய
சர்ச்சைகளில் சிக்காதவராகவும் இருக்கிறீர்கள். இவ்வளவு எழுதியும் இத்தனை விருதுகள்
வாங்கியும் அதை எப்படிச் சாத்தியப்படுத்தியுள்ளீர்கள்?
பாவண்ணன்: இயல்பிலேயே என் குணம்
அப்படி அமைந்துவிட்டது. அதற்குத் தனிப்பட்ட காரணம் என எதுவும் இல்லை. ஒரு
சிறுவனிடம் எதிர்பாராத விதமாக ஒரு டார்ச்லைட் கிடைக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள்.
அவன் அதை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்வான் என்பது அனைவருக்குமே தெரிந்த
விஷயம்தான். ஒரு பொத்தானை அழுத்தினால் வெளிச்சம் பாய்ந்துசென்று ஒரு புள்ளியில்
வட்டவடிவில் குவிவது ஒரு மாயச்செயல்போன்ற வசீகரம். அந்த வசீகரத்தில் தன்னை இழந்து
பரவசமுறாத சிறுவனே இந்த உலகத்தில் இருக்கமுடியாது. அந்தப் பரவசத்தை அவன் மீண்டும்
அடைய விரும்புவது இயற்கை. அந்த டார்ச் லைட்டை எடுத்துச் சென்று தன்
நடமாட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உயிரினங்கள் மீதும் வீட்டு உறுப்பினர்கள்
மீதும் அஃறிணைப்பொருட்கள் மீதும் வெளிச்சத்தைப் பாய்ச்சி அவை கொள்ளும்
புதுப்பொலிவைப் பார்த்து ரசிப்பதில் அவனுக்குச் சலிப்பே ஏற்படுவதில்லை. அதுபோலத்தான்,
எப்படியோ என் இளமைக்காலத்தில் ஏதோ ஒரு நற்பேற்றின் விளைவாக என்னிடம் இந்த
இலக்கியம் வந்து சேர்ந்தது. நான் அதைச் சிக்கென பற்றிக்கொண்டேன். அதன் வழியாக
ஒவ்வொன்றையும் பார்த்து வியக்கத் தொடங்கினேன். .நானே எழுதுபவனாக மாறியபோது என்
வியப்பு பலமடங்காகப் பெருகியது. ஒரு புதிய வெளிச்சத்தை, ஒரு புதிய கோணத்தைக்
கண்டடையும்போது ஏற்படும் மனவிரிவு மகத்தான அனுபவம். அந்த அனுபவத்தில் திளைக்கத்
தொடங்கியபிறகு இந்த உலகில் அதைவிடவும் மகத்தான ஒன்று எதுவுமில்லை என்று
தோன்றிவிட்டது. என் எழுத்துக்கான வாசகர்கள் உருவானார்களா என்பதைப்பற்றி யாராவது
கேட்டால், அந்தக் கேள்விக்கு என்னால் உறுதியாகப் பதில் சொல்லத் தெரிந்ததில்லை.
சிறிது காலம் அது ஒரு மனக்குறையாகக்கூட என்னை வாட்டியதுண்டு. ஆனால் மிகவிரைவிலேயே
அந்த வாட்டத்திலிருந்து வெளிவந்துவிட்டேன். எங்கோ சிலர் இருப்பார்கள், எப்படியோ
தேடிப் படிப்பார்கள் என நினைத்துக்கொண்டேன்.
