24.11.1919 அன்று தில்லியில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து உற்சாகத்துடன் பங்கேற்ற கிலாபத் மாநாட்டில்தான் காந்தியடிகள் முதன்முதலாக ஒத்துழையாமை என்னும் சொல்லைப் பயன்படுத்தினார். பிறகு தொடர்ச்சியாக நண்பர்களுடன் உரையாடி ஒத்துழையாமையை ஒரு கொள்கைத்திட்டமாக உருவாக்கினார். அரசு அளித்த பட்டங்களையும் கெளரவப்பதவிகளையும் உடனடியாகத் துறத்தல், ஊதியம் பெறும் அரசு பதவிகளிலிருந்தும் போலீஸ் இராணுவச் சேவையிலிருந்தும் வெளியேறுதல், சட்டசபையைப் புறக்கணித்தல், வரி கொடுக்க மறுத்தல் போன்ற அம்சங்களுக்கு அத்திட்டத்தில் கூடுதலான அழுத்தத்தை அவர் அளித்தார். தம் உரைகளிலும் கட்டுரைகளிலும் தொடர்ந்து அந்த அம்சங்களை வலியுறுத்தினார். காந்தியடிகளின் திட்டத்துக்கு பொதுமக்களில் ஒரு சாரார் ஆதரவைத் தெரிவிக்க, மற்றொரு சாரார் எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தை சட்டமன்றங்களுக்குச் செல்வதற்கு தடை இல்லாத வகையில் மாற்றவேண்டும் என்பது ஒரு முக்கியமான கோரிக்கையாக எங்கெங்கும் ஒலிக்கத் தொடங்கியது.
Monday, 29 November 2021
மீரா பற்றிய சில குறிப்புகள் - சிறுகதை
குட்டை குட்டையாய் காட்டாமணக்குச் செடிகளும்
நுனியில் சாணம் அதக்கி நட்டிருக்கிற நாலு
முருங்கைக்கன்றுகளும் இருக்கிற வரிசைதான் மீரா வீட்டு
வேலி. வேலிக்கு இந்தப் பக்கத்தில் மாட்டுக் கொட்டகையோரம்
சாணம் மிதித்துக் கொண்டிருந்தாள் மீரா.
Tuesday, 23 November 2021
காலம் - சிறுகதை
‘தத்தக்கா புத்தக்கா என்று மீனா நடக்க ஆரம்பித்ததிலிருந்தே தெருவிலிறங்கிவிடாமல் அவளைக் கவனித்துக் கொள்ளும்படி சாவித்திரியிடம் சொல்லி வைத்திருந்தேன். பத்தடிக்குப் பத்தடி வாடகை வீடு இது. ஒரு மூலையில் சமையல்; ஒரு மூலையில் குளியல்; ஒரு மூலையில் படுக்கை; மிச்ச இடம் புழங்க என்பதுதான் எங்கள் விதி. இந்தப் புழங்குமிடத்தைத் தாண்டிப் பழகுவதற்காக தெருவில் மீனா இறங்கிவிடப் போகிறாளே என்ற பயத்தால்தான் ஆரம்பத்திலேயே சொல்லி வைத்தேன். தெருவில் சதா நேரமும் வண்டிகள் கண்மண் தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறதால்தான் இது கூடச் சொன்னேன்.
வலை - சிறுகதை
சினிமாவுக்காக எதையும் செய்யத் தயங்காத எங்கள் ஊர்க்காரர்களை நினைத்தால் இப்போதும் உடம்பு சிலிர்க்கிறது. இரண்டு டாக்கீஸ்கள் ஒரே சமயத்தில் நடந்துகொண்டிருந்த காலம் அது. நடையாய் நடந்து வந்து சினிமா பார்க்கிற அடுத்த ஊர்க்காரன் எல்லாம் “இந்த ஊரு கெட்ட கேட்டுக்கு ரெண்டா” என்று வயிறு எரிந்தார்கள். சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பத்துப் பதினைந்து கிராமங்களிலும் இதே பேச்சாய் இருப்பதை நானே காதாரக் கேட்டிருக்கிறேன்.
Monday, 15 November 2021
மனிதர்களின் சித்திரத்தொகுப்பு - கட்டுரை
ஒரு தொன்மக்கதை. முன்னொரு காலத்தில் ஒரு சிற்பி வாழ்ந்துவந்தார். வளர்ந்து இளைஞனான அவருடைய மகன் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர்சுற்றித் திரிவது அவருக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் கடுமையான சொற்களால் அவனைக் கண்டித்தபோது, இளைஞன் வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார். ஏதோ ஆத்திரத்தில் அவனை வெளியேற்றிவிட்டாலும் அவருடைய மனம் அவனை எண்ணி உருகியபடியே இருக்கிறது. அவன் பிரிந்துசென்ற துயரத்தை நெஞ்சில் சுமந்தபடி அலைந்த அவருக்கு சிற்பவேலைகளில் ஓய்வின்றி ஈடுபடுவது மட்டுமே ஆறுதலளிப்பதாக உள்ளது.
