பாண்டிச்சேரி கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான தியாகராஜன் சிங்காரம் ஒயின்ஸ் ஷாப் வரைக்கும் தன்னைத் தேடிக்கொண்டு வருவார் என்று ராஜசேகரன் நினைக்கவே இல்லை. “எப்படி இருக்கிங்க ராஜசேகரன்?” என்றபடி தனக்கு அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தபோது அவனால் நம்பவே முடியவில்லை. யாரோ தெரிந்த பழைய நண்பர் பேசுகிறார் என்றுதான் அக்கணத்திலும் நினைத்தான். ஆனாலும் முகம் குழம்பியது. சிறிது நேரம் தடுமாறினான். பதிலே பேசாமல் இரண்டு மூன்று தரம் கண்களைச் சிமிட்டியபடி உற்று உற்றுப் பார்த்தான். “என்ன ராஜசேகரன்? என்னைத் தெரியலையா? நான்தான் தியாகராஜன்” என்று அவனுடைய மணிக்கட்டைப் பிடித்து அழுத்தினார்.
Sunday, 29 May 2022
அழிவின் சித்திரம்
கடந்த நூற்றாண்டின் முப்பதுகளில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருவாடானைக்குக் கிழக்கே வலையக்குடிகள் வாழ்ந்த காட்டுப்பகுதியான பண்ணவயல் என்னும் சிற்றூருக்கு உழைப்புக்குத் தயங்காத பொய்யார் என்னும் பெயருடைய இளைஞரொருவர் குடியேறினார். கள்ளிக்காட்டையும் கருவேலங்காட்டையும் அழித்து தன் உழைப்பால் மண்ணை உயிர்பெறச் செய்தார். அவருடைய கொடிவழியினர் அனவரையும் அந்த ஊருக்கு வரவழைத்தார். அவரால் பண்ணவயல் செழித்தது. அவர் குடும்பமும் செழித்து ஓங்கியது. தக்க பருவத்தில் தன்னைப்போலவே உழைப்புக்குப் பின்வாங்காத பெண்ணைப் பார்த்து மணம்புரிந்துகொண்டார் பொய்யார். அவருக்குப் பிள்ளைகள் பிறந்து வளர்ந்து பெரியவர்களானார்கள். படித்த பிள்ளைகள் பண்ணவயலைவிட்டு வெளியேறி அருகிலிருக்கும் நகரங்களுக்கு வேலை தேடிச் சென்றார்கள். படிப்பில் நாட்டமின்றி பெற்றோருடன் விவசாயத்தைமட்டுமே பழகியவர்கள் பண்ணவயலிலேயே தங்கி அப்பாவுக்குத் துணையாக பயிர்த்தொழிலிலேயே ஈடுபட்டனர்.
Sunday, 22 May 2022
எட்டுத் திரைக்கதைகளும் ஒரு நேர்காணலும்
“அங்க பாருங்க சார் வானவில். என்ன அழகு. என்ன வர்ணம். நம்பவே
முடியாதபடி நமக்கு வேண்டப்பட்ட ஒருத்தவங்க திடீர்னு வாசல்ல வந்து நின்னு சிரிக்கற மாதிரி
இருக்குது பாருங்க. மழைச்சாரல்தான் உலகத்துலயே சந்தோஷம்னா, அந்தச் சாரல் நேரத்துல இப்படி
வானவில் பாக்கறதுதான் ரொம்பரொம்ப சந்தோஷம், என்ன சொல்றீங்க நீங்க?”
“உண்மைதான், வானவில்ல எப்பப் பாத்தாலும் ஒடனே வயசு கொறஞ்சி சின்னப் புள்ளயா மாறிடுது மனசு, ரொம்ப உற்சாகமா இருக்குது.”