கன்னடத்தின் வசன
இலக்கியத்தில் முதன்மை வசனகாரர்களில் ஒருவர் அக்கா என்கிற அக்கமகாதேவி. சிவபக்தியின் பரவசத்தை தன் அழகிய வசனங்கள்
வழியாக எடுத்துரைத்தவர். ஒரு கட்டம் வரையில் தன் குரல் சிவன் காதில் விழவேண்டும்
என்று மனமுருகப் பாடிப் பரவசமடைகிறார். பிறகு ஒரு தருணத்தில் அப்பரவசமே சிவன்
என்பதை அவர் உணர்ந்துகொள்கிறார். அதன் பிறகு சிவனை நோக்கி “நீ கேட்டால் கேள்,
கேளாவிட்டால் விடு, உன்னைப் பாடாமல் இருக்கமாட்டேன். நீ கருணை காட்டினால் காட்டு,
காட்டாவிட்டால் விடு, உன்னைப் பூசிக்காமல் நான் இருக்கமாட்டேன், நீ விரும்பினால்
விரும்பு, விரும்பாவிட்டால் விடு, உன்னை நான் தழுவிக்கொள்ளாமல் இருக்கமாட்டேன், நீ
பார்த்தால் பார், பார்க்காவிட்டால் விடு, உன்னைப் பார்த்து மகிழ்ந்து புகழாமல்
நான் இருக்கமாட்டேன், நான் உன்னை பூசித்து பரவசத்தில் ஆடுவேன் ஐயா,
சென்னமல்லிகார்ஜுனய்யா” என்று பாடத் தொடங்கிவிடுகிறார். அவர் அடைந்த பரவசம்தான் அவருடைய
தன்னம்பிக்கைக்குக் காரணம். என் மனநிலையும் கிட்டத்தட்ட அதுதான். என் எல்லையை
அப்படி நானே வகுத்துக்கொண்டேன்.
வல்லினம்:
அப்படி இருந்தும் ‘புக் பிரம்மா’ பெங்களூர் இலக்கிய விழாவை ஒட்டி எழுந்த
சர்ச்சையில் தமிழ்ப்பிரிவின் ஏற்பாட்டுக்குழு பொறுப்பாளரான உங்கள் பெயர்
சர்ச்சையில் அடிப்பட்டது. அப்போதும் நீங்கள் அமைதி காத்தீர்கள். மௌனம்
சர்ச்சைகளுக்கு பதிலாக நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஆயுதமா?
பாவண்ணன்: பெங்களூரில் புக் பிரம்மா
இலக்கியத்திருவிழா தென்னிந்திய மொழிகளான கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் என
நான்கு மொழிகளின் இலக்கியப்போக்கையும் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வாசகர்கள்
அறிந்துகொள்ளும் விதமாக கட்டமைக்கப்பட்டு ஆகஸ்டு 9,10,11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
மூன்று நாட்களில், மூன்று தனித்தனி அரங்குகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழில்
நாவல், சிறுகதை, கவிதை, தலித் இலக்கியம், மொழிபெயர்ப்பு, வாசகர் எதிர்பார்ப்பு என
மொத்தம் ஆறு அமர்வுகள். ஓர் அமர்வுக்கு மூன்று பேர் என்கிற அடிப்படையில் ஆறு
அமர்வுகளுக்கும் பதினெட்டு பேர்களும் இரு
பொது அரங்குகளில் உரையாற்றுவதற்காக
இருவரும் என மொத்தத்தில் இருபது படைப்பாளிகள் அழைக்கப்பட்டிருந்தனர். தென்னிந்திய
அளவில் நடைபெறும் முதல் முயற்சி இது. இதை வெற்றிகரமாக நடத்திமுடிக்க வேண்டும்
என்னும் பதற்றம் எல்லோருக்குள்ளும் இருந்தது. தமிழ் அமர்வுகளை ஒருங்கமைத்துக்
கொடுக்கும் பொறுப்பில் நான் இருந்தேன். எல்லா விதங்களிலும் தகுதி
கொண்டவர்களைத்தான் அழைத்திருந்தோம். புக் பிரும்மாவுக்கென ஒரு இணைய தளம்
உருவாக்கப்பட்டதும் பெயர்ப்பட்டியலும் புகைப்படங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டன.
