Home

Sunday, 27 September 2026

அன்பின் வடிவங்கள்

 

சிறார்களுக்கான பாடல்களையும் கதைகளையும் தொடர்ச்சியாக எழுதி வரும் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா. அவருடைய படைப்பாக்கத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகள் வந்துள்ளன. எளிமையும் கற்பனையும் கலந்த அழகான பின்னணியில் அவர் எழுதும் கதைகள் சிறார்களை மிகவிரைவாக ஈர்க்கும் ஆற்றல் கொண்டிருக்கின்றன. அக்கதைகள் வாசிப்போருக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கின்றன.

ஓரிகாமி மீன்கள் என்னும் தலைப்பில் அவர் எழுதிய தொகுதியில் பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு கதையும் அழகான ஓவியங்களோடு அச்சிடப்பட்டிருக்கின்றன. புத்தகத்தைப் பிரித்ததுமே அந்தக் கட்டமைப்பே வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

தொகுப்பின் முதல் சிறுகதை ரோசியின் ஆட்டுக்குட்டி. ரோசி என்னும் சிறுமியின் வீட்டில் ஓர் ஆட்டுப்பட்டி இருக்கிறது. அவற்றில் ஓர் ஆடு குட்டியை ஈன்றெடுக்கும் தருணத்தில் இருக்கிறது. தாய் ஆடு குட்டிகளை ஈன்றெடுக்கும் தருணத்தில் பார்க்கவேண்டும் என ரோஸ் ஆசைப்படுகிறாள். ஆனால் நாள் தள்ளித்தள்ளிப் போகிறது. அவள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. பள்ளிக்கூடத்தில் இருக்கும்போது கூட அவளுக்கு அந்த ஆட்டின் நினைவாகவே இருக்கிறது.  ”நான் பார்க்கும்போதுதான் நீ குட்டி போடணும்” என்று ஒவ்வொரு நாளும் ரகசியத்தைச் சொல்வதுபோல தாய் ஆட்டிடம் சொல்லிவிட்டுத்தான் பள்ளிக்குச் செல்கிறாள். பிறக்கப்போகும் குட்டிகள் எந்த நிறத்தில் இருக்கும் என கற்பனை செய்து அதை ஒரு சித்திரமாகவும் தன் நோட்டில் தீட்டிவைத்திருக்கிறாள்.

குட்டியை ஈன்றெடுக்க இன்னும் நான்கு நாட்கள் ஆகக்கூடும் என அனைவரும் நினைத்திருந்த சமயத்தில் ரோஸ் பள்ளிக்குச் சென்றிருந்த ஒரு நாளில் மதிய வேளையில் குட்டியை ஈன்றெடுக்கிறது தாய் ஆடு.  மாலையில் பள்ளியை விட்டு வந்த ரோசிக்கு ஆட்டின் மீது வருத்தம் ஏற்படுகிறது. ஆட்டையோ, குட்டியையோ பார்க்க விருப்பமில்லாமல் சோகத்துடன் அமர்ந்துவிடுகிறாள்.

ரோஸின் அம்மா எதைஎதையோ பேசி கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனத்தை மாற்றி பட்டியின் பக்கம் அழைத்துச் செல்கிறாள். ரோஸ் நோட்டில் தீட்டிவைத்திருந்த சித்திரங்களின் நிறத்திலேயே ஆட்டுக்குட்டிகள் இருப்பதைக் கண்டு அனைவரும் மகிழ்கிறார்கள்.

சின்னஞ்சிறார்களுக்கு பிராணிகள் மீது உருவாகும் இயற்கையான அன்பு மகத்தானதொரு அனுபவம். இயல்பாகவே அவர்கள் நெஞ்சில் ஊற்றெடுக்கும் தாய்மையுணர்வு அப்பிராணிகளிடம் நெருங்கிப் பழகுவதற்கு ஒரு தூண்டுதலாக இருக்கிறது.

ஆட்டுக்குட்டியைப்பற்றி இன்னொரு சிறுகதையும் இத்தொகுதியில் அமைந்துள்ளது. அதன் பெயர் சறுக்கு விளையாடிய ஆட்டுக்குட்டி. இக்கதையில் இடம்பெறும் சிறுமியின் பெயர் தேவி. அவளும் அவளுடைய தோழிகளும் ஒரு விடுமுறை நாளில் புதிதாக ஒரு விளையாட்டைக் கண்டுபிடிக்கிறார்கள்.

ஊருக்கு வெளியே  உயரமான ஒரு செம்மண் மேடு இருக்கிறது. அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தொட்டியின் அமைப்பில் ஒரு வண்டியை உருவாக்குகிறார்கள். அந்த வண்டியில் அமர்ந்துகொண்டு மேட்டின் உச்சியிலிருந்து பள்ளத்தை நோக்கி சறுக்கிக்கொண்டே வருவதுதான் விளையாட்டு.