மீரா பெஹன் : இமயத்தின் திருமகள்
1921ஆம் ஆண்டில் முதலாம் உலகப்போர் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து நாட்டினர் ஜெர்மனியின் மீது ஒருவித வெறுப்பை வளர்த்துக்கொண்டிருந்த சூழலில், அதே இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண் ஜெர்மனியின் இசைக்கலைஞரான பீத்தோவனின் இசையில் மனம் பறிகொடுத்து, மீண்டும் மீண்டும் அந்த இசையைக் கேட்பதில் பொழுதுகளைக் கழித்துவந்தார். பீத்தோவனைப்பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்காக ஓராண்டு காலம் செலவழித்து ஜெர்மன் மொழியைக் கற்றுத் தேர்ந்தார். பீத்தோவனைப்பற்றி அதுவரை ஜெர்மன் மொழியில் வெளிவந்திருந்த நூல்களையும் அவருடைய சமகால ஆளுமைகள் எழுதிய பல்வேறு நினைவுக்குறிப்புகளையும் கடிதங்களையும் தேடித்தேடிப் படித்தார். இறுதியாக பீத்தோவன் பிறந்த ஊரான வியன்னாவுக்குச் சென்று தனிமையில் தன்னை மறந்த நிலையில் பீத்தோவன் நினைவுகளிலும் இசையிலும் சிறிது காலம் மூழ்கியிருந்தார். தன் தேடலின் தொடர்ச்சியாக பீத்தோவன் வாழ்க்கையை ஆதாரமாகக்கொண்டு பிரெஞ்சு எழுத்தாளரான ரொமன் ரொலான் எழுதிய பத்து தொகுதிகளைக் கொண்ட ழான் கிரிஸ்தோபிஃப் என்னும் நாவலைப் படித்தார்.
Sunday, 15 May 2022
குமாரவனம் - சிறுகதை
தாகத்தால் தொண்டை வறண்டது. எச்சில் கூட்டி விழுங்குவதும் வறண்ட உதடுகளை நாக்கால் நனைத்துக் கொள்வதுமாக இருந்தான் இளன். குதிரையும் கடும் சோர்வின் காரணமாக மெதுவாக நடந்தது. சுற்றியும் வனப்பறவைகளின் ஒலியும் காற்றில் மரக்கிளைகள் உரசிக்கொள்கிற சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தன. எங்கோ ஒரு நீர்நிலை இருப்பதுபோல மின்னும். கண்கள் கூசும் அளவுக்கு நீரலைகள் நெளிவது போலத் தெரியும். சட்டென ஒரு நம்பிக்கை நெஞ்சில் துளிர்க்கும். உடல் வலியையும் அசதியையும் பொருட் படுத்தாமல் சில கணங்கள் வேகவேமாக நடப்பான். எவ்வளவு தொலைவு நடந்தாலும் அந்த நீர்நிலையை அவனால் நெருங்க முடிவதில்லை. கண்பார்வையிலிருந்து அந்த நீர்நிலை திடுமென மறைந்துவிடும். மறுகணமே அளவுக்கு அதிகமான சோர்வு அவனை அழுத்தும்.
முற்றுகை - சிறுகதை
மாலை ஏந்திய தாதியைத் தொடர்ந்து வாயில் திரையை விலக்கியபடி மண்டபத்துக்குள் நுழைந்தாள் தமயந்தி. அதுவரை நிலவியிருந்த மண்டபத்தில் சலசலப்பு சட்டென்று அடங்கிப் பேரமைதி உருவானது. அனைவருடைய கண்களும் தமயந்தியின் பக்கம் திரும்பின. காலமெல்லாம் நதிக்கரையிலும் தோட்டத்திலும் மட்டுமே தோழிகள் சூழப் பொழுதைக் கழித்துப் பழகியவளுக்கு அந்நிய ஆட்கள் நிறைந்த மண்டபத்தில் நிற்பதே சங்கடமான செயலாக இருந்தது. அக்கணம் மிகவும் வலியும் பரவசமும் கலந்ததாகத் தோன்றியது. முதலில் இந்தச் சுயம்வரம் எவ்வளவு பெரிய அவஸ்தை என்ற எண்ணம் எழுந்தது. உடனடியாக, நளனின் கவர்ந்திழுக்கும் காந்தக் கண்கள் பளிச்சிட்டன. சட்டென ஆனந்தம் புரளத் தொடங்கியது. தட்டுடன் நின்றிருந்த தாதி தமயந்தியை நெருங்கித் தோளைத் தொட்டாள். “நிற்க வேண்டாம், வாருங்கள்” என்றாள்.