பொதுவெளியில் உள்ள அனைவருக்கும் நடப்பது என்ன என்பது தெரியவேண்டும் என்பதாலேயே
ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திலேயே அப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ரகசியம்
எதுவும் பேணப்படவில்லை. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே முக்கியத்துவம்
அளிக்கப்பட்டது, சிலர் அழைக்கப்படவில்லை என்பதுதான் நிகழ்ச்சி முடிவடைந்ததும்
முன்வைக்கப்பட்ட புகார். தமிழ் மொழி சார்ந்துமட்டுமல்ல, பிற மொழிகள் சார்ந்தும்
இத்தகு புகார்கள் எங்களை வந்தடைந்தன. இது முதல் நிகழ்ச்சி என்பதையும் முதல் வெற்றி
என்பது எங்களைப் பொறுத்தவரையில் மிகமுக்கியமாக அடைந்தே தீரவேண்டிய வெற்றி என்பதையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு
அமர்வுக்குரிய படைப்பாளிகளை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. மூன்று
நாட்களிலுமாக மொத்தத்தில் எட்டாயிரம் பேர் அரங்கத்து பார்வையாளர்களாக
வந்திருந்தனர். நிகழ்ச்சியின் காணொளிகளை இதுவரை மூன்று இலட்சம் பேர்களுக்கும்
மேலானவர்கள் பார்த்திருக்கின்றனர். அதன் வெற்றி இப்போது உறுதியாகிவிட்டது.
ஒவ்வொரு மொழியிலும் தேர்ந்தெடுக்கத்தக்க
தகுதிகளைக் கொண்டவர்கள் இன்னும் பலர் உள்ளனர் என்பதை நாங்களும் அறிவோம். ஒவ்வொரு
ஆண்டும் நடக்கவிருக்கும் இத்திருவிழாவில் அத்தகையோர் நிச்சயம் அழைக்கப்படுவார்கள்.
ஒரு செயலைச் செய்து காட்டித்தான் இன்றைய புகார்களுக்குரிய பதிலை அளிக்கமுடியுமே
தவிர, வெறும் சொற்களால் அல்ல என அமைப்பில் உள்ள அனைவருமே முடிவெடுத்தோம். எங்கள்
அமைதிக்கு அதுதான் காரணம்.
வல்லினம்: உங்களின் சமகால இலக்கியவாதிகளில்
முக்கியமானவர்களாக யாரையெல்லாம் கருதுகிறீர்கள்?
பாவண்ணன்: ஜெயமோகன், கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன்,
யுவன், இரா.முருகன், சுப்ரபாரதிமணியன், பெருமாள்முருகன், கெளதம சித்தார்த்தன்
ஆகியோரையெல்லாம் நான் முக்கியமானவர்கள் என்று கருதுகிறேன்.
வல்லினம்: இளம் எழுத்தாளர்களை
வாசிப்பதுண்டா?
பாவண்ணன்: என்
இலக்கியச்செயல்பாடுகளின் ஒரு பகுதியாகவே புத்தக வாசிப்பை
வைத்துக்கொண்டிருக்கிறேன். இன்று தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் பெரும்பாலான இளம் எழுத்தாளர்களின்
ஒரு சில புத்தகங்களையாவது நான் படித்திருக்கிறேன். கமலதேவி முதல் ஹேமிகிருஷ்
வரைக்கும், செந்தில் ஜெகன்னாதன் முதல் அஜிதன் வரை
எழுதியுள்ள நூல்களில் முக்கியமான தொகுதிகளைத் தேடிப் படித்திருக்கிறேன். அந்த
வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக அவ்வப்போது அறிமுகக்கட்டுரைகளையும்
எழுதியிருக்கிறேன். என்னுடைய தளத்தில் அத்தகு அறிமுகக்கட்டுரைகளை நீங்கள்
படிக்கலாம். பெயர்ப்பட்டியல் வேண்டாம்
என்பதால், நான் இங்கு பெயர்களைத் தவிர்க்க விரும்புகிறேன். எங்கோ கவனத்துக்கு
வராமல் ஒன்றிரண்டு பேர்களுடைய படைப்புகள் விடுபட்டிருக்கலாம். ஆனால், பொதுவாக
தேடித்தேடி படித்துவிடும் குணம் கொண்டவன் நான்.
(வல்லினம் – இணைய இதழ் – நவம்பர் 2024)