”அதோ பாருடா, அங்க ஒரு நந்தியாவட்டை மரம். பச்சை பெய்ண்ட் அடிச்ச வீடு. கல்யாணராமன் சார் சொன்ன அடையாளம். அதுவாதான் இருக்கும்.” என்று சுட்டிக்காட்டினான் அண்ணாமலை. நானும் இளங்கோவும் ஒரே நேரத்தில் அந்தப் பக்கம் பார்த்தோம். பேருந்து நிலையத்திலிருந்து பத்தே நிமிடத்தில் நடந்துவந்துவிட்டோம். அதைக்கூட கல்யாணராமன் போனிலேயே சொல்லியிருந்தார். “ஆட்டோவெல்லாம் வேணாம் தம்பி. புது ஆளுன்னு தெரிஞ்சிட்டா அம்பது குடு நூறு குடுன்னு கேப்பாங்க.
ஸ்டேன்ட்லேருந்து
வில்லினூரு பக்கமா ஒரே ரோடு. மூனாவது லெஃப்ட், ரெண்டாவது ரைட். நடக்கற தூரம்தான்” அவர் சொற்கள் ஒவ்வொன்றும் இன்னும் காதில் ஒலிப்பதுபோல இருந்தது.