தீண்டாமை ஒழிப்பு பரப்புரைக்காக நாடு தழுவிய ஒரு பெரும்பயணத்தை மேற்கொண்டிருந்த காந்தியடிகள் தமிழகத்துக்கு வந்திருந்தபோது, ஏறத்தாழ எல்லா முக்கிய நகரங்களுக்கும் சென்றார் என்று கூறும் அளவுக்கு விரிவான அளவுக்கு பயணம் செய்தார். பழமைவாதிகளின் எச்சரிக்கையை மீறி ஏராளமான ஆண்களும் பெண்களும் காந்தியடிகள் உரையாற்றிய எல்லாக் கூட்டங்களிலும் கலந்துகொண்டனர். அவர்கள் தம் சுற்றுப்பயணத்தின் நோக்கத்தைத் தெரிந்துகொண்டிருக்கிறார்களா என்பதை அறிந்துகொள்வதற்காக ”நீங்கள் இந்த நிதியை எதற்காக அளிக்கிறீர்கள்?” என்று நேரிடையாகவே கேட்டபோது, அனைவரும் உற்சாகமான குரலில் “தாழ்த்தப்பட்டோர்களின் முன்னேற்றத்துக்காகத்தான்” என்று மக்கள் விடையளித்தனர். அந்தப் பதிலைக் கேட்டு காந்தியடிகள் மனம் குளிர்ந்தார்.