Sunday, 8 May 2022
நினைவுக்கு அப்பால் - சிறுகதை
ஏழாம் எண் பேருந்துக்காக காத்திருந்த நேரத்தில் அது நடந்தது. ஏற்கனவே நின்றிருந்த பேருந்து கடக்கும்வரை காத்திருக்கும் பொறுமையற்ற ஆட்டோ ஒன்று பக்கவாட்டில் என் பக்கமாக வேகமாக சட்டென இறங்கி சிறிது தொலைவு ஓடி மீண்டும் தார்ச்சாலையில் வளைந்த நிலையில் ஏறிப் பறந்தது. ஆட்டோவுக்குள் யாரோ இளைஞனொருவன் கைநிறைய புகைப்படங்களைப் புரட்டியபடி இருந்ததை மட்டுமே நான் ஒரே ஒரு கணம் பார்த்தேன். ஆனால் முகமோ, அணிந்திருந்த ஆடைவிவரமோ எதுவுமே என் மனத்தில் பதியவில்லை. ஆட்டோவின் எதிர்பாராத நடத்தையால் என் மனம் அச்சத்தில் ஒடுங்கியது. மறுகணம் அதன் குலுக்கலால் அந்த இளைஞனின் பிடியிலிருந்து நழுவிய ஒரு புகைப்படம் காற்றில் அலைந்துஅலைந்து அடுத்த கணத்தில் என் மார்பில் வந்து படிந்தது.
விட்டல்ராவும் நானும் உரையாடிக்கொண்டிருந்தோம் - முன்னுரை
2009ஆம் ஆண்டின் இறுதியில் விட்டல்ராவ் பெங்களூருக்கு வந்தார். அவருடைய வீடு தம்புசெட்டிபாள்ய சாலையில் ராகவேந்திர நகரில் இருந்தது. அப்போது நான் அல்சூரில் குடியிருந்தேன். இடைப்பட்ட தொலைவு பன்னிரண்டு கிலோமீட்டர்தான் என்றாலும் இரு இடங்களையும் இணைக்கும் நேரடிச் சாலையோ, நேரடிப் போக்குவரத்தோ இல்லை. இரு பேருந்துகள் மாறிச் சென்று இறங்கி, இரண்டு கிலோமீட்டர் தொலைவு நடக்கவேண்டும். சில சமயங்களில் நண்பர் திருஞானசம்பந்தத்துடன் இணைந்து அவருடைய இரண்டுசக்கர வாகனத்தில் செல்வதும் உண்டு. எப்படியோ, மாதத்துக்கு ஒருமுறையாவது அவரைச் சந்திக்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.