ஒவ்வொருவராக வண்டியில் அமர்ந்து அந்தச் சறுக்கு விளையாட்டு ஆடி மகிழ்ச்சியடைகிறாள். மேய்ச்சலுக்கு அழைத்துவந்த  ஆட்டைத் தன் மடியில் வைத்தபடி அந்த வண்டிக்குள் அமர்கிறாள் தேவி. மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி வேகமாக உருண்டு வருகிறது வண்டி. எங்கோ பறந்து செல்கிறமாதிரி இருக்கிறது.  சுற்றி நின்றிருந்த தோழிகள் அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் எழுப்புகிறார்கள். அவர்களோடு சேர்ந்து ஆடும் மகிழ்ச்சியோடு மே மே என்று ஓசையெழுப்புகிறது. தன் தோழியைப்போல ஆட்டுடன் பழகும் குழந்தை உள்ளத்தை இச்சிறுகதையில் சுட்டிக் காட்டுகிறார் கன்னிக்கோவில் இராஜா.

ஆட்டுக்குட்டியைப்போலவே ஒரு நாய்க்குட்டியோடு பழகும் ஒரு சிறுமியைப்பற்றிய சிறுகதையும் இத்தொகுதியில் உள்ளது. ஒரு மழைநாளில் ஒரு கடையின் சுவரோடு ஒட்டிக்கொண்டு நடுங்கிக்கொண்டிருந்த ஒரு நாய்க்குட்டியை கமலி என்னும் பள்ளிச்சிறுமி தூக்கிவைத்துக்கொண்டு தன் கைக்குட்டையால் துடைத்துவிடுகிறாள். பிறகு வீட்டுக்கு எடுத்துச்சென்று வளர்க்கிறாள்.

ஒவ்வொரு நாளும் அந்த நாய்க்குட்டி அவளுக்குத் துணையாக பள்ளி வரைக்கும் வருகிறது. அதேபோல பள்ளிக்கூடம் விடும் நேரத்தில் வாசலுக்கு வந்து காத்திருந்து அழைத்துச் செல்கிறது. அதன் தோழமை அச்சிறுமிக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அந்த நாய்க்குட்டியும் அவளுடைய அன்பில் நெகிழ்ந்து குழைகிறது.

ஒருநாள் அதிகமான மழையின் காரணமாக பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் ஓடையில் தண்ணீர் நிரம்பி ஓடுகிறது. அதன் மீது வைக்கப்பட்ட குறுக்குப்பலகையின் மீது அனைவரும் கவனமாக  நடந்து மறுபக்கத்துக்குச் செல்கிறார்கள். எதிர்பாராத விதமாக கடந்துசெல்லும் சமயத்தில் ஒரு சிறுமி தடுமாறி ஓடைக்குள் விழுந்துவிடுகிறாள்.

அவளோடு வந்த சிறுமிகள் அனைவரும் என்ன செய்வது என்று புரியாமல் அனைவரும் திகைத்து நிற்கிறார்கள். அச்சமயத்தில் ஓடைக்குள் குதித்த நாய்க்குட்டி தடுமாறிக்கொண்டிருந்த சிறுமிக்கு அருகில் நீந்திச் சென்று அவள் ஆடையைக் கவ்வியபடி கரைக்கு இழுத்துக்கொண்டு வந்து காப்பாற்றிவிடுகிறது. தக்க தருணத்தில் நாய் செய்த உதவியைப் பார்த்து அனைவரும் நாய்க்குட்டியை விரும்பத் தொடங்குகிறார்கள்.

வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடத்தைக் கவனிக்காமல்,  ஜன்னல் வழியாகத் தெரியும் மரக்கிளைகளில் ஏறி இறங்கி சத்தமிட்டபடி ஆடும் அணில்களின் விளையாட்டை வேடிக்கை பார்க்கத் தொடங்கி அதிலேயே மூழ்கிவிடும் சிறுவன், சிம்பன்சி குரங்கைப் பார்ப்பதற்காக சுற்றுச்சூழல் பூங்காவுக்குச் சென்ற சமயத்தில்  கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் குரங்கு தாகத்தால் தவிப்பதாக நினைத்து தன் கைவசம் இருந்த தண்ணீர் பாட்டிலை குரங்கை நோக்கி வீசும் சிறுமி போன்ற பல அப்பாவிக்குழந்தைகள் எல்லாக் கதைகளிலும் இடம்பெற்றிருக்கின்றனர்.

அந்த அப்பாவித்தனத்தைத்தான் குழந்தைமை என அனைவரும் அழைக்கிறார்கள். அதை ஒருவகையில் முதிரா மனத்தில் பொங்கி வழியும் இயற்கையான அன்பு என்றும் சொல்லலாம். அந்த அன்பின் வெவ்வேறு வடிவங்களைத்தான் கன்னிக்கோவில் இராஜா தன் கதைகளில் நிறைத்துவைத்திருக்கிறார்.

 

(ஓரிகாமி மீன்கள். சிறார் கதைகள். கன்னிக்கோவில் இராஜா. லாலிபாப் சிறுவர் உலகம், 28//11 கன்னிக்கோவில் பள்ளம், அபிராமபுரம் முதல் தெரு, சென்னை -18. விலை. ரூ.140)

 

(புக் டே – இணைய தளம் – 26.09.2026)