செடி - சிறுகதை
காலை வெளிச்சத்தில் குலுங்கிக் கொண்டிருந்தன செடிகள். மலர்ந்த பூக்கள் கண்களை இழுத்தன. மலரின் ஒவ்வோர் இதழிலும் அக்காவின் முகம் தெரிந்தது. சிரிப்பு தெரிந்தது. மீண்டும் மீண்டும் அதே நினைவுகளா என உடம்பு சிலிர்த்தது. அவற்றையே பார்த்துக்கொண்டிருந்த பிள்ளைகளின் தோள்களைத் தொட்டேன். அப்போதுதான் வீட்டு ஓனரம்மா கொடுத்தனுப்பியிருந்த தோசைகளைச் சாப்பிட்டு முடிந்திருந்தோம்.
Friday, 12 November 2021
பங்கு - சிறுகதை
பழுத்து உதிர்ந்த வாதுமை இலையின் நிறத்திலிருந்த விடுதியறைக்கதவின் மீது பதிக்கப்பட்டிருந்த எண்களைப் பார்த்து உறுதிசெய்துகொண்டு அழைப்பு மணியை அழுத்திய ஒன்றிரண்டு நொடிகளுக்குள்ளேயே உயரமான ஒருவர் கதவைத் திறந்து “எஸ்?” என்றபடி என்னைப் பார்த்தார். செதுக்கியதுபோன்ற இறுகிய முகம். ஒரு விரலில் நீலக்கல் மோதிரம் மின்னியது. ”பச்சையப்பன் சார்தான?” என்ற என் கேள்விக்கு அவர் தலை மட்டும் அசைந்தது. நான் உடனே அவருக்கு வணக்கம் சொன்னேன்.
நினைவுகளும் கனவுகளும்
1974இல் பள்ளியிறுதி வகுப்பில் நான் படித்தபோது எங்களுடைய ஆங்கிலப் பாடத்தில் தாகூரின் கீதாஞ்சலி இடம்பெற்றிருந்தது. எங்கள் ஆங்கில ஆசிரியராக இருந்த ராமனாதன் ஐயா அந்தப் பிரார்த்தனைப் பாட்டின் முதல் வரியைப் படிக்கத் தொடங்கியதுமே உருகிவிட்டார். ஒவ்வொரு சொல்லையும் அவரே சொந்தமாகச் சொல்லி முறையிட்டு மன்றாடுவதுபோல சொன்னார். இரண்டே இரண்டு பத்திகள்தான் எங்களுக்குப் பாடமாக இருந்தன. ஆனால் அப்பாடலை ஒவ்வொரு வரியாக அதை அவர் ஒரு வாரம் முழுதும் நடத்தினார். அப்பாடலின் ஒவ்வொரு சொல்லும் எங்கள் நெஞ்சில் பதிந்துவிட்டது.
Monday, 1 November 2021
வாசவதத்தை - சிறுகதை
வெகுநேரம் சாளரத்தின் வழியாகத் தெரிந்த நீல வானத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த வாசவதத்தை ஒருகணம் திரும்பி அருகில் மஞ்சத்தில் உறங்கும் உதயணனைப் பார்த்தாள். உறவாடிய களைப்பில் துயிலில் ஆழ்ந்திருந்தான் அவன். நிலா வெளிச்சத்தில் அவன் கட்டிலில் கிடந்த தோற்றம் துண்டாக்கிக் கிடத்தப்பட்ட ஒரு மரத்தைப் போலிருந்தது. வெப்பமாக உணர்ந்தாள். காற்று போதுமானதாக இல்லை. கலைந்த மார்க்கச்சைச் சரிப்படுத்தியபடி மஞ்சத்திலிருந்து எழுந்தாள். அவள் நிழல் பக்கத்துச் சுவரில் மிக நீண்ட ஒரு மரம்போலத் தெரிந்தது. சத்தமில்லாமல் அறை¬யை விட்டு வெளியே வந்தாள்.
முற்றுகை - சிறுகதை
மாலை ஏந்திய தாதியைத் தொடர்ந்து வாயில் திரையை விலக்கியபடி மண்டபத்துக்குள் நுழைந்தாள் தமயந்தி. அதுவரை நிலவியிருந்த மண்டபத்தில் சலசலப்பு சட்டென்று அடங்கிப் பேரமைதி உருவானது. அனைவருடைய கண்களும் தமயந்தியின் பக்கம் திரும்பின. காலமெல்லாம் நதிக்கரையிலும் தோட்டத்திலும் மட்டுமே தோழிகள் சூழப் பொழுதைக் கழித்துப் பழகியவளுக்கு அந்நிய ஆட்கள் நிறைந்த மண்டபத்தில் நிற்பதே சங்கடமான செயலாக இருந்தது. அக்கணம் மிகவும் வலியும் பரவசமும் கலந்ததாகத் தோன்றியது. முதலில் இந்தச் சுயம்வரம் எவ்வளவு பெரிய அவஸ்தை என்ற எண்ணம் எழுந்தது. உடனடியாக, நளனின் கவர்ந்திழுக்கும் காந்தக் கண்கள் பளிச்சிட்டன. சட்டென ஆனந்தம் புரளத் தொடங்கியது. தட்டுடன் நின்றிருந்த தாதி தமயந்தியை நெருங்கித் தோளைத் தொட்டாள். “நிற்க வேண்டாம், வாருங்கள்” என்றாள்.