வெங்கடாசலக்கவுண்டர்: மனத்திட்பமும் வினைத்திட்பமும்
26.12.1926 முதல் 28.12.1926 வரை கெளஹாத்தியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் நாற்பத்தொன்றாம் மாநாட்டில் காந்தியடிகள் கலந்துகொண்டார். சீனிவாச ஐயங்கார் தலைமை தாங்கிய அந்த மாநாட்டில் காங்கிரஸில் உறுப்பினராக உள்ள ஒவ்வொருவரும் கட்டாயமாக கதர் அணிபவராக இருத்தல் வேண்டும் என்னும் சிறப்புத்தீர்மானம் நிறைவேறியது. இந்து சீர்திருத்த இயக்கத்தில் பங்காற்றியவரும் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு தொண்டாற்றியவருமான சுவாமி சிரத்பவானந்தர் எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத சிலரால் கொலைசெய்யப்பட்டதை ஒட்டி இன்னொரு தீர்மானமும் நிறைவேறியது. 09.01.1927 அன்று காசியில் நடைபெற்ற சிரத்பவானந்தருடைய மறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரங்கல் நிகழ்ச்சியில் காந்தியடிகள் கலந்துகொண்டு உரையாற்றினார். பிறகு நூல் நூற்பதைப்பற்றியும் கதராடைகள் அணியவேண்டியதன் அவசியத்தைப்பற்றியும் பிரச்சாரம் செய்தபடி அங்கிருந்தே பீகாரை நோக்கி தன் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். அந்த ஆண்டு முழுதும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையில் கதர்ப்பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என அவர் மனம் விரும்பியது.
Sunday, 1 May 2022
பிருந்தாவனம் - சிறுகதை
என் கையில் அபிஷேகக்கூடை இருந்தது. கடையிலிருந்து எடுத்த கண்ணன் பொம்மையை வெவ்வேறு கோணத்தில் திருப்பித்திருப்பி ரசித்துக்கொண்டிருந்தாள் அண்ணி. அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்கு வரும்போதெல்லாம் பொம்மைக்கடைகளில் நிற்பதும் வேடிக்கை பார்ப்பதும் பழகிவிட்டது. எடுப்பாள். ரசித்துப் பார்ப்பாள். விலைகேட்பாள். பிறகு ஒரு பெருமூச்சோடும் கசந்துபோன புன்னகையோடும் வைத்துவிடுவாள். ”வாங்கு அண்ணி” என்று நானும் பல முறை தூண்டிப் பார்த்துவிட்டேன். ”ஐயையோ, அதெல்லாம் வேணாம், வா” என்று வேகமாக தலையாட்டி மறுத்துவிடுவாள். ”இதுக்கெல்லாம் செலவாச்சின்னு கணக்கெழுதனேன்னு வை, ஒங்கண்ணன் அப்படியே உரிச்சி தொங்கபோட்டுட்டுதான் மறுவேல பாப்பாரு” என்று சொல்லும்போது பதற்றத்தில் அவள் தலை இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடும்.
காலம் வகுத்தளித்த கடமை
காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்து காந்தியின் வழியில் மக்களுக்குச் சேவையாற்றியவர் ஸ்லேட் மேடலின் என்கிற மீரா பெஹன். இமயமலையைப் பாதுகாப்பதில் இந்திய அரசு கூடுதல் கவனம் கொள்ளவேண்டும் என நம் நாட்டுக்கு விடுதலை கிடைத்ததுமே எடுத்துரைத்தவர் அவர். அவர் அப்போது ரிஷிகேஷ் படுகையில் தன் ஆசிரமத்தை அமைத்திருந்தார். எதிர்பாராமல் கங்கையில் பெருகிவந்த வெள்ளத்தில் அந்த ஆசிரமம் சேதமடைந்தது. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு மீரா பெஹன் வெள்ளத்துக்கான காரணத்தைப் புரிந்துகொண்டார். இமயமலையை ஒட்டிய காட்டுப்பகுதியில் ஏராளமான ஓக் மரங்கள் உயர்ந்து வளர்ந்திருந்தன. மரங்களை வெட்டி பணமீட்டும் முதலாளிகள் ஆண்டுக்கணக்கில் அவற்றை வெட்டியெடுத்தபடி இருந்தனர். அதற்கு ஈடாக வேகமாக வளரக்கூடிய பைன் மரங்களை நட்டு வளர்த்தனர். தொலைவிலிருந்து பார்க்கும் கண்களுக்கு காடு அப்படியே நிலைத்திருப்பதுபோன்ற மாயத்தோற்றத்தை அது தந்தது.